புதன், 10 நவம்பர், 2021

டிராம் வண்டியில் பயணம் செய்த எ பி ஆசிரியர் யாரேனும் உண்டோ?

 

கீதா சாம்பசிவம் : 

ஆண்கள் அனைவரும் ஏன் எப்போதும் நடிகைகளின் முக லாவண்யத்தையே ஒப்பிட்டுக் களிப்படைகிறார்கள்?

# முகம் கண்தான் ஒருவருக்கு முதல் அடையாளம்.  மேலும் அழகிய முகத்தைக் காட்டிலும் வேறு என்ன களிப்பு தர முடியும் ?  "என்ன அழகான முழங்கை"  என்று சொல்ல முடியுமா ?

& ஆண்களுக்கு சந்தோஷப்பட இருக்கும் ஒரே வழி! பாவம் - விட்டுடுங்க !!

நடிகர்களின் அழகைப் பற்றி அவங்க கவலையே படுவதில்லையே ஏன்?

# ஆண்கள் நடிகைகளையும் மகளிர் நடிகர்களையும் ரசிப்பதுதான் இயல்பு.

& சரி. நான் கேட்பதற்கு நீங்க பதில் சொல்லுங்க. யோகி பாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் - இருவரில் யார் அழகு? 

மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் திரைப்பட நடிக, நடிகையர்கள் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பது சரியா?

# அரசியலுக்கு யாரையும் வரக்கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களை வெல்ல வைப்பது நாம் தானே. அது ஏன் என்பதே ஆராய வேண்டிய விஷயம்.  கமல்ஹாசன் தேர்தலில் கற்ற பாடம் மற்ற நடிகர்கள் கனவைக் கலைத்திருக்கும் என்று நம்புவோம்.

& நடிகர்கள், அரசியலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தேர்தல் என்று வந்தால், ஆளும் கட்சியும், பிரதான எதிர்க் கட்சியும், நடிகர்கள், பிரபல தொழில் அதிபர்கள் என்று எல்லோரையும் நெருக்கி தேர்தல் செலவுகளுக்கு நன்கொடை வசூல் செய்வார்கள். அந்த இம்சையிலிருந்து தப்பிக்க சில சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டுபிடித்த வழிதான் - கட்சி தொடங்குவது. சொந்தக் கட்சி நடத்தும் நடிகர்களிடம் மற்ற கட்சிகள்  தேர்தல் நிதி கேட்டு நெருக்கமாட்டார்கள். தொழில் அதிபர்கள், சச்சரவு எதுவும் செய்யாமல், இரண்டு கட்சிகளுக்குமே தாராளமாக வாரி வழங்கிவிடுவார்கள். பிறகு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், செலவழித்த தொகையை வேறு விதங்களில் சம்பாதித்து விடுவார்கள்! 

நெல்லைத்தமிழன் :

தீபாவளிக்கு ஹோட்டல், இனிப்பு கடைகளில் வாங்கின இனிப்பை பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் அர்த்தம் இருக்கிறதா?

# பிறரோடு பகிர்ந்து கொள்வது தீயதல்லாத எதுவானாலும் நல்லது என்றுதான் கருத வேண்டும்.

மேலும் தீபாவளி பட்சணங்கள் மடியாக நைவேத்தியமாகச் செய்யப் படுபவை அல்ல.  ருசி ரசனைக்காகச் செய்கிறோம்.  வடக்கே வாசற்கடைகளில் விற்கப்படும் பண்டங்கள் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள்.  பக்தி சிரத்தையுடன் எது படைத்தாலும் கடவுள் ஏற்பார் என்று நம்புகிறோம் இல்லையா ? 

நெல்லை த மாதிரி எல்லாரும் நளபாகம் படைக்க இயலாததால் அடையார் ஆனந்தம் - குப்தாவிலேயோ கிராண்டாக வாங்கி அர்ச்சனா பிரசாதமாக வழங்கப் படுகிறதோ ?

கண்ணப்பர் தந்ததை சிவபிரான் திருக்கண்ணமுதாக ஏற்றார் என்று புராணம் சொல்லக் கேட்டும்...

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

சற்றே சீரியஸ் ஆன கேள்விகள். 

& அதே அளவுக்கு சீரியஸ் ஆன பதில்கள் 

ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் 

& அதெல்லாம் முடியாது - எல்லாத்துக்கும்தான் பதில் அளிப்போம்! 

1. நாய் வாலை நிமிர்த்த முடியாது . காரணம் கூறுக?  (அது நாயின் சுபாவம் என்பது பதிலாகாது)

# நிமிர்த்திய வால் நாய்க்குப் பிடிக்காது.

$ இயற்கையை மாற்ற முயற்சி செய்யாதீர்கள் என்பதின் உருவகம்.

& நாய் வாலில் பெரிய தாத்பர்யம் அடங்கியுள்ளது. 


நாய் எப்போதும் tension மனநிலையிலேயே இருப்பதால், டென்ஷன் அதிகமாகி, வாலின் ஒரு பக்கம் நீண்டு, வால் வளைந்துவிடுகிறது.  நாய் meditation கற்றுக்கொண்டு, அதை கடைபிடித்தால், tension குறைந்து, வால் நேராகிவிடும். ஆனா பாருங்க - இந்த உயரிய நிலையை எந்த நாயும் அடைய நினைக்காமல், டென்ஷன் கொண்டு, ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கு! 

2. காரைக்கால் அம்மையார் போல் கயிலாயத்திற்கே சென்று மீண்டு வந்து பரம பதத்தைப் பற்றி, வைகுண்டத்தில் வாழ்பவர் யார்? (அதான் எனக்கு தெரியுமே)

# விஷ்ணு.

3. பெண் சிற்பங்கள், சிலைகள் பெருத்த மார்புடனும் சிறுத்த இடையுடனும் வடிவமைப்பதின்  காரணம் என்ன? (சிற்ப சாஸ்திரம் என்று தப்பிக்கக் கூடாது. )

# கண்ணுக்கு அழகு.  அங்க லட்சணங்களாகச்  சொல்லப் பட்டிருப்பதன் மிகைப் படுத்தப் பட்ட வெளிப்பாடு. 

$ பின்னே என்ன சொல்லித் தப்பணும் ?

4. மிகக்கொடிய விஷம் உள்ள பாம்பினை ஏன் நல்ல பாம்பு என்று கூறுகிறோம்?

# பாம்புக்கு லட்சணம் விஷம். கொடிய விஷம் - நல்ல பாம்பு.  (நல்ல கத்தி கூர்மையானது என்பது போல!) 

$ கெட்ட பாம்பு என்றால் அதற்கு கோபம் வந்து கடிச்சுடும்!

5. மதராச பட்டினத்தில் டிராம் வண்டிகள் ஒடிய காலத்தில் டிராம்  வண்டியில் பயணம் செய்த எ பி ஆசிரியர் யாரேனும் உண்டோ?  (வயசு தெரிஞ்சுடும் இல்ல)

# இரண்டு பேர் உண்டு.  வயது 78, 83.

$ எனக்கு வயது 78 !

& மெட்ராஸ் டிராம் சேவைகளுக்கு 1953 ஏப்ரல் 12 அன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்போதான் நான் கடலூரில் நடக்க ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். 

ஆனாலும், இணையத்தில் கிடைத்த சில படங்கள் - நமது வாசகர்களுக்காக : 


6. Tube லைட், CFL, குண்டு பல்பு போன்றவற்றை எப்படி டிஸ்போஸ் செய்வது?  நான் நிறைய வைத்திருக்கிறேன். 

# நொறுக்கி பழந்துணியில் மூட்டை கட்டி குப்பை வண்டியில் ஒப்படைக்கலாம்.

$ நான் visit செய்த ஒரு தொழிற்சாலையில் பழைய tube light கண்ணாடியை பொடி செய்து நீரில் கரைத்து electric water heater உள்ளே பூசி பின் 850 deg உஷ்ணத்தில் சுட்டு கண்ணாடி lining செய்கிறார்கள்.

7. மல்லிகா பத்ரிநாத், ரேவதி சண்முகம், மெனு ராணி செல்லம், கிருத்திகா, அனுராதா, யோகாம்பாள் இவர்களில் யார் சமையல் கலையை அழகாக சொல்லிக் கொடுப்பவர்? கீதா மாமியும் ஆதி வெங்கட்டும் லிஸ்டில் உள்படுத்தாதற்கு மன்னிக்கவும்.

 # மல்லிகா தவிர மற்றவர்கள் நிகழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை.

& // மல்லிகா பத்ரிநாத், ரேவதி சண்முகம், மெனு ராணி செல்லம், கிருத்திகா, அனுராதா, யோகாம்பாள் இவர்களில் யார் சமையல் கலையை 'அழகாக' சொல்லிக் கொடுப்பவர்?// 

இவர்கள் யாரையும் நான் பார்த்தது இல்லை. இவர்களில் யார் அழகாக இருக்கிறாரோ  - அவர்தான் ' அழகாக ' (இருந்துகொண்டு) சொல்லிக்கொடுப்பவரோ! 

பின் வரும் கேள்விகள் நெல்லையாருக்கானது. அவசியம் பதில் தேவை. 

8. ஏன் ஐயங்கார் சமூகத்தில்  மட்டும் அண்ணா ஐயங்கார், தாத்தாசாரியார், தம்பு ஐயங்கார், போன்ற உண்மைப் பெயர்கள் வைக்கிறார்கள். உறவு பெயர், உண்மை பெயர் குழப்பம் வராதா? (உ-ம்) அண்ணா என்று கூப்பிட்டால் உண்மையான அண்ணாவும், அண்ணா ஐயங்காரும் வந்து நிற்பார்கள் அல்லவா.

# நூற்றாண்டுகளாக வராத குழப்பம் இனி வருவது அசாத்தியம்.

நெல்லைத்தமிழன் : 

அண்ணா ஐயங்கார், தாத்தாச்சார்யார், தம்பு ஐயங்கார் – இந்தக் கேள்விக்கு சட் என்று பதில் மனதில் தோன்றவில்லை. ‘தாதா’ என்ற பெயர்தான் தாதா ஆச்சார்யார் என்பதாக வந்து, தமிழில் தவறாக தாத்தாச்சார்யார் என்று சொல்கிறார்கள். இந்தப் பெயர்க்காரணம் பற்றிப் படித்திருக்கிறேன். கொஞ்சம் mind clear ஆன பிறகு எழுதுகிறேன்.  தம்பி, அண்ணா என்பதெல்லாம் வயதைப் பொறுத்து பிறர் (நெருங்கிய உறவினர்கள்) அழைப்பது. மற்றபடி பெயர் வைக்கும்போதே இப்படி வைக்கமாட்டார்கள். தம்பு என்பது, தம்புடு என்று தெலுங்கு பேசும் குடும்பத்தில் வரும் ‘கூப்பிடும்’ பெயர்.

9. நெல்லைத்தமிழனுக்கும் நெல்லைக்கும்  என்ன சம்பந்தம்?. வாழ்வில் வசித்தது முழுதும் நெல்லையை விட்டு வெகு தூரத்தில். பரமக்குடி, பூலாங்குறிச்சி, சென்னை, துபாய், பஹரைன், பெங்களூரூ  என்று. 

# புனைப்பெயர் வைத்துக் கொள்ள மிக லேசான நியாயங்கள் போதுமானவை.

நெல்லைத்தமிழன் : 

நெல்லைத் தமிழனுக்கும் நெல்லைக்கும் என்ன சம்பந்தம்? – நான் பிறந்த ஊர். என்னுடைய ஊர் என்று என் மனது சொல்லும் ஊர் நெல்லை. என் அப்பா, அவர் அப்பா, அவருடைய அப்பா போன்றோர் வாழ்ந்த ஊர். அதற்கு முந்தைய தலைமுறை காஞ்சீபுரத்திலிருந்து (எங்களின் முன்னோர்கள் காஞ்சீபுரத்தின் அருகில் இருந்த நடாதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்) நெல்லைக்கு அழைத்துவரப் பட்டவர்கள் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். என்னால் திருநெவேலி பேச்சுத்தமிழ் பேச முடியாவிட்டாலும் நான் நெல்லையைச் சேர்ந்தவன் என்ற எண்ணமே இருக்கிறது. உங்க கேள்வி, இதே கேள்வியை என் பசங்கள்ட எழுப்பினால் என்ன பதில் சொல்வாங்கன்னு யோசிக்க வைக்குது.  என்னுடைய அப்பா வழிப் பாட்டி, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவங்க. எங்க அம்மா வழிப் பாட்டியும் அப்படித்தான். என் உறவினர்கள் பலரும் திருவனந்தபுரத்தில் இருக்காங்க/இருந்தாங்க. என்னுடன் வேலை பார்த்த முதலியார் பையன், மனதளவுல தான் மலையாளி என்றே உணர்வான், நடந்துகொள்வதும் அப்படித்தான். அவனுடைய அப்பா தமிழகத்திலிருந்து கேரள தேசத்தில் செட்டில் ஆனவர்.  நான் இந்தப் பகுதியைச் சார்ந்தவன், இந்த இனம் என் இனம், இந்த மொழி என் மொழி என்ற பாகுபாடு எல்லாமே நம் மனது சொல்வதுதான்.  ரொம்பவே நீளமாக எழுதிவிட்டேன்.

(இப்படி குண்டக்க மண்டக்க என்று கேள்வி கேட்க வைப்பவர்: "கடவுளுக்கு கடிதம்" எழுதும் ஸ்ரீரங்கத்து தேவதை கோண்டு  என்கிற கோவிந்து.) 

 & கோவிந்தனுக்கு இப்போ எல்லாம் செரியாப் போயிடுத்தா ? 

= = = =

படம் பார்த்துக் கருத்து எழுதுங்க !

1 ) 


2) 3) 
91 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நோயில்லாத வாழ்வை இறைவன் அருள வேண்டும்.

  எனக்கு 73 வயது. நானும் டிராமில் பயணப் பட்டிருக்கிறேன்.
  என் ஐந்தாவது வயதில். எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏறலாம்.
  மாமாகையைப் பற்றியபடி , டிராம் மணி ஓசை கேட்டுக்கொண்டு
  பயணித்த நினைவு. மிக நிதானமாகப் போகும்.

  பதிலளிநீக்கு
 2. 8. ஏன் ஐயங்கார் சமூகத்தில் மட்டும் அண்ணா ஐயங்கார், தாத்தாசாரியார், தம்பு ஐயங்கார், போன்ற உண்மைப் பெயர்கள் வைக்கிறார்கள். உறவு பெயர், உண்மை பெயர் குழப்பம் வராதா? (உ-ம்) அண்ணா என்று கூப்பிட்டால் உண்மையான அண்ணாவும், அண்ணா ஐயங்காரும் வந்து நிற்பார்கள் அல்லவா.??????????????????????????????????????????????????????????????????

  அண்ணங்கராச்சாரியார் அண்ணா ஆகி இருக்கலாம்.

  என் அம்மாவின் மாமாவின் பெயர் தாத்தம். தாந்தோன்றி
  மலைப் பெருமாள் நினைவில் வைத்ததாகச்
  சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராமானுசனை, ஆண்டாள், நீர் எம் அண்ணாவோ என்று அழைத்ததாகச் சொல்வர். கோயில் அண்ணன் என்று ஒரு பீடாதிபதி இருந்தார். அந்த மாதிரி டைட்டில் தொடர்ந்து வரும். நடாதூர் அம்மாள் என்று ஒருவர் இருந்தார் (எங்கள் வம்ச மூத்தோர்). அவர் ஆண். ஆனாலும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு தினமும் பால் கண்டருளப்பண்ணும்போது, ரொம்ப சூடாக இருந்துவிடக் கூடாது என்று விரலால் தொட்டுப் பார்ப்பாராம். அதனால் வரதராஜனே, என் அம்மாவோ நீர் என்று அவரை விளித்ததால், அம்மாள் என்றே அவருக்குப் பெயர். (சமீபகாலங்களில் பரமாச்சார்யாருக்கு ஒரு பக்தர் சுடச் சுட பாலை அவர் படத்தின் முன்பு வைத்துவிட்டு, பிறகு மறுநாள் அவரை தரிசனம் செய்யப் போம்போது பரமாச்சார்யார் தன் நாக்கை நீட்டி ரொம்பச் சுட்டுவிட்டது பார்த்தாயா என்று சொன்னதாக பரமாச்சார்யாருடன் அனுபவம் என்ற தொகுதியில் படித்திருந்தேன்)

   நீக்கு
 3. திரு நாங்கூர் திருவெள்ளக் கோவில் பெருமாள்
  அண்ணா என்றே அழைக்கப் படுகிறார்.
  ''அண்ணா அடியேன் இடர் களையாயே''
  என்று பாசுரம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஞ்சைக்கு அல்லது குடந்தை அருகே அண்ணன் பெருமாள் கோவில் என்ற திருத்தலம் ஒன்றுக்கு திருக்கடையூர் செல்லும் வழியில் சென்று வந்த நினைவு.அது திவ்யதேசங்களில் ஒன்று என்றும் நினைவு.  அல்லது தவறாக இருக்கலாம்.

   நீக்கு
  2. ஆமாம் பா. திருப்பதிகளில் ஒன்று.

   நீக்கு
  3. திருவெள்ளக்குளத்து எம்பெருமானுக்கு ஸ்ரீநிவாசன் என்ற பெயர், தாயாருக்கு அலர்மேல் மங்கை என்று பெயர். இவரை, திருமங்கை ஆழ்வார், 'அண்ணா' என்று ப்ரபந்தத்தில் விளித்துள்ளார். இந்தக் கோவில் இறைவன், திருவேங்கடவனுக்கு மூத்தவர் என்று சொல்வர். இந்தக் கோவில் அதனால் அண்ணன் கோவில் என்றும் பெருமாள், அண்ணன் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

   'அண்ணா' என்பது மரியாதையான சொல். 'அண்ணலே உன்னடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே' என்பது ப்ரபந்த வரி- அண்ணல் என்பதும் மரியாதையான சொல்லே.

   நீக்கு
 4. சென்னையில் தம்புசாமித் தெரு உண்டே?

  பதிலளிநீக்கு
 5. எழுபதுகளில் கூட பிராட்வே, ராயபுரம் பகுதிகளில் டிராம் தடங்கள் பார்த்த நினைவிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. 2. காரைக்கால் அம்மையார் போல் கயிலாயத்திற்கே சென்று மீண்டு வந்து பரம பதத்தைப் பற்றி, வைகுண்டத்தில் வாழ்பவர் யார்? (அதான் எனக்கு தெரியுமே)

  ஐயோ ஐயோ. இரண்டு hint கொடுத்ததும் கண்டுபிடிக்கவில்லை. 

  பதில் கீசாக்கா. கயிலாய யாத்திரை சென்றவர். பூலோக வைகுண்டம்  ஆன ஸ்ரீரங்கத்தில் வசிப்பவர்.
  கேள்விகளுக்கு பதில்  தந்தமைக்கு மிக்க நன்றி. ஸ்ரீரங்கத்து தேவதை சுஜாதா கதை தொகுப்பு. முதல் கதை. 

  & நாய் வாலில் பெரிய தாத்பர்யம் அடங்கியுள்ளது. 

  இந்த பதில் எழுதியவர் leyland காரரோ? அதான் டென்ஷன் சஸ்பென்ஷன் காம்ப்ரசன் என்று விடை வருகிறது.
   
  பதில்களுக்கு நன்றி.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 7. //மல்லிகா பத்ரிநாத், ரேவதி சண்முகம், மெனு ராணி செல்லம்// - என்னைப் பொருத்த வரையில், ரேவதி சண்முகம் மிகச் சரியாகச் சொல்லிக்கொடுக்கிறார். செய்து காண்பிக்கும்போதும், டிப்ஸ் கொடுக்கும்போதும் நமக்கு நன்றாகப் புரியும். ஆண்களில் வெங்கடேஷ் பட் என்பது என் அபிப்ராயம். ஒரு சிலர் சொல்லிக்கொடுப்பதை நாம் செய்துபார்த்தால் சரியாக வராததை நான் கண்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. //நடிகைகளின் முக லாவண்யத்தையே ஒப்பிட்டுக் // - இது என்னா கேள்வி? கீசா மேடம் எப்போதும் பொதிகை சேனலையே பார்த்துக்கொண்டிருப்பதால் இப்படி எல்லாம் கேட்கிறாங்களா? ஆண்கள் வேற எதையும் (கால்கள் கைகளைச் சொன்னேன்) ஒப்பிட்டுக் கேள்வி கேட்டால், குறுக்கே புகுந்து கேள்வியை நீக்க, கேஜிஜி சார் என்று ஒருவர் இருக்கிறாரே. 'பெண்களின் கா' என்று ஆரம்பித்தாலே, எபிக்கு இந்தக் கேள்வி சரியா இருக்காது,ஆபாசமா இருக்கு என்று, அடுத்த எழுத்தான 'து' அல்லது 'ல்' என்பதைப் பார்க்காமலேயே கேள்வியை அடித்துவிடுகிறாரே...ஹா ஹா

  பதிலளிநீக்கு
 9. //அழகைப் பற்றி அவங்க கவலையே// - எந்த நடிகராவது (ரஜினி போன்றவர்கள் விதிவிலக்கு) ஒரிஜினல் முகத்துடன், மேக்கப் செய்துகொள்ளாமல் வெளில வந்திருக்காங்களா? இல்லை நடிகைகள்தாம் முகத்துக்கு 2 இஞ்ச் மைதாமாவு மற்றும் உதடுக்கு சிவப்பு பெயிண்ட் (சரோஜாதேவி நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது) அடித்துக்கொள்ளாமல் வெளில வந்திருக்காங்களா?

  பதிலளிநீக்கு
 10. //வடிவமைப்பதின் காரணம் என்ன?// - கேள்வி கேட்டவர் ராஜராஜசோழன் சிலையைப் பார்த்திருக்கிறாரா? நம் பாரம்பர்யம் (இந்திய), ஒருவர் இருப்பது போல சிலை செய்வதில்லை. சிலை செய்யும்போது சிற்ப சாஸ்திரம் சொல்வதுபோல, அழகை மனதில் வைத்து வடிக்கப்படுவது (எனக்குத் தெரிந்து இதற்கு ஓரளவு விதிவிலக்கு திருமலை நாயக்கர் சிலை). அதனால்தான் நம் இந்தியக் கண்களுக்கு ஏற்ற அழகுணர்ச்சியோடு செதுக்கப்படுகிறது.

  சீனாவில், பெண்களின் பாதம் எவ்வளவுக்கு எவ்வளவு சிறிதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பெண்கள் அழகு என்பது அவங்க மனநிலை (அதனால இரும்புக் காலணி செய்து செயற்கையாக பாதத்தை வளரவிடாமல் செய்யும் கொடுமைகள் நடந்தன). நம் விளம்பரங்களில் ஏன் பெண்கள் வெள்ளை வெளேரென்று காட்டப்படுகிறார்கள் என்று யோசித்தது உண்டா? அதற்கும் இந்த இந்திய மனநிலைதான் காரணம்.

  ஜெயக்குமார் சார்... நீங்க திருவனந்தபுர கோவிலில் கர்பக்கிரஹ மண்டபத்திற்கு வெளியே (ஒத்தக்கல் மண்டபம் இல்லை. அந்த ஹாலுக்கு வெளியே) தூணில் இருக்கும் ஒரு சிற்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் நெ த ஸஸ்பென்ஸ் !!

   நீக்கு
  2. ஐயா நான் பத்மநாப சாமி கோயிலுக்கு, இங்கு வசித்த 41 வருடங்களில், 10 முறை கூட சென்றது இல்லை. காரணம் ஆடைக் கட்டுப்பாடு. கோபுர மண்டபத்தில் சில பெண் நிர்வாண சிலைகளை பார்த்திருக்கிறேன். 

   Jayakumar

   நீக்கு
 11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 12. திரு.நெ.த.அவர்களின் பதில் ரசிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது இருக்கட்டும் கில்லர்ஜி... உங்களுக்கு தேவகோட்டை என்று தெரியும். உங்க பசங்க, அவங்க ஊராக எதனைக் கருதுகிறார்கள்?

   நீக்கு
 13. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. முதல் படம். புளிப்பு இனிப்பாகியதோ?


  இரண்டாவது படம். ஊஹூம் ஏன் குட்டி தங்க கட்டி. தரமாட்டேன்.

  மூன்றாவது படம். இது பல தடவை பார்த்தாகிவிட்டது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாம். அது போல நாய் கேட்டு நிழலில் படுத்ததாம்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 15. வித்தியாசமான கேள்விகளும் பதில்களும் அருமை...

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மெட்ராஸ் பழைய படங்களை பார்க்கும் வாய்ப்புகளை தந்தமைக்கு நன்றி. எங்கள் அம்மா சிறு வயதில் சென்னையில் வசித்த போது அவரின் டிராம் பயண அனுபவம் பற்றி நான் சிறு வயதாக இருக்கும் போது அவர் சொன்னதை கேட்டுள்ளேன். மற்றபடி இந்த மாதிரி டிராம் படங்களை பார்த்ததோடு சரி.

  1.வது படம். "எத்தை தின்றால் பித்தம் தெளியும்" என அந்த குழந்தையும் சோதித்து பார்க்கிறது.

  2.அன்பு காட்டி விட்டால், எந்த உயிரும் ஒன்றுதான்..என்கிறரோ நம் மூதாதையர்.

  3.கூண்டை விட்டு வெளியே வந்து விட்டோம். இனி நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என புலியார் யோசிக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலா ஹரிஹரன் மேடம் - எனக்கு பஹ்ரைனில் இருந்தபோது சில சமயம் (அப்போல்லாம் பழங்களை மட்டும் சாப்பிட்டு, இல்லை வேறு வகையான டயட்டில் இருக்கும் வழக்கம் இருந்தது) எந்தச் சாப்பாட்டை நினைத்தாலும் பிடிக்காது. அப்போது, என் மனைவி, உடனே எலுமிச்சம்பழம் தோலுடன் (அங்க தென் ஆப்பிரிக்கா எலுமிச்சை ரொம்ப பெரிதாக இருக்கும்) சாப்பிடச் சொன்னாள் (உடனே கலாய்க்க யோசிக்காதீங்க. எலுமிச்சம்பழத்தை கட் பண்ணி சிறுதுண்டுகளாக முழு எலுமிச்சம்பழத்தையும் சாப்பிடச் சொன்னாள்). இரு நாட்களில் பிரச்சனை சரியாகிவிட்டது.

   எலுமிச்சம்பழத்திற்கு ஒரு மகத்துவம் இருக்கிறது.

   நீக்கு
 17. //நெல்லை த மாதிரி எல்லாரும் நளபாகம் படைக்க இயலாததால் அடையார் ஆனந்தம் - குப்தாவிலேயோ கிராண்டாக வாங்கி அர்ச்சனா பிரசாதமாக வழங்கப் படுகிறதோ ?// - பதிலை வேறுமாதிரி யோசித்திருக்கலாம். எல்லாரும், தாங்களே இனிப்பு காரம் செய்துபார்க்கிறேன் என்று செய்துபார்த்து, சரியா வந்ததோ வரலையோ அடுத்த வீட்டுக்காரங்களுக்கு, வீட்டிற்கு வருபவர்களுக்குத் தந்து சோதனை எலிபோல ஆக்கிவிடுவதைவிட, இந்த மாதிரி கடைகளில் வாங்கி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது பெட்டர் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் வணக்கம்.
  அண்ணாசாமி என்பது ராமபிரானை குறிக்கும் பெயர். அதைப்போல தம்புசாமி என்பது இளவல் லட்சுமணனைக் குறிப்பது. அனூஜ் என்னும் வடமொழிப் பெயரும் லட்சுமணனை தந்தான் குறிக்கும்.
  இதை காஞ்சி மஹா பெரியவரின் தெய்வத்தின் குரலில் படித்தேன். கீதா அக்கா இந்த விளக்கத்தை அளித்திருப்பார் என்று நினைத்தேன். அவர் எங்கே? அம்பிரிக்காவுக்கோ, ஆப்பிரிக்காவிற்கோ சென்று விட்டாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹல்லோ... அனுஜ் என்றால் தம்பி என்று வடமொழியில் அர்த்தம். ராம அனுஜ் - இராமானுஜர் - இளையாழ்வான் - இலட்சுமணன் எல்லாம் ஒரே பெயரைக் குறிக்கிறது. வெறும்ன அனுஜ் என்றால் 'தம்பி'. அடுத்து 'ஜ்யேஷ்டா' என்றாலே அது பலராமரைக் குறிக்கிறது என்று சொல்லிடுவீர்கள் போலிருக்கே.

   நீக்கு
  2. @நெல்லை: கழக கண்மணிகளிடம் அண்ணா என்றால் சி.என்.அண்ணாதுரை என்றுதான் புரிந்து கொள்வார்கள். அதற்கு முன்னால் வரை நம் நாட்டில் அண்ணா என்றால் ராமன் தான். அதனால்தான் தங்கள் குழந்தைகளுக்கு ராமசாமி என்ற பெயரை விட அண்ணாசாமி, அண்ணாதுரை என்றெல்லாம் மிகவும் பாந்தவ்யமாக பெயர் சூட்டினார்கள்.அதைப்போல ராமனுக்கு மூன்று தம்பிகள் இருந்தாலும் இளவல், என்றாலும், தம்பி அது இலட்சுமணனைத்தான் குறிக்கும். இராமானுஜன் என்ற பெயரும் லட்சுமணனைத்தான் குறிக்கும் என்பது தீவிர வைஷ்ணவராகிய உங்களுக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் நம் ஊரில் தம்பித்துரை என்று பெயரிட்டாலும், வட நாட்டில் அனூஜ் என்று பெயரிட்டாலும் அது லட்சுமணனைத்தான் குறிக்கும் ஐயங்காரே.

   நீக்கு
 19. என் கொள்ளுதாத்தாவின் பெயர் அண்ணாசாமி ஐயர். மாமா தாத்தாவின் பெயர் அண்ணாதுரை ஐயர். திருச்சி நேஷனல் காலேஜில் அண்ணாதுரை ஐயர் ப்ளாக் என்று ஒன்றையும், அண்ணாதுரை ஐயரின் சிலையையும் பார்க்கலாம். ஏனென்றால் அந்த கல்லூரியை நிறுவிய தில் முக்கிய பங்கேற்றவர் நங்கவரம் அண்ணாதுரை ஐயர்.

  பதிலளிநீக்கு
 20. ஐயா சாமி என்றுகூட பெயர் வைப்பார்கள். ஐயா என்றால் உயர்ந்தவர்(ன்) என்று பொருள். ஐயா சாமி என்றால் உயர்ந்த கடவுள் அல்லது பெரிய கடவுள் என்று பொருள். இதே ரீதியில் சிந்தித்தால் தாத்தாச்சாரி என்னும் பெயருக்கு பொருள் கிடைக்கலாம்.

  பதிலளிநீக்கு
 21. ட்ராம் வண்டியில் பயணித்ததைப் பற்றி என் அப்பா கூறியிருக்கிறார். எழுத்தாளர் லட்சுமி அவருடைய அனுபவத்தொடரில் ட்ராம் பயணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 22. கோவில் கோபுரங்களில் நிர்வாண சிலைகள் இருக்கின்றன என்பதை பத்திரிகையில் எழுதிய புண்ணியவான் மணியன் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. அஹோபிலம் கோவிலில் போர்காட்சிகளை விவரிக்கும் அழகான சிற்பங்களும் உண்டு, ஆண், பெண் உறவை அப்பட்டமாக விவரிக்கும் சிற்பங்களும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கோவில்களுக்குச் சென்றால் மூலவரையும், உற்சவரையும் அம்பாளையும் மட்டும் தரிசித்து, உள் பிரகாரம், வெளிப்பிரகாரம் சுற்றி வெளியே வந்துவிடுவேன். கோபுரத்தில் எவ்வளவு வாசல்கள், அதே எண்ணிக்கையில் மேலே உள்ள கலசங்களும் உள்ளனவா என்றும் ஆராய்ச்சி செய்வேன். வேறு எதையும் பார்ப்பதில்லை.

   நீக்கு
  2. அஹோபிலம் எந்தக் கோவிலில்? - பா.வெ. மேடம்

   கேஜிஜி சார் - இதுதானே வேண்டாங்கறது

   நீக்கு
  3. உண்மை சொன்னால் நம்ப வேண்டும்.

   நீக்கு
  4. //கோபுரத்தில் எவ்வளவு வாசல்கள், அதே எண்ணிக்கையில் மேலே உள்ள கலசங்களும் உள்ளனவா என்றும் ஆராய்ச்சி செய்வேன்//அட! நானும் இதனைச் செய்வேன். கூடவே சிற்பங்களையும் ரசிப்பேன்.

   நீக்கு
  5. பிரதான லட்சுமி நரசிம்மர் கோவில். என்னுடைய 'ஆச்சர்யமான அஹோபிலம்' பதிவுகளை படியுங்கள் விவரம் தெரியும்.

   நீக்கு
 24. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 25. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
  பழைய படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  குழந்தை எலுமிச்சை துண்டங்கள் உள்ள தொட்டியில் அமர்ந்து இருப்பதை பார்க்கும் போது குழந்தைக்கு உடம்புக்கு ஒன்றும் வராமல் இருக்கவேண்டுமே! என்று மனது நினைக்கிறது.

  குரங்கு குட்டியை புலிகுட்டியாக மாற்றியது போல இருக்கிறது படம்.

  அமைதியான பூனை போல படுத்து இருப்பதைப்பார்த்து சீண்டாதே ! ஜாக்கிரதை என்கிறார்களோ!

  பதிலளிநீக்கு
 26. இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் அருமை.. அருமை..

  பதிலளிநீக்கு
 27. கௌ அண்ணா நெல்லை எங்கிட்ட வசமா மாட்டிக்கிட்டார்!!! அவர்கிட்ட சொல்லிடாதீங்க!!..

  பின்னே என்னவாம் என்னை எந்த ஊரைக் கேட்டாலும் எங்க ஊர்ன்னு நான் சொல்லுவேன்னு சொல்லுவார் இப்ப பாருங்க அவருக்கும் திருவனந்தபுர ரூட் இருக்கு ஹாஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனாக்க அக்கா... நான் 'எங்க ஊரும் திருவனந்தபுரம்தான்', 'எங்க ஊரும் திருக்குறுங்குடிதான்', 'எங்க ஊர் நாரோயில்ல', 'எங்க ஊரும் யாழ்ப்பாணம்தான்' 'எங்க ஊரான திருப்பதிசாரத்துல' என்று எல்லா ஊரையும் நான் என்னோட ஊர்னு சொல்லிக்கறதில்லை. ஒன் அண்ட் ஒன்லி நெல்லை. ஹாஹா.

   நீக்கு
 28. பழைய சென்னையின் படங்கள் அழகு.. அழகு..

  சில படங்களையும் அந்த இடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய நாளில் அந்த இடங்கள் நாசமாகியிருப்பதன் அளவு புரியும்..

  இது தான் முன்னேற்றம் என்பார்கள்.

  பதிலளிநீக்கு
 29. கேள்விகள் பதில்கள் செம சுவாரசியம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 30. கேள்வி பதில்கள் ரசித்தேன்.
  1) தலைக்கு தேய்க்க முன் வயித்தையும் வாயையும் சுத்தம் செய்ய வேண்டும்.

  2) எங்கே குட்டியை பறி பார்ப்போம்.

  3) கொடிய மனிதர்கள் வருவார்கள் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 31. இவ்வளவு பேர் இந்த இடுகையைப் படித்திருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு

  அப்பாத்துரை, அப்பாராவ் போன்ற பெயர்கள் நினைவுக்கு வரவில்லை (அண்ணா, தம்பி என்று உறவுப் பெயர் என ஜெயக்குமார் சார் எழுதினபோது). அவ்வளவு சீக்கிரம் நாம் மூன்றாம்சுழியை மறக்கலாமா?

  பதிலளிநீக்கு
 32. 2. காரைக்கால் அம்மையார் போல் கயிலாயத்திற்கே சென்று மீண்டு வந்து பரம பதத்தைப் பற்றி, வைகுண்டத்தில் வாழ்பவர் யார்? (அதான் எனக்கு தெரியுமே)

  கடைசில எல்லோருமே கீசாக்காவை மறந்துட்டீங்க. கீஸாக்காவும்  எ பி யை மறந்தாச்சு. ஆளையே காணோம். காவேரியில் வெள்ளம் கரை புரண்டு வீட்டிற்கு வந்து விட்டதோ? 

   
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலிலேயே உங்கள் கமெண்ட்டைப் படித்தேன் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்..   'அட, ஆமாம்ல' என்று தோன்றியது!  கீதா அக்கா இப்போதுதான் சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் திரும்பி இருக்கிறார்கள்   பின்னர் இதை எல்லாம் படிப்பார் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 33. கேள்விகளுக்குப் பதில்களைத் திறம்பட அளித்துவரும் எ.பி ஆசிரியக் குழுவினருக்கு நன்றி. தலையில் குட்டிப்பாப்பா ஏன் எலுமிச்சம்பழத்தை வைச்சிண்டு இருக்கு? இரண்டாவது மூன்றாவது படங்களும் அருமை!

  பதிலளிநீக்கு
 34. தாத்தா, அப்பா, அண்ணா ஆகியோரைப் பற்றிய அலசல்கள் அருமையாக உள்ளன.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!