திங்கள், 19 மார்ச், 2012

ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்லி.... விளையாட்டு அரட்டை!

                     
கிரிக்கெட் பற்றி எழுதி நாளாகி விட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடியதைப் பார்த்த பிறகு இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் அற்றுப் போயிருந்தது. கிரிக்கெட்(டும்) பார்ப்பதே இல்லை. இவற்றை மீறி கிரிக்கெட்டை எட்டிப் பார்க்க வைத்தது சமீப இரண்டு நிகழ்வுகள். 
                  
சில உறவினர்கள் வீட்டிலும் சில நண்பர்கள் வீட்டிலும் டிவி என்னும் வஸ்து பரணிலேயே இருக்கிறது. அவர்கள் வீட்டில் அடுத்தடுத்து குழந்தைகள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று பரீட்சை எழுதுவதால் கவனம் கலையக் கூடாதாம். அவர்கள் எல்லாம் அவ்வப்போது தொலை/அலைபேசியில் 'ஸ்கோர் என்ன' என்று கேட்பது வழக்கம். ரேடியோவில் நேர்முக வர்ணனை கூட கேட்க மாட்டீர்களா என்று கேட்பேன். இப்படிப் பேசினால் நீ என்ன நினைக்கிறாய், நான் என்ன நினைக்கிறேன் என்று பேசலாமே என்பார்கள்!  ஸ்கோர் என்றில்லை, சில முக்கிய நிகழ்வுகளின் சமயங்களில் கூட....   
   

 சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சொல்லும்படி இரண்டு மூன்று விஷயங்கள் நடந்து விட்டன. ராகுல் திராவிட்டின் ஓய்வு, டெண்டுல்கரின் நூறாவது நூறு, அப்புறம் ஆசியா கப்பில் நேற்றைய ஆட்டம்...! இந்தியா பாகிஸ்தானை ஜெயிக்கும்போது அதைச் சொல்லாமல் இருந்தால் எப்படி? பாதி இந்தியர்களின் தேசபக்தி வெளிப்படும் நேரமே இதுதானே....! 
                 
திராவிட் ஓய்வை அறிவித்து விட்டு, சும்மா போகாமல், லக்ஷ்மண டெண்டுல்கர்களின் நெருக்கடிகளை அதிகரித்தார். குறிப்பாக ஒரு வரி... "இளைஞர்களுக்கு வழி விட வேண்டுமென்று..." டெண்டுல்கர் என்னும் புயலில் காணாமல் போன சில நல்ல ஆட்டக்காரர்களில் திராவிட் மற்றும் கங்குலி எல்லாம் அடக்கம்! இவர்களின் சாதனைகள் அடக்கி வாசிக்கப் பட டெண்டுல்கரின் ஜாஜ்வல்யப் பிரகாசம் ஒரு காரணம்.  திராவிட் ஓய்வு அறிவித்தபின் அவரைப் பற்றி எல்லா நாட்டு ஆட்டக்காரர்களும் நினைவு கூர்ந்தது, வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது. கங்குலிக்கு இப்படி நடக்கவில்லை.
டெண்டுல்கரின் நூறாவது சதத்துக்குப் பின் சேனல்களிலும் செய்தித் தாள்களிலும் முகப் புத்தகம், வலைப் பதிவுகளிலும் அவரைப் பற்றி எழுதாதவர்களே இல்லை எனலாம்!  நூறாவது சத டென்ஷன் முடிந்த பிறகு நேற்று அவர் டென்ஷன் ஃப்ரீயாக எப்படி விளையாடுவர் என்று பார்க்கும் ஆவல் இருந்தது. நன்றாகவே ஆடினார். அவர் தன் ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பதால் ஃபீல்டிங்கில் கூட அவரை அடையாளம் கண்டு பிடிக்க நான்கு நொடிகள் அதிகம் ஆனது.  ஏன் மாற்றினார்... ஏதாவது ராசியோ...!
                  
என்னுடைய பள்ளி நாட்களில் எங்களுக்கு தலைமை ஆசிரியராய் இருந்த அமல்நாதர் (பின்னாளில் தூத்துக்குடி பிஷப் ஆனார்) பள்ளி ஆண்டு விழா அல்லது ஸ்போர்ட்ஸ் முடிந்த நாளில் அல்லது அதைவிட எங்கள் பள்ளி ஹாக்கியில் மற்ற பள்ளிகளை ஜெயிக்கும்போது (ஆட்டம் உள்ளூரிலேயே நடந்தால் அதைப் பார்க்க மதியம் கடைசி இரண்டு பீரியட் லீவ் விடுவார்... மற்ற பள்ளிகளில் நடக்கும்போது, வெளியூரில் நடக்கும்போது அங்கு சென்று ஆட்டக் காரர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் மாணவர்களின் 'ஆப்சென்ட்' பற்றி ஒன்றும் கேட்க மாட்டார்... அவரை ஏமாற்றவும் முடியாது... அவரும் ஆட்டம் பார்க்க வருவார் என்பதால் தன் பள்ளி மாணவர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்து வைத்துக் கொள்வார். 99% எல்லா மாணவர்களையும் அறிவார்!) பள்ளியில் அசெம்ப்ளி ஹாலில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கூடச் சொல்லி வெற்றி பற்றி அறிவித்து விட்டு மறுநாள் லீவ் என்று அறிவிக்கும் முன்னர் ஒரு வசனம் தப்பாமல் சொல்வார்... "இப்போது இல்லா விட்டால் அப்புறம் எப்போது..." இந்த ஒரு வரிக்காகத்தான் இவ்வளவு பெரிய முன்னுரை...!  நேற்றைய இந்திய வெற்றி, அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக, மற்றும் கோஹ்லியின் ஆட்டம் பார்த்த பிறகு இந்த வசனம்தான் நினைவுக்கு வந்தது...! 
                     
நேற்றைய வெற்றிக்கு முக்கிய கரணம் சொக்கத் தங்கம், கோஹினூர் வைரம் கோஹ்லியின் ஆட்டம்!  முகமது கைஃபின் பெற்றோர் மற்றும் எல்லோரையும் போல நானும் நேற்று டெண்டுல்கர் ஆட்டமிழந்ததும் ஆட்டம் என்ன ஆகுமோ என்று நினைத்தது உண்மை. ஏனெனில் சேஸ் செய்ய வேண்டிய டார்கெட்.  அவ்வப்போது எட்டிப் பார்த்து விட்டு கோஹ்லி நூறு அடித்த பின் தொடர்ந்து பார்த்தேன். கண்ணில் ஒற்றிக் கொள்வது போல அவளவு நல்ல ஆட்டம்!
                        
வழக்கம் போல வெற்றியை நெருங்கும் நேரம் அவரும் ரோஹித் சர்மாவும் அவுட் ஆக, வெற்றிக் கனியைப் பறிக்க (!) தோனி வந்து வழக்கம் போலவே ஏதோ தன்னால்தான் இந்த வெற்றி என்பது போல அடித்து விட்டு வந்தார்! ஆனால் இந்தமுறை முதல் பந்திலேயே ரன் எடுத்து விட்டார். அதுவும் வெற்றிக்குத் தேவையான நான்கு! ஆட்டம் முடிந்ததும் தங்கள் நினைவுக்காக ஸ்டம்ப்பைப் பிடுங்கி எடுத்துச் செல்லும் வழக்கம் ஆட்டக்காரர்களுக்கு உண்டு. (என்ன செய்வார்களோ... அதில் இன்ன இடத்தில் இந்த மாதிரி வெற்றி பெற்றது என்று குறிப்பு எழுதி வைத்து விடுவார்களோ...) தோனி தனக்கு மட்டும் ஒரு ஸ்டம்ப் பிடுங்கிக் கொண்டு நடக்க, கோஹ்லி உடனேயே ஓடி வந்து தனக்கு ஒரு ஸ்டம்ப் பிடுங்கிக் கொண்டார்! 
                 
நல்ல சேஸ், பாக்.குக்கு எதிராக வெற்றி, இறுதிச் சுற்றுக்கு தகுதி உறுதி என்று நினைத்தால் அடுத்த மேட்சில் வங்கதேசம் இலங்கையை ஜெயித்தால் அதுதான் இறுதிப் போட்டிக்காம்...ஏனென்றால் வங்கதேசம் இந்தியாவை ஜெயித்ததாலாம்...என்னவோ செய்து விட்டுப் போகட்டும். நேற்றைய கோஹ்லியின்  ஆட்டம் ரசிக்கும்படி நன்றாக இருந்தது. அவ்வளவுதான்! 
             
ஒரு கற்பனை. இருபதாண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் ஒரு ஆட்டம்...
                         
சச்சின் ஒரு ஓவரின் கடைசி பந்தில் நான்கடித்து தன் நூற்றைம்பதாவது சதத்தைப் பூர்த்தி செய்ய, அரங்கமெங்கும் ஆரவாரம், பூ மழை...
                           
அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கோகுல் திராவிட் (ராகுல் டிராவிட்டின் மகன்) அவுட். அடுத்து ஆட வந்த ஜோகேந்தர்சிங் சானியின் (ஹி..ஹி.. தோனியின் பையன்தான்) விக்கெட்டும் சாய்க்கப் பட, கடைசி விக்கெட்டுக்கு வந்த பஹீர்கான் (சொல்லணுமா என்ன, ஜகீர்கானின் பையன்) எதிரணியின் ஹாட்ரிக் வாய்ப்பைப் பறித்து அடுத்த பந்தைத் தடுத்து விளையாடினாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க இந்தியா தோல்வி அடைகிறது!
                      
மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் வாங்கிய சச்சினிடம், வர்ணனையாளர் பேட்டி....
                            
"நூற்றைம்பதாவது சதம் அடித்ததும் உங்களுக்கு எப்படி இருந்தது..."
                         
"முப்பத்தேழு கிலோ குறைந்த மாதிரி இருந்தது... நான் அடித்த நூற்று நாற்பத்தொன்பது சதங்களை யாரும் மதிக்கவில்லையே என்ற குமைச்சல் இருந்தது..."
                  
"அடுத்து என்ன..?"
                       
"இனி கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் விளையாடுவேன்.."
                   
ஊடகங்களில் விமர்சகர்களும் ரசிகர்களும்...
                    
"அவரால் ஓட முடியாது என்பதால் நான்கு நான்காக அவர் அடித்து வருவதற்குள் நிறைய பந்துகள் வீணாகின்றன...இனியாவது அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும்"
                  
"அவர் பந்துகளை வீணடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு தேவை இல்லாதது. அவர் வயதில் வேறு யாராவது விளையாடுவார்களா என்று யோசித்துப் பாருங்கள்..." 
                    
"அவர் மட்டும்தான் ஜெயித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு... மற்ற ஆட்டக் காரர்கள் என்ன செய்கிறார்கள்"
                
"அவர் இப்போது ஓய்வு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது. இப்போதும் அவரால் ஐம்பது, நூறு என்று எடுக்க முடிகிறது...அவர் டீமுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறார். இன்றைய மேட்சில் கூட அவர்தான் மேன் ஆஃப் தி மேட்ச் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.." 
                  
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் காம்பிர் கூறியதாவது, 
                   
"அவர் ஓட முடியாததால் நடந்து ரன் எடுக்கிறார் என்பதால் ரன் அவுட் ஆகும்போது வாக் அவுட் ஆவதாக ஊடகங்களில் விமர்சனம் செய்வது நாகரீகமில்லாதது. அவரை ஓய்வு பெறச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. அவருக்குத் தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று தெரியும்... இன்னமும் அவர் இடத்தை அணியில் நிரப்ப ஆளில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்"
                                

8 கருத்துகள்:

  1. கோலி ஆட்டம் பழைய சச்சினை நினைவு படுத்தியது (Consistency...)

    டிராவிட் சொன்னது சரியே; சச்சின் இளைஞர்களுக்காக ஒன டேயில் இருந்து ரிட்டையர் ஆவது நல்லாயிருக்கும்

    பதிலளிநீக்கு
  2. Kohli's shots were great.. he didn't give them any chance almost. I like ground shots rather than spooning the ball up in the air.

    சச்சினோட பையனும் கிரிக்கெட்டராமே......!!
    அந்த இளம் வீரருக்கு இடமளிக்கவாவது அவர்(sachin) ரிடையர் ஆவாருனு நெனச்சேன்..
    என்னோட நெனப்புல மண்ணள்ளி போட்டுடிச்சு உங்க கற்பனை..

    some spelling mistakes..
    show that it was posted in a hurry. Did the author fear that Sachin might announce his retirement before publishing this post

    பதிலளிநீக்கு
  3. கிரிக்கெட் பற்றி சுவாரஸ்யம் விட்டுவிட்டதனால், இந்த அரட்டையில்
    கலந்து கொள்ள தகுதியில்லை;)
    ஆனால் சச்சின் மும்பை ஏழைகளுக்கு நிறையச் செய்யலாம்

    பதிலளிநீக்கு
  4. டிராவிட் மகன் பெயர் சமீத் என்று படித்ததாக ஞாபகம்!! அர்ஜுன்(சச்சின் மகன்) டெண்டுல்கரின் கிரிக்கெட் கனவு??!! :-))

    உங்கள் கற்பனை உண்மையிலேயே நடக்க வாய்ப்பு உள்ளது!!

    பதிலளிநீக்கு
  5. சச்சின் நூற்றிஐம்பதை அடிக்கும் போது முழுவழுக்கை தலையுடன் இருப்பாரா? நல்ல கற்பனை.

    பதிலளிநீக்கு
  6. நன்றி மாதவன்...சொன்ன பிழைகளுடன் சொல்லாத தவறுகளும் திருத்தியாச்சு!

    பதிலளிநீக்கு
  7. சச்சின் 150 ஆவது சதம் எடுக்கும் கற்பனை அபாரம்!!

    பதிலளிநீக்கு
  8. ஹாஹா, எனக்குப் பிடிக்காத ஆட்டக்காரர் சச்சின்; எல்லாராலும் தூக்கி வைக்கப் படுகிறார் என்று என் பெண்ணோடும், பையரோடும் சண்டை போடுவேன். திராவிட் ஜெண்டில்மேன்; அமைதியான நிறைவான ஆட்டம். ஆனால் இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை; அது குறித்த சம்பாஷணைகளில் கலந்து கொள்வதும் இல்லை.

    ஆனால் திராவிட் ஓய்வுனு அறிவிச்சப்போ மனசு வருந்தியதுஎன்னமோ உண்மை. இந்த சச்சினுக்கு அந்தப் பெருந்தன்மை எப்போ வரும்??? :(((((((( ரொம்பவே சுயநலம்னு தோணும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!