வெள்ளி, 16 மார்ச், 2012

எட்டெட்டு ப 11: மாயா கொலை.

                             
   
ஆகஸ்ட் எட்டு, இரண்டாயிரத்து ஆறு. 
        
எட்டெட்டு பகுதி மூன்று படித்தவர்களுக்கு, இது மாயா கொலை செய்யப்பட்ட நாள் என்ற விவரம் மறந்திருக்காது. பகுதி 3 சுட்டி<<< 
              
அன்று என்ன நடந்தது என்பதை (கே வி க்கு) விவரிக்கின்றார் மாயா: 
                   
ஆகஸ்ட் எட்டாம் தேதி காலை ஆறு மணி சுமாருக்கு, இந்த அறைக்குத்தான் முதலில் வந்தேன். அப்பொழுது இந்த அறை, காலு சிங்கின் அறையாக இருந்தது. காலையில் இந்த அறையின் கதவை வந்து திறந்த காலு சிங்கின் கண்களில்,  என்னைப் பார்த்ததும் மிகவும் பயம் தெரிந்தது. 
                   
"மேம் சாப் - நீங்க ஏன் இப்போ இங்கே வந்தீங்க? உங்களை இங்கே பார்த்தார்களானால், அவர்கள் என்னைப் பழி தீர்த்து விடுவார்கள். தயவு செய்து என்னை அவர்களிடம் மாட்டி விட்டு விடாதீர்கள். அவர்கள் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியாத மாதிரி காட்டிக் கொள்ளுங்கள்" என்றான். 
                
நான் காலு சிங்கிடம், "காலு - கவலைப் படாதே. உன்னை எந்தச் சந்தர்ப்பத்திலும் காட்டிக் கொடுக்கமாட்டேன். நானே அவர்களிடம், சென்ற வாரம் இங்கு வந்திருந்த போது, இங்கு இன்று வருவேன் என்று சொல்லி இருந்தேன். நீ எட்டு மணிக்கு அவர்களுக்கு டிரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்தவுடன், உனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு, லீவு வாங்கிக் கொண்டு, உன் உறவினர் வீடு இங்கே இருப்பதாகச் சொன்னாயே, அங்கு சென்று விடு. இந்த அறையைப் பூட்டி வைப்பது உண்டா?"
                    
"இல்லை மேடம். இந்த அறையில் பூட்டி வைப்பதற்கு ஒன்றும் கிடையாது. இதோ இந்த டேபிள், தண்ணீர் கூஜா, டம்ளர், என்னுடைய தகரப் பெட்டி, என்னுடைய உடைகள். மற்றும் எஜமானுக்கு வேண்டிய டிரிங்க்ஸ், மாத்திரைகள் இருக்கின்ற இந்த ஃபிரிட்ஜ். அவ்வளவுதான். ஏன் கேட்கின்றீர்கள்?" 
                 
"இந்த டேபிள் டிராயர்களுக்கு சாவி உண்டா?" 
              
"உண்டு மேடம். மேல் டிராயரின் சாவி கீழே உள்ள இரண்டாம் டிராயரில் உள்ளது. நீங்கள் இங்கே எதையாவது வைக்க வேண்டுமா?"
            
"ஆமாம்."
                  
"அப்படியானால், இரண்டாவது டிராயரில் உள்ள சாவியால் முதல் டிராயரைத் திறந்து, அங்கு பாதுகாப்பாக நீங்கள் வைக்கவேண்டியதை வைத்து, அந்த டிராயரைப் பூட்டி, இரண்டாவது டிராயரில், சாவியைப் போட்டு வைத்து விடுங்கள்." 
                      
நான் கொண்டு சென்றிருந்த மாத்திரை பாட்டிலை, ஒரு மாத்திரையை மட்டும் எடுத்துக் கொண்ட பின், மீதி இரண்டு மாத்திரைகளுடன், இந்த டேபிளின் முதல் டிராயரில் வைத்து, அதை பூட்டி, சாவியை அவசரமாக இரண்டாம் டிராயரில் போட்டு, அதை மூடி விட்டுக் கிளம்பினேன். நான் எதை உள்ளே வைத்தேன் என்பதைக் கூட காலு சிங் கவனிக்கவில்லை. தண்ணீர் டம்ளரைக் கழுவுவதற்கு அதை எடுத்துக் கொண்டு, வாஷ் பேசின் பக்கம் சென்றுவிட்டான். 
                   
ஓ ஏ வின் அறைக் கதவின் அழைப்பு மணியை ஒலித்த போது, ஓ ஏ வே வந்து கதவைத் திறந்தார். என்னைப் பார்த்ததும், "அட மீண்டும் நீயா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்றார். 
                
"என்ன முடிவு எடுத்திருக்கின்றீர்கள்?"
                  
"எந்த விஷயத்தில்?"
            
"என்னுடைய வாழ்க்கைப் பிரச்னையில்தான்."
                 
"உன்னுடைய பிரச்னைக்கு, நாங்கள் என்ன முடிவு எடுப்பது? நீதானே எடுக்க வேண்டும்!" 
                     
அறைக்குள் நுழைந்தவாறு சுற்று முற்றும் நோட்டமிட்டேன். பிங்கி இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தாள். கட்டிலில் அவளுக்குப் பக்கத்தில், ஓ ஏ படுத்திருந்த தடயங்களும் தெரிந்தன. 
                 
"என்ன சொன்னீர்கள்? என்னுடைய பிரச்னைக்கு நான் முடிவு எடுக்க வேண்டுமா? பிரச்னையே - இதோ இந்தப் பிசாசுதானே! இதை அப்படியே வெட்டிப் போட்டுட்டேன்னா பிரச்னையே இருக்காதே" என்றேன் காட்டமாக. 
                
என்னுடைய கூச்சலைக் கேட்டு கண் விழித்தாள் அந்த மேனா மினுக்கி. 
                
எழுந்தவுடன் கலவரமாகி, பாத் ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள், அவள். 
               
அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு, ஓ ஏ விடம், கெஞ்சி, மிஞ்சி, என்னென்னவோ பாயிண்டுகள் சொல்லி, பிங்கியுடனான அவருடைய உறவை மறந்துவிட வேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருந்தேன். 
              
அவர் எதற்கும் பிடி கொடுத்துப் பேசவில்லை. 
               
அந்த நேரத்தில், காலு சிங் ஒரு டிரேயில் கோக்க கோலா, ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தான். என்னை அங்கே முதன் முறையாகப் பார்ப்பவனைப் போல முக பாவத்துடன், "மேடம் உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும்?" என்று கேட்டான். 
                    
"எனக்கு ஒன்றும் வேண்டாம் காலு. நான் பிறந்த நாளுக்காக, நம் வீட்டுக்கு அருகே இருக்கின்ற கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்ய வேண்டும். அதற்குப் பிறகே எதுவும் அருந்துவேன்." 
               
பிறகு, காலு சிங் ஓ ஏ விடம் தனக்கு உடல் நிலை சரி இல்லை என்றும், தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்று, அதற்குப் பக்கத்தில் உள்ள குடும்ப டாக்டரைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்றும் கூறி, ஓ ஏ வின் சம்மதம் பெற்று, சென்றுவிட்டான். 
                
ஓ ஏ, தன்னுடைய கோக்க கோலா கிளாசில், ஒரு ஆஸ்பிரினைப் போட்ட சமயம், பிங்கி பாத் ரூமிலிருந்து வெளியே வந்தாள். நான், ஓ ஏ விடம், "சற்றுப் பொறுங்கள். உங்களை தன்னிலை அறிய வைக்க, இதோ இதுவும் உங்களுக்குத் தேவை." என்று சொல்லியபடி, என் கைப்பையில் வைத்திருந்த காவிக் கலர் மாத்திரையைக் கையில் எடுத்துக் கொண்டு வேகமாக அவரை நோக்கிச் சென்றேன். 
                    
ஆனால் - என்ன துரதிருஷ்டம்! தரை விரிப்பில் ஓரத்தில், மேல் நோக்கி வளைந்திருந்த முனை தடுக்கிக் கீழே குப்புற விழுந்தேன். அப்பொழுது கையில் தயாராக வைத்திருந்த காவிக் கலர் மாத்திரை, கை நழுவிக் கீழே விழுந்து உருண்டு எங்கோ சென்று மறைந்துவிட்டது. தரை விரிப்பும் காவிக் கலரில் இருந்ததால், அதை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. 
                    
நான் உடனே சமாளித்து எழுந்து, ஓ ஏ விடம், "என் வாழ்க்கையில், எனக்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் கொடுங்கள். நான் சில நொடிகளில், இங்கே திரும்பி வருகின்றேன். அது வரை அந்தக் கோக்க கோலாவை குடிக்காதீர்கள்." என்று சொல்லி, இந்த அறைக்கு ஓடி வந்தேன். 
                
இந்த மேஜையின் இரண்டாவது டிராயரை அவசரமாகத் திறந்து பார்த்தால், அங்கு முதல் டிராயரின் சாவி எங்கும் காணப் படவில்லை. அவசரம் அவசரமாக, சுற்று முற்றும் தேடினேன். பிறகு பைத்தியம் பிடித்தது போல, முதல் டிராயரை பலங்கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தேன். அது திறக்கவில்லை. 
               
அறைக்குள் யாரோ நுழைந்தது போல இருந்தது. யாரென்று திரும்பிப் பார்க்க எத்தனிப்பதற்குள் என் கழுத்தையும் வாயையும்,  பின்னாலிலிருந்து முதலில் இரண்டு கைகளும் பிறகு நான்கு கைகளும் அழுத்திப் பொத்தி .... 
             
சிறிய போராட்டத்திற்குப் பிறகு நான் நினைவிழந்தேன். 
                
பிறகு எனக்கு நினைவு திரும்பியதாக நான் நினைத்த பொழுது, காற்றில் மிதந்து கொண்டு இருப்பது போல ஓர் உணர்வு. வலியே இல்லை. ஆனால்.... இது என்ன - என்னுடைய உடலை ஓ ஏ வும், பிங்கியும் ஒரு சாக்குப் பையில் போட்டு, தூக்கிக் கொண்டு லிப்ட் பக்கமாகச் செல்கின்றார்களே! 
                
நானும் மிதந்து கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்தேன். அவர்கள் காரில் பின் சீட்டில் என் உடலை ஏற்றினார்கள். பிறகு என் வீட்டை நோக்கி கார் சென்றது. 
                  
ஓ ஏ, பிங்கி - இருவருமே மிகவும் சோகமாக இருந்தார்கள். வீட்டுக்கு அருகே செல்லும் பொழுது, ஓ ஏ மெல்லிய குரலில், "பிங்கி நாம் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ?" என்று கேட்டார். 

பிங்கி அதற்கு உணர்ச்சியற்ற குரலில், "அக்காதான் அவசரப்பட்டுட்டாங்க" என்றாள். 

அதற்குப் பின் என்னுடைய வீட்டில் போடப்பட்ட நாடகங்களையும், காட்சி அமைப்புகளையும், நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் கரடியாகக் கத்தினால் கூட, என் குரல் எனக்கே கேட்கவில்லை. பிங்கியின் முகத்தை என்னுடைய கை நகங்களால் கீறிக் கிழிக்கக் கூட முயன்றேன். ஆனால் என்னால் ஒரு உலர்ந்த இலையைக் கூட அசைக்க முடியவில்லை. 
       
(தொடரும்) 
                      

8 கருத்துகள்:

 1. மாயா பிறந்த தேதி: 8-8-1970 கூட்டுத் தொகை: 33 = 6

  மாயா இறந்த தேதி: 8-8-2006 காலை 8 மணி 8 நிமிடம்: கூட்டுத்தொகை: 40=4

  எதுவும் எட்டில்லை. போகட்டும்.

  இப்பொழுது விவரமாக இரண்டாவது எட்டை (8-8-2006-ஐ) விவரித்து பதிவிட்ட தேதி; வெள்ளி, மார்ச் 16, 2012. (6+3+16+2012= 21=3)இந்தத் தேதியையாவது எட்டாகக் கொண்டிருக்கலாம் இல்லையா? அதுவும் இல்லை என்று ஆகிப்போச்சு.

  போனால் போகட்டும். எட்டெட்டுக்கு எட்டு, எட்டு என்று இன்னும் ரெண்டு சான்ஸ் இருக்கு.

  அப்பவாது அந்த எட்டு, எட்டு வரதான்னு பாக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. கூட்டு தொகை எல்லாம் இல்லாம பாத்தா, பிறந்ததும் எட்டாம் தேதி, இறந்ததும் எட்டாம் தேதி. எட்டெட்டு சரியா போச்சு. இதுக்கு மேல புரியாட்டி ஒரு எட்டு போய் எட்டெட்டு ஆசிரியரை கேட்டுட வேண்டியதுதான்.
  அநியாயமா மாயா இறந்தது பரிதாபமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. எட்டாம் மாசம், எட்டாம் தேதி, எட்டு மணிக்கு பிறந்தாங்க.
  எட்டாம் மாசம், எட்டாம் தேதி, எட்டு மணி, எட்டு நிமிடத்துல இறந்தாங்க. அப்போ மொத்தமா ஏழு எட்டு வந்தாச்சு. இறந்த வருஷம் 2006. கூட்டினா எட்டு வரது. அப்ப மொத்தம் எட்டெட்டு வரது. ஓ! அப்ப எட்டெட்டு ஆயிடுத்தோ?!

  பதிலளிநீக்கு
 4. எங்கள் ப்ளாக்17 மார்ச், 2012 அன்று AM 7:45

  இன்னமும் பதிவாசிரியர் சொல்ல நினைத்த எட்டெட்டு வாசகர்களின் யூகங்களில் சரியாக வரவில்லை. கே வி மாயா ஆவியை சந்தித்தது எங்கே, எப்போது என்பதை முன் அத்தியாயங்களில் கவனமாகப் படித்தவர்களுக்கு சில எட்டுகள் புரிந்திருக்கும். வினோத் எங்கே காணோம்?

  பதிலளிநீக்கு
 5. உள்ளேன் ஐய்யா.. ..
  ஒரு வாரத்க்கு ஒரு பகுதி தான் வலைஎற்றுவீங்கள ?
  தினம் ஒரு பகுதி போடலமே...
  நன்றி
  வினோத்

  பதிலளிநீக்கு
 6. //என்னுடைய கூச்சலைக் கேட்டு கண் விழித்தாள் அந்த மேனா மினுக்கி.//

  ஆத்திரத்திர கொப்பளிப்பு அழகு. அந்த மினுக்கலில் தான் கே.வி.மாயா ஆவியைச் சந்தித்தலிருந்து என்று எட்டெட்டாய் எத்தனை பளிச்.. பளிச்..?

  //பிங்கி அதற்கு உணர்ச்சியற்ற குரலில், "அக்காதான் அவசரப்பட்டுட்டாங்க" என்றாள்.//

  அடுத்தாற் போல் வீட்டில் போடப்பட்ட நாடகங்களுக்கு ஆரம்ப வரி.

  பதிலளிநீக்கு
 7. முதல்லேருந்து படிச்சுட்டு வரேன். மறந்தே போச்சு! :( நினைவு படுத்திக்கணும்.

  பதிலளிநீக்கு
 8. எட்டெட்டு 64 வருமோ? இடைவெளி விட்டு விட்டுப்படிச்சதில் எல்லாமும் மறுபடி நினைவு படுத்திக்க வேண்டி இருக்கு!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!