திங்கள், 4 ஏப்ரல், 2016

திங்கக்கிழமை 160404:: சாம்பார்ப்பொடி


          போன வாரம் திங்கறகிழமை பதிவில் கருத்துச் சொன்ன நண்பர் நெல்லைத்தமிழன் "தனியாப்பொடி நான் கூட கேள்விப் பட்டதில்லைதான்.  ஆனால் இதற்காக அடுத்த வாரங்களில் பொடியாகத் தூவி விடாதீர்கள்" என்பது போலப் பின்னூட்டம் இட்டிருந்தார்.  

          நேற்று ஒரு புதிய ஐட்டம் (என்று நான் நினைத்துக் கொண்டதை) யோசித்துச் செய்ய நினைத்தால் நேரம் ஒத்து வரவில்லை.  எனவே இன்று இப்படி ஒரு பதிவு.  நெல்லைத்தமிழன் ஸார் மன்னிக்க!
 

          இந்த குழம்புப்பொடி இருக்கிறதே குழம்புப்பொடி..  அது....  வீட்டுக்கு வீடு அளவில் மாறும்.  சேர்க்கும் பொருளிலும் மாறும்.  இப்போது நான் சொல்லப்போவது பல ஆண்டுகளாய் எங்கள் வீட்டில் உபயோகிக்கும் சாம்பார்ப்(குழம்புப்)பொடியின் அளவுகள்.  எங்கள் அம்மாவின் அளவு.  

          அப்போதெல்லாம் நான்தான் அரவை மில்லுக்குப் போய் அரைத்துக் கொண்டு வருவேன்.  அரிசி முதலானவை ஜஸ்ட் லைக் தட் அவர்கள் அரைத்து, பையில் நிரப்பிக் கொடுத்ததும் வாங்கிக் கொண்டு வந்து விடலாம்.  ஆனால் இது?  அரைத்து, அங்கு ஒரு சம தளத்தில் பரப்பப்பட்டு, அங்கு அதை ஒரு கரண்டியால் நீவி விட்டு, ஆற்றி, அப்புறம் எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு எடுத்துக் கொண்டு வீடு வர வேண்டும்!  அரவை வேலை மட்டுமில்லை,  அறுவை வேலையும் கூட!

          எங்கள் வீட்டில் மசாலா சேர்க்க மாட்டோம்.  மசாலா வாசனை இல்லாமல் இருக்க, வெறும் மிளகாய் மட்டும் அரைத்த மெஷினில்தான் காத்திருந்து அரைப்போம்.  எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் வீட்டில் உபயோகிக்கும் பொடியின் அளவுதான் நிரந்தரம் என்றாலும், மற்ற அளவுகளின் வகையையும் முயற்சி செய்து பார்ப்பவர்கள் இருப்பார்கள்.  எங்கள் வீட்டுப் பொடியையும் "இது நன்றாக இருக்கிறதே... உங்கள் அளவைச் சொல்லுங்கள்" என்று கேட்டு வாங்கி உபயோகித்தவர்கள் இங்கும் உண்டு!
          
          எனவே துணிந்து எங்கள் சாம்பார்ப் பொடியின் அளவை இங்கு தருகிறேன்.  உங்கள் அளவுகளோடு மிளகு அளவு மாறலாம். மஞ்சள் அளவு கூட மாறலாம்.   
 

          நாங்கள் ரசத்துக்குக் கூட இப்போதெல்லாம் இதே பொடியைப் போட்டே செய்கிறோம்.   பொரியல் செய்யும்போதும் இந்தப் பொடியை உபயோகித்துக் கொள்கிறோம்.
 


          கீழே தந்திருக்கும் அளவு ஐந்து பேர்கள் இருக்கும் ஒரு வீட்டுக்கு நான்கு மாதங்கள் வரலாம்.


 
 
மிளகாய் வற்றல்         -    முக்கால் கிலோ
 
தனியா                            -    ஒன்றரை கிலோ
 
துவரம் பருப்பு               -      கால் கிலோ
 
கடலைப் பருப்பு           -      100 கிராம். 
 
மஞ்சள்                             -      200 கிராம்.
 
மிளகு                                -      350 கிராம் 
 
 
 
 
 
 
 
 
படங்கள்  எல்லாமே நன்றியுடன் இணையத்திலிருந்துதாங்க...
 


33 கருத்துகள்:

  1. இன்றைக்கு சாம்பார்பொடி ...
    செய்தால் நன்றாக இருக்கும்....
    செய்ய பொருள்கள் இருக்க
    செய்முறை எங்கே....

    பதிலளிநீக்கு
  2. ஆம் சாம்பார் பொடியின் அளவுகள் மாறும் தான். வெந்தயமும், சீரகமும் சேர்ப்போம். பொரியலுக்கும் இதே பொடிதான். ரசத்திற்க்கும் நானும் இதையும் கொஞ்சம் சேர்ப்பேன்.

    தம 2

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் கண்ணைக்கவருது.
    உங்கள் முறையில் ஒரு தடவை அரைத்து பார்த்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த முறையிலும் அரைப்போம்,, அது சரி அளவு கொஞ்சமா கொடுத்து இருக்க கூடாதா?
    சரி 4 மாதம் வரை,, நல்லா இருக்குமா?,,,
    அரைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் ஸ்ரீராம்...இந்த சாம்பார் பொடி ரசப்பொடி எல்லாம் அளவு வீட்டுக்கு வீடு மாறும். நான் எப்போதுமே ஒரே அளவு ஒன்று குறித்து வைத்துக் கொண்டு (அது நன்றாக வந்ததால்...) அதையேதான் செய்து வருகின்றேன் என்றாலும் வித்தியாசமான பொடிகளையும் செய்து வைத்துக் கொள்வது உண்டு. கொஞ்சமாகவாவது. (எப்போதுமே வித்தியாசமாகச் செய்யணும்னு நினைப்பேன்...மொனொடொனி போர் என்பதால்...) இதில் நான் வெந்தயம் நிறைய சேர்ப்பேன். க பருப்பும், து பருப்பும் ஒரே அளவில்...

    உங்கள் குறிப்பையும் எடுத்துக் கொண்டுவிட்டேன். திரிச்சுட்டா போச்சு (திரிச்சு எங்க ஊர் மொழி....அரைத்தல் என்பது நீர் விட்டு அரைத்தல். ட்ரை யாக செய்வதற்குத் திரித்தல் என்போமாக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சமையல் குறிப்பிலும் அரவை மில் அனுபவம் குறிப்பிட்டு சுவாரஸ்யம் கூட்டிவிட்டீர்கள் !

    சிறுவயதில் அரிசி முதல் மிளகாய் பொடி வரை மில்லுக்கு அரைக்க சென்ற அனுபவம் எனக்கும் உண்டு !... அதுவும் சில நேரங்களில் மிளகாய் அரைத்த இயந்திரத்தின் சக்கரத்தை மாற்றாமல் சாம்பார் பொடி, மல்லி போன்றவற்றை அரைத்துகொடுத்துவிடுவார் மில்காரர்... அந்த பொடிகள் தீரும்வரை வீட்டில் வாங்கி கட்டிக்கொள்ள நேரும் !

    படங்களே நாக்கை சப்புக்கொட்ட வைக்கின்றன...

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  7. கிட்டத்தட்ட இந்த அளவு தான் என்றாலும் கால் கிலோ மி.வத்தலுக்கு ஒரு கிலோ தனியா போட்டுடுவேன். 200 கிராம் விரலி மஞ்சள் கால் கிலோ து.பருப்பு, 100 கிராம் க.பருப்பு, வெந்தயம் 50 மிளகு 200 கிராம் என்று போடுவேன். நானும் ரசத்துக்கு இதே பொடிதான். மற்றக் காய்கள், கூட்டுகள், சப்பாத்திக் கூட்டுகள் என்று பெரும்பாலும் இது தான். கரம் மசாலா சேர்க்கும்போது மட்டும் மி.பொடி கொஞ்சமாகப் போட்டு இந்தப் பொடியை தனியாப் பொடிக்குப் பதிலாக ஒரு ஸ்பூன் போடுவது உண்டு. :)

    பதிலளிநீக்கு
  8. எங்க பக்கமும், (மதுரை) இதைத் திரிப்பது என்றே சொல்வதுண்டு. கல்யாணம் ஆகி வந்து சொல்லிக் கொண்டிருந்தபோது புக்ககத்தில் செய்த கிண்டலில் வலுக்கட்டாயமாக மாற்றிக் கொள்ள நேர்ந்தது. அதன் பின்னர் அவங்க பக்கம் பேசுகையில் அரைத்து விட்டு, எங்க பக்கம் பேசும்போது திரித்துக் கொண்டிருந்தேன். இணையத்தில் வந்ததும் பொதுவான மொழியாக இந்த அரைத்தலையே எடுத்துக் கொண்டு விட்டேன். :)

    பதிலளிநீக்கு
  9. அட? தொடரப் போடாமல் இருந்துட்டேனே!

    பதிலளிநீக்கு
  10. திருமதி.நாகேஸ்வரி சொல்லியிருப்பது போல அளவுகளை சிறிய அளவில் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். நான் செய்யும் சாம்பார்ப்பொடியில் மிளகு அளவு குறைவாக இருக்கும். இலேசாக வறுத்து அரைப்பேன். சிறிது வெந்தயம், சிறிது சீரகம் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  11. புகைப்படங்கள் காணும் பொழுது நாவில் எச்சில் ஊறுகின்றது

    பதிலளிநீக்கு
  12. எங்க சாம்பார்ப் பொடி வேறவிதம்.
    தனியா முக்கால் கிலோ,
    கடலைப் பருப்பு அரைக் கிலோ
    து.பருப்பு அரைக்கிலோ,
    மிளகு 200 க்ராம்,
    மெந்தியம் 200 கிராம், ஜீரகமும் உண்டு.
    மிளகாய் வற்றல் அரைக்கிலோ தான்.
    எல்லாவற்றையும் வறுத்து, தனிமஞ்சள் பொடி
    ஒரு 300 க்ராம் ஸேர்த்துவிடுவேன்.

    பெண் ,மாப்பிள்ளை,பேரன் களுக்குப் பிடித்து இருக்கிறது.
    எல்லா கலவைக்கும் இது உபயோகமாகும்.

    பதிலளிநீக்கு
  13. பொதுவாய் மி.வத்தல் போடுவதில் இருந்து மூன்று மடங்கு தனியா சேர்க்கையில் பொடி வாசனையாக இருப்பதோடு ரசமும் தெளிவாக வரும். என்றாலும் துவரம்பருப்பும், மிளகும் சேர்ப்பதில் இருக்கிறது ரசத்தின் ருசி, தெளிவு எல்லாம். மிளகும் துவரம்பருப்பும் ஶ்ரீராம் சொன்ன அளவுக்கோ, நான் சொன்ன அளவுக்கோ போட்டால் ரசம் தெளிவாக வரும் என்பதோடு சாம்பார் வைக்கையில் ரொம்பக் கெட்டியாக ஆகாது! கடலைப்பருப்பு நிறையச் சேர்த்தால் குழம்பு, ரசம் எல்லாமும் கெட்டியாக இருக்கும். ஆனால் அவரவர் வீட்டு ருசியும் இருக்கு இதிலே! அவரவருக்கு எது பழக்கமோ அது தான்! நாங்க சாம்பார்ப் பொடினே செய்ய மாட்டோம். ரசப்பொடி தான். அதிலேயே வற்றல்கள் போட்டு வைக்கும் வத்தக்குழம்பு, மற்ற வெறும் குழம்புகள், அடியில் தாளித்துச் செய்யப்படும் பருப்புக் குழம்புனு எல்லாத்துக்கும் இந்தப் பொடியைப் பயன்படுத்துவேன். மற்றக் கறிகள், கூட்டுகளுக்கும் இந்தப் பொடியே சரியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. இங்கே குழம்புப் பொடி அரைக்க மிஷின் இல்லை! கரோல் பாக்-ல் முன்பு இருந்தது. இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் பாக்கெட் சமாச்சாரம்! அதனால் ஊரிலிருந்து வரும்போது எடுத்து வந்துவிடுவேன்!

    பதிலளிநீக்கு
  15. வெறும் அளவு கொடுத்துள்ளீர்கள். செய்முறை எங்கே? இதை வெறும்ன வெயிலில் காயவைத்து அப்படியே அரைக்க வேண்டுமா? இது அரைத்தபின்பு, அரவை மில்லில் வரும் பொடி மூக்கில் நுழைந்து தும்மல், ஜலதோஷம் போன்றவற்றை வரவைக்கும் அனுபவத்தையும் எழுதியிருக்கலாம்.

    இதை இப்போது 11.40க்குப் படிக்கிறேன். இணைத்துள்ள படமும் சேர்ந்து பசிக்க ஆரம்பித்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  16. எங்கள் வீட்டு சாம்பார் பொடியும் இது போல தான், கொஞ்சம் சீரகம்,
    வெந்தயம், சேர்ப்போம்.
    பருப்பைக் குறைத்து மிளகாயின் அளவை ஏற்றுவோம்!

    பதிலளிநீக்கு
  17. நன்றி நண்பர் அஜய் சுனில்கர் ஜோசப். என்ன செய்முறை? வெயிலில் காயவைத்து அரைத்து விடவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  18. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  19. நன்றி கோமதி அரசு மேடம். படங்களுக்கு இணையத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. நான்கு மாதங்களுக்கு நன்றாகவே இருக்கும். அளவைக் குறைத்து அரைத்து விட வேண்டியதுதான்! நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி கீதா. திரிப்பது என்று நங்கள் கூடச் சொல்வோம். இந்தப் பதிவு போட்டதால் ஒவ்வொரு நண்பர்கள் வீட்டிலும் என்னென்ன மாறுதல்களுடன் சாம்பார்ப்பொடி அரைக்கிறார்கள் என்று தெரிகிறது. வெந்தயம் போடுவது நல்லதுதான். ஏனோ நாங்கள் அதைச் சேர்த்ததில்லை. ஒருமுறை முயற்சிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி சாம். நாங்கள் குறிப்பாகவே மிளகாய் அரைத்த உடன்தான் அரைக்கக் கொடுப்போம். வேறு வாசனை எதுவும் வராது பாருங்கள்! படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது நண்பரே.. உங்கள் பதிவை அது வெளியான உடனேயே படித்துப் பின்னூட்டமும் இட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி கீதா மேடம். நாங்கள் கூட விரளி மஞ்சள் கால் கிலோதான் போட்டுக் கொண்டிருந்தோம். மஞ்சள் வாசனை அதிகமாக இருப்பது போல feel செய்ததால் குறைத்து விட்டோம்!

    பதிலளிநீக்கு
  24. நன்றி மனோ சாமிநாதன் மேடம். நாங்கள் மிளகு கொஞ்சம் கூடவே வைப்போம். //திருமதி.நாகேஸ்வரி சொல்லியிருப்பது//
    அது மகேஸ்வரி மேடம்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி வல்லிமா. பருப்பு அவ்வளவு கூடப் போட்டால் கொஞ்சம் கொழ கொழ என்று வராதோ? சீரகம் வேண்டுமானால் அவ்வப்போது தனியாகச் சேர்க்கலாம் என்று அதை அரைக்கும் லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  26. மீள் வருகைக்கும் டிப்ஸ்களுக்கும் நன்றி கீதா மேடம். சாம்பார்ப்பொடி என்று செய்து அதைத்தான் நாங்கள் ரசத்துக்கும் போடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி நண்பர் நெல்லைத் தமிழன். ஆமாம், நீங்கள் சொல்வது சரி. காய வைத்து அரைத்து வைத்து விட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  28. சிறந்த செய்முறை வழிகாட்டல்

    பதிலளிநீக்கு
  29. கீதா மேடம் -- அந்தக் காலத்தில் ('நான் 70களில் சின்னப் பையனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன்) வீடுகளில் திரிகை என்றும், உரல் என்றும் இரண்டு உண்டு. திரிகையில், நடுவில் அரிசியைப் போட்டு, கைப்பிடியைச் சுற்றிக்கொண்டே இருந்தால், குருணையாக சைடுகளில் விழும். இந்தத் திரிகையை உபயோகித்து எல்லாவற்றையும் அரைத்துவிடுவார்கள். பின்பு, அரவை மில்கள் வர ஆரம்பித்ததும், திரிப்பதை விட்டுவிட்டு, மில்லில் அரைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரவை மில் ஆரம்பக் காலத்தில், அரிசி, கோதுமை போன்றவற்றிற்குத்தான் இருந்தது. பின்பு, அருகிலேயே, சின்னதாக, மிளகாய், குழம்பு பொடி போன்றவை அரைப்பதற்கும் ஒரு மிஷின் வந்துவிட்டது. இதைத் தவிர, இன்னொரு சின்ன மிஷின், சர்க்கரையை (வெள்ளை) அரைத்து பவுடராக்க இருந்தது. அதனால, குழம்புப்பொடி, ரசப்பொடி, மிளகாய் போன்றவற்றை அரைத்துக்கொண்டு வருவதை, திரிப்பது என்றும், கோதுமை, அரிசி போன்றவற்றை மாவாக்குவதை, அரைப்பது என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். "திரிப்பதை"ப் பார்த்திராத மக்கள், "அரைப்பது" என்ற பதத்தை உபயோகிக்கிறார்கள். உரலில், தோசை மாவு, இட்லி மாவு போன்றவற்றைத் தயாரிப்பதை, அரைப்பது என்று சொல்வார்கள்.

    இதுபோல், எங்க அம்மா, வெண்டைக்காயை, தேங்காய்/பச்சைமிளகாய்/மோர் விட்டுச் செய்வதை, கிச்சடி என்றும், மாங்காய் போன்றவை போட்டு இனிப்பாகச் செய்வதைப் பச்சடி என்றும் சொல்வார்கள். எனக்குத் திருமணம் ஆனபின், என் பாஸ், கிச்சடி என்று சொல்லாதீர்கள்; வெண்டைக்காய்ப் பச்சடிதான் என்று சொல்லிச் சொல்லி என் பழைய தமிழை மாற்றிவிட்டார்கள். இப்போ "கிச்சடி" என்று சொன்னால், எல்லோரும் காய் போட்ட உப்புமாவைத்தான் குறிப்பிடுகிறார்கள். இதனை என் பால்ய காலத்தில் (அல்லது 25 வயது வரை) கேள்விப்பட்டதேயில்லை. இது வட இந்தியாவிலிருந்து வந்த டிபன் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. ம்... ஊரில் சொல்லுவோம்...
    அவர்கள் செய்து பார்க்கட்டும்...
    அடுத்த மாதம் வரும்போது சாப்பிட்டுக்கலாம்...
    எங்க வீட்டு மேலாளர் மதுரை அம்சவல்லிபவன் சமையலில் கலக்குபவர்....
    உங்க சாம்பார் பொடி அரைத்து சமைக்கச்சொல்லலாம்...

    பதிலளிநீக்கு
  31. //"திரிப்பதை"ப் பார்த்திராத மக்கள், "அரைப்பது" என்ற பதத்தை உபயோகிக்கிறார்கள். உரலில், தோசை மாவு, இட்லி மாவு போன்றவற்றைத் தயாரிப்பதை, அரைப்பது என்று சொல்வார்கள்.//

    திரிப்பதைப் பார்த்திராத மக்கள்னு சொல்ல முடியாது! இது ஊருக்கு ஊர் மாறுபடும் ஓர் வழக்குச் சொல். ஏனெனில் தஞ்சை ஜில்லா முழுவதிலும் கல் உரல், இட்லி, தோசைக்கு அரைக்க, மர உரல் அவல், பருப்பு வகைகள் குத்துவதற்கு, அம்மி, தினசரி சமையலுக்கு அதைத் தவிரவும் கல் இயந்திரம் ஆகியன உண்டு. இந்தக் கல் இயந்திரத்தில் உப்புமாவுக்கு உடைப்பது, மற்றப் பல ரவைகள் போல் உடைப்பது செய்வது உண்டு. இதைத் திரிப்பது என்றே சொல்வார்கள். என் மாமியார் வீட்டிலும் அக்கம்பக்கங்களிலும் கூடுதலாக இந்தக் கல்யந்திரத்தில் உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு தோல் நீக்கவும் பயன்படுத்துவார்கள். அவங்க எல்லா மாவையும் "அரைக்க"த் தான் செய்வாங்க. இங்கே மதுரை, திருநெல்வேலிப் பக்கமோ ஈரப்பசை இருக்கும் மாவைத் தான் அரைப்போம். உலர்ந்த மாவுகளைத் திரிப்போம். :) இது வட்டார வழக்குச் சொல்! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!