செவ்வாய், 23 நவம்பர், 2021

சிறுகதை - அம்மா வந்தாள்... - துரை செல்வராஜூ

 அம்மா வந்தாள்..

துரை செல்வராஜூ 

***   ***  ***  ***  ***

" அம்மா!.. "

வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு படியேறிக் கொண்டிருந்தான் சுதாகர்...

" வா.. சுதாகர்.. வா.. அப்பா, மதி எல்லாரும் நல்லா இருக்காங்களா?.. "

" இருக்காங்க அம்மா... நீங்க எப்படி இருக்கீங்க... அப்பா எப்படி இருக்காங்க... பாலு எப்படி இருக்கான்?... " வரிசையாக கேள்விகளை விசிறினான் சுதாகர்..

" அப்பா கும்மோணத்துக்குப் போயிருக்காங்கப்பா... "

" ஏன்?.. "

" பூச்சி மருந்து வாங்கத் தான்... "

" அதான் பக்கத்து ஊர்ல கிடைக்குதே!.. "

" அதை ஏம்பா கேக்கறே!... அங்கே  டப்பாவுக்கு பத்து ரூபா ஜாஸ்தியா இருக்குதாம்... மேல வீட்டு சங்கரனுக்கும் பூச்சி  மருந்து வேணுமாம்... அதான் ரெண்டு பேரும் கும்மோணத்துக்குப்  போயிருக்காங்க..  பஸ் டிக்கெட் செலவு போக நாப்பது ரூபா மிச்சப்படுதாம்...  ஆதாயம்.. ன்னு நாலு காசு கிடைச்சாலும் நமக்கு நல்லது தானே!.. "

" ஆமாமா!.. இவன் பாலு எங்கே?.. "

" கரண்டு பில்லு கட்டப் போயிருக்கான்... நாளைக்குக் கடைசி நாளாச்சே!.. காலையிலேயே போடா.. ன்னு சொன்னேன்... சைக்கிள் பஞ்சர்..ன்னு ஒழுங்கு பண்ணிட்டு இப்போ தான் போயிருக்கான்!... "

சுற்று நேரம் அமைதி...

" என்னமோ... இந்த நேரத்துல இப்படி ஆகியிருக்கக் கூடாது... ரெண்டு புள்ளங்களப் பெத்தும் அதுங்களுக்கு ஒரு கல்யாணம் காட்சி.. ன்னு எதையும் பாக்க அவளுக்குக் கொடுத்து வைக்கலை.. திடுதிப்பு... ன்னு கிளம்பிட்டா மகராசி.. "

சுதாகர் தொடர்ந்தான்..

" இப்படி ஆகும்.. ன்னு யாருக்குத் தெரியும்?.. தல வலி.. ன்னு கூட ஒரு நாளும் சொன்னது இல்லை.. வயலு வரப்பு, தோட்டம் தொழுவம்.. ன்னு பம்பரமாத் தானே அம்மா சுத்திக்கிட்டு இருந்தாங்க.. நெஞ்சில பிரச்னை இருக்குது.. ன்னு அவங்களுக்கே தெரியாம இருந்துருக்கு.. இப்போ எங்களுக்கு வளர்மதியோட கவல தான் பெரிய கவல.. இந்த ஆறு மாசத்துல அவளும் ஓரளவுக்கு ஆறுதலாகிட்டா... இருந்தாலும் ராத்திரி தூக்கத்துல அம்மா.. அம்மா!.. ந்னு அனத்துறா... அப்பா கேட்டுட்டு அழுவுறாங்க.. "

சுதாகர் பெருமூச்செறிந்தான்..

" என்னமோ.. கண்ணம்மா இருந்த வரைக்கும் ராசாத்தி மாதிரி இருந்துட்டா.. நானும் அவளும் சின்ன வயசில இருந்தே சிநேகிதம்... ஒரு வார்த்தை கடுசா பேசி நாங்கேட்டதில்ல!.. அவ வாக்கப்பட்டு வந்த மூணாம் மாசம் நானும் இந்த ஊருக்கே கூறப் புடவையோட வந்தேன்..  அதுல இருந்து பெத்த தாய் மாதிரி என்னக் கவனிச்சுக்கிட்டா... உன்ன கர்ப்பத்துல வச்சிருந்தப்போ -  வளகாப்பு செய்யிறபடி செய்ங்க..  ஆஸ்பத்திரி பக்கத்துலயே இருக்கு.. அதனால பேறு காலம் இங்கேயே இருக்கட்டும்.. ன்னு சொல்லிட்டாரு ஒங்க தாத்தா!.. பெரியவர மறுத்துப் பேச முடியல.. எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க... வளகாப்புல இருந்து பிரசவம் ஆகி  அஞ்சு மாசம் வரைக்கும் ஒங்க ஆச்சி இங்கயே இருந்து மகளப் பார்த்துக்கிட்டாங்க.. நீ பொறக்குறப்போ பாலு ஏழு மாசம் வயித்துல... கண்ணம்மா இருந்த மாதிரி நானும் இங்கேயே இருக்கேன்னு சொல்லிட்டேன்... எனக்கு பிரசவம் ஆனதும் கைப் புள்ளக்காரியா இருந்த உங்க அம்மா - எனக்கும் பாலுவுக்கும் தலைக்கு ஊத்துறதுல இருந்து மருந்து உரசுறது இடுப்பு துணி மாத்துறது பத்தியக் கொழம்பு வைக்கிறது வரைக்கும் ... எல்லாம் செஞ்சா... அது அத்தனையும்  எனக்கு செம்மத்துக்கும் மறக்காது.. இத்தனைக்கும் வீட்டுல பெரியவங்க இருந்தும் எல்லாத்தையும் அவ இழுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சா.. நல்ல மனசு.. கைராசிக்காரி.. "

" அடுத்த செம்மத்துல நாம அக்கா தங்கச்சியா பொறக்கணும்.. ன்னு நான் சொன்னதுக்கு இப்பவே அப்படித் தானே இருக்கோம் தனலெச்சிமி.. ன்னு சொல்லிட்டு சிரிச்சது எங்கண்ணுக்குள்ளயே நிக்கிது... பாவம் என்னென்ன ஆசையோட போய்ச் சேர்ந்தாளோ..  நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்.. "

இருவரது கண்களிலும் கண்ணீர்..

" வருசம் முடிஞ்சதும் அந்த புண்ணியாத்மா நிம்மதியாகற மாதிரி ஒரு பரிகாரம் செய்ங்க.. அதுக்கு மேல கடவுள் விட்ட வழி...  சரி.. நீ வா.. ஐயா.. வந்து ஒரு வாய் சாப்பிடு... "

" பாலு வந்துடட்டுமே... அம்மா!.. "

" அவன் நேரங்கழிச்சுதான் வருவான்..  வந்ததும் எங்கிட்டதான் சத்தம் போடுவான்.. ஏன் சுதாகர சாப்பிட வைக்கலை.. ன்னு... நீ.. வாப்பா!... "

இதற்கு மேல் மறுத்துப் பேச முடியாது என்று எழுந்த சுதாகர் கிணற்றடிக்குச் சென்று கால் கை  கழுவி விட்டு வந்தான்...

அதற்குள் கூடத்தில் கிழக்கு முகமாக இலை இடப்பட்டிருந்தது..

' முருகா.. ' - என்றபடி அமர்ந்தான் சுதாகர்..

பொன்னி அரிசி சோற்றைப் பரிமாறி பருப்பும் பசு நெய்யும் இட்டார்கள்.. மோர்க் குழம்போடு உருளைக் கிழங்கு வறுவலும் அப்பளமும் இருந்தன..
முகம் பார்த்துப் பரிமாறினாள் அந்தத் தாய்..


சுதாகர் வயிறாரச் சாப்பிட்டு விட்டு இலையை உள்புறமாக மடித்த போது -

" வா சுதாகர்... நல்லாருக்கியா?.. என்றபடி உள்ளே வந்த பாலு,

" அம்மா.. என்ன சமையல்?.. "  - என்றான்...

" வெண்டக்கா மோர்க் கொழம்பு, உருளக் கிழங்கு வறுவல் !.. "

" மோர்க் குழம்பா!.. வெண்டக்கா மோர்க் குழம்பா?.. "

திடுக்கிட்டான் பாலு..

 " ஆமா.. ஏன்?... என்ன ஆச்சு?.. "

திகைத்து நின்ற தாயைப் பார்த்து பதறினான்..

" அன்னைக்கு ஆறு மாசத்துக்கு முன்னால அவங்க அப்பா  கொல்லையில இருந்து வெண்டக்காய் பறிச்சுக்கிட்டு வந்து குழம்பு வைக்கச் சொல்லி கொடுத்தப்பதான் அம்மா மயங்கி விழுந்து பெரிய காரியமா ஆகிப் போச்சு... அதில இருந்து அம்மா ஞாபகமா  வெண்டக்காயை  விட்டுட்டாங்க!.. "

பாலுவின் அம்மாவுக்கு இதைக் கேட்டதும் அதிர்ச்சி.. 

கண்களில் நீர் திரண்டது..

அந்த சூழ்நிலையில் சுதாகரனின் விழிகளிலும் நீர்..

" சுதாகரு!.. இந்த மாதிரி.. ன்னு சொல்ல வேண்டியது தானே ஐயா!.. "

அன்னத்தைப் பரிமாறிய தாயின் மனம் இளகியது..

சில நொடிகள் கழித்து சுதாகரன் சொன்னான்..

" எங்க அம்மா வந்து சோறு போடுற மாதிரி இருந்தது!.. " ஃஃஃ

67 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  இப்போது நீங்கள் பூரண குணமாகி உடல் நலமாக உள்ளீர்களா? உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளவும்.

  இன்றைய கதை நன்றாக உள்ளது. ஒரு தாயின் கனிவும், பாசமும் ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலிக்கிறது. இறுதி வரிகள் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. படிக்கையில் மனம் கனிந்து விட்டது. இப்படிப்பட்ட அன்பும், பாசமும் இணைந்து உறவாடும் கதைகளை தங்கள் ஒருவரால்தான் தர முடியும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ கமலா ஹரிஹரன்..

   // இறுதி வரிகள் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.. //

   அந்த வரிகளை எழுதும்போது நானும் கலங்கி விட்டேன்...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வணக்கம் கௌதமன் சகோதரரே

  இன்றைய கதைக்கேற்றபடி பொருத்தமான படங்கள் வரைந்து அசத்தியுள்ளீர்கள். இரண்டு படங்களும் மிக நன்றாக உள்ளது. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் வணக்கம். 'அம்மா வந்தாள்' தி.ஜானகிராமனின் பிரபலமான நாவல். அவருக்கு சாகித்ய அகாடமி விருதையும் நிறைய வசவுகளையும் பெற்றுத் தந்த நாவல். அதே பெயரில் துரை செல்வராஜீ சாரின் கதை.படித்து விட்டு சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. முத்தாய்ப்பான முடிவு அருமை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ துரை செல்வராஜ்! உடல் நலம் தேவலையா? கவனமுடன் இருங்கள் துரை!

   நீக்கு
  2. இப்போது எவ்வளவோ பரவாயில்லை.. கவனமுடன் இருக்கின்றேன்.. நன்றியக்கா..

   நீக்கு
 7. இன்று கதைக் களத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

  இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரம் கொண்டு சீர் செய்த அன்பின் திரு. கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 8. தலைவாழை இலையில்
  விருந்து.. அழகு.. அழகு..

  பதிலளிநீக்கு
 9. இக்கதையை அப்படியே பிழிந்த - திரு கௌதம் காட்சிப் படுத்தி விட்டார்கள்..

  நன்றி. நன்றி..

  பதிலளிநீக்கு
 10. கதைக்கு தலைப் பூ சூட்டிய பிறகு தான் நினைவுக்கு வந்தது...

  சரி..
  அப்படியான மகானுபாவரது நல்லாசியும் கிடைக்கட்டுமே என்று இருந்து விட்டேன்...

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. அனைவர்க்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கங்கள்! இன்றைய கதை அருமை! அம்மாவின் சினேகிதியை சந்திக்கும் இளைஞன், தன் அம்மாவின் பாசத்தையும், வாஞ்சையையும் அவர்களிடம் காணும் தருணம் அழகு. அன்பான கதைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ காயத்ரி சந்திரசேகர்..

   // அன்பான கதைக்கு நன்றி!..//

   அன்பான வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 13. அம்மா வந்தாள்? தி ஜானகிராமன் வந்து இறங்கிவிட்டாரோ என நினைத்தால், இது ஒரு சிறுகதை. அவரெழுதியதோ பெருங்கதை! பெரிசுகளிடமிருந்தும் திட்டுக்களை வண்டிவண்டியாக வாங்கி அவர் மீது வீசிய புதினம். ஆனால் அவருடைய அதிர்வுகளுக்கு வைத்தியம் பார்த்தது ‘சக்தி வைத்தியம்’! - சாகித்ய அகாடமியை அவரிடம் கொண்டுவந்து சேர்த்த சிறுகதைத் தொகுப்பு.

  துரைசெல்வராஜு சாரின் சிறுகதையை வாசிக்கவிருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏகாந்தன்..

   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 14. வாசித்துவிட்டேன்.
  போய்விட்ட அம்மாக்கள், எப்படியும் எந்த நேரத்திலும் வந்து இறங்கக்கூடும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ ஏகாந்தன்..

   // அம்மாக்கள், எப்படியும் எந்த நேரத்திலும் வந்து இறங்கக் கூடும்...//

   உண்மை.. உண்மை..

   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 15. அருமையான பாசம் மிகுந்த கதை. ஒரு தாய்க்காக வெண்டைக்காயை விட்டவர் அதே பாசமுள்ள இன்னொரு தாய்க்காகச் சாப்பிடுகிறார். இரண்டுமே ஏற்கும்படி உள்ளது. பாசத்தைக் காட்டிய கதை. வாழ்த்துகள் துரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ கீதாக்கா..

   // பாசத்தைக் காட்டிய கதை. வாழ்த்துகள் ..//

   அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 16. அழகாய்ப் படங்கள் வரைந்து கதைக்குச் சிறப்புச் சேர்த்த கௌதமன் சாருக்கும் பாராட்டுகள், நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மிகவும் அருமையான கதை.


  //அடுத்த செம்மத்துல நாம அக்கா தங்கச்சியா பொறக்கணும்.. ன்னு நான் சொன்னதுக்கு இப்பவே அப்படித் தானே இருக்கோம் தனலெச்சிமி.. ன்னு சொல்லிட்டு சிரிச்சது எங்கண்ணுக்குள்ளயே நிக்கிது...//

  கண்ணம்மா சொன்னது பலித்து விட்டது.

  சுதாகருக்கு தாய் கிடைத்து விட்டாள்.

  எப்போதும் போலா அன்பை இயல்பாய் வெளிபடுத்தும் உன்னதமான கதை.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.  கெளதமன் சார் படங்கள் எல்லாம் மிக அருமை.
  பொருத்தமாக இருக்கிறது.
  மலர்ந்த முகத்துடன் பரிமாறும் காட்சி மிக அருமை.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ கோமதிஅரசு..

   // அன்பை இயல்பாய் வெளிப் படுத்தும் உன்னதமான கதை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்..//


   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 18. துரை அண்ணா உடல் நலம் கொஞ்சமேனும் நன்றாகியிருக்கும் என்று நினைக்கிறேன். சளித்தொல்லை மட்டும் கொஞ்சம் இருப்பதாகச் சொல்லியிருந்த நினைவு. பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா.

  கதையில் ஒவ்வொரு வரியிலும் பாசம் இழைந்தோடுகிறது.

  தன் அம்மாவிற்காக வெண்டையை விட்ட குடும்பம் ஆனால் இந்த அம்மா கொடுக்கும் போது அதைச் சொல்லாமல் காட்டிக் கொள்ளாமல் உண்ணும் பாசம் பண்பு அருமை.

  நல்ல கதை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ கீதா..

   // கதையில் ஒவ்வொரு வரியிலும் பாசம் இழைந்தோடுகிறது..//

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி. இப்போது ஓரளவுக்கு உடம்பு தேறி இருக்கின்றது.. நலமே..

   அன்பின் கருத்துரைக்கு நன்றி.. நன்றி..

   நீக்கு
 19. கௌ அண்ணா உங்கள் படம் மிகப் பொருத்தம்!! சூப்பர்

  கீதா

  பதிலளிநீக்கு
 20. மோர்க்குழம்பு என்றதும் மஞ்சள்!!!அதில் பச்சையாக வெண்டைக்காய்! சூப்பர் கௌ அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ! உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள்! நன்றி.

   நீக்கு
  2. அந்த மோர்க்குழம்பை நானும் கவனித்தேன்.. உடன் செல்வதற்கு இயலவில்லை..
   வாழ்க.. வளர்க...

   நீக்கு
 21. அனைவருக்கும் அன்பின் வணக்கம்.. நெகிழ்வான கருத்துரைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

  சற்று பொறுத்து வருகின்றேன்...

  பதிலளிநீக்கு
 22. கதையின் ஒவ்வொரு வரியிலும் பாசம் வழிந்தோடுகிறது. அந்த தாயின் பாசத்தை படத்திலும் உணர முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ பானுமதி வெங்கடேஸ்வரன்

   // கதையின் ஒவ்வொரு வரியிலும் பாசம் வழிந்தோடுகிறது..//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 23. தம்பியின் கதையை விட்டு விலகாமல் அத்தனை பின்னூட்டக் கருத்துக்களும்
  அமைந்திருந்ததில் நானும் இந்தக் கதையை வாசித்ததின் திருப்தி இருமடங்காகக் கூட்டியது. எழுதியவருக்கு நாம் செய்யக் கூடிய சின்ன மரியாதை இது தான். வாழ்த்துக்கள், தம்பி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ ஜீவி அண்ணா..

   // அமைந்திருந்ததில் நானும் இந்தக் கதையை வாசித்ததின் திருப்தி இருமடங்காகக் கூட்டியது.. //

   வெகு நாட்களுக்குப் பிறகு தங்களது அன்பின் வாழ்த்துரையைக் கண்டதில் மேலும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

   நீக்கு
 24. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 25. இன்றைக்கு அன்பின் வல்லியம்மா அவர்கள் வரவில்லையே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவங்களுக்கு இன்னமும் உடம்பு சரியாகவில்லை. முக்கியமாய்க் கண்கள். நானும் அழைத்துப் பேசித் தொந்திரவு கொடுக்க வேண்டாம்னு கூப்பிடலை. பரவாயில்லை எனச் செய்தி கொடுத்தார்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!