சனி, 27 நவம்பர், 2021

ஆதரவற்றோருக்கு மூன்று வேளையும் உணவு

 


மூன்றாவது அலை சாத்தியமில்லை: நம்பிக்கையூட்டும் நிபுணர்கள்: 

புதுடில்லி: 'கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், மூன்றாவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது' என, நிபுணர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை: 

துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக, இந்தாண்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.ஆனால், தீபாவளி முடிந்து மூன்று வாரங்களாகும் நிலையில், நாட்டில் வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு ஏற்படும் பாதிப்பு, 8,000க்கு கீழ் குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி முந்தைய 24 மணி நேரத்தில், புதிதாக, 7,579 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இது, கடந்த 543 நாட்களில் மிகவும் குறைவாகும். இந்நிலையில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கூறிஉள்ளனர்.

இது குறித்து, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள அசோகோ பல்கலையின் இயற்பியல் மற்றும் உயிரியல் பிரிவு பேராசிரியர், கவுதம் மேனன் கூறியுள்ளதாவது: இரண்டாவது அலையின்போது பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவர்கள் குணம்அடைந்துள்ளனர். இதனால், இயற்கையாகவே, மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதைத் தவிர, தடுப்பூசி போடும் பணியும் வேகமெடுத்துள்ளது. அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

நம் நாட்டில் வைரசின் வீரியமும் குறைந்துள்ளது. அதனால், மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இல்லை. வைரசின் போக்கை எப்போதும் முழுமையாக கணிக்க முடியாது. புதிய உருமாறிய வைரஸ் ஏற்பட்டால், வரும், டிசம்பர் முதல் 2022 பிப்ரவரிக்குள் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படலாம்.

பாதுகாப்பு நடவடிக்கை: 

ஆனாலும், அது இரண்டாவது அலையைப் போல மோசமானதாக இருக்காது. சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும்.இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன், தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போடுவதால், வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவை மிக முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.

= = = =


= = = =


கடலில் அலை சறுக்கு விளையாட்டை பல நாடுகளில் கற்று, சென்னையில் பலருக்கும் கற்றுக் கொடுத்து வருவது பற்றி கூறும், சென்னை இளைஞர் சதீஷ்குமார்: "நிறைய பேர் அறியாதது அலை சறுக்கு விளையாட்டு. பார்ப்பதற்கு கடினமாக தோன்றும் இந்த விளையாட்டை எளிதில் கற்றுக் கொள்ளலாம்.இந்த விளையாட்டு, கடல் சார்ந்து உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல; அனைத்து தரப்பினருக்குமானது. நம் நாடு, கடல் சார்ந்த பகுதி. இங்கு நதி, குளம், ஏரி என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.
இந்த விளையாட்டை இங்கு பிரபலப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை.புதுச்சேரியில் கல்லுாரி படிப்பு படிக்கும் போதே, என்னுடன் படித்த வெளிநாட்டினருடன் சேர்ந்து அலை சறுக்கு விளையாடினேன். 2015ல் அமெரிக்கா சென்று, அங்கு முறையாக கற்றுக் கொண்டேன்.இதை கற்றுக் கொள்ள கட்டணம் குறைவு. ஆனால், பயன்படுத்தும் சாதனங்கள் விலை அதிகம். தொடர்ந்து நார்வே நாட்டின் கடலில், ஐந்து நாட்கள் பயணம் செய்து, 200 கி.மீ., கடந்தேன்.அதன் பின் சென்னை திரும்பி, 'எஸ்.யு.பி., மெரினா' என்ற பெயரில் கிளப் ஒன்றை துவக்கி, இளைஞர்களுக்கு அலை சறுக்கு விளையாட்டை சொல்லிக் கொடுக்கிறேன். இப்போது என்னிடம் ஏராளமானோர் இந்த விளையாட்டில் பயிற்சி பெற்றுள்ளனர்; பெற்று வருகின்றனர்.கடந்த 15 ஆண்டுகளாக மெரினா கடற்கரையில் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு உதவி வருகிறேன்.

கடலில் குளிக்கும் போது காணாமல் போனவர்கள், கடலில் சிக்கி கொண்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை என் குழுவினருடன் மீட்கிறேன்.  மேலும், தீயணைப்பு துறையினர், அதிரடிப்படை வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்களுக்கு, கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது பற்றி பயிற்சி அளிக்கிறேன்.கடலில் தான் இந்த விளையாட்டு என்ற போதிலும், நிறைய கருவிகள், முன்னேற்பாடுகள் தேவையில்லை. கடல் நீரில் மூழ்காமல் காப்பாற்றும், 'லைப் ஜாக்கெட்' மட்டும் அணிந்தால் போதும். மேலும், இந்த பயிற்சிக்கு நீச்சல் பயிற்சி அவசியமும் இல்லை. நீச்சல் தெரியாதவர்களும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்; ஆழ்கடலில் பயணிக்கலாம்.

என்னிடம் பயிற்சி பெற்ற சிலர், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல போட்டிகளில் பங்கேற்று விருதுகள் பெற்றுள்ளனர். நானும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உள்ளேன்.வரும் 2024ம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில், அலை சறுக்கு போட்டியை சேர்த்துள்ளனர். அதில், 'ஸ்டாண்டர்டு அப் பெடலிங்' என்ற பிரிவில், என் மாணவர்களை பங்கு பெறச் செய்ய வேண்டும். அவர்கள் மூலம் நாட்டிற்கு பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை!

==================================================================================================

ஆதரவற்றோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருவது பற்றி, கரூர், ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த, 'சங்கமம்' அமைப்பை சேர்ந்த உதயகுமார்: "பி.ஏ., - பி.எட்., படிச்சிருக்கேன். ஆனா, சரியா வேலை கிடைக்கலை. தற்காலிகமா தனியார் கம்பெனில வேலைக்கு போயிட்டிருக்கேன்.தினமும் வேலைக்கு போகும் போது, ஆதரவின்றி, கிழிந்த உடைகளுடன் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோரின் நிலையை பார்க்கும் போது கஷ்டமா இருக்கும்.

'இவங்களுக்குன்னு யாருமே இல்லையா; எங்க துாங்குவாங்க; சாப்பாடு எப்படி கிடைக்கும்...'ன்னு பல கேள்விகள் அடிமனசை அறுக்கும். அப்படி தோணும் போது 'அவங்களுக்கு ஒருவேளை சாப்பாடாவது கிடைக்க வழி பண்ணணும்'னு நினைப்பேன்.அதனால தினமும் ஒருத்தருக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தேன். 

அதைப்பார்த்த ரயில்வே ஸ்டேஷன்ல மூட்டை துாக்கும் நண்பர், 'தினமும் 10 பேருக்கு சாப்பாடு கொடுக்கலாமே'ன்னு சொன்னாரு.'அதுக்கு பணவசதி இல்லையே'ன்னு சொன்னேன். 'ஸ்பான்சர்கள்' மூலமா வறியவர்களின் பசியாற்றும் அமைப்புகளின், 'வீடியோ'க்களை காண்பிச்சப்ப தான் நம்பிக்கை வந்துச்சு.போன வருஷம் முதல், 10 பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க துவங்கினோம். அதை புகைப்படம் எடுத்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பதிவிட்டோம்.அதைப் பார்த்துட்டு பலரும் தங்கள் இல்ல விழாக்களில் ஆதரவற்றோருக்கு சாப்பாடு கொடுத்து உதவினாங்க.

அதனால சிறிது காலம், 'எந்த மனிதரும், இரவு படுக்க போகும் போது, பசியுடன் இருக்கக் கூடாது'ன்னு இரவு உணவு மட்டும் கொடுத்தோம்.எங்களின் இந்த முயற்சியை பார்த்து, தினக்கூலிகளாக இருக்கும் பலரும் இணைஞ்சு, 'சங்கமம்' என்ற இந்த அமைப்பை துவங்கி, இப்போது பலருக்கு பசியாற்றி வருகிறோம். 

இன்னிக்கு குறைஞ்சது, 50 பேருக்கு மூணு வேளையும் சாப்பாடு கொடுத்திட்டு இருக்கோம். 'ஸ்பான்சர்' எல்லா நேரமும் கிடைக்க மாட்டாங்க; பாதி நாள் நாங்க 15 பேரும் எங்க வருமானத்துல மிச்சம் பிடிச்சு சாப்பாடு வாங்கி தருவோம்.மனநலம் பாதிக்கப்பட்டவங்க அழுக்கான உடை அணிந்து, நிறைய முடியோட இருப்பாங்க. அவங்களுக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி, புது உடை அணிவிப்போம். விசேஷ நாட்கள்ல போர்வை, ஸ்வீட், பிரியாணி கொடுப்போம். அதேபோல், கிராமப்பகுதிகளில் ஆதரவில்லாமல் இருக்கும், ஒன்பது முதியோர்களுக்கு மளிகை சாமான்கள் வாங்கி தருகிறோம். இப்படி எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். இதில் மனநிறைவு கிடைக்கிறது. எங்களுடன் புதிது புதிதாக பலரும் இணைவது நம்பிக்கையை அளிக்கிறது!தொடர்புக்கு: 93448 88866
========================================================================================================

38 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 2. கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஒரு நிம்மதியைத் தருகிறது. கனடாவில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கோவிட் தடுப்பூசி அளிக்கலாம் என அரசு அறிவிப்பு வந்துள்ளது.
  அலை சறுக்கு - water skiing என்று புரியும் படி சொன்னால் ஆகாதா? நம் நாட்டில் நீர் விளையாட்டுகள் கொஞ்சம் குறைவுதான். இப்போது பிரபலமாவது சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொரோனாவுக்கு மூக்கில் போடும் சொட்டு மருந்து அறிமுகமாகி விட்டது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 3. நிரந்தர உத்தியோகம் இல்லாவிட்டாலும், ரயில்வேயில் மூட்டை தூக்குபவரோடு சேர்ந்து தினசரி ஐம்பது பேருக்கு உணவளிக்கும் கரூர் உதயகுமாரின் சேவையை பாராட்டி வார்த்தைகள் இல்லை.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை வணக்கம்.

  இன்றைய பாசிடிவ் செய்திகள் நன்று

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ஆதரவற்றவர்களுக்கு மூன்று வேளையும் உணவு தரும் கரூர் சங்கமம் அமைப்பை சேர்ந்த திரு. உதயகுமார் அவர்களை பாராட்டுவோம். மேலும் பல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. // தடுப்பூசி போட்டுக் கொள்வதால், வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவை மிக முக்கியம்... //

  தீ நுண்மியின் வேகம் குறைவது கேட்டு நிம்மதி.. மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 9. // நிரந்தர உத்தியோகம் இல்லா விட்டாலும், ரயில்வேயில் மூட்டை தூக்குபவரோடு சேர்ந்து தினசரி ஐம்பது பேருக்கு உணவளிக்கும் கரூர் உதயகுமார்..//

  அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி..

  பதிலளிநீக்கு
 10. மிக உயர்ந்த லட்சியங்களுடன் வாழும் மனிதர்கள் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் தனக்கே நிரந்தரப்பணி இல்லாத போதும் பசியோடிருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு ' பசியாற்றும் ' திரு.உதயகுமாரின் மனித நேயம் மிகவும் உயர்ந்தது.

  கொரோனா பற்றிய செய்திகளை நானும் படித்தேன். ஆனால் தென் ஆப்ரிக்காவில் மிகவும் உருமாறிய கொரோனா பரவி வருவதாகவும் அது டெல்டா வைரஸை விட கொடியது என்று சந்தேகபப்டுவதாகவும் நேற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளர்கள். சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் பல நாடுகள் தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதித்துள்ள‌து. தென்னாப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் ஹாங்காங்கில் B.1.1529 பரவி உள்ளதால் இந்தியாவிலும் விரைவில் இந்த பயண கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது.

  நம் கிரிக்கெட் வீரர்கள் இந்த மாதம் 17ந்தேதி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று விளயாடுவது பெரும்பாலும் தடை செய்யபப்டலாம் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா தீநுண்மிகளும் விரைவில் வலுவிழக்க கடவுள் நமக்குத் துணை இருக்கட்டும்.

   நீக்கு
 11. இன்றைய நல்ல செய்திகள் புத்தம் புதியவை. அனைத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. கரூர் உதயகுமார் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர்,

  ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

  மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை.

  மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

  பதிலளிநீக்கு
 14. தடுப்பூசி போடுவதால், வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது//
  நல்ல தகவல் .

  இங்கு பூஸ்டர் டோஸ் இரண்டு நாட்களுக்கு முன் போட்டேன்.

  தினமலர் செய்தி பயனுள்ள தகவல்.

  //ஸ்டாண்டர்டு அப் பெடலிங்' என்ற பிரிவில், என் மாணவர்களை பங்கு பெறச் செய்ய வேண்டும். அவர்கள் மூலம் நாட்டிற்கு பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை!//

  அவர் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.

  // கரூர், ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த, 'சங்கமம்' அமைப்பை சேர்ந்த உதயகுமார்://

  தன்னலம் இல்லா சேவையை பாராட்டி வாழ்த்துவோம்.


  பதிலளிநீக்கு
 15. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 16. சங்கமம் உதவிக் கரங்களுக்கு வாழ்த்துகள்.

  அலைச் சறுக்கு சதீஸ்குமார் நல்லமுயற்சி பலருக்கும் பயனுள்ளது.

  பதிலளிநீக்கு
 17. சங்கமம் உதவிக் கரங்களுக்கு வாழ்த்துகள்.

  அலை சறுக்கு சதீஸ்குமார் நல்ல முயற்சி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 18. மூன்றாம் அலை குறித்த செய்திகள் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன. நாம் தொடர்ந்து பாதுகாப்பாக இருந்து கொள்வதும் அவசியமாகிறது. சதீஷ்குமாரின் கனவுகள் நனவாகட்டும்! உதயகுமார் மற்றும் சங்கமம் குழுவினரின் சேவை போற்றுதலுக்குரியது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!