தமிழக கோயில்களின் சுருக்கமான வரலாற்றை எழுத இது தகுந்த இடம் என்று நினைக்கிறேன்.
பல்லவர் காலத்தில் (3ம் நூற்றாண்டிலிருந்து) மூன்று வகையான கோயில்கள் கட்டப்பட்டன. அவை குடைவித்த கோயில்கள் (குடவரைக்கோயில்), செதுக்குவித்த கோயில்கள் (ஒற்றைக் கற்கோயில்கள்) மற்றும் கட்டுவித்த கோயில்கள் (கட்டடக் கோயில்கள்). குடைவரைக் கோயில்களை நாம் மகாபலிபுரத் தொடரின் பார்த்திருக்கிறோம். ஒற்றைக் கற்கோயில்கள் என்பன, ஐந்து ரதங்கள் பகுதியில் உள்ள கோயில்களாகும். இதில் (ஐந்து ரதக் கோயில்கள்), தர்மராஜா ரதம் மூன்று சிகரங்களையும் எண்பட்டைகளையும் கொண்டது, நீண்ட சாலை வடிவில் உள்ளது பீமரதம். இது திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அர்ஜுன ரதம் இரு நிலைகளை உடையது, சிவபிரானுக்கு அர்பணிக்கப்பட்ட கோயில். குடிசை வடிவில் இருக்கக் கூடிய ரதம் திரௌபதி ரதம் அல்லது கொற்றவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். எதிரே உள்ள சகாதேவ ரதம் தூங்கானை மாடக் கோயில். கட்ட டக் கோயிலுக்கு உதாரணம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களிலேயே பெரியதும் மிகச் சிறப்புற்றதும் காஞ்சியில் இருக்கும் கைலாசநாதர் கோயில். அன்று இதுதான் மிகப் பெரிய கோயில் என்பதால் பெரிய திருக்கற்றளி என்று அழைக்கப்பட்டது. இது இராஜசிம்மேச்வரம் எனப்பட்ட து. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று கருவறைகள் கொண்ட பெரிய கோயில் பரமேச்வர விண்ணகரம் எனப்படும். இந்தக் கோயிலின் விமானம் பெரியது. கோயிலின் திருச்சுற்றில் பல்லவர்களது வரலாறு சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த பல்லவர் காலக் கோயில்கள் எல்லாவற்றிலும் விமானம் பெரியவை. ஆயினும் அவை 30-40 அடிகளுக்கு மேல் இருக்காது. கற்களை அடுக்கிச் சுவரை எழுப்பிய பிறகு அதன் மீது சிற்பங்களை உண்டாக்குவது பல்லவர் காலக் கலை.
பாண்டியர் காலத்திலும் குடுமியான்மலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம், ஆனைமலை போன்ற பல இடங்களிலும் மலைகளைக் குடைவித்து மண்டபக் கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இதுபோல, தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அதியமான் மன்னர்கள் நாமக்கல்லில் நரசிம்மப் பெருமாளுக்கும் பள்ளிகொண்ட பெருமானுக்கும் இரண்டு குடைவரைக் கோயில்களை உண்டாக்கியுள்ளார்கள்.
அடுத்து சோழர் காலம். விஜயாலயச் சோழன் தொடங்கி இராஜராஜ சோழன் காலம் வரை, பல்லவர் மரபை ஒட்டியே சிறிய அளவில் கோயில்கள் எழுப்பப் பட்டன. செங்கற்களினால் ஆன கோயில்கள் கற்றளிகளாக ஆக்கப்பட்டன. இருந்த போதிலும் எந்தக் கோயிலின் விமானமும் 30 அடியைத் தாண்டவில்லை (சுமாராக). அப்படிப் பார்த்தால், இராஜசிம்ம பல்லவனால் காஞ்சீபுரத்தில் கட்டப்பெற்றிருந்த கைலாசநாதர் கோயில்தான் இராஜராஜ சோழன் காலத்துக்கு முன்பு வரை மிக உயரமான கோயில். அதன் காரணமாகவே அந்தக் கோயில் மாத்திரம் பெரிய திருக்கற்றளி என்று அழைக்கப்பட்டது (10ம் நூற்றாண்டு வரை)
சோழர் காலக் கோயில்கள் உயரம் குறைவு என்று சொன்னாலும் (அதாவது 10ம் நூற்றாண்டு வரை), கோயிலின் அடிப்பகுதியில் இராமாயணம் மற்றும் புராணக் காட்சிகள் சிறுசிறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய இட த்தில் எப்படி இவ்வளவு அழகாகச் செதுக்கியுள்ளார்கள் என்று நாம் பார்த்தாலே வியப்பு தோன்றும். இதனை சோழர் கால ஒப்பற்ற கலைப்படைப்புகள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட முடியும். இதற்கு உதாரணம் கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயில் (இதனை குடந்தை கீழ்க்கோட்டம் என்று வரலாறு குறிப்பிடும்), திருப்புறம்பியம் சிவன் கோயில், பசுபதி கோயில் என்று அழைக்கப்படும் புள்ளமங்கை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சுருக்கமாகச் சொல்வதானால், அழகிய சிறிய சிற்பங்கள் பல இருந்தாலும், இராஜராஜசோழன் காலத்துக்கு முன்பு வரை கோயிலின் விமானம் 30 அடியைத் தாண்டவில்லை. சில கோயில்களில் விமானம் செங்கல் கட்டுமானமாகவும் இருந்தன. செங்கல்லினால் கட்டப்படுவதால் எடை குறைவாக இருந்தன. அதனால் ஒரு சில கோயில்கள் 40 அடியையும் எட்டின.
இராஜராஜன் தன்னுடைய வெற்றிப் பெருமிதத்தையும், பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் , தக்ஷிண மேரு என்று சொல்லப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலை முற்றிலும் கற்றளியாக 200 அடிகளுக்கு மேல் கட்டினான். பரந்த திருச்சுற்றும், திருக்கோயிலுக்கு இரண்டு வாயில்களையும் வைத்துக் கட்டினான். அந்தச் சமயத்தில் இந்தியாவிலேயே மிகப் பெரிய விமானம் அமைந்த கோயில் அதுதான்.
இதனை இப்போது ஒப்பிட்டால், அதுவரை காணப்பட்ட கோயில்களைப் போல் ஆறு மடங்குக்கும் அதிகமான உயரம். 14 மாடி எல்.ஐ.சி கட்டிடத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் ஒருவர் 100 மாடிக் கட்டிடத்தை எழுப்புவதற்கு ஒப்பானது. சரியாமல் நிமிர்ந்து நிற்கவேண்டும், அதற்கு என்ன என்ன செய்யவேண்டும், அதற்குத் தேவையான கற்களை எங்கிருந்து எப்படிக் கொண்டுவரவேண்டும் என்று பலரும் ஆராய்ந்து ஆரம்பித்து வெற்றிகரமாகச் செய்த பணி அது. இப்போது யோசித்தாலும், எவ்வளவு பெரிய முயற்சியை இராஜராஜ சோழன் மேற்கொண்டிருந்தான் என்பது நமக்குப் புரியும்.
அவனது காலத்துக்குப் பிறகு அவன் மகன் இராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகப் பெரிய கோயிலை எடுப்பித்தாலும் அதன் உயரம், தக்ஷிண மேருவைவிடக் குறைவாகவே இருக்கும்படிப் பார்த்துக்கொண்டான்.
சோழர் காலம் வரை, கருவறை விமானமே (ஸ்ரீவிமானம் என்று குறிப்பிடப்படும்) மிக உயரமாக இருந்துவந்தது. கோபுரம் என்ற சொல்லே தமிழகத்துக்கு உரிய சொல். (இதில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. பழையாறை வட தளிக் கோயிலில் (சோமநாதேஸ்வரர் கோயில்) இராஜகோபுரம் என்று சொல்லப்படும் முன் கோபுரம் மிகப் பெரியதாக இருந்திருக்கவேண்டும். கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், பிறகு மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டிருந்தாலும் தற்போது பாதி கோபுரம்கூட இல்லாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதுபோலவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு முன்பு இராஜகோபுரம் போன்ற அமைப்பு அரைகுறையாக இருப்பதை அந்தப் பகுதியில் பார்த்திருக்கிறோம். இவை எந்தக் காலத்தில் கட்டப்பெற்றன என்பதே அந்தச் சந்தேகம்).
12, 13ம் நூற்றாண்டில், அதாவது இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலிருந்து நான்கு புறமும் கோபுரம் கட்டும் மரபு உண்டானது. அப்போதும் அடிப்பகுதி மிக அகலமாகவும் மேற்புறம் செங்கல் கட்டுமானம் கொண்டும் 100 அடிகளுக்கு மிகாமல் கோபுரம் கட்டப்பட்ட து. தில்லை நடராஜர் கோயிலில் இப்படிப்பட்ட கோபுரங்கள் எழுப்பப்பட்டன. அதனால் அந்தக் கோயில் எழுநிலைக் கோபுரம் என்று பெயர் பெற்றது.
சோழர் காலத்திற்குப் பிறகு விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் புகழ்வாய்ந்த கோயில்கள் அனைத்திலும் வானளாவும் கோபுரம் எழுப்பும் மரபு தோன்றியது. இப்படி, காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை போன்று பல கோயில்களில் பெரிய இராஜகோபுரங்கள் எழுப்பப்பட்டன. அடிப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கற்களாலும் அமைந்தன. விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயர் 180 அடிக்கு மேல் கோபுரங்களை திருவண்ணாமலை, காஞ்சி, தில்லை கோயில்களில் அமைத்தார். அவருடைய காலத்தில் கோபுரம் எழுப்பும் பணி சிறப்புற்று விளங்கியது. சில கோயில்களில் அடிப்பகுதி கருங்கற்களைக்கொண்டு எழுப்பி, மேல் பகுதியை முடிப்பதற்குள் அவரது காலம் முடிந்துவிடவே, மேற்கொண்டு பணி நடைபெறவில்லை. இத்தகைய கோபுரங்களையும் மக்கள் இராயர் கோபுரம் என்றே அழைத்தனர் (திருவெள்ளறை, திருவரங்கம் போன்ற கோயில்களில் இத்தகைய அரைகுறை கோபுரங்களைக் காணலாம்-திருவரங்கத்தில் தற்காலத்தில் மிகப் பெரிய கோபுரம் எழுப்பப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்)
விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக வந்த நாயக்க மன்னர்களும் இத்தகைய கோபுரப் பணிகளைச் செய்திருக்கின்றனர்.
எனக்கு மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி கோயிலின் கோபுரங்களை ஒரு உதாரணத்திற்குக் காட்டவேண்டும் என்ற ஆசையால் இங்கு கொடுத்துள்ளேன். அந்தக் கோவிலில் ஐந்து பெரிய கோபுரங்களும், சிறிது உயரம் குறைவான நான்கு கோபுரங்களும் உள்ளன. அதைத் தொடர்ந்து நாம் புள்ளமங்கை கோயில் சிற்பங்களைப் பார்ப்போம்.
இராஜகோபுரம் முன்புறம் மற்றும் உள்ளிருந்து எடுத்த புகைப்படம்
வேறு இரண்டு கோபுரங்கள்
இனி
வருவது,
புள்ளமங்கை
கோவில் சிற்பங்கள்.
அர்த்தமண்டபத்தின் வெளிப்புறச் சுவர்கள், விமானத்தின் அதிஷ்டானம் மற்றும் கண்டப் படைப் பகுதிகளில் பல்வேறு சிறிய அளவிலான சிற்பங்கள் இருக்கின்றன. சுமார் 60க்கும் மேற்பட்ட சிற்பங்கள். அவையே இந்தக் கோயிலின் பெருமைக்கு அழகு சேர்க்கின்றன. இவை இராமாயணம், பாகவதம் போன்றவற்றிலிருந்து அமைந்த காட்சிகள்.
நாம் இன்னும் கோயிலின் வெளிப்புற அழகை ரசித்துக்கொண்டு இருந்தாலும், இன்றைய பதிவின் ஆரம்பத்தில் சிவ தரிசனத்தைப் பெற்றுக்கொண்டு பிறகு வெளிப்புற அழகை ரசிப்பதைத் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.
கருவறைக்கு முந்தைய அர்த்த மண்டபத்தில் இருக்கும் தூண்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்டது. அந்தத் தூண்களில் அழகிய சிறிய சிற்பங்கள் இருக்கின்றன. ஆனால் அர்த்தமண்டபத்தின் கதவுகள் சார்த்தப்பட்டிருந்ததால் தெளிவாக படம் பிடிக்க இயலவில்லை.
ஆடுதுறைப் பெருமானே.. உன் அருளால் உன் தரிசனம் எங்களுக்கு வாய்த்தது.
இந்தக் கல்வெட்டைப் பார்த்தபோது எனக்கு பாரிஸ் லூவர் மியூசியத்தில் பார்த்த ஹாமுராபி சட்டம் நினைவுக்கு வருகிறது. அதில் அரசின் சட்டங்களை பெரிய ஒரு கருங்கல்லில் செதுக்கியிருப்பார்கள். அதையெல்லாம் ஒரு பதிவுத் தொடரில் பகிரவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் லூவர் மியூசியத்தில் எடுத்த பல சிற்பங்கள் ஓவியங்கள் கொஞ்சம் நிர்வாணத்தன்மை கொண்டவை. கலாச்சாரத்தில் அது ஒரு பெரிய விஷயம் அல்ல. இருந்தாலும் எங்கள் பிளாக்கில் அவைகள் வெளிவருவதில் கஷ்டம் இருக்கிறது. இருந்தாலும் அவ்வளவு அழகிய சிற்பங்களை எப்படிப் பகிர்வது என்று யோசிக்கிறேன்.
இன்று பதிவு ரொம்பவே நீளமாக ஆகிவிட்டதல்லவா? அடுத்தவாரம் தொடரலாமா?
(தொடரும்)
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அதியமான் மன்னர்கள் நாமக்கல்லில் நரசிம்மப் பெருமாளுக்கும் பள்ளிகொண்ட பெருமானுக்கும் இரண்டு குடைவரைக் கோயில்களை உண்டாக்கியுள்ளார்கள்.//
பதிலளிநீக்குஇதையும் சொல்ல வந்தேன்...கூடவே திருமய்யம் கோவிலும் கோட்டைக்குள் குடைவரைக் கோயில் பாண்டியர்கள் காலத்தில் கட்டபட்டது என்று தெரிந்த நினைவு.
கீதா