புதன், 20 ஏப்ரல், 2016

வைகையில் 3 கேரக்டர்கள் :: தொடர்ச்சி - 3


          அந்தப் பெண் எங்களுக்கு எதிரே வந்து அமர்ந்தாலும் அவள் அந்த இருக்கைக்கு உரியவள் அல்ல.  எங்களுக்குப் பின் வரிசையில் அவளுக்கு இடம் கிடைத்திருந்தது.  அங்கு அவளுடன் அமர வேண்டிய மிச்ச ஐந்து பேர்களும் இளைஞர்கள்.  கண்களில் குறும்பை சற்றுக் கூடுதலாகவே வைத்து வேறு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்த காரணத்தினால், அவள் அந்த இருக்கையைத் துறந்து எங்கள் எதிரே அமர்ந்தாள்.  ஆனால் அவர்கள் பின்னர் இந்தப் பெண்ணைத் தாண்டிச் செல்வது போல, அங்கு தயங்கிநின்று பேசுவது போல தங்கள் அலைபேசியில் செல்ஃபி எடுத்துச் சென்றதை இந்தப் பெண் பேச்சு சுவாரஸ்யத்தில் கவனிக்கவில்லை.

          அதற்கு அவள் முன்னதாக நாங்கள் உள்ளிட்ட சக பயணிகளிடமும், பின்னர் பயணச் சீட்டுப் பரிசோதகரிடமும் ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும்,  தான் இருக்கை மாறியதற்கான காரணத்தைப் பற்றிச் சொல்லும் போது மட்டும் வார்த்தைகளால் சொல்லாமல், கண்களால் பேசினாள்.  "அவர்கள்" சண்டைக்கு வந்து விடக் கூடாதே என்ற எச்சரிக்கைக் காரணமாக இருக்கலாம்.  இந்த இருக்கை மாறுதலுக்குக் காரணம் சரிதான் என்று அந்தப் பக்கத்து இருக்கைப் பிரசங்கப் பெரியவர் அந்தப் பெண்ணுக்கு அமோக ஆதரவளித்துக் கொண்டிருந்தார்.  டிக்கெட் பரிசோதகர் ஆட்சேபிக்கவே இல்லை என்றாலும், அவரிடம் இந்த SRMU பெரியவர் நீண்ட விளக்கங்கள் அளித்துக் கொண்டிருந்தார்!  அவர் பிரசங்கத்துக்கு ஒரு கூடுதல் தகவல் கிடைத்த காரணமாயிருந்திருக்கலாம்!

          ஒரு ஹேண்ட்பேக் மட்டும் வைத்திருந்ததால் அவளுடன் வேறு யாரேனும் வந்திருக்கக் கூடும் என்று தோன்றியது.  அவர்களிடம் இவள் லக்கேஜும் சேர்ந்து இருக்கலாம்.  அவள் கண்கள் யாரையோ தேடும் பாவனையில் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டும் இருந்தது.  பயணத்தில் படிக்க நான் புத்தகமும் கொண்டு போயிருந்தேன் தான்.  ஆனால்,பயணத்தில் புத்தகங்கள் படிக்க முடிவதில்லை.  அதுவும் வைகையின்  நெருக்கமான இருக்கைகளில் அமர்ந்து புத்தகம் படிப்பது முடியாது, அது கொடுமை என்பதால்தான் சக பயணிகளைப் படிக்கிறோம்!

          கொஞ்சநாட்களுக்கு முன்னால் எழுதிய தொடர் பயணப் பதிவு நினைவுக்கு வருகிறது. பயணத்தில் என்ன செய்வீர்கள் என்கிற வகை வகையான கேள்விகளுக்கு வக்கணையாக பதில் சொன்னாலும், புத்தகம் படிக்காமல், ஜன்னலோர இருக்கைக் கிடைக்காததால் காற்றுமின்றி, வேடிக்கைப் பார்க்க வழியுமின்றி  வலப்பக்கம், இடப்பக்கம் இருவருக்கிடையில் இடுங்கி அமர்ந்து, அந்தத் தொடர் பதிவைப் பற்றியும் எண்ணிய படி பயணம் செய்யத்தான் முடிகிறது.

          பாட்டுக் கேட்கும் மூட் இல்லை.  முதல் காரணம், செல்லில் சார்ஜ் தீர்ந்து விடும் அபாயம்.  இரண்டாவது காரணம்  வெயிலுக்கு வெறும் பயணமே தலைவலி கொடுக்கும்.  காதில் 'ஹை டெசிபலி'ல் (எவ்வளவு குறைத்து வால்யூம் வைத்துக் கொண்டாலும்) பாட்டு வேறு கேட்டால் தப்பிக்க முடியாமல் கட்டாயத் தலைவலிதான், வாந்திதான்!  எனவே, வேறு வழியின்றி சக பயணிகளைப் படிப்பதுதான் இயல்பாகவே நடக்கும் வேலை!

          ஆனால் எனக்கு இவ்வளவு சுவாரஸ்யமாக விஷயதானம் செய்தவர்களுக்கு நான் பதில் மரியாதை செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்!   நான் அவர்கள் பார்வையில் எப்படி இருந்திருப்பேன் என்றும் எண்ணிப் பார்க்கிறேன்.  ஒரு உம்மணா மூஞ்சியாக, கவனத்தைக் கவரும் எந்த செயலும் செய்யாதவனாக,கவனத்தைக் கவரும் உருவமும் இல்லாதவனாக இருந்திருப்பேன்.  சாப்பிடும் பண்டங்கள் வாங்கிச் சாப்பிடும்போது சில கண்கள் என்னை கவனித்திருக்கலாம், அவ்வளவுதானென்று தோன்றுகிறது.  நான் ஒரு சுவாரஸ்யம் இல்லாதவன்!

          டிக்கெட் பரிசோதகர் வந்து சென்றபின் அந்தப் பெண் இறுக்கம் தளர்ந்தாள். அலைபேசியைக் கையில் எடுத்தாள்.  வண்டி தாம்பரம் தாண்டுவதை அறிவித்தாள்.  வீட்டுக்காய் இருக்கலாம்.  அதை கவனமாக தொடர்பைத் துண்டித்து உள்ளே வைத்தவள், இன்னொரு அலைபேசியை எடுத்தாள்.  இந்த இரண்டாவது அலைபேசி உரையாடல்தான் முக்கியமானது.  கையை ஆட்டி ஆட்டி, எதிரே ஆள் இருப்பது போன்ற பாவனையில்,  கண்களை உருட்டி உருட்டி அவள் பேசியது ஒரு சுவாரஸ்யம் என்றால், அதுவே எனக்கு அவளைக கவனிக்க வசதியும் செய்து கொடுத்தது.  எப்படி என்றால் கையை அதிகப் படியாக ஆட்டி எக்ஸ்ப்ரஷன் காட்டி பேசும்போதெல்லாம் கவனம் ஈர்க்கப் பட்டது போல அவளைக் கவனிக்க முடிந்தது!   ஹிஹிஹி...

          இப்போது இன்னொரு அலைபேசி அழைத்தது.  அதை எடுத்து அட்டெண்ட் செய்தாள். அட, மூன்றாவது அலைபேசி.  இது அலுவலகம் சம்பந்தப் பட்டது என்று தெரிந்தது.  இந்த இரண்டும் ஆண்ட்ராய்ட் வகை அலைபேசி.   வீட்டுக்குப் பேசியது நோக்கியா பேசிக் மாடல் போலத் தெரிந்தது!  திருச்சியில் அவள் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன் பேசிக்கொண்டே எங்கள் கம்பார்ட்மெண்ட் ஜன்னலுக்கு சர்ப்ரைஸ் விசிட் வந்து விட,  செல்லக் கோபங்கள், பொய்த் திட்டல்களுக்குப் பிறகு இருவரும் கதவுக்கு அருகே நின்று திண்டுக்கல் வரை பேசிக் கொண்டே வந்தனர்!  எனக்கு நான் எழுதிய சுசீ.. கதை நினைவுக்கு வந்தது!  அங்கு பேசிக் கொண்டிருக்கும்போதும் அவ்வப்போது வேறு யாருடனோவும் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

          மறுபடி இருக்கைக்கு வந்தவள் ஒரு அலைபேசியில் காதில் இயர் ஃபோன் மாட்டி, பாடல் கேட்கத் தொடங்கினாள்.  எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், எப்படி அந்த அலைபேசிகளில் பேட்டரி நிற்கிறது என்பது முதல் ஆச்சர்யம்.  இரண்டாவது ஆச்சர்யம், எவ்வளவு ரூபாய்க்கு டாப் அப் செய்திருப்பாள்! (ரொம்ப முக்கியம்!!)  பாடலுக்கு நடுவிலேயே 'அவனுடன்' (தான் இருக்க வேண்டும்) பேச்சும் தொடர்ந்தது.  கொடைரோடு வந்ததும் சிறிய ஃபோனை எடுத்து (வீட்டுக்கு) தான் மதுரையை நெருங்கி விட்டதை அனௌன்ஸ் செய்தாள்.  மதுரைச் சந்திப்புக்குள் வைகை நுழையும்போது எழுந்து காணாமல் போனாள்.


                                                                                                                                                       [நாளை....]

28 கருத்துகள்:

 1. ஹூம், ஒரு அலைபேசிக்கு வர பணத்தைக் கட்டுவதற்கே முழி பிதுங்குது. இதிலே மூன்று நான்கு அலைபேசிகளா? லக்ஷத்தில் சம்பாதிப்பாங்க போல! இங்கே என்னோட அலைபேசியிலே சில எஸ்.எம்.எஸ்கள் வந்தால் அதுக்குப் பணம் கழிக்கிறாங்க. நான் பேசாமலேயே பணம் தீர்ந்துடுது! இவ்வளவெல்லாம் பேசினால் தினம் தினம் ரீ சார்ஜ் செய்தாகணும் போல! :) நமக்கெல்லாம் கட்டுப்படி ஆகாதுங்கோ!

  பதிலளிநீக்கு
 2. நண்பரே ரீச்சார்ஜ் செய்வது பெரிய விஷயமே இல்லை....
  ரிலைன்ஸ் நெட்வொர்கில்
  297 ரீச்சார்ஜ் செய்தால்....
  தமிழ்நாடு அனைத்து அழைப்புகளும் இலவசம். ....

  சுவாரசியமான பயணம் ....
  வாழ்த்துகள் நண்பரே...
  அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு
 3. அந்தப் பெண், இந்தப் பெண் இவர்களெல்லாம் யாரென்று தெரிந்து கொள்ள முதல் பகுதிக்குப் போக வேண்டியிருந்தது. அங்கு போனாலும் வகிடு எடுக்கும் இடத்தில் முன்முடியை பரத்தி விட்டுக் கொண்டிருந்த இந்தப் பெண் தான் தெரிந்தார். இந்த மாதிரி தொடர்களில் முன் பகுதியில் விட்ட இடத்தைக் கோடி காட்டுவதை அடுத்த பகுதியின் ஆரம்பமாகக் கொள்ளலாம். சாண்டில்யன் நினைவு வருகிறது. அவர் தொடர்களில் இதை மறக்காமல் செய்வார்.

  வைகையின் முன் பகுதிகளுக்கு விஜயம் செய்ததில் இன்னொன்றும் தெரிந்தது. ஆரம்பத்த தொடரின் தலைப்பை இரண்டாவது பகுதியிலேயே சுருக்கி விட்டீர்களென்று. 'ஒரு பயணம்.. அதில்' மிஸ்ஸிங். இல்லையா?

  இதற்கிடையில் எனக்கு இன்னொரு சந்தேகம் வேறே. சுபா மாதிரி கெளதமனும் நீங்களும் மாற்றி மாற்றி எழுதுகிறீர்களோ என்று.

  பதிலளிநீக்கு
 4. #எனக்கு நான் எழுதிய சுசீ.. கதை நினைவுக்கு வந்தது! #
  லிங்கை இணைத்து இருக்கலாம் ,நாலு பார்வையாவது சுசீ மேல் விழுந்திருக்கும் :)

  பதிலளிநீக்கு
 5. தங்களின் இந்தப் பயணக்கதை படிக்க மிக மிக சுவாரஸ்யமாக உள்ளது.

  // அட, மூன்றாவது அலைபேசி. //

  மூன்று என்ன, முப்பது கூட வைத்திருப்பார்கள். :)

  //எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், எப்படி அந்த அலைபேசிகளில் பேட்டரி நிற்கிறது என்பது முதல் ஆச்சர்யம். இரண்டாவது ஆச்சர்யம், எவ்வளவு ரூபாய்க்கு டாப் அப் செய்திருப்பாள்! (ரொம்ப முக்கியம்!!)//

  இந்த எல்லா ஏற்பாடுகளும் அந்த அவளின் ஃப்ரண்ட்தான் செய்துகொடுத்திருப்பார். அதிலெல்லாம் நம்மாளுங்க நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு ஹெல்ப் செய்யத் தயாராக இருப்பார்கள் எனக் கேள்விப்படுகிறேன். :)

  தொடரினைப்படிக்க மிகுந்த ஆவலுடன் .......

  பதிலளிநீக்கு
 6. ஹஹஹ் சுவாரஸ்யமான அனுபவம்தான்...அந்தப் பெண்...ம்ம் இப்போதெல்லாம் வீட்டுக்குத் தனி, காதலுக்குத் தனி ஆஃபீஸ் ஃபோன் என்றுதான் யுவதிகள்...ம்ம்ம்ம்

  ( கீதா: உங்களை யாரும் கவனிக்கவில்லை என்று வருத்தமோ?!ஹஹஹ் சரி அப்படியே கவனித்தாலும் பதிவராக இருந்தால் அவரும் பதிவார்..இல்லை என்றால் எப்படி உங்களுக்குத் தெரியப் போகிறது கவனித்தார்களா இல்லையா என்று..சரி அதற்காகவே பதிவர்கள் யாராவது உங்களுக்குத் தெரியாமல் பயணம் செய்ய வேண்டும்..ஹிஹிஹி...)

  அது சரி மெசேஜ் வந்தாலும் சார்ஜ் கழிக்கப்படுகிறதே!! எப்படி என்று தெரியவில்லை...ஏன் என்று தெரியவில்லை..பகற்கொள்ளை...தொடர்கின்றோம்..

  பதிலளிநீக்கு
 7. இப்பொழுது சூழ்நிலையில் செல்போண் இல்லாமல் வாழவே முடியாதோ என்றுதான் தோன்றுகின்றது.

  பதிலளிநீக்கு
 8. பேட்டரி எப்படி நிற்கிறது...ஆச்சரியமாகத்தான் இருக்கு...பேசாமலே பாட்டரி நிற்கமாட்டேன்கிறது....காசும் தான் ஹிஹிஹி...சுவாரஸயத்துடன் வருகிறோம்....தொடர்ந்து....

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு வகையான உறவுக்கும் ஒவ்வொரு அலைபேசி
  தொடர்கிறேன் நண்பரே
  நன்றி
  தம =1

  பதிலளிநீக்கு
 10. சுவாரஸ்யமில்லாத ஸ்ரீராம். ஹ்ம்ம். ரொம்பத்தான் அடக்கம். சகிக்கவில்லை மா.
  மாமாவும் பாஸும் ஒண்ணும் கவனிக்கவில்லையா.
  ஒரு பெரிய கதையே நடந்திருக்கிறதே.

  பதிலளிநீக்கு
 11. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. அஜய் வேற மாதிரி சொல்லி இருக்கார் பாருங்க.. நாம் எல்லாம் ஒரு நெட்வொர்க்கில் இணைப்பு வாங்கினால் அப்புறம் மாறுவதே இல்லை! அதனால் மற்ற நெட்வொர்க் காரர்கள் தரும் வசதிகள் தெரிவதில்லை! எஸ் எம் எஸ் க்குக் கூட ஒரு பேக்கேஜ் வைத்திருக்கிறார்கள். மாதம் இவ்வளவு என்று பணம் கட்டி விட்டால் இத்தனை மெசேஜ் இலவசம் என்று உண்டு!

  பதிலளிநீக்கு
 12. நன்றி நண்பர் அஜய். ரிலையன்ஸ் போன்ற நெட் வொர்க்குகளில் அவ்வளவாக டவர் கிடைக்காது என்று சொல்வார்களே...

  பதிலளிநீக்கு
 13. வாங்க ஜீவி ஸார். தொடர்ந்து எழுதி வருவதால் முன் பகுதிகளின் சுட்டி தரவில்லை. நீங்கள் தவறாமல் எல்லாப் பதிவுகளும் படித்து விடுகிறீர்கள், பின்னூட்டம்தான் போடுவதில்லை என்று நினைத்திருந்தேன்! சில பதிவுகளை நீங்கள் படிப்பதில்லை என்று இன்றுதான் தெரிந்தது!! முன்பதிவுச் சுருக்கம் தந்தால் இன்னும் சில வரிகள் நிரம்பலாம்தான். தலைப்பை ஒரே மாதிரி வைத்தால் பழைய பதிவுகளுடன் குழப்பம் வருகிறது. அதேதானோ இது என்று தோன்றி படிக்காமல் விட்டு விட்டால்....?

  இந்தத் தொடர் நான் மட்டும்தான் எழுதுகிறேன். கௌதமன் கை இல்லை. வேறு ஏதாவது பதிவுகள் எழுதிக் கை கொடுக்க நானே அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 14. சுசீ... கதைக்கு இணைப்பு தந்துள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் நண்பர் பகவான்ஜி. இனி கொடுத்தால் என்ன, கொடுக்கா விட்டால் என்ன! முக்கால் வாசிப் பேர்கள் படித்து முடித்து விட்டார்கள்!

  :( :(

  பதிலளிநீக்கு
 15. //தங்களின் இந்தப் பயணக்கதை படிக்க மிக மிக சுவாரஸ்யமாக உள்ளது.//

  நன்றி வை. கோபாலகிருஷ்ணன் ஸார். தன்யனானேன்!

  //இந்த எல்லா ஏற்பாடுகளும் அந்த அவளின் ஃப்ரண்ட்தான் செய்துகொடுத்திருப்பார். அதிலெல்லாம் நம்மாளுங்க நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு ஹெல்ப் செய்யத் தயாராக இருப்பார்கள் எனக் கேள்விப்படுகிறேன். :)//

  ஆமாம் ஸார்... அப்படித்தான் செய்கிறார்கள் என்று நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

  //தொடரினைப்படிக்க மிகுந்த ஆவலுடன் .......//

  நன்றி.... நன்றி... இதோ நாளைக்குக் காலை ஆறு மணிக்கு அடுத்த பகுதி!

  பதிலளிநீக்கு
 16. நன்றி தில்லையகத்து கீதா . இனி என் பின்னால் யாராவது தொடர்கிறார்களா என்று நான் கவனமாகக் கண்காணித்துக் கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும்! ஹா.. ஹா... ஹா...!

  மெசேஜ்க்கு pack வைத்திருக்கிறார்களே.. அதைக் கட்டினால் இலாபமாகலாம்!

  பதிலளிநீக்கு
 17. உண்மைதான் நண்பர் கில்லர்ஜி... அதுவும் ஸ்மார்ட் ஃபோன் இல்லாமல் வாழ முடியாது என்றுதான் தோன்றுகிறது.... - கீதா சாம்பசிவம் மேடம் தவிர!!!!!!!!

  பதிலளிநீக்கு
 18. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

  பதிலளிநீக்கு
 19. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 20. //சுவாரஸ்யமில்லாத ஸ்ரீராம். ஹ்ம்ம். ரொம்பத்தான் அடக்கம். சகிக்கவில்லை மா.//

  ஹா... ஹா... ஹா... வல்லிம்மா.. ரயிலில் என்னை யாருக்குத் தெரியும்? நான் அவர்கள் செய்தது போல கவனத்தைக் கவரும் வகையில் ஏதும் செய்யவில்லை என்பதைச் சொன்னேன். மற்றபடி உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்பதால் நீங்கள் அப்படிச் சொல்லி இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்!

  //மாமாவும் பாஸும் ஒண்ணும் கவனிக்கவில்லையா.//

  எல்லோரும் சேர்ந்துதான் ரசித்துக் கொண்டிருந்தோம்!

  பதிலளிநீக்கு
 21. அட..மூனு போனா... அவ்வளவு அலப்பரையிலும் சார்ஜ் நிற்கிறதா... எப்பிடி..???

  பதிலளிநீக்கு
 22. அதுதானே எனக்கும் ஆச்சர்யம்! நன்றி நண்பர் வலிப்போக்கன்.

  பதிலளிநீக்கு
 23. நீங்களும் இயர் ஃபோன் மாட்டிக் கொண்டிருந்தால் அவள் என்ன பேசினாள் என்பதைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்ன பேசினாள் என்பதுதானே சுவாரசியம் அதுவும் கைகளை ஆட்டி ஆட்டிப் பேசியது தெரிந்தால் இன்னும் சுவாரசியம்

  பதிலளிநீக்கு
 24. ரசிச்சு எழுதியிருக்கீங்க ஶ்ரீராம் !

  பதிலளிநீக்கு
 25. மூணு அலைபேசியா... நம்மனாலே ஒண்ணை வச்சே மெயின்டைன் பண்ண முடியலை....
  ஹி... ஹி....

  பதிலளிநீக்கு
 26. //சில பதிவுகளை நீங்கள் படிப்பதில்லை என்று இன்றுதான் தெரிந்தது!! //
  அப்படியில்லை, ஸ்ரீராம். இந்தப் பதிவு மூன்று பகுதிகள் தானே?.. இந்தப் பின்னூட்டம் போடுவதற்கு முன் கூட 'இந்தப் பெண்ணையும், அந்தப் பெண்ணையும்' தெரிந்து கொள்வதற்காக மீண்டும் மீண்டும் மூன்று பகுதிகளையும் படித்தேன். இருந்தாலும் ஏனோ அந்தப் பெண்ணைத் தெரிந்து கொள்ள முடியவில்லை!

  முன் பதிவுச் சுருக்கம் தர வேண்டும் என்று சொல்ல வில்லை. :)) முன்பகுதியில் விட்ட இடத்தைத் வாசகர் தெரிந்து கொள்கிற மாதிரி அடுத்த பகுதியில் ஆரம்பத்தில் இழுத்துக் கொண்டு வந்து எழுத வேண்டும்.

  பதிலளிநீக்கு
 27. //எப்படி என்றால் கையை அதிகப் படியாக ஆட்டி எக்ஸ்ப்ரஷன் காட்டி பேசும்போதெல்லாம் கவனம் ஈர்க்கப் பட்டது போல அவளைக் கவனிக்க முடிந்தது! ஹிஹிஹி...// cutest lines! :D :D :D

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!