புதன், 27 ஏப்ரல், 2016

பாஹேவின் மறைவும் நண்பர்களின் தோள் அணைப்பும்..எவ்வளவு வயதானாலும், அம்மா அப்பா இருவரில் ஒருவரையோ இருவரையுமோ இழப்பது என்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது.  அப்பா அம்மா இருவரில் முதலில் யார் மறைவோ, அந்த முதல் இழப்பு தரும் சோகம் இரண்டாவது இழப்பில்,  முதலின் அனுபவத்தில், அனுபவம் தரும் பக்குவத்தில் சமன்படுத்திக் கொள்ள உதவுகிறது -  ஓரளவு.

எனக்கு அம்மாவிடம்தான் ஒட்டுதல் அதிகம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  அம்மா மறைந்தபோது வாழ்க்கையின் அர்த்தத்தில் பாதி முடிந்ததாகத் தோன்றியது.  அப்பாவும் மறைந்ததும் ஏதோ துணை இல்லாமல் நிற்பது போலத் தோன்றியது.  ஆனாலும் இது தற்காலிகம்.  காலம் எந்தச் சோகத்தையும் ஆற்றும்.  

யாரிடமும் இல்லாத நெருக்கம் அல்லது உரிமை அம்மா அப்பாவிடம் மட்டுமே நமக்கு இருக்கும்.  உரிமையுடன் எதுவும் கேட்கலாம்.  பேசலாம்.  அவர்களைப் பற்றி நினைக்கும்போதும், பேசும்போதும் நாம் எந்த வயதிலும் குழந்தைகளாகவேதான் இருக்கிறோம், உணர்கிறோம்.  டெல்லிக்கு ராஜாவானாலும்...

இனி நம்மை குழந்தைகளாகப் பார்க்க யாரும் இல்லை என்கிற எண்ணம் வருகிறது.


85 வயது என்பது சிறிய வயது இல்லைதான்.  ஆனாலும் 'இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் இருந்திருக்கலாம்' என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.  பேராசை.  


இரண்டு வருடங்கள் கடந்ததும் அடுத்த எக்ஸ்டென்ஷன் ப்ரேயரை அப்போது வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தோம்.  'சொல்லுகிறேன்' காமாட்சி அம்மா இது குறித்து அழகாக பேசினார்கள்.  கொஞ்சம் தெளிவு வந்தது.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் அப்பா.'தூறல்கள்' புத்தகத்தைப் படித்து, முன்னரே அப்பாதுரை, ராமலக்ஷ்மி, கீதா சாம்பசிவம் மேடம்,  தில்லையகத்து நண்பர்கள் என்று பகிர்ந்திருக்கிறார்கள்.  மேலும் எங்கள் ப்ளாக்கில் அவரது படைப்புகளைப் படித்து அவரை அறிந்து வைத்திருந்தவர்களும் உண்டு.  


எனக்கு அல்லது எங்கள் குறுகிய வட்டத்துக்கு மட்டுமே சொந்தமாக இருந்திருக்க வேண்டிய சோகம், இரண்டு வாரங்களுக்கு முன் அவர் கதையை எங்கள் ப்ளாக்கில் வெளியிட்டதில், அவருக்கு நெருங்கியவர்கள் இன்னும் கிடைத்தார்கள்.  அவர் செல்லும் வழிக்கு தங்கள் அனுதாபங்களால் / பிரார்த்தனைகளால்  நல்வழி அமைத்துக் கொடுத்தார்கள்.  

 
அந்தக் கடினமான நேரத்தில் எனக்கு அலைபேசியில் ஆறுதல் சொன்ன சுப்பு தாத்தா, கீதா சாம்பசிவம் மேடம், கோமதி அரசு மேடம், ரஞ்சனி நாராயணன் மேடம், சொல்லுகிறேன் காமாட்சி அம்மா, வல்லிம்மா, கில்லர்ஜி, மோகன்ஜி மற்றும் மெயிலில் ஆறுதல் சொன்ன நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, ஜி எம் பி ஸார், அப்பாதுரை, வைகோ ஸார்,  பின்னூட்டங்களில் ஆறுதல் சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் எனது / எங்களது நன்றிகள்.  யார் பெயரும் தவறுதலாக விட்டுப் போகவில்லை என்று நம்புகிறேன்.


கில்லர்ஜி மற்றும் சுப்பு தாத்தா முதல் முறை என்னுடன் பேசும்போதே இப்படியான சந்தர்ப்பத்தில் பேச வேண்டியிருக்கிறதே என்று வருத்தப் பட்டார்கள்.  இது போன்ற கணத்தில்தானே உங்கள் ஆறுதல் எங்களுக்கு மிகவும் பலமாக இருந்தது!


பாஹே பற்றி தனிப் பதிவே வெளியிட்டு அஞ்சலி செலுத்திய கில்லர்ஜிகீதா சாம்பசிவம் மேடம்,  தில்லையகத்து கீதா / துளசிஜிபரிவை சே. குமார்,  ஆகியோருக்கு நன்றிகள்.

இந்த அன்புக்கு என்ன தவம் செய்தேன் நான்..

59 கருத்துகள்:

 1. எவ்வளவு வயதானாலும் கூட நம் அப்பா / அம்மா வை இழத்தல் என்பது என்றும் அவர்களின் குழந்தைகளாகிய நமக்கு ஒரு சொல்லமுடியாத சோகமேதான்.

  இருப்பினும் நாம் ஓரளவு திடமாகவும், செளகர்யமாகவும் நம் மனைவி + குழந்தை குட்டிகளுடன் இருக்கும் போதே, பல்வேறு எதிர்பாராத சோகங்களை அவர்கள் கேள்விப்படாமல், இதுபோன்ற தங்களின் இறுதிப் பயணத்தை மேற்கொள்வதே நல்லது எனவும் தோன்றுகிறது.

  1900 இல் பிறந்த என் அப்பா 75 வயது வரை வாழ்ந்தார். 1910 இல் பிறந்த என் தாயார் 87 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார்கள்.

  இன்று (சித்திரை மாதம் கிருஷ்ண பஞ்சமி) என் தந்தைக்கு நான் செய்யும் சிராத்தம் நடக்க உள்ளது. இன்றும் அவர்களை நினைத்தால் மனதுக்கு மிகவும் வருத்தமாகவே உள்ளது. என்ன செய்ய?

  மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள், ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 2. இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பலமுறை உங்கள் எண்ணில் தொடர்பு கொண்டேன். தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டது என்றே பதில் வந்தது. உங்களை தொடர்பு கொள்ள நானும் தில்லையகத்து கீதா அவர்களும் நிறைய முயற்சித்தோம் முடியவில்லை.
  இந்த பேரிழப்பில் இருந்து விரைவாக மீண்டு பழையபடி பதிவுலகம் திரும்பிய தங்களின் மனவலிமை பிரமிக்கச் செய்கிறது. தந்தையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

  பதிலளிநீக்கு
 3. உண்மை. எத்தனை வயதானாலும் பெற்றவர்கள் மறைவால் வாழ்வில் ஏற்படும் வெற்றிடம் நிரப்பவே முடியாத ஒன்று. பாஹே அவர்களின் ஆன்ம சாந்திக்கும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. வருந்துகிறேன். உங்கள் குடும்பத்துக்கு என் அன்பும் அனுதாபங்களும்.

  பதிலளிநீக்கு
 5. கீதா சாம்பசிவம் பதிவு பார்த்துத் தான் அந்த துக்கச் செய்தியை அறிந்தேன். அந்த நேரத்தில் தொடர்பு கொள்வது சிரமப்படுத்துமோ என்ற எண்ணம் இருபினும் மனசு கேட்கவில்லை. உங்கள் இரண்டு அலைபேசிகளிலும் தொடர்பு கொள்ள முடியாது போனதும் இந்த நேரத்தில் தொந்தரவு படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தை ஊர்ஜிதம் செய்தது. அடுத்த நாளும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் சில பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்து மனம் சகஜ நிலைக்கு வந்தது. என் ஆழ்ந்த அனுதாபங்கள், ஸ்ரீராம். மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. நண்பரே!பெற்ற தந்தையை இழந்து வாடும் தங்களுக்கு நான் ஆறுதல் தான் சொல்ல முடியும் காலம்தான் உங்கள் சோகத்தை ஆற்றமுடியும் அவர் ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவின் ஆன்மா அமைதி அடையட்டும்
   நண்பர்களின் பதிவுகள் மூலம்தான் செய்தி தெரியும்

   நீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. எனக்கும் பேராசை இருந்தது.என் தாய்க்கு முன் நான சென்று சேர வேண்டும் என்று ..இயற்கை விதிப்படி என் தாயார் முந்திக் கொண்டார். தங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. //யாரிடமும் இல்லாத நெருக்கம் அல்லது உரிமை அம்மா அப்பாவிடம் மட்டுமே நமக்கு இருக்கும். உரிமையுடன் எதுவும் கேட்கலாம். பேசலாம். அவர்களைப் பற்றி நினைக்கும்போதும், பேசும்போதும் நாம் எந்த வயதிலும் குழந்தைகளாகவேதான் இருக்கிறோம், உணர்கிறோம். டெல்லிக்கு ராஜாவானாலும்...
  இனி நம்மை குழந்தைகளாகப் பார்க்க யாரும் இல்லை என்கிற எண்ணம் வருகிறது.//

  மறுக்க முடியாத உண்மை இது. ஆனாலும் எழுதியிருக்கும் விதத்தில் உள்ளார்ந்த சோகத்தையும் தனிமையையும் உணரும்போது மனம் கலங்குகிறது. நடைமுறை வாழ்க்கைக்கும் யதார்த்தத்திற்கும் திரும்பி வர நாம் பழகிக்கொண்டாலும் இந்த சோகமும் இனம் புரியாத தனிமையும் ரொம்ப நாளைக்கு நம்மைத் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்!

  பதிலளிநீக்கு
 11. எத்தனை வயதானலும் தாய், தந்தையின் பிரிவை தாங்க முடியாது. நமக்கு யாரும் இல்லை என்ற வெறுமை உணர்வு ஏற்படவே செய்யும். அப்பாவின் இரு புத்தகங்களை கொடுத்தீர்கள். அந்த நூல்களை முழுமையாக படித்து என் வலைத்தளத்தில் பதியவில்லை ஒரு சில கதைகள் பற்றியும், உன்னதமனிதரின் சேவைகளை பற்றியும் தன் மனைவியின் மேல் உள்ள நேசத்தையும் பகிர்ந்து இருந்தேன். அப்பா அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் நினைத்து இருந்தேன் முடியாமல் போய்விட்டது.

  அப்பாவின் ஆசிகளும், அன்பும் எப்போதும் குடும்பத்தினரை வழி நடத்தி செல்லும்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ஸ்ரீ

  எனது ஆழ்ந்த வணக்த்துடன் கூடிய அஞ்சலியும்,,, உண்மைதான் நம்மைக் குழந்தையாக பார்க்கும் உள்ளங்கள். மனம் அமைதிக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 13. "எவ்வளவு வயதானாலும் கூட நம் அப்பா / அம்மா வை இழத்தல் என்பது என்றும் அவர்களின் குழந்தைகளாகிய நமக்கு ஒரு சொல்ல முடியாத சோகமே தான்." என்ற அறிஞர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கருத்தையே நானும் முன்மொழிகின்றேன்.

  நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எங்கள் அம்மா, அப்பா தான் வழிகாட்டிகள். அவர்கள் எப்போதும் எம் உள்ளத்தில் வாழ்கின்றனர். அறிஞர் ஸ்ரீராம் அவர்களே அம்மா, அப்பா போன்று தாங்களும் சிறந்து விளங்க வேண்டும். தங்கள் உள்ளத்தில் உறுதிகொண்டு தங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 14. கில்லர்ஜியின் பதிவின் மூலம்தான் உங்கள் அப்ப்பாவின் மறைவு பற்றிய சோகச் செய்தி அறிந்து அதிர்ந்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  தந்தையின் மறைவு, பெரும் தாக்கத்தை மனதில் ஏற்படுத்தத்தான் செய்கிறது. அந்த சோகம் சாதாரண சோகமா என்ன? நாம் வளர்ந்து ஆளாக ஏதுவாக இருந்தவரை, நம்மையும் ஒரு மனிதனாக்கி இந்த உலகில் உலவவிட்டவரை, மறக்கவா செய்யும் மனம்?

  பதிலளிநீக்கு
 15. சில பிரச்சனைகளால் இணையம் வர முடியாத சூழல்! திடீர் என்று வந்தபோது இந்த தகவல் அறிந்து வருத்தம் அடைந்தேன். எத்தனை வயதாய் இருந்தாலும் தாய்- தந்தையின் இழப்பு என்பது கடினமான ஒன்றுதான். அவரது கதைகளை படித்தது இல்லை. நேரம் கிடைக்கையில் வாசிக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 16. கில்லர்ஜியின் பதிவின்மூலம்தான், உங்கள் அப்பாவின் மறைவு பற்றிய சோகச் செய்தி அறிந்து அதிர்ந்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  தந்தையின் மறைவு, பெரும் தாக்கத்தை மனதில் ஏற்படுத்தத்தான் செய்கிறது. அந்த சோகம் சாதாரண சோகமா என்ன? நாம் வளர்ந்து ஆளாக ஏதுவாக இருந்தவரை, நம்மையும் ஒரு மனிதனாக்கி இந்த உலகில் உலவவிட்டவரை, மறக்கவா செய்யும் மனம்?

  பதிலளிநீக்கு
 17. காலம் உங்கள் காயங்களை ஆ(மா)ற்றும் நண்பர்களே..... மனம் அமைதி கொள்க.. எல்லா மனிதர்களும் இந்த வட்டத்துக்குள் நின்று கடப்பவர்களே... கடந்த காலத்தில் நானும்தான், நமது மரணகாலம்வரை நம்மை குழந்தைகளாக பார்ப்பவர்கள் பெற்றோர் மட்டுமே.... இதுவும் கடந்து போகும்....

  பதிலளிநீக்கு
 18. ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்து இருக்கிறீர்கள் எனது ஆழ்ந்த இரங்கல்கள். நண்பனாக பழகி பிரிந்த தந்தையின் இடத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் நிரப்ப முடியாது. விரைவில் இந்த சோகத்திலிருந்து நீங்களும், குடும்பத்தாரும் மீண்டு வர பிரார்த்தனை செய்து கொள்வதன் மூலம் தங்களின் துயரத்தில் என்னையும் இணைத்து கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 19. தந்தையின் இழப்பு ரொம்ப வருத்தம் தரக்கூடியது. எட்டு வருடமானாலும் அவரிடம் சொல்வதற்கு எனக்கு ஏராளமான தகவல்களும் அனுபவங்களும் இருக்கின்றன. இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கும், பெற்றோர்களுக்கு எத்தனை வயதாகி இறந்தாலும். இருந்தபோதும், ஓரளவு ஆரோக்கியமாக இருக்கும்போதே, பிள்ளைகள் வளர்ந்து குடும்பமாகி நிற்பதைப் பார்த்தபிறகு மறைவது ஓரளவு வருத்தத்தைப் போக்கும். நாம், நாமாக இருந்து ஒரு முகமூடியும் அணியாமல் பேசுவது நம் பெற்றோர்களிடம்தான், அதிலும் தந்தையிடம்தான். அம்மாவிடம் நாம் எப்போதும் குழந்தையாகத்தான் இருப்போம். அம்மாவுக்கு எவ்வளவு வயதானாலும். உங்கள் வருத்தம் நிச்சயம் கடந்துபோகும்.

  பதிலளிநீக்கு
 20. நன்றி வை. கோபாலகிருஷ்ணன் ஸார்,. அப்பாவின் திதி அன்று அதற்குத் தகுந்த பதில் எனக்குக் கொடுத்திருக்கும் பொருத்தம். நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் ஸார்.

  பதிலளிநீக்கு
 21. நன்றி நண்பர் செந்தில் குமார். டவர் கிடைத்திருக்காது. அதனால் மிஸ் ஆகியிருக்கும். மறுபடியும் மதுரை வர சந்தர்ப்பம் கிடைக்கும்போது பார்க்கலாம். என்ன, முன்போல அடிக்கடி வரத் தேவையில்லை... :((

  பதிலளிநீக்கு
 22. நன்றி ஜீவி ஸார். நாம் தொலைபேசியில் பேசி, நடுவில் நீண்ட நாட்களாகி விட்டன. இரண்டு மாதங்களாகவே வீட்டில் சரியான சூழல் இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்னும் கூட சரியாக நாளாகும். அதாவது டிக்கெட் ரிசர்வ் செய்திருப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்..ம்ம்ம்...

  பதிலளிநீக்கு
 23. நன்றி நண்பர் வலிப்போக்கன். வாழ்க்கைப் பயணத்தில் அவர்களின் நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிக் கொண்டார்கள். நம் நிறுத்தம் வரும்போது நாமும் இறங்கிக் கொள்ளலாம். என்ன அவசரம்..?

  பதிலளிநீக்கு
 24. நன்றி மனோ சாமிநாதன் மேடம். சரியாகச் சொல்லி இருக்கிறீகள்.

  பதிலளிநீக்கு
 25. நன்றி கோமதி அரசு மேடம். இன்று காலை அரசு ஸார் பேசி ஆறுதல் சொன்னார்.

  பதிலளிநீக்கு
 26. நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.

  பதிலளிநீக்கு
 27. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

  பதிலளிநீக்கு
 28. நன்றி நண்பர் மாடிப்படி மாது.

  பதிலளிநீக்கு
 29. நன்றி நண்பர் நெல்லைத்தமிழன்.

  பதிலளிநீக்கு
 30. எவ்வளவு வயதானாலும்
  ஈடு செய்யஇயலாத இழப்பல்லவா
  ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 31. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 32. டிக்கெட் செய்திருப்பவர்கள். ஐயோ வருத்தமாக இருக்கிறது ஸ்ரீராம்.
  எல்லாவற்றையும் தாங்கும் தைரியம் உங்களுக்கு பகவான் கொடுக்க வேண்டும்.
  திடமாக இருங்கள். உன்னதமான அம்மா அப்பா பெற்ற பிள்ளை நீங்கள்.
  நன்றாக இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 33. ஈடு செய்ய முடியா இழப்பு பெற்றோரின் பிரிவு ..வயது ஏற ஏற அப்பா அம்மா இப்போ என் கூட இருந்தா நல்ல இருக்கும்னு நினைப்பேன் ..இறைவன் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதலை தர பிரார்த்திக்கிறேன் ....

  பதிலளிநீக்கு
 34. சீனியாரிட்டி படி நடக்கவேண்டியது நடக்கிறது என்று மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை (:

  பதிலளிநீக்கு
 35. சந்தோஷ செய்தியை யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள முடியும். துக்கத்தை நம்மைச் சேர்ந்தவர்கள் என்று நாம் நினைப்பவர்களுடன் மட்டுமே சொல்லி ஆறுதல் பெறமுடியும். உங்களுக்காக பலரும் உங்கள் அப்பாவின் மறைவைப் பதிவாக்கி போட்டது உண்மையில் உங்களது நல்ல குணத்தைக் காட்டுகிறது. உங்கள் அப்பா, அம்மா இருவரும் உங்களுடன் இருந்து உங்களுக்கு வழி காட்டுவார்கள், ஸ்ரீராம். கவலைவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 36. உண்மைதான் ஸ்ரீராம். அப்பாவின் அன்பு தனிப்பட்டதுதான். பாஹே அப்பா அவரது எழுத்தின் மூலம் எங்களுக்கும் அப்பாவாகிவிட்டார். தங்களுக்கு இதிலிருந்து மீண்டு வர தாமதமானாலும் காலத்திற்கு ஆற்றும் சக்தி உள்ளது. அவரது எழுத்துகள் உங்களுடன் இருக்கும் போது அதன் வழி அவர் உங்களுடன் உரையாடுவார். மீண்டு வந்துவிடுவீர்கள்...

  பதிலளிநீக்கு
 37. நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்.

  பதிலளிநீக்கு
 38. I can thoroughly empathize with you Anna. no matter how old we grow, we are still treated as children. I am extremely sorry for your loss. I have always admired the way you describe about him, his gestures. It is sad that I was unable to meet him when he was alive. I guess it is too late now. My sincere condolences & prayers for his soul to attain Moksha.

  பதிலளிநீக்கு
 39. தாய் தந்தையின் முன்தான் நாம் குழந்தைகளாகிறோம்.. மறுக்கமுடியாத உண்மை... எந்த வயதானாலும் அவர்களைப் பிரிவதென்பது மனத்துக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.. நாமிருக்கும்வரை நம்மீது பாசம் வைத்தவர்களும் இருக்கவேண்டும் என்று விரும்புவது மனித மனத்தின் இயல்பு என்றாலும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அடுத்தக் கட்டத்துக்கு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போய்த்தானே ஆகவேண்டும். மனத்தில் இந்த தெளிவு இருந்தால் போதும்.. நகர்ந்துகொண்டிருக்கலாம் ஒரு நதியைப்போல... நிறைவான வாழ்க்கை வாழ்ந்துமறைந்த அப்பாவின் அன்பும் ஆசியும் எப்போதும் உங்களைத் தொடர்ந்துவரும். மனத்தைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 40. வாசிக்கும் போதே...கண்கள் மறைத்து விட்டன...சகோ....மிகவும் வலிமிகுந்த தருணங்கள்....அவர்கள் இருப்பது ஆன்ம பலம் தரும் நமக்கு....ஆனால் பின்பு அந்த பலம் குறைந்ததாகவே தான் இருக்கிறது.
  காலம் மாற்றும் எல்லாவற்றையும். அவர்களின் ஆசி உங்களுக்கு எப்போதும் உடன் இருக்கும் சகோ.

  பதிலளிநீக்கு
 41. இந்தத் துயரிலிருந்து மீண்டு வரும் பொறுமையையும் திடத்தையும் உங்களுக்கு இறைவன் தருவானாக.

  ஒருவருடைய தாய் அல்லது தந்தை இறந்துவிட்டதாகப் பகிரப்படும் செய்திகளைப் பார்க்கும்போதெல்லாம் மனம் பதறுகிறது. சின்ன வயசில் என் வீட்டில் ஒரு rebellion ஆக இருந்தேன். ஆனால், இப்போது(தான்) அவர்களை அதிகம் நாடுகிறது மனம். யார் முந்தி யார் பிந்தி என்று தெரியாது. இறைவன் எல்லாரையும் காப்பானாக.

  பதிலளிநீக்கு
 42. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

  பதிலளிநீக்கு
 43. வருந்துகிறேன் நண்பரே....
  இறைவன் அருகில் அவர்
  இளைப்பாறட்டும்.....

  பதிலளிநீக்கு
 44. வலி நிறைந்த பகிர்வு...
  எல்லோருமே வாழ்வின் முடிவு தெரியாமல்தான் பயணிக்கிறோம் என்றாலும் இழப்புக்கள் எப்பவுமே நமக்கு வலியைக் கொடுக்கத்தான் செய்யும்....

  இன்னும் சில வருடங்கள் இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

  ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 45. மிகவும் தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன். தந்தையின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 46. அவர் மறைவன்று நான் புதுடெல்லியில் இருந்தேன். ஏப்ரல் 2ம் தேதி மேற்கொண்ட பயணம். 25 ல்தான் முடிந்தது. சென்னையி்ல் இருந்தாலும் வைகையில் புறப்பட்டு வந்திருக்கலாம். மதுரையிலும் இருக்க வாய்ப்பில்லாமல் போயிற்று. எனக்கு எப்போதுமே பழகியவர்கள், ஆத்மார்த்தமானவர்கள் மறைந்துவிட்டால் உயிரோடு நெருக்கமாக உறவாடிய அவர்களைச் சடலமாகப் பார்ப்பதை என் மனது ஏற்பதில்லை. அதைவிட அந்த மறைவுச் செய்தியைக் கேட்டு, வருந்தி, அவரோட பழகிய நாட்களின் சந்தோஷத்திலேயே மானசீகமாக இருக்க விரும்புவேன். ஒரு வேளை அதுதான் இந்த நிகழ்வாயும் ஆகிப்போனதோ என்று தோன்றுகிறது. நான் வாசலில் வந்து நிற்கிறேன் என்றால் தன் உடல் சிரமத்தையும் பார்க்காது முக்கி முனகிக் கொண்டு அவர் எழுந்து அமர முயற்சிப்பதும், அப்டியே படுங்க...எதுக்கு எழுந்திட்டு என்று நான் அருகே சென்று அமர்த்துவதும்....எங்கள் மன நெருக்கத்தை இருவருக்கும் உணர்த்தும்...பெரியவரின் ஆசீர்வாதம் எனக்கு உண்டு...அவர் ஆத்மா சாந்தியடையட்டும்...இறைஞ்சுகிறேன் இறைவனிடம்...

  பதிலளிநீக்கு
 47. வணக்கம் சகோதரரே

  தங்களது பதிவுகளை வாசித்து வரும்போது தங்கள் தந்தையாரின் மறைவு குறித்த இப்பதிவையும் கண்டு படித்து மனவருத்தமடைந்தே்ன். தாமதமான வருகைக்கு வருந்துகிறேன். காலந்தான் தங்கள் தந்தையை இழந்து வேதனையில் வாடும் தங்களது மனகாயத்தை ஆற்றும் சக்தியை தர வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!