திங்கள், 11 ஜனவரி, 2016

திங்கக்கிழமை 160111 :: கத்தரிக்காய்-முருங்கை சாம்பார்.


 நாங்கள் சாம்பார் வைக்கும் முறையிலிருந்து மாறுபட்டு எங்கள் அலுவலகத் தோழி சொன்னபடி சென்ற ஞாயிறு அன்று சாம்பார் செய்தோம்.  (உருளைக் கிழங்கு 'எக்ளேர்ஸ்' (!!) செய்த அன்று!) 

நாங்கள் வைக்கும் சாம்பாரில் என்ன காயோ அதை மட்டுமே போட்டு பருப்புச்  சேர்த்து சாம்பார் செய்வோம்.  ரொம்பச் சிக்கனம்! 

இந்தச் சாம்பார் ஹோட்டல் சாம்பார் போல வாசனையுடன் வித்தியாசமாக இருந்தது.


ஒரு கரண்டி துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொண்டோம்.மூன்று கத்தரிக்காய், இரண்டு முருங்கைக்காய் எடுத்துக் கொண்டோம்.  எப்போது அடுப்பில் போட வேண்டுமோ அப்போதுதான் கழுவி வைத்துள்ள இந்தக் காய்களை நறுக்கி அதில் சேர்ப்போம்.

நெல்லிக்காய் அளவு புளி எடுத்துக் குறைந்த தண்ணீரில் கரைத்து எடுத்து வைத்துக் கொண்டோம்.

இரண்டு தம்ளர் தண்ணீரில் மூன்று தக்காளி, பத்து சின்ன வெங்காயம்
ஆகியவற்றை நறுக்கிப் போட்டு,  இரண்டு பச்சை மிளகாயை நீ வாக்கில் நறுக்கிச் சேர்த்து, சாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்தோம்.


அது கொஞ்சம் கொதித்ததும் அதில் முருங்கை, கத்தரித் துண்டுகளை நறுக்கிப் போட்டோம்.                                                    
       


காய் வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், பருப்பை  சேர்த்து விட்டோம்.  ஒரு கொதி வந்துள்ள நிலையில் பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்து மல்லி சேர்த்து,


           கடுகு, காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை சீரகப்பொடி, ஒரு சிட்டிகை வெந்தயப்பொடி, தாளித்துச் சேர்த்து விட்டோம்.
 

(எங்களைப் பொறுத்தவரை) வித்தியாசமான சாம்பார் ரெடி. 

ஒரே வேளையில் இரண்டு முறை சாதத்தில் போட்டுப் பிசைந்து கொண்டு சாம்பார் காலி!

70 கருத்துகள்:

 1. பசங்க நுங்க்றது சரியா இருக்கு. கத்திரிக்கா, முருங்கக்கா அளவெலாம் கொடுத்துருக்கீங்க. எவ்வளோ மிளகாய் என குறிப்பிடவில்லையே:))))) ஆனாலும் கை திட்டத்தில் நானும் செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. சாம்பாரில் சீரகம் சேர்ப்பது என்னமோ சரியா வரதில்லை. அது சேர்க்காமல் சின்ன வெங்காய சாம்பார் இம்முறையில் தான் பண்ணுவேன். :)

  பதிலளிநீக்கு
 3. ஹோட்டல் சாம்பார் போல... ரைட்டு செய்து பார்க்கிறோம்...

  பதிலளிநீக்கு
 4. கத்திரிக்காய் முருங்கக்காய...அகவிலை விற்பதாக புலம்பலை கேட்டது நிணைவுக்கு வந்தது நண்பரே........

  பதிலளிநீக்கு
 5. நம்மால் முடியாததை வியப்புடன்தான் பார்க்கவேண்டி இருக்கிறது.


  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நீங்க ரொம்பப் பணக்காரா போல இருக்கு. இப்பத்த நிலவரப்படி கத்தரிக்கா கிலோ 100 ரூ. முருங்கைக்கா கிலோ 130 ரூ. முடியுள்ள சீமாட்டி!!!

  பதிலளிநீக்கு
 7. முருங்கை விலை தெரியலை, ஆனால் கத்திரிக்காய்ப் பொடிக்கத்திரி, எண்ணெய்க் கறி செய்வோமே அது கிலோ 40 ரூபாய் இங்கே!

  பதிலளிநீக்கு
 8. சரியான காம்பினேஷன். கத்திரிக்காயும் முருங்கைக்காயும் ஆண் பெண் மாதிரி. எது ஆண் எது பெண்
  என்கிற தீர்மானம் உங்களுக்கானது.

  இன்றைய தேதியில் கத்திரிக்காயின் விலையை விட முருங்கைக்காயின் விலை இரண்டு மடங்கு அதிகமான ராஜாத்தனமானது.

  பதிலளிநீக்கு
 9. கீதா சாம்பசிவம் குறிப்பிடுகிற கணக்கில் மூன்று மடங்குக்கு மேல் அதிகம். கிலோ.ரூ.130/-

  பதிலளிநீக்கு
 10. //கீதா சாம்பசிவம் குறிப்பிடுகிற கணக்கில் மூன்று மடங்குக்கு மேல் அதிகம். கிலோ.ரூ.130/-//

  நல்லவேளையாத் திருச்சியிலே அதுவும் ஶ்ரீரங்கத்தில் இருப்பதற்கு சந்தோஷப்பட்டாலும், இந்த விலைவாசி இங்கேயும் வந்துடாமல் இருக்கணுமேங்கற பயமும் வருது. 3 வாழைக்காய் பத்து ரூபாய்க்குக் கிடைக்கிறது. முருங்கைக்காய் அதிகம் கிடைப்பதில்லை. இந்தக் கத்திரிக்காய் 2 நாட்கள் முன்னர் வாங்கியது.

  பதிலளிநீக்கு
 11. அதிக பட்சமாக 60 ரூபாய் விற்கின்றன காய்கள். எங்கக் குடியிருப்பு வளாகத்தில் கீழே உள்ள வணிக வளாகத்தில் வாழைப்பூ 7 ரூபாய்க்குத் தான் விற்றனர். பூவும் நல்ல பெரிய பூ. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு இரண்டு நாட்கள் வரும் என எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. ஆனால் அடுத்து வரும் 2,3 நாட்களுக்குக் காய்கள் விலை ஏறி இருக்கும். பொங்கலுக்கு அனைவரும் வாங்குவார்களே! சில காய்களை முன் கூட்டியே வாங்கி விட்டால் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படாமல் இருக்கலாம். உதாரணமாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனை, சிறு, பெரு கிழங்குகள், மொச்சை, வாழைக்காய், பறங்கிக்காய் போன்றவை. பறங்கிக்காய் இங்கே பச்சையாகக் கிடைப்பதால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் தாங்கும்.

  பதிலளிநீக்கு
 13. "பறங்கிக்காய் பச்சை நிறத்திலேயே கிடைப்பதால்" என எழுதி இருக்கணும். :)

  பதிலளிநீக்கு
 14. எல்லாஞ்சரி. ஒரு கரண்டி பருப்புதான் உதைக்குது. நமக்கு கொஞ்சம் பருப்பு கூடுதலாச் சேர்க்கணும். நம்ம வீட்டுலே எப்பவும் அரைச்சுவிட்ட சாம்பார்தான்.

  பதிலளிநீக்கு
 15. அருமையான சாம்பார் செய்முறை
  படிக்கவே வாயூறுதே
  உண்டவருக்கு
  நிறைவைத் தந்திருக்குமே!
  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 16. // http://tinyurl.com/hgvyoue// இந்தச் சுட்டியில் காமாட்சி அம்மா சிறு கிழங்கை வெங்காயம் சேர்த்துச் செய்தது குறித்து சிறு கிழங்கின் படத்தோடு எழுதி இருக்கிறார்கள். நாங்க வெங்காயம் போட்டுச் செய்தது இல்லை. கிழங்கை ஊற வைத்து மண் போக அம்மி அல்லது சாக்கில் போட்டுத் தேய்த்துச் சுத்தம் செய்து வேக விட்டுக் காரக்கறி செய்வது உண்டு. திருவாதிரைக் குழம்புக்கு மதுரைப்பக்கம் இது முக்கியம். இதைக் குறித்தும் காமாட்சி அம்மா எழுதி இருக்காங்க. பெரு கிழங்கு இதே வகை தான். சிறு கிழங்கைப் போல் இரண்டு பங்கு பெரிது. ருசி கொஞ்சம் கம்மி தான்.

  பதிலளிநீக்கு
 17. துளசி, ஒரு கரண்டிப் பருப்பு என்பது கிட்டத்தட்ட 50 கிராம் வந்துடும். ஆகவே சாம்பாருக்கு அது போதும். நாங்களும் சாம்பார்னா அரைச்சு விட்டுத் தான். பொடியெல்லாம் போடறதில்லை. என் மாமியார் வீட்டில் பொடியும் போட்டுவிட்டுக் கொஞ்சமா அரைச்சு விடுவாங்க. அதையே பிட்லைனும் சொல்வாங்க. எங்களுக்குப் பிட்லைனாலே தனிப் பக்குவம்! :) அதோடு சாம்பாருக்கு நீர்க்கப் புளி கரைத்துக் கொண்டு அரைச்சு விட்டுப் பருப்பை நிதானமாப் போட்டுப் பண்ணினால் இருக்கும் ருசி பருப்பு நிறையப் போட்டால் இல்லைனு என்னோட தனிப்பட்ட கருத்து. :)

  பதிலளிநீக்கு
 18. ரூமில் நாங்களும் முயல்கிறோம் நண்பரே தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 19. சாம்பாரில் சீரகம் ,நல்லாவா இருக்கும் :)

  பதிலளிநீக்கு
 20. வித்தியாசமாத்தான் இருக்கு!
  பார்க்கலாம் என்றாவது!

  பதிலளிநீக்கு
 21. நன்றி மைதிலி கஸ்தூரிரங்கன். "பசங்க நுங்க்" என்றால் என்ன? பச்சை மிளகாய் இரண்டு என்று சொல்லி இருக்கேனே... தாளிக்க காய்ந்த மிளகாயும் இரண்டுதான் போடுவோம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 22. நன்றி கீதா மேடம். சீரகம் பொடி பண்ணும்போது ரச வாசனை வந்தது. சாப்பிடும்போது தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
 23. நன்றி வலிப்போக்கன். //அகவிலை விற்பதாக// ஏக விலை விற்பதாக என்று எடுத்துக் கொள்கிறேன். நாங்கள் வாங்கும்போது அவ்வளவு விலையில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலைவாசி ஏற்றத்தை "அகவிலை ஏற்றம்" என்றே சொல்லுவார்கள். ஆகவே அவர் சொல்லி இருப்பது சரி தான். அரசு கொடுக்கும் டி.ஏ.வை "அகவிலைப்படி" என்றே சொல்லுவார்கள். சிலர் கிராக்கிப்படி என்றும் சொல்லுவதுண்டு.

   நீக்கு
 24. நன்றி பழனி.கந்தசாமி ஸார். இது சென்ற வாரச் சமையல். அப்போது அவ்வளவு விலையில்லை.

  பதிலளிநீக்கு
 25. மீள்வருகைக்கு நன்றி கீதா மேடம். பொடிக்கத்தரி இங்கு கிடைக்காதது ஒரு குறை. நல்ல வயலட் கலரில் கண்ணைப் பறிக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த நல்ல வயலட் கலர் கத்திரிக்காயில் ருசியே இல்லை. பொங்கலுக்கு வாங்கினது சாப்பிடவே பிடிக்கலை! :) கண்ணைப் பறித்தால் அது ஹைப்ரிட்.

   நீக்கு
 26. நன்றி ஜீவி ஸார். உங்கள் தீர்மானத்தில் ஆண் எது என்பதையும் சூசகமாகச் சொல்லி விட்டீர்கள்! கத்தரி-முருங்கை உண்மையிலேயே செம காம்பினேஷன்தான். அது வெந்தியக் குழம்பாயினும் சரி, சாம்பாராயினும் சரி!

  பதிலளிநீக்கு
 27. கீதா மேடமும் ஜீவி ஸாரும் முருங்கை, கத்தரி விலை பற்றி பேசியிருப்பதால் இங்கு நாங்கள் வாங்கிய விலையைச் சொல்கிறேன். கத்தரிக்காய் கால் கிலோ பத்து ரூபாய். இரண்டு முருங்கை (படத்திலிருப்பது) பன்னிரண்டு ரூபாய். கீதா மேடம் அதற்குள் பொங்கல் கூட்டு பற்றிப்பேசி 7 தான் கூட்டை நினைவு படுத்தி விட்டார்களே..

  பதிலளிநீக்கு
 28. வாங்க துளசி மேடம். பருப்பு அளவு கீதா மேடம் சொல்லி இருப்பது போலத்தான். சரியாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 29. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

  பதிலளிநீக்கு
 30. கீதா மேடம், நான் சிறுகிழங்கு, பெரு கிழங்கு பார்த்ததேயில்லை. கருணைக்கிழங்கோ என்று நினைத்தேன். சாம்பார் எப்பவுமே அரைச்சு விட்டுத்தான் செய்வீர்களா? நாங்கள் எப்போதாவதுதான் அப்படிச் செய்வோம்.

  பதிலளிநீக்கு
 31. நன்றி பகவான் ஜி. உங்கள் மதுரைக்கார அம்மா சொன்ன ரெசிப்பிதேன்... சீராகம் பொடி செய்யும்போது ரசம் வாசனை வந்தாலும், சாப்பிடும்போது நன்றாகவே இருந்தது.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம்
  ஐயா
  செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் செய்து சாப்பிடுகிறோம்... வாழ்த்துக்கள் த.ம 10
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 33. நன்றாக இருக்கிறது.

  நாங்கள் தினமும் சாம்பார் வைப்பதில்லை.வீட்டில் பூசணி, பயித்தை ,கத்தரி தக்காளி ,முருங்கை ,பருப்பு ,உருளை சேர்த்து செய்யும் சாம்பார் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 34. ஹை ஸ்ரீராம் நம்ம சாம்பாரும் இப்படியும் செய்வதுண்டு. ஜீரகப் பொடியாகப் போடாமல் கொஞ்சம் ஜீரகம் போடுவதுண்டு. ஆனால் வித்தியாசமாகத் தெரியாது. அதே போன்று வெந்தயப் பொடியும் சேர்ப்பதுண்டு, வெந்தயமும் கொதிக்கும் போதே வறுத்துப் போடுவதுண்டு. நல்ல வாசம் தூக்கும் என்பதால். மற்றபடி சேம் சேம்...

  காய் விலை எல்லாம் ரொம்ப அதிகமாகத்தான் உள்ளது. ஆந்திரா சென்றுவிட்டு வந்தப்புறம் இன்னும் அதிகமாக இருப்பது போல உள்ளது...ஆந்திராவில் பிற பகுதிகள் எப்படி என்று தெரியவில்லை. தெனாலி, குண்டூர் வட்லமுடி சீப்..

  கீதா

  பதிலளிநீக்கு
 35. நன்றாக இருக்கிறது.

  நாங்கள் தினமும் சாம்பார் வைப்பதில்லை.வீட்டில் பூசணி, பயித்தை ,கத்தரி தக்காளி ,முருங்கை ,பருப்பு ,உருளை சேர்த்து செய்யும் சாம்பார் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 36. பழனி கந்தசாமி சார்சொன்னது கரெக்ட்.

  நான் இரண்டு பேருக்கே அரை கப் பருப்பு போடுவேன் அதிலேயே காயை வேக வைப்பேன். :)

  பதிலளிநீக்கு
 37. பதில்கள்
  1. இன்று செய்துவிட்டேன், சுவையோ சுவை! வித்தியாசமாய் இருக்கிறது. நன்றி :-)

   நீக்கு
 38. எனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கவும்.

  பதிலளிநீக்கு
 39. நல்லாருக்கு சாம்பார் பதிவு. பருப்பு கொஞ்சம் ஜாஸ்தி வேண்டும். கீதா சாம்பசிவம் அவர்கள் தவறான சுட்டியைக் கொடுத்துள்ளார்கள். அவங்களே சமையல் கில்லாடி. அவர்கள் ரெகமென்ட் செய்திருப்பதால் அந்தச் சுட்டிக்குப் போனால் ஒன்றும் வரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. https://chollukireen.com/2012/03/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/ இஃகி, இஃகி, அதே சுட்டி மூலம் இன்னிக்குப் போனதுக்கும் அதே பதிவு அருமையாத் திறந்திருக்கு. அன்னிக்கு Tiny Url மூலம் சுருக்கி இருந்தேன். அதையே இன்னிக்கும் போட்டுப் பார்த்தேன். காமாட்சி அம்மாவின் சிறுகிழங்கு கிரேவி பதிவு நன்றாகவே திறக்கிறது. இரு பக்கமும் உள்ள //// எடுத்துட்டுப் போடணும். :)))))

   நீக்கு
 40. நன்றி சகோதரி மாதேவி. நீங்கள் 2014 க்கு அப்புறம் பதிவுகள் எழுதலை என்று நினைக்கறேன்.

  பதிலளிநீக்கு
 41. நன்றி கீதா... நானும் வெந்தயப்பொடி சேர்த்திருக்கிறேனே... சீரகப்பொடிக்கு எதிர்ப்பு இருக்கே கவனிச்சீங்களா! :))) வட்லமுடிலேருந்து காய்கறி வாங்கி வந்திருக்கீங்களா?

  பதிலளிநீக்கு
 42. நன்றி தேனம்மை. பருப்பு நீங்க கூடப் போட்டுக் கொண்டால் நான் என்ன தடுக்கவா போகிறேன்? ஹிஹிஹி!

  பதிலளிநீக்கு
 43. நன்றி நிஷா. பார்சல் அனுப்பினேன். பார்சல்காரன் வந்து எல்லாம் கொட்டிப்போச்சுன்னு திட்டிட்டுப் போறான்!

  பதிலளிநீக்கு
 44. நன்றி நெல்லைத் தமிழன். பருப்பு அளவு மட்டும் இல்லை, இதில் நீங்கள் எதை மாற்றி முயற்சிப்பதும் உங்கள் ரசனை. நான் வழக்கமாகச் சமைப்பதிளிருந்து சிறு சிறு மாற்றங்களுடன்தான் செய்து பார்க்கிறேன்!

  கீதா மேடம் ப்ளாக் வேலை செய்யவில்லையாம். சரியான சுட்டியை ப்ளாக்கர் திறக்கும்போது கொடுக்கிறேன் என்று மெயில் செய்துள்ளார்கள். நீங்களே கூட இதே சுட்டியை நாளை முயற்சித்தால் திறக்கக் கூடும்.

  பதிலளிநீக்கு
 45. இந்த கூட்டணியில் சாம்பார்வைப்போம். ஆனால் சீரகம் தாளிப்போம்.இது போல் செய்து பார்த்து விடுகிறேன் சகோ தம +1

  பதிலளிநீக்கு
 46. சீரகம் போட்டுத் தாளிப்பது நல்லதுதான். சண்டிகர் வாழ்க்கையில் கடுகுஎண்ணெய் சமையல், அதில் சீரகம் தாளிப்புதான் நிறைய இடங்களில் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 47. நெல்லைத் தமிழன், சுட்டி சரியாக வேலை செய்கிறது. இருபக்கமும் உள்ள // எடுத்துவிட்டுச் சுட்டியை மட்டும் காப்பி, செய்து பேஸ்ட் அன்ட் கோ க்ளிக்கவும். காமாட்சி அம்மாவின் சிறு கிழங்கு கிரேவிப் பதிவு சரியாக வரும்.

  துளசி, சாம்பார் தவிர மற்றவற்றுக்குச் சீரகம் ஓகே. ரசம், கூட்டு, சப்பாத்திக்குச் செய்யும் வகைகள்னு எல்லாத்திலேயும் சீரகம் போடலாம். வத்தக்குழம்பு, சாம்பாருக்குப் போட்டால் அவ்வளவா நல்லா இல்லை. அதே போல் பொரிச்ச குழம்பிலேயும் கொஞ்சமாச் சேர்க்கலாம். என்றாலும் சேர்க்காமல் செய்தால் அது தனி சுவை.

  பதிலளிநீக்கு
 48. மீள் வருகைக்கு நன்றி துளசி மேடம், கீதா மேடம்!

  பதிலளிநீக்கு
 49. ஆஹா.... செய்தே பார்த்து விட்டீர்களா? நன்றி கிரேஸ்.

  பதிலளிநீக்கு
 50. எளிமையாச் சொல்லித் தருவது உங்களின் சிறப்பு! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 51. அன்று வாங்கி வந்தேன் ஸ்ரீராம். இப்போது கணவர் வாங்கி வந்துள்ளார். மொச்சை, துவரை, பச்சைப்பட்டாணி எல்லாம் சேர்த்து 3/4கிலோ ஜஸ்ட் 15 ரூபாய். முழு உளுந்து 1 கிலோ 120 ரூபாய். குண்டூர் மிளகாய் 1 கிலோ 120 ரூபாய் (காரம் அதிகமாக இருக்கும். எனவே கொஞ்சமாகச் சேர்த்தாலே போதும். எனவே சீப் தானே??!!! கொய்யாப்பழம் ஃபார்ம் ஃப்ரெஷ் 1/2 கிலோ 10 ரூபாய்.

  பதிலளிநீக்கு
 52. செய்து, சுவைத்து, மேலும் நன்றாக இருக்கிறது என்று சொன்ன கணவரிடம் எங்கள் ப்ளாக் செய்முறை என்றும் சொல்லிவிட்டேன் :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!