செவ்வாய், 12 ஜனவரி, 2016

நீதானா அந்தக் குயில்



          கேட்டு வாங்கிப் போடும் கதையில் இந்த வாரம் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களின் படைப்பு.   எங்கள் வேண்டுகோளை ஏற்று கதையை அனுப்பி வைத்ததற்கு நன்றி ரஞ்சனி மேடம்.

          ரஞ்சனி நாராயணன் அவர்களின் தளம். ranjani narayanan.   நான்கு பெண்கள் தளத்திலும் தொடர்கள் எழுதுவார்.   'திருவரங்கத்திலிருந்து' என்பது இவரின் இன்னொரு தளம்.

          திருமதி ரஞ்சனி நாராயணனிடம், அவரது இந்தக் கதை பற்றிய அவர் கருத்தைக் கேட்டபோது அவர் சொல்லியிருப்பது :

======================================================================
         

          அவள் விகடனில் வந்த முதல் கதை இது.  இந்தக் கதையின் பின்னணி:

          சென்னையின் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் - நான் சொல்வது 1987-இல் - பெங்களூரு போகிறீர்களா என்று கேட்டவுடன் ஒரே மாதத்தில் வந்துவிட்டோம். இந்த ஊரின் வானிலை என்னை மிகவும் கவர்ந்தது. நாங்கள் வந்திறங்கிய ஏப்ரல் மாதத்திலேயே மழை. நாங்கள் குடியிருந்த அப்போதைய ஜே.பி. நகரில் அதிகம் வீடுகள் இருக்கவில்லை. மரங்களும் செடிகளுமாக குளுகுளுவென்று இருந்தது அந்த ஏரியா. காலையில் என்னைத் துயில் எழுப்புவதே அங்கிருந்த மாமரக் குயில் தான். ஆனால் எங்கள் வீட்டில் குடியிருந்த இன்னொரு பெண்மணிக்கு இந்தக் குயில் தன்னை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டு விடுவதாக ஏகக் கோபம் அதன் மேல்!

          என் அண்ணா அப்போது விசாகப்பட்டினம் ஸ்டீல் நகரத்தில் வசித்து வந்தார். ஒருமுறை விடுமுறைக்கு அங்கு போனபோது அந்தக் கடற்கரை நகரம் என்னை மிகவும் கவர்ந்தது. அரசு குடியிருப்பில் மா, பலா, வாழை என்று எங்கு நோக்கினும் மரங்கள் சூழ்ந்த வீடு. வெள்ளை வெளேரென்று மணல் சூழ்ந்த கடற்கரை. இந்த இரண்டு நகரங்களையும், எனது அனுபவங்களையும் வைத்து எழுதிய கதை இது. 

          எங்கள் பிளாகில் இதை வெளியிட்டு என்னை கௌரவிப்பதற்கு எனது மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
ரஞ்சனி



=====================================================================


          இனி அவரது படைப்புக்குப் போவோம்.


=====================================================================

நீதானா அந்தக் குயில்
ரஞ்சனி நாராயணன்






ஒரு வாரமாகிறது நாங்கள் இந்த ஊருக்கு வந்து. அழகான ஊர் என்று இங்கு வருவதற்கு முன்பே நண்பர்கள் சொன்னார்கள், வந்த பின்தான் தெரிந்தது, மிக மிக அழகான ஊர் என்று. சுற்றிலும் பச்சைப்பசேலென்ற மலைகள்…….

கீழே பெரிய தோட்டம். மாடியில் மூன்று அறைகளுடன் வீடு. தோட்டம்தான் என்னை மிகவும் கவர்ந்தது. ஓர் பக்கத்தில் மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா என்று பழ மரங்கள். இன்னொரு பக்கத்தில் கிச்சன் கார்டன்அமைக்கக் கூடிய அளவுக்கு இடம் இருந்தது. தோட்டத்தை ஆவலுடன் நான் பார்ப்பதைக் கண்ட என் கணவர், “நீ உன் ஆசை தீர செடி, கொடி வளர்க்கலாம்….” என்றார்.

புது வீடு, புது ஊர், எல்லாமே மனதுக்குப் பிடித்து சந்தோஷமாக இருந்தது.

வருடக் கணக்கில் சென்னை வெய்யிலை அனுபவித்த எங்களுக்கு, இங்கு வந்திறங்கிய அன்றே மழை பெய்தது ஆச்சரியமாக இருந்தது. வயதை மறந்து, ஆனந்தமாக மழையில் நனைந்ததன் விளைவு, காய்ச்சலும் தலைவலியுமாகப் படுத்து விட்டேன்.

புது ஊருக்கு வந்ததும் வராததுமாக இப்படிப் படுத்துக் கிடக்கிறோமே என்று நினைத்தபடியே, படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். தோட்டத்திலிருந்த மரங்களில் சிலுசிலுவெனப் பறவைகளின் ஒலி.

க் க் கூ …….. க் க் கூ ……..’  –மிக அருகில் கூவியது ஒரு குயில்.

சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.

க் க் கூ …….. க் க் கூ ……..’  –தட்டி எழுப்ப மனமின்றி வருடிக் கொடுக்கும் சகோதரியின் வாஞ்சைக் குரல் போல் விட்டு விட்டுக் கேட்டது குயிலின் குரல்.

இது கடற்கரைப் பட்டினம், மனிதர்கள் அதிகம் புழங்காத கடற்கரை வெள்ளை வெளேரென்ற மணலுடன், ஆரவாரமில்லாத அலைகளுடன் இருக்கும்; கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்என்று நண்பர்கள் கூறியிருந்தனர். குயில் கூவித் துயிலெழுப்பும் என்று சொல்லவில்லையே!

க் க் கூ …….. க் க் கூ ……..’

அடடா…..என்ன இனிமை! கருநிறக் குயிலுக்கு தேன்குரல் கொடுக்க வேண்டுமென்று கடவுளுக்கு தோன்றியதோ…? பாரதியும் இப்படி மயங்கித்தான் கவிதை எழுதினாரோ…?

கல்லூரி நாட்களில் வாசித்து மகிழ்ந்த குயில் பாட்டு, வரி பிசகாமல் நினைவுக்கு வந்து புரட்டிப் போட்டது என்னை.

அன்றிலிருந்து குயில் தினமும் என்னைத் தன் தீம்பாட்டால் துயிலெழுப்பியது. அதன் குரலினிமை கேட்டு நான் எழுகிறேனா அல்லது நான் எழுதுவது தெரிந்து அது கூவுகிறதா என்று சொல்ல முடியாதடி, இரண்டும் ஒரே சமயத்தில் நடந்தது.

மிகச் சமீபத்தில் இருந்து அதன் குரல் கேட்டதால், எங்கள் தோட்டத்தில் தான் அது இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். காய்ச்சல் குறைந்தவுடன் போய்ப் பார்க்க வேண்டும் என்றும் தீர்மானித்தேன்.

ஒவ்வொரு நாள், ஒவ்வொரு உணர்ச்சியைத் தன் குரலில் குழைத்து, இழைத்து கீதமிசைத்தது குயில். ஒரு நாள் சோகமாக ஒலிக்கும் அதன் குரல், மறுநாள், கரை புரண்டோடும் காட்டு வெள்ளம்  போல உற்சாகத்துடன் பொங்கிப் பெருகும். நிஜமாகவே குயில் அப்படிப் பாடியதோ….இல்லை, என் மனநிலைக்கு தகுந்தாற்போல குயிலின் குரலை நான்தான் இனம் பிரித்தேனோ…..தெரியவில்லை!

ஐந்தாவது நாளில் காய்ச்சல் நன்கு குறைந்திருந்தது. வெளியே வந்து பால்கனியில் நின்று கொண்டேன். பச்சை வண்ண ஆடை போர்த்திய மலைகளினூடே, சூல் கொண்ட பெண்ணைப் போல கருநிற மேகங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன.

காலில் செருப்பை மாட்டிக் கொண்டு படியிறங்கி தோட்டத்துக்கு வந்தேன். ஒவ்வொரு மரமாக அண்ணாந்து பார்த்தபடியே நகர்ந்தேன். ஊஹும்ஒரு பறவையைக் கூடக் காணவில்லை. எங்கே போயிருக்கும் இந்தக் குயில்…? குஞ்சுகளுக்கு இரை தேடப் போயிருக்குமோ…..?

ஹலோ!”- குரல் கேட்டுத் திரும்பினேன்.

பக்கத்து வீட்டில் ஒரு நடுத்தர வயது பெண் நின்றிந்தாள்.

புதுசா வந்திருக்கீங்க போலிருக்கு…!”

ஆமாஒரு வாரமாகிறது!

ஊரைச் சுத்தி பார்த்தீங்களா…?”

இன்னும் இல்லை! வந்தவுடன் கொஞ்சம் உடம்பு சரியில்லை……”

அப்படியா! வீடு பிடிச்சிருக்கா…..?”

ஓ! ரொம்ப பிடிச்சிருக்கு! ஊரும் பிடிச்சிருக்கு. சுற்றி வர மலை, சிலுசிலுன்னு காத்து, விட்டுவிட்டு பெய்ற மழை…..!”

குயிலைக் கண்டு பிடிச்சுட்டீங்களா?”

அட! அதெப்படி இவளுக்குத் தெரிந்தது? இவளும் அந்தக் குயிலைத்தான் தேடுகிறாளோ? இவளும் பாரதி ரசிகையா…?

எப்படி தெரிஞ்சது உங்களுக்கு…? நீங்களும் அந்தக் குரலுக்கு ரசிகையா?” – ஆர்வத்துடன் கேட்டேன் நான்.

அட! நீங்க வேற! தினமும் விடிகாலைத் தூக்கமே இந்தச் சனியனால கெட்டுப் போச்சு. நீங்க மரத்தையே அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருந்தீங்களாசரிதான், உங்களுக்கும் இந்தப் பாழாப் போன குயிலால தூக்கம் கெட்டிருக்கும்னு நெனைச்சேன்!

சொல்லிக் கொண்டே போனாள்அந்தப் பெண்.

44 கருத்துகள்:

  1. மிக அழகான அனுபவக்கதை. குயில் பாட்டுப்போல படிக்க இனிமையாக இருந்தது.

    எதுவுமே புதிதாக அனுபவிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே பழகிப் போய் விட்டால் ஓர் அலுப்பினைத்தரும் என்பதை உணர்த்துவதாக உள்ளது இந்தப்படைப்பு.

    கதாசிரியர் அவர்களுக்கும், அதனை இங்கு பதிவிட்டு படிக்கத்தந்துள்ள எங்கள் ப்ளாக்குக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. ரசிப்புடன் இருக்கிறது கதை...அது நம்மையும் தொற்றிக் கொள்கிறது....
    தம +1

    பதிலளிநீக்கு
  3. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  4. கதை நன்று... அம்மாவிற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. அருமை ரசனை ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.

    பதிலளிநீக்கு
  6. அருமையான அனுபவம். குயிலை ரசித்துத் தேடி இருக்கார். குயில் குஞ்சுக்குச் சாப்பாடெல்லாம் தேடாது! :) சோம்பேறி அது! காக்கைக் கூட்டில் முட்டை இடும். காக்கையும் தெரியாமல் அதைக் குஞ்சு பொரித்துச் சாப்பாடு ஊட்டும் வரை பாதுகாக்கும். அப்போது தான் அதற்கு இது தன் குஞ்சு இல்லை என்பது தெரியும். உடனே அனைத்துக் காக்கைகளும் குயில் குஞ்சை ஓட ஓட விரட்டி அடிக்கும். அம்பத்தூர் வீட்டில் இந்தக் காட்சியைப் பலமுறை கண்டிருக்கிறேன். குயில் குஞ்சைக் காப்பாற்ற முயல வெண்டும் என நினைச்சுப்பேன். ஆனால் காக்கைகள் விடாது! துரத்தும். கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். விடிகாலையிலேயே கூவ ஆரம்பிச்சுடும்.

    பதிலளிநீக்கு
  7. சின்ன விஷயம் தான். அதை என்ன லாவகமாகக் கையாண்டிருக்கிறார் என்று வியந்து போனேன்.

    அனுபவப்பட்ட ஒன்றைச் சுற்றியதான நினைப்பு வலைப்பின்னல் நேர்த்தியாக வந்திருக்கிறது. நேர்த்தியான இந்த நெசவு தான் கதைக்கான முத்திரையை பதித்து நம்மை வியக்க வைக்கிறது. நிகழ்வுகளைக் கதையாக்கும் சாமர்த்தியம் இது தான்.

    வாழ்த்துக்கள், ரஞ்சனி அம்மா.

    பதிலளிநீக்கு
  8. ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதை! ரஞ்சனி அம்மாவுக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஆஹா ! அருமையான அழகான அனுபவம் ..பறவைகள் இனிய ஒலி எழுப்ப சோம்பல் முறித்து எழும் விடியற்காலை நேரம் நானும் அனுபவித்திருக்கேன் ..சிலர் இப்படிதான் ரசிக்கதேரியாமலே வாழ்க்கையை நகர்த்தி செல்கிறார்கள் ..
    காலை நேரத்து அணில்களும் பறவைகளும் நம்மை உற்சாகமூட்டுபவை ,,நினைவுகளை மீட்ட செய்த ரஞ்சனி அம்மாவுக்கும் எங்கள் ப்ளாகுக்கும் நன்றிஸ் :)

    பதிலளிநீக்கு
  10. ரசனை மாறுபாடு!
    கதைப் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. வேறுபட்ட ரசனை கொண்டவர்கள் மனிதர்கள். அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  12. நன்றி கீதா மேடம். நாம் படிக்கும் ஒவ்வொரு விஷயமும் பல்வேறு சிந்தனைகளை நம்முள் தூண்டி விடுகின்றன என்பது நிஜம். நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வேலை செய்தபோது அலுவலக வாசலில் மாபெரும் ஆலமரம் ஒன்று இருக்கும். ஐந்தரை ஆரம்பிக்கும்போதே மொலுமொலு என்று பறவைகள் கூடத் தொடங்கி சத்தமிட ஆரம்பிக்கும். மரங்களால் சூழப்பட்ட அலுவலகம் அது. இந்தக் கதை படித்தபோது எனக்கு அந்தச் சூழல் உடனே நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஜீவி ஸார். நீங்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கிறீர்கள்... நம் அன்றாட வாழ்வின் சாதாரணச் சம்பவங்களைக் கூட சற்று மாற்றிப் போட்டால் ஒரு கதை தயார் என்று.

    நம் பார்வை போலவே பிறர் பார்வை / ரசனை இருப்பதில்லை என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது ரஞ்சனிம்மாவின் இந்தக் கதை.

    பதிலளிநீக்கு
  14. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி Angelin. கீதா மேடத்துக்கு சொல்லி இருக்கும் பதிலைப் படிக்கவும்! :)

    பதிலளிநீக்கு
  16. ஆம். என்ன நேர்மாறான ரசனைகள்! நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    ஐயா

    இரசித்தேன் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. ரசனை என்பதை அனுபவிக்கும்போதே உணரமுடியும். எழுதுபவர், படிப்பவர்களிடையே வேறுபாடு இருந்தாலும் அதன் தன்மையை முழுமையாக அனுபவிக்கும்போது இரு தரப்பினரும் வெற்றி பெறுகின்றனர். தங்களின் இப்பதிவு அதனை நிரூபித்தது.

    பதிலளிநீக்கு
  19. சரியாகச் சொன்னீர்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா... நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ஒருவரின் ரசனை மற்றவருக்கு எரிச்சலாக இருக்கிறது! சிறப்பான கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  21. ஆஹா! குயிலை ரசித்துத் தேடும்பொழுது வெறுத்துத் தேடும் ஒருவர்!! வேறுபடும் ரசனைகளின் அருமையான கதை

    பதிலளிநீக்கு
  22. உங்களால் எல்லார்க்கும் பெய்த மழை.

    தொடரிகிறேன் ஸ்ரீ.

    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. என்ன செய்ய? வித்தியாசமான ரசனைகள்! நன்றி 'தளிர்' சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  24. வித்தியாசமான மனிதர்களும் கூட! நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  25. ரசனைகள் மாறுபடும் இடத்தை மிகத்துல்லியமாகக் காட்டும் அற்புதமான கதை. கதையின் வர்ணனைகள் அந்த இடத்துக்கே அழைத்துப்போவது அழகு. என்னதான் தோட்டம், பறவைகள், சூழல் எல்லாம் ஏதுவாக இருந்தாலும் அக்கம்பக்கத்தில் ஒத்த ரசனைக்குரியவர்கள் இல்லையென்றால் வசிப்பது கடினமே... பாராட்டுகள் ரஞ்சனி மேடம்.. பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  26. குயில் இனிய குரல் இன்னும் கேட்கிறது!

    பதிலளிநீக்கு
  27. மிகவும் ரசனை.
    இசை பாடும் குரல்களை கேட்பது என்றும் இனிது.

    இப்பொழுது நான் வசிப்பது கடற்கரைக்கு அண்மையில் காலையும் மாலையும் பறவைகள் இசைக்கு பஞ்சமில்லை.

    பதிலளிநீக்கு
  28. மிகவும் ரசனை.
    இசை பாடும் குரல்களை கேட்பது என்றும் இனிது.

    இப்பொழுது நான் வசிப்பது கடற்கரைக்கு அண்மையில் காலையும் மாலையும் பறவைகள் இசைக்கு பஞ்சமில்லை.

    பதிலளிநீக்கு
  29. வாவ்! என்ன அழ்கான லயிப்புடன் கூடிய கதை. மரங்களில் கூடும் பறவைகளின் சத்தம், ஏன் காக்கையின் கரைதல் கூட இனிமைதான் காலை வேளையில், இனிய சுப்ரபாதம். இந்த இனிமை ஒரு சிலருக்கு ரசிப்பு. ஒரு சிலருக்கு கடுப்பு ஹும் என்ன சொல்ல ரசனையற்றவர்கள். உலகில் அழகை ரசிக்கத் தெரியாதவர்கள். அனுபவிக்கத் தெரியாதவர்கள்.
    தன்னைச் சுற்றி இது போன்றவற்றை ரசிக்கத் தெரிந்தவர்கள் அனுபவிக்கத் தெரிந்தவர்கள் இந்த உலகில் மகிழ்வாக வாழ்பவர்கள். அப்படி மகிழ்வாக ரசித்து அனுபவித்து வாழும், தன் அனுபவைத்ததை இந்த உலககும் அனுபவிக்கட்டும் என்று கதையாய் வடித்த ரஞ்சனி சகோவிற்கு பாராட்டுகள், வாழ்த்துகள்! அருமையான கதை.! குயிலை ரசித்தோம்.

    வெளியிட்டு எங்களுக்கும் படிக்கத் தந்த எங்கள் ப்ளாகிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  30. இந்தக் கதையை ஸ்ரீராமிற்கு அனுப்பிவிட்டு சென்னை போய்விட்டேன். இந்தக் கதை வெளிவந்த விஷயமே ரொம்ப நாட்கள் கழித்துத்தான் தெரியவந்தது. உடனே பதில் எழுதும் மனநிலையில் நான் இருக்கவில்லை. அதனால் இங்கு கருத்துக்கள் சொல்லி, வாழ்த்தக்களும் தெரிவித்திருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
    எல்லோரும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
    திரு ஜீ.வி. அவர்கள் முதல்முறையாக என் எழுத்துக்களுக்கு கருத்து சொல்லியிருக்கிறார். அவரது வார்த்தைகள் ரொம்பவும் தெம்பு ஊட்டுகின்றன. இரண்டு நாட்கள் முன்பு நான் எப்போதோ எழுதி வைத்த கதைகளை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். எல்லாமே பத்திரிக்கைகளுக்கு அனுப்பு பிரசுரம் ஆகாமல் திரும்பி வந்த கதைகள்! ஜீ.வி. யின் வார்த்தைகளைப் படித்துவிட்டு அவைகளைத் திரும்ப எழுதலாம் என்று தோன்றுகிறது. நன்றி ஜீ.வி. ஸார்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!