செவ்வாய், 18 டிசம்பர், 2012

ஏமாற்றம்.


வீட்டில் சலசலவென பேச்சுக்கள். இரண்டு மூன்று உறவினர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். விஜி ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டே, அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். அல்லது உரையாடிக் கொண்டே வேலைகளை பம்பரமாகச் சுழன்று செய்து கொண்டிருந்தாள்.

ரவிக்கு தன் மனைவியின் கலகலப்பான சுபாவம் குறித்து எப்போதுமே மனசுக்குள் ஒரு பெருமை உண்டு. வெளியில் சொல்ல மாட்டான்.


சில விஷயங்களை மனதுக்குள்ளேயே ரசிக்க வேண்டும். வெளியில் சொன்னால் அதே விஷயம் அடுத்த முறை செய்யப் படும்போது அதில் ஒரு செயற்கைத் தன்மையும், இவர்கள் பாராட்டிய விஷயம் என்று செய்பவர்களிடம் ஒரு மறைமுக எதிர்பார்ப்பும் வந்து விடும் என்று நினைத்து, சொல்ல மாட்டான். தங்கள் பிள்ளைகள் குறித்தும் இதே அபிப்ராயத்தை விஜியிடம் சொன்னபோது, அவள் அபிப்ராயம் வேறு மாதிரி இருந்தது.

"உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது, எதையுமே கவனிக்கறது இல்லை, பாராட்டறது இல்லைன்னு நினச்சுகிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்... அது மட்டுமில்லாமல் சொன்னா அவங்களும் சந்தோஷப் படுவாங்க இல்லே... அடுத்தவங்க மனசு நோகக் கூடாது, சந்தோஷம் முக்கியம்னு நீங்கதானே சொல்வீங்க..."


"மனசை நோகடிக்கலையே... என் ரசனையை என் தொடர்ந்த ரசனைக்காக மறைச்சு வச்சு ரசிக்கிறேன்.. அவ்வளவுதானே" என்று ரவி சொல்வதை ஒத்துக் கொள்ள மாட்டாள் விஜி.


அதே சமயம் 'என்னிடம் என்னென்ன இப்படி மனசுக்குள் ரசிக்கிறீர்கள்' என்று இதுவரை இவனிடம் அவள் கேட்காததும் ஆச்சர்யமாக இருக்கும் ரவிக்கு.

அதுதான் விஜி. நொடியில் சப்ஜெக்ட் மாறுவாள். விடாமல் பேசிக் கொண்டேயிருப்பாள். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமுன்னே அடுத்த சப்ஜெக்டுக்கு போய் விடுவாள்! இவன் பக்க உறவினர்களிடம் கூட இவனை விட அவள்தான் அதிகம் பேசுவாள்!


நடு நடுவே அலைபேசியில் வரும் வேறு அழைப்புகளிலும் அழைக்கும் ஆட்களுக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ கொஞ்சம் பெரிதாகவோ பேசிக் கொண்டிருந்தாள்.

அப்படி ஒரு அழைப்பு வந்தபோது பேசத் தொடங்கியவள் முகம் மாறத் தொடங்க, அலைபேசியுடன் விரைவாக ரவியை ஒரு முறை பார்த்து விட்டு வாசலுக்கு நடந்தாள். சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ரவி, ரிமோட் எடுத்து டிவியை மியூட் செய்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

 

'செல்'லை ஆஃப் செய்து விட்டு வாசலிலேயே நின்று  வாழை மரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விஜியை நெருங்கினான் ரவி.

"என்னம்மா..?"

திரும்பி ரவியைப் பார்த்த விஜியின் கண்கள் இன்னும் கலங்கின.

"சரஸ்வதி ஞாபகம் இருக்கு இல்லை?"

"யாரு... உன் கூட முன்னாடி வொர்க் பண்ணி இப்போ வேற ப்ரான்ச்சுல இருக்காங்களே அவங்களா?'

"ஆமாம்.. அவங்க வீட்டு பூஜைக்கு எல்லாம் நாம் போய் வந்திருக்கோம்.."

ரவிக்கும் லேசாக உதறல் கண்டது...'என்ன நியூசோ..'

"அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்... அடி பட்டிருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பங்கன்னு அதிர்ச்சியோட எதிர்பார்த்த எனக்கு ஹெட் இஞ்சூரி, சீரியஸா இருக்கா, அனேகமா பொழைக்க வாய்ப்பில்லை'னு சொன்னதும் ஒண்ணுமே ஓடலைங்க..."

அருகில் வந்த உறவினர்களிடம் விஷயம் சொன்னார்கள். அப்புறமும் வேலைகள் தொடர்ந்தாலும் விஜியிடம் பழைய உற்சாகம் இல்லை. அவ்வப்போது வெவ்வேறு தோழிகளுக்கு அலைபேசுவதும், ஆற்றாமைப் படுவதுமாக இருந்தாள்.

உறவினர்கள் கிளம்பிச் சென்றதும் விஜி கணவனைத் தொல்லை செய்து ரவியுடன் கிளம்பி அந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றாள். ஐ சி யூ வில் இருந்த அவள் தோழி முகத்தை என்ன, அந்த ஹால் பக்கமே யாரையும் விடவில்லை. மறுபடி கிளம்பி வீடு வந்தார்கள்.

உணவு செல்லவில்லை விஜிக்கு. இவனுக்கும் வருத்தமாக இருந்தாலும் விஜியை நினைத்து கவலை ஏற்பட்டது. சமீப காலங்களில் இளவயது மரணங்கள் விஜியை ரொம்பவே பாதிக்கின்றன. ஏனோ தன்னையும் அறியாமல் தன்னை அந்த இடத்தில் வைத்துப் பொருத்திப் பார்த்து, தன குழந்தைகள் கதியை நினைத்து பதட்டப் படுவது வாடிக்கையாகி விட்டது.

பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக அவ்வப்போது பேசிக் கொண்டே இருந்ததிலிருந்து அவள் மூட் அவுட் புரிந்தது. எப்போதும் ஆவலுடன் மல்லுக்கு நிற்கும் குழந்தைகளும் அவள் மன நிலை தெரிந்து ஒதுங்கியே இருந்தனர். ரவிக்கும் சரஸ்வதி பற்றி நினைத்து வருத்தமாகவே இருந்தது.

மிகவும் அப்பாவிப் பெண். வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டவள். கணவனால் ஏமாற்றப்பட்டவள். ஒரே ஒரு பையன் அவளுக்கு. ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறான்.

அவ்வப்போது ஆஸ்பத்திரி சென்று வந்த மற்ற தோழிகள், சரஸ்வதியின் அக்கா என்று ஃபோன் பேசி நிலவரம் தெரிந்து கொண்டே இருந்தாள்.

"ஆஸ்பத்திரியில் சேர்க்கப் போகும்போதே வாந்தி எடுத்தாளாம்...நினைவே இல்லையாம்"


"தலைல நீர் சேர்ந்திருக்காம்...ஒரு சின்ன ஆபரேஷன் செய்யணுமாம்... இவ ஏற்கெனவே ஹை சுகர் பேஷன்ட்...20 பெர்சண்ட் கூட சான்ஸ் இல்லைங்கறாங்க..."


"வேற வண்டியோட மோதலையாம்...பின்னாடி உட்கார்ந்திருந்தவ ப்ரேக் போட்டதும் கீழ விழுந்திருக்கா..."


"வண்டில இருந்து கீழ கூட விழலையாம்... லேசா சரிஞ்சிருக்கா...  எங்கேயோ எதுலயோ தலைல மோதியிருக்கு போல...."


"அவ புருஷன் இன்னும் வந்து பார்க்கலையாம்..."


"புருஷன் போலீஸ் ஸ்டேஷன் சென்று எஃப் ஐ ஆர் போடறதுலயும் ஆபீஸ் ஸ்டாஃப் கிட்ட பணம் கிளைம் செய்யும் வழிகள் பற்றி பேசியும் சுற்றி வர்றானாம்..."


"பழைய ஆபீஸ் காரங்க எல்லாரும் வந்து வந்து போறாங்களாம்... ஆனால் உள்ளே போய் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லையாம்.."


இப்படியே அவ்வப்போது ரவியிடம் வந்து தகவல்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள் விஜி. சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ரவி, விஜி தன்அருகில் அமர்ந்திருந்தாலும் அவள் நினைவுகள் சரஸ்வதியைச் சுற்றியே இருந்தன என்பதை உணர்ந்திருந்தான்.

பேச்சை அவ்வப்போது மாற்றி அவளைச் சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டு, குழந்தைகளை சாப்பிட வைத்து தூங்கச் செய்தான்.


"ராத்திரி என்ன நியூஸ் வருமோ... முருகா... சரஸ்வதியைக் காப்பாற்று.." என்று விஜி தூங்கப் போனாள்.


காலை எழுந்ததுமே தொலைபேசத் துடித்தவளை அடக்கி, "கொஞ்சம் டைம் குடு... காலைல உன் வேலைகளை முதலில் முடி. குழந்தைகள் வேற ஸ்கூல் போகணும்" என்று வேலைகளை முடிக்க வைத்தான். விஜி அலுவலகத்து லீவ் சொன்னாள். ரவிக்கு அதில் உடன்பாடில்லை. 


"நீயோ ஆஸ்பத்திரி போகப் போறதில்லை. உள்ளேயே விட மாட்டாங்க... எதுக்கு அனாவசியமா லீவு?" தானும் அலுவலகம் சென்று இவள் இப்படிப் புலம்பல், பதைபதைப்புடன் வீட்டில் தனியாக இருப்பது ரவிக்குப் பிடிக்கவில்லை.


விஜி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சார்ஜரில் போட்டிருந்த த
ன் அலைபேசியை எடுத்தாள். சரஸ்வதியின் அக்காவுக்கு போட்டாள்.

"அக்கா.... நான்தான்கா விஜி....ம்....எப்படி இருக்கா சரசு...ம்.......ம்.... சரி...சரி... அட... வெரி குட்.... அப்புறம்.... அப்படியே ஆகட்டும்கா... கடவுள் இருக்கான்... நான் கூட ரூபாய் முடிந்து வைத்திருக்கிறேன்... நல்லது நடக்கட்டும்கா.. நீங்க சாப்பிட்டீங்களா... யாரு உங்க வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா..சரிக்கா.. உங்கம்மாவை பகல்ல கொஞ்சம் ஆஸ்பத்திரியில் விட்டுட்டு நீங்க வீட்டுக்குப் போயிட்டு சாயங்காலம் வாங்க... ஓகேக்கா....ஓகேக்கா... நான் அப்புறம் பேசறேன்.."

அலைபேசியைக் கட் செய்து விட்டு மறுபடி சார்ஜரில் போட்டவள் ரவியிடம் வந்தாள்.


"நைட்டு ஒரு ஆபரேஷன் செஞ்சு தலைலேருந்து கொஞ்சம் நீரை ட்ரைன் செய்தார்களாம். காலை வந்து பார்த்த டாக்டர் 'நல்ல முன்னேற்றம் தெரிகிறது...இன்னும் ஒரு 10 எம் எல் ட்ரைன் செய்யணும். காலைல செஞ்சுடலாம்' என்றாராம். சுகர் பேஷன்ட் வேற... நினைவில் இருப்பதை விட செடேஷன்ல இருக்கறது நல்லதுன்னு டாக்டர் சொன்னாராம்... கொஞ்சம் ஸ்லோ ரெகவரிதான் இருக்குமாம்... ஆனால் இனி உயிருக்கு பயமில்லையாம்.."


"கடவுளுக்கு நன்றி" என்று எழுந்து சென்று முருகன் படத்தைப் பார்த்தவள் மறுபடி அலைபேசியை எடுத்து அலுவலகத்துக்குச் சொன்ன லீவைக் கேன்சல் செய்தாள்.


மதியம் அவள் அலுவலகத்திலிருந்து இவனுக்கு தொலைபேசியவள், 'சரஸ்வதி ஒருமுறை காலை ஆட்ட முயற்சித்தாளாம், மடக்கி வைத்திருந்தாளாம்' என்று தகவல் சொன்னாள்.

ரவி மாலை அலுவலகத்திலிருந்து வந்தபோது விஜி சோஃபாவில் அமர்ந்து ஆதித்யா சேனல் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். 

"சந்தானம் காமெடி வரவர நல்லா ரசிக்க முடியுது இல்ல?" என்று கேட்டவள் "காஃபி போடவா" என்று எழுந்து உள்ளே சென்றாள்.

காஃபியைக் கொண்டுவந்து ரவி கையில் கொடுத்தவள் சரஸ்வதி பற்றி ஏதோ சொல்லப் போகிறாள் என்று நிமிர்ந்து பார்த்தான்.


"முன்னல்லாம் வடிவேலு காமெடி பிடிக்கும்... இப்போ சந்தானம்... ஒவ்வொரு சீசன்ல ஒவ்வொருத்தர் இல்ல?"


காஃபியைக் குடித்துக் கொண்டே அவளைப் பார்த்தான் ரவி.


"ஏங்க... ஆபீஸ்ல இந்த வாரக் கடைசியில் ஒரு டூர் ப்ரோக்ராம் ஏற்பாடு பண்றாங்க... நாள் நாள் லீவு சேர்ந்தா மாதிரி வருதே... நாமளும் போகலாமா.. சொல்லிடவா? இப்போவே சொன்னா பெரிய வண்டியா, சின்ன வண்டியான்னு சொல்ல வசதியா இருக்கும்"


"ஓகே சொல்லிடு... சரஸ்வதி எப்படி இருக்காங்களாம்.."


"அதான் சொன்னேனே.. பயமில்லையாம். ரெகவரி கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் பிழைத்து விடுவாளாம்... பணம்தான் ரொம்பச் செலவாகும் போல இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியலைன்னு அவங்க அக்கா சொல்லிக்கிட்டு இருந்தாங்க..." என்ற படி மியூட் செய்திருந்த டீவியை உயிர்ப்பித்தாள் விஜி.

16 கருத்துகள்:


 1. ரெகவரி ஸ்லோ.பணம் தேவைப்படும். இவை மந்திரச் சொற்களோ:!!விசித்திரமான மனம்.

  பதிலளிநீக்கு
 2. ஏமாற்றமாகத்தான் இருக்கிறது
  பெண் மனம் ..

  பதிலளிநீக்கு
 3. //சில விஷயங்களை மனதுக்குள்ளேயே ரசிக்க வேண்டும். வெளியில் சொன்னால் அதே விஷயம் அடுத்த முறை செய்யப் படும்போது அதில் ஒரு செயற்கைத் தன்மையும், இவர்கள் பாராட்டிய விஷயம் என்று செய்பவர்களிடம் ஒரு மறைமுக எதிர்பார்ப்பும் வந்து விடும் என்று நினைத்து// அருமை சார்...

  //. ஏனோ தன்னையும் அறியாமல் தன்னை அந்த இடத்தில் வைத்துப் பொருத்திப் பார்த்து, தன குழந்தைகள் கதியை நினைத்து பதட்டப் படுவது வாடிக்கையாகி விட்டது.// இயல்பை இயல்பாய் எழுதும் விதம் சூப்பர் சார்

  கதையின் தலைப்பில் ஏமாற்றம் புரியவில்லையே சார், எனக்கு இன்னும் பக்குவம் போதாதோ

  பதிலளிநீக்கு
 4. இது விஜியின் உலகம் மட்டுமல்ல நம் அனைவரின் உலகமும்தான். சுனாமி தாக்கிய அடுத்த நாள் நம்மால் இயல்பாக நம் வேலைகளை பார்க்க முடிந்தது. இரட்டை கோபுர இடிபாடு குறித்து தொடர்ந்து செய்திகளைப் பார்த்து பின் அடுத்த சேனலை மாற்ற முடிந்தது. இதோ இப்போதும் கூட குழந்தைகள் கொல்லப்பட்ட செய்தி முடிந்த பின் காலை சிற்றுண்டி சாப்பிட முடிந்தது. இதுவே முடியும்போது தோழி விழித்து விட்டாள் எனும் போது மனம் இன்னம் அதிகமாகவே விடுபட்டுவிடுமே... என் புரிதல் சரியா?...

  பதிலளிநீக்கு
 5. இது விஜியின் உலகம் மட்டுமல்ல நம் அனைவரின் உலகமும்தான். சுனாமி தாக்கிய அடுத்த நாள் நம்மால் இயல்பாக நம் வேலைகளை பார்க்க முடிந்தது. இரட்டை கோபுர இடிபாடு குறித்து தொடர்ந்து செய்திகளைப் பார்த்து பின் அடுத்த சேனலை மாற்ற முடிந்தது. இதோ இப்போதும் கூட குழந்தைகள் கொல்லப்பட்ட செய்தி முடிந்த பின் காலை சிற்றுண்டி சாப்பிட முடிந்தது. இதுவே முடியும்போது தோழி விழித்து விட்டாள் எனும் போது மனம் இன்னம் அதிகமாகவே விடுபட்டுவிடுமே... என் புரிதல் சரியா?...

  பதிலளிநீக்கு
 6. எழிலின் பார்வையும், கோணமும் சரியானதே! ஆனாலும் உயிர்த்தோழி என்னும்போது கொஞ்சமானும் பாதிப்பு/பதைப்பு, சரியாகணுமேனு தவிப்பு இருக்கணும். இப்போ என் மைத்துனருக்கு டாக்டர் பயமில்லைனு சொல்லி இருந்தாலும் வீட்டு வரும்வரையில் கவலைதான். வந்தப்புறம் வேறே மாதிரிக் கவலைகள். சிலரின் உடல்நிலை தொடர்ந்து கவலைப்பட்டுட்டே இருக்கணும். :))))

  பதிலளிநீக்கு
 7. சில சம்யம் இப்படித்தான் ஆகிவிடும். நாம் பதறிக்கொண்டிருக்க, சம்பந்தப்பட்டவர்களே மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டுவிடுவார்கள். இந்த ஏமாற்றம் நல்லதே.

  பதிலளிநீக்கு
 8. நான் இப்படித்தான் யாருக்கும் உடம்பு சரியில்லை என்றால் புலம்பிக் கொண்டு இருப்பேன்.

  நம்மால் முடிந்தது பிராத்தனைதான்.
  விஜி முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டாள். தன் தோழியின் உடல் தேறி வரும் விஷயம் அறிந்து சகஜ நிலைக்கு திரும்பி விட்டாள்.
  எழில் சொன்னது போல் அது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.
  கதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. எந்த ஒரு விஷயத்தின் பாதிப்பும் முதல் நாற்பத்தெட்டு மணி நேரம்தான் என்று என் சித்தி அடிக்கடி சொல்லுவார்கள். எழில் அவர்கள் கூறுவது சரியே. போறவங்க போனாலும் வாழறவங்க வாழ்ந்துதானே ஆகணும். யதார்த்தமான கதை.

  பதிலளிநீக்கு
 10. ஒரு குடும்பப்பெண்ணின் மனநிலையை படம்பிடித்துக் காட்டும் கதை.

  பதிலளிநீக்கு
 11. ஒரு பெண்ணின் மனநிலையில் கதை அருமையாக இருக்கிறது !

  பதிலளிநீக்கு
 12. நேற்று நான் போட்ட பின்னூட்டம் வரவில்லையா?

  விஜி மாதிரியே தான் நானும் என்னை பாதித்த விஷ்யம் என்றால் அன்று முழுவது புலம்பிக் கொண்டே இருப்பேன்.

  தன் தோழி குணமாகி வரும் செய்தி கேட்டவுடன் முருகனுக்கு நன்றிச் சொல்லி விட்டு விடுமுறையை ரத்து செய்து சகஜ நிலை திரும்புகிறாள் விஜி.

  இதில் என்ன ஏமாற்றம்! நடைமுறை வாழ்க்கை அது தான். மற்றவ்ர்கள் துன்பத்திற்கு அவ்வளவு தான் பாதிப்பு இருக்கும்.

  தன் சொந்தங்களுக்கு இப்படி நடக்கும் போது இந்த சகஜ பாவம் இருக்காது,
  வாழ்க்கை தடம்புரண்டு விடும். சோதனைகளை கடந்து நல்லபடியாக மீண்டு வந்து குடுமப்த்திற்கு தைரியம் தரும் பெண்களும் இருக்கிறார்கள்.
  பெண் மனதை புரிந்து கொள்ள முடியாது.

  பதிலளிநீக்கு
 13. உங்க பின்னூட்டம் இருமுறையும் வந்திருக்கு கோமதி அரசு! :))))

  பதிலளிநீக்கு

 14. நன்றி வல்லிம்மா... அப்படியும் இருக்கலாமோ என்னமோ...!

  நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

  நன்றி சீனு...//எனக்கு இன்னும் பக்குவம் போதாதோ// நான் சொன்னது கிளியராக இல்லை என்று நினைக்கிறேன்.

  எழில்... நன்றி. நீங்கள் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது.ஒத்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

  கீதா மேடம்... நீங்கள் சொல்வது கூட சரிதான்! :))

  நன்றி ஹுஸைனம்மா..

  நன்றி கோமதிம்மா...இரண்டுமுறை பின்னூட்டம் போட்டு ஊக்கப் படுத்தியதற்கு நன்றி. கீதா மேடம் சொல்றதைக் கேட்காதீங்க.... எவ்வளவு வேணும்னாலும் பின்னூட்டம் போடலாம்!

  நன்றி மீனாக்ஷி.

  நன்றி சே.குமார்.

  நன்றி ஹேமா.

  இந்தக் கதையில் கடைசி வரிகளை கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம் என்று பின்னர் தோன்றியது. முதலில் நியூஸ் கேட்டதிலிருந்து இருந்த ஏதோ ஒரு எதிர்பார்ப்பு சட்டென சப்பெனப் போய் விட்டது போல ஒரு ஏமாற்றம் விஜிக்கு இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக விஜி சரசுவின் மரணத்தை எதிர்பார்க்கிறாள், கொடுமைக்காரி என்றெல்லாம் அர்த்தமில்லை. விஜியின் மாற்றம் ரவிக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம் என்றும் சொல்லலாம். பொறுமையாய்ப் படித்து ஆதரவு கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. எனது புரிதலில் ஏமாற்றம் ரவிக்கு என்றே தோன்றியது. நலம் பெற்று வருவார் தோழியென சமாதானம் ஆகி விட்டிருக்கிறார் விஜி. யதார்த்தம் இதுவே. வழக்கம் போல அருமையான நடை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 16. நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!