'பொன்னியின் புதல்வர்' புத்தகம் எழுதிய சுந்தா நூற்றாண்டு விழாவில் பேசிய
திருமதி சீதாரவி குறிப்பிட்ட தகவல் என்று கல்கியில் படித்தது : "சம்பளத்தை
வாங்கிக் கொண்டுவந்து அப்படியே ஒரு பெட்டியில் போட்டு விடுவாராம் சுந்தா.
மனைவி, மகள்கள் என்று வேண்டுவோர் வேண்டுகிற பணத்தை எடுத்துக் கொண்டு செலவு
போக மீதியை அதிலேயே போட்டு விடுவார்களாம் இப்படி எத்தனை வீடுகளில் பார்க்க
முடியும்?"
எங்கள் வீட்டில் பார்க்க முடியும்.
இந்த வரிகளைப் படித்தவுடன் எங்கள் வீட்டு ஞாபகம் வந்து விட்டது!
அப்பா சம்பளம் வாங்கியவுடன்
வீட்டுக்கு வந்து பணத்தை சுவாமிக்கு முன்னாடி வைத்து விடுவார். அப்புறம்
கை கால் அலம்பிக் கொண்டு வந்து, அவருடைய பீரோவிலிருந்து காசு டப்பாவை
எடுத்துக் கொண்டு வருவார் அப்புறம் அந்தப் பணத்தை அம்மாவை விட்டு எடுத்து
வரச் செய்து, அம்மா கையாலேயே 'காசு டப்பா'வில் வைக்கச் சொல்வார். அந்தக் காசு
டப்பா என்பது அலுமினியத்தாலான ஒரு மெல்லிய பழங்காலத்து சிகரெட் பெட்டி.
என்னுடைய தாத்தா உபயோகித்தது என்று ஞாபகம். (சிகரெட் பிடிக்க அல்ல!) அதில்
வைக்குமளவுதான் சம்பளம் வரும்.
எப்போதுமே அம்மாதான் காசு டப்பாவில் சம்பளப் பணத்தை வைப்பார்
என்றாலும், சில சமயங்களில் எங்களைக் குஷிப் படுத்தவும், சில சமயம் அந்த மாத
அதிருஷ்டத்தை எங்கள் மூலம் சோதிக்கவும், ஒன்றிரண்டு சில்லறை நோட்டுகளை
எங்கள் கையாளும் உள்ளே வைக்கச் சொல்வார். சில சிறிய
டினாமிநேஷன் நோட்டுகள்தான்! பெரிய நோட்டுகள் எப்பவுமே அம்மா கையால்தான்.
நாங்கள் யார் வேண்டுமானாலும் காசு டப்பாவில் கை வைக்க முடியாது என்றாலும் செலவென்ன
என்று சொன்னால் அம்மா மூலம் சொல்லப் பட்டு மறுநாள் காலை அப்பா அலுவலகம்
செல்லுமுன் செலவுகளின் அவசியங்கள் ஆராயப் பட்டபின் வழங்கப் படும். சில
சமயம் குறைக்கப்படும், அல்லது மறுக்கப்படும், அல்லது ஒத்தி வைக்கப்படும்!
அடுத்த மாத சம்பளம் வரும்வரை சம்பளம் தீர்ந்து விட்டாலும் (காசு காலியாகி
விட்டாலும்!) ஒரு ஒரு ரூபாய் நோட்டாவது டப்பா துடையாமல் அதில் இருக்கும்!
25 தேதிக்குமேல் அடிக்கடி ஒரு ரூபாய்தான் அதில் இருக்கும்!
இப்போது எங்கள் வீட்டிலும் பணம் மொத்தமாக ஒரு பையில் வைக்கப்
பட்டிருக்கிறது, பணப்பை! குடும்ப அங்கத்தினர்கள் என்ன செலவு என்று சொல்லி
விட்டு யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார்கள்!
திருமணமான புதிதில் சம்பளம் வந்தவுடன் மளிகைக்கு இவ்வளவு,
பாலுக்கு இவ்வளவு, காபிப்பொடி வெண்ணெய்க்கு இவ்வளவு, என்று ரப்பர் பேன்ட்
கட்டி சிறு பேப்பரில் எழுதி வைத்துச் செலவு செய்து கொண்டு இருந்தோம்.
மிசலேனியஸ் என்று போட்ட கட்டில் மீதி இருக்கும் பணத்தைக் கட்டி வைத்து விட்டு அதிலிருந்துதான் எக்ஸ்ட்ரா செலவுகள் செய்வோம்!!!
இப்போது அப்படி இல்லை! அதெல்லாம், அந்தக் காலமெல்லாம் போச்!