சனி, 6 நவம்பர், 2021

உயிரின் உயிரே

 திருப்பூர்:திருப்பூர் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமியரை தண்ணீர் இழுத்து சென்றது. இதில், இரு சிறுமியரை தோழி மற்றும் சிலர் உயிருடன் மீட்டனர்.


திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் வலையபாளையத்தைச் சேர்ந்தவர்கள் இந்திராணி, 14;  ராதாமணி, 13; யோகலட்சுமி, 14; சுமதி, 13; சுமித்ரா, 13; சகுந்தலா தேவி, 14. அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.   நேற்று முன்தினம், ஆறு சிறுமியரும் கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி., வாய்க்கால் படிக்கட்டில் அமர்ந்து விளையாடினர். இந்திராணி தவிர மற்ற ஐந்து பேருக்கும் நீச்சல் தெரியாது.திடீரென சகுந்தலா தேவி, சுமதி, யோகலட்சுமி ஆகியோரை தண்ணீர் இழுத்து சென்றது. இந்திராணி தன் உயிரை பொருட்படுத்தாது, தோழியரைக் காப்பாற்ற வாய்க்காலில் குதித்து, யோகலட்சுமியை இழுத்து பிடித்தார். குழாயைப் பற்றிக் கொள்ளுமாறு யோகலட்சுமியிடம் கூறிவிட்டு, இந்திராணி நீச்சல் அடித்து மேலே வந்தார்.  இதற்குள்சிறுமியரின் அலறலை, அவ்வழியாக சென்ற வேன் டிரைவர்கள் சொக்கநாதன், 28; பச்சையப்பன், 30, கேட்டு உள்ளனர். அவர்கள் வாய்க்காலுக்குள் குதித்து, யோகலட்சுமி, சுமதியை காப்பாற்றினர். அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சுதா, 35, என்பவர், தான் அணிந்திருந்த சேலையை வீசி உதவினார்.  சகுந்தலா தேவியை, தண்ணீர் அடித்து சென்றது. பல்லடம் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.  சிறுமி இந்திராணி கூறுகையில், ''வாய்க்காலில் தவறி விழுந்த யோகலட்சுமியை இழுத்து வந்தேன். ஆனால், சிரமமாக இருந்ததால் அங்குள்ள குழாயைப் பற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டு, நான் நீச்சல் அடித்து மேலே வந்து விட்டேன். அவள் குழாயைப் பற்றி தொங்கிக் கொண்டிருந்தாள். டிரைவர்கள், தோழியரை காப்பாற்ற உதவினர். இந்த சம்பவத்தை வாழ்நாளில் மறக்க முடியாது,''என்றார்.

=================================================================================================


வியாசர்பாடி--ஆட்டோவில் பயணி தவற விட்ட, 15 சவரன் இருந்த சூட்கேசை, உரியவரின் வீட்டுக்கே சென்று ஆட்டோ டிரைவர் ஒப்படைத்தார்.சென்னை கொடுங்கையூர், ராகவன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராவணன், 61; ஓய்வு பெற்ற மாநகர போக்குவரத்து ஊழியர். இவர் மனைவி சாந்தி, 56.இவர்கள் இருவரும், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு, நேற்று சென்னை திரும்பினர்.பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள், அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் வீட்டிற்குச் சென்றனர். அப்போது, அவர்கள் கொண்டு வந்த 'சூட்கேசை' மறந்து, ஆட்டோவில் தவற விட்டனர். அதில் 15 சவரன் நகை இருந்தது.இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசில் ராவணன் புகார் அளித்தார். இந்நிலையில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம், அந்த சூட்கேசை பார்த்து, மீண்டும் ராவணன் வீட்டிற்கே சென்று ஒப்படைத்தார். இதனால், புகார் திரும்பப் பெறப்பட்டது.


=============================================================================================

கோயம்பேடு -கோயம்பேடு மேம்பாலத்தை திறக்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று, கோயம்பேடு வந்ததையடுத்து, கோயம்பேடு பஸ் நிலையம், ஓடுதளம் ஆகிய பகுதிகளில் சுற்றிய தெரு நாய்களை, சென்னை மாநகராட்சியினர் நேற்று முன்தினம் பிடித்துச் சென்றனர்.மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின், இருசக்கர வாகனத்தில் ஒரு பக்கெட்டில் உணவுடன், போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் வந்து, அப்பகுதியில் உள்ள நாய்களை தேடினார். பின், நாய்கள் பிடித்துச் செல்லப்பட்டது தெரிந்ததும், மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தார். பின் அதிகாரிகளிடம் பேசி, பிடித்துச் சென்ற நாய்களை மீண்டும் கொண்டு வந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.இது குறித்து அவர் கூறுகையில்,'இங்குள்ள நாய்களுக்கு, 3 ஆண்டுகளாக உணவளித்து வருகிறேன். வேறு பகுதியில் விட்டால், அங்குள்ள நாய்கள் கடித்துக் குதறி விடும். ஆகையால் இங்கிருந்த நாய்களை, இதே இடத்தில் திருப்பி விடுமாறு கேட்டுள்ளேன்' என்றார்.  இந் நிகழ்வை புகைப்படம் எடுக்க அவர் அனுமதிக்கவில்லை

====================================================================================================.


கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பூஞ்சை தொற்று காரணமாக இரு கால்களை இழந்த பெண் சேலத்தில் தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பிளாரன்ஸ் 40;

விவாகரத்து பெற்று பெற்றோருடன் தனியே வாழும் இவர் சட்டக்கல்லுாரி அருகில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புக்குள்ளாகி பூஞ்சை தாக்கத்தால் ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு தன் இரு கால்களையும் முழுதாக இழந்தாலும் மற்றவர்களின் பரிதாபங்களை கண்டுகொள்ளாமல் தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிளாரன்ஸ் கூறியதாவது:கடந்த மே 16ல் எனக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. சளி பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என வந்ததால் சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டேன். மே 22க்கு மேல் நடக்க முடியவில்லை. தனியார் மருத்துவமனையில் சேர்ந்தபோது ஸ்கேன் செய்து பார்த்து கொரோனா உறுதி செய்தனர்.

காலில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டதாக கூறியதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.கொரோனா சிகிச்சைக்கு பின் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு ஒரு மாதம் வரை கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க இருதயத்துக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.பலனின்றி பூஞ்சை தொற்றால் பலன் இன்றி கால்கள் அழுக தொடங்கின. அந்த 50 நாட்களும் நரகத்தை அனுபவித்தேன். வலியில் துாக்கம் என்பதே இல்லாமல் போனது. இதனால் கால்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்தால் 2 சதவீதம் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என கூறினர்.

இருப்பினும் நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். நான்கு அறுவை சிகிச்சைக்கு பின் டாக்டர்களே என் மன உறுதியை பாராட்டினர்.இரு கால்களையும் முழுதாக இழந்தாலும் என் வேலைகளை நானே செய்து கொள்ளவும் முடியும் இதற்கு பிறகான வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக அமைத்து கொள்ள முடியும் எனவும் நம்புகிறேன்.

வயதான பெற்றோருக்கு பின் தனியாகவே என் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். முட்டிக்கு மேலிருந்து செயற்கை கால்கள் பொருத்த வேண்டியிருக்கும் என்பதால் ஜெர்மன் தொழில்நுட்ப தயாரிப்பை வாங்க அணுகினோம். அதற்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேலாகும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எவரேனும் உதவினால் எனக்கு உதவியாக இருக்கும். உடல் உறுப்பை இழந்தால் வாழ்க்கை இருண்டுவிடாது என மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கவே விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இவரது தன்னம்பிக்கையை பாராட்டவும் உதவி செய்யவும் விரும்புவோர் 82209 92958 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

============================================================================================================================



21 கருத்துகள்:

  1. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. சேலம் பிளாரன்ஸ் அவர்களது நிலைமை மனதை வருத்துகின்றது..

    என்ன சொல்வதென்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. போற்றத்தக்கவர்கள், சிறப்பான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. தன் உயிரை பொருட்படுத்தாமல், தோழியை நீரில் குதித்து காப்பாற்றிய சிறுமி இந்திராணியின் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

    விலை மதிப்பற்ற பொருட்கள் அடங்கிய சூட்கேஸை உரியவரிடம் கொண்டு சேர்த்த ஆட்டோ டிரைவரையும், செல்லங்களுக்கு நாள்தோறும் உணவளித்து பாதுகாக்கும் போலீஸ் எஸ்.ஐ அவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்.

    கொரோனா தொற்றினால் அவதிப்பட்டு வரும் பிளாரன்ஸின் நிலை வருத்தமாக உள்ளது. கூடிய விரைவில் நலமாக வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பாஸிடிவ் செய்திகள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. //கோயம்பேடு -கோயம்பேடு மேம்பாலத்தை திறக்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று, கோயம்பேடு வந்ததையடுத்து, கோயம்பேடு பஸ் நிலையம், ஓடுதளம் ஆகிய பகுதி..

    what a senseless act.. வீட்டில் வைத்து வளர்க்க வேண்டியது தானே? இவர் போன்றவர்கள் தான் இந்தக் கொடுமைக்கே காரணம். இவரை உளளே பிடித்து தள்ள வேண்டும், நாய்களுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எப்படி பாசிடிவ் செய்தியாகும்?

      நீக்கு
    2. பாசிட்டிவ் செய்திதான்  தெருநாய்களுக்கு, அவற்றின்  உயிர் காப்பாற்றப் படுகிறதல்லவா.

      Jayakumar

      நீக்கு
    3. தெரு நாய்களை வீட்டுக்கு கொண்டு சென்று சோறிட்டு வளர்த்தால் பாசிடிவ் செய்தியாகும்.

      நீக்கு
    4. தெரு நாய்களை விரட்டுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.

      எங்கள் வளாக ரூல்ஸ் படி, தெருநாய்களுக்கு உணவளிக்கக்கூடாது. இருக்கும் தெரு நாய்களை வளாகத்தைவிட்டு விரட்டக்கூடாதாம்.

      இதில் வளாகத்தில் இருப்பவர்கள் வேறு நாய்களை வளர்க்கிறார்கள். இது கொடுமையாக என் கண்ணுக்குத் தெரிகிறது.

      நீக்கு
  8. Today's positive vibes make us feel proud of these selfless beings! Nice post as usual.

    பதிலளிநீக்கு
  9. நல் உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

    தைரியப் பெண் பிளாரன்ஸ். அவர் வாழ உதவ இருக்கும் கரங்களையும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  10. தோழிகளை காப்பாற்றிய இந்திராணி, நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு வாழ்த்துக்கள்.
    தெருவில் அலையும் நாய்களுக்கு உணவு அளித்து வந்தவர் , வேறு இடத்தில் விட்டால் அவைகளுக்கு ஆபத்து என்று நினைப்பது அவரின் நல்ல உள்ளத்தை காட்டுகிறது.
    பிளாரன்ஸ் தன்னம்பிக்கை தொடர்ந்து இருக்க வேண்டும்.


    பதிலளிநீக்கு
  11. இந்திராணியின் தைரியம், ப்ளாரன்ஸின் மனவுறுதி இரண்டும் போற்றத்தக்கவை. நகைகளோடு சூட்கேஸை உரியவரிடம் சேர்ப்பித்த ஆட்டோ டிரைவர் வாழ்க பல்லாண்டு. தெரு நாய்களுக்கு உணவளிப்பதின் மூலம் மற்றவர்களுக்கு அதனால் பாதிப்பு இல்லாமல் காப்பாற்றும் காவலர் வாழ்க.









    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    என்றும் இறைவன் கருணையால் ஆரோக்கியமாக
    இருக்க அவன் அருள் வேண்டும்.

    13 வயதில் அனைவரும் நீச்சல் கற்பது ஒரு
    சட்டமாக இருக்க வேண்டும்.
    இல்லாவிட்டால் ஆற்றில் அடித்து செல்பவர்கள் கதை வளர்ந்து
    கொண்டே போகும்.
    தீரமாகச் செயல் பட்ட பெண்குழந்தைக்குப் பாராட்டுகள்.

    15 ஸாவரினைத் திருப்பிக் கொண்டு வந்து
    கொடுத்த ஆட்டோ டிரைவர் அமோகமாக இருக்க வேண்டும். கொரோனா மற்றும் மற்ற
    தொற்றிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும். ஃப்ளாரென்ஸ்
    அவர்களின் தன்னம்பிக்கை வளம் பெற்று நல் வாழ்வு கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. கொரொனா பூஞ்சை காரணமாகக் கால்களை இழந்தவரை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. கடவுளுக்குக் கண்ணில்லையா எனக் கேட்கத் தோன்றுகிறது. இந்த நிலையிலும் அவரின் தைரியம் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!