செவ்வாய், 23 மார்ச், 2021

கேட்டு வாங்கிப் போடும் கதை  :  பாசம் - சியாமளா வெங்கட்ராமன் 

 மத்யமர் குழுவிலிருந்து மேலும் ஒரு எழுத்தாளர் அறிமுகம்.  சியாமளா வெங்கடராமன்.  இனி தொடர்ந்து இவர் படைப்புகளையும் இங்கு எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

பாசம்
சியாமளா வெங்கட் ராமன்

கோகுலம் என்ற அந்த முதியோர் இல்லம் மிகவும் வசதிகள் நிறைந்த வசதி படைத்தவர்களுக்கு என்று துவக்கப்பட்டது முக்கால்வாசி பெற்றோர்கள் அனைவரின் பிள்ளைகளும் NRI என்பதே! அதில் கணவன் மனைவிக்கு என இரண்டு அறை ஹால் சோபா என அனைத்து வசதிகளும் உள்ளது. 

அதில்தான் அனிருத் தன் அம்மா பட்டம்மாவையும் அப்பா நரசிம்மனையும் முதல் நாள் கொண்டு சேர்த்திருந்தான். பட்டம்மா மஹாலஷ்மிபோன்று கைநிறைய கல் வளையல்களும் கழுத்து கொள்ளாமல் சங்கிலிகளும் பட்டு புடவையும் அணிந்திருந்தாள் ஆனால்?...........

அவள் அழுது அழுது முகம் வீங்கியிருந்தது. அதைப்பார்த்த நரசிம்மன், “ ஏண்டி... பட்டு.. இப்படி அழறே! உன் பிள்ளை என்ன - தண்ணீர் இல்லாத காட்டிலா கொண்டு விட்டுப் போய் இருக்கான்? நம்ம இரண்டு பேருக்கும் ஆளுக்கு 6 லட்சம் refundable deposit கட்டி இருக்கான் அது மட்டுமா? மாத சாப்பாட்டிற்கு ஆளுக்கு பத்தாயிரம் என்று 20000 கட்டி இருக்கான். எல்லாத்துக்கும் ஆள்! எந்த கவலையும் இல்லை வேளா வேளைக்கு நாம் கேட்கும் மெனு பிரகாரம் நாம் இருக்கும் இடத்திற்கு சாப்பாடு வந்துவிடுகிறது பொழுது போக்குவதற்கு எல்லா சாதனமும் உள்ளது அப்படியிருக்க உனக்கு என்ன குறை?”  என்று கேட்டார். 

“ ஏன் உங்களுக்கு தெரியாதா?”  என்று பட்டம்மா கேட்டாள். 

“ நம்ம பையன்அனிருத் ரெண்டு கிரவுண்டுல அஞ்சு பெரிய பெட்ரூம் வெச்சு தனி வீடு கட்டி இருக்கான். நாம்தானே கிரகப்பிரவேசம் நடத்திக் கொடுத்தோம் - அதுல உங்களுக்கு இடம் இல்லை என்று சொல்லாமல் இங்கு கொண்டு தள்ளிவிட்டான் நாம் என்ன அந்நியமா?” எனக்கூறிவிட்டு திரும்ப அழ ஆரம்பித்தாள். 

“ அடி அசடே அனிருத் ரொம்ப நல்ல பையன். அவன் ஏன் இப்படி பண்ணினான் என்று தெரியவில்லை, சரி சரி சாப்பிடு அவன் வந்தா கேட்கிறேன்” என்று சமாதானம் செய்தார். 

மறுநாள் காலை அனிருத் கோகுலம் வந்தான். “ அப்பா இந்த சீட்ல இருக்கிற போன் நம்பர் டிரைவர் ஓடது நீங்கள் கோவிலுக்கு ஹாஸ்பிடலுக்கு தெரிந்தவர்வீட்டிற்கு போகவேண்டும் என்றால் போன் பண்ணினால் போதும் கார் வந்துவிடும் நீங்கள் ஒன்றும் பணம்கொடுக்க வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். அதுவரை பொறுமையாக இருந்த பட்டம்மா,  “ ஏண்டா பணமா பெருசு? எங்களிடம் இல்லாத பணமா? பணம் கொடுக்கிறானாம் பணம்” என்று கூறிவிட்டு திரும்ப அழ ஆரம்பித்தாள். 

“ எனக்கு பணம் மட்டுமா வேண்டும்? ஆபீஸ்ல இருந்து வந்ததும் நீசாப்பிட்டியா -  என்று கேட்டாலே போதும் அதைவிட பெற்றவளுக்கு என்ன வேணும் இந்த வயதில்? எங்கள் இருவரையும் அனாதை போல் இங்க கொண்டு தள்ளி விட்டாய் இதற்காகவா உன்னை பார்த்து பார்த்து வளர்த்தேன்?” என்று கூறினாள். 

“ இதுதான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன் இப்போ தெரியுதா பணம் பெருசு இல்ல பாசம்தான் வேணும்னு? - நான் குழந்தையா இருந்தப்ப நீ ஒரு நாளாவது எனக்கு சாதம் ஊட்டி, தலை வாரி, டிரஸ் செய்து, பள்ளி கொண்டு விட்டு இருப்பியா? எனக்கு எது வேண்டும் என்றாலும் ஆயா மூஞ்சிதான் நினைவுக்கு வரும். பள்ளிக்கூடத்தில் எல்லாருடைய அம்மாவும் வரும் பொழுது எனக்கும் என் அம்மா வரணும்னு ஆசையா இருக்கும். ஆனால் ஒருநாள் கூட நீ வந்ததில்லை. அதற்காக நான் எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா? நான் கேட்டதெல்லாம் கிடைத்தது. ஆனால் அம்மா பாசம் மட்டும் எனக்கு சின்ன வயதில் கிடைக்கவில்லை. அதை புரிய வைக்கதான் உங்களை கொண்டு வந்து இங்கே விட்டேன். என்னைப்போல் என் குழந்தைகள் அம்மா பாசத்திற்கு ஏங்கக்  கூடாது என்று சுருதி நன்கு படித்து இருந்தாலும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறிவிட்டு அம்மாவின் மடிமேல் படுத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான் “ நீ இப்போ என் வேதனையை புரிந்து கொண்டிருப்பாய் என்னை மன்னிச்சிடும்மா”  என்றான்.


“ சரி சரி ரெண்டு பேரும் புறப்படுங்கோ. ஸ்ருதி சமையல் பண்ணி காத்துண்டு இருக்கா. குழந்தைகளும் பாட்டி எப்போ வருவா என்று காத்துண்டு இருக்கு - போற வழியில ஸ்ருதியோட அம்மா அப்பாவையும் அழைத்துக்கொண்டு போறோம். நம்ம வீட்டில் கீழே உள்ள இரண்டு பெட்ரூம்லே ஒன்று உங்களுக்கும் மற்றொன்று அவர்களுக்கும். மேலே உள்ள ஒரு ரூம்  எங்களுக்கும், ஒன்று குழந்தைகளுக்கும் ஒனறு விருந்தினர் வந்தால் இருக்கட்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்” என்று கூறினான். 

“ சரி சரி வளவளவென்று பேசிக்கிட்டு  இருக்காதிங்க கிளம்புங்க” என்று கூறி தன் சாமான்களை எடுத்து வைத்துக்கொண்டாள் பட்டம்மா!

வீட்டிற்கு சென்றதும் தன் பேரக் குழந்தைகளை அணைத்து முத்தமிட்டு தன் அறைக்கு எடுத்துச் சென்றாள் பட்டம்மா தன் பாசமழையை பொழிய!!!!!!!



42 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எப்பொழுதும் நலமோடு இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஏற்கனவே படித்த கதை போல இருக்கிறது.
    கீதா வந்தால் சொல்வார்.

    தாய்க்குப் பாடம் சொல்லித்தந்த
    மகன்.
    நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி தொற்று முற்றிலும் நீங்கவும் பிரார்த்திக்கிறோம். அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பாசம் அன்பு என்பது ஒருதலைபட்சமாக இருக்க கூடாது என்பதை புரிய வைக்கும் கதை. மகனின் வேதனைகள் புரிந்ததும் அதற்கு பிராயச்சித்தமாக தன் பேரக்குழந்தைகளை கொஞ்ச ஆரம்பித்து விட்டார் பட்டம்மாள். நல்ல முடிவு. அருமையான கதை தந்த சகோதரிக்கு அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதைக்கேற்றபடி ஓவியம் தந்த கெளதமன் சகோதரருக்கும் பாராட்டுக்கள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கதை அருமை... அனிருத் பேசும் போது ஒரு இடத்தில், வசந்த மாளிகை சிவாஜி வந்து போனார்...!

    பதிலளிநீக்கு
  7. இப்படி எல்லா இடங்களிலும் நிகழ்ந்தால் நலமே...

    பதிலளிநீக்கு
  8. இப்படி நடந்தால் நன்றாகவே இருக்கும்.

    நல்ல கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  9. என் பதிவை வெளியிட்டு அதற்கு அனைவரும் கமெண்ட் செய்தது எனக்கு மகிழ்ச்சியை தந்தது அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  11. அன்பின் நல்வரவு..

    கதை நன்றாக இருக்கிறது...
    காலத்தின் கோலம் இப்படியான சூழலின் அடித்தளம்...

    பதிலளிநீக்கு
  12. சொந்த வீட்டில் அப்பா-- அம்மாவிற்கு லஷ்மண ரோகை போட்டு தனியா ரூப் பிரிச்சு விட்டாச்சு.

    அதே போல மனைவி ஸ்ருதியின் பெற்றோர்களுக்கும். இங்கே தான் இப்போ கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைஞ்சல். இது தான் ஸ்ருதியின் டிமாண்டா என்று நினைக்கவும் வைக்கிறது. கூடிய மட்டும் புகுந்த வீட்டிற்கு பெண்ணை அனுப்பி வைத்ததும் அவள் பெற்றோர்கள் அப்பப்போ வந்து பார்த்து விட்டுப் போகிற மாதிரி தனியா இருந்தால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.

    இதே நேரத்தில் ஸ்ருதிக்கு உடன் பிறந்தவர்களாய் அண்ணன், தம்பி இருந்து அவர்கள்
    தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்ட சூழ்நிலையில் மாப்பிள்ளை அனிருத் தன் மாமனார், மாமியாரை ஸ்ருதி விரும்பி தன் வீட்டில் இருப்பிடம் அவர்களுக்குக் கொடுத்தால் அது நன்றாக இருக்கும். அது இல்லாத பட்சத்தில் அவர்கள் தனித்து இருப்பதே அனுதின ஸ்ருதியின் நிம்மதியான வாழ்க்கைக்கு நல்லது.

    ஆண்கள் எல்லாவற்றையும் மேலோட்டமாம நினைத்து முடிவுகள் எடுக்கலாம். ஆனால் பெண்கள் தரப்பில் அப்படியில்லை என்பது இந்தக் காலத்தும் வருந்தத்தக்க விஷயம் தான். ஏதையாவது சாக்கிட்டு மன வருத்தம் குடும்பத்தில் ஏற்படாமல் இருக்காது. நல்லதுக்குக் கூட. உதாரணமாக சமையலறையில் ஸ்ருதிக்கு உதவியாக உட்கார்ந்து சாப்பிடப் பிடிக்காமல் அவள் அம்மா செயல்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஸ்ருதியின் மாமியாராலும் தானும் ஏதாவது கூடமாடச் செய்யாமல் இருக்க முடியாது. புகுந்த வீட்டில் பெண்ணுக்கு மாமனார்--மாமியார் இருக்கும் பட்சத்தில், எந்த விதத்தில் பார்த்தாலும் சம்பந்திகள் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றாக குடித்தனம் நடத்துவது அவ்வளவு சிலாக்கியமில்லாத ஒரு விஷயம்.

    பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதின் நோக்கங்களில் ஒன்று அவள் புகுந்த வீட்டு உறவுகளோடு ஒட்டி வாழ்ந்து அவர்களின் குடும்ப மேன்மைகளில் பங்கு கொண்டு நாளாவட்டத்தில் அந்த குடும்ப பாசத்தில் திளைத்து அந்தக் குடும்ப தலைவியாவது தான்.

    கதைகள் வெற்றுக் கற்பனைகளில்லாமல் வாழ்க்கையை ஒட்டி இருந்தால் வாழ்க்கைக்கான பாடமும் அந்தக் கதைகளே ஆகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. ஏன் இப்படி நினைக்கிறீர்கள் ஜீவி சார்? தன்னைப்போல தன் மகன்களுக்கும் பாசம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடக்கூடாது என்று இரண்டு தாத்தா/பாட்டிகளும் தன்னுடனேயே இருக்கட்டும் என்று நினைத்திருக்கிறான் அநிருத்.

      வாழ்க்கையை ஒட்டி இருக்கணும்னா, தாங்கள் தனி Flat, தன் பெற்றோர்களுக்கு எதிர் flat, தன் மனைவியின் பெற்றோருக்கு அடுத்த flat என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான். 5 பெட்ரூம் வீடு கட்டத் தெரிந்த அநிருத்துக்கு, தன் மனைவியை மூன்று வேளையும் சமையலறையில் முடங்கி சமையல்காரியாகவா வைத்துக்கொள்வான்? சமைப்பதற்கு வேறு ஏற்பாடுகள், உதவியாட்கள் வைத்துக்கொண்டிருக்க மாட்டானா?

      பொதுவா குமுதம் டைப் ஒரு பக்கக் கதைகளில் நிதர்சனங்களை எதிர்பார்க்கக்கூடாது. புதுவித திருப்பத்துடன் கூடிய கதை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். (இந்தக் க்ளைமாக்ஸுக்கு நிறைய முன் ஏற்பாடுகள் செய்து, லட்சங்கள் டெபாசிட் செய்து, சாப்பாட்டுக்கு 20,000 வேஸ்ட் செய்து, ஒரே நாளில் திரும்பவும் தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றான் என்பது ஆளுயர மாலையை நம் காதில் மாட்டுகிறார்களே தாங்குமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது)

      நீக்கு
    3. //ஏன் இப்படி நினைக்கிறீர்கள் ஜீவி சார்? //

      என்னிடம் கேட்டு விட்டதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கிருப்பதாக் உணர்கிறேன், நெல்லை. சொல்கிறேன்.

      பொதுவா கதைகளைப் படித்ததும் அந்தக் கதையின் ஜீவன் வாசித்தவன் மனசில் படிந்து விடும். 'இதுக்குத் தான் இந்தக் கதை' என்கிற மாதிரி. வாசித்த கதையிலிருந்து அந்த ஜீவனைப் பெறுவதில் தான் வாசிப்பின் நேர்த்தி இருக்கிறது. இது அவரவருக்கு மாறுபடலாம். அது வேறு விஷயம். கதை கொடுக்கும் கருத்தெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்த 'இதற்காக இந்தக் கதை' என்பது தான் முக்கியம்.

      'போற வழியில ஸ்ருதியோட அம்மா அப்பாவையும் அழைத்துக்கொண்டு போறோம்' என்று ஒரே வரியில் அவசர அவசரமாக ஒரு புதுச்செய்தியை கதாசிரியர் சொல்கிறார். அதற்கு மேல் அது பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது.
      'அப்படியா? ரொம்ப சந்தோஷம்ப்பா..' என்று கூட அநிருத்தின் தாய் சொல்ல ஆசிரியர் விடவில்லை. அந்தச் செய்தியை பட்டும் படாமலும் கதை முடியும் தருவாயில் கதாசிரியர் நழுவ விட்டுப் போகிறார். ஸ்ருதியின் பெற்றோரை தன் வீட்டில் வைத்துக் கொள்வதற்கான வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் இங்கு வந்து தங்கப் போகிறார்கள் என்ற எண்ணமே நம் மன்சில் எழுந்திருக்காது.

      தான் சொன்னபடியே அநிருத் ஸ்ருதியின் பெற்றோரை அழைத்துப் போனானா என்று நமக்குத் தக்வல் இல்லை.

      கடைசி வரியில் கூட 'வீட்டிற்கு சென்றதும் தன் பேரக் குழந்தைகளை அணைத்து முத்தமிட்டு தன் அறைக்கு எடுத்துச் சென்றாள் பட்டம்மா' என்று கதாசிரியர் கதையை முடிக்கிறாரே தவிர குழந்தைகளைப் பார்த்து ஸ்ருதியின் பெற்றோர்களின் மகிழ்ச்சியைப் பற்றி ஒற்றை வரியில் கூட குறிப்பிடவில்லை.
      எதற்காகவோ அவர்களைப் பற்றிய விவரம் அரைகுறையாகவே கதையில் விடப்பட்டிருக்கிறது.

      இந்தக் கதை காரண காரியங்களோடு நன்றாக எழுதப்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். சில இடங்களில் வெட்டப்பட்டு சில இடங்களில் ஓரிரு வரிகள் சேர்க்கப்பட்டு அவசர கோலத்தில் சரிபண்ணப் பட்டிருக்கிறது என்ற எண்ணமும் எனக்குண்டு.

      நீக்கு
    4. 'அதே போல மனைவி ஸ்ருதியின் பெற்றோர்களுக்கும். இங்கே தான் இப்போ கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைஞ்சல். இது தான் ஸ்ருதியின் டிமாண்டா என்று நினைக்கவும் வைக்கிறது' என்று முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன், அல்லவா?..

      கதையை வாசித்த நேர்த்தியில் என் மனசில் படிந்த எண்ணம் அது தான்.

      பெற்றோர்களை முதியோர் இல்லாத்தில் விட்டு விட்டு வந்ததும், 'அப்பாடா.. ஒரு வழியாக காரியம் முடிந்தது' என்று எண்ணுகிறாள் ஸ்ருதி. ஸ்ருதியைப் பற்றி, அவள் தன் மாமனார் - மாமியார் மேல் வைத்திருக்கும் 'பாசம்' பற்றி கதாசிரியர் ஏதாவது குறிப்பிட்டிருந்தால் நாம் இப்படி எண்ண மாட்டோம் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

      முதியோர் இல்லத்தில் அவர்களை விட்ட பிறகு, தன் பெற்றொரை புது வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைப்பதில் ஸ்ருதி முயற்சிக்கும் பொழுது, அநிருத்துக்கு அது பிடிக்கவில்லை.

      'அப்படிச் செய்தால் ஊர் உலகம் என்ன சொல்லும்?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் தடுமாறுகிறான் அநிருத். மனைவியின் ஆசையையும் பூர்த்தி செய்ய வேண்டும், அதே நேரத்தில் சொந்த பந்தங்கள் தன்னைக் குற்றம் சொல்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி,தன் பெற்றோர்களையும் இங்கு அழைத்து வருவது தான் என்ற முடிவெடுக்கிறான்' என்ற தீர்மானத்திற்கு வாசகர் வந்தால் அதில் தப்பில்லை.

      மன்னிக்கவும். கதாசிரியர் இந்த மாதிரி திசை திருப்பலுக்கு இடம் கொடுக்காமல் கதையைப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறதே தவிர அவர் மேல் மிகுந்த மரியாதையுடன் தான், இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற அக்கறையில் தான் இதைச் சொல்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    5. உலகம் பொல்லாதது. அவரவர்களுக்கான் உள் மனசு நியாயங்கள் வெளிப்படத் தெரியவில்லை என்றால் இல்லாது பொல்லாதுகளை கதை கட்டும் வலிமை கொண்டது. 'போற்றுவோர் போற்றட்டும்... எனக்கு நானே நீதிபதி' எல்லாம் நிகழ்வாழ்க்கையில் இல்லை.

      'சிலர் இருக்கிறார்கள் இரண்டு பக்க உறவுகளும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன்' என்று கோமதிம்மா தன் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்.

      அதற்கு ஒரு வலுவான காரணத்தை கதாசிரியர் தன் கதையில் எடுத்தாண்டு நம்மை கன்வின்ஸ் பண்ணத் தவறிவிட்டார் என்பதே என் எண்ணம்.

      இன்னும் சிறப்பான கதைகளை இந்தப் பகுதியில் எழுத கதாசிரியருக்கு என் வாழ்த்துக்கள். ஆசிகள்.

      மிக்க அன்புடன்,
      ஜீவி

      நீக்கு
    6. எனக்கு தெரிந்த பெண் ஒரே மகள் அவர்கள் பெற்றோருக்கு. முதுமையால் அவர்களுக்கு உதவி தேவைபட்டது , அதனால் தன் கணவர் வீட்டாரிடம் கேட்டு தன் குடும்பத்தை தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். இரு தாத்தா, பாட்டிகளும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பொருளாதாரம் இருக்கிறது இரு வீட்டாரிடமும். மனம் இருக்கிறது.

      நீக்கு
    7. நன்றி ஜீவி சார்...உங்கள் விளக்கமான கருத்துக்கு.

      கோமதி அரசு மேடம் சொல்லியிருப்பது அபூர்வமாக சாத்தியப்படும் விஷயம்தான். பல வீடுகளில் மனைவியின் பெற்றோர் குடும்பத்தைக் கலைத்து ஒரேடியாக தங்களை மட்டும் மகளின் குடும்பத்தோடு இணைத்துக்கொண்டு வாழ்வதைத்தான் நான் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
    8. நல்லதொரு அலசல்.  நன்றி ஜீவி ஸார், நெல்லைm கோமதி அக்கா.

      நீக்கு
    9. என் தம்பி தன் மாமியாரைக் கடைசிவரை தன்னிடமே வைத்துக் கொண்டார். நாங்களும் போக, வர இருப்போம். என் அப்பாவும் அங்கே போய்த் தங்கி இருக்கிறார். இதெல்லாம் அவரவர் மனோநிலையைப் பொறுத்தது. ஆனால் கதையே வலுவான அடித்தளத்தில் அமையவே இல்லை. ஏதோ தமிழ் சினிமா போல் அமைந்து விட்டது.

      நீக்கு
    10. எங்கள் குடுப்பக் கதையும் அப்படித் தான், கீதாம்மா. உறவுக்குள் ரொம்பவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தது.

      நீக்கு
    11. பாரதி தம்பியின் கதை அமைப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனூ இரு டி.வி. தொடர். கிட்டத்தட்ட அது தான் நான் வளர்ந்த வாழ்க்கையும் கூட.
      என் மன்னி தான் தாயாய் என்னை வளர்த்தார்கள்.

      நீக்கு
    12. * என்னும் ஒரு டி.வி. கதை

      நீக்கு
    13. தொலைக்காட்சித் தொடர்கள் நான் அதிகம் பார்ப்பது இல்லை ஜீவி ஐயா! அதிலும் விஜய் தொலைக்காட்சி பார்த்ததே இல்லை. எப்போவானும் யாரானும் பார்க்கும்போது பார்ப்பது தான். அப்படி தான் இப்போது மாலைகளில் 2,3 தொலைக்காட்சித் தொடர்கள் அவர் பார்ப்பதால் நானும் உட்கார்ந்து கொண்டு பார்க்கிறேன். சில நாட்கள் தூக்கம் வந்தால் படுக்கப் போயிடுவேன். ஆனால் ஒரு நாள் பார்த்தால் போதுமே!

      நீக்கு
    14. எதற்கும் ஒரு காரணம் இருக்கிறது இல்லையா? சில தொலைக்காட்சித் தொடர்களை ஏன் நான் விருப்பமுடன் பார்க்கிறேன் என்பதற்கான காரணங்கள்.

      1. விஜய் டி.வி.யில் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அனுபவித்து அர்த்தபூர்வமான காட்சிகளுடன் எடுத்துச் செல்லும் தொடர்.

      2. சங்கரா டி.வி.யில் 'பிள்ளையார் பெட்டி'. திருமதி ரேவதி சங்கரனின் நிகழ்ச்சி. அந்தக்கால விஷயங்கள், நம் பழக்க வழக்கங்கள் -- அதற்கான காரண காரியங்கள் என்று அனுபவித்து பல அருமையான தகவல்களுடன் அமையும் விஷயக் களஞ்சியம் இந்தத் தொடர். யுட்யூப்பிலும் நினைத்த பொழுது பிள்ளையார் பெட்டி என்று போட்டுக் களிக்கலாம்.

      3. சங்கரா டி.வி.யில் சுவாமி ஓம்காரநந்தா அவர்களின் தத்வ போத ஞானவிளக்க உரை. அத்வைத சித்தாந்தத்தின் மனசை கிறங்கடிக்கும் தத்துவ உரைகள். பக்தி யோகத்திலிருந்து ஞான யோகத்திற்கு வழிகாட்டும் பரவச நிலை இவரது உரைகள்.

      --- இந்த மூன்றை மட்டும் கூடிய வரை விட்டு விடாமல் தொடர்ந்து பார்த்து, கேட்டு, உணர்ந்து கொண்டு வருகிறேன்.

      நீக்கு
    15. சுவாமி ஓம்காரந்தாவின் தத்வ போதம் உரைகள் யூடியூப்பிலும் கிடைக்கினறன. ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். அதுவே நல்ல அனுபவமாகித் தொடரும் என்பது நிச்சயம்.

      நீக்கு
  13. ** லஷ்மண ரேகை
    ** தனியா ரூம்
    *** மேலோட்டமா

    பதிலளிநீக்கு
  14. இந்தக் கதையை படித்தமாதிரித் தோன்றுகிறதே. மத்யமரில் பிரசுரமானதா/ இவ்வளவு முன் பணம் செலுத்தி ஹோமில் சேர்த்து பணம் வாபஸ்வருமா இந்த யோசனை எனக்கு எதற்கு. நல்ல எண்ணம் பிள்ளைக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. கதை நன்றாக இருக்கிறது.
    நிறைவில் மகன் சொன்னது நன்றாக உள்ளது.
    இப்படியும் சிலர் இருக்கிறார்கள் இரண்டு பக்க உறவுகளும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன்.

    வாழ்த்துக்கள் கதை ஆசிரியருக்கு.

    பதிலளிநீக்கு

  16. கதைகள் வெற்றுக் கற்பனைகளில்லாமல் வாழ்க்கையை ஒட்டி இருந்தால் வாழ்க்கைக்கான பாடமும் அந்தக் கதைகளே ஆகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'கதைகள் வெற்றுக் கற்பனைகளில்லாமல் வாழ்க்கையை ஒட்டி இருந்தால் வாழ்க்கைக்கான பாடமும் அந்தக் கதைகளே ஆகலாம்'.

      -- ஜீவி

      -- இப்படி தங்கள் பின்னூட்டத்தை அமைத்திருந்தால் மிகச் சரியாக இருந்திருக்கும் GMB சார்.

      நீக்கு
  17. பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதின் நோக்கங்களில் ஒன்று அவள் புகுந்த வீட்டு உறவுகளோடு ஒட்டி வாழ்ந்து அவர்களின் குடும்ப மேன்மைகளில் பங்கு கொண்டு நாளாவட்டத்தில் அந்த குடும்ப பாசத்தில் திளைத்து அந்தக் குடும்ப தலைவியாவது தான்.
    --- ஜீவி
    --- இதைக் கூட எடுத்துப் போடலாம் தான். ஆனா, இந்துத்வா கருத்துன்னு சொல்லிடுவாங்களோ?..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!