நேற்று OTT படங்கள் பகிர்வது பற்றிய கேள்வியும் அதற்கு பதிலும் பார்த்தேன். நான் அபப்டி படங்கள் லிஸ்ட் பகிர்வதாக இல்லை. இரண்டு காரணங்கள். கீதா சொல்லி இருப்பது போல, பார்த்த படங்கள் பற்றி சொல்லத் தோன்றினால் முன்பு நானே சொல்லிக் கொண்டிருந்தேன்,. இப்போதெல்லாம் தோன்றுவதில்லை. இரண்டாவது காரணம் அவரவர் ரசனை வேறு. நான் ரசித்ததை நீங்கள் ரசிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. நாம் சொல்வதால், அப்படி ஒரு படம் இருக்கிறது என்று மற்றவர்களுக்கும் தெரியவரும்தான். ஆனாலும் வேண்டாம் என்றே நெடுநாட்களாக விட்டு விட்டேன்!
உண்மையில் இன்று நான் OTT படங்கள் பற்றிதான் எழுதுவதற்கு இருந்தேன். யாரோ கேள்வித்தாள் லீக் செய்தது போல நேற்று இது சம்பந்தமாய் கேள்வி! ஆனால் இனி அதற்கும், இன்று நான் எழுதப்போவதற்கும் தொடர்பிருக்காது. பொதுவான அலசலாய்த்தான் நான் தயார் செய்திருந்தேன்!
படங்கள் பார்பபது என்பதே ஒரு பெரிய விஷயமாக இருந்த காலம் இருந்தது. வருடத்துக்கு இருபது முப்பது படங்கள் ரிலீஸ் என்றால் அதில் பத்து படங்கள் பார்த்தால் அதிசயம். பத்து கூட இல்லை நான்கு அல்லது ஐந்து. அதுவும் பின்னாட்களில்.
முதலில் அப்பா அழைத்துச் செல்லும் நிலையில் இருந்தபோது ஒன்றோ இரண்டோ...அதுவே ஒரு திருவிழா போல இருக்கும். 'நாங்க சினிமாவுக்கு போறோம்.. நாங்கபா சினிமாவுக்கு போறோம்'னு தெரு முழுக்க விளம்பரப்படுத்துவோம்!
முதலில் சில ஸ்பெஷல் படங்கள் நமக்கு பார்க்க வேண்டும் என்று தோன்றவேண்டும். அப்புறம் அதற்கு நேரம்பார்த்து வீட்டில் அடிபோட வேண்டும். த்ரூ ப்ராப்பர் சேனல்தான். முதலில் அம்மா மூலம். அப்புறம் மெல்ல மெல்ல அப்பாவிடம் தயங்கித் தயங்கி... சமயங்களில் 'அம்மா வழி'யே வெற்றியாகி விடும். ஆரம்ப காலங்களில் அம்மாவும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். தரை டிக்கெட்தான்.
வசந்தமாளிகை வெளியானபோது அப்பா என்னையும் பாட்டியையும் - அப்பம்மா- ராஜா கலையரங்கத்தினுள் டிக்கெட் வாங்கி உள்ளே அனுப்பி விட்டு, வீடு சென்று, படம் முடியும் வேளை திரும்ப வந்து, எங்களை அழைத்துச் சென்றார். தியேட்டரிலிருந்து பஸ்ஸ்டான்ட் போகும் வழியிலிருக்கும் டீக்கடைகளில் எல்லாம் வசந்தமாளிகை பாடல்கள் பிட்டுக்கு கொண்டிருந்தார்கள்.
திருவாரூர் அருகே பெரும்பண்ணையூர் என்னும் கிராமத்தில் இருந்த பாட்டி 'தஞ்சை நகரு'க்கு வரும்போதெல்லாம் லிஸ்ட் போட்டு படம் பார்ப்பார். அப்படி பாட்டியும் நானும் மட்டும் பார்த்த சில படங்களில் எனக்கு நினைவிருக்கும் ஒரு படத்தின் பெயர் 'ஓடி விளையாடு தாத்தா'!
மாட்டுக்காரவேலன் தஞ்சை ராஜேந்திரா டெண்ட்டு கொட்டகையில் போட்ட நேரம், என்னுடைய அண்ணன் 'படம் நன்றாய் இருக்கும், அப்பா கிட்ட கேளு' என்று என்னை ஏற்றிவிட்டு அப்பாவிடம் அனுமதி கேட்கச்சொல்ல, நான் கேட்டு மறுக்கப்பட்டு விட்டது. அண்ணன் 'நீ அப்பா செல்லம். நீ கேட்டா உடனே சரின்னு சொல்லிடுவார்' என்று சொன்னதை வெள்ளந்தியாக நம்பியதால் வந்தவிளைவு. அப்புறமும் 'விடாம கேளு' என்று அண்ணன் சொன்னதைக் கேட்டு 'மாட்டுக்காரவேலன் மாட்டுக்கார வேலன்' என்று நான் விடாமல் புலம்பலாய் சொல்லிக்கொண்டே இருக்க, ஊரிலிருந்து வந்திருந்த என் ரகுமாமா, நான் 'மாட்டுக்காரவேலன்' சொல்லச் சொல்ல அவர் 'ஆட்டுக்கார சுப்பன் ஆட்டுக்கார சுப்பன்' என்று பதில் கொடுத்தவர், அப்புறம் "பாலு இவங்க அனத்தல் தாங்கலை.. இந்தாடா காசு... போய் படம் பாருங்க" என்று அனுப்பி விட்டார். அவர் வந்திருந்த காரணத்தினால்தான் நான் அன்று அப்பாவிடம் அடிபடாமல் தப்பினேன். அதே தைரியத்தினால்தான் அனத்தவும் அனத்தினேன்!
இப்படி அபூர்வமாயிருந்த சினிமா தஞ்சை ஹவுசிங் யூனிட் வந்த பிறகு குடியிருப்பிலேயே மாதம் ஒரு படம் என்று போட்டதில் சற்று இளைப்பாறினோம். சமயங்களில் சில மாதங்களில் இரண்டு படங்கள் கூட போடுவார்கள்.
அடுத்து மதுரை வந்ததும் இதே போல அரசு ஊழியர் குடியிருப்பு ரேஸ் கோர்ஸ் காலனி, டி ஆர் ஓ காலனி போன்ற இடங்களில் இதே மாதிரி படம் பார்க்க முடிந்ததோடு, ரிஸர்வ்லைனில் வாராவாரம் அல்லது அடிக்கடி படம் போட்டார்கள். நாங்களும் எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தவற்றை, விரும்பியவற்றை பார்த்துத் தீர்த்தோம். மதுரையில் அப்படி ஒருமுறை உத்தமபுத்திரன் பார்த்து விட்டு நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த என்னை ஆள் வைத்து அடிப்பதற்கு - சிரிக்காதீர்கள் - ஒரு ஆள் காத்திருந்த கதை முன்பே சொல்லி விட்டேனோ..
நான் இரண்டு மூன்று முறை பாடசாலைக்கு கட் அடித்துவிட்டு படம் பார்த்து விட்டு வந்த சமயங்களில் என் அம்மா அதைச் சரியாய் கண்டு பிடித்தது ஒரு ஆச்சர்யம். தங்கசுரங்கம், பாட்டும் பரதமும், அஜ்நபி ஆகிய படங்கள் அவை, வருத்தத்துடன் பேசுவாள். கடிந்து கொண்டதில்லை.
இப்போதெல்லாம் OTT யில் ஏகப்பட்ட படங்கள். வர்ஜ்யாவர்ஜமில்லாமல் ஏதேதோ படங்கள், தொடர்கள்... அதேபோல் இப்போதெல்லாம் பார்த்த படங்களின் பெயர்களை கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. நேற்று ஒரு படம் பார்த்தோமே, என்ன படம், என்ன கதை என்று யோசிப்பதுண்டு. யாராவது 'இரண்டு நாட்கள் முன்பு ஒரு இங்கிலிஷ் படம் பார்த்தீர்கள்? என்ன பெயர்?' என்று கேட்டால் சட்டென நினைவுக்கு வராது. பார்த்த படத்தையே சில மாதங்கள் கழித்து மறுபடி பார்க்க ஆரம்பித்து பின்னர் ஞாபகம் வந்து நிறுத்தி இருக்கிறேன். நான் விரும்பிப் பார்ப்பது சஸ்பென்ஸ், த்ரில்லர் வகையறா. ஹாரர் அவ்வளவு விருப்பம் கிடையாது. கோர்ட் காட்சிகள் இருந்தால் கொண்டாட்டம். ஆனால் வசனங்கள் முழுதும் புரிய வேண்டும். ஃபேமிலி டிராமா போன்றவை வேப்பங்காயாக இருக்கின்றன.
எந்தப் படமாக இருந்தாலும் OTT என்பதற்கு ஏற்ப நான் ஓட்டி ஓட்டிதான் பார்ப்பேன். சென்சார் சர்டிபிகேட் தொடங்கும்போதே ஓட்டத் தொங்கி விடுவேன். கதை ஆரம்பிக்கும் இடத்துக்கு வந்து விடுவேன். பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகளும் அவ்வண்ணமே! அதே போல அனாவசியமாக ஆர்ட் பிலிம் போல நடபபது கால் மணி, நிற்பது பத்து நிமிடம் என்று இழுத்தாலும் பத்து பத்து நொடிகளாக ஓட்டிவிடுவேன்! அல்லது நன்றாகவே பாஸ்ட் செய்து விடுவேன். இதோ நேற்று கூட A Woman In Cabin 10 மற்றும் பிளாக் மெயில் என்று இரண்டு படம் பார்த்தேன். வியாழனுக்கு என்ன எழுதுவது என்று யோசித்து ஒன்றும் தோன்றாததால் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதையே எழுதியும் விட்டேன் !
=================================================================================================
தமிழ்வாணன் 1
குறிப்பிடத்தக்க இதழியலாளரும், தமிழில் படு சுவாரஸ்யமான துப்பறியும் நாவல்கள் படைத்து பல தரப்பினரையும் கவர்ந்த தமிழ்வாணன் (Tamilvanan) நினைவு தினம் இன்று (நவம்பர் 10)
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார். இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு ‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார். என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம் வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார். எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும், எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது. ‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர் வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.
ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’ என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார். இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம். இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.
குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’ வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தார். ‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படித்தனர். இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.
கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா, அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார். அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.
மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார். 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார். பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர். கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார். வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை பார்ப்பதில் வல்லவர்.
‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய 2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார். ‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதி, தயாரித்து வெளியிட்டார்.
தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை. ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும் தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு வந்துவிடுமாம்.
இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும் மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால் 56-வது வயதில் (1977) இதே நாளில்தான் காலமானார்.
- ஃபேஸ்புக் -
===================================================================================
கூரைக்கூச்சல் - 05
"சேட்டை" வேணுஜி
ஒரு தொழிற்சாலையில் காணப்படும் இயந்திரங்கள் ஒவ்வொன்றும் முதல்முறை பார்ப்பவர்களுக்கு அசாத்தியமான ஆச்சரியத்தை ஏற்படுத்தும். டி.வி.எஸ் தொழிற்சாலையில் எனக்கு அதிக வியப்பை ஏற்படுத்திய ஒரு பிரம்மாண்டமான இயந்திரம் உண்டென்றால், அது ஒரு கண்டெயினர் வடிவில் இருந்த தானியங்கி வர்ணமடிக்கும் இயந்திரம். ஒரு கன்வேயர் பெல்ட்டில் டிவிஎஸ்-50 யின் மட்கார்டுகள், ஃபோர்க்குகள் என்று கொக்கியில் மாட்டிவிட்டு சுவிட்சைத் தட்டினால், இந்தப் புறம் நுழைந்து அந்தப்புறம் பளபளக்கும் வண்ணத்துடன் வெளியேறும். எனது ரஃப் அண்ட் ரா ஸ்டோர்ஸிலிருந்து குவாலிட்டி டிபார்ட்மெண்ட்டுக்குச் செல்லுகிற வழியில் அந்த இயந்திரம் இருந்த காரணத்தால், நாளொன்றுக்கு ஒரு முறையாவது அந்த இயந்திரத்தைக் கடந்தே செல்ல வேண்டியிருந்தது.
இப்படி இருக்கையில் ஓர் நாள்..
இப்படி இருக்கையில் ஓர் நாள்..
பெயிண்டிங் பிளாண்ட்-ல் சிற்சில மராமத்துப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஊழியர், ஒரு 'பாரலை'க் (Barrel) கவிழ்த்துப் போட்டு பெயிண்டிங் பிளாண்ட் அருகே மேலே வெல்டிங் செய்து கொண்டிருந்தார். அது பாதுகாப்பு விதிமுறைகளுக்குப் புறம்பானது என பின்னர் அறிந்து கொண்டேன்.
பாதுகாப்புக்கென்றே ஒரு துறை இருந்தது. ஒரு பொறியாளர், வாலிபர், தினசரி தொழிற்சாலையை பலதடவை சுற்றிச் சுற்றி வருவார். அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அறிகுறியாக ஒரு சிறு தவறு கண்பட்டாலும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கண்டிப்புடன் சொல்வார். உதாரணத்துக்கு எங்கள் ஸ்டோரில் பாலட்டுகளை ஆறு அடுக்குகளுக்கு மேல் அடுக்கக்கூடாது என்பது நெறி. சில சமயங்களில் அதிகப்படியான பொருட்கள் வரத்து காரணமாக, ஒன்றிரெண்டு வரிசைகளில் ஏழு அடுக்குகள் வரை உயர்த்த நேரிடும்போது, அந்தப் பொறியாளர் எங்களை அழைத்து, ‘உடனடியாக அதைக் கீழே இறக்குங்கள்,’ என்று சொல்வதுடன், அவர் கட்டளைப்படி நாங்கள் செய்யும்வரை அங்கேயே இருந்து, வேலை முடிந்த பிறகே அங்கிருந்து நகர்வார். பொதுவாகவே, டிவிஎஸ் நிறுவனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் மிகமிகக் கடினமானவை; கடைபிடித்தே தீர வேண்டியவை; மீறினால், கடுமையான நடவடிக்கைகளுக்கு இடமளிப்பவை.
எனவே, ஒரு பாரலைக் கவிழ்த்துப்போட்டு, அதன் மேல் ஏறி நின்று, தலைக்கு மேல் வெல்டிங் அடித்துக் கொண்டிருந்தவருக்கு, துரதிருஷ்டவசமாக அவர் செய்துகொண்டிருந்தது பாதுகாப்பு விதிமீறல் என்பது தெரிந்திருக்கவில்லை அன்றி, தெரிந்தும் அலட்சியம் செய்திருக்க வேண்டும். அதுவும் அவர் நின்று கொண்டிருந்த காலி பாரல், முன்பு கிரீஸ்(Grease) வைத்திருந்த பாரல். அவர் வெல்டிங் செய்யச் செய்ய, நெருப்புப் பொறிகள் சில கீழே விழுந்து பாரலின் மேற்பகுதியில் சின்னஞ்சிறிய துளைகளைப் போட்டுக் கொண்டிருந்தன. அந்தத் துளைகள் வழியாக பாரலின் உட்புறத்தில் விழுந்த நெருப்புப்பொறிகள் காரணமாக, பாரலுக்குள் புகை உருவாகி, அழுத்தம் ஏற்பட்டதையும் அவர் அறிந்திருக்கவில்லை.
தீபாவளி சமயத்தில், பட்டாசுகள் மீது கொட்டாங்கச்சி அல்லது அட்டை டப்பாக்களைக் கவிழ்த்து பற்றவைத்தால், பட்டாசு வெடிக்கையில் அந்தக் கொட்டாங்கச்சி (அ) அட்டை டப்பா வெடித்துச் சிதறி உயரே பறப்பதைப் பார்த்திருக்கிறோம். அதே போல, உள்ளே விழுந்து கொண்டிருந்த நெருப்புப் பொறிகள், மிச்சம்மீதமிருந்த கிரீஸை உசுப்பிவிட, ஒரு பெருஞ்சத்தத்துடன் பாரல் வெடித்து, சுக்கு நூறாகச் சிதற, அதன்மேல் நின்று வெல்டிங் செய்து கொண்டிருந்த நபர், ஏறத்தாழ ஒரு இருபது அடிகள் தூக்கி எறியப்பட்டு, மேற்கூரையில் மோதி, ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்; பிணமாக!
ஒரு தொழிற்சாலை விபத்தை நேரடியாக நான் பார்த்தது அன்றுதான். பென்சில் சீவும்போது பிளேடு பட்டு ரத்தம் வந்தாலே அலறுகிற எனக்கு, அந்தக் காட்சி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தட்டுத்தடுமாறி என் இருக்கைக்கு வந்த நான், திடீரென்று கண்விழித்துப் பார்த்தபோது, மருத்துவ மையத்தில் படுத்திருந்தேன்.
விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் நான் மயக்கம்போட்டு விழுந்திருக்கிறேன் என்பதை எனக்குச் சொன்னார்கள். இப்போதுகூட, அந்த விபத்தைப் பற்றி எழுதுகையில் எனக்கு அந்தக் காட்சி அப்படியே ஞாபகத்துக்கு வந்து மனம் பதைபதைக்கிறது. ஆனால், அந்த தாக்கத்துடன் தொடர்ந்து நான் பணிபுரிய வேண்டியிருந்தது; அதைத் தொடர்ந்த ஒவ்வொரு நாளும். குறிப்பாக, இரவு ஷிஃப்டுகளில், அதைப் பார்க்காமல் இருக்க மெனக்கெடுவேன். அப்படியிருந்தும் பார்க்க நேரிட்டு விட்டால், வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு மன உளைச்சல் நேரிடும். ஆனால், எவ்வித மன உளைச்சலும் எனது பணிக்கு இடையூறு செய்யாதவண்ணம், அதிக கவனத்துடன் வேலை செய்துவந்தேன்; தவறுகள் ஏற்படாமல் தவிர்த்து வந்தேன்.
ஆனால், என் சுபாவத்தில் சிற்சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதை சுற்றியிருந்தவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள். இயல்பைக் காட்டிலும் அதிகமான கோபம் ஏற்படத் தொடங்கியிருப்பதாக பலர் அங்கலாய்த்தார்கள்.
தொழிற்சாலையில் சில மாற்றங்கள் செய்வதற்காக, டி.வி.எஸ்-50யின் வேகத்தைப் பரிசோதிக்கிற இயந்திரத்தை எங்கள் ஸ்டோருக்கு அருகில் மாற்றி வைத்தார்கள். தற்போது சர்வசாதாரணமாக உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படுகிற ட்ரெட்-மில் போன்ற ஒரு அமைப்பில், நாளொன்றுக்கு 250 மோபெட்டுகளை ஏற்றி, ஆக்ஸிலேட்டர் அழுத்தி, வேகத்தைப் பரிசோதிப்பார்கள். காது அடைக்கிற அளவுக்கு சத்தமும், மூச்சை அடைக்கிற அளவுக்கு பெட்ரோல் புகையும் ஒன்றுசேர்ந்துகொள்ள பணிபுரிவது மிகவும் கடினமாகத் தொடங்கியது. இதன் காரணமோ என்னமோ, அடிக்கடி உடல் நலம் பாதிப்புக்குள்ளாகி, விடுப்பு எடுக்க நேர்ந்தது. மருத்துவ மையத்திலிருந்த டாக்டர் ஒரேயடியாக என் புகைபிடிக்கிற பழக்கத்தின் மீது பழிபோட்டு, பெயருக்கு மாத்திரைகளை எழுதிக்கொடுத்து அனுப்பி விடுவார்.
சரியாக, மூன்று வருடங்களை முடித்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்த தருணத்தில் மீண்டும் ஒரு நாள், தலைசுற்றல் ஏற்படவே, பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு நரம்பியல் நிபுணர்கள் பல சோதனைகளைச் செய்துவிட்டு, temporal lobe-ல் சிறு பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனது behavioural change காரணமாக, அங்கிருந்த ஒரு உளவியல் நிபுணருடன் ஆலோசனை கோரப்பட்டது. மாற்றி மாற்றி ஷிஃப்ட்டில் பணிபுரிந்தது, விபத்தைப் பார்த்த தாக்கம், ஒலி மற்றும் புகையினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வேலை அழுத்தம் காரணமாக, என் சுபாவம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்துகொண்ட அவர், கம்பனி டாக்டருக்கு ஒரு ரகசிய குறிப்பை அனுப்பினார்.
அதன்படி, இரவு ஷிஃப்ட்டில் பணிபுரிவதை நிறுத்தி, ஆறு மாதங்களுக்கு சரியான தூக்கம் வேண்டுமென்றும், அதற்குரிய மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பதாகவும் அவர் எழுதியிருந்ததை கம்பனி டாக்டரே என்னிடம் கூறினார். ஆனால்..
’உன் ஒருத்தனுக்கு நைட் ஷிஃப்ட் கிடையாது என்று சொல்ல முடியாது. அது கம்பனியின் வேலைத்திறனை பாதிக்கும். ஆகையால், இன்னும் ஒரு ஆறு மாதம் வேலை செய்து பார். திரும்பவும் இதே போல உடல்நலக் குறைவு ஏற்பட்டால், ராஜினாமா செய்துவிட்டுப் போ! எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால் தொடரலாம்.” என்று கூறினார்.
சந்திரசூடேஸ்வரரின் தரிசனமும், ராஜகணபதியுடனான சம்பாஷணையும் அதன்பிறகு நீண்ட நாள் நீடிக்கவில்லை. மூன்றாவது மாதமே, மீண்டும் உடல் நலம் குன்றவும், சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிவிட்டு, மறுநாள் ராமச்சந்திரன் சாரிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பித்தேன்.
அதன்படி, இரவு ஷிஃப்ட்டில் பணிபுரிவதை நிறுத்தி, ஆறு மாதங்களுக்கு சரியான தூக்கம் வேண்டுமென்றும், அதற்குரிய மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பதாகவும் அவர் எழுதியிருந்ததை கம்பனி டாக்டரே என்னிடம் கூறினார். ஆனால்..
’உன் ஒருத்தனுக்கு நைட் ஷிஃப்ட் கிடையாது என்று சொல்ல முடியாது. அது கம்பனியின் வேலைத்திறனை பாதிக்கும். ஆகையால், இன்னும் ஒரு ஆறு மாதம் வேலை செய்து பார். திரும்பவும் இதே போல உடல்நலக் குறைவு ஏற்பட்டால், ராஜினாமா செய்துவிட்டுப் போ! எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால் தொடரலாம்.” என்று கூறினார்.
சந்திரசூடேஸ்வரரின் தரிசனமும், ராஜகணபதியுடனான சம்பாஷணையும் அதன்பிறகு நீண்ட நாள் நீடிக்கவில்லை. மூன்றாவது மாதமே, மீண்டும் உடல் நலம் குன்றவும், சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிவிட்டு, மறுநாள் ராமச்சந்திரன் சாரிடம் எனது ராஜினாமாவை சமர்ப்பித்தேன்.
அனுபவங்களின் பொதிசுமந்தபடி ஒரு மாதம் கழித்து, ஓசூரிலிருந்து பஸ் பிடித்து நாகர்கோவிலுக்குக் கிளம்பியபோது, வலதுபக்கத்தில் செம்மாந்திருந்த மலையில் குடியிருந்த சந்திரசூடேஸ்வரருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஓசூர் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியும், எதிர்காலத்துக்கு ஒரு காற்புள்ளியும் வைத்தவாறு கடந்து சென்றேன்.
============================================================================
ரசிக்க இரண்டு படங்கள்... இணையத்திலிருந்து....
அந்த 'போஸி'லிருந்தே மூன்றாமவர் யாரென்று கண்டு பிடித்துவிட முடியும்!
===============================================================================================
கவிதை புதுசு...
தோட்டத்து மலர்களில்
எந்தப் பூ
எனக்கானது என்பதை
அறிவதில்
சிரமமேதும் இல்லை
எனக்கு.
பார்த்த உடனேயே வசீகரித்து
வா என்று அழைத்த
அந்தப் பூவைதான்
என் பூ
என்றறிந்தேன்.
பறிக்காமல் ரசித்திருக்க வேண்டுமோ
தோட்டத்துப் பூக்கள்
நமக்கானதா தோட்டத்துக்கானதா?
====================================================================================================
தமிழ்வாணன் 2
தமிழ்வாணன் பற்றி சாவி 87 ஆம் வருடம்
திரு. தி. ஜானகிராமன் மூலம்தான் எனக்குத் தமிழ்வாணனுடன் பழக்கம் ஏற்பட்டது. எங்களோடு திரு. கு. அழகிரிசாமியும் சேர்ந்துகொள்வார். நால்வருமாகச் சேர்ந்து நாங்கள் அடிக்கடி கடற்கரைக்குப் போவோம். அரட்டை அடிப்போம்.
தமிழ்வாணனிடம் - ஒரு பழக்கம் உண்டு. மற்றவர்கள் தங்கள் பர்ஸைத் திறந்து எடுத்துச் செலவழிப்பதற்கு விடமாட்டார். அவர்தான் டிபனிலிருந்து சுண்ட்ல்வரை வாங்குவார். நாங்களெல்லாம் சாப்பிடுவோம்.
இப்போது மியூசிக் அகடமியாக விளங்கும் இடம்தான் அன்று திரு. சக்தி வை. கோவிந்தனின் பத்திரிகை அலுவலகமாக இருந்தது. அங்கிருந்துதான் தமிழ்வாணன் ஆசிரியராக இருந்த அணில் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.
அணில் பத்திரிகையின்போதும் சரி, கல்கண்டுப் பத்திரிகை ஆரம்பித்த புதிதிலும் சரி, அவருக்காக அவர் அலுவலக வாசலில் ஏழெட்டு வாண்டுப் பையன்கள் அவரைக் காணக் காத்து கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
எழுத்தாளனை யார் அந்தக் காலத்தில் தேடிப் போய்ப் பார்த்தார்கள்? இந்தக் காலத்தில் கூட வாசலில் காத்துக் கிடந்து பார்க்கிறார்கள்?
எம்.ஜி.ஆர். வீட்டு வாசலில் காத்துக் நான் கிடந்து பார்க்கும் கும்பலை நான் பார்த்திருக்கிறேன். தமிழ்வாணனுக்கு அப்போது அப்படி ஒரு பாப்புலாரிட்டி இருந்தது.
நாமும்தான் எழுத்தாளர்.. நம்மைத் தேடி வந்து நான்கு பேர் பார்க்கும்படி எழுதவேண்டும் என்று என்னைப் போன்றவர்களுக்குப் பெரிய தூண்டுதலாக இருந்தவர் தமிழ்வாணன்.
பொள்ளாச்சி திரு. மகாலிங்கத்தின் மகள் திருமணத்தில் நானும் தமிழ்வாணனும் கலந்துகொண்டோம். திருமணத்தில் பெரிய
கூட்டம் என்றால் தமிழ்வாணனைக் காணத் தனிக்கூட்டம். மகாலிங்கத்திற்கு ஒரே வியப்பு. கூட்டத்திலிருந்து அவரை விடுவித்து வரிசையில் கொண்டுபோய் அமரவைக்கும்படி ஆகிவிட்டது.
பெரிய பெரிய மனிதர்கள் கூடித் தமிழ்வாணன் தன் நண்பர் என்று சொல்லிப் பெருமைப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
கல்கண்டில் மட்டும் எழுதிக் கொண்டிருந்த அவரை, ஆனந்த விகடனில் எழுதவைத்தேன். ஆனந்த விகடன் ஒரு கோட்டை. அதில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே எழுதிவந்த காலம் அது. தமிழ்வாணன் ரொம்ப பாப்புலரா இருக்கார், அவரை நம் இதழில் எழுதச் சொல்லலாமே என்று நிர்வாகத்திற்கு யோசனை சொன்னேன். எனக்குச் சம்மதம் கிடைத்தது.
ஆனால் தமிழ்வாணனிடமிருந்து உடனே சம்மதம் கிடைக்கவில்லை. நிர்வாகத்திடம் கேட்டுக் கூடிய விரைவில் சொல்லுகிறேன் என்று சொன்னார். தான் உருவாகக் காரணனவர்களிடத்தில் தமிழ்வாணன் விசுவாசம் காட்டியதைப் போல் வேறு எவரிடமும் நான் பார்த்ததில்லை. அப்படி ஒரு ராஜ விசுவாசம்.
தொடர்கதை அறிவிப்பின்போதும் தொடரின்போதும் தன் பெயரைவிடத் தன் கண்ணாடிக்கு முக்கியத்துவம் தரும்படி சொன்னார். கண்ணாடியையும் தொப்பியையும் பயன்படுத்திக் கொண்ட அழகு அலாதியானது. தன் பாப்புலாரிட்டியைப் புது ஸ்டைலில் ஷேப் செய்து கொண்டார்.
நான் தினமணிக் கதிரில் இருந்தபோது தமிழ்வாணனை ஒரு ஹீரோவாகவே ஆக்கி, நடிகைகளை விட்டுக் கேள்வி கேட்கச் சொல்லி முனுசாமி முதலியாரின் நேஷனல் பண்ணைக்கு எல்லோரையும் அழைத்துச் சென்று படம் எடுத்து அட்டைப்படத்திலேயே போட்டேன். இதழ் பிய்த்துக்கொண்டுபோயிற்று.
எதையும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் அணுகும் திறமை
அவருக்கு இருந்தது. கேட்டால் "அதான்யா தமிழ்வாணன்!'' என்று சுருக்கமாக முடித்து விடுவார்.
"நாம் ஒரு துறையில் நுழைந்தால் அதில் கடைசி எல்லை என்னவோ. உச்சம் என்னவோ அதுவரைக்கும் தொட்டு விடவேண்டும். அதற்குப் பிறகு அந்தத் துறையில் இறங்கவே மற்றவர்கள் பயப்படவேண்டும்'' என்று வேகமாகப் பேசுவார். அந்த எண்ணம் அவர் மனத்தில் ஆழமாக இல்லை என்றால் இப்படி உணர்ச்சிகரமாகச் சொல்ல முடியுமா?
பீட்டர்ஸ் சாலையில் நான் குடியிருந்த நாள்.ஒன்றில் தமிழ்வாணன் திடீரென வந்தார். எங்கோ ஒரு மேடையில் பிரமாதமாகப் பேசியிருக்கிறார். அதை உடனே மிகவும் வேண்டிய யாரிடமாவது சொல்லிப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு. நான் அந்தப் பேச்சைக் கேட்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார். வந்தார். வீட்டையே மேடையாக நினைத்துக்கொண்டு முக்கியமான பகுதிகளையெல்லாம் பேசிக் காட்டிச் சிரிக்க வைத்தார்.
அவர் மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புகூட வீடு தேடி வந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து அப்படி ஒரு சிரிப்புச் சிரித்தோம். அவர் சிரித்தால்வீடே அதிரும். அப்படி யாராலும் சிரிக்கமுடியாது. அப்படி என்னதான் பேசிக்கொண்டிருந்தீர்கள் என் மனைவிகூட வியப்பு தாங்காமல் கேட்பாள்.
அவர் துணிவே துணை என்பார். நான் தைரியலட்சுமி என்பேன் எனக்கு ஏழெட்டுப்பேருக்குத் தைரியம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் எப்போதும் ஸ்டாக் இருக்கும். எதுக்குத் துணியவேண்டுமோ அதற்குத்தான் துணிவார். அவரிடம் இருந்ததும் அவர் பிறருக்கு எடுத்துச் சொன்னதும் ஒருபோதும் அசட்டுத் நுணிச்சலாக இருந்தது இல்லை.
தமிழ்வாணன் பண உதவி என்று வந்தது இல்லை என்னிடத்தில்.
நான் கான் அவரைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை வெளிநாடு போனபோது டிக்கெட்டிற்குப் பணம்கட்ட இரண்டாயிரம் ரூபாய் குறைந்தது. தமிழ்வாணன் தான் ஞாபகத்திற்கு வந்தார். கேட்டேன். கொஞ்சம்கூடத் தயக்கம் இல்லாமல் சந்தோஷமாக எடுத்துக்கொடுத்தார். எப்போது தருவீர்கள் என்றுகூடக் கேட்காமல் கொடுத்தார்.
அத்தொகையைத் திருப்பிக் கொடுத்தபோது, "என்னிடம் கடன் வாங்கிவிட்டுச் சரியாகத் திருப்பிக்கொடுத்த ஒரே எழுத்தாளர் நீங்கதான் "என சொல்லிவிட்டுச் சிரித்தார். அதே அட்டகாசச் சிரிப்பு.
எழுத்தாளர்களுக்கு வியாபாரத் தந்திரம் குறைவு. ஆனால் அது தமிழ்வாணனிடத்தில் நிறையவே இருந்தது. தன் நூல்களைத் தானே பதிப்பித்து வெளியிட்டு அவற்றை எப்படி விற்பது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்.
அவர் ஒரு சக்ஸஸ்புல் ரைட்டர். ஒரு பிரில்லியண்ட் ஜர்னலிஸ்ட். எழுத்துலகத்தில் நான் ஒரு ஜாம்பவான். நான் இதைச் சொல்கிறேன் என்றால் இந்தப் பேட்டிக்காகச் சொல்லவில்லை. ஒரு பத்திரிகையைப் புதுப்பாணியில் ஆரம்பித்து, தனி ஆளாக அதை வெற்றிகரமாக நடத்தி, தன்னையும் பாப்புலர் ஆக்கிக் கொண்டு, பிற பத்திரிகைகள் பயப்படும் அளவுக்கு வளர்த்தார் என்றால் அது எல்லோராலும் முடிகிற விஷயமல்ல.
சந்திப்பு: லே.
================================================================================================
ஜோக்ஸ் 87 - 88
இப்போ என்னடான்னா கட்சித்தலைவர் முதலில் போய் அடுத்த கட்சியில் ஐக்கியமாகி விடுகிறார்... தொண்டர்களை அம்போ என்று விட்டு விட்டு!










.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)



தமிழ்வாணன் அவர்களின் விசிறி, சங்கர்லால் நாவல்கள் கல்கண்டு பத்திரிகை மிகவும் பிடிக்கும் என்றாலும்
பதிலளிநீக்குதமிழ்வாணனை நிறைத்தால் நூறு வயது வரை வாழ்வது எப்படி என்று நூலெழுதிவிட்டு அல்பாயிசில் போய்ச் சேர்ந்ததுதான் என் நினைவுக்கு வரும்
வாங்க நெல்லை... சங்கர்லால் நாவல்கள் எனக்கும் பிடிக்கும். கூடவே அவர் பொதுவாக எழுதிய கைதி எண் 811 ( இதில் கெட்டவன் என்று நாம் நினைப்பவன் நல்லவன். நல்லவன் என்று நினைப்பவன் கெட்டவன்) போன்ற நாவல்களும் படித்து ரசித்திருக்கிறேன். இப்போது ரசிக்க முடியுமா, தெரியாது. அவர் கதையின் பாத்திரங்கள் அடிக்கடி "விழிப்புடன்' பார்ப்பார்கள்!
நீக்குஅவர் கதையில் துப்பறிபவர் க்ளூகோஸ் மாத்திரை சாப்பிடுவதும், அழகு தமிழ் பெயர்களும் மறக்க இயலாது
நீக்குஓடிடி படங்கள் எப்படி இருந்தன என எழுதவில்லையே
பதிலளிநீக்குஅளவுக்கு மீறி பார்ப்பதால் மிகச் சிறப்பு என்று சொல்லக்கூடிய படங்கள் அபூர்வம். பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நிலையில் இருந்தாலே சந்தோஷம்!
நீக்குபடங்கள் பார்க்கும்போது அனேகமாக எப்போதும் பாடல்களை ஓட்டிவிடுவேன். ஹாரர் காட்சிகளில் ம்யூட் பண்ணிவிடுவேன். வசனம் புரியலைனா அல்லது முக்கிய காட்சிகளை ரீவைண்ட் பண்ணிப் பார்ப்பேன். நல்ல படத்தை நாலு முறைகள் கூடப் பார்ப்பேன். படுக்கை அல்லது சோபாவில் அமர்ந்து படம் பார்த்தால் பதினைந்து நிமிஞங்களில் தூங்கிவிடுவேன். இதனால் என்னோடு அமர்ந்து பிறர் படம் பார்க்க இயலாது
பதிலளிநீக்குதூங்கி விடுவது உட்பட - எனக்கு நாற்காலி போதும் - எல்லாவற்றிலும் நானும் அப்படியே. ஓவர் சௌண்டாக அலறும்போது ம்யூட் செய்து விடுவேன். குறைந்த ஒலியில்தான் வைத்துப் பார்ப்பேன். சில படங்களில் வசனங்களை மிக மெதுவாக பேசுவார்கள். பின்னணி இசை காதைக் கிழிக்கும். அப்போது கொஞ்சம் சிரமப்படுவேன். மகன்கள் சத்தமாக வைத்துப் பார்ப்பார்கள். சொன்னால், நானும் அப்படிதான் பார்க்கிறேன் என்பார்கள்!
நீக்குசேட்டைக்காரன் என் கெம்ப்ளாஸ்ட் நினைவுகளைத் தூண்டுகிறார். அங்கும் விபத்துகளைப் பார்த்திருக்கிறேன். அங்கே gகேஸ் லீக் ஆனால் சட் சட் எனப் பலர் இறந்துவிடுவார்கள் அபூர்வம் என்றபோதும்
பதிலளிநீக்குநான் அதிர்ச்சி அடைகிறேன்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்கு@ நெல்லை
பதிலளிநீக்கு/// படங்கள் பார்க்கும்போது அனேகமாக எப்போதும் பாடல்களை ஓட்டி விடுவேன். ஹாரர் காட்சிகளில் ம்யூட் பண்ணிவிடுவேன். வசனம் புரியலைனா அல்லது முக்கிய காட்சிகளை ரீவைண்ட் பண்ணிப் பார்ப்பேன். நல்ல படத்தை நாலு முறைகள் கூடப் பார்ப்பேன். ///
கேசட்டில் படம் பார்க்கும் போது
நானும் இப்படியே!..
கேஸெட்டில் படம் பார்க்கும்போது நான் அப்படி செய்ய மாட்டேன்! காரணம் டெக் வாடகைக்கு விடுபவர் அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லியே வாடகைக்கு கொடுப்பார். ஏதாவது பிரச்னை வந்தால் புது டெக்குக்கு நீங்கள்தான் காசு கொடுக்கணும் என்பார்கள்.
நீக்குமூலிகைப் பண்ணைக்குச் செல்ல வேண்டும்..
பதிலளிநீக்குபிறகு பார்க்கலாம்..
நன்றி மீண்டும் வருக...
நீக்குதோட்டத்துப் பூ
பதிலளிநீக்குசெடிக்கானது...
எல்லாப் பூவுமே...!
நீக்குசொந்தமாக வீட்டில் கேசட் பிளேயர் வைத்திருந்தோம்...
பதிலளிநீக்குஎல்லாம் குவைத்தில் சம்பாதித்தது...
இப்போது டிவி மட்டுமே..
ஓ அப்படியா... நன்று.
நீக்குஇப்போது அதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது!
பூக்கள் யாருக்கானது? நல்ல கேள்வி. நன்கு மலரும்வரை தாய்வீடு. பிறகு அதன் விதிப்படியான புகுந்த வீடு. அது கோயிலோ இல்லை இன்னொரு பெண்ணின் கூந்தலோ இல்லை விசேஷமோ இல்லை அபர காரியமோ
பதிலளிநீக்குவீண்பிறப்பு எடுக்காமல் பிறந்ததன் (ஏதோ) ஒரு பயனை அடைகிறது!
நீக்குஆனந்த விகடனில் இதழுக்கு மேலாக புகழ் கிடைத்துவிட்டால் கழற்றி விடுவார்கள். அதற்காக வாரிசு அரசியல், நீதி நேர்மை நியாயம் என்று பிறருக்கு அட்வைஸ் பண்ண தயங்கமாட்டார்கள்
பதிலளிநீக்கு