புதன், 26 டிசம்பர், 2012

அலுவலக அனுபவங்கள்


ஆடிட்டைச் சமாளிக்க 1000 வழிகள்.

கணேசனுக்கும் மோகனுக்கும் ரொம்பவே ஆச்சர்யம். மேனேஜர் தங்களைக் கூப்பிட்டு இப்படி உரையாடுவார், உரையாடலின் முடிவில் இப்படி ஒரு 'ஆஃபர்' வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.

வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அலுவலகம் முடிந்ததும் நேராக 'பாரு'க்குப் போகும் குழுவில் இவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் இப்படிப் போவது அலுவலகத்தில் ஓரளவு அனைவருக்கும் தெரியும். மேனேஜர் கூட அவ்வப்போது நக்கல் கமெண்ட்ஸ், கிண்டல்கள் செய்வதுண்டு.
 
ஆடிட் நடந்து கொண்டிருந்தது.


அன்று பன்னிரண்டு மணியளவில் மேனேஜர் அவர்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். முதலில் கணேசனை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தவர், அப்புறம் மோகனையும் அழைத்துக் கொண்டார்.
                                           

நான்கைந்து ஃபைல்களின் விவரங்கள் குறித்துத் தந்தவர் 'உடனே கிடைச்சாகணும். மூணு நாளா பிரச்னையா இருக்கு. ப்ளீஸ் உடனே தேடிக் கொடுங்கப்பா...' என்றார். சென்று தேடியபோது அதிகம் தேட விடாமல் ஓரளவு சீக்கிரமே கிடைத்தது. கொண்டுபோய் அவரிடம் கொடுத்தார்கள். மகிழ்ந்து போனார்.
                                             
"என்னமோன்னு நினைச்சேன்... ஃபாஸ்டுப்பா நீங்க... இதை இந்தப் பெயர்கள் வரிசையா, அதுல என்ன நம்பர்ல என்ன பேர் இருக்கோ அந்த ஆர்டர்ல அடுக்குங்க பார்ப்போம்" என்றார்.

ஆடிட்டுக்கு இவர்கள் சென்று பதில் சொல்ல வேண்டியதில்லை. அதெல்லாம் மேனேஜர் பார்த்துக் கொள்வார். ஆனால் அந்த ஒரு வாரமோ பதினைந்து நாளோ அலுவலகம் அல்ல கல்லோலப் படும்! யாரையும் லீவு போட விட மாட்டார்கள். இன்றோ நாளையோ கடைசி என்று ஞாபகம்.

அடுக்கி முடித்தபோது மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மேனேஜர் மறுபடி சந்தோஷப் பட்டுப் போனார்.


"சார்.... என்ன சார் இதுக்கெல்லாம் ஓவராப் பாராட்டுறீங்க.. நாங்க செய்யற வேலைதானே..? என்றான் மோகன் சிரிப்புடன்.

"உண்மைதாம்ப்பா... ஆனா நாம வேற வேலைல இருக்கும்போது, முடிய வேண்டிய வேலையை சட்டம் பேசாம உடனே செஞ்சு கொடுத்தா சந்தோஷம் வராதா...?"


"அப்போ மத்தியானம் பிரியாணிக்கு காசு கொடுத்துடுவீங்கன்னு சொல்லுங்க.."  மீண்டும் மோகன் . நட்பும், அசட்டுத் தனமும், பணிவும் கலந்த அதே சிரிப்புடன்.

"வொய் நாட்... இந்தாங்க... சாயங்காலம்தான் சாப்பிடுவீங்கன்னு நினைச்சேன்... அப்போதானே தேவை?" கண்ணடித்தார் மேனேஜர்.


"ஹிஹி... சார்... "

காசு எடுத்துக் கொடுத்த மேனேஜர் "அனேகமா ஆடிட்டை இன்னிக்கி முடிச்சி அனுப்பிடுவேன்... நீங்க இன்ன்று இங்கே செக்ஷனில் இருக்க வேணாம். O D  கொடுக்கறேன்... நாளைக்கு வாங்க.. நான் ஆடிட்டுல கொஞ்சம் சமாளிக்கணும்" என்றவர் இன்னும் கொஞ்சம் பணம் எடுத்துக் கொடுத்து மறுபடிக் கண்ணடித்தார்.

"ம்....'அதுவும்' என்ஜாய் பண்ணுங்க..."


ஆனந்த அதிர்ச்சியுடன், ஆனால் அதை வெளிக் காட்டாமல் பணிவுடன், பணத்துடன் வெளியில் வந்தார்கள் இருவரும்.

பிரியாணிக் கடை நோக்கிச் செல்லத் தொடங்கிய மோகனை "முதல்ல அங்க" என்று 'பாரு'க்கு   அழைத்துச் சென்றான் கணேசன்.

அங்கு முடித்து, வந்து பிரியாணி சாப்பிட்டு, மறுபடி 'அங்கேயே' சென்று தஞ்சம் அடைந்தனர் இருவரும். மேனேஜரின் திடீர் தாராளம் பற்றிப் பேசிப் பேசி அதிசயப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

                                                 
மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது.

"இதோ இருக்காங்கப்பா... இன்னும் வீட்டுக்குப் போகலையா... அங்க வீட்டுல போய் தேடிட்டு வர்றோம்... ஒரு நிமிஷம் ஆபீசுக்குக் கூப்பிடறார் மேனேஜர். அவங்க கிளம்பற வரைக்கும் ஆபீஸ்ல இருக்கறது நல்லதுன்னு தோணுதாம்..வாங்கப்பா உடனே"  பியூன் ராஜமாணிக்கம் மேனேஜரின் டிரைவருடன் வந்திருந்தான்.


குழப்பத்துடன் அலுவலகம் சென்றார்கள். சீட்டில் கலங்கலுடன் உட்கார்ந்து கொண்டார்கள்.


அவர்கள் வந்து விட்டார்கள் என்று உறுதி செய்து கொண்ட மேனேஜர் அவர்களை ஆடிட் நடக்கும் இடத்துக்கு அழைத்தார்.

உள்ளே சென்று தள்ளி நின்று கொண்டார்கள் இருவரும்.

'விஷ்' பண்ணுங்க' கிசுகிசுத்தார் மேனேஜர்.


நிமிர்ந்து பார்த்த ஆடிட் மக்களில் இருவர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மேனேஜரையும் பார்த்துத் தலையசைத்தார்கள்.


"உங்க பேரு?"

சொன்னார்கள்.

"டிரெஷரி போயிட்டு வர்றீங்களா"

"அ..ஆமாம் சார்.."

ஓகே...சீட்டுக்குப் போங்க..."

மறுபடி விஷ் செய்து விட்டுத் திரும்பினார்கள். நடந்து கொண்டிருந்த கணேசனை கை பிடித்து நிறுத்தினான் மோகன். வாயில் விரலை வைத்து சைகை செய்தவன் சன்னமாக நடந்து அந்த அறைக் கதவின் பின்னே வந்து ஒளிந்து நின்றான்.
                                                   
ஆடிட்டர் சொல்லிக் கொண்டிருந்தார்.

"நீங்க சொன்னது சரிதான் சார்.... ஃபுல்லா இருக்காங்க... எப்படித்தான் சமாளிக்கறீங்களோ...  இந்த மாதிரி ஆட்களை வைத்துக் கொண்டு இந்த அளவு வேலைகள் முடித்திருப்பதே பெரிசுதான்.."

'பாருங்க சார் என் நிலைமையை' என்பது போல மேனேஜர் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.


'அடப்பாவி'

"இரண்டு பேருக்கும் 'மெமோ' கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க..."


"ஓகே சார்..."


ஆடிட்டர்கள் சென்று விட்டனர். அப்புறம் வந்த நாட்களிலும் மேனஜர் மெமோ எல்லாம் தரவில்லை. அந்த ஆடிட்டை இப்படியாகத்தானே முடித்தார்கள்!படங்கள் : நன்றி இணையம் 

13 கருத்துகள்:

 1. அடப் பாவமே:)!

  அருமை..

  அப்படியே மீதி 999 வழிகளயும் சொல்லிக் கொடுத்திடுங்க:)!

  பதிலளிநீக்கு
 2. அட கொக்க மக்கா! இப்படியும் இருக்காங்களா? நமக்கு அலுவலக அனுபவம் இல்லை! நல்ல கற்பனைதான்!

  பதிலளிநீக்கு
 3. நாங்கெல்லாம் போனா, ஆடிட்டர்களையும் தள்ளிக்கிட்டுத்தான் போவோம்.

  பதிலளிநீக்கு
 4. ஆடிட்டர்களே முன்னாடியே தேவைப் பட்டியலை கொடுத்துவிடுவார்கள்.அதை செய்து விட்டால் ஆடித ஓகே

  பதிலளிநீக்கு
 5. ஹா.... ஹா....

  என்ன வில்லத்தனம்...

  நல்ல அனுபவம்தான் போங்க...

  பதிலளிநீக்கு
 6. நல்ல ஐடியாவாக இருக்குதே
  மேனேஜர் கெட்டிகாரர்தான்
  சுவாரஸ்யமான பதிவு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டுத் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. எப்படியெல்லாம் இருக்காங்க மனுஷங்க!!!!!

  பதிலளிநீக்கு
 8. எங்கள் ப்லொக்,
  கதை படிக்க குமுதம், ஆனந்த விகடன் இருக்கு. நல்ல சமூக கட்டுரையா எழுதுங்க

  பதிலளிநீக்கு
 9. ஹா ஹா ஹா ... இதுவும் உங்கள் அலுவலகத்தில் நடந்த திருவிளையாடல் தானா ஸ்ரீராம் சார்

  பதிலளிநீக்கு

 10. நன்றி ராமலக்ஷ்மி. மீதி 999 வழிகளைச் சொல்லிக் கொடுக்க 998 பேர் தங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்! (நாங்களே ஒன்று ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறோம்!)

  நன்றி 'தளிர்' சுரேஷ். அனுபவங்களில் கொஞ்சம் கற்பனை கலந்தால்தான் நல்லது!


  நன்றி கந்தசாமி சார்... நீங்கள் சொல்வதும் உண்டு. அது பணி நேரம் முடிந்து....! :))) மேலும் AG காரர்களிடம் இந்தப் பழக்கம் இருக்காது!

  நன்றி முரளிதரன்... நீங்கள் சொல்வதும் உண்டு..! :)))

  நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.. இது நிறைய அலுவலகங்களில் நடக்கிறது!

  நன்றி சே. குமார்.

  நன்றி ரமணி சார்... உங்களுக்கு ஏதும் அனுபவங்கள் இருந்தால் 'எங்கள்' காதில் சொல்லுங்கள்... ஹிஹி... 'அ அ' வுக்கு இன்னொரு பதிவு தேத்திடுவோம்...!

  நன்றி ஸாதிகா.

  வாங்க ஜெயசங்கர் ஜெகன்னாதன்... 'குடிச்சு வீணாப் போகாதீங்க மக்களே' என்று சொல்ல நினைத்த விழிப்புணர்வுப் பதிவாக இத எடுத்துக்கோங்க ப்ளீஸ்.. !! :))

  நன்றி சீனு... எல்லா அலுவலகத்திலும் ஏதோ ஒருவகையில் நடக்கும்!

  முதல் வருகைக்கு நன்றி மாற்றுப்பார்வை.

  பதிலளிநீக்கு
 11. ஆப்பீச்சு நினைவிலே நம்ம ரங்க்ஸ் எங்க வீட்டிலேயே ஆடிட் அப்ஜெக்‌ஷன் போடுவார். அவர் கிட்டே மாட்டினால், அம்புடுதேன், இந்தச் சமாளிப்பெல்லாம் செல்லாது. :)))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!