சனி, 31 மார்ச், 2012

நடக்கும் நினைவுகள்..... (5) பொம்மையைக் கண்டுக் கண்டு பயம் எதற்கு....?

               
முன்பு குமுதத்தில் மனிதன் என்ற பெயரில் ஒரு தொடர் பகுதி வந்து கொண்டிருந்தது. வித்தியாசமான முயற்சிகளை பொது மக்கள் மத்தியில் நடத்தி கிடைக்கும் ரீ ஆக்ஷன் பற்றிய தொடர் அது! வாரா வாரம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.
                    
தற்சமயம் டிவிக்களில் கேண்டிட் கேமிரா என்ற பெயரில் சில அநியாய அகட விகடங்கள் நடக்கும். சமயங்களில் பார்க்கும் நமக்கு கோபம் கூட வரும். சில சுவாரஸ்யமாக இருக்கும்.
             
இப்போது நான் சொல்லப் போகும் சம்பவம் கண்ணெதிரே யதேச்சையாக ஆனால் நிஜமாக நடந்தது. மாலை வாக்கிங் வந்து கொண்டிருந்த போது கவனித்தது. ஓரமாக நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தபோது நடக்க ஆரம்பித்த சம்பவம் பார்த்து,  அதனால் கவரப்பட்டு, பேசி முடித்து விட்ட ஃபோனை,  பேசுவது போலவே கையில் வைத்தபடி, அதிலேயே படம் எடுத்தபடி கவனிக்கத் தொடங்கினேன்! 
               
பிரதான சாலை அல்ல அது, என்றாலும் பஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்லும் சாலை அது.  சில சிறுவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு பொம்மை கிடந்தது. ஏன் தூக்கிப் போட்டார்கள் என்று நினைக்குமளவு சேதமில்லாத,  ஓரளவு நல்ல பொம்மை. அதை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனுக்கு சடாரென ஒரு ஐடியா தோன்றியது. 
             
அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு போய் சாலையின் நடுவே நிற்க வைத்தான். நின்றது,  என்றாலும் அவ்வப்போது காற்றில் விழுந்தது. உடனே பொம்மையுடன் ஓரமாக வந்து சில குச்சிகளைச் சேகரித்துக் கொண்டு மறுபடி சாலை நடுவே சென்று பொம்மையை நிறுத்தி விட்டு மூன்று பக்கமும் குச்சிகளைத் தாங்கு கோலாகக் கொடுத்து நிறுத்தி விட்டு ஓரமாக வந்து கொஞ்ச நேரம் நின்று ஆராய்ந்து விட்டு....  சென்று விட்டார்கள்!   
அப்புறம் நடந்ததுதான் நல்ல வேடிக்கை. சாலையில் வாகனமோட்டி வந்தவர்களுக்கு சாலையின் நடுவே ரத்தச் சிவப்பில் உடையணிந்து நின்று முறைத்துப் பார்க்கும் பொம்மையைக் கண்டு என்ன தோன்றியதோ... நட்ட நடுவே நிற்கும் அந்த பொம்மையின் மேல் படாமல், மோதாமல் ஓரமாக ஓட்டிச் சென்றார்கள்.     

வேகமாக வந்த கார் ப்ரேக் பிடித்தவாறே ஓரம் வந்து பொம்மையைத் தவிர்த்துப் பறந்தது. இரு சக்கர வாகனங்கள் கவனமாக பொம்மையைத் தவிர்த்துப் பறக்க, அதன் ஓட்டுனர்களும் பில்லியன் ரைடர்களும் ஆர்வமாக பொம்மையைத் திரும்பி ஒரு லுக் விட்டு விட்டு,  பார்த்தாலே மந்திரம், தந்திரம் ஏதாவதில் மாட்டி விடுவோம் என்பது போல தலையைத் திருப்பிக் கொண்டு சென்றார்கள்.

இன்னும் பலர் அதைத் திரும்பிப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்தார்கள். இரு சக்கர வாகனத்தில் டபுள்ஸ் வந்த லேடி போலீஸ் ஜோடி ஒன்றும் ஓரம் கட்டிப் பறந்தாலும் ஓட்டுனப் பெண் போலீஸ் கையை நீட்டிக் காட்டி கோபத்துடன் சைகை காட்டிச் சென்றாரே தவிர அவரும் அதை எடுக்கவோ ஓரம் போடவோ முனையவில்லை. 
              
ஆட்டோக்களும் அதே வண்ணம் பறந்தன. நடந்து சென்ற சிலர் சுற்றுமுற்றும் பார்த்து யார் இப்படிச் செய்திருப்பார்கள் என்று ஆராய்ந்து விட்டு புன்னகையுடன், ஆனால் கவனமாக 'அதை'ப் பார்க்காமல் கடந்தனர். 
             
இதே போல நாம் செல்லும் போது பாதையில் இப்படி ஒன்று எதிர்ப் பட்டால் நாம் என்ன செய்வோம் என்று உள்ளே நினைப்பும் ஓடியது. ஆனாலும் மக்களை நினைத்து நிஜமாகவே ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும்போதே செல்ஃபோன் பேசியபடி வந்த ஒரு ஓட்டுனரின் டி வி எஸ் 50 பொம்மையை கவனிக்காமல் மோதி தட்டி விட்டுப் பறந்தது.
             
(புகைப் படம் எடுத்தால் பொம்மையை வைத்தது நாம்தான் என்ற எண்ணம் வந்து விடுமோ என்ற எண்ணம் வந்ததால் ஜாக்கிரதையாகப் படம் எடுக்க வேண்டியிருந்தது!! அப்புறம் நடையை விட்டு விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியதுதான்!!)
         
அப்புறமும் நடு ரோடில் பரிதாபமாகக் கிடந்த அந்த பொம்மையை வண்டிகள் கவனமாகத் தவிர்த்தே பறந்தது கண் கொள்ளாக் காட்சி. கட்டக் கடைசியாக ஒரு ஸ்கூட்டி தாண்டும்போது பொம்மையின் ஓரத்தில் தட்டப் பட்டு நெம்புகோல் தத்துவத்தில் பொம்மை எம்பி அந்த ஸ்கூட்டியின் முன்புறமே விழ, வண்டி கண்களிலிருந்து மறைய, காட்சி முடிவுக்கு வந்தது! 
           

7 கருத்துகள்:

 1. என்னதான் போக்குவரத்து அதிகமில்லாத சாலையாயினும் நடுரோடில் வாகனம் ஓட்டுவர்களுக்குக் கவனச் சிதைவு ஏற்படுமாறு செய்த சிறுவர்களின் செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  /பொம்மையைக் கண்டு பயம்/

  இப்போது எதைப் பார்த்தாலும் பயம்தான் வருகிறது மக்களுக்கு. தொட்டால் வெடிக்கும் குண்டு எனக் கூட எண்ணியிருக்கலாம்:(.

  பதிலளிநீக்கு
 2. நம் காலம் அப்படி இருக்கிறது. செய்திகள் நம்மை ஆட்டி வைக்கின்றன.
  பயம் எல்லாம் பயமயம்.

  பதிலளிநீக்கு
 3. வேடிக்கை பார்க்காமல் பொம்மையை வைக்கவிடாமல் தடுத்திருக்கலாமோ! என்னமோ நானாக இருந்தால் அதைத் தான் செய்திருப்பேன். :))))) சொன்னது தப்புனா மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 4. உண்மையை சொல்லுங்க போன் பேசினதெல்லாம் சும்மா. பொம்மையை அங்கே போட்டது நீங்க தானே?

  பதிலளிநீக்கு
 5. விளையாட்டு வினையாகிடாம இருந்துதே.. அந்த வரைக்கும் மக்கள் தப்பிச்சாங்க..

  பதிலளிநீக்கு
 6. இப்போது எதைப் பார்த்தாலும் பயம்தான் வருகிறது மக்களுக்கு. தொட்டால் வெடிக்கும் குண்டு எனக் கூட எண்ணியிருக்கலாம்:(....

  unmai

  http://www.dunkindonutscoupons.com

  பதிலளிநீக்கு
 7. காட்சி முடிவுக்கு வந்து
  நிம்மதியும் வந்தது..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!