செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மன்னார்குடி

                           
  
                    
மன்னார்குடியை அடைந்தபோது இரவு மணி 7.30. பயணக் களைப்பு பாதி. பயணத்தில் சாப்பிடக் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள் காலாவதியாகுமுன்பு வீண் செய்யாமல் சாப்பிடவேண்டுமே என்ற கவலை பாதி.     
      
  
சப்பாத்திகளையும், உருளைக்கிழங்கு மசாலாவையும் மீள்சூடு செய்து சாப்பிட்டு முடித்தபோது இரவு மணி எட்டைத் தொட்டிருந்தது.  
     
ராஜகோபால ஸ்வாமி கோவில் ஒருநடை சென்று வந்து விடலாம் என்று பேசிக் கொண்டிருந்தோமே தவிர, பேச்சிலேயே நேரம் சென்று விட, போலேரோவில் உட்கார்ந்து பயணம் செய்த களைப்பில் பாதிபேர் படுத்துவிட, கோவில் செல்வது காலை அதிகாலை என்று முடிவானது!  
          
இரவு பதினொன்றரை மணிக்குத் தூக்கத்திலிருந்து எழுப்பபட்டோம். "பெருமாள் வீதி உலா வருகிறார்... கோவிலுக்குத்தான் போகலை.. வந்து பாருங்க"   
                                     
                                                                                     
அங்கு வராததற்கு மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தரிசித்தோம்.          
              
    
பெருமாள் புன்னகையுடன் பல்லக்கில் கடந்து சென்றார். தெருவெல்லாம் அவரை வரவேற்று புதிய கோலங்கள் தெருவை அடைத்து போடப்பட்டிருந்தன.    
     
     
          
மறுநாள் காலை எழுந்து குளித்து கோவில் கிளம்புவதற்குள் ஆனை உம்மாச்சியுடன் ராஜகோபாலன் மறுபடி வீதியுலா வந்து காட்சி தந்தார். கோவில் புறப்பட்டோம்.    
     
              
    
செருப்புகள் வைக்க ஸ்டேன்ட் இல்லையோ என்று எங்களுக்குள் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டே சென்றதற்கு காதில் விழுந்து கோவில் வாசலில் ஓரமாக உட்கார்ந்திருந்தவர் "தைரியமா அப்படியே போட்டுட்டுப் போங்க... எந்த பயமும் வேண்டாம் .". என்றார்!
                   
பெரிய கோவில்.
              
                 
விறுவிறுவென பெருமாள் சன்னதியை அடைந்தோம். உற்சவரை உலா அனுப்பிவிட்டு  தாயார்களுடன் ஏகாந்தமாய் இருந்தார்.  
        
யாருமே இல்லாமல் மிக அருகில் தரிசனம். கை நீட்டினால் நம் கையைப் பற்றி குலுக்கி விடுவாரோ, அப்படியே ஆலிங்கனம் செய்து கொள்வாரோ என்று எண்ணும் அளவு அருகில். பட்டாச்சார்யார் சரித்திரம் சொல்லி கற்பூரம் காட்டி, இரண்டு மாலைகளை பெருமாளின் திருமேனியிலிருந்து உருவி எங்களிடம் தந்து மகிழ வைத்தார். (தட்டில் 20 ரூபாய்)     
                   
கோவிலை அவசரச் சுற்றுச் சுற்றிக் கிளம்பினோம்!   
                             

39 கருத்துகள்:

  1. நாங்களும் 2010 ஆம் ஆண்டு மன்னார்குடி, வடுவூர் போனோம். வடுவூரில் ராமர் வருவதற்கு முன்னால் இந்தச் செண்டலங்கார ராஜகோபாலன் தான் இருந்திருக்கான். ராமர் வந்ததும், அவரை ஓரங்கட்டி விட்டார். இந்தக் கோயில்களில் மன்னார்குடி, வடுவூர் அதுக்கப்புறமா மாயவரம் பக்கம் விளநகர் என்னும் ஆறுபாதி மூன்று இடங்களிலும் உள்ள ராஜகோபாலர் செண்டலங்காரப்பெருமாள். மூவரையும் ஒரே சிற்பி வடித்திருக்கணும். அது குறித்து ஆராய்ச்சி எல்லாம் பண்ணணும். பண்ணின வரையில் உ.வே.சா. ஆறுபாதிக்குச் சுவடிகள் தேடப் போனப்போ இந்தச் செண்டலங்காரரைப் பார்த்து மகிழ்ந்ததை எழுதி இருக்கார். ஒரு நாள் எடுத்துப் போடறேன். இல்லைனா மரபு விக்கியில் செண்டலங்காரரின் சுட்டி தரேன். :))))

    பதிலளிநீக்கு
  2. மன்னை ராஜகோபாலனின் தரிசனம் எங்களுக்கும் கிட்டியது. படங்கள் அழகாக வந்துள்ளன.


    மன்னார்குடி என்றால் ஆர்.வீ.எஸ் தான் நினைவுக்கு வருகிறார்.அவரது ”மன்னை டேஸ்” இப்போதெல்லாம் மிஸ்ஸிங்...:))) முகப்புத்தகத்தில் ஒளிந்துள்ளார் போல...:))

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அருமை... இவ்வளவு அருகில் - தரிசனம் வெகு சிறப்பு...

    பதிலளிநீக்கு

  5. திருச்சியில் இருந்தபோது நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு நானும் என் நண்பர் ஒருவரும் மோட்டார் பைக்கில் சென்றோம். சேரும்போது இரவு நேரமாகி விட்டது. அக்கிரகாரம் போலிருந்த இடத்தில் தங்கினோம் சிறிது தாமதமானாலும் பரவாயில்லை என்று கோவிலைப் பார்க்கப் போனோம் கோவிலைச் சுற்றி மதில் ஓரத்தில் ஒரே நரகல் என்னதான் சுவாமி தரிசனம் செய்தாலும் அங்கிருந்த சூழல் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது. பெரிய கோவில் பாரம்பரியம் மிக்க கோவில் அதை இப்படியா அசுத்தத்தின் நடுவில் வைத்திருப்பது. of course என் நினைவுகள் நாங்கள் சென்ற 1967-1968 களைச் சார்ந்தது.

    பதிலளிநீக்கு
  6. http://tinyurl.com/3ck5c6t

    ஆறுபாதி செண்டலங்காரர் குறித்து மேற்கண்ட சுட்டியில் பார்க்கலாம். அதுக்கப்புறமா வடுவூர்ச் செண்டலங்காரர் குறித்து தெய்வத்தின் குரல் புத்தகம் மூலம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

  7. கீதா மேடம் ... தகவல் களஞ்சியமா இருக்கீங்களே... ஒரு இடத்துக்குப் புறப்பட்டால் சுற்றியுள்ள இடங்களையும் பார்த்து விடுவது என்று தொடங்கினாலும் நிறைய இடங்களைப் பார்க்க முடியவில்லை. பட்டீஸ்வரம் விட்டுப் போனது! இன்று காலை 'மரகதம்' வலைப்பக்கத்தில் புவனேஸ்வரி ராமநாதன் எழுதியுள்ள 'காளிங்க நர்த்தனப் பெருமாள் திருக்கோயில், ஊத்துக்காடு' பற்றிப் படித்ததும் அங்கேயும் போயிருக்கலாமே என்று தோன்றியது.

    ஆதி வெங்கட்... மன்னையிலிருந்து RVS கிட்ட பேசினேன். 'என்னைக் கேட்காமல் எப்படிப் போகலாம்? உள்ளே விட்டிருக்க மாட்டார்களே' என்று ஜாலியாய்க் கலாய்த்தார்.

    நன்றி DD. இவ்வளவு பிரபலமாயிருந்தாலும் அங்குள்ள கோவில்களில் பந்தா கம்மிதான் போல!

    ஜி எம் பி ஸார்... இப்போதும் இந்தக் குறைகள் பெரிய பிரகாரங்களை உடைய எல்லாக் கோவில்களிலும் இருக்கின்றன. குறிப்பாக திருக்கடையூர். சுத்தம் என்பது ரத்தத்தில் குறைவு!

    பதிலளிநீக்கு

  8. கீதா மேடம்... சுட்டி க்ளிக் செய்து படித்தேன். அவர் கையில் செண்டு இருந்ததா என்று கவனிக்கவில்லையே என்று தோன்றியது. இன்னும் ஊன்றிப் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம், செண்டு என்பது வலக்கையில் இருக்கும், நீண்ட கோலின் நுனியில் வளைவாக அர்த்த சந்திர வடிவில் இருக்கும், மாடு மேய்க்கும் இடையன் அல்லவா? மாடுகளுக்கு இலை, தழைகளை அதன் மூலம் அறுத்துப் போடப் பயன்படுத்துவது. இடையன் உடைத்த கிளை எப்படி இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கீங்களா? இடையர்கள் மரத்தின் கிளைகளை ஒடித்தாலும் வெறும் இலை, தழைகள் உள்ள பகுதியை மட்டுமே ஒடிப்பார்கள். கிளை மரத்திலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். அதே கிளையில் மீண்டும் இலைகள் தளிர்க்கும். இது அவர்களுக்குக்கை வந்த கலை. அதே போல் தான் மன்னார்குடி ராஜகோபாலசுவாமியும். :))))

    பதிலளிநீக்கு
  10. இன்னொரு முக்கிய விஷயம், மூலவரைச் சொல்லலை. உற்சவரைத் தான் சொன்னேன். உற்சவர் தான் ராஜகோபால சுவாமி. அவர் தான் செண்டலங்காரர். :)))))

    பதிலளிநீக்கு
  11. பட்டீஸ்வரம், ஊத்துக்காடு, திருக்கடையூர் எல்லாம் போயிட்டு வந்து என்னோட ஆன்மிகப் பயணம் பக்கத்திலே எழுதி இருக்கேன். நேரம் இருந்தா படிங்க. :)) ஊத்துக்காடு கிருஷ்ணரின் தூக்கிய கால்கள் பாம்பின் மேல் பதிந்திருக்கும் இடைவெளியில் ஒரு நூலை விட்டுக் காட்டினார் பட்டாசாரியார். அவ்வளவு அழகான சிற்பம். அன்னிக்குக் கோவிலில் நாங்க மட்டும் தான்.

    பதிலளிநீக்கு
  12. இரண்டு மாலைகளை பெருமாளின் திருமேனியிலிருந்து உருவி எங்களிடம் தந்து மகிழ வைத்தார். (தட்டில் 20 ரூபாய்)//

    பெருமாளிடமும் பேரமா ?

    அந்த இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள் நினைவில் இருத்தும் வரை உறுத்தும் வரை,

    பெருமாள் , அவர் திருமேனி, அதில் இருந்த இரண்டு மாலைகள்,

    எல்லாவற்றின் வால்யு

    எங்கோ மங்கி போகிறதோ !!

    சரவண பவனில் ரூபாய் 500 தந்து மிச்சம் அந்த அட்டை யில் ஒரு இருபதும் பத்தும் இருக்கும்போது, இருபது ரூபாய் டிப்ஸ் தர நாம் தயங்குவது இல்லை.

    தராது போனால் எங்கே மதிப்பு குறைச்சலாயிடுமோ என்று நினைக்கிறோம்.

    நாள் முழுக்க பெருமாளே கதி என்று கதி இருக்கும் பட்டருக்கு ஒரு இருபது ரூபாய் காகிதம் தருவது அதை எழுதும் அளவுக்கு பெரிதாக நினைக்கப்படுகிறது.

    பாவம் பட்டர். நோ.i am sorry.
    பாவம் பெருமாள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  13. சூரி ஸார்... இருபது ரூபாய் போடப்பட்டதாலும்தான் பட்டர் மாலை தந்தாரோ என்ற எண்ணம் எனக்கு! அதனாலேயே சொன்னேன். எனக்குப் பின்னால் சென்ற எங்கள் குழுவின் அடுத்த இருவருக்கும், மற்றும் ஒருவருக்கும் இது போலக் கிடைக்கவில்லை! மற்றபடி காசு தந்ததற்கு வருத்தமில்லை. பெரிதாக நினைக்கவுமில்லை. :))))

    பதிலளிநீக்கு
  14. மன்னார்குடி கோவிலுக்குப் போய் வந்த மாதிரியே இருந்தது . அதுவும் கையை நீட்டினால் கைகுலுக்கி விடுவாரோ என்று எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். சரி நீங்கள் அவருடன் கைகுலுக்கினீர்களா?

    பதிலளிநீக்கு
  15. பட்டீஸ்வரம்

    ஊத்துக்காடு

    மேற்கண்ட சுட்டிகளில் படிங்க. விடமாட்டோமுல்ல, தேர்வு வைப்போமாக்கும். :)))) நல்லா மாட்டினீங்க!

    பதிலளிநீக்கு
  16. அர்ச்சகருக்கு நிறைய கொடுக்கலாம். அவர் ஏகபோக உரிமை பெருமாள் மேலக் கொண்டாடுகிறாரே அதுதான். சாமி என்னிக்காவது பேசினால் தெரியும். நம் லஸ் பிள்ளையார் கோவிலிலும் இந்த மாலை கழுத்தில் போட்டு விடுவார்கள். கையில் கொடுப்பார்கள். வான்ப்க்கி வந்து நிலைப்படியில் மாட்டிவைப்பேன். பகவான் வாசனை சூழ்ந்து இருப்பது போலப் பிரமை. நீங்கள் ராஜகோபாலனைப் பார்த்தவிதமும் படங்களும் அழகு. ரசித்தவிதமும் அழகு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  17. இராஜகோபால சாமி தரிசனம் அருமை! பட்டருக்கு 20 ரூபாய் போட்டதும் மாலை என்று எழுதியிருந்ததும் ஒரு சில விமர்சனங்களையும் படித்தேன்! தென் மாவட்டங்களில் இதுமாதிரி கோவில்களில் வருமானம் குறைவுதான். சென்னை போல இருக்காது.பெருமாள் கோவில்களில் பட்டர்கள் உரத்த குரலில் தலபுராணம் சொல்வதற்கே தாரளமாக கொடுக்கலாம்! அர்ச்சகர்களும் ரூபாய் கொடுத்தால்தான் சிறப்பு மரியாதை என்பதை தவிர்க்க வேண்டும். நல்ல பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  18. மன்னார்குடிக்கு எப்போதோ போனது. உற்சவர் மிக அழகு. தார்பாய்ச்சி கட்டிய வேஷ்டியும், வலது கையில் தார்க்கோல் பிடித்தபடி இடது கையை பக்கத்தில் நிற்கும் தன் தோழன் தோளில் போட்டபடி கொள்ளைச் சிரிப்புடன் ஒருகாதில் குண்டலம், இன்னொருகாதில் தோடு போட்டுக்கொண்டு நின்றிருப்பார்.
    திருமதி கீதா சொல்லும் விஷயங்கள் அருமை! அவர் கொடுத்திருக்கும் இணைப்புகளுக்கும் சென்று படிக்கிறேன்.

    ஊத்துக்காடு பெருமாளின் தூக்கிய கால் (கால்கள்?!) பதிந்திருக்கும் இடைவெளியில் ஒரு நூலை விட்டு காட்டினார் என்று கீதா எழுதியிருக்கிறார்.
    இதேபோல தும்கூர் அருகே கைதாள என்று ஒரு இடத்தில் கேசவப் பெருமாள் கோவிலில் பெருமாளின் கை விரல்களுக்கு இடையில் (பேலூர், ஹளேபீடு சிற்ப வகையைச் சேர்ந்தது) கருங்கல்லில் இடைவெளி இருப்பதாகச் சொல்லி பட்டாச்சார் ஸ்வாமி ஒரு குச்சியை விட்டுக் காண்பித்தபோது மனது வலித்தது. நாம் பெருமாளை கல்லாகப் பார்ப்பதில்லையே!

    பதிலளிநீக்கு
  19. ரஞ்சனி,

    "திருமதி" கீதா??? :( :))))

    தார்க்கோல்னு நீங்க சொல்வது தான் செண்டாயுதம். :))))

    பதிலளிநீக்கு
  20. புன்னகையுடன் கடந்து செல்லும் பெருமாளும், தெருவை அடைக்கும் கோலங்களும் அழகு. படங்களுடன் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  21. இரவு பெருமாளை பார்க்க போகவிட்டாலும் அவரே வீடு தேடி வந்து அழகான காட்சி கொடுத்துவிட்டார்.
    கோலங்கள் அழகு.
    படங்கள் மிக அழகு.
    சாரின் அண்ணா ராஜகோபாலஸ்வாமி கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த போது இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஜனவரி முதல் தேதி திவய தரிசனம் செய்தோம். சந்தானகோபாலன் கையில் கொடுப்பார்களே கொடுத்தார்களா?
    நாம் எதை வேண்டிக் கொண்டாலும் நடக்கும் என்பார்கள்.


    பதிலளிநீக்கு
  22. எங்களுக்கு சந்தான கோபாலனை மன்னார்குடியிலும் கையில் கொடுத்தார்கள், வடுவூரிலும் கொடுத்தார்கள். :)))) ஶ்ரீராமுக்கு இதைப் பற்றித் தெரியுமோ தெரியாதோ!

    பதிலளிநீக்கு
  23. தட்டில் இருபது ரூபாய்..... :)))

    பல கோவில்களில் நடக்கும் நிதர்சனம்....

    இன்னும் மன்னை ராஜகோபாலை தரிசித்தது இல்லை..... RVS தான் அழைத்துப் போக வேண்டும் போல!

    பதிலளிநீக்கு

  24. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்... அவசரமாக ஓட நினைத்ததால் ராஜகோபாலன் எனக்கு அந்த பாக்கியத்தைத் தரவில்லை!

    நன்றி வல்லிம்மா... கையில் கிடைக்கும் கடவுள் மாலை பற்றி நீங்கள் சொல்லியிருப்பது அழகு.

    தளிர் சுரேஷ்... இந்தக் கோவில் அப்படி ஏழைக் கோவில் இல்லை. ஆனால் ஒன்று, நாங்களாக விரும்பிப் போட்டதுதான். நான் அந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாம்!

    //கருங்கல்லில் இடைவெளி இருப்பதாகச் சொல்லி பட்டாச்சார் ஸ்வாமி ஒரு குச்சியை விட்டுக் காண்பித்தபோது மனது வலித்தது. நாம் பெருமாளை கல்லாகப் பார்ப்பதில்லையே!//

    உண்மைதான் ரஞ்சனி மேடம்...

    நன்றி ராமலக்ஷ்மி.

    சந்தானகோபாலன் கையில் வாங்கும் பாக்கியமும் கிடைக்கவில்லை. ஆனால் எனக்குத்தான் வேண்டுதல் அல்லது குறிப்பிட்ட பிரார்த்தனை என்று ஒன்றும் கிடையாதே!

    கீதா மேடம்... சந்தான கோபாலன் பற்றித் தெரியும். :)))

    வெங்கட்... ஆர் வி எஸ் உங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்! :))

    பதிலளிநீக்கு
  25. சந்தான கோபாலன் கையில் கொடுத்தார்கல்..

    அங்கு சென்றபோது கோவில் திருப்பணிக்காக ஒரு தொகை கொடுத்தோம்.

    இன்றுதான் பிரசாதமும் படமும் விழா அழைப்பிதழும் தபாலில் வந்தது..
    பதிவிலும் பார்த்து சந்தோஷம் அடைந்தோம் ..நன்றி..

    அந்த துளசி மாடம் பார்த்தீர்களா.. அஷ்டலஷ்மியுடன் ஆமை மீது பிரம்மாண்டமாக இருந்ததே..!

    பதிலளிநீக்கு
  26. ராஜராஜேஸ்வரி மேடம்...

    பார்க்கலையே... பார்க்கலையே... பார்க்கலையே... ! :)))

    பதிலளிநீக்கு
  27. நாம் வேண்டிக் கொள்ள ஒன்றும் இல்லை என்றாலும் நம் கையில்சந்தான கோபாலனை கொடுத்து வேண்டிக் கொள்ள சொல்வார்கள். அதனால் கேட்டேன்.

    இந்த கோவிலில் பக்கத்தில் தரிசனம் செய்யலாம். கூட்டம் இல்லை என்று கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.



    பதிலளிநீக்கு
  28. மன்னார்குடியில் தான் கரிச்சான் குஞ்சு சார் (நாராயணஸ்வாமி சார்) பள்ளி ஆசிரியராக இருந்தார். மன்னார்குடி என்றாலே அவர் நினைவு தான் எனக்கு வரும். கூடவே பாலகுமாரனின் 'இரும்புக் குதிரை'யின் நாணு சாரும்.

    கொசுறாக ஒரு குதிரைக் கவிதை.

    "நீர் குடிக்க குனியும் குதிரை
    நிழல் தெரியப் பின்னால் போகும்
    மிரளுவது மிருகம் என்பார்
    சீர் குணம் அறிய மாட்டார்
    வேறொன்று குடிக்கும்போது
    தான் கலக்கல் கூடாதென்று
    குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
    மிருகத்தில் குழந்தை ஜாதி
    கால் வைத்த இடங்கள் எல்லாம்
    பூ முளைக்கும் இடமென்றெண்ணி
    குளம்பது விளிம்பில் நிற்கும்
    குதிரையா மிரளும் மிருகம்
    குதிரையின் குளம்பைப் பாரும்
    இடுக்கிலே ரோமம் சிரிக்கும்"

    -- பாலகுமாரன்

    பதிலளிநீக்கு
  29. கவிதைப்பகிர்வு அருமை ஜீவி ஸார்! இரும்புக்குதிரைகளையும், மெர்க்குரிப் பூக்களையும் செட் மாறாமல் வைத்திருந்தேன். சமீபத்தில்தான் தொலைத்தேன்.ஹூ...ம்!

    பதிலளிநீக்கு
  30. என் ஊரைப்பற்றி ராஜகோபாலஸ்வாமி கோவில் பற்றி படித்தது உவகை அளித்தது. இப்போது திருவிழா நடக்கும் சமயம். அதனால் ஆற அமர இருந்து பார்த்து வந்திருக்க வேண்டும் நீங்கள்! திருமணத்திற்கு முன் எங்கள் வீடு தெப்பக்குள கரையில் இருந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா சமயத்தில் வழி நெடுக கோலங்கள் போட்டிருப்பதை ரசித்தவாறே கோவிலுக்கு சென்றதெல்லாம் நினைவில் எழுகிறது!! தெப்பத்தன்று இரவு முழுதும் கண் விழித்து தோழியருடன் அரட்டை அடித்தவாறே தெப்பம் பார்ப்போம். அந்த சமயம் மறுபடியும் ஒரு சுற்று வெண்ணெய்த்தாழி நடக்கும். தெப்பக்குளம் வரை பெருமாள் உலா வரும்!!

    அந்த நாள் ஞாபகத்தை தட்டி எழுப்பி விட்டீர்கள்!!

    பதிலளிநீக்கு
  31. மன்னார்குடிக்கு வந்த சுகத்தைக் கொடுத்தது படங்களும் பகிர்வும்...
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  32. கீதா சாம்பசிவம் பிரமிக்க வைக்கிறார்.. வைக்காட்டா தான் ஆச்சரியமோ?

    பதிலளிநீக்கு
  33. பாருங்கள் ..இங்கே பாருங்கள்..

    http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_8.html
    மதிலழகு மன்னார்குடி

    இதே மாதிரி துளசிமாடத்தை நங்கவள்ளி நரசிம்மர் ஆலயத்திலும் பார்த்து அதிசயித்தேன்...
    http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_11.html
    நலம் நல்கும் நங்கவள்ளி நரசிம்மர்

    பதிலளிநீக்கு
  34. நாந்தான் கோபாலன் கிட்டே உங்களைப் பார்த்து சிரிக்கச் சொன்னேன். அழகா சிரிச்சிருப்பாரே!

    வெங்கட் & ஆதி வெங்கட்... மன்னைக்குப் போகலாம். ப்ளான் பண்ணுங்க...

    பிரகாரத்துல சொர்க்கவாசலுக்குப் பக்கத்துல பின்னை மரம் ரெண்டு இருக்கும். காய்ந்து உதிர்ந்த காய்களை எடுத்து அடித்து விளையாடியது ஞாபகம் வருகிறது..

    ராமர் பாதத்தின் அருகில் உட்கார்ந்து பிஸ்ஸெஸ்ஸி ஃபிஸிக்ஸ் படித்தது ஞாபகம் வருகிறது...

    பகல்பத்து ராப்பத்தின் போது ராஜகோபாலன் பின்னாடியே பத்து பேரோட என் சித்தியின் கையைப் பிடித்துக்கொண்டு வலம் வந்தது ஞாபகம் வருகிறது...

    ராஜகோபாலன் ஏகவஸ்திரதாரி. ஒரே வஸ்திரத்தை இடுப்பிற்கும் தலைக்கு முண்டாசுமாய் சுற்றியிருப்பார். இடுப்பில ஸ்வர்ண சாவிக்கொத்து தொங்குமே...

    கால் கட்டைவிரலை வாயில் வைத்து சூப்பிக்கொண்டு சந்தானகோபாலன் இருப்பார் பக்கத்திலே...

    செம்பகாரண்ய க்ஷேத்ரம் மன்னார்குடி....

    சரி.. தனி போஸ்ட்டாவே எழுதிடலாம்.. நன்றி.... :-)

    பதிலளிநீக்கு
  35. அர்சகர்களுக்கு கோவிலில் சம்பளம் கிடையாது .பழங்காலத்தில் மான்யம் என்று கொடுத்திருந்த நிலங்க்ள் எல்லாம்
    போய்விட்டன. தட்டில் விழுவதுதான் வரும்படி. வேறு பக்கத்து கோவில்களில் part time,பார்த்து வருகிரார்களாம். டெல்லி,சென்னை பம்பாய் முதலிய இடங்களில் போய்
    வேலை பர்த்தாலும் தங்கள் முறை வரும்போது கொபாலன் சேவைக்கு வருகிரார்கள். கோவிலுக்கே ஆயிரக்கணக்கான நிலங்கள் இருந்தும் வரும்படி மிக குரைவுதான்.
    ஆனால் கோபாலனிடம் அசையா அன்பு கொண்ட பக்தர்கள் கட்சி வேறுபாடின்றி இன்றும் ஏதும் குறைவின்றி நடத்தி வருகிரார்கள்.
    கோபாலன் 2014 திருவிழாவை

    http://anudinam.org/2014/04/02/mannargudi-rajagopalaswami-temple-panguni-brahmotsavam-day-14/
    பூரா நாட்களையும் கண்டு மகிழலாம்

    பதிலளிநீக்கு
  36. சமீபத்தில்தான் மன்னார்குடி சென்று ராஜகோபாலனை தரிசித்து
    வந்தோம். படங்களும் உங்கள் பதிவும் மிக அருமை ஸ்ரீராம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

    பதிலளிநீக்கு
  37. என்ன சார் திடீர் மண்ணை பயணம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!