4.11.25

சிறுகதை : பதினைந்து நாள் - ஸ்ரீராம்

 ஒரு பழைய ஜோக் ஞாபகத்திற்கு வருகிறது.

கடுமையான சிமென்ட் நெருக்கடிக் காலத்தில் வீடுகட்டிக் கொண்டிருந்த ஒருவன் உடனடியாக சிமென்ட் தேவை ஏற்பட்டு அலைந்து கொண்டிருந்தபோது எதிரே கடவுள் தோன்றினாராம். "என்ன வேண்டும் கேள் பக்தா...!" என்றாராம். யோசிக்காமல் "உடனடியாக ஐந்து மூட்டை சிமென்ட் வேண்டும் கடவுளே.." என்றானாம் அவன். 
நான் கூட அப்படிக் கேட்டிருக்கலாம். கனவா நினைவா என்று தெரியாத நிலையில்தான் அது நிகழ்ந்தது. அப்போது ஏதும் எனக்குக் கவலை - அப்போதையக் கவலை - எதுவும் இருந்ததாக ஞாபகமில்லை. வந்த உருவம் கடவுளா, காலனா, அதுவும் தெரியவில்லை. கேட்ட கேள்வியும் வந்த பதிலும்தான் 'காலனா' என்ற கேள்வியையே மனதில் உண்டாக்குகிறது. யோசித்துப் பார்த்தால் கேள்வியும் எனதில்லையோ என்றும் தோன்றுகிறது. கேட்க வைக்கப் பட்டேனோ என்னமோ....

பரீக்ஷிததுக்கு தன் நேரம் தெரிந்தது போல எனக்கும் தெரிந்து விட்டது.


'சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்'னு வசனமெழுதினார் சுஜாதா. எனெக்கென்னமோ பெரிய நரகமாயில்லை. ஏதோ எதிர்பார்த்த ஒன்று சட்டென முடிவுக்கு வந்தது போல மனதில் ஒரு வெறுமை. நிறைவு என்று அதைச் சொல்லலாமா என்றும் தெரியவில்லை. ஆனால் அப்படியும் சொல்லலாம். என் சம்பந்தப் பட்ட எல்லாமும் நிறைவு பெறப்போகும் நாள் என்பதால் சொல்லலாம். புன்னகைக்கத் தோன்றியது. இந்நிலையில் புன்னகைத்தால் செயற்கையாகத் தோன்றும் என்றும் தோன்றியது. யாருக்கு செயற்கையாகத் தோன்றும்? இது எனக்கு மட்டும்தானே தெரியும்? எனக்கே என் புன்னகை செயற்கையாக இருக்க முடியுமா?


நானே எனக்குப் பகையானேன் போல, நானே எனக்கு செயற்கையாக இருக்க முடியுமா?  பல சமயங்களில் நமக்கு நியாயம் என்று நினைப்பது அடுத்தவருக்கு நியாயம் என்றிருக்க வேண்டிய அவசியமில்லையே... அப்போது நான் சரி என்ற எண்ணம் எனக்குள் நான் ஏற்படுத்திக் கொள்ளும்போது என்னை, என் மனசாட்சியை நான் ஏமாற்றி செயற்கையாகத்தான் இருந்திருப்பேன்....


செய்ய வேண்டிய கடமை என்று ஏதுமில்லை என்று நினைக்கிறேன். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடித்து பேரனும் பார்த்தாயிற்று. மனைவி எப்போதோ விடைபெற்றுச் சென்று விட்டாள். அதற்காக எனக்கு நீங்கள் எழுபது, எண்பது என்றெல்லாம் வயது கணக்கு போடக் கூடாது. அறுபதைத் தொடப் போகிறேன். அவ்வளவுதான். இருபத்தொரு வயதில் திருமணம். சென்ற வருடம் பேரன் பார்த்து விட்டேன். மகள் திருமணத்தையும், பேரனையும் பார்க்க மனைவிக்குக் கொடுத்து வைக்கவில்லை. 
வாழ்வில் பெரிய வருத்தம் ஏதுமில்லை. அவ்வப்போது சமையல் எரிவாயு கிடைக்கவில்லை, செல்லுக்கு டவர் கிடைக்கவில்லை, நினைத்த நேரத்துக்கு பஸ் வரவில்லை போன்ற சாதாரண குறைகள்தான். அப்படியே யோசித்துப் பார்க்கும்போது பெரிய சந்தோஷம் என்றும் கூட ஏதும் இல்லை. பெரிய எதிர்பார்ப்பு என்று ஏதும் இல்லாததால் ஏமாற்றம் ஏதும் இல்லை.  'இது நடக்க வேண்டும் என்று இருக்கிறது என்பதால் இவையெல்லாம் நடக்கிறது' என்கிற எண்ணம் மனதில் பதிந்து விட்டதால் வருத்தங்களும் சந்தோஷங்களும் நிலைத்து நின்று பாதித்ததில்லை.

அதே நிலைதான் இப்போதும். மரணம் எப்போது என்று தெரிந்து விட்டாலும், எந்த வகையில் வரும் என்ற கேள்வி மட்டும் மனதில்.


நிதானமாகச் செயல்பட்டேன். இருக்கும் ஒரு வீட்டையும் இரண்டு மனைகளையும் யாருக்குச் சேர வேண்டும் என்று எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுதி வைத்தேன். கிரெடிட் கார்டை சரண்டர் செய்தேன் புதிதான ஒன்றுக்கு அவசியமில்லையே..! வங்கிக் கணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
 எவ்வளவு பணம் இருக்கிறதோ அதைப் பிரித்து பங்கு வைத்தேன். என்னிடம் போதுமான அளவு வைத்துக் கொண்டு மிச்சத்தைத்தான் பிரித்தேன். இருக்கும் வரை சாப்பிட வேண்டுமே... பீச் சென்று மணலில் அமர்ந்து மக்களையும், கடலையும் பார்க்க வேண்டும்...மிளகாய் பஜ்ஜி சாப்பிட வேண்டும். பாசந்தி சாப்பிட வேண்டும். வருத்தமும் சந்தோஷமும் இல்லையென்றுதான் சொன்னேன். ஆசை இல்லையென்று சொல்லவில்லையே...! ஆசை யாருக்குத்தான் இல்லை? ஆனால் என்னுடைய ஆசைகள் எல்லை மீறாதவை. என்னுடைய எல்லை எதுவென்று எனக்கும் என் கனவுகளுக்கும் தெரிந்திருந்தது. 

இதோ, இன்றோ நாளையோ... இன்று என்றுதான் நினைத்திருந்தேன். பேசிய நாளைக் கணக்கில் சேர்க்கா விட்டால் நாளை..! இதுவரை முடிவுக்கான எந்த அறிகுறியும் தெரியாததால் இந்த கணக்குக் குழப்பம். திடீரென ஒரு மாசிவ் அட்டாக் வருமோ...!


கையிலிருந்த புத்தகத்தை மூடி மேஜையின் ஓரமாக வைத்தேன். தலை பாரமாக, கண்கள் எரிச்சலில் சூடாக இருப்பது போலத் தோன்றியது.


அப்படியே மேஜையில் கைவைத்துத் தலையை கைகளுக்கும் புதைத்தபோது கைகள் காட்சிக்குப் பக்கத்தில் இருக்க, என் கைகளை நானே வெளியாள் போலப் பார்த்தேன். உணர்ச்சியற்று, உபயோகமற்று போகப்போகும் கைகள்...  மேஜையின் மேலே கைகளை அப்படியே நீள வாக்கில் கிடத்தினேன். 'இப்படித்தான் ஆடாமல் இருக்கும்...' கொஞ்ச நேரம் அசையாமல் இருந்து, எந்த அவயங்களையும் அசைக்காமல் மரணமாக வாழ்ந்து பார்த்தேன். மறுபடியும் புன்னகைக்கத் தோன்றியது. எல்லோரும் கடந்த காலங்களைத்தான் மறுபடி தன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து பார்ப்பார்கள். நான் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை வாழ்ந்து பார்க்கிறேன். நானே கடந்த காலமாக மாறப் போவதைத்தானே செய்து பார்க்கிறேன்?


மரணத்தை வாழ்ந்து பார்க்க முடியுமா? என்ன முரண்?


இப்போது எழுந்து அருகிலிருந்த கட்டிலில் கால்கள் நீட்டிப் படுத்துக் கொண்டேன். கைகளை வயிற்றின் நடுவில் க்ராஸ் அமைத்தேன். தலையை நிமிர்த்தி ஒரே சீராக வைத்து மூச்சை நிறுத்தி, இல்லை, இல்லை, அடக்கி கூரையை வெறித்தேன். கண்கள் மூடியிருக்க வேண்டுமோ...?


மூட முடியவில்லை. அறையின் மேற்கூரையில் விளக்கணைத்தால் நட்சத்திரங்கள் தெரியும் அழகிய ஆகாயம் தெரியும் வண்ணம் அந்த விசேஷ பெயின்ட் அடிக்கப் பட்டிருந்தது. கண்களை மூடாமல் அந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடியே, மேகக் கூட்டங்களின் நடுவே நட்சத்திரங்களை ஒதுக்கியபடி எல்லையில்லா காலப் பயணத்தில் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் பயணம் செய்தேன். கற்பனையில் பயணத்தை எங்கு நிறுத்துவது என்று குழப்பம் ஏற்பட்டது. அதைப் பற்றி நிச்சயமான ஒன்றாக எதுவும் இதுவரைப் படித்ததில்லை! வானில் இரண்டு பங்களாக்கள் சொர்க்கம் ஒன்று நரகம் ஒன்று என்று இருப்பது போலக் கற்பனை செய்ய முடியவில்லை.

அப்படியே நிறுத்தினாலும் எந்த வீட்டில் இறங்குவது என்று முடிவு செய்வது யாராக இருக்கும்? பாவம் எது புண்ணியம் எதுவென்று ஒரு பொது நீதியாக நமக்குள் பேசிக் கொள்வதுதானே...  சொர்க்கம் என்று நினைத்துக் கொண்டிருப்பதே நரகமாகி விட்டாலும் என்ன செய்வது?  வெளியில் ஓடித் தப்பிக்க முடியுமா? மாற்றலுக்குக் கேட்க முடியுமா? எனில், யாரிடம்?

வேண்டாம், இந்தக் கற்பனை. ஒதுக்கி விட்டு பயணத்தையே சுற்றிச் சுற்றித் தொடர்ந்தேன். சுற்றி வந்தால் அடுத்து ஜனிக்கக் காத்திருக்கும் ஒரு புதிய உயிருக்குள் புகுந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வந்தது.

கண்களைத் திறந்து வைத்திருந்திருக்கக் கூடாது. மூடியிருந்திருக்க வேண்டும்.  திறந்தே இருந்து,  வானம் கற்பனைக் காட்சிக்கு அகப்பட்டதால்தானே பயணக் கற்பனை?  கண்களை மூடிக் கொண்டிருந்திருந்தால் யோசனை ஏதுமின்றி பிணம் போலவே படுத்திருந்திருக்கலாம்.


சிக்கலான கற்பனையை சிக்கலான வார்த்தையமைப்புகளோடு கற்பனை செய்வதாகத் தோன்றியது. இதுவும் எனக்குத் தேவையா இல்லையா என்று முடிவெடுக்கத் தெரியாததால் கற்பனையை மனச் சேமிப்புக் கிடங்கில் அந்த அளவில் சேமித்து, கற்பனை நீக்கி எழுந்தேன்.


இத்தனை நாட்களுமே நாட்களும் நேரமும் மெல்லத்தான் நகர்ந்தன. வேகமாக ஓடியதாகக் கற்பனை செய்ய வேண்டுமானால் எனக்கு மரணபயம் இருக்க வேண்டும். மரண பயம் எப்போது வருகிறது? ஆசைகள் தீராத போதா, கடமைகள் தீராத போதா? ஆசைகள் சுயநலத்தோடும், கடமைகள் பாசங்களோடும் பிணைக்கப் பட்டவை. பாசங்களை அனுபவங்கள் அறுக்கின்றன. நீக்குகின்றன. நம்மால் இருந்த உபயோகம் தீர்ந்த போது நம்மை நாடி வருபவர்கள் யாருமில்லை. அயல் மாநிலத்துக்கு அனுப்பப்படும் ஆக்கூட்டம் போல உடன் அதே நிலையில் பயணிக்கும் மாக்களே நம் துணை. அதுவும் வழித்துணைதான்.


என்னால் எந்த பயனும் என் உறவுகளுக்கு இல்லை என்றறிந்து நான் ஒதுங்கித்தான் இருக்கிறேன். அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு அவர்கள் மேல் குறையுமில்லை. அவர்களுக்கு என் மேல் மலையளவு குறையிருக்கலாம். என்னைப் போல அவர்களும் குறையற்று இருக்க வேண்டும் என்று கட்டாயமுமில்லை.


துணிகளை ஒன்றிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தானம் செய்தேன். பாத்திரங்களை ரக வாரியாக அடுக்கி மேலே வைத்தேன். சுய சமையல். தேவைக்கு மட்டும் அளவாக பாத்திரங்கள் கீழே வைத்தேன். புத்தகங்களைச் சீராக அடுக்கி வைத்தேன். வீடு குப்பைக் கூளம் இல்லாமலும், அடைசல் இல்லாமலும் சீராக வைத்தேன். 


எதைச் செய்தாலும் என் நேர்த்தியைப் பற்றிப் பேசுபவர்கள் இதையும் பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை அப்படிப் பேச வேண்டும் என்று கூட நினைத்துச் செய்தேனோ என்னமோ....  இருந்தாலும் தப்பில்லையே....!

ஏதோ ஊருக்குக் கிளம்புவது போல உணர்ந்தேன். ஊருக்குக் கிளம்பினால் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு போக வேண்டும்! நான் யாரிடம் போய், என்னவென்று சொல்ல? நம்புவார்களா என்ன?  ஆனால் ஒன்று மரண வீட்டில் சொல்லாமல்தான் கிளம்ப வேண்டும் என்று சொல்வார்களே... "வூட்ல சொல்லிக்கினு வந்தியா..." ஏதோ சாலைப் போக்குவரத்தில் எப்போதோ கேட்ட ஏதோ ஒரு வாகன ஓட்டியின் குரல் காதில் ஒலித்தது. மறுபடியும் புன்னகை வந்தது. ரொம்பத்தான் புன்னகைக்கிறேனோ....!


கருடபுராணம் கண்ணில் பட்டது. 'படிக்க வேண்டிய காலம்' போட்டிருந்தது. ஏற்கெனவே படித்ததுதான். இப்போதே படித்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்துக் கொண்டே அடுத்து இருந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துப் புரட்டினேன். காலக் கணக்குப் பற்றிப் போட்டிருந்ததில் கண்கள் நின்றன.


இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம்.  அறுபது நாழிகை ஒரு நாள். 15 நாட்கள் ஒரு பக்ஷம். 2 பக்ஷங்கள் (வளர்பிறை, தேய்பிறை) ஒரு மாதம். 6 மாதங்கள் ஒரு அயநம். இரண்டு அயநங்கள் (உத்தராயணம், தட்சிணாயனம்) ஒரு ஆண்டு. இது மனிதர்களின் காலக் கணக்கு.


மனிதர்களின் ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்.....


படித்துக் கொண்டே வந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கடைசி வரி மின்னலடித்தது. அன்று நடந்த உரையாடல் மறுபடி நினைவுக்கு வந்தது.

'என் கணக்குக் கேட்கிறாயா? உன் கணக்குக் கேட்கிறாயா?'

'என் காலமுடிவுக்கு உன் கணக்கைத்தான் கேட்கிறேன்...'


'பதினைந்து நாள்...'

59 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்ல வந்தது புரிந்தாலும் எதற்கு இந்தக் கற்பனை என்று தோன்றியது. வாழ்க்கைக் கடமைகள் நீண்டவை. செய்யச் செய்யக் குறையாது நீள்பவை. ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டவைகளை நிறைவேற்றவே பிறப்பெடுத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை தான்! இதை வேறு எதனோடும் சம்பந்தப்படுத்தி பார்த்துக் கொள்ளக் கூடாது!! உங்கள் அன்புக்கு நன்றி ஜீவி சார்.

      நீக்கு
  2. ​//என் கணக்குக் கேட்கிறாயா? உன் கணக்குக் கேட்கிறாயா?'

    'என் காலமுடிவுக்கு உன் கணக்கைத்தான் கேட்கிறேன்...'

    'பதினைந்து நாள்...'​//

    முக்கியமான ஒன்றை தெளிவு படுத்தாமல் குழப்பத்தில் கதையை முடித்துவிட்டீர்கள். இந்த உரையாடல் யாருடன் நடைபெற்ற்து என்பது தெளிவில்லை. மனிதனிடம் என்றால் வெறும் ஜோசியம். தேவனுடன் என்றால் கணக்கு உரையாடலுக்கு முன்பே தீர்ந்துவிட்டது என்று அர்த்தம். இந்த இடத்தில தான் கொஞ்சம் சறுக்கல்.

    வாழ்நாளை கணக்கு பார்க்காமல் மீதி நாட்களை உருப்படியாக வாழ்வதே சிறந்தது.

    'கடவுள் வந்திருந்தார்' போன்ற கற்பனை. நிஜம் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி JKC ஸார்.. முடிந்தால், தேவைப்பட்டால் பின்னர் விளக்கம் அளிக்கிறேன்..

      நீக்கு
    2. ​'அன்று நடந்த உரையாடல்' என்பதை 'அன்று கனவில் நடந்த உரையாடல்' என்று திருத்தி விட்டால் சரியாகிவிடும். கனவாகும்பொது யார் என்ற கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை!

      Jayakumar

      நீக்கு
    3. கனவாகவும் இருக்க முடியாத ஒரு நிலை என்பது போல எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. முருகா சரணம்..  முருகா சரணம்,..

      வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

      நீக்கு
  4. அருமையான நடை! மனித வாழ்க்கையை பற்றிய விசாரம், புதுமைப்பித்தனின் கயிற்றரவு கதையை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க TM...  அப்பாடி...  முதல் பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்.   

      உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் ரசித்திருக்கிறீர்கள்.  நன்றி.  கயிற்றரவு தேடிப்படித்து விடுகிறேன்.

      நீக்கு
  5. //மரணத்தை வாழ்ந்து பார்க்க முடியுமா? என்ன முரண்?// இந்த ஆத்ம விசாரம்தான், வெங்கடராமன் என்ற சிறுவனை அரை மணி நேரத்தில் ரமண மகரிஷி ஆக்கியது! போகிற போக்கில் ஒரு மிகப்பெரிய விஷயத்தை தொட்டுச் சென்று இருக்கிறீர்கள். Brilliant!

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. ரசித்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.  படிக்க முடிந்ததா?

      நீக்கு
  7. கதையின் பக்கமே வரவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் படிக்க முன்வரவில்லையா?  எங்களபிளாக்கின் கதைப்பக்கம் உங்கள் மொபைலில் வரவில்லையா?

      நீக்கு
  8. மனதின் அவஸ்தை யாருக்கும் புரிவதில்லை

    பதிலளிநீக்கு
  9. ஒரு சிறுகதை எந்தத் தளம், யார் கதாபாத்திரம் என்பதைப் பொறுத்து உரையாடல்கள் எழுத்து நடை எல்லாமே மாறும். மிகச் சிறப்பான நடை. தீம் அருமை. ஆத்ம விசாரம் மிக நன்று. முடிவும் சூப்பர்.

    மிகவும் பிடித்திருந்தது. இடையில் ரொம்ப த்த்துவ விசாரமாக இருக்கிறதே என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... மனதின் எண்ணங்களை நிறுத்த முடியுமா? அதுவும் 'இந்த விஷயம்' வெளியில் சொல்ல முடியாத அவஸ்தை. முதல் பாரா பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  10. ஒவ்வொருவர் மனதிலும் எழும் கவலைகள், சிந்தனைகள் மற்றவர்களுக்குப் புரியாது. நாம் வாழ்ந்த வீட்டிற்குச் செல்லும்போது நமக்கு ஏற்படும் உணர்வு மற்றவர்களுக்கு ஏற்படச் சாத்தியமில்லை என்பது போல.

    வாழ்நாளின் இறுதி தெரிந்துவிட்டால், எதையுமே ஒரு ஒழுங்குமுறையோடு செய்ய ஆசைப்படுபவர்கள், இறுதிக் கடமைகளையும் ஓரளவு சீராகச் செய்துவிடலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வாழ்நாளின் இறுதி தெரிந்துவிட்டால், எதையுமே ஒரு ஒழுங்குமுறையோடு செய்ய ஆசைப்படுபவர்கள், இறுதிக் கடமைகளையும் ஓரளவு சீராகச் செய்துவிடலாமோ? //

      எல்லோராலும் முடியுமா?  சமீபத்தில் பார்த்த அனுபவங்களிலிருந்து அது முடியாமல் பதற்றமடைபவர்களையே பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. நெல்லைஜி, //ஒவ்வொருவர் மனதிலும் எழும் கவலைகள், சிந்தனைகள் மற்றவர்களுக்குப் புரியாது. நாம் வாழ்ந்த வீட்டிற்குச் செல்லும்போது நமக்கு ஏற்படும் உணர்வு மற்றவர்களுக்கு ஏற்படச் சாத்தியமில்லை என்பது போல.// இது 'தொடர்பாக' sonder, human lot என்று அருமையான இரு பதங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன (தமிழில் யாரும் பெயர்த்து இருப்பதாக தெரியவில்லை)... Just thinking

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  12. கதையை கதையாகத்தான் படிக்க வேண்டும். கதாசிரியரையோ அவர் வாழ்க்கையையோ தொடர்புபடுத்தக் கூடாது.

    இறப்பு நாள் சரியாக்க் கணக்கிட்டு, அதன்படி மறைந்தவர்கள் இருவர் பற்றித் தெரியும். அதில் ஒன்று சுவாரசியமானது.

    ஜோசியம் நன்கு கற்றுக்கொண்ட ஒரு மாணவி (குழந்தைகள் இருப்பவர்), தன் அப்பா உடம்பு சரியில்லாமல் இருக்கிறாரே.. அவர் ஆயுள் எப்போது முடிகிறது என ஆராய்ந்துபார்த்து தன் நோட் புத்தகத்தில் எழுதிக்கொண்டாராம்.

    அவ்வப்போது அருகிலிருக்கும் அப்பா வீட்டிற்குச் சென்று வருவார். ஒரு நாள், அப்பா, இங்க வர்றியாம்மா.. ஒரு நாள் இங்கேயே இருந்துவிட்டுப் போம்மா என்று சொல்ல, அவரோ.. கொஞ்சம் வேலைகள் இருக்குப்பா, நாளைக்கு வருகிறேன் என்றாராம். அடுத்த நாள் அவர் அப்பா மறைந்துவிட்டார். உடனே ஜோசிய நோட்டைப் பார்த்தபோது தான் முந்தைய நாள் என்று குறித்திருப்பதையும் கணக்கு சிறிது தவறி மறுநாள் அப்பா மறைந்திருப்பதையும், நோட்டை சில நாட்கள் முன்பே பார்த்திருந்தால் அப்பா விருப்பப்பட்டபடி ஓரிரு நாட்கள் அவரோடேயே இருந்திருக்கலாமே என நினைத்தாராம்.

    எது நடக்கவேண்டுமோ அதுவே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கதையை கதையாகத்தான் படிக்க வேண்டும். கதாசிரியரையோ அவர் வாழ்க்கையையோ தொடர்புபடுத்தக் கூடாது. //

      உண்மை. மிக உண்மை.

      இறக்கும் நாள் சொல்லி மறைந்தவர்கள் பற்றி நானும் படித்திருக்கிறேன்.  ஆச்சர்யமாக இருக்கும்.  நம்புபவர்களுக்கு நாராயணன்.  அல்லாதவர்களுக்கு வேறானவன்.

      நீக்கு
    2. எங்கள் அப்பாவும் தன் மரணத்தைப்பற்றி, இவ்விதமாக அனைவரிடமும் சொல்லிக் கொண்டேயிருந்தார் .நாங்கள் எதிர்பார்க்காத ஒரு நிமிடம் அது நடந்து விட்டது. ஏனெனில் அவரும் ஒரு ஜோதிடர்தான். அந்த நினைவுகள் எ(இ)ன்றும் என் மனதில்.

      நீக்கு
    3. இப்படி தான் மறையும் நாளை துல்லியமாக கணிப்பவர்கள் அபூர்வம்.  நிறைப்பேர் ஒவ்வொரு நொடியிலும் மரணத்தோடேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள் - பயத்தில்.

      நீக்கு
    4. உண்மையில், பெரும்பாலானவர்களுக்கு மரணம் நிகழும்போது அது மிக்க சந்தோஷத்தைக் கொடுக்குமாம். க்ஷண நேரத்தில் அவர்கள் வாழ்வில் நடந்த செய்த தவறுகள்லாம் வந்து போகுமாம். ஆன்மா விடுதலைக் காற்றை சுவாசிக்குமாம். இப்படீல்லாம் சொல்றாங்க... வந்தால்தானே தெரியும்?

      நீக்கு
    5. நெல்லை, அது ஒரு சிலருக்குத்தான். சிலருக்கு வருத்தமாக இருப்பதையும் பார்த்திருக்கிறேன். கையைப் பிடித்துக் கொண்டு, பல அட்வைஸ்கள் வரும்.....ஊருக்குப் போகும் போது பிரிவதற்கு மனமில்லாமல் வருவது போன்று, இப்பிரிவிலும் வரும்.

      //ஏதோ ஊருக்குக் கிளம்புவது போல உணர்ந்தேன். ஊருக்குக் கிளம்பினால் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு போக வேண்டும்//

      இந்த வரிகளைப் பார்த்ததும் கருத்திட வந்தேன். நெல்லையும் கருத்தைப் பார்த்ததும் இங்கு போட்டிடலாம்னு

      கீதா

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. உண்மையில் சொல்லப்போனால் இது கதை அல்ல.! ஒவ்வொரு மனித மனங்களுக்குள் தோன்றும் உண்மை அலசல்கள். ஆனால், அதை அலசும் நேரங்கள், சந்தர்ப்பங்கள் மாறுபடும். அல்லது மாறுபாட்டை அடைய வைத்துப் பார்த்து ரசிப்பவன் அந்த கடவுள் எனவும் கொள்ளலாம்.

    /பெரிய எதிர்பார்ப்பு என்று ஏதும் இல்லாததால் ஏமாற்றம் ஏதும் இல்லை. 'இது நடக்க வேண்டும் என்று இருக்கிறது என்பதால் இவையெல்லாம் நடக்கிறது' என்கிற எண்ணம் மனதில் பதிந்து விட்டதால் வருத்தங்களும் சந்தோஷங்களும் நிலைத்து நின்று பாதித்ததில்லை/

    இதை அடையவே ஒரு குறிப்பிட்ட காலகட்டம் தோன்ற வேண்டும். அந்த பாக்கியத்தை படைத்தவன் அருள வேண்டும். அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    நெருங்கிய உறவுகளின் மரணத்தை பார்க்கிறோம். நாளை நமக்கும் இதுதான் என அச்சமயத்தில் உணர்கிறோம். ஆனால், மறுநாள் இயல்பான வாழ்வை, ஆசாபாசங்களை இறைவன் ஊட்டி விட்டு விடுகிறான். மற்றபடி, ஒவ்வொருவரின் கண்முன் அவன் தோன்றி "இனி இத்தனை நாள்தான் உனக்கும் " என அறிவுறுத்துவது சாத்தியமில்லை என்பதை அவனும் உணர்வான்.

    கதை கற்பனையென்றாலும் உங்கள் எழுத்து நடை, மரணபயமின்றி, மரணத்தை சந்திக்கலாம் என்ற தைரியத்தை தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆனால், அதை அலசும் நேரங்கள், சந்தர்ப்பங்கள் மாறுபடும் //

      அதனால்தான் நம் கதாநாயகன் தனியாக இருப்பவன்!

      // நெருங்கிய உறவுகளின் மரணத்தை பார்க்கிறோம். நாளை நமக்கும் இதுதான் என அச்சமயத்தில் உணர்கிறோம். ஆனால், மறுநாள் இயல்பான வாழ்வை, ஆசாபாசங்களை இறைவன் ஊட்டி விட்டு விடுகிறான் //

      "இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்..   அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டேன் எனும் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

      ஊரெல்லாம் கூட ஒலிக்க அழுதிட்டு எனும் திருமூலர் பாடலும் நினைவுக்கு வருகிறது.

      // உங்கள் எழுத்து நடை, மரணபயமின்றி, மரணத்தை சந்திக்கலாம் என்ற தைரியத்தை தருகிறது. //

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. உங்கள் கதையை படித்ததும், நான் என்னை கண்மூடி மீளா துயிலில் இருந்தால் (அப்புறம் என்னால் பார்க்க முடியாதே:)))).) எப்படியிருக்குமென எடுத்து பார்த்துக் கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படம் நினைவுக்கு வருகிறது. இதை என் மகளிடம் சொன்ன போது, இதற்குத்தான் ஃபோனில் உனக்கு ஷெல்ஃபி எடுக்க கற்றுத் தந்தது தவறென கூறினாள். உங்கள் கதையின் கதாநாயனைப் போல நானும் மரணத்தை விரும்பி ஏற்க ஆரம்பித்து விட்டேன் போலிருக்கிறது. வந்தால் சரிதான்..!!

      நீக்கு
    3. அவஸ்தைகள் இல்லாத ஆரோக்கியமான மரணத்தை இறைவன் அருள வேண்டும். இதுதான் நான் தினமும் இறைவனிடம் பிரார்த்திப்பது. முக்கால்வாசி இது அனைவருமே பிரார்த்திப்பது கூட.

      நீக்கு
    4. // நான் என்னை கண்மூடி மீளா துயிலில் இருந்தால் (அப்புறம் என்னால் பார்க்க முடியாதே:)))).) எப்படியிருக்குமென எடுத்து பார்த்துக் கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படம் நினைவுக்கு வருகிறது. //

      ஆம்..  இந்த ஆசை கண்ணதாசனுக்கும் வநததே..  

      நீக்கு
    5. // அவஸ்தைகள் இல்லாத ஆரோக்கியமான மரணத்தை இறைவன் அருள வேண்டும். இதுதான் நான் தினமும் இறைவனிடம் பிரார்த்திப்பது //

      யாரார்க்கு எது என்று விதி போடும் பாதை...

      நீக்கு
  14. கதையின் கரு அழுத்தமானது.. நொந்திருக்கின்ற மனதுக்கு வாசிப்பில் விருப்பம் இல்லை என்பதுவே எனது கருத்து

    பதிலளிநீக்கு
  15. நான் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை வாழ்ந்து பார்க்கிறேன். நானே கடந்த காலமாக மாறப் போவதைத்தானே செய்து பார்க்கிறேன்?//

    சூப்பர் ஸ்ரீராம். கதை மிக அருமை. நான் என்றால் உடனே அதை கதை எழுதுபவரோடு தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடாது.

    கதையை கதையாகத்தான் பார்க்க வேண்டும்.

    அருமையா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம். அழகான நடை. மீண்டும் வருகிறேன், கொஞ்ச நேரத்தில்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. பல ஆன்மீகத் துறவிகளும் (கதையிலும் கொஞ்சம் அது எட்டிப் பார்க்கிறது!) இந்த நிலையில் கேள்விகேட்டுத்தான் ஆன்மீகத் தேடலில் செல்வதாக வாசித்திருக்கிறேன். குறிப்பாக ரமணர் அதுவும் சின்ன வயதிலேயே.

    பலருக்கும் இம்மாதிரியான கேள்விகள் எழலாம். மரணத்தை அறிய நேரும் போது அலல்து கனவிலோ கற்பனையிலோ சிந்திக்கும் போது.

    சுஜாதா சொல்லியிருந்ததை நானும் நினைத்தேன் கதை வாசிக்கும் போது அதை நீங்களும் சொல்லியிருக்கீங்க ஸ்ரீராம்.

    இப்ப சற்று ப்ரேக் .....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய சிந்தனைகள் பொது கீதா. அதனாலேயே கதையுடன் ஒன்ற முடியும்.

      நீக்கு
    2. ஆமாம் கதையுட்ன ஒன்ற முடிந்தது.

      கீதா

      நீக்கு
  18. /// வாழ்நாளின் இறுதி தெரிந்துவிட்டால், எதையுமே ஒரு ஒழுங்குமுறையோடு செய்ய ஆசைப்படுபவர்கள், இறுதிக் கடமைகளையும் ஓரளவு சீராகச் செய்துவிடலாமோ?///

    நெல்லை அவர்களது கருத்து அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை. ஆனால் சிரமம். அந்தப் பக்குவம், நிதானம் எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை. பதறி நொந்து புலம்புபவர்கள் தான் அதிகம்.

      நீக்கு
  19. தத்துவார்த்தமான கதை. மனதில் எழும் பல தத்துவங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. முடிவு சூப்பர் ஸ்ரீராம்....

    ஹையோ மீண்டும் வரேன்னு சொல்லிட்டு இங்கேயே இருக்கிறேன்...இல்லை இப்ப ஓடியே ஆக வேண்டும் கடமைகள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா..  உங்கள் அவசரத்தை, அவஸ்தையை, அவசியத்தை  புரிந்து கொள்ளாமல் இதை பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்!!!

      நீக்கு
    2. அதெல்லாம் இல்லை ஸ்ரீராம் பாராட்டுகள்தான்!!!!

      கீதா

      நீக்கு
  21. /// " உடனடியாக ஐந்து மூட்டை சிமென்ட் வேண்டும் கடவுளே.." ///

    கற்பகத்தைச் சார்ந்தார்க்கும்
    காஞ்சிரங்காய் ஈந்தன்றேல் முற்பவத்தில் செய்த வினை..
    - ஔவையார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகர்ணன் நாவை பிறழ வைத்த பெருமான்தான் இவற்றுக்கும் வழி செய்கிறார்!

      நீக்கு
  22. மரணம் என்று என்றோ அலல்து நெருங்குகிறது என்றோ தெரிந்துவிட்டால், அது ரொம்ப மனப்பக்குவம் அடைந்தவர்களுக்குக் கடக்க எளிதாக இருக்கலாம். ஆனால் அப்பக்குவம் வருவதே பெரிய விஷயம். பக்குவம் இல்லாதவங்க கண்டிப்பாகப் பதற்றம் அடைவார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்குவம் உடையவங்க ரொம்பத் தெளிவா சில முடிவுகள் எடுப்பாங்க, கூடவே இருக்கும் நாட்களில் எல்லோருடனும் மகிழ்வுடன் இருக்க விரும்புவாங்க. தனக்குப் பிடித்ததைச் செய்து விடும் எண்ணம் இருக்கும். அதாவது எல்லோருடனும் ஜாலியாகப் பேசி எஞ்சாய் செய்வதாகச் சிலரும்.....

      சிலர் இன்னும் அமைதியாக அதைக் கடக்கவும் விரும்பலாம். ஒரு தியான நிலையில்னு சொல்லலாம்.

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!