11.11.25

சிறுகதை - அந்த நேரம் அந்தி நேரம் - கீதா ரெங்கன்

 

அந்த சில நிமிடங்கள்

கீதா ரெங்கன்

 

கடிகாரத்தின் குயில் 5 முறை கூவியது.

வேலையில் மும்முரமாக இருந்த கவிதாவிற்கு அப்போதுதான் உரைத்தது,

'4.15 மணிக்குப் பள்ளி முடியும் நேரம். சரியாக 4.45 மணிக்கு அம்மா என்று அழைத்துக் கொண்டே வந்து நிற்பாளே குழந்தை.' என்று ரூமிற்குச் சென்று பார்த்தாள். இல்லை..

பள்ளி நிகழ்வுகளை, மெயிலிலோ மொபைலிலோ அனுப்பும் பெரிய பள்ளி எல்லாம் இல்லை. நடுத்தரப் பள்ளிதான்.

சென்னையின் போக்குவரத்து நெரிசல் அதிகமான பகுதி. இரண்டு வாரம் முன்புதான் தெருவைக் கடந்த போது, வேகமாக வந்து தெருவில் திரும்பிய ஒரு கார் குழந்தையைத் தட்டி விட்டுச் சென்று விட்டது. நல்லவேளை சிறிய காயங்களுடன் தப்பித்தாள்.

குழந்தை என்றதும், ஏதோ எல்.கே.ஜி படிக்கும் குழந்தை என்று நினைத்து விடாதீர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் பதின்மூன்று வயது மகள்  அதனால் என்ன?  எத்தனை வயதானாலும் அம்மாவிற்குக் குழந்தை, குழந்தை தானே!

ட்ராஃபிக் நெரிசலில் மாட்டிக் கொண்டிருப்பாளோ? சற்று நேரம் பார்க்கலாம் என்று தன் வேலையில் ஈடுபட்டாள். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணி 5.30 ஆனது இன்னும் குழந்தையைக் காணவில்லை.

மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. ஒருவேளை தோழிகளுடன் விளயாடிவிட்டு வருவாளோ? இல்லை ஏதாவது எக்ஸ்ட்ரா வகுப்புகள் இருக்குமோ?  விளையாட்டுப் பயிற்சி வகுப்பாக இருக்குமோ? எதுவாக இருந்தாலும் முன்பே சொல்லிவிடுவாள் இல்லை என்றால் மொபைலில் மெசேஜ் கொடுத்துவிடுவாள், காரணம் சொல்லி, தான் வர தாமதமாகும் என்று. அன்று அப்படியான மெசேஜும் இல்லாததால் மனதில் பயம் கவ்வியது.

மகளுக்கு மெசேஜ் கொடுத்துப் பார்க்கலாம் என்று வீட்டினுள் சென்று மெசேஜ் கொடுத்தாள். ஒரு டிக்தான் வந்தது. 'என்னடா இது சோதனை' என்று நினைத்த போது மொபைல் மூச்சை விடத் தயாராகி அறிவுறுத்தியது. சார்ஜில் போட்டாள். பேட்டரி வேறு மாற்ற வேண்டும் என்றும் நினைவுக்கு வந்தது.

மீண்டும் வீட்டின் வெளியே வந்தாள்.

என்னதான் மகளை தைரியமாக வளர்த்திருந்தாலும்.......ஒரு வேளை அன்று போல் சைக்கிளில் வரும்போது ஆக்சிடென்ட் ஆகி இருக்குமோ?  அடிபட்டு ரோட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் கிடக்கிறாளோ?' 

'ஐயோ கடவுளே! அப்படி இருக்கக் கூடாது'

ஒரு பக்கம் உதடுகள் கடவுளைப் பிரார்த்திக்க, மறு பக்கம் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

தூரத்தில் ஸ்கூல் யூனிஃபார்மில் இரு குழந்தைகள் சைக்கிளில் வருவது தெரிந்தது. பரபரத்த மனதின் தவிப்பு அடங்கும் நேரம்……….அந்த சைக்கிள் அருகில் வர வர…..மகளில்லை என்று தெரிந்ததும், மனதில் ஏமாற்றம்………மறுபடியும் தவிப்பு………

"ஏம்மா இப்படி அங்கயும் இங்கயும் நடந்துட்டு தெருவையே பாத்துட்டுருக்க? நானும் அப்போலருந்து பார்த்துட்டுருக்கேன்" - மாடி வீட்டில் வேலை செய்யும் பெண்மணி.

"இல்லைங்க, பள்ளிக்கூடம் முடிஞ்சு அரை மணி நேரத்துல குழந்தை கரெக்டா வந்துருவா, இன்னைக்கு காணலை அதான்..."

"அதும் சர்தான்.....இப்பலாம் வயசுப் பொண்ணுங்களை வெளிய அனுப்பிட்டு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கணுமா இருக்கு. காலம் கெட்டுக் கெடக்குது.....ம்..எதுக்கும் முண்டக்கணியம்மனுக்கு ஒரு ரூபா முடிச்சு வையி....."

என்று சொல்லிக் கொண்டே காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அப்பெண்மணி.

ஏற்கனவே கலங்கியிருந்த மனதில் ஒரு கல் விழுந்தது.

'வயசுப்பொண்ணு' என்ற வார்த்தை கவிதாவின் மனதைக் கூடுதலாகக் கலக்கியது. அந்த வார்த்தை மனதில் வேண்டாத கற்பனைக் குதிரையை ஓட்டியது குதிரையின் பாய்ச்சலை அடக்க முயன்றாள்.

"என்னங்க கவிதா இன்னும் ஷோபா வரலைன்னு பாக்கியம் சொல்லிச்சு. அவ ஃப்ரென்ட் வீட்டுக்கு ஃபோன் அடிச்சிக் கேட்டீங்களா?" மாடியில் இருக்கும் வீட்டு உரிமையாளர் பெண்மணி பால்கனியிலிருந்து குரல் கொடுத்தாள்.

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது ஃபோனை சார்ஜில் போட்டிருப்பது. ஒருவேளை மெசேஜ் வந்திருக்குமோ என்று உள்ளே சென்று பார்த்தாள். வந்திருக்கவில்லை. இப்போது இரண்டு டிக் வந்திருந்தது ஆனால் மகள் மெசேஜைப் பார்த்திருக்கவில்லை. குழப்பமாக இருந்தது. மகளின் தோழியின் வீட்டிற்கு ஃபோன் அடிக்க தயக்கம். பழக்கம் இல்லை. மகளின் தோழிகளின் வீட்டோடு அவ்வளவாகப் பழக்கமில்லை. இன்னும் சற்று நேரம் பார்க்கலாம் என்றும் தோன்றியது. மீண்டும் வெளியில் வந்தாள்.

ரிங் டோன் சத்தம். 'என் ஃபோனா?' எந்த ரிங் டோன் கேட்டாலும் தன் ஃபோன் போலவே தோன்றும் ஒரு வித அரண்ட மனம்.

வெளியில் செல்வதற்காக வந்த பக்கத்துவீட்டுப் பெண்மணி கேட்டைத் தாண்டும் போது...

"பொண்ணு இன்னும் வரலை போல....இல்லைனா இதுக்குள்ள அவ  பசங்களோட தெருல விளையாட இறங்கிருப்பாளே"

தகவல் பரிமாற்றங்கள்.

"அதை ஏன் கேக்கறீங்க இப்படித்தான் போனவாரம் எங்க அக்கா வீட்டுப் பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு ஸ்கூல் போனவ வரவே இல்லை பாத்தா யாரோ அவளை..........கலிகாலம் என்னத்த சொல்ல."

போகிற போக்கில் மிகப் பெரிய கல்லை எறிந்துவிட்டுப் போனாள்.

வாசற்படிகளில் அமர்ந்து தலையைக் கவிழ்த்துக் கொண்டுவிட்டாள். 'இத்தனை அதைரியமாக எப்போது ஆனேன்' என்று பல கேள்விகள் அவளைக் குடைந்தன.

ரிங் டோன் கேட்பது போல் தோன்றியது. பிரமையோ? காட்சிகள் ஓடின. ஹாஸ்பிடலுக்கு ஓடுகிறாள். ஹாஸ்பிட்டலில்.  நர்சுகள், அங்குமிங்கும் வேக வேகமாக நடக்கின்றார்கள்.....குழந்தைக்கு என்னாச்சு? .....ஷோபாவோட அம்மா வந்திருக்காங்களா என்ற குரல்....ஓ நோ......காட்சி மாறியது....ஃபோன் வருகிறது......யாரோ பேசுகிறார்கள்....மகளை அவன்....மகளின் அழுகைச் சத்தம்.....ஓ நோ நோ.....டக்கென்று தலை சுற்றுவது போலிருந்தது. மூச்சிரைத்தது. மெதுவாக யதார்த்தத்திற்கு வந்தாள்.

'ச்சே என்ன மாதிரியான காட்சிகள்! சில நிமிடங்களில்....'

ஃபோன் அடித்துக் கொண்டிருந்தது. 'ஓ! இதுதான் அப்படி மனதில் காட்சிகளை ஓட விட்டது போல' பயந்து கொண்டே ஓடிச் சென்று ஃபோனை எடுத்தாள்,  

ஹலோ!..............

ஹலோ!  நல்லசிவமா?.........

"கெட்டசிவம்"

கோபத்துடன் கட் செய்தாள். அயற்சியில் ஃபோனை வைத்துவிட்டுத் திரும்பும் சமயம்,

"அம்மா." என்ற மகளின் குரல். சந்தோஷம் ஒரு புறம் கோபம் மறுபுறம்.

கோபமும் வருத்தமும் கலந்த உணர்வுகளுன் மகளைக் கட்டிக் கொண்டாள். கண்ணில் நீர் துளிர்த்தது. துடைத்துக் கொண்டாள்.

"ஸாரிம்மா நான் காலைல சொல்ல மறந்துட்டேன்…இன்னிக்கு லேட்டாகும்னு. இன்னிக்கு கேம்ஸ்ல, ரிலே டீமுக்கு செலெக்ஷன் மா……..அதான் லேட்டு”.

"அதெல்லாம் ஓகே அப்புறம் ஏன் மெசேஜ் கூடக் கொடுக்கலை? என் மெசேஜையும் பார்க்கலை?"

“என்னம்மா, ஃபோனை கூடப் பார்க்க முடியலை. பேக்குள்ளேயேதான் இருந்துச்சு. க்ளாஸ் முடியறதுக்கு முன்னவே க்ரவுண்டுக்கு வரச் சொல்லிட்டாங்க. என்ன இப்படிப் பார்க்கற…….நான் என்ன சின்னக் குழந்தையா? கேர்ப்ஃபுல்லாதான் வருவேன்மா."

அந்த பதிலில் கவிதாவிற்கு மன தைரியம் வந்தாலும், அந்த சில நிமிடங்களில் தமிழ் படங்களில் வருவது போல வேக வேகமாகக் காட்சிகள் மனத்திரையில் விரிந்ததே. மொபைல் ரிங்டோன் கேட்டதும் என்னென்ன விபரீதமான எண்ணங்கள்'

"கொஞ்ச நேரத்துல மனசு பதறிடுச்சுடி"

மனம் கலங்கியிருக்கும் போது அக்கம் பக்கத்திலிருந்து வீசப்படும் கற்கள் கலங்கிய மனதைக் குழப்பிக் குட்டையாக்கிவிடுகிறது.

"ஏம்மா மனசை குரங்கு மாதிரி தாவ விடற? எனக்கு சொல்ற அட்வைஸ் எல்லாம் உனக்கு அப்ளை பண்ண மாட்ட போல" சொல்லிக் கொண்டே யூனிஃபார்மை மாற்றினாள்.

"ஆஞ்சனேயருக்கே சீதாதேவிய தேடினப்ப மனசு சஞ்சலப்பட்டு வேண்டாதது எல்லாம் மனசுல வரலையா? அவருக்கே அப்படினா நாமெல்லாம் எந்த மாத்திரம்?"

"உன் புராணம் எல்லாம் அப்புறம் வைச்சுக்க. இப்ப எனக்கு பூஸ்ட் கொடு. பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி. நோ, அவர் எனர்ஜி"

'ச்சே கொஞ்ச நேரம் முன்ன மனசு எப்படி எல்லாம் போச்சு. மனசு ஒரு பிசாசுதான்' என்று தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள் கவிதா. 

8 கருத்துகள்:

  1. பெண்ணைப் பெற்றவர்களுக்கும் பையன் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் இந்தப் பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

    அந்த உணர்வை கதையில் கொண்டு வந்துவிட்டார் கீதா ரங்கன்

    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. கீதா மெதுவாக வந்து பதிலளிப்பார்.

      நீக்கு
  2. கீதா ரங்கன் எழுதிய கதை என்றதும் தைரியமாக மொபைலில் படிக்க ஆரம்பித்துவிட்டோமே முடியுமா எனத் தோன்றியது. கதைக் கருவை கடத்தல், போலீஸ் என்றெல்லாம் நீட்டி நெடுங்கதை ஆக்கிடுவாரோ என நினைத்தேன்.

    சுருக்கமாக அதே சமயம் நிறைவாகக் கொண்டுசென்றுள்ளார்

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் கதைத் தலைப்பு நினைவுபடுத்தும் பாடலின் தீமே வேறு அல்லவா?

    பதிலளிநீக்கு
  4. ​ஹா இன்று கீதா ரங்கன் கதை. நல்ல தங்கை. குறை கூற முடியுமா? நல்ல 'கதை'. ஆனால் எ பி சன்மானம்/பரிசு தருவதில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC.. கீதா சார்பில் வரவேற்கிறோம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!