ஒன்றுமில்லை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒன்றுமில்லை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.11.12

இதுவும்......

   
நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் வண்டி ஒட்டிக் கொண்டிருந்தேன்.
    
சாலை மெதுவாக பின்னோக்கி விரைந்து கொண்டிருந்தது. யாருமற்ற நீண்ட சாலையில் செல்வது தனி அனுபவம். மனதில் என்னென்னவோ தத்துவார்த்த சிந்தனைகளும், பிடித்த பாடல்களும், படித்ததில் பிடித்த வரிகளும் ஓடும்!

நீங்கள் இந்த மாதிரித் தனிமைச் சாலையின் பயணத்தை எப்போதாவது ரசித்ததுண்டா?

சாலையின் இருபுறங்களும் அழகாக நிழல் தரும் மரங்கள் சீரான இடைவெளியில் நடப்பட்டு அந்தச் சாலையில் வண்டி ஓட்டுவதே மிக ரம்மியமாக இருந்தது.

மாலையின் இளங்காற்றும், மிதமான வெளிச்சமும் மேலும் ரம்மியமான சூழ்நிலையைக் கொடுத்தன. 

கிஷோர் குமார்க் குரலில் 'ராஹோன்மே ரெஹத்தே ஹை ..' என்றோ 'ஏக் ராஸ்தா ஹை ஜிந்தகி' என்றோ பாடத் தோன்றியது.  முன்னால் சென்ற ஓரிரு லாரிகளும், கார்களும் கண்ணிலிருந்து மறைந்து விட, நீண்ட சாலை சிறிய வளைவுகளுடன் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லுவது போலத் தோன்றியது.
 

சற்று வண்டியை நிறுத்தி, சாலையோரம் இருந்த மரத்தினடியில் கொஞ்ச நேரம் அமர்ந்து, இயற்கையை ரசிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அல்லது ஒத்திப் போட்டு, தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். 

"சாலையோரம் சோலையொன்று ஆடும்... சங்கீதம் பாடும்.." வாய் முணுமுணுத்தது. 

பின்னால் சத்தம் கேட்டது. கண்ணாடியில் கவனித்தேன். க்ரீம் கலரில் ஒரு டாட்டா இண்டிகா வந்து கொண்டிருந்தது. அதற்கு லேசாக வழி விட்டு, நடு சாலையிலிருந்து சற்றே இடப்புறமாகச் செல்லத் தொடங்கினேன்.  ஒரு காற்று கடப்பது போல அது என்னைக் கடந்து சென்றது. 

கொஞ்ச தூரம் சென்றிருப்பேன். மீண்டும் பின்னால் ஹார்ன் சத்தம். பார்த்தபோது ஒரு 'பைக்'கும், ஒரு லாரியும் பின்னால் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. உடனே கடந்து சென்று விடுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களும் சீரான வேகத்தில் பின்னாலேயே தொடர்ந்தார்கள். 

என் தனிமை கெடுக்கப் படுவதைப் போல உணர்ந்தேன். வேகத்தை இன்னும் சற்றுத் தணித்தேன். அவர்களும் கடந்து சென்றார்கள். 
கொஞ்ச தூரம் மறுபடி நானும் சாலையும் மட்டும். மெதுவாக தலையை சுற்றுமுற்றும் சுழற்றிப் பார்த்து ரசித்தபடி போய்க் கொண்டிருந்தேன். 
தனிமைப் பயணம் நீண்ட நேரம் தொடர்ந்து கிடைப்பதில் தடைகளாக அவ்வப்போது சில வண்டிகள் பின்னால் வந்த வண்ணமிருந்தன. அவைகள் அவ்வப்போது கடந்து போய்க் கொண்டே இருந்தன.


இப்போது சாலையோரம் மரங்கள் அவ்வளவு இல்லை என்பதோடு சாலையும் ஒரே சீராக இல்லை. சற்றே சுவாரஸ்யம் குன்றி ஓட்டிச் சென்றபடி இருந்தேன். பின்னால் சத்தம். பார்த்த போது பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. காலியாகத்தான் இருந்தது. 
   
மெல்ல நெருங்கியது.
கண்ணாடியில் தெரிந்த பஸ்ஸைப் பார்த்தேன். 
  
"ம்.... இதுவும் கடந்து போகும்..."

படங்கள் : நன்றி இணையம்.