1.2.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் :: தஞ்சை அரண்மனை வளாகம் – உலோகச் சிலைக் கூடம் :நெல்லைத்தமிழன்

 

இரண்டாம் சரபோஜி மன்னர், தன்னுடைய உருவத்தையும், பாதிரியார் உருவத்தையும் சிற்பமாக வடிக்கச்சொன்னார் அல்லவா? இரண்டாம் சரபோஜி மன்னர் செய்யச் சொன்ன சிலைதான் கீழே இருப்பது. நான் சில வருடங்களுக்கு முன்னால் சென்றிருந்தபோது இருந்ததைவிட தற்போது இன்னும் அழகாக எல்லா உலோகச் சிலைகளையும் ஒரு பெரிய ஹாலில் தனித் தனியாக முடிந்தவரை பெயர்களோடு வைத்திருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய வேலை என்று தோன்றுகிறது.

தஞ்சை அரண்மனையைப் பற்றிய பதிவுகளின் இறுதிக்கு வந்துவிட்டோம்.

மராட்டிய மன்னர்கள் பல செப்பேடுகளை உருவாக்கினார்கள் என்று பார்த்தோம் (இது தவிர, தன்னுடைய ஆட்சியில் நடந்தவற்றைத் தொகுத்து கல்வெட்டாக இரண்டாம் சரபோஜி மன்னர், தஞ்சைப் பெரிய கோயிலில் மிக நீளமாக வைத்திருக்கிறாராம். உலகின் நீளமான கல்வெட்டு என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள்). அந்தச் செப்பேடுகளின் மொழி என்ன? தமிழாக இருந்தாலும், “பயன்படுத்த வேண்டிய இடங்களில் வும், ‘பயன்படுத்த வேண்டிய இடங்களில் வும் இன்னும் பல எழுத்துத் தவறுகளும் இடம்பெற்றிருக்கின்றனஉதாரணமாக இராமலிங்கம் என்பதை இறாமலிங்கம், கிராமம் கிறாமம், தர்மம்-தற்மம்நாயக்கர்-னாயக்கர், நாகப்பட்டினம்-னாகப்பட்டினம் என்பது போன்று எல்லா இடங்களிலும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

பல்லவர், சோழர், அதன் பிறகு சாளுக்கியச் சோழர்கள், பிறகு பாண்டிய மன்னர்கள், அதன் பிறகு நாயக்கர்கள், பிறகு மராட்டியர்கள், கடைசியில் ஆங்கிலேயர்கள் வசம் தஞ்சை தரணி இருந்தது.  (சோழர்களுக்கு முன்னால் முத்தரையர்கள் வசம்).  இவர்களில் உண்மையான தொன்மைத் தமிழர்கள் யார் யார் என்பது சர்ச்சைக்குரிய விஷயம். முத்தரையர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்களைத் தமிழ் மன்னர்களாகச் சொல்லலாம்.

மராத்தியர்கள் தஞ்சைத் தரணிக்கு முற்றிலும் அந்நியர்கள். அவர்கள் தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றியதே வஞ்சகத்தின் மூலம். வரலாற்றில் பலர் எழுதியிருப்பதைப் படித்தால், ஒவ்வொரு ஆட்சியாளரும் (பாரதம் முழுமையும்) நிலப்பகுதியை படையெடுத்து ஆக்கிரமித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இன்றைக்கு நாம் மிகவும் உயர்த்திப் பேசும் வீர சிவாஜியையுமே அப்படிப்பட்டவராகத்தான் சிலர் எழுதியிருக்கின்றனர். அவ்வப்போது படையெடுத்து கொள்ளையடித்து பிறகு தங்கள் கோட்டைக்குத் திரும்புகிறவராக. சிவாஜிக்கும், அவருடைய நெருங்கிய உறவினரான வெங்கோஜி (சகோதரர் முறை, இவரை ஏகோஜி என்று வரலாறு சொல்லும்)க்கும் பகையுணர்வு இருந்தது. ஏகோஜி தன்னை ஏமாற்றியதாகத்தான் சிவாஜி நினைத்திருந்தார். ஆனால் அவரால் மஹாராஷ்டிரத்தை விட்டுவிட்டு, இங்கும் கவனம் செலுத்த முடியாததால் தன் வெறுப்புணர்வை வெளிப்படுத்திவிட்டு, பணம் வாங்கிக்கொண்டு ஏகோஜியை விட்டுவிட்டார் என்பதைப் பார்த்தோம். பிறகு மராட்டிய அரசு, நவாப் போன்றவர்களின் பிடியைத் தவிர்க்கவும், சேதுபதி அரசருடன் இருந்த மோதலைத் தவிர்க்கவும், கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கிந்தியக் கம்பெனியின் கரங்களில் சிக்கிக்கொண்டது. ஒரு கட்டத்தில் தங்கள் தஞ்சைத் தரணியையே ஆங்கிலேயர் வசம் போகுமாறு செய்துவிட்டது.

அது எப்படி.. எங்கிருந்தோ வந்த கிழக்கிந்தியர்கள் நம்மை ஆட்சி செய்ய முடிந்தது என்று யோசித்தால், அதற்குக் காரணம் நாமே என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். இதற்கெல்லாம் முதலில் வித்திட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். டியூப்ளே என்பவர்தான் நாட்டைப் பிடிக்க முடியும், பிடித்து ஆட்சி செய்ய முடியும் என்பதை தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக்கொடுத்தவர். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகப் பகுதியில் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி, வியாபாரத்தில்தான் குறியாக இருந்தது. இதற்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் திறமை இல்லாது ஊழல் மலிந்திருந்தவர்கள். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றபடி, டூப்ளேவின் திறமையினால் கவரப்பட்டு அவருடையை படையில் ஏராளமான தமிழர்கள் (தென்னிந்திய நிலத்தைச் சார்ந்தவர்கள்) சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு போர்ப்பயிற்சி கொடுத்து தங்கள் படையில் பிரெஞ்சு அரசாங்கம் சேர்ந்திருந்தது. டூப்ளே, பாண்டிச்சேரியிலிருந்து மேலும் மேலும் முன்னேறி சென்னையையும் கைப்பற்றி இருந்ததுஒரு கணக்கனாக வாழ்க்கையைத் துவக்கிய, ஒன்றுக்கும் உதவாத ராபர்ட் கிளைவ் எப்படி பிரெஞ்சுப் படைகளை வெற்றிகொண்டு, ஒப்பந்தம் மேற்கொண்டு தமிழகப் பகுதிகளைத் தங்கள் வசம் கொண்டுவந்தான், அவனுடைய வீரத்தினாலும் சாதுர்யத்தினாலும் எப்படி முன்னேறினான் என்பதெல்லாம் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள்.

கிளைவின் பெற்றோர்கள் (இங்கிலாந்து), இவன் படிக்கவும் லாயக்கில்லை, பள்ளிகளிலும் வம்பு வளர்க்கிறான், ஒன்றுக்கும் உதவாதவன் என்று முடிவெடுத்து இவனை இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியில் ஏதேனும் வேலை பார்க்கட்டும், பிழைத்தால் பிழைக்கிறான், செத்தாலும் கவலை இல்லை என்று. கிளைவின் பாரம்பர்யம் (முன்னோர்கள்), அவர்களின் வரலாறு 12ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. நம் ஊருக்கு வந்த பிறகு இங்குள்ள காலநிலை ஒத்துக்கொள்ளாமல், வெறும் கணக்காளனாக பணம் அதிகமில்லாமல் காலம் கழிப்பதில் விருப்பமில்லாமல் இரண்டு தடவைகள் துப்பாக்கி கொண்டு தற்கொலைக்கு முயல்கிறான். இரண்டு தடவைகளிலும் தெய்வாதீனமாகப் பிழைத்துக்கொள்கிறான். அப்போதுதான், தான் ஏதோ பெரிய செயலைச் செய்வதற்காக பிழைத்துக்கொண்டோம் என்று உணர்கிறான். வாய்ப்பு கிடைக்கும்போது அவனுடைய வரலாற்றை ஏதாவது ஒரு பதிவில் எழுதுகிறேன்.

இனி இந்த வாரம் மிகுதிப் படங்கள். அத்துடன் தஞ்சை அரண்மனையை விட்டுச் சென்றுவிடுவோம்.

 

 

 

விஷ்ணு மூர்த்தங்கள், ஸ்ரீதேவி, பூதேவி

A group of statues on a red surface

AI-generated content may be incorrect.

ஸ்ரீதேவி பூதேவி சமேத விஷ்ணு

A group of statues on a table

AI-generated content may be incorrect.

மஹாவிஷ்ணு, விஷ்ணு, மஹாவிஷ்ணு, 12ம் நூற்றாண்டு

 

 

A statue of a dancing person

AI-generated content may be incorrect.

நடராஜரின் பல்வேறு வடிவங்கள் பஞ்சலோகத்தில். நம்மவர்கள் உலோகத்தில் சிலை செய்வதில் எவ்வளவு திறமை பெற்றிருந்தனர் பாருங்கள்.

 

 

 

 

 

 

பல்வேறு விஷ்ணு மூர்த்தங்கள் – 10-13ம் நூற்றாண்டு

அரிவட்ட நாயனார், சண்டிகேஸ்வர ர், வீதிவிடங்கன் – 12ம் நூற்றாண்டு

 

 

எவ்வளவு அழகாக, நல்ல வளைவுகளுடனும் ஸ்மூத்தாகவும் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

 

ஆலிங்கன சந்திரசேகரர்  (11-13ம் நூற்றாண்டு)

 

 

போகசக்தி அம்மன், ஆலிங்கன சந்திரசேகரர் (12-13ம் நூற்றாண்டு)

 

 

 

ஆலிங்கன சந்திரசேகரர், சிவகாமி, ஸ்ரீதேவி, காளியம்மன்

 

திருஞானசம்பந்தர், அப்பர்

 

நடராஜர் சிலைகளிலேயே அவருடைய சடை ஒவ்வொரு சிற்பத்திற்கும் எப்படி வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்கள் பாருங்கள்

A statue of a person holding a hoop

AI-generated content may be incorrect.

இதுவரை நான் பார்த்திராத வித்தியாசமான நடராஜர் சிலை


 

 

 

மணி கோபுரம்

 

இந்தப் பதிவில் நான் பத்ரகுண்டலம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் ஒரு பிரிவில் காதுகளில் பத்ரகுண்டலம் போன்று அழகுபடுத்திக்கொள்ளும் பழக்கம் உண்டு. ஆப்பிரிக்காவில்தான் விதவிதமாக காதை அலங்கரித்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. நம் ஊரிலும் வயதானவர்கள் காதை தாழப் பெருக்கி குண்டலம் அணிவதை நீங்கள் கண்டிருக்கலாம். (படத்தில் உள்ளவர்கள் ஆப்பிரிக்க நாடுகளின் மாதவன், தமன்னா, அனுஷ்கா வகையறாவாக இருக்கலாம்)

 

இந்த மாதிரி கலாச்சாரங்களே மிகப் பழமையான குடிகளில் உண்டு. அது தமிழகமோ இல்லை ஆப்பிரிக்க நாடுகளோ.  (இவை இணையத்திலிருந்து எடுத்த படங்கள்)

ஒன்றை எழுதும்போது தொடர்புள்ளதாக மற்றவற்றையும் எழுதவேண்டி வந்துவிடுகிறதுஅதற்காக பதிவுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் எண்ணம் வருவதில்லை. கொஞ்சம் நீளமாக இருந்தால்தான் என்ன, இரண்டு முறை பார்வையிட்டுப் படித்துக்கொள்ளட்டும் என்று தோன்றுகிறது. இப்போதே வரலாற்றுச் செய்திகளை முடிந்தவரை மிகவும் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். அதைவிடச் சுருக்கினால் நன்றாக இருக்காது என்று தோன்றுகிறது. இந்தப் பகுதியிலும், தஞ்சை மண்டல உலோகச் சிற்பங்கள் கலைக்கூடத்தில் இருப்பது என்று புகைப்படத் தொகுப்பாகக் கொடுத்துவிட்டுப் போய்விடலாம். இருந்தாலும் சில செய்திகளையும் சேர்த்து எழுதுவோமே என்று தோன்றுவதால் பதிவு நீண்டுவிடுகிறது.

இதற்கு அடுத்ததாக நாம் காணவேண்டியது சிற்பங்களினால் மிகவும் புகழ்பெற்றபாடல் பெற்ற தலம் ஆடுதுறை புள்ளமங்கை கோயில். அதனை அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)  

15 கருத்துகள்:

  1. அதிகாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். காலை வணக்கம் இராமேஸ்வரம் சங்கர மடத்திலிருந்து

      நீக்கு
  2. ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் பொழுது அவை அவை அவற்றிற்கே உரித்தான தனித்தனி கதைகளைச் சொல்வது போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீவி சார். நான் நீங்கள் நினைப்பதைப் போலவே ஒவ்வொரு ஏதிலிகள் கஷ்டப்படுபவர்கள் சாலையில் படுத்திருப்பவர்கள் எல்லோணைப் பார்க்கும்போது அவங்க பிறந்தபோது எவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடியிருப்பார்கள் என நினைத்துக்கொள்வேன்

      நீக்கு
  3. பதில்கள்
    1. சரணம் சண்முகா. இன்று தைப்பூசம். இராமேஸ்வரத்தில் பெருங்கூட்டம் காண்கிறேன். சுப்ரமண்யர் சந்நிதி நிரம்பி வழிகிறது காலை நாலு மணியிலிருந்து

      நீக்கு
  4. உள்ளே நுழைந்ததும் காலணிகள் விடும் கட்டணத்தில் ஆரம்பித்து...
    அரசு செலவில் வருகை புரிவோருக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லும் விதத்தில் வரலாற்று உண்மைகள் கற்ற ஊழியர்களை நியமிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. விதம் விதமாய் சிலைகள் மனதைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  6. // நீளமாக இருந்தால்தான் என்ன, இரண்டு முறை பார்வையிட்டுப் படித்துக்கொள்ளட்டும் //

    வியாழன் பதிவுகளை, இப்போது வெள்ளிப்பதிவுகளையும் சொல்லலாம், படிப்பவர்கள், அதற்கு நெல்லை பதிவின் நீளம் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றும்.  கவலை வேண்டாம் நெல்லை!

    பதிலளிநீக்கு
  7. பழநியாண்டவர் மாதிரி அந்த நர்த்தன நடராஜர் வித்தியாசம்தான். திருப்பதி போய்விட்டு வந்து நடனம் ஆடும்போது வடித்த சிலை போலும்!

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான பதிவு... அழகான படங்கள்...
    அரிய தகவல்கள்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  9. அன்பின் நெல்லை அவர்களுக்கு,
    குறிப்புகள் அனுப்பி வைத்துள்ளேன்..
    ஓய்வு நேரத்தில் கவனித்துக் கொள்ளவும்...

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு. சில சிலைகளைப் பார்த்தால் உடனே நமக்கு யாருடைய சிலை என்பது புரிந்து விடும் (உதாரணம்: நடராஜர், பிள்ளையார், அப்பர்). சிலைகளை பூமிக்கு அடியில் இருந்து எடுக்கும்போதும், சிதிலமடைந்த கோயில்களைலிருந்து மீட்கும்போதும் எப்படி அடையாளம் காண்கிறார்கள்? உதாரணத்திற்கு எப்படி அரிவட்ட நாயனார் சிலை என்று தெரிந்து கொண்டிருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  11. /மராத்தியர்கள் தஞ்சைத் தரணிக்கு முற்றிலும் அந்நியர்கள். அவர்கள் தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றியதே வஞ்சகத்தின் மூலம்./
    நம் மண்ணிற்கு அந்நியர்களாய் இருந்தாலும், மராட்டியர்களும் நாயக்கர்களும் தமிழ்மொழிக்கும் பண்பாட்டுக்கும் எவ்வளவோ செய்திருக்கின்றனர் என்பதுதான் என் கருத்து. சமீபத்தில் ஒரு தற்குறி அரசியல்வியாதி "சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள்தான் தமிழ் அழியக் காரணம். ராஜராஜன், ராஜேந்திரன் எல்லாம் ஒரு தமிழ்ப்பெயரா" என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஆவர் இப்படிச் சொல்வது ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால் அந்தக் கருத்து சரி என்று விகடன் கருத்துக் கணிப்பில் 42% சொல்லியுள்ளார்கள். அது எனக்கு ஆச்சர்யமே! அவ்வளவு முட்டாள்களாகவா தமிழர்கள் இருக்கின்றார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூர்யா.. சரியான பாயின்ட். நாயக்கர் மராத்தியர்கள் போன்ற பலர் தமிழ் மண்ணுக்கு அந்நியர் ஆனால் சனாதன தர்மம் தழைக்க அவர்கள் எவ்வளவோ செய்திருக்கிறார்கள்

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!