திங்கள், 6 ஜூன், 2016

"திங்க"க்கிழமை 160606 :: ஜவ்வரிசி மோர்க்கூழ்



     எனக்குப் பிடித்தால் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கக் கூடாது!  இந்த டிஷ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  என் பெரிய மகனுக்குப் பிடிக்காது.  அவன் என் அப்பா போல!  அரிசி மாவு மோர்க்களிதான் அவனுக்குப் பிடிக்கும்.  அதுவும் விசுவின் பாஷையில் டகடகடகவென நல்லெண்ணெய் மிதக்கணும்!


     வாரத்தில் இரண்டு நாட்கள் இதைச் செய்துவிடச் சொல்லி என் பாஸ் கிட்டச் சொல்வேன்.  ஒவ்வொரு நாளும் 'இன்றிரவு டின்னருக்கு என்ன' என்று அயர்ச்சியாவார் ; டென்ஷனாவார் ; கவலையாவார் ; குழப்பமாவார்...  ஆனாலும் இதை வாரம் (அல்லது 15 நாட்களுக்கு) ஒரு முறைதான் செய்வார்!

     சரி நேயர்களே... இப்போது செய்முறைக்குப் போவோமா... ஆங்..?  யாரது அங்கே எங்களுக்குத் தெரியும் என்று குரல் கொடுப்பது?  விடுங்கள்... அதோ ரெண்டு பேர் தெரியாதவர்கள் இருக்கிறார்கள்..  அவர்களுக்காக..  அல்லது இப்போது இல்லாவிட்டாலும் அப்புறம் லேட்டாக வருபவர்கள் இந்த போர்டில் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.. ஓகேயா..

     இனி, செய்முறை!


     எப்போது தேவையோ அதற்கு நாலு மணிநேரம் முன்பாக ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து ஊற வைத்து விடலாம்.  அதை அப்போதே புளிப்பு மோரிலேயே ஊறவும் வைக்கலாம்.  கீதா மாமி இன்னும் குறைந்த நேரம் ஊறினாலே போதும் என்றோ, வெந்நீரில் ஊற வைக்கலாம் என்றோ சொல்வார்கள்.



 
     குக்கரில் நல்லெண்ணெய் (அதுவும் செக்கு எண்ணெயாக இருந்தால் வாசனை!) விட்டுக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மோர்மிளகாய் (இது கூட முக்கியம்... 











சுவை சேர்க்க இது அவசியம்), சற்றுத் தூக்கலாகவே பெருங்காயம் போட்டு (பிடிக்காது என்றால் கம்மியாகவே போட்டுக் கொள்ளுங்கள்)தாளித்துக் கொண்டு ஊறியிருக்கும் ஜவ்வரிசியை அதிலிட்டு புளிப்பு மோர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து புரட்டி விட்டு, குக்கரை மூடி உங்கள் தேவைப் பக்குவத்தில் இறக்கி வைக்கலாம். நாங்கள் 6 விசிலில் இறக்குவோம்.  நல்லெண்ணெய் கொஞ்சம் கூட விடலாம்.  சுவை!




     அப்படியே சாப்பிடலாம்!  தொட்டுக்கொள்ள ஒன்றும் தேவை இல்லை.  என் அப்பாவுக்கு அரிசிமாவு மோர்க்கூழ்தான் இஷ்டம் என்றாலும் இதுவும் சாப்பிடுவார்.  தோசை மிளகாய்ப்பொடிக்கு எண்ணெய் சேர்க்காமல் மேலே தூவிச் சாப்பிடுவார்!









பின்குறிப்பு  ::  மோர்க்கூழும் மோர்க்களியும் ஒன்றே!



39 கருத்துகள்:

  1. நான் உங்கள் பெரிய மகன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. இதை சாப்பிட்டால் வாய் திறந்து பேச முடியாது போல இருக்கே?

    பதிலளிநீக்கு
  3. என் மனைவி செய்து நான் விரும்பி சாப்பிடும் உணவு இந்த மோர்க்களிதான்

    பதிலளிநீக்கு
  4. நீங்களே ஒரு முறை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் பேசிகளி நா கொஞ்சம் ..... (அதையும் நா ஏன் வாயால சொல்லனுமா )... ருசிக்கிறது

    பதிலளிநீக்கு
  5. ஜவ்வரிசி வடாம் போடுற மாதிரி தானே இருக்குது.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. போட்டோவே அழகாக இருக்கின்றதே....

    பதிலளிநீக்கு
  7. ஜவ்வரிசி உப்புமா, வடை, தாலிபீத் போன்றவை தான் பண்ணி இருக்கேன். ஜவ்வரிசி மோர்க்கூழ் பண்ணினதில்லை. ஆகவே ஊற வைக்கிறதுக்கு நான் சொல்வேன்னு எழுதி இருக்கும் கருத்து இங்கே செல்லுபடி ஆகாது! ஹாஹாஹா, உப்புமாவுக்கானாலும் சரி, வடை, தாலிபீத் போன்ற எதுவானாலும் சரி ஜவ்வரிசியை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற விடுவேன். இப்போதைக்கு இது மட்டும் தான்! மற்றவை பின்னர்!

    பதிலளிநீக்கு
  8. அரிசிமாவில் புளித்த மோர் விட்டுக் கூழ் கிளறிச் சாப்பிடணும். அதுவும் கல்சட்டியில் கிளறணும். அல்லது இரும்பு வாணலியில் கிளறணும். அந்த ருசி இந்த ஜவ்வரிசி மோர்க்கூழில் வருமோ?

    பதிலளிநீக்கு
  9. புதிய பதார்த்தம் ....
    வடகத்துக்கு வாங்கிய ஜவ்வரிசி நிறைய இருக்கு ...அதனால்
    ....முயற்சிக்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  10. ஜவ்வரிசியில் பாயசமும், வடாமும் தான் பிடிக்கும்....)) மோர்க்களி புதிதாய் இருக்கு..

    பதிலளிநீக்கு
  11. ஜவ்வரிசியில் பாயசமும், வடாமும் தான் பிடிக்கும்....)) மோர்க்களி புதிதாய் இருக்கு..

    பதிலளிநீக்கு
  12. செக்கு எண்ணெய் என்று இப்போது பாக்கெட்டில் கூட வருதே ,அதை சேர்த்துக்கலாமா :)

    பதிலளிநீக்கு
  13. ஜவ்வரிசி மோர்க்கூழ் - சரியா இருக்குமா? ஜூரம் உள்ளவர்கள் சாப்பிடும்படியாக இருக்குமா? செய்முறையில் எனக்குப் பிடித்தது, குக்கரில் வைத்து விசில் விட்டால் ஆச்சு என்பதுதான். சும்மா கை வலிக்கக் கிளறாமல், மோர்க்கூழுக்கும் (அரிசிமாவு) இந்தமாதிரி ஒரு செய்முறை சொல்லக்கூடாதா? கீதா மாமியாவது அதை எழுதியிருக்கலாம். புளித்த மோருக்கு வழியில்லாதவர்கள் என்ன செய்வது? எங்கள் ஊரில் எப்போதும் புதிய மோர்தான். அதை வெளியில் வைத்தால், மோர் கெட்டுப்போயிடும் என்ற பயம். அதனால் புளித்த மோருக்கு (அல்லது புளித்த தயிருக்கு) வாய்ப்பே இல்லை.

    எல்லாப் பின்னூட்டங்களையும் படிப்பேன். ஜவ்வரிசிப் பாயசம் பிடிக்கும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, ஜவ்வரிசி, ரவை இதெல்லாம், (பாசிப்பருப்பையும் இதனோடு சேர்த்துக்கொள்ளலாம்), கஞ்சிக்குத்தான் லாயக்கு. பாயசம் செய்தாலும் கஞ்சி என்ற நினைப்பு போகாது. ஜவ்வரிசியை, சேமியாப் பாயாசம் செய்யும்போது, 1க்குக் கால் பங்கு ஜவ்வரிசி (ஆரம்பகட்ட வேலைகளான நெய்யில் வறுத்து, சேமியாவுடன் சேர்த்து குக்கரில் வேகவைத்து....) சேர்த்தால் நன்றாக இருக்கும். இல்லாட்டா, சாபுதான வடா ('நான் செய்துபார்த்ததில்லை. உத்திரப்பிரதேச வாலாக்களின் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்). இதைவிட்டால், ஜவ்வரிசி நேராக, உடம்பு சரியில்லாதவர்களுக்குத்தான்.

    செக்கு எண்ணை என்று இப்போ ரொம்பப்பேர் போலியாக விற்கிறார்கள். நல்ல எண்ணெயைக் குறைந்த விலையில் விற்க, என்ன என்னவோ அதில் சேர்க்கிறார்கள். எனக்குத் தெரிந்து நல்ல எண்ணெய் ஒரு வருடம் வைத்திருந்தாலும் கெடாது. இந்த பாக்கெட் நல்லெண்ணெய் ஆறு மாதம் ஆனால், நல்லெண்ணை வாசனை போய் ஃப்பேரபின் வாசனை (வாசனையற்ற தன்மை) வந்துவிடுகிறது. இது இதயத்திலிருந்து எல்லா பிராண்டுகளுக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  14. ஜவ்வரிசியில் மோர்க்களி புதிதாக இருக்கிறது... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //ரெண்டு பேர் தெரியாதவர்கள் இருக்கிறார்கள்// yessssssss :))நான் நான் நான் இருக்கேன் ..செய்கிறேன் விரைவில் :)

    பதிலளிநீக்கு
  16. ஜவ்வரிசி உப்புமா செய்திருக்கிறேன். லேசாகப் புளித்த மோரில் ஊறவைத்து பிரட்டினாற்போல இருக்கும். வெங்காயம் வதக்கி சேர்ப்பேன் இத்துடன். கண்ணாடி போல் மினுமினுவென்று மிக ருசியாக இருக்கும் ஜவ்வரிசி உப்புமா. சில நிமிடங்களில் தயாராகிவிடும். மோர்க்களி செய்ததில்லை. கொஞ்சம் உப்பு போட்ட மோர்ப் பாயாசம் போல இருக்குமோ இல்ல வடகத்துக்கு கிண்டியதுபோல் இருக்குமோ எனத் தோணுது :)

    பதிலளிநீக்கு
  17. உடம்புசரியில்லை என்றால் ஐவ்வரசி கஞ்சி என்று குடித்து இருக்கிறேன். தாளிக்காமல் வேகவைத்து ஆறிய பின் மோர் ஊற்றி.
    மோர்களி என்று செய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.
    நன்றி.


    பதிலளிநீக்கு
  18. வாங்க மதுரைத்தமிழன்... உங்களுக்கும் அரிசிமாவு மோர்க்களிதான் பிடிக்குமா?

    பதிலளிநீக்கு
  19. நன்றி மதுரைத் தமிழன்.. தாராளமாகப் பேசலாம். ஒட்டாது. சுவையானது. செய்யும் முறையில் இருக்குது சூட்சுமம்!

    பதிலளிநீக்கு
  20. நன்றி மதுரைத் தமிழன்.. எனக்கு என்னவோ அரிசிமாவு மோர்க்களியை விட ஜவ்வரிசி மோர்க்களிதான் பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஸ்ரீராம்... உங்களுக்கில்லாமலா... வாங்க... செய்து கொடுத்துடுவோம்!

    பதிலளிநீக்கு
  22. இல்லை ஜேகே ஸார்... வித்தியாசங்கள் உண்டு!

    பதிலளிநீக்கு
  23. ஆ! கீதா மேடம்... நீங்கள் இதுவரை முயற்சிக்காத ஒன்றை நான் போடிருக்கிறேனா? என்ன தவம் செய்தனை! சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை போங்க..

    பதிலளிநீக்கு
  24. அப்பா காலமான பிறகு அந்த வீட்டை அலசியதில்தான் தெரிந்தது எங்கள் வீட்டுக் கல்சட்டியை அண்ணன் வெகு காலத்துக்கு முன்னரே உடைத்து விட்டார் (அதாவது அண்ணன் வீட்டு வேலைக்காரி) என்பது. புதிதாக ஒன்று வாங்க ஆசை. நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி அனுராதா ப்ரேம். செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்க..

    பதிலளிநீக்கு
  26. அடடே... வாங்க திருமதி வெங்கட் நாகராஜ். உங்களுக்கும் இந்தப் பதார்த்தம் புதுசு என்பதில் எனக்கு மகிழ்ச்சி. செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள். வெங்கட்டுக்கும் செய்து கொடுத்து, அவர் என்ன சொல்கிறார் என்று பதிவு போடச் சொல்லுங்கள்!

    :)))

    பதிலளிநீக்கு
  27. வாங்க பகவான்ஜி. அதை நான் பார்த்ததில்லை. கடையில் செக்கு நல்லெண்ணெய் என்று தனியாகத் தருவார்கள். வாசனைதான் ப்ளஸ்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க நண்பர் நெல்லைத் தமிழன்.. என்ன இப்படி சந்தேகப் படறீங்க... செய்து பாருங்கள். அரிசிமாவு மோர்க்கூழ் செய்முறை தெரியாதா? பச்சரிசி மாவு அரைத்து வைத்துக் கொண்டு அதில் நன்கு புளித்த மோர்க் கலந்து தோசை மாவு பதத்துக்குக் (கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக் கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து செய்தால் அது உப்புமா!) கலந்து வைத்துக் கொண்டு, கடுகு, உ.ப, பெருங்காயம், மோ. மிளகாய் தாளித்துக் கொண்டு (நல்லெண்ணெய் நிறைய ஊற்றணும்) கலந்த மாவைப் போட்டுப் புரட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கிச் சாப்பிடலாம். இந்த அரிசி மாவில் புளிப்பு மோர் இல்லாத பட்சம் புளி கரைத்து ஊற்றுவதுண்டு. ஜவ்வரிசியில் இப்படி இதுவரை முயற்சித்தது இல்லை.

    பதிலளிநீக்கு
  29. வாங்க வெங்கட். நிறைய பேர்களுக்கு இது புதுசு என்னும் ஆச்சர்யத்தை விட, கீதா மாமிக்கே புதுசு என்பது ஆச்சர்யமாக / சந்தோஷமாக (ஹிஹிஹி) இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  30. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...

    பதிலளிநீக்கு
  31. ஆஹா... நன்றி ஏஞ்சலின்... விரைவில் உங்கள் தளத்தில் படத்துடன் பதிவை எதிர்பார்க்கிறேன்.

    :))

    பதிலளிநீக்கு
  32. வாங்க தேனம்மை. "சும்மா" செய்து பார்க்காம மோர் புளிச்சுதோ, பாயசம் இனிச்சுதோன்னு சொல்லக் கூடாது!!!! :)))) ஒருமுறை முயற்சித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  33. வாங்க கோமதி அரசு மேடம். செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  34. ஜவ்வரிசி மோர்க் கூழ் கேள்விப்பட்டது இல்லை! புதிய டிஷ்! நன்றி!

    பதிலளிநீக்கு
  35. நான் தெரியாதுனு எங்கே சொன்னேன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஜவ்வரிசிக் கஞ்சி போட்டு அதில் மோர் விட்டுச் சாப்பிட்டது உண்டு. அதையே கெட்டியாக நல்லெண்ணெய் விட்டுத் தாளித்துக் கிளறினால் கூழ்! இதுக்குப் போய் அலட்டிக்கலாமா? :P :P :P :P

    பதிலளிநீக்கு
  36. அட ஸ்ரீராம் உங்களுக்கும் ஜவ்வரிசி மோர்க்களி பிடிக்குமா???!!!!! கை கொடுங்க..எங்க வீட்டுல நாங்க எல்லோருமே சாப்பிடுவோம். செம டேஸ்டா இருக்கும். இதே போல ரெசிப்பி. மஹாராஷ்ட்டிராவில் செய்யும் சாபுதானா கிச்சடி, ஜ்வ்வரிசி வடை, நம்மூர் ஜவ்வரிசி உப்புமா, இப்படி ஜவ்வரிசி நம்ம வீட்டில் பிடிக்கும். வீட்டில் ஜவ்வரிசி வடாமிற்குச் செய்யும் அந்தக் கூழைக் கூட எலுமிச்சை பிழிந்ததும் இன்னும் கொஞ்சம் கூடுதல் பிழிந்து கொண்டு சூடாகச் சாப்பிடுவார்கள். மோர்க்கூழும் செய்வதுண்டு (அரிசிமாவு)

    பதிலளிநீக்கு
  37. அட ஸ்ரீராம் உங்களுக்கும் ஜவ்வரிசி மோர்க்களி பிடிக்குமா???!!!!! கை கொடுங்க..எங்க வீட்டுல நாங்க எல்லோருமே சாப்பிடுவோம். செம டேஸ்டா இருக்கும். இதே போல ரெசிப்பி. மஹாராஷ்ட்டிராவில் செய்யும் சாபுதானா கிச்சடி, ஜ்வ்வரிசி வடை, நம்மூர் ஜவ்வரிசி உப்புமா, இப்படி ஜவ்வரிசி நம்ம வீட்டில் பிடிக்கும். வீட்டில் ஜவ்வரிசி வடாமிற்குச் செய்யும் அந்தக் கூழைக் கூட எலுமிச்சை பிழிந்ததும் இன்னும் கொஞ்சம் கூடுதல் பிழிந்து கொண்டு சூடாகச் சாப்பிடுவார்கள். மோர்க்கூழும் செய்வதுண்டு (அரிசிமாவு)

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!