செவ்வாய், 10 மே, 2016

கேட்டு வாங்கிப்போடும் கதை : தப்பு பண்ணியவர்கள்


இந்த வார "கேட்டுவாங்கிப் போடும் கதை"பகுதியில் வெளியாவது பதிவர் ஷைலஜா அவர்களின் படைப்பு.
இந்தக் கதையை பெற உதவியாயிருந்த திருமதி ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றிகள்.
 
 
இந்தக் கதை பற்றி ஷைலஜா அவர்களின் குறிப்பும், தொடர்ந்து அவர் படைப்பும்...

====================================================================
இந்தக்கதை  தினலமலரில் போட்டியில் ஆறுதல்பரிசுபெற்றகதை ஈவ் டீசிங்  மிக அதிகமாயிருந்த  2010ல் நடந்த ஒரு நிஜ சம்பவத்தின்  தாக்கத்தில் எழுதியது.
 
 
கதைக்கு நிறைய பாராட்டுக்கடிதங்கள் வந்தன அதில் ஒன்றில் ,”என் மகளுக்கும் இதே கதிதான் நல்லவேளை அவள் உயிரைக்காப்பாற்றிவிட்டோம் ஆனால் படிப்புதான் நின்றுவிட்டது பட்டணத்துக்கு தனியே அனுப்ப பயமாகவே இருக்கிறது இன்னமும்’ என கிராமத்திலிருந்து ஒரு தந்தை எழுதிய மடல்  நெகிழ்ச்சியாய் இருந்தது.

என்னைப்பற்றி...

 ஷைலஜா,தற்போது வசிப்பது பெங்களூரில்..பிறந்துவளர்ந்தது ஸ்ரீரங்கம்.இயற்பெயர் மைதிலி. இந்தப்பெயரிலும்  பல கதைகள்  வெளிவந்திருக்கின்றன  இந்தக்கதை  அப்படி வந்ததுதான்..அப்பா எழுத்தாளராக இருந்ததால் சிறுவயதிலேயே எழுத்துடன் சிநேகம்..பத்துவயதில் பேனா பிடித்தாயிற்று.  எழுத்துப்பயணம் நதியாய் நகர்கிறது, லட்சிய இலக்கு என்னும்  மாகடலை நோக்கி!

சிறுகதை நாவல்  கவிதை கட்டுரை  நாடகம் என எழுத்தின் பலபரிணாமங்களில் பயணம் வந்து சில பரிசுகள் பெற்றாலும் ஒன்றும்  சாதித்த  நிறைவு வரவே இல்லை.

மற்றபடி  இருக்கும் இடத்தை கலகலப்பாக  வைத்துக்கொண்டு அனைவரையும் நேசிக்கும் சராசரிப்பெண்மணி!


=====================================================================


தப்பு பண்ணியவர்கள் மைதிலி (ஷைலஜா)

 


(தினமலர் சிறுகதை போட்டியில்பரிசுபெற்ற சிறுகதை

***
     விடியலுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போதே சின்னசாமி அந்த பஸ் டெப்போவிற்கு வந்து விட்டான்.  முதல் நாள் இரவு கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டரும் நடந்தே வந்து அருகிலிருந்த ஊரிலிருந்து ரயிலில் பயணம் செய்து, நகரத்திற்கு வந்து, இறங்கிய போது கிராமவாசியான சின்னசாமிக்கு தன் ஐம்பது வயதின் பழைய சோற்றிலும், கேழ்வரகு கூழிலும் வளர்ந்திருந்த திடமான உடம்பே தூக்கிப் போடுகிற மாதிரி இருந்தது.  சட்டெனக் கண்கள் கலங்கிப் போயின.

     பாவம், புவனாவுக்குப் பூஞ்சை உடம்பு.  அந்தப் புள்ளய நான் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பியிருக்கக் கூடாது.  கருக்கல்லுலேயே பட்டணம் இத்தினி பரபரப்பாயிருக்கும்னா, இது பட்டப் பகல்ல எப்படி இருக்கும்இந்தச் சூழ்நெலெயில என் பதினாறு வயசு மகளை இங்கிட்டுப் படிக்க அனுப்பின நான் பாவி, மகா பாவி!’’

     மனசு ஓலமிட்டது.

     ரயிலடியிலிருந்து விசாரித்துக் கொண்டு அந்த பஸ் டெப்போவிற்கு வந்தவன், ’ஹோஎன்றிருந்த அந்தப் பெரிய திடலில் அங்கும் இங்குமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை ஒவ்வொன்றாய் அருகில் போய் பார்க்க ஆரம்பித்தான். 

சின்னச்சாமியின் தோளிலிருந்து நீண்டு தொடை வரை தொங்கிய அந்தத் துணிப் பையில் உருண்டையாய் ஏதோ ஒரு முடிச்சு அவனை உரசிக் கொண்டே வந்தது.  பையை கெட்டியாய் ஒரு கரத்தில் பிடித்தபடி, பைத்தியக்காரனைப் போல டெப்போ முழுவதும் சுற்றி வந்தவன் கடைசியில் கண் மலர்ந்தான்.

     இதான்... இதான்... புவனா காலேசுக்குத் தெனமும் ஏறிப்போற பஸ்ஸு.  என் செல்வ மகளை எமனுக்கு பலி கொடுத்த வாகனம்...

சின்னசாமி நெஞ்சு பதை பதைக்க அந்த பஸ்ஸிற்குள் ஏறினான்.  இருட்டில் தட்டுத் தடுமாறி ஓர் இருக்கையில் அமர்ந்தான்.

     தோள் பையைத் தூக்கி மடி மீது வைத்துக் கொண்டான்.  விரல்கள் வாஞ்சையுடன் அந்த பைக்குள்ளிருந்த அந்த சிறு மூட்டையைத் தடவின.

            ’அம்மாடி புவனா... பலி கொடுக்கத்தான் உன்னைப் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பினேனா இந்தப் பாவி அப்பன்எனக்கென்ன தாயீ தெரியும் பட்டிணமும்ல, பாழாப் போற பஸ் பயணமும், பசங்களோட கிண்டலும் கேலியும்? நல்ல மனுசங்கன்னு நினைச்சி கிராமத்துக்கு வந்துக் கேட்டுக்கிட்டவங்க பாதுகாப்புல உன்னை அனுப்பி வச்சேன்மா.. நீயும், ’அப்பா! நான் நல்லா படிச்சி தம்பி, தங்கைங்களைக் காப்பாத்தணும்பான்னு ஆசையா இந்தக் குடியானத் தகப்பன்கிட்டே சொன்னே மவளே! வீட்டு வேலை செஞ்சிட்டு மேல் படிப்பும் படிக்கத் தான் மக பட்டிணம் போறான்னு நெனச்சி அனுப்பினேனே தவுர இப்புடி ஆறே மாசத்துல மேலு லோகம் போகவா தாயீ உன்னை நான் பிரிஞ்சி அனுப்புனேன்?

     பொறுப்பை ஏத்துட்டப் பெரிய மனுஷங்க இப்ப எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு கையை விரிக்கிறாங்க... உரசிப் பாக்குற வரைக்கும் பித்தளை கூட தங்கம் மாதிரி தான் மினுமினுப்பாயிருக்கும் போல இருக்குது... இப்புடி உன் உயிர் போவும்ன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா கிராமத்துலேயே கூழோ, கஞ்சியோ குடிச்சிட்டு வயல் வேலை செய்யட்டும்ன்னு உன்னை வளர்த்திருப்பேனே தாயீ... ஒண்ணுந் தெரியாத படிக்காத பட்டிக்காட்டு அப்பனா இருந்துட்டு இப்புடி உன்னைப் பறி கொடுத்துட்டேனே, புவனா... ஐயோ!  நான் என்ன செய்வேன் தாயீ.  உன் நெனப்புல தான் நீ செத்த இந்த ஆறாம் நாள் உன் சாம்பலோட இந்த பஸ்சில வந்து குந்தறேன்.  தாயீ... அம்மாடீ! இந்த பஸ்ஸுல தான் நீ அன்னிக்கு என்னவோ கலாட்டாவாமே... அதைச் செஞ்ச ஈவு இரக்கமில்லாதவங்களாலே ஓடற பஸ்சிலிருந்து கீழே இறங்கி, மண்டை உடைஞ்சி மரணமடைஞ்சி போனே?
     எல்லா வெவரமும் நாலு நாளா புத்தகத்துல பேப்பர்ல வந்திடிச்சி... இது நியாயமா’?ன்னு மாதர் சங்கமெல்லாம் போராடறாங்களாம்... என்ன செஞ்சி என்னம்மாபோன உசுரு வரப் போவுதா என்ன?

     யோவ், யாருய்யா அது? டெப் போவுலேந்து பஸ்ஸை எடுத்து வெளியேக் கொணாந்து பஸ்டாண்ட் போவுறதுக்குள்ள ஏறி உக்காந்திட்டு இருக்கறது, இறங்குய்யா, இறங்கு இறங்கு...’’

     காக்கி சட்டை போட்டு வாயில் பீடியை செருகியபடி ஒருவர் வந்து அதட்டவும் சின்னசாமி மிரண்டு போய் கீழே இறங்கினான்.

     என்ன அது பைல?’’ சந்தேகத்துடன் காக்கிச் சட்டை அதைப் பிடுங்கி உள்ளேப் பிரித்துப் பார்த்து, அவருவருப்புடன்’’ “என்னயா மண்ணெல்லாம் சுமந்துட்டு... சீ...’’ என்று சீறி விட்டுப் போனான்.

     மண் இல்லப்பா... மனசு... என் பொண்ணு புவனாவோட மனசு.  அவ கடைசியாய் நடந்த தடம் இந்த பஸ்ஸுல இருக்கும்ன்னு தான் தேடிட்டு நான் வந்தேன்.  பசங்க எல்லாம் ஒட்டு மொத்தமா அவளைச் சீண்டி சித்திரவதை செஞ்சப்போ பஸ் டிரைவரும், கண்டக்டரும் வாயை மூடிக்கிட்டு இருந்தாங்களாம்... காரணம் பஸ்ஸுல அப்போ பயணம் செஞ்ச பையனுகளுல ஒருத்தன் ஒரு பெரிய தலையோட மவனாம்.  பயணிகளும் பயந்து ஒடுங்கிட்டாங்களாம்... எல்லாம் பத்திரிகைக் காரங்கதான் சொன்னாங்க...

     எத்தினி கனவுகளோட புவனா இந்த பஸ்ஸுல காலேசுக்குப் படிக்கப் போனாளோ, பாவம்... அவ... சாம்பலும் இதே பஸ்ஸுல ஒரு நாள் பிரயாணம் செஞ்சிட்டுப் பெறகு ஆத்துநீர் எதிலாச்சும் கரைஞ்சி போவட்டும்ன்னு தான் நான் சாம்பலைத் தூக்கிட்டு இப்போ பட்டணம் வந்துருக்கறேன்...!’’

     சின்ன சாமி கண்ணீருடன் நடந்தான்.  அந்தக் குறிப்பிட்ட பஸ்  புறப்படும் நிலையத்திற்கு விசாரித்துக் கொண்டு வந்தவன் சரியாய் காலை எட்டு மணிக்கு ஏறி அமர்ந்தான்.

     புவனா தினமும் அந்த நேரம்தான் பஸ்ஸில் ஏறி அரை மணி நேரப் பயணத்தில் தன் கல்லூரியை அடைவதாக ஒரு முறை கிராமத்திற்கு வந்தபோது சின்னசாமியிடம் சொல்லி இருக்கிறாள்.

     பஸ் புறப்பட்டது.

     சின்னசாமி கல்லூரி பெயர் சொல்லி டிக்கெட் கேட்டு வாங்கவும், பையன்கள் சிலர் உரக்க சிரித்து விட்டு பெரிசு காலேஜ் போய் படிக்கப் போவுதுடா...!  அதுவும் லேடீஸ்காலேஜ்!’’ என்று கிண்டல் செய்தனர்.

     அவர்களை வெறுப்புடன் ஏறிட்டான் சின்னசாமி.  பாவி பசங்களா.. உங்களில் ஒருத்தன் தானடா என் மக உயிரைப் பறிச்சிருக்கீங்க....

     அடுத்தடுத்த நிறுத்தங்களில் கல்லூரி மாணவிகள் ஏறும்போது பையன்களின் கேலியும், கிண்டலும் எல்லை மீறவும் சின்னசாமி கொதிப்புடன், “தம்பீங்களா... உங்க போக்குக்கெல்லாம் எல்லையே கெடையாதுங்களா?’’ என்று கேட்டு விட்டான் ஆற்றாமை தாங்காது.

     அவ்வளவு தான்... கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸும் அணிந்த இளைஞன் ஒருவன் டிரைவரிடம் ஸ்டாப்என்று கூச்சல் போடவும், பஸ்  சட்டென  நின்றது.

     அவன் சின்னசாமியின் அருகில் வந்தவன் ஆக்ரோஷமாய் பார்த்துவிட்டு, “, பட்டிக்காடு... யாரப்பாத்து என்ன  கேள்வி கேக்கறேஅதிலும் எல்லைஎதுன்னா கேக்கற?’’ என்று கூச்சல் போடவும் நண்பர்கள்  தினா... விடுடா.. கண்ட்ரீப்ரூட்.... அழுக்கு வேட்டியும், பச்சை மேல் துண்டுமா, முகத்துல மூணு நாள் தாடியோட பாக்கவே பரிதாபமா இருக்கிறான்டா....’’ என்று தடுத்தனர்.

     இவனுகளைத் தாண்டா தட்டி வைக்கணும்... படிப்பு அறிவு இல்லாதவன் தான் பல் உடையற மாதிரி கேள்வி கேட்பான்.  வயசுப் பசங்க குஷியா இருந்தா பொறுக்க மாட்டானுங்க... இவங்க வயசுல போடாத ஆட்டமா நாம இப்பப் போட்டுட்டோம்?’’

     லீவ் இட் யா!’’

     விடறதா, அதெல்லாம் நடக்காது.  என் எல்லைஎதுன்னு கேட்டுட்டான் இல்லே, அதை இப்போ அவனுக்குக் காட்டணும்!’’

     சின்னசாமி மிரட்சியுடன் பார்க்கும்போது அவன் தோளைப் பற்றி நிற்க வைத்தான்.  மேல் துண்டை சட்டென உருவிக் கீழே போட்டான் தினா.

     பார்ரா... பெரிசுக்கு சிட்டிக்கு வரப்போ ஷர்ட் போட்டுட்டு வரணும்ன்னு தோணலேஇடியட், இதுல வாய் மட்டும் நீளுது?’’

     தினா... விட்டுத் தள்ளு.’’

ஒரு பையன் இப்படி அலட்சியமாய் சிரித்தபடி சொல்லவும் சின்னசாமி அடிபட்ட புலிபோல சிலிர்த்து உடம்பை உதறிக் கொண்டான்.  கண் சிவக்க உதடு துடிக்க தினாவிடம், “துண்டை உருவுனதோட உன் திமிரை அடக்கிக்க தம்பீ.. பட்டிக் காட்டானுக்கு உடை நாகரிகம் தெரியாது தான்... ஆனா, உள்ளத்து நாகரிகம் தெரியும்... அதனால தான் உன்னைக் காயப்படுத்த நெனைக்கல... என் பேச்சை மீறினா நீ விபரீதத்த சந்திக்கணும்... ஆமா?’’   என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னான்.

     அவ்வளவுதான்... தினா ஆவேசமாய் சின்னசாமியின் தோளிலிருந்து அந்தப் பையை உருவிக் கீழே போட்டுவிட்டு, “இப்ப என்ன சொல்ற பெரிசு?’’ என்று இடக்காய் கேட்டான்.

     சட்டெனக் குனிந்து பையை எடுத்தவன் உள்ளிருந்த மூட்டையை வேகமாய்ப் பிரித்து மகளின் அஸ்தியை அள்ளி எடுத்து அதை அப்படியே தினாவின் வாயில் கொண்டு அழுத்தினான் சின்னசாமி.

     தினா திமிறத் திமிற அவன் கைகளை வலுவுடன் தன் கரங்களால் அழுத்திப் பிடித்தப்படி, “உப்பைத் தின்னவன் தண்ணி குடிக்கணும்; தப்பை பண்ணியவன் மண்ணைத் தான் திங்கணும்... ஆமாண்டா, இது என் செத்துப் போன மவளோட உடம்பு மண்.  அவளை எரிச்ச சாம்பல் மண்ணு.  உன்னை மாதிரி ஒருத்தன் அவளைக் கிண்டல் செஞ்சி, பஸ்ல ஓட ஓட விரட்டி, படிக்கட்டுல தள்ளி, அவளைத் தடுக்கிக் கீழே விழுந்து சாக வச்சிட்டான்...

     எத்தினி கனவுகளோட என் மவ கிராமத்த விட்டுப் பொறப்பட்டு இங்கே வந்தா தெரியுமாடாகுடியானவன் குடும்பமும் விளங்க நான் நல்லா படிச்சி, முன்னேத்திக் காட்டறேன்னு லட்சியத்தோட இங்க வந்தா...  வீட்டு வேலை செஞ்சி சம்பாரிச்சி அதுல கெடக்கிற துட்டுல படிக்கிறேன்பான்னு புறப்பட்டு வந்தா... அவளை ஈவு இரக்கமில்லாம சாகடிச்சது உன்னை மாதிரி இளைய தலைமுறைப் பசங்க தான்.

     காசு, கடவுளோட கண்ணைக் கட்டிப் போடாதுடா... அது பாத்துக்கிட்டே தான் இருக்கும்... தெய்வம் நின்று கொல்லுமடா... நின்னு கொல்லும்!’’ என்ற சின்னசாமியின் நெகிழ்ச்சியான கூக்குரல் தினாவை மட்டுமல்லஅங்கு அனைவரையும் உலுக்கிப் போட்டது.

     இப்போதெல்லாம் அந்த ரூட்டில் செல்லும் அந்த பஸ்ஸில் ஈவ் டீஸிங்சுத்தமாய் இல்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

     சின்னசாமியை பேட்டி எடுக்க யாராரோ கிராமத்திற்கு வருகின்றனர்.  நன்றி கூறுகின்றனர்.

     சின்னசாமியால்தான் எதுவும் பேச இயலவில்லை.

22 கருத்துகள்:

 1. படிச்சிருக்கேன். நினைவு இருக்கு.:)

  பதிலளிநீக்கு
 2. அருமையான கதை....
  எழுத்தாளருக்கு வாழ்த்துகள் ...
  பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே....

  பதிலளிநீக்கு
 3. ஷைலஜா அவர்கள் கதை அருமை.
  வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. கதைக்குள் உண்மையை உருவேற்றி,, அருமை அருமை வாழ்த்துக்கள்,,,

  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. ஷைலஜாவுக்கு வாழ்த்துக்கள் நன்றாய் வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. நிர்பயா சம்பவம் நினைவுக்கு வந்தது ,சின்னசாமிக்கு எப்படி ஆறுதல் கூற முடியும் !

  பதிலளிநீக்கு
 7. பேருந்தில் இருந்தவர்களை மட்டுமல்ல... வாசித்த எங்களையும் உலுக்கிப்போட்டுவிட்டது.. அருமையான கதை. ஷைலஜாவுக்குப் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. உணர்வுபூர்வமான மிக நல்ல கதை.

  கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

  தினமலர் - வாரமலரில் பரிசினை வென்றதற்கு வாழ்த்துகள்.

  இதனை இங்கு பகிர்ந்து படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக்குக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. கதையை படித்தவுடன் மனம் கனத்து விட்டது எழுத்தாளர் ஷைலஜா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான கதை.

  தொடரட்டும் கேட்டு வாங்கிப் போடும் கதைகள்.

  பதிலளிநீக்கு
 11. அன்பு ஷைல்ஸ் . கலங்குகிறது மனசு. பூப்போல பெண்ணைப் பறி கொடுத்த தந்தையின் அவலமும் ஆவேசமும் உங்கள் எழுத்தில் உயிரோடு எழுகின்றன. மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா. நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 12. நல்லா இருக்கிற இளைய தலைமுறையை போதைக்கு அடிமையாக்கிவிட்டது ஒருகூட்டம்...

  பதிலளிநீக்கு
 13. நல்லா இருக்கிற இளைய தலைமுறையை போதைக்கு அடிமையாக்கிவிட்டது ஒருகூட்டம்...

  பதிலளிநீக்கு
 14. அருமையான கதையைப் படைத்தமைக்கு ஷைலக்காவுக்கு வாழ்த்துகளும், பகிர்ந்தமைக்கு எங்கள் ப்ளாகுக்கு நன்றிகளும்.

  பதிலளிநீக்கு
 15. பெத்தமனம் எப்படி உணர்ச்சி வசப்பட்டிருக்கும். அந்த மண் எல்லோருடய மனக்கதவுகளைத் திறக்கட்டும். பேப்பரைப்படித்தால் நிறைய நிர்பயாக்களின் கதையாகவே வருகிறது. மனுஷன் திருந்தணும். கதை மனதை உலுக்கி விட்டது. அன்புடன்

  பதிலளிநீக்கு
 16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. கதை மனதை என்னமோ செய்தது பாவம் புவனா :( எத்தனையோ புவனாக்களும் சின்னசாமிகளும் இன்னும் தொடர்கதையாக இருக்கிறர்கள் ..எதிராஜ் கல்லூரி மாணவி சரிகாவின் நினைவு வந்தது அந்த நாள் நான் அப்பா அம்மாவுடன் மவுண்ட் ரோட் ஏரியாவில் இருந்தேன் ..ட்ராபிக் டைவெர்ட் செஞ்சிருந்தாங்க அடுத்தநாள் தான தெரிந்தது :( அந்த பெண் பணக்கார வீட்டுப்பெண் இத்தனைக்கும் ..ஈவ் டீசிங் விஷயத்தில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடே இல்லை ..பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும்போது உணவோடு அன்பையும் மனித நேயத்தையும் பெண்மையை மதிக்கும் நற்பண்புகளையும் சேர்த்து ஊட்டி வளர்க்கணும்

  பதிலளிநீக்கு
 18. மனதை உலுக்கிவிட்டது. இப்படிப்பட்ட சம்பவங்கள் இப்போதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றது வெவ்வேறு விதமாகவும். குழந்தைகள் வளர்ப்பில்தான் நல்ல பண்புகள் ஊட்டப்பட வேண்டும். இதற்கு முதல் காரணம் பெற்றோர்களே.

  அருமையான கதை. எங்கள் வாழ்த்துகள், பாராட்டுகள் ஷைலஜா சகோதரிக்கு. பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!