சனி, 15 டிசம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 9/12 முதல் 15/12 வரை.


எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....


=======================================================================

1) தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு, 53 வயதிலும், சிட்டாக பறந்து உதவும் ரோசியம்மா: என் சொந்த ஊர் தாளவாடி. 10ம் வகுப்பு முடித்து, மங்களூரில், இரண்டாண்டு டெய்லரிங் கோர்ஸ் படித்தேன். திருமண வாழ்க்கை, கை கொடுக்கவில்லை.பின், "மைராடா' அமைப்பில் சேர்ந்து, ஒன்றரை ஆண்டு, 250 பேருக்கு டெய்லரிங் பயிற்சி கொடுத்தேன். அவர்களில், 100 பேருக்கு மேல், தனியாக தையல் கடை வைத்து, நல்ல வருமானத்துடன் இருக்கின்றனர்.  (தினமலர்)
சுய உதவிக்குழு அமைப்பது, பாமர மக்களுக்கு கால்நடைகளை வளர்ப்பதற்கு உதவுவது, சுகாதார நடவடிக்கை மேற்கொள்வது என, பலருக்கு உபயோகமாகவே இருந்தது, என் நாட்கள்.காடுபசுவன்மாளம் என்ற ஊரில், "மைராடா' மூலம், மினி ஹெல்த் சென்டர் அமைத்திருந்தனர். அடிப்படை வசதி எதுவும் இல்லாததால், நான் பார்த்த பிரசவங்கள், என்னை ரொம்ப பெருமிதமாக உணர வைத்தன. குறிப்பாக, இரட்டை குழந்தைகளையும், தாயையும், பிரசவ போராட்டத்தில் இருந்து, பத்திரமாக மீட்ட நேரம், என் வாழ்வின் பொக்கிஷ தருணம். 
மலைவாழ் மக்கள் மத்தியில் பணியாற்றிய போது, வீட்டில் மூலிகைத் தோட்டம் அமைக்க வைத்து, அதன் மூலம், அவர்களுக்கு ஆரோக்கியத்தை சொல்லிக் கொடுத்தேன். படிப்பறிவில்லாத பாமர மக்கள், அந்த எளிய மருத்துவத்தை, இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.மற்றவர்களுக்கு உதவுவதால் தான், இந்த வயதிலும், உடம்பு எனக்கு பாரம் இல்லாமல் இருக்கிறது.
                                                
எப்போதும், என்னை சுற்றி இருப்பவருக்கு, சிறு சிறு உதவிகள் செய்வதில் ஆரம்பித்த பயணம், 33 ஆண்டுகளாக, சமூக சேவகியாக சுவீகரித்துக் கொண்டுள்ளது.பண்களுக்கு தொழில் பயிற்சிகள் தருவது, வங்கிக் கடன் பெற வழிகாட்டுவது, அரசு உதவித் தொகை பெற்றுத் தருவது மட்டுமின்றி, கல்வி ஆரோக்கியம், வேளாண்மை, கால்நடை, சமூகநல மேம்பாடு என, எல்லா தளங்களிலும், என் சேவை பணி தொடரும். (தினமலர்)

2) பின் தங்கிய கிராமங்களை மேம்படுத்துவதில், தன்னை ஈடுபடுத்தியுள்ள, நெல்லை மாவட்டம், புளியரை, "டி.கேர் நர்சிங் கல்லூரி' முதல்வர், கணேசன்: என் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த புதுக்குடி. நான், விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே கஷ்டப்படும் பின்னணி.
கேரளாவில், இரண்டாண்டு வேலை செய்து, சம்பாதித்த பணத்தில் தான், கல்லூரியில் சேர்ந்தேன். பெட்டிக் கடை நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தில், கல்லூரி செலவுகளை சமாளித்தேன். இப்படி, கஷ்டப்பட்டு, பி.எஸ்சி., பட்டதாரி ஆனேன்.எனக்கு, சிறு வயதிலிருந்தே, சுற்றுப்புறச் சூழலில் ஆர்வமுண்டு. நாம் வசிக்கும் கிராமம், வசிப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையேல், வசிக்க ஏற்றதாக, அதை, நாமே மாற்ற வேண்டும் என்பது, என் கொள்கை.
வளர்ந்தோம், படித்தோம், வேலையில் சேர்ந்தோம் என்றில்லாமல், மக்களுக்காக, வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான், என் வாழ்க்கை என, முடிவெடுத்தேன்.விடுமுறை நாட்களில், கிராமம் தோறும் பயணிப்பேன். எந்த கிராமம், சுகாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது என்று கவனிப்பேன். அங்கிருக்கும் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் பேசி, சுகாதாரக்கேட்டை சுட்டிக்காட்டி, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன்.
                                                        

நீர்நிலைகளை தூர் வாருவோம்; வேண்டாத குப்பையை செடி கொடிகளை அப்புறப்படுத்துவோம்; குப்பையை ஒழுங்காக, அதற்குரிய இடங்களில் போடுமாறு, வீடு வீடாகச் சென்று கேட்டுக் கொள்வோம். சாக்கடை, கழிவுநீர்ப் பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம், சரிசெய்யும் படி கேட்டுக் கொள்வேன். கிராம சுகாதாரத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவோம்.பாவூர்சத்திரம், சுரண்டை, செங்கோட்டை உட்பட, ஏறக்குறைய, 80 கிராமங்களில், இதுபோன்ற பணிகளை மேற்கொண்டுள்ளேன்.
(தினமலர்)

3) உலகம் முழுவதும் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும், வெளிநாட்டவர்க்கும், இணைய தள அம்மாவாக இருந்து சமையல் கற்று தரும் கீதா: நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. என் கணவர், "இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனத்தில், மேனேஜராக இருந்து, ஓய்வு பெற்றவர். நாங்கள் பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர். எங்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள். மகன், கனடா நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். என் மகள், வேறு மதத்தை சேர்ந்தவரை திருமண செய்து கொண்டாள்.என் மகளுக்கு சமையல் தெரியாது. "இந்த குழம்பு எப்படி செய்றது; அந்த கூட்டு எப்படி செய்றது' என்று, அடிக்கடி போனில் கேட்டு சமைப்பாள். என் மருமகளும், இந்தியன் டிஷ் எப்படி செய்வது என்பதை வீடியோ எடுத்து, நெட்டில் அனுப்பச் சொன்னாள்.அதன்படி, வத்தக் குழம்பு வைப்பதை வீடியோ எடுத்து, "யூ டியூப்பில்' அப்லோட் செய்தோம். ஆனால், இதை உலகம் முழுவதும் பார்ப்பார்கள் என்று தெரியாது. ஒரு நாள், அமெரிக்க வாழ் தமிழ் பெண் ஒருவர், "வத்தக் குழம்பு நல்லா இருந்தது; ரொம்ப நன்றி மாமி' என, மெயில் அனுப்பி இருந்தார். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.இதை என் பிள்ளைகளிடம் சொன்னதற்கு, தொடர்ந்து, பலவிதமான ரெசிபிகளை வீடியோ எடுத்து, அப்லோட் செய்யும் படி கூறினர். அதன் படி செய்தேன். இதுவரை, 287 ரெசிபிகளை, 519 வீடியோக்களாக அப்லோட் செய்திருக்கிறேன்.மகன், மகளைப் பார்க்க வெளிநாடு போன போது, "யூ டியூப் மாமி!'னு ஆறு பேர், அடையாளம் கண்டுபிடிச்சு விசாரிச்சாங்க. அந்த தருணம், நெகிழ்ச்சியாக இருந்தது.யூ டியூபில், ஒரு நிறுவனம், விளம்பரத்துக்கு தொடர்புக் கொண்டாங்க. அதன் மூலம் கிடைக்கிற நிதியில், பல குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்கிறேன்.என் மாமியார் தான், எனக்கு, பல வகையான டிஷ்களை சொல்லித் தந்தாங்க; அதனால, "யூ டியூப்' புகழ் பரிசு, என் மாமியார் எனக்கு தந்த பரிசு! (தினமலர்)

4) "உலக அளவில் சாதிக்கும் புலம் பெயர்ந்த இந்தியத் தலைவர்கள்' எனும் நூலில், நான்காவது இடத்தை பிடித்துள்ள, தமிழர் டாக்டர் ராமதாஸ். மாயவரம் அருகிலுள்ள நல்லாடை
ஊரைச் சேர்ந்த, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் சகோதரிகள் சரியான மருத்துவம் கிடைக்காததால், தான் மருத்துவராக முடிவு செய்து, காமராஜர் கொண்டு வந்த, "மெட்ராஸ் எஜுகேஷன் ரூல்' மூலம் மருத்துவம் பயின்று, 1983ல், ஆப்பிரிக்கா கண்டத்தின் அருகில் இருக்கும், செஷல்ஸ் தீவுக்கு, மருத்துவ தொழில் செய்ய சென்றிருக்கிறார்.
                                                           
அங்கு அதிபராக இருந்த ஆல்பர்ட் ரெனே இவரை அந்நாட்டு ராணுவத்திற்கு, மருத்துவம் பார்க்கும் பணியில் அமர்த்த, அப்புறம் இவர் சேவையை பார்த்து, ராணுவத் தலைமை மருத்துவராக உயர்த்த, சீப் மெடிக்கல் ஆபீசரான பிறகு, "பீப்புள் பார்ட்டி' கட்சியின் பொருளாளர் பதவி கிடைத்தது.
(தினமலர்)

5) கடலில் ஒரு புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்து, கல்லூரி நாட்களில் இலவச சைக்கிள் கொடுத்த முதல்வருக்கு நன்றிக்கடன் போல போல அதற்கு 'அம்மா என்று பெயரிட்டுள்ளாராம் நீலகிரி மாவட்டம், கம்பட்டி அட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ். கிராமத்திலேயே படித்து, தமிழ் வழிக் கல்வியிலேயே முதுகலைக் கல்வி பயின்றதுடன், ஆராய்ச்சிப் படிப்பிற்காக கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம். இவரின் கிராமத்தில் இவர்தான் முதல் பட்டதாரி.
                                                        
எம்.எஸ்.சி., மைக்ரோபயாலஜி முடித்து, பிஎச்.டி., ஆய்விற்காக, கேரள பல்கலையில் சேர்ந்து, அங்கு இவருடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும், புதிய கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி, பல ஆய்வுகளை மேற்கொள்ள வந்திருக்க, அவர்கள் தந்த உற்சாகத்தில் அரபிக் கடலில் ஆய்வு மேற்கொண்டு, புதிய உயிரினத்தைக் கண்டறிந்தார். இதை, "ஐசி. ஜெட்' என்ற கமிட்டி அங்கீகரிக்க வேண்டும். அதற்காக, மிகவும் சிரமப்பட்டு, பிறகு பலவித ஆய்வுகளுக்குப் பின், வாஷிங்டனின், "ஜகீஸ்' அறிவியல் இதழ் ஏற்று, அங்கீகரித்துப் பாராட்டியது. இதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.இவர் கண்டுபிடித்திருக்கும் உயிரினம், பார்ப்பதற்கு மண்புழு போன்று இருக்கும். கடலில் உள்ள, "சல்பைடு' உயிரினத்தை அழித்து விடும். கடுமையான நோய்களையும் எதிர்க்கும், பாக்டீரியாக்களைக் கொண்டது.
(தினமலர்)

6) இந்தியா - பாகிஸ்தான் போரில், மருத்துவ பணியாற்றிய, சேவை மனப்பான்மை கொண்ட பிஸ்வ குமார், மருத்துவமனையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்களிடம் நெருங்கிப் பழகி வைத்தியம் பார்த்ததால், சேவை மனப்பான்மை,  ரத்தத்தில் ஊறி, ப்ரீமேசன்ஸ்' என்ற உலகளாவிய அமைப்பில் இணைந்து இந்தியா முழுவதும் சென்று, மனிதர் களைச் சந்திக்கவும் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் பெற்றதன மூலமாக 2011ல், இந்தியா முழுக்க, 58 குக்கிராமங்களை தத்துதெடுத்து, அந்த கிராம மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் பொறுப்பை ஏற்று,  "ஜோதிர்கமயா' என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம்,தமிழகத்தில் சத்திய மங்கலம், கொடைக்கானல், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள மலைவாழ் கிராமங்களுக்கும் மின் வசதி வழங்கி,  நக்சல் அமைப்பை சேர்ந்தவர்கள், முதலில் எங்களை பல கேள்வி கேட்டு துளைத்தெடுத்தபோது,  "இரவு நேரங்களிலும், உங்கள் குழந்தைகள் படித்து டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்பதற்காகத் தான், நாங்கள் இத்தனை கஷ்டப்பட்டு வந்து, வெளிச்சம் தருகிறோம்' என்றதும், மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனராம். 

                                                 
"ஒவ்வொரு கிராமத்தின் மின்சாரத் தேவையை, தொடர்ந்து தடையின்றி வழங்க, எங்கள் அமைப்பை சேர்ந்த ஊழியர்கள், அடிக்கடி விசிட் செய்து, பாட்டரி உட்பட சோலார்கருவிகள் நன்றாக இயங்குகின்றனவா என்பதை கண்காணித்த படி இருப்பர்.சூரிய மின் சக்திக்காக அரசு வழங்க இருக்கும், மானியத் தொகையையும், இன்னும் பல கிராமங்களுக்கு பயன்படுத்த உள்ளோம்." என்கிறார் இவர். (தினமலர்) 

14 கருத்துகள்:

 1. ரோசியம்மா, கணேஷ் இருவரின் சேவையும் மிக மிக நன்று. 'மைராடா' போன்ற தொண்டு நிறுவனங்கள் எவ்வளவு பேருக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. Hats off!

  பதிலளிநீக்கு
 2. ரோசியம்மாவின் நல்ல உள்ள‌ம், சேவை மனப்பான்மை, செய்து வரும் தொன்டுகள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. அவருக்கு என் மனங்கனிந்த‌ நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 3. ஶ்ரீரங்கத்தில் வசிக்கும் கீதாவின் சமையல் வீடியோ பற்றிய செய்தி பழைய செய்தி. :)))) ஏற்கெனவே யூ ட்யூப், மீ ட்யூப், ஆங்கில தினசரிகள்னு நிறைய வந்துட்டாங்க. :))) மற்றச் செய்திகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ''கீதா''. உங்களுக்கும் இந்தப் பட்டம் கிடைத்திருக்கவேண்டியது. எத்தனை நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லுகிறீர்கள்.

  ரோசியம்மாவும் அவருடைய் உழைப்பும் வளரணும்.
  பிஸ்வகுமார் போன்றவர்கள் நம்மூர்ப் பக்கமும் வந்தால் தேவலை.

  பதிலளிநீக்கு
 5. ரோசியம்மா பகிர்வு மகிழ்வளித்தது அனைத்து பகிர்வும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 6. எல்லா செய்திகளுமே பாசிட்டிவ்வாகத்தான் இருந்தது. நன்றி...

  பதிலளிநீக்கு
 7. நல்ல நல்ல செய்திகளை தொகுத்து வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. நல்ல விஷயங்கள். ரோஸியம்மா மனதில் நிற்கிறார். யூட்யூப் இணைய தள அம்மா பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. ரோசியம்மா பற்றிய செய்தியை ஒரே எண்ணின் கீழ் தந்திருக்கலாமோ, பத்திகள் மூன்றாக இருந்தாலும்.

  பதிலளிநீக்கு
 10. செய்திகள் அருமை.
  ரோசியம்மா நிறைந்திருக்கிறார்.

  பதிலளிநீக்கு

 11. நன்றி மீனாக்ஷி... முந்தைய பதிவான கவிதை படிக்காமல் சென்று விட்டீர்களே...

  நன்றி மனோ சாமிநாதன் மேடம்..

  நன்றி கீதா மேடம்..

  நன்றி வல்லிம்மா...

  நன்றி சசி கலா.

  நன்றி கந்தசாமி ஐயா.

  நன்றி எழில்.

  நன்றி 'தளிர்' சுரேஷ்.

  நன்றி ராமலக்ஷ்மி திருத்தி விட்டேன். நன்றி! (

  நன்றி குமார்!

  பதிலளிநீக்கு
 12. சிறப்பான செய்திகள். நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க....

  பதிலளிநீக்கு
 13. மன்னிக்கணும். மனசை மடக்கிய வரிகள் பின்னூட்டத்தையும் மடக்கி விட்டது. :))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!