8.11.25

பள்ளி மாணவர் செயலி மற்றும் நான் படிச்ச கதை

 

கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்கள் மிதக்கும் தளங்களுக்கு தொழில்நுட்பம் உருவாக்கம்

சென்னை: கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் மிதக்கும் தளங்கள் அமைப்பதற்கான, கட்டுமான தொழில்நுட்பத்தை, சென்னையில் செயல்படும், மத்திய அரசின் எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது.  உலகம் முழுதும், சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  மத்திய அரசு முடிவு நம் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய அந்த வகை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, மாநில மின் வாரியங்கள், தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.  நம் நாட்டில், நிலத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கடலில் காற்றாலை மின் நிலையங்கள் இருப்பது போல், நம் நாட்டிலும் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான சாதகமான சூழல், தமிழகம் மற்றும் குஜராத்தில் உள்ளது. இரு மாநிலங்களிலும் தனியார் நிறுவனங்கள், அந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.  தற்போது, கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் மிதக்கும் தளங்கள் அமைப்பதற்கான கட்டுமான தொழில்நுட்பத்தை, மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சிலின் கீழ் இயங்கும், எஸ்.இ.ஆர்.சி., உருவாக்கி உள்ளது.  
இது குறித்து, அதன் இயக்குநர் ஆனந்தவள்ளி கூறியதாவது: சூரியசக்தி மின் நிலையம் அமைக்க நிலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

சவால் :  கடல் காற்று, கடல் அலை ஆகியவற்றை சமாளித்து, கடலில் கட்டுமானம் அமைப்பது சவால் நிறைந்தது. இதற்கான தொழில்நுட்பம் வெளி நாடுகளில் தான் உள்ளது.  நம் நாட்டில், கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, தனித்துவமான மிதக்கும் தளங்கள் அமைப்பதற்கான, கட்டமைப்பு தொழில்நுட்பத்தை உருவாக்க, இந்த ஆராய்ச்சி துவங்கியது.  எஸ்.இ.ஆர்.சி., விஞ்ஞானிகள், தற்போது எடை குறைவான, அதேசமயம் அடர்த்தி நிறைந்த, உறுதியான இழை வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட கலப்பு பொருட்களை பயன்படுத்தி, மிதக்கும் தளங்களை உருவாக்கி உள்ளனர். விரைவில் சோதனை ரீதியாக, கடலில் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

===================================================================================================


==============================================================================================

விமானம் செங்குத்தாக புறப்பட, தரையிறங்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

சென்னை: விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.  தற்போதைய சூழ்நிலையில், விமானங்கள் தரை இறங்குவதற்கு பல ஆயிரம் அடி நீளம் கொண்ட நீண்ட ஓடுபாதைகள் தேவையாக உள்ளன. ஓடுபாதை நீளம் அதிகமாக இருந்தால் மட்டுமே, பெரிய அளவிலான விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் முடியும். இதனால் இடப் பற்றாக்குறையுள்ள நகரங்களில் விமான நிலையம் அமைப்பது பெரும் சவாலாக இருக்கிறது.  இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதை உருவாக்கிய சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா, ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் ஆகியோர் கூறியதாவது:  நாங்கள் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விமானம் நின்ற இடத்தில் இருந்தே செங்குத்தாக மேலே எழும்பி பறக்க முடியும். முன்னோக்கி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இறங்கும்போதும், அதுபோலவே செங்குத்தாக இறங்கி விட முடியும்.  விமானம் தரையிறங்க நீண்ட ஓடுபாதைகள் தேவையில்லை. பெரிய விமான நிலையங்களை அமைக்க முடியாத கரடுமுரடான நிலப்பரப்புகளில் கூட இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.  பல்வேறு இடங்களுக்கு விமான போக்குவரத்து சேவை சென்று அடைய முடியும். இந்த தொழில்நுட்பம் ராணுவ போக்குவரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஹைப்ரிட் ராக்கெட் உந்துவிசையைப் பயன்படுத்தி, விமானத்தை செங்குத்தாக உயரே செலுத்தவும், மென்மையாக தரையிறக்கவும் முடியும். தொலைதூரப் பகுதிகளுக்கும் விமானங்கள் சென்று வருவதில் புரட்சியை ஏற்படுத்த முடியும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக சோதனை செய்து காட்டியுள்ளனர். அவர்களது ஆராய்சிக்கட்டுரை, விமானப் போக்குவரத்து தொடர்பான உலகின் முன்னணி ஆய்விதழிலும் வெளியாகி உள்ளது.

================================================================================================

புத்தக விமர்சனம்  பகுதிக்கு டாக்டர்.ஜெ.பாஸ்கரன் அவர்கள் எழுதி,புஸ்தகா வெளியிட்டிருக்கும் 'பிருந்தாவன துளசி' என்னும் நூலை விமர்சித்து எழுதியிருக்கும் புத்தகத்தை அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறேன். 

நன்றி,

பானுமதி வெங்கடேஸ்வரன்


நான் படிச்ச புத்தகம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


பிருந்தாவன துளசி - Dr.Jபாஸ்கரன்  

புஸ்தகா பப்ளிகேஷன்ஸ் 

சமீபத்தில் ரசித்து படித்த புத்தகம் டாக்டர்.பாஸ்கரன் அவர்கள் எழுதிய ‘பிருந்தாவன துளசி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு. கலைமகள், அமுதசுரபி,லேடீஸ் ஸ்பெஷல் போன்ற பத்திரிகைகளிலும், முகநூலிலும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இன்நூல்.


சுவாரஸ்யமான, ஆழமான,நுட்பமான கட்டுரைகள். பிரபலமான மனிதர்களை அவர் சந்தித்தது, அவரது எண்ணங்கள், அனுபவங்கள் இப்படி பலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் அவரது கவனிப்பு, தீவிரம் போன்றவற்றை நாம் உணர முடிகிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமியைைப் பற்றிய முதல் கட்டுரையே பின்வரும் கட்டுரைகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதற்கு கட்டியம் கூறுவது போல அமைந்து விட்டது. காஞ்சி மஹா பெரியவர் எம்.எஸ்சை பிருந்தாவன துளஸி என்பாராம்.வீணை தனம்மாள் மூலம் அறிமுகமான பிருந்தா, முக்தா, பாலசரஸ்வதயுடனான எம்.எஸ்சின் நட்பு கடைசி வரை தொடர்ந்தது என்னும் தெரியாத தகவல்களை அறிந்து கொள்கிறோம். இப்படி எல்லா கட்டுரையிலும் இதுவரை நாம் அறியாத ஒருவிஷயம் இருக்கிறது. சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் பொழுது அகப்படும் முந்திரியைப் போல அவை சுவைக்கின்றன.

கரிசல் காட்டு ராஜ் நாராயணனை சந்தித்த கட்டுரையில் அவர் கூறினாராம், நாதஸ்வரம், நாகஸ்வரம் இரண்டுமே தவறு. நாயனம் என்பதே சரி” என்று. அது மட்டுமல்ல காரக்குறிச்சி அருணாசலம் நன்றாகப் பாடுவாராம்.

கேன்சர் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர்.சாந்தா அவர்கள் அறிமுகப்படுத்திய நடைமுறைகளினால் இன்று உலகளாவிய் Tumor Registry அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்டில் இருக்கிறதாம்.

அசோகமித்திரன் எழுத்துக்களைப் பற்றி கூறும்பொழுது,//எதையும் மிகைப்படுத்தியோ, அதிக ஆரவார அலங்காரங்களுடனோ எழுதுவது அவர் பாணியல்ல. அவர் எழுத்துக்களும் அவரைப் போலவே எளிமையானவை. அடிமட்ட மத்தியத்தர மனிதர்கள்,அவர்களது ஆசைகள், துயரங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் இவைகளையே பெரும்பாலான கதைகளில் எளிமையோடும், மெல்லிய நகைச்சுவையோடும் சொல்லியிருப்பார். அனால் அவரது எளிமை சிறிது சிக்கலானதுை// அசோகமித்திரனை எவ்வளவு ஆழமாக வாசித்திருக்கிறார் என்று வியக்கிறோம். எளிமை சிக்கலானது என்னும் சொல்லாடலை மிகவும் ரசித்தேன்.

கப்பலோட்டிய தமிழரைப் பற்றி நாம் அறியாத எத்தனை தவல்கள்! அதைப்போல தி.ஜானகிராமனின் கதைகளில் அவர் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகளின் பட்டியலே தந்திருக்கிறார்.

எல்லாமே சீரியஸ் கட்டுரைகள் என்று நினைத்துவிட வேண்டாம். ஜனரஞ்சகமான , நகைக்சுவை(ரிங்க் டோன், மருத்துவத்தில் சில வினோதங்கள்) இழையோடும் கட்டுரைகளும் இருக்கின்றன. ‘மாம்பழமாம் மாம்பழம’ கட்டுரையில் அந்தக் காலத்தில் மேட்லி சப்வே கட்டப்படும் முன், தள்ளு வண்டியில் வைத்துக் கொண்டு, எசப்பாட்டு பாடுவது போல், “ஆ! ரூபாய்க்கு ரெண்டு” என்று ஒருவன் கூற, மற்றவன், “ரெண்டு பழம் ஒரு ரூபாய்” என்று மாறி மாறி கூவி விற்றதை வர்ணித்திருக்கும் அழகை ரசிக்காமல் இருக்க முடியது.

சிதம்பரம் கோவில் தேர் திருவிழா பற்றி அவர் வர்ணித்திருக்கும் விதத்தில் நாம் சிதம்பரத்திற்கே சென்று விடுகிறோம். சுவாமி புறப்பாடு, தேர் அலங்காரம் மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் வீதிகளில் இருக்கும் கடைகள் எல்லா​ம் கண்முன் வருகின்றன. அப்போது கிடைத்த தேர்க்காசு ஆஹா!

முதல் முதலாக கட்டுரையில் முதல் காதல் என்று தேவிகா முதல் ஏழெட்டு பெண்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெண் மீது வருவதுதானே முதல் காதலாக இருக்க முடியும்?)


அரசியல் நீங்கலாக ஆன்மீகம், விஞ்ஞானம், இசை என்று பல தலைப்புகளில் ரசமான கட்டுரைகள். பலவிதமான நிறத்திலும், மணத்திலும் இருக்கும் மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலையினைப் போன்ற அருமையான புத்தகம்!

3 கருத்துகள்:

  1. ​பாசிட்டிவ் செய்திகள் யாவும் தடம் மாறி நாடு முன்னேற வழி செய்யும் திட்டங்களாக உள்ளது நன்று. காற்றாலை, காட்டு யானை, vtol எனப்படும் தொழில் நுட்பம் செயல் போன்றவை உண்மையில் பிரயோஜனம் உள்ள கண்டுபிடிப்புகள்.

    புஸ்தக வாசிப்பும், விமரிசனமும் நன்றாக உள்ளன. office note போன்று சுருக்கமாக விவரங்களைத் தருகின்றன.

    இன்றைய சனி விரத சனி ஆகிவிட்டது. சுருக்கமோ சுருக்கம்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC  சார்...சனிக்கிழமை எப்போதுமே சோதனையான நாள்!!

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!