சனி, 4 ஜனவரி, 2020

மா நகராட்சி!


1)  .......அந்த சமயத்தில்தான் மூலனூர் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் போலீஸ்காரர் கணேஷ் வந்தார்..
அவரும் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் இறங்கினார். அந்த சமயம் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் போன் செய்தனர்.. ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது.
அதனால், அதே பகுதியில் இருந்த, தனியார் ஆம்புலன்ஸ் எங்காவது கிடைக்குமா என்று விசாரித்து அங்கு நேரடியாக சென்றார் கணேஷ்.. அப்போது "ஆம்புலன்ஸ் இருக்கிறது.. ஆனால் டிரைவர் இல்லை, அவருக்கு உடம்பு சரியில்லை" என்றார்கள்.. "பரவாயில்லை நானே ஓட்டுகிறேன், சாவியை மட்டும் குடுங்க" என்று சொல்லி வாங்கி உள்ளார்.  (நன்றி ஏகாந்தன் ஸார்)


2)   ....இந்த தகவல், ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் ஆகியோருக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக விரைந்து பிரசவம் பார்க்கும் பணிகளை செய்தனர். இவர்களின் உதவியால் அந்த பெண்ணுக்கு ஓடும் ரயிலிலேயே குழந்தை பிறந்தது..... 



3) தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் யாருமில்லாத நிலையில், அதிகாரிகள் குப்பை கையாள்வதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.   குப்பை... இது வீசி எறியப்படும் கழிவு அல்ல; செல்வம் கொழிக்கும் மூலதனம் என, உணர்த்தி வருகிறது, சென்னை மாநகராட்சி.  


மகாலட்சுமி கூறுகையில், ''எனது பெற்றோர் 40 ஆண்டுகளாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நானும் பட்டாசு தொழிலாளியாக பணியாற்றினேன். அரசு பணியில் சேர்வதை லட்சியமாக கொண்டு வேலை செய்து கொண்டே படித்தேன். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி மாநில அளவில் 4 ம் பிடித்து வெற்றி பெற்றுள்ளேன். ,' என்றார்...



================================================================================================


பொன்னியின் செல்வன் – ஒரு ரசிகையின் நோக்கு
ரமா ஸ்ரீனிவாசன்

“பொன்னியின் செல்வன்”...   பெயரைக் கேட்டவுடனே வீரம் பொங்கி வருமே !!!!! அது உங்கள் குற்றமோ தவறோ இல்லை. அது அந்த கதையின் மகிமை. நீங்கள் கதையை விடுங்கள். அதை பற்றி நாம்  நிறையப் படித்து விட்டோம். கேள்விப் பட்டு விட்டோம். இந்த கதையையும் அதன் கதாபாத்திரங்களையும் ஒரு அழகிய கவிதையென புனைந்தவரை பற்றியும் அவரது கதாபாத்திரங்களின் மேன்மையையும் மெருகையும் பற்றி இப்போது நாம் சிறிது அலசுவோம்.




இந்த வரலாறு காணா சரித்திர நாவலின் ஆசிரியர் “ராமசாமி கிருஷ்ணமூர்த்தி” என்னும் “கல்கி கிருஷ்ணமூர்த்தி” ஆவார். அவர் ஒரு எழுத்தாளர் மட்டும் அல்லாது ஒரு கவிஞர், ஒரு அரசியல் ஆய்வாளர் மற்றும் ஒரு சுதந்திர போராளியும் கூட.  120 குறு நாவல்கள், 10 நெடும் நாவல்கள், 3 சரித்திர காதலோவியங்கள், மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் கட்டுரைகள் இவரது படைப்புகளில் சிலவாகும்.

கல்கியின் மிகப் பிரபலமான சரித்திர நாவல்கள் :

1. பார்த்திபன் கனவு : பல்லவர் ஆட்சி காலத்தைப் பற்றியது

2. சிவகாமியின் சபதம் : பல்லவர் ஆட்சி காலத்தைப் பற்றியது

3. பொன்னியின் செல்வன் : சோழ பரம்பரையை பற்றியது

4. சோலைமலை இளவரசி : நம் தாய் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப்
பற்றியது. 

1956ல் நம் பாரத நாடு சாஹித்யா அகாடமி விருதை கல்கி
கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அளித்து கௌரவித்தது. அவரின் பெயரில்
ஒரு தபால்தலையும் வெளியிடப்பட்டது. மற்றும், கல்கி அவர்களுக்கு
“சங்கீத கலாசிகாமணி” விருதும் 1953ல் இந்தியன் ஃஃபைன் ஆர்ட்ஸ்
சொசைடியால் வழங்கப்பட்டது. கல்கி அவர்கள் 5 டிசம்பர் 1954ல் 55 வயதில் டீ.பி. வயப்பட்டு இயற்கை எய்தினார். அவரையும் அவர் எழுத்தையும் மிஞ்ச இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை என்றால் அது மிகையாகாது. அதற்கு இந்த சிறப்பு மிக்க சரித்திரக் காவியங்களே மிகப்பெரிய எடுத்துக்காட்டாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்கின்றன.




பொன்னியின் செல்வன் சரித்திர நாவலின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு பட்டை தீட்டிய வைரமாகும். இங்கு நாம் முடிந்தவரை சிலவற்றை அலசுவோம்.

1. வல்லவரையன் வந்தியத்தேவன் : இவர் ஒரு வீரம் மிக்க, புரட்சி
எண்ணம் கொண்ட அதே சமயம் கிண்டல் நிறைந்த பாண குலத்து
போர் வீரர். இவரின் வீரமும் தீரமும் பொன்னியின் செல்வன்
அளவிற்கு ஓங்கி உயர்ந்து நிற்கிறது. தஞ்சையின் சுந்தரச் சோழனால்
தன் உயிர்த் தோழன் காஞ்சியின் ஆதித்ய கரிகாலனுக்கு தூதுவனாக
அனுப்பப்படும் இந்த வந்தியத்தேவன், பிற்காலத்தில் இராஜகுமாரி
குந்தவைக்கும் ஒரு நம்பிக்கை மிகுந்த மெய்க் காப்பாளனாகவும் அழகிய
காதலனாகவும் திகழ்ந்தார். வந்தியத்தேவன் மூலமாகவே எல்லா
கதாபாத்திரங்களையும் கல்கி அவர்கள் கதையில் புகுத்துகிறார்.




2. ஆழ்வார்க்கடியான் நம்பி (திருமலையப்பன்) : ஒரு வீர வைஷ்ணவரான
இவர் செம்பியன் மஹாதேவிக்கு ஒற்றராய் பணி புரிந்தவர்.

நந்தினியின் தமையனாரும் வந்தியத்தேவனின் அருமை தோழருமான
இவர் எண்ணிலடங்கா வைஷ்ணவ மற்றும் சைவ சித்தாந்திகளூடன்
தர்க்கம் புரிந்து வெற்றி கொடி நாட்டியவர்.

3. சம்புவராயர் : கடம்பூரின் ஒரு குறு மன்னரும் அவர்களின் ஒரு
சூழ்ச்சியின் கர்த்தாவும் ஆனவர்.

4. கந்தமாறன் (சின்ன சம்புவராயர்) : கடம்பூரின் இராஜகுமாரனும்
வந்தியத்தேவனின் உயிர் தோழனுமானவன்.

5. பெரிய பழவேட்டரையர் : தனது வீரச்செயல்களாலும்
பயமின்மையாலும் சோழ மக்களால் மிக்க மதிக்கப்பட்டவர். சோழ
இராஜ்ஜியத்தின் வேந்தரும் பொருளாளருமான இவர் சோழ மன்னருக்கு
இரண்டாவது இடத்தைப் பிடித்தவர்.  தன் மதியீனத்தால் இராஜகுமாரி
நந்தினியை திருமணம் முடித்து அவளுடைய சூழ்ச்சியில் சிக்கி, சுந்தரச்
சோழனின் மகன்களுக்கு எதிராக தன் நண்பர்களை ஏவி விட்டு, தன்
உறவினர் மதுராந்தகனை சோழ மன்னராக்கவும் ஆனவரை பாடு பட்டு
தோல்வியுற்றார்.




6. தேவராளன் (பரமேஸ்வரன்), இடும்பன்காரி, ரவிதாசன், சோமன்
சாம்பவன், ரவிதாஸ கிரமவித்தன் : இவர்கள் யாவரும் மறைந்த
வீரபாண்டியனின் மெய்க்காப்பாளர்கள். ஆயினும் இக்கதையில்
கொடுமையான எதிராளிகள்.

7. மதுராந்தகா (அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்) : செம்பியன் மாதேவியின் புதல்வன்.  நந்தினி இவனை தன் சுயலாபத்திற்காக சாதுவாகவும் சந்நியாசி போலவும் வளர்த்தாள். இதனால், மக்கள் இவனை மன்னரென பார்க்க மறுத்தனர்.

8. குந்தவை (இளைய பிராட்டி) : சுந்தர சோழரின் இரண்டாம் புதல்வியும்
சோழ நாட்டின் இளவரசியுமாவார். மற்ற இளவரசிகளிடம் இருந்து
மாறுபட்டவராய் இருந்தார். சோழ நாட்டின் எல்லைகளை விரிந்தும்
பரந்தும் பார்ப்பதையே தன் கனவாய் கொண்டிருந்தார். இதற்கு, தன்
சகோதரன் அருள்மொழிவர்மனையும் அவனது புதல்வனையும்
போர்களிலும் ராஜ தந்திரங்களிலும் வல்லவராகத் தயார் செய்தார்.
தன் தோழி வானதியை உயிருக்கும் மேலாக பாதுகாத்து வந்தாள். இந்த
குந்தவை தன் இளைய சகோதரன் அருள்மொழிவர்மன் மன்னனாக
வேண்டும் என்ற ஆர்வத்தில் தன் மூத்த சகோதரன், ஆதித்ய
கரிகாலனின் கதையை முடித்தாள் என்றும் ஒரு கூற்று பரவலாக
பேசப்படுகின்றது.  இது எவ்வளவு தூரம் உண்மை என்பது எவருக்கும்
தெரியாது.




9. வானதி : ஒரு வெகுளியும் சாதுவுமான கொடும்பாளூர் இளவரசி.
இவர்தான் பிற்காலத்தில் ராஜ ராஜ சோழனின் மனைவியாகவும்
ராஜேந்திர சோழனின் தாயாகவும் உருவெடுப்பவர். இளவரசி
குந்தவையின் உயிர் தோழியும் அருள் மொழிவர்மனின் ஆருயிர்க்
காதலியும் ஆவாள்.




10. நந்தினி : பழுவூர் இளவரசியும் பெரிய பழுவேட்டரையரின்
மனைவியுமான இவள்தான் இக்கதையின் முதல் வில்லியாவாள்.
தான் எப்படியும் சோழ ராஜ்யத்தை அழிப்பது என்று கங்கணம்
கட்டிக்கொண்டு அலைந்தவள்.  பெரிய பழுவேட்டரையரை மணந்து
கொண்டு எதிரி பாண்டிய மன்னருக்கு உதவி செய்த வண்ணம்
இருந்தாள். எப்படியும் சோழ அரசை வளைத்துவிட வேண்டும் என்ற
வெறியில், பார்த்திபேந்திர பல்லவனையும் கந்தமாறனையும் மயக்கி
தன் வசப் படுத்தியிருந்தாள்.




11. சேந்தன் அமுதன் : ஒரு சாதுவான சிவ பக்தன். வந்தியத்தேவனின்
தோழனான இவன் வந்தியத்தேவனை சுற்றியே தன் வாழ்க்கையை
அமைத்துக்கொண்டான்.




12. சின்ன பழுவேட்டரையர் (காலந்தகண்டர்) : தஞ்சைக் கோட்டையின்
அதிபதியாவார். பெரிய பழுவேட்டரையரையரின் தம்பியும்,
மதுராந்தகரின் மாமனாரும் ஆவார்.

13. சுந்தரச் சோழர் (பராந்தகர்) : சோழ நாட்டின் மன்னரும் குந்தவையின்
தந்தையும் ஆவார். நோயினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும்
செயலிழந்த நிலையில், பழுவேட்டரையர்கள் இவரை காத்து பராமரிக்க
பழையாரையிலிருந்து தஞ்சைக்கு கூட்டிச் சென்றனர்.

14. ஆதித்ய கரிகாலன் : மன்னர் சுந்தரச் சோழனின் முதல் மகனான இவன், 12 வயதிலேயே போர் வாள் பிடித்தவன். வந்தியத்தேவனை குந்தவைக்கு மெய்க்காப்பாளராக அனுப்பி வைத்ததே இவன்தான்.




15. பூங்குழலி :  கோடிக்கரையில் பிறந்த ஒரு படகோட்டிப் பெண். இவள்
அஞ்சா நெஞ்சம் கொண்டவள் என்பதால் இளவரசர் அருள்மொழி
அவளுக்கு “ சமுத்திர குமாரி” என்று பெயர் சூட்டினார்.




16. அருள்மொழிவர்மன் (ராஜ ராஜ சோழன் / பொன்னியின் செல்வன்) :
இந்த சரித்திர நாவலின் முக்கிய கதாபாத்திரமான இவர் சுந்தரச்
சோழரின் இளைய மகன் ஆவார். காவேரி தாயே அவரை 5 வயதில்
நீரில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றியதாகவும், அதனால்தான் அவரது
பெயர் “பொன்னியின் செல்வன்” என்றும் கூறப்படுகிறது. அவர் எல்லா
மதத்தையும் ஒன்றென பார்த்தவர். ஆயினும், வீர சைவராவார்.




17. மந்தாகினி / சிங்கள நாச்சியார் / ஊமை ராணி : இவர் நந்தினிக்கும்
மதுராந்தகருக்கும் தாய்.  இவர் சுந்தரச் சோழரின் காதல் நாயகியாவார்.
சுந்தரச் சோழரின் குழந்தைகளின் மேல் உயிரையே வைத்திருந்தவர்.

இதுவரை படித்ததில் பிடித்தவை என்னவென்று கேட்டால், நீங்கள் என்ன
கூறுவீர்கள் நண்பர்களே ? 

எல்லாமே பிடித்தவை என்று கூறுவீர்கள். அது உங்கள் தவறு அல்ல. பொன்னியின் செல்வன் என்பது ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த நாவலாகும். இக்காவியத்தை வடித்த கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணம்.  என்ன ஒரு தொலைநோக்கு கொண்ட பார்வை, என்ன ஒரு பின்னிப் பிணைக்கும் கதை, என்ன ஒரு மென்மைக்கு மென்மையாகவும், வீரத்திற்கு வீரமாகவும் நகரும் நடை. இதுவல்லவோ என்றும் சாகா சரித்திர காவியம்.  இக்காவியமானது 5 பாகங்களாக 2210 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.  இந்த கதையானது கல்கியில் எழுத்து வடிவத்தில் வெளியான போது, அந்த பத்திரிக்கையின் வாராந்திர சர்குலேஷன் 71,366 பதிவுகளுக்கு மேல் சென்றது. புதிய விடுதலை காற்றை ஸ்வாசித்த அந்த புதிய இந்தியாவில் அது ஒரு மிக பெரும் சாதனையாகும்.

மற்றுமொரு ஸ்வாரஸ்ய தகவல் என்னவென்றால், இக்காவியத்தை நான் இதுவரை ஒரு ஐந்து தடவையாவது படித்திருப்பேன். பைன்ட் செய்யப்பட்ட புத்தகம் கிழியும்வரை படித்துவிட்டு சென்ற வருடம் நடந்த புத்தகக் கண்காட்சியில் புத்தம்புது லெதர் எடிஷன் ஒன்றை வாங்கி பத்திரப் படுத்தினேன். வரும் காலத்தில் நான் என் சந்ததியினருக்கு விட்டு செல்ல விரும்பும் வெகு அரிதான பொருட்களுள் இதுவும் ஒரு முக்கிய அங்கமாகும்.

63 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...     நல்வரவு, வணக்கம், நன்றி.

      நீக்கு
  2. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  4. //மதுராந்தகா (அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்) : செம்பியன் மாதேவியின் புதல்வன். நந்தினி இவனை தன் சுயலாபத்திற்காக சாதுவாகவும் சந்நியாசி போலவும் வளர்த்தாள். இதனால், மக்கள் இவனை மன்னரென பார்க்க மறுத்தனர்.//மதுராந்தகன் (போலி) வளர்க்கப்பட்டது செம்பியன் மாதேவியால். அவர் தான் மதுராந்தகன் தன் வயிற்றில் பிறந்த பிள்ளை இல்லை என்று தெரியாமல் இருந்தபோதே அவனை சிவநேசச் செல்வனாக வளர்த்து வந்தார். உண்மை தெரிந்ததும் கூட அந்த நிலையிலிருந்து மாறவில்லை. நந்தினிக்கு மதுராந்தகன் தன்னுடன் பிறந்த தன் இரட்டை சகோதரன் என்னும் விஷயம் தெரிந்திருக்கலாமே தவிர வளர்க்க வாய்ப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  5. பொன்னியின் செல்வன்....

    என் நெஞ்சில் இருந்தெல்லாம் அழிக்க முடியாத பெயர்....

    எத்தனை முறை வாசித்திருப்பேன்....

    என் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளேன்....

    பதிலளிநீக்கு
  6. நீங்க ஐந்து தரம் படிச்சதாச் சொல்றீங்க. நான் முதல் முதல் படிக்க ஆரம்பித்ததே பொன்னியின் செல்வனும், அமரதாராவும் தான்! அப்போ 3 ஆம் வகுப்பில் இருந்தேன். ஆனால் சின்ன வயசில் இருந்தே ஆனந்த விகடனின் சித்திரத் தொடர்கதைகள் எல்லாம் படிக்க ஆரம்பித்துப் பின்னர் நாவல்கள் படிக்கும் நிலைக்கு ஐந்தாம் வகுப்புக்குள் வந்தாச்சு. நம்பச் சிரமமாக இருந்தாலும் இதான் உண்மை. பொன்னியின் செல்வனை எத்தனை முறை படித்திருப்பேன் என்பது எனக்கே கணக்குத் தெரியாது!

    பதிலளிநீக்கு
  7. நல்ல செய்திகள் அனைத்துக்கும் நன்றி. முதல் செய்தியைத் தவிர்த்து மற்றவை படித்தது. :)

    பதிலளிநீக்கு
  8. பொன்னியின் செல்வன் ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பை எங்க பெண்ணுக்கும், பிள்ளைக்கும் வாங்கிக் கொடுத்துப் படிக்க வைத்தோம். சேந்தன் அமுதன் தான் உண்மையான சோழ ராஜகுமாரன் என்பது மூன்றாம் பாகம் படிக்கையிலேயே புரிந்து விடும். என்றாலும் விறுவிறு குறையாமல் இப்போதும் படிக்கப் படிக்கப் பரவசம்.

    பதிலளிநீக்கு
  9. நந்தினி கதாபாத்திரம் புனைவாக உருவாக்கப்பட்டது என்றாலும் மறக்கமுடியாத கதாபாத்திரமாகக் கல்கி அவர்களின் எழுத்துத் திறமையால் ஆகிவிட்டாள். பாண்டிய அரசன் வீரபாண்டியனின் சாவுக்குப் பழி வாங்குவதற்காக அவள் போட்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் சாணக்கிய தந்திரத்தை மிஞ்சக்கூடியதாக இருந்தாலும் கடைசியில் தோற்றுப் போனாள்.

    பதிலளிநீக்கு
  10. வந்தியத் தேவன் "வாணர் குலத்து இளவரசன்" தொன்மையான குலம். வாணகப்பாடி அவர்கள் ராஜ்யம்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. ஆம்புலன்ஸ் ஓட்டிய போலீஸ்காரர் கணேஷ் அவர்களை பாராட்டுவோம்.

    பொ.செ. நிறைய விடயங்கள் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  13. பொன்னியின் செல்வன் Characters sketch and description நன்றாக உள்ளது. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணைக்கம்.
    ஆறுதல்,ஆர்வம்,தைருயத்துடன் செயல்பட்ட
    போலீஸ்காரர் கணேஷ் மிகவும் பாராட்டப் படவேண்டியவர்.

    இராணுவ மருத்துவ அதிகாரிகளான பெண்கள்
    ஒரு குழந்தையை உலகிற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் மிக அரிய ,அந்த நேரத்துக்கு உண்டான செயல்பாட்டை விரைந்து செய்தது மகிழ்ச்சியக் கொடுக்கிறது. மனம் நிறை வாழ்த்துகள் பெண்களே.

    சென்னை மா நகராட்சியின் குப்பை மேனேஜ்மெண்ட் விவரம் எனக்கு மிகப் புதிது.
    நல்ல முன்னேற்றம். வளம் பெற வாழ்த்துகள்.

    ஐஏஎஸ் தேர்வுகளில் பெண்கள் இத்தனை மும்முரமாக ஈடு பட்டு வெற்றி கண்டிருப்பது
    மிக மிக மகிழ்ச்சி. நாலாவது இடம் பிடித்த மஹாலக்ஷ்மி
    இன்னும் வெற்றி பெற வாழ்த்துகள் அவர் சிவகங்கை வந்து வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. திருமதி ரமா ஸ்ரீனிவாசனின் ,பொன்னியின் செல்வன் கட்டுரை,கச்சிதமாக இருக்கிறது .ஒரு சில பிழைகளைத் தவிர,.
    நாமெல்லாம் பொன்னியின் செல்வனோடே வளர்ந்தவர்கள்.
    பாட்டியும் அம்மாவும் எழுதிக் கொள்ளும் கடிதங்களில் இது பெரும்பாகம் வகிக்கும்.

    சரித்திரங்களைப் பொறுத்தவரை யார் எழுதினாரோ அவர்
    மன நிலையைப் பொறுத்து
    பாத்திரங்கள் நடக்கும் என்று கல்கியை வைத்து சொல்ல முடியாது.
    அனேக ஆராய்ச்சிகளுக்குப் பிறகே மானசீகப் புத்திரனாகப் பொன்னியின் செல்வனைப்
    படைத்தார் என்ற அளவிலேயே எங்களுக்கெல்லாம்
    அதில் அதீதக் காதல்.
    மகனும் ஆங்கிலப் பதிப்பு வைத்திருக்கிறான்.
    மிக நன்றி ரமா.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் ,வாழக வளமுடன்.

    பதிலளிநீக்கு
  17. செய்திகளும், பொன்னியின் செல்வன் ரசனையும் அருமை...

    பதிலளிநீக்கு
  18. பாஸிடிவ் செய்திகள் மனிதநேயத்தை சொல்கிறது.மூன்றாவது செய்தியும் நல்ல செய்திதான், குப்பையால் செல்வம் வளத்தை பெருக்கி நாட்டு மக்களுக்கு நல்லது செய்யட்டும்.

    மகாலட்சுமியின் மன உறுதி விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. பொன்னியின் செல்வன் விமர்சனம் அருமை. மணியன் அவர்களின் ஓவியத்தை ரசித்த கண்கள் இங்கு பகிரபட்ட ஓவியங்களை ரசிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  20. என் மாமியார் கடைசியாக எங்கள் வீட்டுக்கு வந்த போது பொன்னியின் செல்வனை விரும்பி படித்து முடித்தார்கள் விரைவாக (ஊருக்கு போவதற்குள் படித்த முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னியின் செல்வன் ஒரு அரு மருந்து+ விருந்து.
      அன்பு கோமதி சொல்வது போல்.
      கல்கியினால் தரப்பட்ட பொக்கிஷம்.
      அதிலுள்ள அத்தனை பாத்திரங்கள் நம் மனதில் புகுந்தவர்கள்.

      நீக்கு
  21. நல்ல செய்திகள் இன்று. பாராட்டுகள்.

    பொன்னியின் செல்வன் போஸ்ட்மார்ட்டம் ஓகே. என்ன எழுதினாலும் திருப்தி தராது. அதற்கான படங்கள் நன்றாக இல்லை. நாம் நம்முடன் உயிர்ப்புடன் வைத்திருக்கும் கேரக்டர்களை கார்ட்டூனாக்கினால் எப்படிப் பிடிக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்படித்தான் நினைத்தேன்...

      எதையாவது எழுதுவது எதற்கு இருந்து விட்டேன்...

      உயிரோடு கலந்து விட்ட அருண்மொழி, வந்தியத்தேவன் , ஆழ்வார்க்கடியான், பூங்குழலி

      கம்பீரமே உருவான குந்தவை நாச்சியார், கர்வமே வடிவான நந்தினி இவர்களுக்கிடையே வானதி..

      இவர்களோடு பழுவேட்டரையர்கள்..

      என, ஓவியர் வினு அவர்களது கை வண்ணத்தில் உளம் புகுந்தவர்கள்...

      அவர்களை இப்படிக் காண நேர்ந்ததே என்று...

      அப்போதைய ராஜராஜ சோழன் திரைப்படம் முழு வெற்றியைப் பெறாததற்குக் காரணம் அதில் அதில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இல்லாததே...

      அந்தத் திரைக்கதைக் களம்
      சோழனின் பெருவெற்றிக்குப் பிறகானது என்றாலும்

      பொன்னியின் செல்வனின் ரசிகர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை...

      இருப்பினும்
      கல்கி அவர்கள் உருவாக்கிய மாந்தர்களைப் பற்றிய வர்ணணைக்கு மகிழ்ச்சி...

      நீக்கு
    2. ஆரம்பத்தில் ஓவியர் மணியம் வரைந்த படங்களை ரசித்தவர்களுக்கு வினு வரைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கார்ட்டூன் படம் ஒரு புதிய முயற்சியாக தோன்றியது. 

      நீக்கு
    3. //எதையாவது எழுதுவது எதற்கு இருந்து விட்டேன்...//

      நான் தான் யோசிக்காமல் எல்லாத்தையும் சொல்லிடறேனோ? :))))))))

      நீக்கு
    4. திருப்புறம்பியம் காட்டுக்குள் ஆந்தை அலறும்போது விழிகளை உருட்டிக்கொண்டு கையில் தீவட்டியுடன் வருவானே - ரவிதாசன்!..

      என்னே பயங்கரம்!...

      நீக்கு
    5. மணியத்தின் அந்தப் படம்/ஓவியம் கண்ணெதிரே வருகிறது. படங்களும் சரி, கதையும் சரி மனதை விட்டு நீங்காது.

      நீக்கு
  22. இன்றைக்கு பகிர்ந்து கொண்ட செய்திகள் அனைத்தும் சிறப்பு.

    பொன்னியின் செல்வன் - ஆஹா. மகிழ்ச்சி.... கல்கியின் படைப்புகளில் எனக்குப் பிடித்ததும் பொன்னியின் செல்வன் தான்.

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் மதிய வணக்கங்கள்.  உங்கள் அனைவரது பாராட்டுகளும் கருத்துக்களும் வரவேற்க தக்கதாக இருக்கிரது.  நான் மருபடியும் சொல்கிறேன்.  பொன்னியின் செல்வன் ஒரு காவியம்.  அதை யாரும் முழுமையாக வர்ணிக்கவோ வழக்காடவோ முடியாது.  
    " அதற்கான படங்கள் நன்றாக இல்லை. நாம் நம்முடன் உயிர்ப்புடன் வைத்திருக்கும் கேரக்டர்களை கார்ட்டூனாக்கினால் எப்படிப் பிடிக்கும்?" 
    அந்த படங்களை பற்றி நான் உங்களுக்கு கூறாமல் ப்லாகிள் வெளியிட்டது தவறாகும்.  சமீபத்தில் ஒரு கண்காட்சிக்கு சென்றபோது, அங்கு ஒரு மாற்று திறனாளி ஒருவர் அத்தனை கேரக்டர்களையும் கார்டூங்களாக வரைந்து ஒரு கேலண்டர் வடிவில் விற்று கொண்டிருந்தார்.  நான் அவரது சம்மதுத்துடன் அப்படங்களை இங்கு வெள்யிட்டுள்ளேன்.  அவருக்கும் ஒரு நகல் அனுப்பியுள்ளேன்.  அவர் மிகவும் மகிழ்ச்சியுற்றார்.  அவருடைய மனமகிழ்ச்சிக்காகவே இதை செய்தேன்.  நான் உங்களுக்கு இதை பற்றி விளக்காதது தவறு.  உங்கள் ஆழ்ந்த கருத்துக்களுக்கும் ஊடுருவும் பார்வைக்கும் மிக்க நன்றி.  ரமா ஸ்‌ரீனிவாஸன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை ரமா ஶ்ரீநிவாசன் மேடம். சிவற்றை கார்ட்டூனாக கற்பனை செய்ய முடியாது. இன்னொன்று ஓவியர் வினு வரையில் இருந்த கம்பீரம் பிறகு வரைந்தவரிடம் (டக்குனு இப்போ பேர் வரலை.. இப்போகூட அவர் ஆசிரியர் குழுல இருக்கார்.....பானுவாசனோ என்னவோ)

      நீக்கு
    2. ஓவியர் வினு வரையில் இருந்த கம்பீரம் பிறகு வரைந்தவரிடம் (டக்குனு இப்போ பேர் வரலை.. இப்போகூட அவர் ஆசிரியர் குழுல இருக்கார்.....பானுவாசனோ என்னவோ)
      பத்மவாசன். 

      நீக்கு
    3. எனக்கு மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் பாத்திரங்கள் தான் பிடிக்கும். சிவகாமியின் சபதம் கல்கியில் வந்தப்போ ஓவியர் சந்திரா வரைந்திருப்பார் என நினைக்கிறேன். பின்னர் புத்தகமாக வந்தப்போ ஓவியர் மாறி விட்டார். பின்னர் அறுபதுகளில் பொன்னியின் செல்வன் இரண்டாம் முறையாக வந்தப்போத் தான் வினு வரைந்திருந்தார். அதன் பின்னரும் 2 முறை வந்ததுக்கு யார் வரைஞ்சாங்கனு நினைவில் இல்லை. பின்னர் சமீபகாலத்தில் ஓவியர் பத்மவாசன் வரைந்து வந்தார் எனக் கேள்வி. கல்கியே கைமாறினப்புறம் படம் யார் வரைஞ்சால் என்ன?

      நீக்கு
    4. ஓவியர் பத்மவாசனுக்குப் பதில் பேசாமல் ஓவியர் ஜெ.. வை வரையச் சொல்லியிருக்கலாம். மணிரத்னத்துக்கு படம் கதையை விட்டு நகர்த்தி எடுக்க நிறைய ஐடியாக்கள் வந்திருக்கும்.

      நீக்கு
  24. பொன்னியின் செல்வன் படித்ததில்லை. மணிரத்னத்தின் படத்திற்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மணிரத்னத்தின் படத்திற்காகக் காத்திருக்கிறேன்.//பொன்னியின் செல்வனை படித்த நாங்களெல்லாம் பயந்து கொண்டிருக்கிறோம். அப்படித்தானே நண்பர்களே?  

      நீக்கு
    2. ராமாயணத்தைக் கொலை செய்து ராவணனைக் கதாநாயகனாக ஆக்கி சீதையைக் கொச்சைப்படுத்தியது போல் எடுக்காமல் இருந்தால் சரி! ஏகாந்தன் அவர்கள் பொன்னியின் செல்வன் படிக்கவில்லை என்று சொல்லுவது ஆச்சரியமாக இருக்கிறதே!

      நீக்கு
    3. இப்போதே கத்தியுடன் ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன் என்று ஒரு போஸ்டர் தினமலரில் வந்திருக்கிறது...

      கைப்பிடியுடன் கத்தியைப் பார்க்கையில் சிலுவை போன்று இருக்கிறது என்று பலரும் கருத்து சொல்லியிருக்கின்றார்கள்.

      பொன்னியின் செல்வன் என்ன பாடுபடப் போகின்றானோ..

      மேற்கத்தியர்கள் சொன்னதன் பேரிலேயே பெரிய கோயில் கட்டப்பட்டது என்று கூட வரலாம்....

      நீக்கு
    4. மணிரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்க முடியாது. 7 1/2 சனி நடக்கும் ப்ரொடியூசர் மாட்டினாலொழிய. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அதன் கேரக்டரைசேஷன் நம் மனதில் இருக்கும். அந்த கேரக்டரைசேஷனை சித்தரிப்பது மணிரத்னத்துக்கு வராது. பாஹுபலி கதாசிரியருக்கு முடியும். அருண்மொழி வானதியின் மேலாடை பறக்க அவளுடன் காதல் பாட்டு பாடுவதுபோல கற்பனை செய்யமுடியலை. கதை மாந்தர்களைக் கண்ணியத்தோடு கல்கி படைத்திருப்பார் (சி.செ இல், சிவகாமியை இரண்டாவது முறை திரும்பிப் பார்க்காத கண்ணியத்தோடு இளவரசன் கதாபாத்திரம் மிளிரும்)

      பொதுவா தமிழகத்தில் தொடர்கதை படிக்கும் வழக்கமுள்ளவர்கள் பொன்னியின் செல்வனை ஒரு தடவையாவது படிக்காமல் இருந்திருக்க முடியாது. படித்தவர்களால் சினிமாவை ரசிக்க முடியாது

      நீக்கு
    5. துரை சொன்ன மாதிரி அந்தக் கத்தி போஸ்டர் குறித்துப் பலரும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். ஆனால் என் கண்களில் இன்னமும் அது படவில்லை.

      நீக்கு
  25. ..அங்கு ஒரு மாற்று திறனாளி ஒருவர் அத்தனை கேரக்டர்களையும் கார்டூங்களாக வரைந்து ..//

    மாற்றுத் திறனாளிக்குப் பெயரெல்லாம் கிடையாதா !

    பதிலளிநீக்கு
  26. இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் என்னைக் கவர்ந்தவை தலை கீழ் வரிசையில் வருகின்றன. இன்றைய பின்னூட்டங்களில் பாசிட்டிவ் செய்திகளை விட, பொன்னியின் செல்வனே அதிகம் இடம் பெற்றிருப்பது அதன் வெற்றி. 

    பதிலளிநீக்கு
  27. இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் என்னைக் கவர்ந்தவை தலை கீழ் வரிசையில் வருகின்றன. இன்றைய பின்னூட்டங்களில் பாசிட்டிவ் செய்திகளை விட, பொன்னியின் செல்வனே அதிகம் இடம் பெற்றிருப்பது அதன் வெற்றி. 

    பதிலளிநீக்கு
  28. பொன்னியின் செல்வனைப் படித்த யாருமே அதை ஒரே ஒரு முறைதான் படித்தேன் என்று சொல்ல மாட்டார்கள். குறைந்த பட்சம் ஐந்து முறை படித்திருப்பார்கள். அப்படி ஒரு வசீகரிக்கும் நடை. முடிவுதான் கொஞ்சம் சொதப்பல். கல்கியின் பெரும்பாலான கதைகளில் இந்த குறை உண்டு. அவருடைய சிவகாமியின் சபதம்தான் சிறந்த படைப்பு என்று கூறுவோர்கள் உண்டு. சிவகாமியின் சபதம் படித்து முடித்ததும் மனது பாரமாகி விடும். பொ.செ. அப்படி இல்லை. இதில் அழகுணர்ச்சி அதிகம். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றியும் ஒரு பதிவு எழுதலாம். ரமா ஒரு அழகான அறிமுகம் கொடுத்திருக்கிறார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னியின் செல்வன் முடிவு சொதப்பல்னு சொல்ல முடியாது. எந்தச் சரித்திரக் கதாபாத்திரங்களையும் அவர்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர் என முடிக்க இயலாது. ஏனெனில் நாவலில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பின்னரும் அவர்கள் வாழ்க்கை தொடரும். பல வீர, தீர, சாகசங்களைச் செய்வார்கள். திருமணம் செய்து கொள்வார்கள். அரசியல் திருமணங்கள் அந்தக் காலங்களிலும் உண்டு. ஆகவே தொடர்ந்து அது பற்றி எல்லாம் விவரித்தால் நமக்கே சலிப்புத் தட்டும். மேற்கொண்டு என்ன ஆனது என்பதை யூகத்திற்கு விடுவதே இம்மாதிரிக் கதைகளில் எல்லாம் சரியாக வரும்.

      சிவகாமியின் சபதம் நாவலில் வரும் சிவகாமியே புனைவுப் பாத்திரம். மாமல்லர் வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கலாம் என்பது கதாசிரியரின் கற்பனை. அதில் அவர் வெற்றியும் கண்டார். அதோடு அவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தது பாண்டிய இளவரசியுடன் தான். ஆகவே சிவகாமி ஏகாம்பரேஸ்வரருக்குத் தாலி கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் என முடித்திருப்பது சிறப்பான ஒரு முடிவே தவிர அதில் சொதப்பல் இல்லை.

      பார்த்திபன் கனவில் சுபமான முடிவு. ஆனால் அதன் பின்னர் பல்லாண்டுகள் கழித்தே பிற்காலச் சோழர்கள் முன்னேற்றம் பெறுவார்கள்.

      நீக்கு
    2. //அப்படி ஒரு வசீகரிக்கும் நடை. முடிவுதான் கொஞ்சம் சொதப்பல். கல்கியின் பெரும்பாலான கதைகளில் இந்த குறை உண்டு.// பொன்னியின் செல்வன் நாவலின் கடைசி அத்தியாயத்துக்குப் பின்னர் வாசகர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் முகமாகக் கிட்டத்தட்ட இதே காரணத்தைக் கல்கி அவர்களும் சொல்லி இருப்பார். என்னைப் பொறுத்தவரை கல்கியின் மாஸ்டர் பீஸ் என்பது "அமரதாரா" தான். இதை அவரே இருந்து எழுதி இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் தான்! ஆனால் முதல் பாகத்தின் பாதி வெளிவரும்போதே கல்கி இறந்துவிடப் பின்னர் அவர் மகள் ஆனந்தி அவர் எழுதிய குறிப்பை வைத்து எழுதி முடித்தார். இதைத் திரைப்படமாகக் கொண்டு வரும் எண்ணத்தோடு எழுதினார் என்பார்கள்.

      நீக்கு
    3. //சிவகாமியின் சபதம் நாவலில் வரும் சிவகாமியே புனைவுப் பாத்திரம்.//  அதில் வரும் நாகநந்தி அடிகளும் புனைவு பாத்திரம்தான். புலிகேசிக்கு அப்படி ஒரு சகோதரனே கிடையாது. கல்கியின் சரித்திர கதைகளில் கற்பனை அதிகம் என்போர்கள் உண்டு. அதை மறுக்க முடியாது. பொ.செ.யிலும் நிறைய கற்பனை கதாபாத்திரங்கள் உண்டே. கற்பனையை குறைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பாலகுமாரனின் உடையார் போல டிரையாக இருக்கும். 


      நீக்கு
    4. //ஆகவே சிவகாமி ஏகாம்பரேஸ்வரருக்குத் தாலி கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் என முடித்திருப்பது சிறப்பான ஒரு முடிவே தவிர அதில் சொதப்பல் இல்லை.// சிவகாமியின் சபதத்தை நான் சொதப்பல் என்று கூறவில்லை. 'தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே' என்று அவர் முடித்திருப்பதை படிக்கும் பொழுது மனது பாரமாகிவிடும். அலை ஓசையில் சொதப்பவில்லையா அவர்?   

      நீக்கு
    5. பொன்னியின் செல்வனில் எப்படி நந்தினி, ஆழ்வார்க்கடியான், போலி மதுராந்தகன், பூங்குழலி, சேந்தன் அமுதன் ஆகிய புனைவுப் பாத்திரங்களோ அப்படி சிவகாமியின் சபதத்திலும் கதாநாயகியே புனைவுப் பாத்திரம். கண்ணன், கமலி, அவர்களின் தகப்பனார்கள் ஆகியோரும் புனைவுப் பாத்திரங்கள் தான். ஆனால் ஆயனரைப் போன்றதொரு சிற்பி இருந்திருக்க வேண்டும். அதே போல் தஞ்சையில் சிங்காச்சியார் கோயில் என ஒரு கோயில் இருப்பதாகவும் மந்தாகினி இறந்ததைக் குறித்த அத்தியாயத்தில் கல்கி குறிப்பிட்டிருப்பார். ஆனால் மந்தாகினி, கரையர், சேந்தம் அமுதனை வளர்க்கும் வாணி எல்லோருமே கதைக்குப் பொருத்தமாகப் புனையப் பட்டவர்களே!

      நீக்கு
    6. சிவகாமி மாமல்லனுடன் சேர்ந்திருந்தால் அந்த முடிவு சோபித்திருக்காது அல்லவா? ஆகவே இந்த முடிவே ஏற்றது. எல்லாவற்றையும் சுபமாகவும் முடிக்க முடியாது. ஆனால் அலை ஓசை விஷயமே வேறே. முழுக்க முழுக்க பிரிட்டிஷ் இந்தியாவில் ஆரம்பித்து சுதந்திர இந்தியாவில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் கஷ்டங்களைச் சொல்லுவது. அதில் சீதாவின் மரணத்தின்போதே கதை முடிந்து விடுகிறது. ஆனால் அதன் பின்னரும் கல்கி தேவையில்லாமல் கதையை இழுத்துக் கைகால்கள் வெட்டப்பட்டுக் கிட்டத்தட்ட முடமான தாரிணியைக் காதலின் பெயரால் சௌந்திர ராகவன் கல்யாணம் செய்து கொள்ளுவதாகவும் நவநாகரீக நங்கையான பாமா திடீரென மனம் மாறி சூர்யாவைத் திருமணம் செய்து கொள்ளுவதாகவும் முடித்துக் கடைசி அத்தியாயத்தை "பாமா விஜயம்" என முடித்திருப்பார். இதற்குத் தான் சாகித்ய அகடமி பரிசும் கிடைத்தது. சுதந்திரப் போராட்டக் கதை என்பதாலோ என்னமோ! அதற்குத் தியாக பூமி பரவாயில்லை ரகம்.

      நீக்கு
    7. கதாநாயகனும் கதாநாயகியும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுப் பின்னர் மணம் புரிந்து கொண்டு சுகமாக வாழ்ந்தார்கள் என்ற முடிவு வேண்டுமெனில் அமரதாரா தான்! ஆனால் அதிலும் கதையின் முக்கியமான முடிவுடன் முடித்திருக்கலாம். இந்துமதியின் வாழ்க்கை பின்னால் எப்படிப் போயிற்று என்பதை வாசகர்களின் ஊகத்துக்கு விட்டிருக்கலாம். எனக்கென்னமோ இதான் ரொம்பப் பிடித்ததும் கூட. எங்கேயோ பிறந்து எங்கேயோ வாழ்ந்த இருவர், அவரவர் தகப்பன்மார்கள் நண்பர்களாக இருந்த விஷயம் தெரியாமல் இருந்த சமயம் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதலில் ஆழ்ந்து அந்தக் காதல் என்னும் இணையற்ற அன்புக்காகக் காத்திருந்து ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவித்துப் பின்னர் ஒன்று சேர்கின்றனர்.

      நீக்கு
    8. //கற்பனையை குறைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பாலகுமாரனின் உடையார் போல டிரையாக இருக்கும். // ஹாஹாஹா, இதைக் கவனிக்கலையே நான்! நல்லவேளையாக "உடையார்" படிக்கலையோ பிழைச்சேன்! :))))))))

      நீக்கு
  29. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அவர் களின் கருத்துரைகள் அனைத்தும் சுவாரஸ்பமாக இருந்தன.

      பகிரப்பட்ட மற்ற செய்திகளும் அருமை.

      நீக்கு
    2. திரு டி..பி.ஆர். ஜோசப் அவர்களுக்கு! பாராட்டுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  30. கீதாமா, பானுமா இரு அரும் அறிவுக்களஞ்சியங்கள்.
    இதமான நாவல் விளக்கங்கள் மிக அருமை.
    எனக்கு பானுமா குறிப்பிட்டிருந்த ஆசிரியரின் ஆரம்ப காலக் கதைகள்
    பிடித்திருந்தன.
    நட்பு லபிப்பதுபோல் நமக்குப் படிக்கக் கிடைக்கும் பொக்கிஷங்கள் கல்கியின் கதைகள்.
    வாழ்வில் மேடு பள்ளங்கள் போல ஆசிரியர்களின் வாழ்க்கையில் ஏற்படும்
    மாற்றங்கள், நோய் எல்லாமே அவர்கள் எழுத்துக் கோணத்தைத் தீர்மானிக்கின்றன.

    சிவகாமி உணர்ச்சிக் காவியம். பொன்னியின் செல்வன் சரித்திரம். மணியனின் ஓவியங்களால் அவர்கள் நம்முடன் இன்னும் உலவுகிறார்கள்.

    வினுவின் ஓவியங்கள் சிறப்பாக இருந்தாலும் முன்னவரைப் பார்த்தவர்களுக்கு
    மற்றது சோபிக்காது.

    பிற்காலத்தில் அவர் ஓவியங்கள் வேங்கையின் மைந்தனில் வெகு சிறப்பாக இருக்கும்.
    முயற்சி எடுத்து கட்டுரை வரைந்த ரமா ஜி க்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. பொன்னியின் செல்வன் தொடராக வந்த்போது படித்தது பத்திரங்கள்பெயர்கள் நினைவில் இருக்கும்

    பதிலளிநீக்கு
  32. பொ.செ பற்றிய எல்லோர் பதிவுகளையும் படித்தேன்.

    கடம்பூர் கந்தமாறன் என்ன ஆனார்? அவர் வரலாறு கதை/கட்டுரை உண்ட?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!