வியாழன், 22 மார்ச், 2012

டயமண்டும், டயமண்டுவும்! புதிர்க் கேள்வி.

               
அறிவு ஜீவிக்கு அன்று திருமண நாள். 
                  
அவருடைய நண்பராகிய, குரோம்பேட்டைக் குறும்பன் தலைமையில், ஒரு விழாக் குழு, (ஒரு மாதத்திற்கு முன்பே) அமைக்கப் பட்டது. 
                
விழாக் குழு, தங்களுக்கே உரிய சரச சாம தான பேத தண்ட வழிகளில், ஒரு பெரிய தொகை வசூல் செய்தார்கள். 
                       
மாம்பலத்தில் உள்ள ஒரு பிரபல நகைக் கடைக்குச் சென்றார்கள். அறிவு ஜீவியின் மோதிர விரல் அளவை எடுத்துச் சென்றிருந்தனர். விரல் அளவுக்குத் தகுந்த வைர மோதிரம் வாங்கி, அவருக்குப் பரிசளிப்பது என்பது திட்டம். 
    
குரோம்பேட்டைக் குறும்பனுடன் சென்றிருந்த தில்லைநாயகம் என்பவருக்கு, அந்த நகைக் கடைக்காரர் நெருங்கிய நண்பர். ஏதோ ஒருவகையில் தூரத்து உறவினரும் கூட. 
                 
அறிவு ஜீவியின் விரல் அளவுக்குத் தகுந்த மோதிரங்களைப் பார்வையிட்ட குழு, ஒரு வைர மோதிரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதை பேக் செய்வதற்கு முன்பு, கடைக்காரரிடம், கு கு ஒரு கேள்வி கேட்டார். 'சார் இது ஒரிஜினல் வைரம் தானே?' 
                 
'ஆமாம்! உங்களுக்கு அதிலென்ன சந்தேகம்?' என்று கேட்டார் கடைக்காரர். 
                    
"எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் யாருக்குப் பரிசளிக்கப் போகின்றோமோ, அவர் ஒரு அசகாய சூரர். வைரம் ஒரிஜினலா அல்லது போலியா என்பதை சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்."
                      
"ஹாங் - அது எப்படி? எங்களாலேயே சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாததை உங்க அறிவு ஜீவி கண்டுபிடிப்பார்? சற்றுப் பொறுங்கள். நான் இப்பொழுது கொண்டு வருகின்ற மோதிரக் குவியலிலிருந்து, அவர் விரல் சைசுக்கு ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஏற்கெனவே எடுத்த மோதிரத்திற்கு மட்டும் பணம் கட்டிச் செல்லுங்கள். நீங்கள் ஏற்கெனவே எடுத்ததையும், இப்பொழுது எடுக்கப் போவதையும், அவரிடம் கொடுங்கள். அவர் ஒரிஜினல் எது என்று தேர்ந்தெடுப்பதை, அவரே வைத்துக் கொள்ளட்டும். போலி வைரம் உள்ள மோதிரத்தை, எங்களிடம் திருப்பிக் கொடுத்தால், நாங்கள் நீங்கள் கொடுத்த பணத்தில் பாதியைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்" என்றார் கடைக்காரர். 
   
பிறகு குழு தேர்ந்தெடுத்த மோதிரம், எல்லாவகையிலும் முதல் மோதிரத்தைப் போலவே இருந்தது. இரண்டு மோதிரங்களையும், ஒரே பெட்டியில் போட்டு, கிஃட் பேப்பர் சுற்றிக் கொடுத்தார், கடைக்காரர். 
                
அதற்குப் பிறகு, அந்த வைர மோதிரங்கள் உள்ள பார்சலை, குழுவினரிடம் கொடுத்துவிட்டு, அலுவலக வேலையாகச் சென்றுவிட்டார், கு கு. 
                 
அறிவு ஜீவியை மொபைலில் கூப்பிட்டு, திருமண நாள் பரிசு பற்றிய விவரங்களை சுருக்கமாகக் கூறி விட்டு, தான் அலுவலகத்திலிருந்து இரவு வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக சொல்லி விட்டுச் சென்றார். 
==============   
தன வீட்டிற்கு வந்த விழாக் குழுவினரை வரவேற்று, எல்லோருக்கும் காபி கொடுத்து உபசரித்தார், அறிவு ஜீவி. விழாக் குழுவ்னருடன், நகைக் கடையில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பேசியபடி, அந்த மோதிரங்களை எடுத்து, இரண்டு கைகளிலும் கைக்கு ஒன்றாக மோதிர விரலில் அணிந்துகொண்டார். 
                    
பேசிக் கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய காபி ஆறிப் போயிருந்ததால், திருமதியிடம், சூடாக வேறு காபி கேட்டார். சூடான, ஆவி பறக்கும் காபி வந்தது. காபி டம்ப்ளரை சற்று நேரம் கைகளில் பிடித்து, அதிலிருந்து போகும் ஆவியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அறிவு ஜீவி, சட்டென்று காபியை அருந்தி முடித்து, தன்னுடைய இடது கையில் இருந்த வைர மோதிரத்தைக் கழற்றி, "இதோ இதுதான் போலி வைரம் உள்ள மோதிரம். இதைக் கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து, நீங்க கொடுத்த பணத்தில் பாதியைத் திருப்பி வாங்கி வாருங்கள்" என்றார். 
                
இரவு, வீட்டிற்கு வந்த கு கு - அறிவு ஜீவி, அணிந்திருப்பது, தங்கள் குழு முதலில் தேர்ந்தெடுத்த ஒரிஜினல் மோதிரம்தான் என்பதைப் பார்த்துத் தெரிந்துகொண்டார். 
   
==================
எங்கள் கேள்வி ரொம்ப சிம்பிள் : "அறிவு ஜீவி, தான் இப்போது அணிந்திருக்கும் மோதிரத்தில் உள்ள வைரம்தான் ஒரிஜினல் என்பதை எப்படித் தெரிந்துகொண்டார்?" 
              
சரியான பதில் சொல்பவர்களுக்கு, அறிவு ஜீவி ஏதேனும் பரிசு கொடுப்பாரா என்பதை கேட்டுச் சொல்கிறோம். 
                  

21 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்22 மார்ச், 2012 அன்று 7:36 AM

  எப்படிக் கண்டு பிடிப்பது என்று அறிவு ஜீவி, எனக்கு சொல்லி கொடுத்தார். ஆனா ....
  நான் ...
  சொல்ல ....
  மாட்டேன்பா!

  பதிலளிநீக்கு
 2. ஒரிஜினல் வைரம் என்றால் சூடான காபியின் ஆவி படிந்து அதற்கு வியர்க்காது. கண்ணாடி வைரத்திற்கு வியர்க்கும். அதனால்தான் அறிவுஜீவி கண்டுபிடித்தார். சரியா ஜீ...?

  பதிலளிநீக்கு
 3. //காபி டம்ப்ளரை சற்று நேரம் கைகளில் பிடித்து, அதிலிருந்து போகும் ஆவியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அறிவு ஜீவி, சட்டென்று காபியை அருந்தி முடித்து// விஷயம் இங்க இருக்கு!!

  பதிலளிநீக்கு
 4. இங்கு நிறைய பதில்கள் கண்ட பின்பு, என்னுடைய பதிலை கூறுகின்றேன்.

  பதிலளிநீக்கு
 5. இந்தக் கதையில் மாதவனிற்கும் ஒரு பாத்திரம் (தங்கத்தில்.. அட்லீஸ்ட் வெள்ளியில்... அட.. ச்டைல்லஸ் ஸ்டீலாவது ) வழங்காததை கண்டித்து.. நான் இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் (தெரிந்து கொண்டாலும்) சொல்லமாட்டேன்..

  ## மைன்ட் வாய்ஸ்.. : மாதவா.. எப்படிடா இப்படிலாம்.... ம்ம்ம்ம். ம்ம்ம் என்னவோ போடா.

  பதிலளிநீக்கு
 6. இடது கையிலிருந்த மோதிரத்தில் பதிக்கப்பட்டிருந்தது வைரம் மாதிரியே பட்டை தீட்டிச் செதுக்கப் பட்டிருந்த கற்கண்டு. காபியின் ஆவி படிந்ததும் லேசா கரைய ஆரம்பிச்சிருக்கும். ஆகவே அதை போலி வைரம்ன்னு கண்டுபிடிச்சிருப்பார்.

  பதில் கரெக்டா இருந்தா நிஜ வைரமோதிரம் பரிசளிக்கப்படும்ன்னு அறிவு ஜீவி சொல்லியிருக்காராமே.. அப்டியா :-)))

  பதிலளிநீக்கு
 7. எங்கள் ப்ளாக்22 மார்ச், 2012 அன்று 11:32 AM

  அமைதிச்சாரல்! சுவையான கற்பனை!
  அதோடு கூட வைரமோதிரம் பரிசு பற்றி வேற ஒரு டுப்பு!! ஆஹா கிளம்பிட்டாரய்யா, கிளம்பிட்டார்!

  பதிலளிநீக்கு
 8. எனக்கு வைர மோதிரம் வேண்டாம்; அல்பம்! வைர நெக்லஸ் கொடுக்கிறதா இருந்தால் சொல்றேன்; இப்போ எனக்கும் பி.நா; தி.நா. இ.நா. எல்லாம் வரப் போகுது, வழக்கமா முப்பெரும் விழா எடுப்பேன்; இந்தத் தரம் உங்க நெக்லஸோட சிம்பிளா முடிச்சுக்கறேன்.

  பதிலளிநீக்கு
 9. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் நிறைய "சகலகலா வல்லவர்"கள் இருக்கிறார்கள் போலும்.

  பதிலளிநீக்கு
 10. வைரத்துல ஆவி அடிச்சதும் உடனே தெளிஞ்சு பழையபடியே தெளிவாயிட்டா அது ஒரிஜினல். அப்படி இல்லாம அடிச்ச ஆவி அங்கியே கொஞ்ச நேரம் செட்டிலாகியிருந்தா அது போலி.

  பதிலளிநீக்கு
 11. பதில் சொல்லிட்டாங்கபோல இருக்கு.பிறகு எதுக்கு நானும்....!

  பதிலளிநீக்கு
 12. //ஆவி படிந்ததும் லேசா கரைய ஆரம்பிச்சிருக்கும். //

  ஆவி.. பேய்.. பிசாசு.. (ரத்தக்)காட்டேரி..
  இதெல்லாம் கற்பனை.... நெஜத்துல இல்லவே இல்ல..

  பதிலளிநீக்கு
 13. காப்பியிலிருந்து புறப்பட்ட ஆவி அறிவு ஜீவியிடம் நிஜவைரம்னு ஒண்ணும் கிடையாது. இதை வச்சுண்டு அதைக் கொடுத்துடுன்னு சொல்லிட்டு ஆவியாகிவிட்டது.
  அதான் அங்க கதை.

  பதிலளிநீக்கு
 14. இரண்டுமே ஒரிஜினல் தான். ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம். ஒன்றைத் திருப்பிக் கொடுத்தலால் பாதி பணம் கொடுத்துவிட்டார் கடைக்காரர்!

  பதிலளிநீக்கு
 15. குரோம்பேட்டைக் குறும்பன்24 மார்ச், 2012 அன்று 6:53 AM

  மோ சி - கடைககாரர், ஆரம்பத்தில் குழுவினர் வாங்கிய ஒரிஜினல் வைர மோதிரத்திற்கு மட்டுமே பணம் வாங்கிக் கொண்டார்.

  பதிலளிநீக்கு
 16. குரோம்பேட்டை குறும்பன் - விடை தெரியாததால் அப்படி மழுப்பியிருந்தேன்..!! நீங்கள் விடாததலால் கொஞ்சம் யோசிப்போம்... சூடான காபியில் விடை இருப்பதாய் நண்பர்கள் கூறியுள்ளனர்.. இதை வைத்து அப்படியே கொஞ்சம் ஊகித்தால்...... காபியில் வரும் ஆவியினால் ஒரு மோதிரத்தைப் பார்க்கையில் வானவில் போல் பல வண்ணம் தோன்றியிருக்குமோ? ஆனால் அது வைரத்தில் தோன்றுமா இல்லை கண்ணாடியிலா? Refractive Index தான் காரணமாக இருக்கமுடியும். இந்த விடை பாதி சரியாக இருந்தால் பாதி வடையாவது பார்சல் அனுப்பவும்... (பாதி வைரம் கேட்டு மீண்டும் ஏமாற நான் தயாரில்லை!)

  பதிலளிநீக்கு
 17. இதைக் கவனிக்கவில்லையே...என்ன ஒரு co-incidence ..அறிவு ஜீவி திருமண நாள் பரிசு வாங்குகிறார்...நானும் திருமண நாள் பற்றி ஒரு லிமெரிக் எழுதியுள்ளேன் எனது பதிவில்.. ( இந்த promo இங்கு கொடுத்துவிட்ட படியால் வடை வேண்டாம் என்று தள்ளுபடி செய்கிறேன்!! ) நன்றி .. நன்றி..

  பதிலளிநீக்கு
 18. பதிவு சுவாரசியம். நிறைய பேர் விடையை சொல்லிட்டாங்க. வைரத்தில் நீராவின் படியாது. இதுதான் என் பதிலும். காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்காக.

  பதிலளிநீக்கு
 19. எங்கள் ப்ளாக்25 மார்ச், 2012 அன்று 7:34 AM

  ஒரிஜினல் வைரம், வெப்பத்தை சுலபமாகக் கடத்தும். கண்ணாடி, வெப்பத்தைக் கடத்தாது. சூடான காபி டம்ப்ளரின் மீது வைர அல்லது கண்ணாடிக்கல் படும்படி வைத்துக் கொண்டால், விரலுக்கு முதலில், எது வெப்பத்தை அதிக அளவில் கடத்துகின்றதோ, அது ஒரிஜினல் வைரம். வைரத்தின் மீது நீராவி படியாது என்பதும் இதன் சம்பந்தப் பட்ட சரியான பதில். இந்த பதிலை முதலில் பதிந்த திரு பா. கணேஷ் அவர்களுக்கு, ஒரு பரிசுப் புத்தகத்தை, அறிவு ஜீவி அனுப்பி வைத்துவிட்டார்.

  பதிலளிநீக்கு
 20. திரு.அறிவுஜீவி அவர்கள் அன்புடன் அனுப்பிய புத்தகப் பரிசைப் பெற்று மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஸார்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!