இந்த வார
எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் வெளியாகும் சிறுகதை எல்கே
என்று அறியப்படும் கார்த்திக் லக்ஷ்மிநரசிம்மனுடையது. எங்களின் நீண்ட
நாள் நண்பர்.
அவரின் தளம் எல்கே.
அவருடைய
எண்ணங்களையும், சிறுகதைகள், மற்றும் தொடர்கதைகளையும் (இன்னமும் கூட பழைய
தொடர்கதைகள் சில முடியவில்லை என்று நினைக்கிறேன்!) சமையல் குறிப்புகளையும்
சுவாரஸ்யமாக வழங்கிக் கொண்டிருந்தார்.
கிரிக்கெட்டில்
சுவாரஸ்யம் கொண்டவர். அதைப்பற்றி அவர் எழுதிய பதிவுகள் பிற தளங்களிலும்
வெளியாகியுள்ளன. சமீபகாலமாக தனது தளத்தில் எழுதவில்லை. இப்போது மீண்டும்
ஒரு தொடர்கதை தொடங்கி இருக்கிறார். நீண்டநாட்களாய் பிளாக்கை
கவனிக்காமலிருந்த ஓரிருவரை இந்த 'கேவாபோ' சாக்கில் மறுபடி தளத்தின் பக்கம்
பார்வையைத் திருப்ப வைத்ததில் "எங்களுக்கு" பங்கு உண்டு என்றே தோன்றுகிறது!!
எல்கேயின் ஒருவரி முன்னுரைக்குப் பின் அவரது படைப்பு தொடர்கிறது..
==============================================================================
ஒரு இரவு நேர பயணத்தில் , தூக்கம் வராத தருணத்தில் சிந்தித்தது
link : lksthoughts.blogspot.in
============================================================================
இரவு
எல்கே
இரவு 10 : 00
எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், ஈசல் பூச்சிகளாய் இருந்த பல டிபன் கடைகளில் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தான். கோடை கால புழுக்கத்தில் சிக்கிய வெளியூர் பிரயாணிகள், சென்னைக்கு மட்டுமே வெயில் என சென்னை தங்கள் வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் நேரம் இருந்ததால், ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு நடந்தவனை, ஆம்னி பஸ் தரகர்கள் ஆங்காங்கே வழிமறிக்க சிறு தலையாட்டலால் அவர்களைக் கடந்து சென்றேன்.
இரவு 10:20
கையில்; லெதர் பெக், தலையில் ஒரு தொப்பி சகிதம் எக்மோர் ஸ்டேஷனில் அடி எடுத்து வைத்தேன். எக்மோர் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாந்தாய் பிள்ளைப் போல. சென்ட்ரலில் இருக்கும் பரபரப்பு அந்தக் கூட்டம். சென்ட்ரலில் எப்போதும் இருக்கும் டென்ஷன் கலந்த சூழல் இங்கே இருக்காது. பண்டிகைக் காலங்களில் மட்டும் வேலை செய்யும் மெட்டல் டிடெக்டர்களும், உடமைகளை சோதிக்கும் மெஷின்களும் அங்கிருந்த காவலர்களைப் போல் வேலை செய்யாமல் முடக்கப் பட்டிருந்தது. ஏழாவது பிளாட்பாரத்தில் நான் செல்ல வேண்டிய சேலம் ஒன்றும் எக்ஸ்ப்ரஸ் நின்றுக் கொண்டிருக்க, நிதானமாய் அதை நோக்கி நடந்தேன். மிக நிதானமாய் கிளம்பும் இந்த வண்டி ஒரு வசதி. சென்னை நகர ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டு வண்டியை கோட்டை விடாமல் நிதானமாய் வந்து ஏறிக் கொள்ளலாம்.
பள்ளிக்கு செல்லத் தயங்கும் கே ஜி வகுப்பு மாணவர்கள் போல் கிளம்பத் தயங்கி தயங்கி நிதானமாய் பயணத்தைத் துவங்கியது வண்டி. என்னுடன் எடுத்து வந்த பேகை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, வாசல் கதவருகே வந்து நின்றுக் கொண்டேன். இந்திய ரயில்களில் கீழிருக்கையில் அரைமணி நேரம் பயணிப்பதுக் கூடக் கொடுமையே. குளிர்காலத்திலும் வியர்க்க வைக்கும் இடம் அது.
இரவு 11:30
எக்மோரில் முன்பிருந்தக் கூட்டம் இப்பொழுது தாம்பரத்திற்கு மாறி விட்டது போல. நின்ற வண்டியில் இருந்து இறங்கியவன், பிளாட்பாரத்தின் இறுதியை நோக்கி நடக்கத் துவங்கினேன். வெம்மையின் காரணமாய் வேர்க்க, கர்சீப் எடுத்து தொப்பி அகற்றி வியர்வையை துடைத்து, பின் மீண்டும் நடந்தேன். நான் இறங்கியதையும் , கையில் பை இல்லாமல் இருந்ததையும் என் பெட்டியில் இருந்த யாரும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. வந்த நோக்கம் முடிவடைந்ததால், ஸ்டேஷன் வழியே செல்லாமல், தண்டவாளத்தை கடந்து ஸ்டேஷனின் மறுபக்கத்தில் வெளியே வந்தேன்.
மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு செல்போனை எடுத்தேன். அதே சமயம், தொலைவில் பலத்த சப்தம் கேட்டது. சக்ஸஸ் என்ற வார்த்தையை மட்டும் மெசேஜ் செய்து விட்டு, ரோட்டைக் கடக்க முற்பட்டேன். ஒரு கணம் யோசிக்காமல் முன்னே செல்ல, வேகமாய் வந்த லாரியோ, தனியார் பேருந்தோ என் மீள் மோதியது.
