சனி, 30 அக்டோபர், 2021

மாநகராட்சி துவக்கப் பள்ளியை மாற்றியமைத்த தலைமை ஆசிரியை + நான் படிச்ச கதை

திருச்சி மாநகராட்சி துவக்கப் பள்ளியை, நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ள தலைமை ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை அருகே, புத்துார் மாநகராட்சி துவக்கப் பள்ளி உள்ளது. கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக இருந்ததால், 2019ம் ஆண்டு வரை வெறும் 18 மாணவர்களே, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படித்து வந்தனர்.இந்நிலையில், இந்த ஈராசிரியர் பள்ளியின் தலைமை ஆசிரியையாக அம்சவள்ளி, 50, பொறுப்பேற்றார். மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முற்பட்டபோது, 'ஓட்டை, உடைசலான பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாது' என, பெற்றோர் கூறியுள்ளனர்.


இதையடுத்து, தன் சொந்த செலவில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஏசி' வசதியுடன் கூடிய 'ஸ்மார்ட் கிளாஸ்' ஒன்றை உருவாக்கினார். அதை, மும்பையைச் சேர்ந்த 'புளூசிப்' தனியார் நிறுவனத்திடம் காண்பித்து, பள்ளியின் தரத்தை மேம்படுத்த நிதியுதவி கேட்டார். அவர்களும் 20 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர்.

அந்த நிதியில், நவீன 'ஏசி' வகுப்பறை, ஒவ்வொரு மாணவருக்கும் 4,500 ரூபாய் மதிப்பில் தனித்தனி 'சேர்' வசதி, நுாலகம், 'புரொஜக்டர்' வசதியுடன் கூடிய தொடுதிரை வகுப்பறைகள், விளையாட்டு தளம், 'டச் போர்டு' ஆகியவை அமைத்தார்.மேலும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'டேப்லெட்' என, வெளிநாட்டு பல்கலை வகுப்பறைகள் போல் மாற்றியுள்ளார்.

இதனால், தற்போது பள்ளியில் 65 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இன்னும் பலர், சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.தலைமை ஆசிரியை அம்சவள்ளி கூறியதாவது: ஆசிரியை பணியில் 30 ஆண்டுகளாக உள்ளேன். தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளையே மாணவர்கள் விரும்ப வேண்டும் என்பது என் லட்சியம். அதற்காக தான், தனியார் பள்ளிகளை விட, அதிநவீன வசதிகளுடன் இந்த பள்ளியை தயார் செய்துள்ளேன்.

உடன் பணியாற்றி வரும் ஆசிரியை தஸ்லீன் பல்கீஸ், மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரும், நானும் எங்கள் சொந்த பணத்தில் ஊதியம் கொடுத்து, இரு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்த காலம் முதல், தனிப்பட்ட முறையில் வகுப்புகள் நடத்தி வருகிறோம். பள்ளி வளாகத்தில் பொது நுாலகம் அமைத்து உள்ளோம். போட்டித் தேர்வு முதல், அனைத்து வகையான பயனுள்ள புத்தகங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். பள்ளிகள் திறக்கும் போது, பொது நுாலகமும் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை ஆசிரியை அம்சவள்ளி, ஆசிரியை தஸ்லீன் பல்கீஸ் ஆகியோரை, பெற்றோரும், கல்வி அதிகாரிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

============================= 

பட்டாசு வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகள் : 

பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வரும், 4ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி,

*திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும்

*குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது

*பட்டாசு வெடிக்கும்போது காலணி அணிந்திருக்க வேண்டும்

*மின்கம்பங்கள் அருகே வெடிக்கக்கூடாது

*சானிடைசர் பயன்படுத்திவிட்டு வெடிக்கக்கூடாது

*முழுமையாக வெடிக்காத பட்டாசுகள் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும்

*பட்டாசு அருகே சானிடைசர் வைப்பதை தவிர்க்க வேண்டும்

*பட்டாசு வெடித்த பின்பு கைகளை கழுவ வேண்டும். இவ்வாறு அந்த வழிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

= = = = =

வைரசை தடுக்கும் துணிக் கவசம்!

தாமிர உலோகத்திற்கு கிருமிகள், வைரஸ்களை விரட்டும் திறன் உண்டு. இதை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. எனவே ஆஸ்திரேலியாவிலுள்ள இரண்டு தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் கிருமி நாசினி துணிகளை உற்பத்தி செய்ய முடிவெடுத்தனர். அவர்கள் உருவாக்கிய நிறுவனம் தான் 'சர்வைவான் லிமிடெட்!' இந் நிறுவனம் அண்மையில் முக கவசம், காற்று வடிகட்டி போன்ற பல பயன்களுக்கு உதவும் கிருமி நாசினி துணியை தயாரித்துள்ளது.

துாய்மையான தாமிரத்தை துணி இழைகளின் மேல் படலம் போல படியவைக்கும் புதிய முறைப்படி உருவாக்கப்பட்ட இத் துணிக்கு மெடாலிக்ஸ் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். மெடாலிக்ஸ் துணியில் தயாரித்த முக கவசத்தை அணிந்து கொண்டால் கொரோனா வைரஸ் அண்டாது. துணி மீது வைரஸ் பட்டால், முதல் ஐந்து நிமிடங்களில் 97 சதவீத வைரஸ்கள் செயல் இழந்து விடுகின்றன.

அடுத்த 15 நிமிடங்களுக்குள் 99 சதவீத வைரஸ்கள் செயல் இழக்கின்றன. அரை மணி நேரத்திற்கு பின் துணி மீது கொரோனா இருந்த சுவடே தெரியாமல் மறைந்துவிடுகிறது.

மருத்துவர்களுக்கான கவச உடை, கையுறை, முக கவசம் என்று மெடாலிக்ஸ் துணியில் தயாரித்து, ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யும் வேலைகள் நடக்கின்றன. விரைவில் பிற நாடுகளுக்கும் மெடாலிக்ஸ் என்ற மருத்துவ கவசத் துணி விற்பனைக்கு வரும்.

= = = =

======================= ======================== 

நான் படிச்ச கதை 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

டம்பளர் 

அவன் ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக அப்போதுதான் சேர்ந்திருக்கிறான். முதல் முறையாக பதினைந்து நாட்களுக்கு விசாகப்பட்டினத்தில் அவுட்டோர் ஷூட்டிங்.

அவனுடைய துணிகளை பேக் பண்ணும் அவன் மனைவி "என் நினைவாக இந்த டம்பளரை எடுத்துச் செல்லுங்கள்" என்று ஒரு எவர்சில்வர் டம்பளரை கொடுக்கிறாள். 

ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கல்யாணத்திற்கு சமைப்பது போல் பெரிய அளவில் சைவம்,அசைவம் என்று தனித்தனியாக சமைக்கிறார்கள். பந்தி பந்தியாக சாப்பிடுகிறார்கள். இவன் தனக்கு மட்டும் தனியாக டம்பளரை கொண்டு வருவதைப்  பார்த்து மற்றவர்கள் விசாரிக்கிறார்கள். 

அவர்களிடம் மனைவியின் நினைவாக டம்பளரை கொண்டு வந்தேன் என்றால்," பொண்டாட்டியின்  நினைவா டம்பளரா? அவங்க புடவையை கொண்டு வந்திருக்கலாமே? போர்த்திக்கொண்டு படுத்துக்கொள்ளலாம், அல்லது அவங்களோட ப்ராவை கொண்டு வந்திருந்தால் கைக்கு அடக்கமா இருக்கும்.."  என்றெல்லாம் கலாய்ப்பார்கள் என்று, 

"எல்லோரும் எச்சில் பண்ணி குடிக்கும் டம்பளர் வேண்டாம் என்று எனக்கு தனியாக டம்பளர் கொண்டு வந்தேன்" என்கிறான். ஆனால் அதற்கும், "எல்லோரும் சாப்பிடும் தட்டில் சாப்பிடுவாராம், டம்பளர் மட்டும் எச்சிலாம்" என்று கேலி செய்கிறார்கள். 

ஷூட்டிங் முடிந்து விடுகிறது.  கடைசி நாளன்று கடற்கரையில் டைரக்டரோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறான். தன்னுடைய  உடைமைகளை பேக் பண்ணும் பொழுது, அவனுடைய டம்பளரை காணவில்லை. அவன் திடுக்கிடுகிறான். "என் ஞாபகமாக கொண்டு செல்லுங்கள் என்று மனைவி கொடுத்த டம்பளரை தொலைத்து விட்டோம் என்றால் மனைவி நிச்சயம் வருத்தப் படுவாள். கோபித்து கொள்ளலாம். 

எங்கே, எப்படி தொலைந்தது என்று தெரியவில்லை. சமையல் கட்டில் போய் கேட்டுப் பார்க்கலாம் என்று அங்கு செல்கிறான். அங்கு ஒரே ஒரு பெண் மட்டும் இருக்கிறாள். தெலுங்கு மட்டும் தெரிந்த அவளிடம்  எப்படியோ ஜாடையில் தன்னுடைய டம்பளர் இங்கே இருக்கிறதா? என்று வினவ, அவள் ஷெஃல்பில்  அடுக்கி இருக்கும் டம்பளர்கள் ஒவ்வொன்றாக எடுத்து,"இதி..? இதி..? என்று கேட்கிறாள். அவை எதுவும் இல்லாததால், மனைவியை சமாளிக்க, அவன் கடைவீதிக்குச் சென்று அவன் மனைவி கொடுத்தனுப்பிய டம்பளரை போலவே வேறு ஒரு டம்பளரை வாங்கி வருகிறான்.  

வீட்டிற்கு வந்து பெட்டியை திறந்து, சாமான்களை எடுக்கும் பொழுது அவன் மனைவி கொடுத்த டம்பளர்  பெட்டியின் அடியில் இருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இங்கே வந்தது என்று புரியவில்லை.  தானே கை தவறுதலாக வைத்து விட்டோமா? அல்லது இவனோடு விளையாடுவதற்காக வேறு யாராவது எடுத்து ஒளித்து வைத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. எப்படியோ இப்போது வீட்டில் ஒரே மாதிரி இரண்டு டம்பளர்கள். 

எது ஏற்கனவே வீட்டில் இருந்தது, எது இவன் புதிதாக வாங்கியது என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பார்க்கும் பொழுதெல்லாம், "இதி?..இதி?.." என்று கேட்டு அவனுக்கு டம்பளர்களை எடுத்துக் காட்டிய அந்த தெலுங்குப் பெண் நினைவுக்கு வந்தாள். 

இது குமுதத்தில் பாலகுமாரன் எழுதிய சிறுகதை. நான் ரசித்த சிறுகதைகளுள் ஒன்று. மனித உணர்வுகளை வெகு அழகாக சித்தரிப்பதில் பாலகுமாரன் ஜித்தன்தான். 

இந்தக் கதையை கடுமையாக விமர்சித்து கவிஞர் மு.மேத்தா ஒரு மேடையில் பேசியதாகவும், அதைப் பற்றி தன் வீட்டில் கூறிய பொழுது அவருடைய அம்மா," நன்னாத்தானே இருக்கு? எதுவும் தவறாக இல்லையே?" என்று கூறினார் என்றும் பாலா தன்னுடைய'ஒரு முன் கதை சுருக்கம்' என்னும் நூலில் எழுதியிருந்தார். 

நான் பாலகுமாரன் அம்மா கட்சி. 
= = = = =

37 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பின் அனைவருக்கும் இனிய காலை நல் வாழ்த்துகள்.
எங்கே யாரையும் காணோம்:))))
வேற யாரும் கேட்கிறதுக்கு முன்னால்
நான் கேட்டுவிட்டேன்.
அனைவருக்கும் இந்த நாளும் இனி வரும் எல்லா நாட்களும்
வருடங்களும் இறைவன் அருளால் நிறை ஆரோக்கியம்,
அமைதி நிலவ வேண்டும்.

Kamala Hariharan சொன்னது…

காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரி

நலமா? தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. ஸ்ரீராம் சகோதரரும் அவருக்கு ஏற்பட்ட ஜலதோஷம் நீங்கி நலமடைந்திருப்பார் என நம்புகிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

காரணீஸ்வரர் கோயில் குளம் மிக அருமையாக இருக்கிறது. சென்னையில் நல்ல மழை பெய்வது குடி நீர் தட்டுப்பாடு இல்லாமல் செய்யும். நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க வல்லிம்மா.. வணக்கம்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஆஸ்திரெலியாவின் முகக் கவசம் உலமெங்கும்

அங்கீகரிக்கப்பட்டு ,
நன்மை தரவேண்டும். மிக நல்ல செய்திக்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கமலா அக்கா.. வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆம்.  தொடர் மழை, இடியுடன்.  அதனாலேயே உடம்பும் சரியில்லை!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பின் கமலாமா வணக்கம். நலமுடன் இருங்கள்.

ஸ்ரீராம் இருமல் குறைந்திருக்கிறதா.
உடம்பு அலைச்சல் தாங்கவில்லை போலிருக்கிறது.
நலமாக இருங்கள்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. மாநகராட்சி துவக்கப் பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.

பட்டாசு வெடிக்கும் முறை குறித்து விளக்கியது பயனுள்ள செய்தி.

தாமிர பயன்பாடு செய்தியும் வியப்பளிக்கிறது. விரைவில் மெடாலிக்ஸ் மருத்துவ துணி முககவசம் விற்பனைக்கு வர வேண்டும். பயனுள்ள செய்திக்கு வாழ்த்துகள்.

சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் படித்த கதை எனக்கும் பிடித்திருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

திரு பாலகுமாரன்
பெண்மனம் மிக அறிந்தவர்.
சமையலறை சமாசாரம் முதல் பெண் வாழ்க்கையில்
அனைத்துக் கோணங்களிலும் யோசித்து எழுதிய கதையில் தாயுமானவன் மிகப் பிடிக்கும்.
இந்தக் கதை சிறுவடிவில்
மனித மனத்தை அழகாகச் சொல்கிறது.
நன்றி பானுமா.

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஓ!!!
ஐப்பசி கார்த்தி அடை மழைதானே.அப்பா.
மித மிஞ்சிப் பெய்யாமல் இருந்தால் சரி.

நெல்லைத்தமிழன் சொன்னது…

Positive செய்திகள் அருமை. ஆசிரியைகள் பாராட்டப்படணும்.

அது சரி... காமராஜர் காலத்துக்கு அப்புறம் அரசுப் பள்ளிகளை அரசாங்கம் கவனிப்பதில்லை போலிருக்கு. ஆசிரியர்களுக்கு சம்பளத்தை ஏராளமாகத் தந்தால் பள்ளி நிலைமை உயர்ந்துவிடும் என வாக்குகளிலேயே குறியாக இருந்துவிட்டார்கள் போலிருக்கு

Jayakumar Chandrasekaran சொன்னது…

அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் ஆக்கினால் எப்படி 6 வித்தியாசம் காண்பது? 
இன்னும் சில வருடங்களில் நம் குழந்தைகள் பட்டாசு என்றால் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்கும் நிலை வரும். 
தாமிரம் விற்கும் விலையில் தாமிர துணி கவசம் அதிக விலையுள்ளதாக இருக்கும். தற்போதைய PPE kit களே  போதும். 
பாலகுமாரனுக்கு இரண்டு மனைவிகள் என்பதை இரண்டு டம்பளர் கதை மூலம் சூசகமாக சொல்கிறாரோ? 

Jayakumar

Geetha Sambasivam சொன்னது…

அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் சுபிக்ஷம் மேலோங்கி மகிழ்ச்சி பெருகட்டும்.

Geetha Sambasivam சொன்னது…

அரசுப்பள்ளியைச் சொந்தச் செலவில் மாற்றி அமைத்திருக்கும் இரு ஆசிரியைகளுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். எல்லாப் பள்ளிகளையும் இப்படி மாற்ற வேண்டுமானால் ஆந்திர அரசு அறிவித்திருப்பது போல் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டுப் பள்ளிகளை "நவோதயா" பள்ளிகளைப் போல் கொண்டு வந்தால் போதும். அல்லது நவோதயா பள்ளிகளை அனுமதித்தால் போதும். இந்த மாதிரிப்பள்ளிகளின் வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது நவோதயா பள்ளிகள். கூடவே ஏழை மாணவர்கள் செலவின்றித் தங்கிப் படிக்கவும் முடியும். முக்கியமாய்க் கிராமப்புறங்களிலேயே நவோதயா பள்ளிகள் அமையும் என்பதால் கிராமப்புற மாணவர்கள் நல்ல பலன் அடைவார்கள்.

Geetha Sambasivam சொன்னது…

தாமிரத்திற்குக் கிருமிகள், வைரஸ்களை அகற்றும் திறன் இருப்பது தெரிந்தே நம் முன்னோர்கள் குடிநீருக்குத் தாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் தான் தாமிரப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டோம்/நாகரிகம்/தாமிரம் சுத்தம் செய்வதில் உள்ள கஷ்டம் போன்றவற்றால். தாமிரத்தின் திறன் பற்றி ஆஸ்திரேலியா கண்டு பிடித்துச் சொன்னதும் எல்லோரும் வழக்கம்போல் ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! என்பார்கள். நம் முன்னோர்களின் அறிவுத்திறனை வழக்கம்போல் அலட்சியம் செய்துவிட்டு வெளிநாட்டார் சொல்வதைத் தான் நாம் ஏற்போம்.

Geetha Sambasivam சொன்னது…

காரணீஸ்வரர் கோயில் குளம் அழகோ அழகு! கண்ணுக்கு நிறைவு.

Geetha Sambasivam சொன்னது…

பானுமதி சொல்லி இருக்கும் கதையில் அவனுக்கு ஏன் அந்தத் தெலுங்குப் பெண் நினைவுக்கு வந்தாள் என்பதன் காரணத்தைக் கதையை முழுசும் படிச்சால் தான் புரியும் எனக்கு. என்றாலும் பாலகுமாரனை ரசிக்கும் மனோநிலையைத் தாண்டி விட்டேன்.

கௌதமன் சொன்னது…

நான் இன்றும், குடிக்கும் தண்ணீர் வைக்க, copper jug + copper tumbler பயன்படுத்துகின்றேன். சுத்தம் செய்ய Pitambari பவுடர் உபயோகப்படுத்துகின்றேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அனைத்தையும் ரசித்தேன்.
ஆசிரியர் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர். பாராட்டப்படவேண்டியவர்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

செய்திகள் அருமை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரிய தலைமை ஆசிரியர்

Geetha Sambasivam சொன்னது…

நாங்க மண்பானை. இன்னிக்குத் தான் சில மாதங்களுக்குப் பானைத் தண்ணீர் வேண்டாம்னு பானையைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருக்கோம். தொண்டை கட்டிக்குமே! சீதோஷ்ணமே குளிர்ந்து இருப்பதால் சாதாரணத் தண்ணீரே போதும். எங்களிடமும் தாமிரச் செம்பு/பானை(?) பெரிது உள்ளது. பஞ்சாத்திரம், உத்தரணி தினப்படிக்குப் புழங்குவது தாமிரம்/பித்தளையில் தான். பீதாம்பரி போட்டாலும் அவ்வளவு ஒண்ணும் வெளுப்பதாகத் தெரியலை. நான் எலுமிச்சை+உப்புச் சேர்த்துக் கொஞ்சம் விம் ட்ராப்ஸும் விட்டுப் பாத்திரங்களை அதில் ஊறப்போட்டுப் பின்னர் சபீனா/விம் பவுடர்/பீதாம்பரி போன்றவை போட்டுத் தேய்த்துவிடுவேன். விக்ரஹங்கள் எல்லாம் ஒரு மாதத்துக்காவது தாக்குப் பிடிக்கும். இப்போல்லாம் முன்னைப் போல் மாசா மாசம் தேய்க்க முடியறதில்லை. :(

கோமதி அரசு சொன்னது…

தலைமை ஆசிரியர் அம்சவள்ளி அவர்களையும் அவர்களுக்கு துணையாக உடன் இருந்து நல்லது செய்யும் ஆசிரியை தஸ்லீன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.
பள்ளிக்கு நிதி உதவி வழங்கிய தனியார் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.

பட்டாசு வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகள் தேவையானது.


//மெடாலிக்ஸ் என்ற மருத்துவ கவசத் துணி விற்பனைக்கு வரும்.//

நல்ல செய்தி.






கோமதி அரசு சொன்னது…

காரணீஸ்வரர் கோயில் குளம் நீர் நிறைந்து பார்க்க அழகாய் இருக்கிறது.

கோமதி அரசு சொன்னது…

பானுமதி பகிர்ந்த "படித்த கதை" பகிர்வு நன்றாக இருக்கிறது.

Bhanumathy Venkateswaran சொன்னது…

அனைவருக்கும் கனடாவிலிருந்து காலை வணக்கம். நேற்று இரவுதான் இங்க வந்து சேர்ந்தேன்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

மாநகராட்சிப் பள்ளியின் தரத்தை தன் சொந்த செலவில் உயர்த்தியிருக்கும் தலைமை ஆசிரியை அம்சவள்ளி அவருக்கு உதவியாக இருக்கும் ஆசிரியை தஸ்லீன் இருவரையும் போற்ற வேண்டும். இதை முன் மாதிரியாக கொண்டு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர் நிரம்பியிருக்கும் காரணீஸ்வரர் கோயில் குளம் அழகு!
தாமிர கவசம் விலை அதிகமாக இருக்காதா?

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி கோமதி அக்கா.

Bhanumathy Venkateswaran சொன்னது…

தன்னை எப்பொழுதும் கணவன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மனைவி கொடுத்தனுப்பிய டம்ப்ளர் வேறொரு பெண்ணை நினைவு படுத்தும் அபத்தம்தான் கதையில் சொல்லப் பட்டிருக்கும் விஷயம்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி வல்லி அக்கா.

Geetha Sambasivam சொன்னது…

வாழ்த்துகள். இந்த வருஷம் தீபாவளி கனடாவில் இருந்தா? விசா கிடைச்சு போகப் போவதைப் பற்றிச் சொல்லவே இல்லையே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆறு மாசம் இருப்பீங்களா? அங்கே ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒரு நாள் சூரிய உதயமும் சந்திர அஸ்தமனமும்/அல்லது சந்திர உதயம்/சூரிய அஸ்தமனம்? இரண்டும் சேர்ந்து தெரியறதைப் பத்திச் சொல்வாங்க. ஒரு சிலரோட படங்களும் பார்த்திருக்கேன். நீங்களும் அதைப் பார்த்துட்டுப் படம் பிடிச்சுப் போடுங்க! நேர வித்தியாசம் எப்படி?

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கீதாக்கா இப்போது பானுக்கா இருக்கும் இடத்தில் காலி 9.30 ஆகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் நேரம்தான்...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் சொந்தச் செலவில் பள்ளிக்குச் செய்வது என்பது மிக மிக உயர்வான விஷயம். அரசு?????!!!!!

காரணீஸ்வரர் கோயில் குளம் நீர் நிறைந்து செழுமையாக இருக்கிறது. மனதிற்கு இதம்.

தாமிரத்தில் முகக்கவசமா!!!!??? வித்தியாசமான முகக்கவசம். விலையையும் சொல்லியிருக்கலாம் அவர்கள்!

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தகவல்கள் நன்று. பள்ளி ஆசிரியர்/தலைமை ஆசிரியர் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

படித்த கதை - எனக்கும் பிடித்தது. பாராட்டுகள்.