சினிமா பாடல்கள் கேட்பது அவ்வளவு மட்டமான விஷயமா?
உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட இது மாதிரி ஒரு சண்டை அப்பா ஜெமினிக்கும், மகன் கமலஹாசனுக்கு வரும். வாதம் வலுவடைந்துகொண்டே போக, கமலின் அண்ணனாக வருபவர் - படத்தில் அவர் ஊமை - நாதஸ்வரத்தை எடுத்துக்கொண்டு அருமையான கரகரப்ரியா வாசிப்பார். இருவரும் அப்படியே இசையில் ஐக்கியமாகி வாதம் அடங்கி, இசையில் அமைதியடைவார்கள். இதில் ஜெமினிக்கும் யேசுதாஸ்தான் குரல், கமலுக்கும் யேசுதாஸ்தான் குரல்!
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு விவாதம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ஏன், எங்கள் வீட்டிலேயே இருந்தது. என் தாத்தாவுக்கு சினிமா பாடல்களே பிடிக்காது. 'க்கூத்தாடி பய பாட்டு' என்பார் அழுத்தம் திருத்தமாக!
இப்பவும் சினிமா பாட்டு கேட்பது என்றால் ஏதோ செய்யக்கூடாத செயல் மாதிரியே பேசுவோர் இருக்கிறார்கள். அதிலும் அந்தக் கால பாலசரஸ்வதி, எம் எல் வி என்றால் உசத்தி, அப்புறம் வந்த எம் எஸ் வி இளையராஜா பாடல்கள் என்றால் மட்டம் என்பது போல நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
என் நண்பன் ஒருவன் - அதிசயப்பிறவி - இருக்கிறான். எந்தப் பாட்டும் கேட்க மாட்டான். அப்படி கேட்டால் ரொம்ப அபூர்வம். புத்தகங்களும் படிக்க மாட்டான். அவனது பொழுதுபோக்கு என்பது எங்காவது வெளியில் சுற்றுவதும் நண்பர்களுடன் பொழுது போக்குவதும். அதிசய மனிதன்.
சிலர் சினிமா பாட்டு கேட்பது தெய்வகுத்தம் என்பது போல பேசுவார்கள். சினிமா பாட்டெல்லாம் கேட்பதில்லை என்பதையே ரொம்பப் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். பக்திமார்க்கத்தில் திளைப்பார்கள்.
கேட்கட்டும், கேட்காமலிருக்கட்டும். நான் அதை ஒன்றும் சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் சினிமா கேட்பவர்களை குறை சொல்கிறார்கள் பாருங்கள்.. அதுதான்... அதுவும் அவர்கள் ரசிக்கும் பாடல்கள் உயர்ந்த ரகம். நமக்குத் பிடித்த பாடல்கள் மட்டம்!
நான் சினிமா பாடல்களை மட்டுமே கேட்பவன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். திரை இசையில், அதன் குழைவில், குரல்களில், இசையில் மயங்கி பரவசப்பட்டு போவேன். அபப்டி ரசிக்கும், ரசிக்கச் சொல்லிக் கொடுக்கும் டாக்டர் நாராயணன் போன்றோருக்கு நன்றி.
எப்படி இப்படி பாடுகிறார்கள், எப்படி இவர்களுக்கு இப்படி ஞானம், நமக்கு அப்படி ஏன் இறைவன் ஞானம் கொடுக்கவில்லை என்று தோன்றும்தான். ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது நல்லவேளை, இறைவன் எனக்கு ரசிக்கும் மனதையாவது கொடுத்தானே என்று தோன்றும்.
ரசனை எல்லை மீறும்போது நமக்கும் பாட அல்லது கத்தத் தோன்றுமல்லவா... அப்படி பாடி சிலருக்கு அனுப்பி கொடுமை செய்வதும் உண்டு. என் பள்ளி காண நண்பன் நினைவு வந்து இரண்டு நாட்களுக்கு முன் அவனுக்கு அப்படி நான் "பாடிய" நான்கு பாடல் துணுக்குகள் அனுப்பினேன். கவனிக்கவும். நான் எப்போதும் முழுப் பாடல் பாடமாட்டேன். என் மாமா கூட இது நல்ல டெக்னிக்கா இருக்கே என்று அவரும் அப்படி பாடத் தொடங்கினார்.
இதில் இன்னொரு விளையாட்டு என்னவென்றால் சரணத்தில் ஏதாவது ஒரு வரியை மட்டும் பாடி அனுப்புவேன். அது என்ன பாடல் என்று சொல்ல வேண்டும். கூகுள் பண்ணாமல் சொல்பவர்கள் இருக்கிறார்கள். கீதா ரெங்கன் பதிவுகளுக்கு வருவதில்லை. வந்தால், இதைப் பற்றிச் சொல்வார்!
அப்படி அனுப்பியதும் அந்த நண்பன் எனக்கு பதில் அனுப்பி இருந்தான். நான் அவனுக்கு இரவு அனுப்பி விட்டு தூங்கி விட்டேன். காலை எழுந்ததும் இரவே அவன் அனுப்பி இருந்த மெஸேஜைப் படித்தேன். ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன்.
=========================================================================================
ஃபேஸ்புக்கில் என்னுடைய சில பதிவுகள் இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் பார்வைகளைக் கடந்திருக்கின்றன. வெகு சிலதான். ஆனால் முப்பதாயிரத்துக்கு மேல் சில பதிவுகள் பார்வைகளை பெற்றிருக்கின்றன. நானும் அடிப்படையில் எது பற்றி பதிவு போட்டால் பார்வைகள் அதிகள் கிடைக்கிறது என்று சோதனை செய்து பார்ப்பேன். பெரும்பாலும் சினிமா, மற்றும் சாப்பாட்டுப் பதிவுகள்தான் அதிகம் பார்வையாளர்களை பெறும்.
விநாயகர் சதுர்த்தி அன்று சங்கத்தமிழ் மூன்றும் தா என்பதை கொழுக்கட்டை மூன்றும் தா என்று மாற்றி எழுதி படத்துடன் வெளியிட்டேன். அது தற்சமயம் 20,000 பார்வைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆச்சரியும் என்ன என்றால், நான் காந்தி பற்றியும், வ வு சி பற்றியும், பாரதியார் பற்றியும் எழுதியதை எல்லாம் கண்டு கொள்ளாத திருப்பூர் கிருஷ்ணன் இந்தப் பதிவை 'லைக்' செய்திருந்தார்.
=========================================================================================
நடிகர் ஸ்ரீகாந்த் 1972 அல்லது 75 வரை அமெரிக்கன் ஓ எஸ் எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திரையுலகில் நடிக்க வந்து நிறைய திரைப்படங்கள் நடித்தும் கூட நீண்ட நாள் அந்த வேலையில் அவர் தொடர்ந்து இருந்தார். அவர் ஒரு டே டைம் ஒர்க்கர் என்கிறார் அவர் மகள் மீரா.
அதிக ஆசை இல்லாதவர் ஸ்ரீகாந்த். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால் போதும் என்று இருப்பவராம். நீண்ட நாட்கள் தரையில்தான் படுத்து உறங்குவாராம். எல்டாம்ஸ் சாலை வீட்டில் ஒரு இடத்தில் குளிர்ச்சியாக இருக்குமாம். அங்கு தான் தரையில் படுத்து உறங்குவாராம். நிறைய ஏமாந்திருக்கிறாராம். நிறைய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் காசு கொடுத்ததில்லை. அதைப்பற்றி ஸ்ரீகாந்த் பெரிதாக கவலைப்பட்டுக் கொண்டதில்லையாம். 'எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று விட்டு விடுவாராம்.
அவர் மனைவிக்கு தான் வருத்தமும் கோபமாக இருக்குமாம் அவர் மனைவி தமிழக அரசு ஊழியை. ஓய்வு பெறும் வரை வேலை செய்துவிட்டு பிறகு பென்ஷனராக இருந்தார். ஒரு நேரத்தில் யாருக்கோ போட்ட ஷியூரிட்டி கையெழுத்து காரணமாக ஸ்ரீகாந்த் காரை விற்க வேண்டி வந்த பிறகு வேறு வண்டி வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டாராம். எங்கு போனாலும் சைக்கிளிலோ நடந்தோ சென்று விடுவாராம். படப்பிடிப்புகளுக்கு கூட சைக்கிளில் சென்று விடுவாராம். மற்றவர்கள் காரில் வருகிறார்கள், நானும் வாங்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் எல்லாம் இருந்ததில்லை என்கிற அவரிடம் திருத்தப்பட வேண்டிய குணங்கள் நிறைய இருந்தன என்கிறார் மீரா.
எனக்கு போட்டியாக ரஜினிகாந்த் என்று ஒருவனை கொண்டு வந்திருக்கிறார் கேபி என்று வீட்டில் சொன்னாராம். கே பி அவரை அழைத்து அப்படியே சொன்னாராம் உனக்கு போட்டியாக ரஜினிகாந்த என்று ஒருவரை கொண்டு வந்திருக்கிறேன் என்று! ஸ்ரீகாந்த் அதைதான் வீட்டில் சொன்னாராம். ஸ்ரீகாந்துக்கு ரஜினி மேல் ஒரு கோபம் இருந்தது என்கிறார் மீரா. ஒருமுறை வீட்டுக்கு பார்க்க வந்திருந்த ரஜினியை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்திருந்திருக்கிறார். மகளுக்கும் மனைவிக்கும் அது சங்கடமாக இருக்க, ரஜினி எந்தவிதமான உணர்ச்சியையும் அப்பொழுது காட்டவில்லையாம். பொறுமையாக காத்திருந்து பார்த்து சென்றாராம். ஆனாலும் கடைசி வரையில் இருவரும் நல்ல நட்பில் தான் இருந்தார்களாம்.
நாகேஷ், வாலி ஸ்ரீகாந்த் ஒரே அறையில் தனி இருந்த காரணத்தால் மூவரும் நல்ல நண்பர்கள். மீரா திருமணத்தில் நாகேஷ்தான் முழுவதும் பந்தி பரிமாறினாராம்.
70 வயதுக்கு மேல் மறதி நோய் ஸ்ரீகாந்துக்கு வந்த போது மகள் அவரை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டாராம். ஸ்ரீகாந்துக்கு அது கோபமாம். "என்னை ரொம்ப கண்ட்ரோல் செய்றா" என்பாராம். மகள் வீட்டில் பார் இருந்தும் எனக்கு அவள் தர மாட்டேன் என்கிறாள் என்று வீட்டில் சொல்வாராம். ஆனால் மகளிடம் கேட்க மாட்டாராம். அதை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் அம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது என்று மகள் கேட்கிறார். படங்கள் மிகவும் செலெக்ட்டிவாகத்தான் செய்தாராம். ஒரு நேரத்தில் இவர்களே படங்கள் போதும் என்று நிறுத்தி விட்டார்களாம். பிறகு யோசித்து ஒன்று இரண்டு படங்களை செய்திருந்திருக்கிறார். தன்னுடைய அப்பா மிகவும் அழகு, ஹாலிவுட் ஸ்டார் போல அழகானவர், கம்பீரமானவர் என்று பெருமைப்படுகிறார் மகள் மீரா.
இல்லையா பின்னே?
====================================================================================
1979 ஆம் வருடத்துக்கு செல்கிறது மனம். அந்த ஆண்டுதான் 'நிறம் மாறாத பூக்கள்' வெளியானது. நான் அப்பா, அண்ணன், தங்கை, அம்மா படத்துக்குச் சென்றிருருந்தோம். ராஜா கலையரங்கம் தியேட்டரிலிருந்து நடந்தே ரயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த பத்மா கேப் வந்தோம். அதுவரை அப்பா எதுவும் பேசவில்லை. நாங்கள்தான் பின்னால் சின்னக் குரலில் ஏதோ பேசியபடி வந்தோம். ஹோட்டலில் அமர்ந்து தண்ணீர் குடித்ததும் அப்பா சொன்னார் "என்ன ஒரு படம்.."
அப்பா அபப்டி சொன்னது எனக்கு ஆச்சர்யம்தான். ஏனென்றால் அப்பா அப்படியான ஆள் இல்லை! அப்பாவை அப்படி ஒன்ற வைத்தது நிச்சயம் இளையராஜா இசைதான் என்று இப்போது உணர்கிறேன். படத்துக்கு பெரும் பலம் இளையராஜா. அதுவும் குறிப்பாக அந்த "ஆயிரம் மலர்களே பாடல். அப்போது எங்களுக்கு படத்தில் பிடித்தது சுதாகர் - காந்திமதி காமெடியும், ரத்தியும்தான்! அப்புறம் ரேடியோவில் பாடல்கள் கேட்கக் கேட்க மனதில் இடம் பிடித்தது.
முதல் பாடல் கங்கை அமரன் பாடலுக்கு இசை இளையராஜா. ஜென்சி பாடியது. மோகன ராகமாம். விக்கி சொல்கிறது!
==========================================================================================
இது மாதிரி தகவல்கள் வாசகனுக்கு பைசா பிரயோஜனம் கிடையாது. ஆனாலும் விரும்பிப் படிப்பார்கள். அதைதான் பத்திரிகையாளர்கள் காசாக்கினார்கள். கதிரும் கூட!
===========================================================================================
ஒரு நகைச்சுவை திருமணப் பத்திரிகை.. விகடனில் அந்தக் காலத்தில் வந்தது.
=========================================================================================
.இவர்.....
அகாடமி விருது, பத்ம பூஷன், ரபீந்திரநாத் விருது உட்பட பல விருதுகள் வாங்கி இருக்கும், பரசுராம் என்கிற பெயரில் எழுதிய, வங்காள எழுத்தாளர் இயற்பெயர் ராஜசேகர் பாஸு தன்னுடைய பெயரை பரசுராம் என்று வைத்துக் கொண்டதன் காரணத்தை இந்தப் பெட்டிச் செய்தியில் படித்தேன். இது 1960 அமுதசுரபியிலோ, கலைமகளிலோ வந்தது. வீட்டில் உள்ள பைண்டிங் புத்தகத்திலிருந்து சென்ற வருடம் எப்போதோ போட்டோ எடுத்து வைத்துக் கொண்டேன்.
வேலைக்காரர் என்று போட்டிருந்தாலும் அவர் ஒரு பொற்கொல்லர் என்று சொல்கிறார்கள். அங்கத அரசியல் நாகியைச்சுவை எழுத்தில் வல்லவர். 1880 ல் பிறந்து 1960 ல் மறைந்தார்.
பின்னர் படித்துத் தெரிந்து கொண்டது வங்காள மொழியில் அவர் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பை ரவீந்திரநாத் தாகூர் பாராட்டி இருக்கிறார். அவர் வங்காள மொழியில் வெளியிட்ட வங்காள அகராதியையும் சிலாகித்திருக்கிறார்.
பெங்கால் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் கெமிஸ்ட்டாக சேர்ந்து அதன் இயக்குனராக உயர்ந்தவர்.
வங்காளி ஆயினும் பீகாரில் பள்ளிப் படிப்பு படிக்கச் செல்கையில் முதல் மொழியாக ஹிந்தி மொழியை தெரிவு செய்தார்.
அவர் மூத்த சகோதரருடன் சேர்ந்து வைத்த சிறிய ஆய்வகத்தில் நிறைய வேதிப்பொருட்களை அலமாரியில் அடுக்கி வைத்திருப்பாராம். சுவரில் மாட்டியுள்ள வெப்பமானியின் உதவியோடு வானிலை நிலவரமும் கணிப்பாராம். குடும்ப அங்கத்தினருக்கு இருமல் மருந்து உள்ளிட்ட சில மருந்துகளை எழுதிக் கொடுப்பாராம்.
சட்டமும் பயின்று, தேறி மூன்று நாட்கள் மட்டும் நீதிமன்றத்துக்குச் சென்று பணிபுரிந்து, அதில் சுவாரஸ்யம் இல்லாமல் தனது கெமிஸ்ட் வேலைக்கே திரும்பி விட்டாராம்.
சொந்த வாழ்க்கையில் அவரது மருமகன் ஏதோ ஒரு தீரா நோயால் இளவயதிலேயே மரணமடைய, அந்த சோகம் தாங்காமல் அதே நாளிலேயே உயிர் நீத்தாராம் இவர் மகள். மனைவியும் மறைய, அதன்பின் 18 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும், தனது சொந்த வாழ்க்கையின் சோகங்கள் தன் எழுத்தில் தெரியாமல் பார்த்துக்கொண்டார்.
சாதாரணமாக பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் சாஹித்ய அகாடமி கூட இவரது படைப்புகள் எதையும் தமிழில் கொண்டு வர முயற்சிக்கவில்லை போலும்.
பக்கத்தில் இருந்த மருத்துவக் கல்லூரிக்கு சென்று மனித உடல்களை அறுத்து அனாட்டமியும் கற்றிருக்கிறார்.
================================================================================================
கோடம்பாக்கத்தில் இந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறீர்களோ? நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
==========================================================================================
UPSC பாஸ் செய்தவர்களை இன்டர்வியூ எடுக்கிறார் திரு வோரா. இப்போது பிரபலமாக வந்து கொண்டிருக்கிறது. ரசித்துப் பார்க்கிறேன்.
===========================================================================================
குழம்பிய குட்டையில்தான்
மீன் பிடிக்க முடியும்
மனமும் அப்படித்தான்
***********************
அவர்கள் எனக்கு அதிகாரிகள்
மாதிரி!
அவர்கள் சொல்வதை
நான் கவனமாகக்
கேட்டுக் கொள்ள வேண்டும்.
பதில் கேள்வி கேட்டால்
கோபம் வரும்
நான் சொல்வதை
ஏன் அவர்கள்
காது கொடுத்து கேட்பதுமில்லை
மனத்திலும்
வைத்துக் கொள்வதுமில்லை ?
========================================================================================
நமது நண்பர் முன்னாள் பதிவர் ஜோக்காளி பகவான்ஜி பேஸ்புக்கில் இப்போதெல்லாம் இதுபோன்ற நகைச்சுவை ரீல்ஸை தொடந்து பகிர்ந்து வருகிறார். இன்று பார்த்த இது எனக்குப் பிடித்திருந்ததால் அதை இங்கும் பகிர்கிறேன். நன்றி பகவான்ஜி.
==================================================================================
பாரதியார் எப்படி இருப்பார்? கண்ணதாசனின் 'தென்றல்' இதழ் மார்ச் 17 1960 ல் வந்த கட்டச் செய்தி.
பாரதியார் சுந்தரருபன், மாகிறம், ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம். அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு. அவருடைய கம்பீரமான முகத்துக்கு அளந்து அமைக்கப்பட்டதைப் போலிருக்கும் அந்த அழகிய நாசி. ஸீஸர், ராஜ்கோபாலாச்சாரியருடையவை போல கருடமூக்கல்ல. ஸீஸர் மூக்கு நடுவில் உயர்ந்து, நுனியில் கூர்மையாகி, கண்டவர்களைக் கொத்துவதுபோலத் தோன்றும்.. பாரதியாரின் மூக்கு கடைசல் பிடித்தது போலிருக்கும். நீண்ட நாசி. அந்த நீளத்தில் அவலட்சணம் துளிகூட இருக்காது.
பார்தியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள். இமைகளின் நடுவே, அக்கினிப்பந்துகள் ஜ்வலிப்பது போலப் பிரகாசத்துடன் விளங்கும். அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டாது.
அவருடைய நெற்றி படர்ந்த நெற்றி, நெற்றியின் இரண்டு கங்குகளிலும், நிலத்தைக் குடைந்துகொண்டு போயிருக்கும் கடலைப் போல முகம் தலைமயிரைத் தள்ளிக் குடைத்து கொண்டு போயிருக்கும். கங்குகளின் மத்தியில் முகத்தின் நடு உச்சியில், மயிர் கொஞ்சம் நிமிர்ந்து நிற்கும்: நெற்றியிலே இந்தச் சேர்மானம், அவருக்கு வர்ணிக்க முடியாத அழகைக் கொடுத்தது. பேர்பாதிக்கு அதிகமாக அவர் தலை வழுக்கை.
வ.ரா.
==========================================================================================
சுதாகர், ராதிகா, விஜயன் ரத்தி நடித்த பாத்திரங்களில் பாரதிராஜா கமல், ரஜினி ஸ்ரீதேவியை நடிக்க வைக்க இருந்தாராம். காசுள்ள தயாரிப்பாளர் இறந்து விட, இவர்கள் வந்தார்கள், நாம் பிழைத்தோம்!
இந்த 'ஆயிரம் மலர்களே மலருங்கள்' பாடல்தான் மனதை என்னமோ செய்கிறதே, ஏன்? இளையராஜா. கண்ணதாசன் பாடல். ஆரம்ப ஆலாபனை, ஆரம்ப இசை, எல்லாமே ஏதோ ஒரு கனமான சோகத்தை மௌனமாகச் சொல்கின்றன. மலேஷியா வாசுதேவன் கூட குரலை முடிந்தவரை மென்மையாக்கிக் கொண்டு பாடி இருக்கிறார். மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.
இந்தப் பாடலில் ஒரு சிறிய பிழை இருக்கிறது. அதை ஏன் இளையராஜா சரி செய்யாமல் விட்டார் என்பது புதிர்.
=========================================================================================















நல்ல விவரமான கதம்பம். படிச்சேன்!
பதிலளிநீக்குசினிமாப்பாட்டு ரசனையோடு, மங்களகரமாக வெள்ளியை ஆரம்பித்திருக்கிறீர்கள். சில பாடல்கள் நம்மைக் காலங்கடந்தும் ஆக்ரமித்திருப்பதை நானும் உணர்கிறேன். அப்படி என்னத்தைக் கண்டேன் அதில் என்று ஆச்சர்யப்பட்டதுண்டு. எழுதவேண்டும் இதைப்பற்றி .. ஒரு நாள்.. என நினைப்பதும் நடக்கிறது!
வாங்க ஏகாந்தன் ஸார்... இன்று வியாழன்தான். நாளைதான் வெள்ளி. ரசித்ததற்கு நன்றி.
நீக்கு