Thursday, May 5, 2016

"உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாக மாறும்"


     ஒரு துக்கம் கேட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம்.  துக்கம் கேட்பது ஒரு சம்ப்ரதாயம்.  இதிலும் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டி உள்ளது.  என் தந்தை மறைந்த பத்தாம் நாள் இரவு என் தங்கை மாமியார் மறைந்தார்.  

     என்ன நிலைமை என்றால், என் தங்கை எங்கள் அப்பாவின் மீதி காரியங்களுக்கு வரக் கூடாது.  நாங்கள் இப்போது அங்கே துக்கம் கேட்கப் போகக் கூடாது!  எனவே எங்கள் வீட்டில் சுபம் முடிந்தவுடன் சென்றோம்.

     இதிலேயே மாறுபட்ட நடைமுறைகள் சொல்லப் பட்டன. நாங்கள் இப்போதைக்கு அங்கு போகக் கூடாது என்றும் சொல்லப் பட்டது.  
 
      போகலாம், தப்பில்லை என்றும் சிலர் சொனனார்கள்.  ஆனாலும் அவர்கள் வீட்டு சுபத்தில் மாப்பிள்ளைக்கும், தங்கை குடும்பத்தாருக்கும் நாங்கள் செய்ய வேண்டிய முறைகள் இருக்கின்றனவே..  எனவே நேற்று எங்கள் வீட்டில் சுபம் முடிந்ததால், இன்று அங்கு சென்று வந்தோம்.
 

 Image result for uber car in india images     
 
 
     ஊபர் கார் ரொம்ப வசதி.  இதே தூரத்துக்கு ஆட்டோக் காரர்கள் நூற்றைம்பது ரூபாய் கேட்டார்கள் / கேட்பார்கள்.  ஆனால் அதைவிடக் குறைவான காசு கொடுத்து காரில், அதுவும் ஏ ஸி காரில் செல்வது இனிய மாற்றம்.  ஆட்டோக்காரர்கள் அப்படியும் திருந்தப் போவதில்லை. 

     ஒரு இடத்தைத் தேடி அலைந்தபோது ஊபர் டிரைவரிடம் 'காரை நிறுத்தி, ஆட்டோக்காரரிடம் விசாரியுங்களேன்' என்றபோது ஒரு ஊபர் டிரைவர் சொன்னார். "அவர்களுக்கெல்லாம் எங்கள் மேல் கோபம் ஸார்... பலமுறை அதைக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பிழைப்பை நாங்கள் கெடுக்கிறோமாம் நான் அவர்களிடம் கேட்க மாட்டேன்"

Image result for uber car images
     
 
     வண்டியை புக் செய்யும்போது நாம் ஒழுங்காக புக் செய்தால் GPRS வசதியுடன் / உதவியுடன்  அவர்கள் யாரையும் வழி கேட்காமல் நேராக அங்கே கொண்டு போய் விடுவார்கள்தான்.  ஆனால் நாங்கள் இதில் கொஞ்சம் அரைகுறை!

     திரும்பி வரும்போது ஒரு திருப்பத்தில் திரும்பும்போது சுவரில் இருந்த வாசகம் கண்களில் மோதியது! 

  "உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாக மாறும்"

     சில சமயங்களில் இது மாதிரி வாசங்களும் தேவையாய்த்தான்  இருக்கிறது.  ஏப்ரல் மூன்றாம் தேதி என் அத்தை, ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பா, மே ஒன்றாம் தேதி தங்கை மாமியார் என்று மரணம் விளையாடிக் கொண்டிருக்கும் வீட்டில் இது மாதிரி தினசரி நாம் பார்க்கும் வார்த்தைகள் இந்தச் சூழ்நிலையில் கண்ணில் படும்போது மனதில் ஒரு சிறு மாற்றத்தை உண்டாக்குகின்றன.

     ஆமாம்,  அப்படி என்ன சந்தோஷம் ஏற்பட்டது?


     ஊபரில் போகும்போது 97 ரூபாய் வந்தது.  சௌகர்யமாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கார்.  வரும்போது சரியாக 80 ரூபாய்
தான் ஆனது என்பதுதான் அந்த சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும்!14 comments:

காரிகன் said...

நக்கல் கலந்த உண்மை. இப்படித்தான் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

மோகன்ஜி said...

ஆட்டோ மீட்டர் சூட்டில் துக்கம்
ஊபர் குளிர்வோ மகிழ்வின் பக்கம்.

கால்டாக்ஸி உல்லாசம் பழகின பின்னே
கண்டிப்பாய் கட்டணம் உயருமே அண்ணே!

இறப்பும் பிறப்பும் நடப்புதானே நட்பே?
மறக்கவே மீண்டும் பசிக்குதே தொப்பே !

ஆளே போனபின் ஆவதுதான் என்னே?
தூளே கிளப்புக ஆனவரை முன்னே.

mageswari balachandran said...

நாம் கேட்கும், பார்க்கும் நல்ல விடயங்கள் நமக்கு மகிழ்வை கொடுக்கும் என்று நாம் சொல்லிக்கொள்ளத் தான் வேண்டும்.

Ramani S said...

உங்கள் பாஸிடிவ் பதிவின் மூலம்
வாரா வாரம் நீங்களும் அதைத்தானே
தருகிறீர்கள்
வாழ்த்துக்களுடன்///

Bagawanjee KA said...

இன்னும் மதுரைக்க ஊபர் வரக் காணாமே,எண்களின் துக்கம் எப்போது சந்தோசமாக மாறும் ?

வெங்கட் நாகராஜ் said...

தமிழகம் வந்தால் ஆட்டோக்களோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. தில்லியில் 25 ரூபாய் [குறைந்த அளவு கட்டணம்] அல்லது 30 ரூபாய் கொடுத்து போகும் தூரைத்தை விட குறைந்த தூரம் செல்ல 70 அல்லது 90 கேட்கிறார்கள்.....

துக்கமும் மகிழ்ச்சியும் மாறி மாறி வருவது தானே வாழ்க்கை.... இதுவும் கடந்து போகும்.

வல்லிசிம்ஹன் said...

இது போல வாக்கியங்களே நம்மை நடத்துகின்றன ஸ்ரீராம்.
நம் வீட்டிலிம் சிங்கம் மறைடந்த பத்தாம் நாள் அவருடைய அக்காவின் கணவர் மறைந்தார்.
நான் எங்கும் போகும் நிலையில் இல்லை.
பசங்கள் சுபம் ஆனதும் போய் வந்தனர்.
போன வருடம்தான் அவர்கள் வீட்டிற்கே போனேன்.

Geetha Sambasivam said...

இனி வரும் நாட்கள் நல்லபடியாக இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

கோமதி அரசு said...

துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறினால் நல்லது தான்.

நம் மனம் சோர்வு அடைந்து இருக்கும் போது இது போல் நல்ல வார்த்தைகளை கேட்டால் நமக்கு புது தெம்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

காமாட்சி said...

சில ஸமயங்களில் பெரியவர்களின் திடீர் மறைவு சிக்கலான சூழ் நிலையை உண்டு செய்து விடுகிறது. இக்காலத்தில் கலியாண ஏற்பாடுகள் இடையே இருந்திருந்து விட்டால் தர்மசங்கடம். நிறுத்தினால் எந்த பைசாவும் திரும்பவராது. இப்படிதான் ஒருவர் பிள்ளைக்கு கல்யாணம்.அவரின் மாமா போய்விட்டார்.
பிள்ளை பிரும்மசாரிதானே. வேறொருவரைக்கொண்டு விரதம் செய்வித்து விவாகத்தை நடத்தச் சொல்லி விட்டு அவர்கள் போகாமலிருந்து விட்டனர். ஒரே ஊரில், அருகருகிலான இடத்தில். உபசாரம் கேட்பதுகூட முன்னே பின்னே இருக்கலாம். காலதேச வர்த்தமானம் துக்கம் கூட மனதில் ஒத்தி வைக்கும்படி இருக்கிறது.ஒரு உபமானத்திற்குச் சொன்னேன். இப்படி பல உதாரணங்கள் நிதி நிலையை உத்தேசித்து.
உங்கள் குடும்பத்தில் இனி யாவும் நல்ல நிகழ்வுகளாக நடை பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.உங்கள் துக்கம் எல்லாம் ஸந்தோஷமாக மாறும். எவ்வளவு இதமான ஸந்தோஷமான வார்த்தைகள். நாமும் சில இடங்களில் இம்மாதிரி வாசகங்களை கைவினைப் பொருட்களின் மீது ெழுதி வைத்தால் நன்றாக இருக்கும். அன்புடன்

‘தளிர்’ சுரேஷ் said...

சில சமயம் இப்படி தொடர் துக்கங்கள் நிகழ்வது உண்டு! 2008ல் இப்படி என் குடும்பத்திலும் தொடர் மரணங்கள் சித்தப்பா, அத்தைமாமா, தாத்தா, பாட்டி என்று தொடர்ந்தது. அதிலும் ஒரு நன்மை ஏற்பட்டது. பிரிந்திருந்த சில சொந்தங்கள் இணைந்தன. இனி எல்லாம் சுகமாக இறைவனை ப்ரார்த்திக்கிறேன்!

நம்பள்கி said...

"எங்கள் வீட்டில் சுபம் முடிந்தவுடன்"
கிரேக்கியம் அல்லது கருமாதி தானே இது!
இதை எப்படி "சுபம்" என்று சொல்லமுடியும்!

Angelin said...

சில நேரங்களில் அதிக துக்கத்தில் மன சஞ்சலத்தில் இருக்கும்போது இப்படிப்பட்ட வசன வாசகங்கள் கண்ணில் பட்டால் மனதுக்கு இதமளிக்கும் ..

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல வாசகம். சரியான தருணத்தில்.

ஊபர் நிஜமாகவே மிகவும் வசதியாக இருக்கிறது. அவர்கல் கூகுள் மேப் உபயோகித்துத்தான் வண்டி ஓட்டுகின்றது அமெரிக்காவிலும் ஊபர் போடுகின்றது. அண்டை மாநிலமான கேரளத்தில் நம்மூர் அளவு இல்லை. அங்கு கால்டாக்சிகள் கொஞ்சம் கம்மிதான் ஏனென்றால் பெரும்பான்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் சில்லறையைக் கூட தந்துவிடுவார்கள். இங்கு போல் அடாவடி செய்வதில்லை. மீட்டர்தான். கால்டாக்சியில் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் ஊபர்தான் எனது சாய்ஸ் அடுத்து ஓலா...வேறு எதுவும் புக் செய்வதில்லை...

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!