செவ்வாய், 26 அக்டோபர், 2021

சிறுகதை : குழந்தை வரம் - எஸ் ஜி எஸ்

 சீதா யோசனையுடன் உட்கார்ந்திருந்தாள். அவள் மாமியார், "உட்கார்ந்தது போதும்! ஆஃபீஸிலிருந்து வந்தாயானால் உடனே உட்கார்ந்து கொள்றே! நீ மட்டுமா ஆஃபீஸ் போறே! உடனே எழுந்து அடுத்த வேலையைப் பார்!" என்று கடுமையாகச் சொன்னாள். சீதாவுக்கோ  உடல் சோர்விலும், மனச்சோர்விலும் எழுந்து கொள்ள மனமே இல்லை. உடல் சோர்வை விடவும் மனச்சோர்வு சீதாவைப் பிடித்து ஆட்டியது. 

இத்தனை வருடங்கள் இந்தக் குடும்பத்திற்கு உழைத்தாயிற்று! பெரிதாகப் புகழ்மாலை சூட்டாவிட்டாலும் பரவாயில்லை. இழிசொற்களே கிடைத்தன. அவள் கணவன் ராமச்சந்திரனை வாயில்லாப் பூச்சி என்று சொல்ல முடியாது! எல்லாமும் அறிந்தவனே! என்றாலும் வாயைத் திறந்து யாரையும் கண்டிப்பதில்லை. ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்பதும் இல்லை! எல்லாவற்றையும் விட இதுதான் சீதாவுக்கு இன்னமும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது.

திருமணம் ஆகி வரும்போது எவ்வளவு எதிர்பார்ப்புகள்! ஆசைகள்! அவள் பிறந்த வீட்டில் வசதிக்குக் குறைவு இல்லை தான்! என்றாலும் அவள் நக்ஷத்திரம் காரணமாக மூத்த பிள்ளைக்கே கொடுக்க வேண்டும் என்று அந்தக்கால கட்டத்தில் எல்லோரும் சொல்லுவார்கள். ஆகையால் தேடித் தேடி அவளுக்குக் கிடைத்தது ராமச்சந்திரன்தான். ராமச்சந்திரன் பெயருக்கேற்றாற்போல் மனைவியின் மேல் ஆசை கொண்டவனே! அந்த ஶ்ரீராமன் போலவே இவனும் ஏகபத்தினி விரதனே! அப்படி ஒன்றும் சாதாரண வேலை இல்லை. மத்திய அரசு அதிகாரியாகவே இருந்தான். நல்ல சம்பளம்தான். ஆனால் எல்லாமும் குடும்பத்தில் அடிபட்டுப் போய் விட்டது.

ஆரம்பத்தில் சீதா இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை! என்ன இருந்தாலும் நம் குடும்பம், நம் கணவர், நம் மாமனார், மாமியார், மைத்துனர்கள், நாத்தனார்கள் என்று நினைத்துக் கொண்டு அவளே தூண்டித் தூண்டி ராமச்சந்திரனை தாராளமாகச் செலவு செய்ய வைத்தாள். 

அப்படியும் மாமியார் அவளைக் குற்றம் சொல்லாது இல்லை! நாத்தனார்கள் பங்குக்கு அவர்களும் கேலி, கிண்டல் செய்வார்கள். சீதா வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். ஆனாலும் வீட்டில் எல்லா வேலையையும் முடித்து விட்டுத்தான் போக வேண்டும். நாள், கிழமை என்றாலோ மாமனார் செய்து வந்த சிராத்தங்களின் போதோ அவள் அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு மாமியாருடன் கூடமாட ஒத்தாசை செய்ய வேண்டும். லீவ் போட முடியவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. இதனால் அவளுக்கு விடுமுறைச் சேமிப்புகள் என்பதே இல்லாமல் போய் விடும். அவளுக்கே ஒரு தலைவலி, ஜுரம் என்று வந்தால் விடுமுறையே கிடைக்காமல் அலுவலகம் போய்த்தான் ஆகவேண்டும்.

அதோடு இல்லாமல் அவள் மாமனார் செய்யும் சிராத்தத்தின் போதெல்லாம் அவளுக்கு மாதாந்திர விலக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கென மாதவிலக்கைத் தள்ளிப் போட்டே ஆகவேண்டும்.  சீதாவின் வீட்டிலோ அவள் ஒரே பெண்! ஆகவே அவள் பெற்றோர் சீதாவின் மூலமாகப் பேரனையோ, பேத்தியையோ எதிர்பார்த்தார்கள்!  ஆனால் இந்தக் காரணங்களால் மட்டும் இல்லாமல் அவள் மாமியார் நடந்து கொண்ட முறையினாலும் சீதா கர்ப்பம் ஆவது என்னமோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. 

கூடியவரை தன் பிள்ளையும் மருமகளும் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களை அந்த அம்மாள் தவிர்த்தே வந்தாள். இவங்க பாட்டுக்குக் குழந்தை பெற்றுக்கொண்டார்களானால் தான் அதைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வரும். அதோடு இல்லாமல் இப்போது மாதிரித் தன் மற்றப் பெண், பிள்ளைகளுக்கு இவங்க செய்வாங்களா? என்ன இருந்தாலும் அவங்க அவங்க குழந்தை என்றால் தனி தானே! கூடப் பிறந்தவர்களுக்குச் செய்வதில் சுணக்கம் காட்டினால் என்ன செய்வது? 

அவள் மாமியாரைப் பொறுத்த மட்டில் இதில் ஒன்றும் பெரிய அளவு கவலை எல்லாம் இல்லை. சீதாவுக்குக் குழந்தை பிறந்தால் கொஞ்ச நாளைக்குத் தான் அவள் அம்மா வீட்டில் இருப்பாள். அப்புறம் குழந்தையுடன் இங்கே வந்தால் விட்டு விட்டு அலுவலகம் செல்வாள். தான் அல்லவோ அந்தக் குழந்தையுடன் மல்லுக்கட்ட வேண்டும்! ஆகவே அவளுக்குக் குழந்தை பிறந்தால் என்ன? பிறக்காவிட்டால் என்ன? நமக்கு நல்லதே! என்றே எண்ணினாள் சீதாவின் மாமியார்! 

மூத்த பிள்ளை, குழந்தை இல்லாமல் இருந்தால் தான் அவன் கூடப் பிறந்தவர்களுக்கு நன்றாகச் செய்ய முடியும் என்பது சீதாவின் மாமியாரின் எண்ணம்.  சொல்லப் போனால் அவசரப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டான் என்றே சீதாவின் மாமியார் நினைப்பார். தன் மற்றக் குழந்தைகளிடமும் அதையே சொல்லுவார். அதனால் அவங்களுக்குமே அண்ணாவிற்குக் குழந்தை எதற்கு என்னும் எண்ணமே வேரூன்றி இருந்தது.

வருடங்கள் உருண்டோடின. சீதாவின் மைத்துனர்கள் படித்து நல்ல வேலைக்கும் வந்தாகி விட்டது. கடைசி நாத்தனாருக்கும் மாமியார் விருப்பப்படி நிறையச் சீர்வரிசைகளோடு நல்ல இடத்தில் கல்யாணமும் செய்து கொடுத்தாகி விட்டது! வரிசையாக எல்லோருக்கும் குழந்தையும் பிறந்தாகி விட்டது சீதாவைத் தவிர! 

இத்தனை வருடங்களுக்குள் சீதாவும், ராமச்சந்திரனுமாகச் சேர்ந்து நகரின் நடுமையத்தில் ஓர் அழகான வீட்டையும் கட்டி இருந்தார்கள். குழந்தைச் செல்வம் இல்லை என்று ஆரம்பத்தில் சந்தோஷப்பட்ட அவள் மாமியாரோ இப்போது கடுமையான சொற்களால் அவளை நிந்தித்தாள். வாய்க்கு வாய் "மலடி"ப் பட்டம் சூட்டிக் கொண்டிருந்தாள். இதனால் எல்லாம் சீதாவின்மனம் வேதனைப் பட்டது.  சில சமயம் இதற்கு நானா காரணம் என்று கேட்டுவிட வேண்டும் என அவள் மனம் கொதிக்கும். ஆனாலும் வாய் திறக்கக் கூடாது என்று மௌனம் சாதித்தாள்.

அன்று

சீதாவுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர் யாருக்கோ கல்யாணம் . அன்று மாலை திருமண வரவேற்பு. முதலில் கலந்து கொள்ள மனம் இல்லாமல் இருந்த சீதா தோழியரின் வற்புறுத்தல் காரணமாகத் தானும் போகலாம்னு முடிவு எடுத்து  வீட்டிற்கு மதியமே சீக்கிரமாக வந்துவிட்டு மாலை வரவேற்பில் கலந்து கொள்ள ஆயத்தம் செய்ய வேண்டி வீட்டுக்கு வந்திருந்தாள். வாசல் கதவு சார்த்தி இருந்தாலும் தாழே போடவில்லை. என்ன இது என நினைத்த வண்ணம்  கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையப் போனவள்  நடுக்கூடத்தில் படுத்திருந்த மாமியாரும், மாமனாரும் தன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏதோ பேசிக் கொள்வதைக் கேட்க நேர்ந்தது.

அவள் மாமியார் தன் கணவரிடம், "ஆச்சு, கல்யாணம் ஆகிப் பதினைந்து வருடங்கள் ஆகி விட்டது. இன்னமும் ஒரு புழு, பூச்சி கூட முளைக்கலை! இன்னும் எத்தனை நாட்கள் நம்ம ராமு இவளைச் சகித்துக் கொள்வான்?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.  அதற்கு அவர் கொடுத்த பதில் சீதாவைத் தூக்கிவாரிப் போட வைத்தது.

"எல்லாம் நானும் பார்த்துண்டு தான் இருக்கேன். இது விஷயமாக ஒரு நல்ல இடம் நம்ம வரது சொன்னான். அந்தப் பெண்ணின் ஜாதகம் கூட நம்ம ராமுவோட ஜாதகத்தோட நன்றாகப் பொருந்தி வருது! அதெல்லாம் பார்த்துட்டேன். பெண்ணையும் கோயில்லே காட்டினான் வரது! அப்பா மட்டும் தான் இருக்கார்! அம்மா இல்லையாம்! அண்ணா, மன்னி கூட இருக்காளாம். என்னமோ கல்யாணம் தட்டித் தட்டிப் போறதேனு அவாளுக்கு ரொம்ப வருத்தமாம்! அதான் ஒரே பொண்ணுனு கூடப் பார்க்காம நம்ம ராமுவுக்கு இரண்டாம் தாரமாக் கொடுக்கக் கூடத் தயாரா இருப்பதாச் சொல்லி இருக்கா! அதெல்லாம் பேசிட்டேன்! ராமு கிட்டே சொல்ல வேண்டியது தான் பாக்கி! இன்னிக்கு நம்ம கோமா, ராஜூ இரண்டு பேரையும் வரச் சொல்லி எதிராத்திலேருந்து ஃபோன் பேசிச் சொல்லி இருக்கேன். அவா வந்தப்புறமா அவாளை விட்டே பேசச் சொல்லலாமேனு பார்க்கிறேன்!" என்றார்.

கோமா என்பது சீதாவின் கடைசி நாத்தனார். அவள் வைச்சது தான் அந்த வீட்டிலே சட்டம்! மாமனாரும், மாமியாரும் தினம் ஒரு முறையாவது அவளைப் பார்த்துப் பேசிவிடுவார்கள். அதற்கேற்றாற்போல் உள்ளூரிலேயே கணவன் வீடும் அவளுக்கு அமைந்திருக்கிறது. ராஜு என்பது ராமச்சந்திரனின் தம்பி. கடைசித் தம்பி வடநாட்டில் வேலை செய்கிறான். அவனுக்கும் திருமணம் ஆகிக் கைக்குழந்தை இருக்கிறது. 

மாமியார், மாமனார் பேசிக்கொண்டது இத்தனையையும் கேட்ட சீதாவுக்குக் கண்ணில் கண்ணீர் ததும்பியது. திருமண வரவேற்புக்குச் செல்ல வேண்டி உற்சாகத்துடன் வந்தவள் இப்போது ஏன் போக வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். மெல்லக் கதவைச் சத்தப்படுத்தித் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அந்த நேரத்தில் அவளைக் கண்ட மாமியார், மாமனார் விதிர்விதிர்த்துப் போனாலும் சட்டென்று சமாளித்துக் கொண்டனர்.

"என்ன அதுக்குள்ளே வந்துட்டே?" என்ற மாமியாரின் கேள்விக்குப் பதிலளிக்கலாமா என்று யோசித்த சீதாவிடம் அவள் மாமனார், "ஆமாம், நீ ஏதோ கல்யாணத்துக்குப் போகணும்னு சொன்னியாமே! நீ மட்டும் போறியா? ராமுவும் வரானா?" என்று கேட்டார். சீதா அதற்குத் தான் மட்டும் தான் போகப் போவதாய்ச் சொன்னாள். "அதான் சரி!" என்றார் மாமனார். பின்னர் தொடர்ந்து, "இன்னிக்குக் கோமாவும், ராஜுவும் வரா இங்கே! ராமு வீட்டில் இருந்தான்னா ஒரு முக்கியமான முடிவு எடுக்க வசதியா இருக்கும்!" என்றார். மனைவியைப் பார்த்துக் கண்ணைக் காட்டினார்.

''ம்ம்ம்ம்... அந்த முக்கியமான முடிவு என்னைக் குறித்துத் தானே! நான் இருக்க வேண்டாமா?" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சீதா.

பின் ஒன்றுமே சொல்லாமல் உள்ளே சென்றாள். அவள் மாமியார் அவளிடம், "நீ பாட்டுக்குக் கல்யாணத் தம்பதிகளிடம் முதலில் போய் நிற்காதே! யாரானும் குழந்தை பெற்ற கைராசிக்காரர்களை விட்டுப் பரிசைக் கொடுக்கச் சொல்லு! உன் கையால் கொடுத்துடாதே!" என்று நிர்த்தாட்சிண்யமாகச் சொன்னாள்.

பின்னர் சற்று நேரத்தில் மாமியார் கோயிலுக்குப் போய்விட, மாமனார் தன் நண்பர்களைச் சந்திக்கச் சென்று விட்டார். திருமண வரவேற்புக்குச் செல்ல மனமில்லாமல் சீதா மொட்டை மாடிக்குச் சென்று அழுது கொண்டு உட்கார்ந்திருந்தாள். சமீபத்தில் கூட மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றதும், அங்கே அவர்கள் சொன்ன தீர்ப்பும் நினைவில் வந்து மோதியது. அதைப் பற்றி இருவரும் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. சீதாவுக்கும் அதை வெளிப்படையாகச் சொல்ல இஷ்டம் இல்லை.

அதற்குள்ளாகக் கீழே களேபரங்கள் ஆரம்பமாகி விட்டன. ராஜுவும், கோமாவும் வந்துவிட்டார்கள்.  மாமனார் விஷயத்தைச் சொல்ல இருவருக்கும் ராமுவுக்கு இன்னொரு திருமணம் செய்யும் விஷயமே பிடிக்கவில்லை.  அப்பாவிடம், "இவளே இருந்துட்டுப் போகட்டும் அப்பா! அப்போத் தான் நாளைக்கு ராமு, இவள் காலத்துக்குப் பின்னால் சொத்தெல்லாம் எங்களுக்கு வரும்! இன்னொருத்தியைக் கல்யாணம் செய்துண்டு ராமுவுக்குக் குழந்தை பிறந்துட்டால் சொத்தெல்லாம் அந்தக் குழந்தைக்கு இல்லையோ போகும்! இந்த வீடு ஒண்ணே போதுமே! என்ன சொல்றே கோமா?" என்று தன் சகோதரியைப் பார்த்து ராஜூ கேட்க அவளும் ஆமோதித்தாள்.

சற்று நேரத்தில் வந்த ராமுவிடம் எதுவுமே பேசாமல் தேனொழுகப் பேசிவிட்டுச் சென்று விட்டார்கள் இருவரும். மாமனார், மாமியாரும் எதுவும் பேசவில்லை! ராமு தன் அறைக்குச் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து எதுவுமே தெரியாதது போல் மொட்டை மாடியிலிருந்து கீழிறங்கி வந்தாள் சீதா! அவளும் தங்கள் அறைக்குச் சென்று விட்டாள். 

ராமு கட்டிலில் படுத்திருந்தான். சப்தமே இல்லாமல் தன் உடைகளை மாற்றிக் கொண்டு கட்டிலில் படுத்தவள் மேல் ஒரு கரம் நீண்டது. அவளை இறுக அணைத்த ராமு அவளை எழுப்பி ஒரு பொட்டலத்தைக் கையில் கொடுத்தான். அதைத் தொட்டுப் பார்த்தாள் சீதா! உணவுப் பொட்டலம்! இது எப்படி, எப்போது வாங்கி வந்தான்? ஆச்சரியத்துடன் பார்த்தாள் சீதா!

"மொட்டை மாடியில் உன் உருவத்தைப் பார்த்ததுமே கீழே ஏதோ நடந்திருக்கு அல்லது நடக்கப் போகிறதுனு புரிந்தது. அதான் அப்படியே திரும்பி உனக்காகச் சாப்பாடு வாங்கி வந்தேன். இல்லைனா நீ சாப்பிட்டிருக்க மாட்டாய்னு எனக்குத் தெரியும்!" என்றான் ராமு! துக்கம் தொண்டையை அடைத்தது சீதாவுக்கு. 

மறுபடி அவளிடம், "நாளைக்கு அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லி விடு! நாம் ஓர் இடத்துக்குப் போறோம்!" என்றான் ராமு. பார்வையாலேயே வினவிய மனைவியிடம் பொறு என்று ஜாடையும் காட்டினான். கீழே என்ன நடந்தது என்று அவளிடம் கேட்கக் கூட இல்லை!  

அடுத்த நாள் விடுமுறை எடுக்க முடியாமல்  அலுவலகம் சென்ற சீதாவுக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை அவளுக்கு! திக்பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தாள்! 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த கல்பனா "என்னடி சீதா! இப்படிப் பிரமித்துப் போய் உட்கார்ந்திருக்கியே! ஏதேனும் விசேஷமா?" என்றாள்.

கண்ணீர் மல்க அவளைப் பார்த்த சீதா, "நீயுமா?" எனக் கண்களாலேயே கேட்டாள்.

"பின்னே? உள்ளே இருந்து உனக்கு அழைப்பு வந்து பத்து நிமிஷம் ஆச்சு! இன்னும் போகலையே! என்ன ஆச்சு உனக்கு?" 

"போறேன். போய் வாங்கிக் கட்டிக்கொண்டு வரேன்." என்றபடி சீதா எழுந்து உள்ளே செல்ல ஆயத்தமானாள்.

"என்னடி? வழக்கமான உன் மாமியாரோட தொல்லைதானே! இது என்ன புதுசா? விட்டுத் தள்ளு!" என்றாள் கல்பனா.

"அவங்க என்னையே விட்டுத் தள்ளப் போறாங்க!" என்ற சீதாவை அதிர்ச்சியுடன் பார்த்த கல்பனா, "என்ன சொல்றே!" என்றாள். "போயிட்டு வந்துடறேன்." என்று ஜாடை காட்டிய வண்ணம் சீதா உள்ளே சென்றாள். 

உள்ளே வழக்கம்போல் அவள் செய்யாத தப்புக்காக மண்டகப்படி வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்பினாள். 'எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?' என்று பெருமூச்சு விட்டாள் மறுபடியும்!  வெளியே வந்தவளிடம் கல்பனா மறுபடியும் சீதாவின் இடத்துக்கே வந்து, என்னடி? வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன்! முகமே சரியில்லையே!" என்றாள்.

சீதா ஒரு பெருமூச்சுடன் தன் மாமனார்.மாமியாரின் முடிவைப் பற்றியும் அதை வேண்டாம் என்று மறுத்த மைத்துனர், நாத்தனார் பற்றியும் அதற்கு அவங்க சொன்ன காரணத்தையும் சொன்னாள்.  " அடிப்பாவி! உன் மாமியாரும் நாலைந்து பெண்களைப் பெற்றவள் தானே! இப்போ இருக்கிறது வேண்டுமானால் 3 பேராக இருக்கலாம். ஆனால் எத்தனை குழந்தைகள்! அதிலும் பெண் குழந்தைகள்! அத்தனையும் இருந்திருந்தால் நீ இன்னமும் இப்போதும் அவங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பாய்!" என்றாள் ஆத்திரத்துடன் கல்பனா! "விடு! அதான் இல்லைனு ஆயிடுத்தே!" என்றாள் சீதா. 

 அப்போது அவள் கணவன் அவளைத் தொலைபேசியில் அழைத்தான்.  
ராமச்சந்திரன் என்னும் பெயருள்ள அவனுக்கும் சீதாவுக்கும் பெயர்ப்பொருத்தமே சிறப்பாக இருப்பதாகச் சொல்லி ஜாதகங்களும் பொருந்தி வருவதாகவும் சொல்லித் தான் அவர்கள் கல்யாணம் நடந்தது.  

இந்தப் பதினைந்து வருடங்களில் அவர்கள் இருவருக்குள்ளும் எவ்விதமான மனக்கசப்பும் இல்லைதான்! ஆனாலும் அவளுக்குத் தன் கணவன் மேல் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்தது. அதை அவன் மேல் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தவும் அவளால் முடியவில்லை. ஏனெனில் ஒரு விதத்தில் அவளே இதற்குக் காரணம் எனலாம்.

பெரிய குடும்பத்தின் மூத்த மகன் ஆன ராமச்சந்திரனுக்குப் பொறுப்புகள் அதிகம். தம்பி, தங்கைகளைப் படிக்க வைத்துத் திருமணம் செய்து கொடுத்து என்று பொறுப்புக்களைத் தோளில் சுமந்து திரிந்தான். சீதாவும் முழு மனதுடன் ஒத்துழைத்துத் தான் வந்திருக்கிறாள். இத்தனைக்கும் நடுவிலே இருவருமாகச் சேர்ந்து நகரின் நடுமையத்தில் அழகான தனி வீடு ஒன்றும் கட்டியாச்சு! மாமியார், மாமனார் உடன் வசிக்க அங்கே குடித்தனம் நடக்கிறது. எல்லாம் நன்றாகவே இருக்கிறது தான். அவர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைத்த இளையோர்களுக்குக் குழந்தைகள் பிறக்க அவர்களுக்குத் தான் கொஞ்சி மகிழவோ, விளையாடவோ, வீட்டில் கலகலப்பை உண்டாக்கவோ ஒரு குழந்தைதான் இல்லை அவர்களுக்கு! 

ஆனால் அதற்குக் காரணம்! அதை நினைக்கையிலேயே சீதாவின் மனம் விண்டு போனது. வெளியே சொல்லிக் கொள்ளக் கூடியதா அது! பெருமூச்சுத் தான் வந்தது சீதாவுக்கு! மாமியாரின் ஜாடை மாடைப் பேச்சுக்களால் மனம் விண்டுதான் போகும். ஆனாலும் ஒன்றும் செய்வதற்கில்லை!   பழைய நினைவுகளைத் தூரத் தள்ளிய சீதா கணவனின் அழைப்பைக் கண்டு தன் கைபேசியை எடுத்தாள்.

"சாயந்திரம் நான் உன் அலுவலகம் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்! ஒரு இடத்துக்குப் போக வேண்டும்!" என்றான் ராமச்சந்திரன்! ராமன், ராமு என்றெல்லாம் அழைப்பார்கள். ஆனால் அவளுக்கு என்னமோ ராமச்சந்திரன் என்றால் தான் நிறைவாய்த் தோன்றும்!

 அடுத்தடுத்து கடல் அலைகளைப் போல் உதித்த எண்ண அலைகளை உதறித் தள்ளிவிட்டு, "எங்கே?" என்று கேட்டாள்.

"ரகசியம்! பரம ரகசியம்!" என்று விட்டுச் சிரித்தான் ராமச்சந்திரன்.

அன்று மாலை மட்டுமில்லாமல் அதன் பின்னரும் இப்படி அவளை அழைத்துச் சென்றான். 
சில நாட்கள் சென்றன. அன்று அவள் மாமியாரும், மாமனாரும் ராமச்சந்திரனிடம் சீதாவுக்குக் குழந்தையே பிறக்காமல் இருப்பதைப் பற்றிக் குற்றம் சொல்லி ராமச்சந்திரனுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவெடுத்திருப்பதாகவும் சொன்னார்கள். 

ராமச்சந்திரன் சிரித்தான்! யார் சொன்னது எங்களுக்குக் குழந்தையே பிறக்காது என்று? கட்டாயம் பிறக்கும் என்று பெற்றோரிடம் சொன்னான். அவன் தம்பி, தங்கையர் இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை எனில் சொத்தெல்லாம் அவர்களுக்கு வரும் என்று கணக்குப் போட்டு வருவதையும் ராமச்சந்திரன் அறிவான். ஆனாலும் வாய் திறந்து எதையும் சொல்லவில்லை! யாரிடமும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை!

மறுநாள்/ அதன் பின்னர் எனத் தொடர்ந்து சில நாட்கள் அவர்கள் இருவரும் சென்ற இடத்தைப் பற்றி யாரிடமும் மூச்சுக் கூட விடவில்லை சீதா! மறுபடி மறுபடி இரண்டு மூன்று முறை ஒவ்வொரு மாதமும் இருவரும் சென்று வந்தார்கள். மூன்று மாதத்துக்குப் பின்னர் சீதாவின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. சீதா கொஞ்ச நாளைக்காவது பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆகவே அவளைத் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டான் ராமு! இங்கே ராமுவின் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை!

விரைவில் நல்ல பிள்ளைக் குழந்தையாக ராமுவுக்குப் பிறந்தது. அன்று புண்யாகவசனம், குழந்தைக்குப் பெயர் வைத்தல், தொட்டிலில் போடுதல் எல்லாம் நடந்தது. எல்லோரும் குழந்தையைப் பார்த்து விட்டு, "ராமு மாதிரியே கண்கள் என்றும் சீதா மாதிரியே மூக்கு என்றும் சொன்னதோடு இல்லாமல் ராமுவின் அப்பா, மாதிரியே குழந்தையின் உருவ அமைப்பு இருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள். சீதாவைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான் ராமு. சீதாவின் கண்கள் கலங்கின. என்றாலும் தனக்காக இத்தனை பெரிய தியாகத்தைச் செய்த ராமு என்ற ராமச்சந்திரனை இந்த சீதா மன்னித்துத் தான் விட்டாள்!
= = = = =
பி.கு. மருத்துவப் பரிசோதனையில் ராமுவுக்கு அம்மை போட்டதில் ஏற்பட்ட விந்தணுக்கள் குறைபாட்டினால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பது இருவருக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் சீதாவின் மேல் பழி விழுந்து விட்டது. ஆகவே ராமு ஓர் நம்பிக்கையான நல்ல மருத்துவர் மூலம் சீதாவுக்குச் செயற்கை முறைக் கருத்தரிப்புச் செய்து வைத்தான்.  அதன் மூலம் பிறந்தது தான் இந்தக் குழந்தை. இந்த ரகசியம் இருவருக்கு மட்டுமே தெரியும். அந்தக் குழந்தைக்குக் கூடத் தெரியாது. 

= = = = =

80 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் நல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. கதை எங்கேயோ கேட்ட நினைவு. கிட்டத்தட்ட

    அன்பின் கீதா சாம்பசிவம் எழுதின கதையில் இந்த
    மாமியார் வந்திருக்கிறாரோ!!

    ஆனால் அது வீடு பற்றின கதை.
    திரு எஸ்ஜி எஸ் இந்தக் கதையை
    அருமையான கருவுடன் சொல்லி இருக்கிறார்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுக்கு வீடு மாமியார்!

      நீக்கு
    2. எனக்குத் தெரிந்து அல்லது நான் அறிந்தவரையில் மாமியார்கள் மூத்த பிள்ளை மீது தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதே போல் மாமியார் படுத்தலும் மூத்த மருமகளுக்கே! மற்றவர்களிடம் அந்த மாமியாரின் ஜம்பம் செல்லாதா? அல்லது இதான்/இப்படித்தான் நடக்கணுமா?

      நீக்கு
    3. இப்போ சமீபத்தில் பார்த்த ஒரு நிகழ்வில் மூத்த பிள்ளைக்குச் சாப்பிடும் சமயம் அம்மா இன்னமும் ஒழுங்கு சொல்லிக் கொடுக்கிறார். இதை முன்னால் சாப்பிடு/அதைப் பின்னால் சாப்பிடு. சாம்பாரை அதிகம் ஊத்திக்காதே/சட்னி காரமா இருக்கப் போறது! என்றெல்லாம் சொல்கிறார். அதே சமயம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சின்னப் பிள்ளையைத் திரும்பிக் கூடப் பார்க்கலை. அவர் பாட்டுக்கு இஷ்டத்துக்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மூத்த பிள்ளைக்கு 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சின்னவருக்கு 33/34 இருக்கலாம்.

      நீக்கு
    4. ​நான் பார்த்து சில இடங்களில் மூத்த மருமகள்கள் ஒரு மாதிரியும், இளைய மருமகள்கள் ஒரு மாதிரியும் குறை வைத்திருக்கிறார்கள். ஆக குறை நிரந்தரம்!​

      நீக்கு
    5. குறைகள் இருக்கலாம். ஆனால் மூத்த மருமகள்களுக்குக் கிடைக்காத சுதந்திரம்/உரிமைகள் அடுத்து வருபவர்களுக்கு மாமியாரால்/மாமனாரால் கொடுக்கப்படும். அது ஏன்னு புரியறதில்லை. முதல் முதல் தன்னை அம்மாவாக்கிய குழந்தை என்பதால் இருக்குமோனு நினைச்சேன். ஆனால் முதலில் பெண், பின்னர் பிள்ளைகள்னு பிறந்திருந்தாலும் இதுவே தான் நடந்து வருகிறது.

      நீக்கு
    6. மாமியாருக்கு யாருடனேனும் கூடவே இருக்கணும். அதனால முதல் மருமகளை கைக்குள் கடுமையா வச்சுப்பாங்க. எல்லாரையும் அப்படி கடுமையா ட்ரீட் பண்ணினா அவங்க கூட்டணி சேர்ந்து முதலுக்கே மோசமாயிடும் என்று முதல் மருமகளுடன் தங்கள் வேலையை நிறுத்திக்கறாங்களோ?

      நீக்கு
  3. எங்கள் உறவில் கூட இதே போல்
    11 வருடங்கள் கழித்து, இந்த செயற்கைக் கருத்தரிப்பு முறையில்
    குழந்தை பிறந்தது.
    நன்றாகவும் இருக்கிறது.

    இப்படியா ஒரு மனிதனை உபயோகப் படுத்துவார்கள்.
    அந்த அன்னைக்கு இப்படிக் கொடூர புத்தி வரலாமா.
    இருப்பதால் தானே இப்படி ஒரு
    கதை உருவாகி இருக்கிறது.

    கதை எழுதியவருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படியா ஒரு மனிதனை உபயோகப் படுத்துவார்கள்.
      அந்த அன்னைக்கு இப்படிக் கொடூர புத்தி வரலாமா./

      எனக்கு வாய் துறுதுறு என்கிறது.  சொல்லாதே என்கிறது அறிவு!

      நீக்கு
    2. உங்களுக்கும் அப்படி யாரையாவது தெரியுமா ஸ்ரீராம்!!!

      வில்லாதி வில்லியா இருப்பார் போல இருக்கே:(

      நீக்கு
    3. நோ... கேட்காதீங்க... இன்னும் ரெண்டு தடவை கேட்டா உளறிடுவேன்!

      நீக்கு
    4. ம்ம்ம்ம், எனக்கு எங்க உறவு வட்டத்திலேயே சிலரைத் தெரியும் ரேவதி! :(

      நீக்கு
  4. பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.  பாராட்டு எழுதியவருக்குதான் சேரவேண்டும்.

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  6. கணவன் மனைவி அன்யோன்யத்தைக் காட்டும்
    படத்தை வரைந்த KGG க்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ராமு கட்டிலில் படுத்திருந்தான். சப்தமே இல்லாமல் தன் உடைகளை மாற்றிக் கொண்டு கட்டிலில் படுத்தவள் மேல் ஒரு கரம் நீண்டது. அவளை இறுக அணைத்த ராமு அவளை எழுப்பி ஒரு பொட்டலத்தைக் கையில் கொடுத்தான். அதைத் தொட்டுப் பார்த்தாள் சீதா! உணவுப் பொட்டலம்! இது எப்படி, எப்போது வாங்கி வந்தான்? ஆச்சரியத்துடன் பார்த்தாள் சீதா!///////////////////////////////////////////////////////////////////



    கதையில் மிகப் பிடித்த கதா நாயகன். பாவம் அவனுக்கு இப்படி
    ஒரு குறை வேண்டாம்.:(

    மாமியார்,மாமனார் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களா
    இந்தக் காலத்திலயும்னு தோன்றியது.
    அது கொஞ்சம் கதைக்கு ஒரு கசப்புதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் காலத்திலேயும் மாமியார்கள் மாறவே மாட்டார்களோ! எனக்குத் தெரிந்த ஒரு மாமியார் பிள்ளைக்குக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் பெண் வயிற்றுப் பேரன், பேத்திகளையே அதிகம் கொண்டாடுவார். அவங்களுக்கே எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வார்.

      நீக்கு
    2. இதுவும் வீட்டுக்கு வீடு வழக்கம்தான்...

      நீக்கு
  8. எனக்குத் தெரிந்து காது கேக்காத ஒரு பையனைக்
    கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண் குடித்தனம் நடத்தினார்.
    நல்ல அழகு.

    அவளையும் மாமியார் கண்டபடி சாப்பிட வைத்து
    எடை கூடிய பிறகு நீ குண்டாக இருக்கே அதனால
    குழந்தை பிறக்கவில்லைன்னு சொல்லிப்
    பாடாப் படுத்தினார்.

    பாவம் அந்தப் பெண். பிறகு எப்படியோ
    குழந்தை பிறந்தது.
    சீதா ராமச்சந்திரன் நன்றாக வாழ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எனக்குத் தெரிந்து காது கேக்காத ஒரு பையனைக்கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண் குடித்தனம் நடத்தினார்.
      நல்ல அழகு. //

      கோஷிஷ் (உயர்ந்தவர்கள்) நினைவுக்கு வருகிறது!  குழந்தை பிறக்காததை சாக்காய் வைத்து மாமியார்கள் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள் போல!

      நீக்கு
    2. பொதுவாகப் பிள்ளை/மனைவியுடன் சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினால் அதை ஏற்றுக் கொண்டு பெருந்தன்மையுடன் இருக்கும் மாமியார்கள்/மாமனார்கள் குறைவோ? ஆனால் இப்போதைய காலத்தில் அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
    3. சிலபல இடங்களில் மாமனார் மாமியார்கள் மருமகள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பண்ணது போகும் காலம் இது..  மருமகளுக்கு கோபம் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.

      நீக்கு
    4. படுத்தி எடுக்கும் மருமகள்களை அதிகம் பார்க்காட்டியும் ஓரளவுக்குக் கேள்விப் பட்டிருக்கேன். மாமியார் சமைப்பார் எனில் அனுமதிக்கும் மருமகள்கள் குறைவு. சமையலறையைச் சுத்தமாக வைக்க மாட்டார் என்பதால் அனுமதிக்க மாட்டார்கள். சாமான்கள் நிறையச் செலவாகிடும் என்பதால் எனக்குத் தெரிந்த ஒரு பெண் அவர் மாமியாரைச் சமைக்க விடுவதில்லை. ஆக இரண்டு பக்கமும் குற்றங்கள் உள்ளன.

      நீக்கு
    5. அம்மா உடைத்தால் மண்குடம். மாமியார் உடைத்தால் பொன்குடம்:)))))))))

      அம்மா செய்தால் நல்ல அவியல்.
      மாமியார் செய்தால் சொதப்பல்.
      ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல:)

      நீக்கு
    6. /பிள்ளை/மனைவியுடன் சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினால் அதை ஏற்றுக் கொண்டு பெருந்தன்மையுடன் இருக்கும் மாமியார்கள்/// - இதுக்கு விடை மாமியார்கள்தான் சொல்லணும். எங்க அம்மாவும் அப்படி இருந்தபோது எனக்கே ஆச்சர்யமாகவும், ஏன் இப்படி என்றும் தோன்றியது (of course நாங்கள்லாம்-பசங்க, ரொம்ப டாமினேடிங் டைப். நான்லாம் பெற்றோருடன் இல்லவே இல்லை, திருமணத்துக்குப் பிறகு)

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும் மேலோங்கிடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. இப்படியாக இருக்கும் மனிதர்களைக் கொண்ட
    உலகத்தில் நரகம் எங்கும் இல்லை.
    குணம் இல்லாத மனிதர்களிடம் தான் இருக்கிறது.
    இந்தக் கதை நிறைய யோசிக்க வைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  11. ஓஹோ! இன்னிக்கு எஸ்ஜிஎஸ்ஸின் கதையா? யாராக்கும் இது? ரகசியமா இருக்கே! கதைக்கரு நன்றாக இருக்கிறது. அந்தக் காலத்திலேயே திருமதி கமலா செல்வராஜ் இந்தச் செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் (ஆனால் கணவனின் விந்தணுக்களே) பெண் குழந்தையைப் பிறக்க வைத்திருந்தார். ஆகவே இது ஒன்றும் புதிதல்ல. கணவனின் விந்தணுக்கள் இல்லை என்பதே இந்தக் கதையில் முக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இல்லையா? பெருந்தன்மை வாய்ந்த கணவன். அவனுக்காகப் பொறுத்துக்கொள்ளும் மனைவி. குழந்தையுடன் நன்றாக வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும்படி இந்த முறையும் எஸ் ஜி ஸிடம் கேட்டிருக்கிறேன். அவரிடமிருந்து இதுவரை பதில் இல்லை.

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம், அப்படியா? வேலையாக இருக்காரோ என்னமோ!

      நீக்கு
  12. இது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் உள்ள சூழ்நிலைக்குப் பொருந்தலாம். இப்போதைய இளம் ஜோடிகள் தங்களுக்குக் குழந்தை பிறப்பதில் தாமதம் என்றாலோ அல்லது குழந்தையே பிறக்காது என்றாலோ பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருந்தாலோ ஆசிரமங்களில் இருந்து குழந்தையை ஸ்வீகாரம் எடுத்துக் கொள்கின்றனர். எங்க உறவு வட்டத்தில் இம்மாதிரி நிகழ்ந்து வருகிறது. போன வருஷம் என் அண்ணா பையர் கூட மனைவியின் சம்மதத்தோடு ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்./கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் வாழ்க்கை முறையே நிறைய மாறி வருகிறது.​

      நீக்கு
    2. ஆமாம், "கர்மா" தொடரில் 20 வருஷங்கள் முன்னே ஆண்/பெண் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் காட்டி இருக்காங்க. முக்கியமான கதாபாத்திரம்! ஆனால் இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் இந்த "லிவிங் டு கெதர்" ஜோடிகள் கண்களில் படுகிறார்கள். அல்லது எனக்குத் தான் தெரியலையோ என்னமோ!

      நீக்கு
  13. ஓ!! அந்த பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்.
    அந்த வகையில் நல்ல மிக நல்ல கணவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மால் கதையில் மட்டுமே நல்லவர்களைக் கொண்டுவர முடிகிறது.  அல்லது கதை மாதிரி சில உதாரணங்களைக் காட்ட முடிகிறது.  துரை செல்வராஜூ அண்ணா கதைகள் மாதிரி பாசிட்டிவ் மனிதர்கள் மனமெங்கும் நிறைந்து போவார்கள்.

      நீக்கு
    2. கதையில் வரும் நல்லவர்கள் பல சமயங்களிலும் நம்ப முடியாதவர்களாக நல்லவங்களா இருக்காங்க. உண்மையான சில நல்லவர்களை நானும் அறிவேன். அவங்களைப் பத்தியும் எழுதணும்னு தான். ஆனால் எங்கேயோ ஆரம்பிச்சா எங்கேயோ போய் முடிகிறது.

      நீக்கு
    3. கீதாமா,
      அந்த விந்தணுக்கள் ராமனோடது இல்லையே.
      இன்னோருத்தரோட குழந்தையை
      அவள் பெற்றெடுக்கிறாள்.
      அதற்கு அவன் சம்மதித்தது பெரிய தியாகம் இல்லையா!!
      அதைச் சொல்ல விட்டுப் போச்சு.

      நீக்கு
    4. இப்போப் புரிஞ்சது ரேவதி. ஆனால் கணவன் ஆசைக்கு மனைவியும் சம்மத்திருப்பதும் பெரிய விஷயம் தானே!

      நீக்கு
    5. ஆமாம் மா. அது பெரிய சவால் தான்.
      என்னவோ மாதிரிதான் இருந்திருக்கும். ஆனால் குழந்தை ஆசை
      யாரை விட்டது. சமூகத்தைத் தான் சமாளிக்க
      முடியுமா.

      நீக்கு
  14. திரு கேஜிஜியின் ஓவியம் நன்றாக உள்ளது. நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க் வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. கதை படித்து முடித்த உடன் இப்படியும் சுயநலம் மிக்க மனிதர்களா? என்ற வருத்தம் ஏற்படுகிறது.

    //அவன் தம்பி, தங்கையர் இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை எனில் சொத்தெல்லாம் அவர்களுக்கு வரும் என்று கணக்குப் போட்டு வருவதையும் ராமச்சந்திரன் //

    இப்படி சொத்துக்கு பறக்கும் உறவுகளை என்னவென்று சொல்வது!


    கணவன் , மனைவி அன்பு நல்ல முடிவை எடுக்க வைத்து இருக்கிறது.
    இந்த முடிவை முன்பே எடுத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    கதைக்கு பொருத்தமான படம் அருமை.







    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. சுய நலம் மிக்கவர்களைக் கண் முன்னால் காட்டுகின்றது - கதை..

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டும் வித்தியாசமான கோணம்..
    நல்ல கதை..

    கௌதம் அவர்களது கை வண்ணம் அருமை..

    பதிலளிநீக்கு
  21. இந்த மாமியார் போல எத்தனை எத்தனை பேர்... என்ன மனிதர்களோ? சொத்துக்கு ஆசைபடுபவர்களையும் நிறைய பார்த்தாயிற்று! இன்னமும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    கதை நன்று. ஓவியமும் பொருத்தம். கதாசிரியருக்கும், ஓவியருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. முடிவு நல்லபடியாக இருக்கிறது. ராமச்சந்திரனை போன்ற நல்லவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். கதைக்கான ஓவியமும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...    இது கமலா அக்காதானா?  இல்லை அவர் அட்மின் யாராவதா?  இவ்வளவு சுருக்கமாக கமெண்ட்டா...   நம்ப முடியவில்லை...   இல்லை..  இல்லை...!

      :)))

      நீக்கு
    2. ஹா.ஹா.ஹா. இப்படியும் ஒரு பாராட்டை எதிர்பார்க்கவில்லை.நன்றி. நன்றி.

      நீக்கு
  23. // துரை செல்வராஜூ அண்ணா கதைகள் மாதிரி பாசிட்டிவ் மனிதர்கள் மனமெங்கும் நிறைந்து போவார்கள்..//

    கதைக் களத்தில் எனது கதைகளைப் பேசியதற்கு நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க ! அடுத்த வாரம் அன்பில் விளையட்டும் நல் ரோஜாக்கள்!

      நீக்கு
  24. @ Sriram,
    சிலபல இடங்களில் மாமனார் மாமியார்கள் மருமகள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பண்ணது போகும் காலம் இது.. மருமகளுக்கு கோபம் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்."""


    இது தான் இப்போது உண்மையாக நடப்பது. தப்பு இல்லை. முன்பு
    மாமியாரிடம் அட்ஜஸ்மெண்ட். இப்போ அடுத்த தலை முறையிடம்.

    அவர்கள் நன்றாக இருக்கத்தானே திருமணம் செய்து வைக்கிறோம்!!!

    பதிலளிநீக்கு
  25. பெற்ற பிள்ளைமேல் ஓரவஞ்சனை வைப்பது என்ன குணம் என்றே புரியவில்லை..பாவம் சீதா..இவ்வளவு பொறுமைசாலியா! கணவன் புரிந்துகொண்டது சிறப்பு. ஓவியம் கதையோடு மிகவே ஒத்துபோகிறது , அருமை .

    பதிலளிநீக்கு
  26. @ கௌதம்...

    // வாழ்க!. அடுத்த வாரம் அன்பில் விளையட்டும் நல்ரோஜாக்கள்!.. //

    ரோஜாக்கள் தழைப்பதற்கு நீர் வார்ப்பதெல்லாம் தாங்களும் எபியின் அன்பு நெஞ்சங்களும் தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      வரும் செவ்வாயில் தங்களது செடியில் வளர்ந்த நல் ரோஜாக்கள் மலர்ந்து மணம் வீசப் போவதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!