திங்கள், 11 ஏப்ரல், 2016

திங்கக்கிழமை 160411 :: ஜவ்வரிசி வடாம்.


வெயில் காலம் வந்து விட்டது.  வெயில் கடுமையாய்க் காய்ந்து கழுத்தறுத்தாலும் அதை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளும் இருக்கின்றனவே..
 

இந்த முறை தஞ்சாவூர்க் குடைமிளகாய் வாங்கவில்லை.  ஏதேதோ காரணங்களால் வாங்காமலேயே தட்டிப்போய் விட்டது.  அந்தச் சோகத்தைச் சொல்ல தனிப்பதிவு வேண்டும்!  

ஆனால் வெய்யிலுக்கு எப்போதுமே கூழ் வடாம், வெங்காய வடாம் போடுவோம்.  ஒரு வார காலமாக ஜவ்வரிசி வடாம் தூள் பறக்கிறது. பொரிக்கும்போது எண்ணெயை நிறையக் குடிக்கிறது!  ஆனாலும் சுவை விடுகிறதா என்ன!  நம்ம நாக்கு நாலு முழமாச்சே!                                                                               Image result for javvarisi images


ஒரு கிலோ ஜவ்வரிசிக்கு அளவு சொல்கிறேனே...
 

முதல் நாளிரவு ஜவ்வரிசியை அலசி, முழுகும் அளவு தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.  மறுநாள் காலை அதைப் பார்க்கும்போது தண்ணீர் வற்றி இருக்கும்.  எனவே மறுபடி கொஞ்சம் (மிகக் கொஞ்சம்.  இல்லா விட்டால் பொங்கி விடும்) தண்ணீர் விட்டு, குக்கரில் இட்டு,  எட்டு அல்லது பத்து விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொண்டோம்.
 

பதினைந்து முதல் இருபது வரை பச்சை மிளகாயை எடுத்துக் கொண்டு (இது அவரவர் கார விருப்பத்தைப் பொறுத்தது),  அதை அப்படியே தனியாகவே மிக்ஸியில் அரைத்துக் கொண்டோம்.  குக்கரில் இருக்கும் ஜவ்வரிசியில் தேவையான அளவு உப்பைப்  போட்டு, பெருங்காயம் சேர்த்து, பெரிய பழமாக இருந்தால் 2, சிறிய பழமாக இருந்தால் 4 எலுமிச்சைப் பழத்தைச்ச் சாறு பிழிந்து  கலந்து கொண்டு, மொட்டை மாடிக்குப் போய்....

வடாம் இட்டு விடலாம். 
                                                                                           Image result for javvarisi images 
அடிக்கும் வெயிலுக்கு   மூன்று அல்லது நான்கு நாட்கள் காய்ந்தால் போதும்.  எடுத்து, எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டு விடலாம்.  பாதி காய்ந்து கொண்டிருக்கும்போதே கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்ப்பது ஒரு தனிச்சுவை!

                                                   Image result for javvarisi images    Image result for javvarisi images 
பின்குறிப்பு  : நீலப் பின்னணியில் வடாம் காயும் இரு படங்களைத் தவிர மற்ற படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்...    

35 கருத்துகள்:

 1. ஆஹா தனி சுவை போல....
  நமக்கு சாப்பிடத்தானே பிடிக்கும்
  சமைக்க பிடிக்காதே....
  சரி ஒரு முறை இந்த வடாம்
  செய்து சாப்பிடலாம்...
  நன்றி நண்பரே பதிவிற்கு...!

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. அதென்னமோ குக்கரிலெல்லாம் வைக்கிறதில்லை. ஊறிய ஜவ்வரிசியை நீரைக் கொதிக்கவிட்டுக் கிளறுவது தான் வழக்கம். முத்து முத்தாகத் தெரியணும்னா காலம்பர சிறிது நேரம் ஊறினால் போதும். மோரிலும் ஊற வைப்பது உண்டு. இந்த வருஷம் நான் வடாமே போடலை! ஆங்காங்கே மக்கள் கிளர்ச்சி செய்யறாங்க. மழையே பெய்யலை. நீங்க வடாம் போட்டால் தான் ஆச்சு! இல்லைனா சூரியன் சுட்டுப் பொசுக்கிடுவார்னு! ம்ஹூம், முடியாத்! மாட்டேன்! அப்படினுட்டேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.... ஹா.... ஹா.... ஆனால் மழை என்ற பெயரைக் கேட்டாலே பயமாவும் இருக்கே...

   நீக்கு
 4. ஆஹா...அருமையாக இருக்கு...வடாம்.

  கட்டிட வேலை பக்கத்தில் எல்லாம் நடப்பதால் ஒரே சிமிண்ட் தூசி அதனால வற்றல் போட வில்லை.

  ஆனா ஜனவரியில பக்கத்து கட்டிட வேலை நின்று இருந்ததால் போட்ட அவரை வற்றல் தான் இன்னைக்கு பதிவா போடலாம்ன்னு எடுத்து வைத்து இருக்கேன்....:)

  தம +1

  பதிலளிநீக்கு
 5. அருமையான வடாம்.
  இப்போது போடுவது இல்லை. முன்பு மாசி பங்குனியில் வடாம் போடும் வேலைகளை முடித்துக் கொள்வேன், சித்திரை வத்தல் சிவந்து விடும் என்பார்கள். வடாம் போட்ட காலங்களை நினைத்துக் கொள்ள வேண்டும். (அதுஒரு கனா காலம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அரசு மேடம். சித்திரையில் போட்டாலும் சிவக்கவில்லை!

   நீக்கு
 6. வாவ்... தட்டு நிறைய வடாம். ஆசையாய் இருக்கு. இங்கே மொட்டை மாடி தான் இல்லை!

  பதிலளிநீக்கு
 7. மொட்டை மாடி இருக்கிறது வெயில் இருக்கிறது. இருந்தும் இந்த ஆண்டு வடாம் பற்றி என் மனைவி சிந்திக்கவில்லை. எதையும் செய்ய உட்லிலும் மனசிலும் தெம்பு வேண்டாமோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக தெம்பு வேண்டும் ஜி எம் பி ஸார். நன்றி வருகைக்கு.

   நீக்கு
 8. //அந்தச் சோகத்தைச் சொல்ல தனிப்பதிவு வேண்டும்//
  ஹாஹாஹா பதிவுக்கு இப்படியெல்லாம் ஐடியா கிடைக்கின்றதே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னதுதான் நண்பர் கில்லர்ஜி. நீங்க பாராட்டறதைப் பார்த்தால் பேசாமல் ஒரு பதிவு எழுதிடலாம் போல!

   நீக்கு
 9. பொதுவாக ஃபெப்ருவரி, மார்ச்சில் முடித்துக் கொண்டுவிடுவேன். இம்முறை வடகம் போடவில்லை. வெள்ளம் வந்த பிறகு தூசி கூடுதலாக உள்ளது போல உள்ளது. பறக்கின்றது கண்ணில் விழும் அளவு. எனவே பயந்து போடவில்லை. ஆனால் வெயில் செமையாக காய்கிறது. வடாம் நாவில் நீர் சுரக்க வைக்கிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் ஏரியாவில் அவ்வளவு தூசு இல்லை. போட்டு விட்டோம். நன்றி கீதா!

   நீக்கு
 10. வடாம் போட மனசிருந்தாலும் மொட்டை மாடி இல்லையே :-(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... இந்த மொட்டை மாடிப் பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கிறதே....! நன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.

   நீக்கு
 11. எங்களுக்கெல்லாம் சித்திரை நாளன்றைக்குத் தான். உங்களுக்கு வருஷம் பிறந்து ஒரு வாரம் ஆகப் போகுது இல்லையா? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் என்றும் சொல்லலாம் கீதா மேடம். ஆனால் பக்கத்தில் வந்து விட்டதே என்று கோமதி அரசு மேடத்துக்கு அப்படி பதில் சொன்னேன்!!

   நீக்கு
 12. வடாம் (போடும் கதை) நல்லா இருக்கு. நான் பின்னூட்டங்களைப் படிப்பதற்கும் காத்திருப்பேன். "சித்திரை வடாம் சிவந்துவிடும்" - இந்தப் பழமொழியெல்லாம் அடுத்த தலைமுறையில் இருக்க வாய்ப்பே இல்லை. வடாம் காய்ந்து இன்னும் 2 'நாளில் ரெடியாயிடும் என்று நினைக்கிறேன். அடுத்த 'திங்கக்கிழமை' பதிவு, நிச்சயம் ஏதாவதொரு கலந்த சாதம்தான் இருக்கும். (எப்படியும் புது வடாம் டேஸ்ட் செய்ய நீங்கள் பண்ணுவீர்கள்தானே)

  பதிலளிநீக்கு
 13. அய்யோட நான் வடாம் எப்படி போடவது என்று கேட்க நினைத்து பலரிடம் கேட்டு என் மரமண்டையில் ஒன்னும் இல்ல,, ஆனா இது போல ஈஸியா சொன்னா போடுவோம்ல,, போட்டு போட்டோ எடுத்து பதிவும் போடுவோம்ல,,,
  நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 14. ஜவ்வரிசி முத்து முத்தாகப் பொரிந்து வரும் அழகே அழகு.

  பதிலளிநீக்கு
 15. ஆஹா !யம் யம் ..இங்கே எல்லா பொருளும் கிடைக்குது .வெயிலை தவிர .நாலு நாளுக்கு சென்னை வெயில் DHL இல் கடனா அனுப்பி வைங்க :) வற்றல் செஞ்சதும் திருப்பி கொடுக்கறேன்

  பதிலளிநீக்கு
 16. புளியோதரையும் ஜ.வடாமும் சூப்பர் ஜோடி. என்னா கெமிஸ்ட்ரீ ?!

  பதிலளிநீக்கு
 17. நன்றி நண்பர் நெல்லைத்தமிழன். இன்னும் உங்களைக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போ உங்க விருப்பம் கலந்த சாதம் என்று எடுத்துக் கொள்ளலாமா!

  :)))

  பதிலளிநீக்கு
 18. ஈஸியா இருக்கா பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்! நன்றி... நன்றி... இந்நேரம் வடாம் போட்டு, பொரித்துச் சாப்பிட்டிருப்பீர்கள்!

  பதிலளிநீக்கு
 19. நன்றி வல்லிமா. மிகவும் soft ஆக நன்றாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. நன்றி ஏஞ்சலின். அங்கே (போதுமான அளவு) வெயிலே வராதா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!