3.2.26

சிறுகதை : ஏன் இந்த மயக்கம்.. - பானுமதி வெங்கடேஸ்வரன்

 

 (இது ஒரு சிம்பிள் ஜாலி  கதை)

ஏன் இந்த மயக்கம்..

பானுமதி வெங்கடேஸ்வரன்


தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தாத்தா திடீரென மயங்கியதும் வெலவெலத்துப் போனான் ராகுல். அவசரமாக 108 ஆம்புலென்ஸை தொடர்பு கொண்டான்.

"என்னாச்சு?" நன்னாத்தானே இருந்தார்..? பதறினார்கள் அம்மாவும், அப்பாவும்.

"தெரியலை, இதுக்கு முன்னால இப்படி நடந்திருக்கா?" என்று கேட்டான் ராகுல்.

"இல்ல.. என்னாச்சுனு தெரியலையே?" தாத்தா மெல்ல கண்விழித்தார்.  அவருடைய கண்களைத் துடைத்து, கொஞ்சமாக தண்ணீர் அருந்தச் செய்து, மின்விசிறியை சுழல விட்டு, ஜன்னல் கதவை திறந்தான் ராகுல். தாத்தாவின் பார்வை அவன் மீதே நிலைத்தது.

"ராகுல்.." என்று அவர் என்னவோ சொல்லத் தொடங்க ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.

"ஆம்புலன்ஸெல்லாம் எதுக்கு? ஐயாம் ஆல்ரைட்" என்றார் பலவீனமாக.

நான் ஆம்புலன்ஸில் போறேன், நீ பின்னால வா" என்ற அப்பா, சட்டையை மாட்டிக் கொண்டார். 

ஆஸ்பத்திரியில் வழக்கமான பரிசோதனைகள் எல்லாவற்றையும் செய்தார்கள். "பி.பி. நார்மல். இஸ் ஹி டயபடீக்?"

"நோ.."

"குட்! தேவையான அளவு தண்ணி குடிக்கறாரா?, டீ ஹைட்ரேஷனால் கூட மயக்கம் வரும்"

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், ராகுலின் அப்பா தன் அப்பாவை பார்த்தார். அவர் தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறேன் என்பது போல தலையசைத்தார்.

"கவலப்படும்படி எதுவும் இருக்கறதாக தெரியவில்லை. அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்" என்ற டாக்டர். நர்ஸிடம் "N S மட்டும் ஸ்லோ ஐ.வி.ல குடுங்க" என்று கூறி விட்டு, இவர்கள் பக்கம் திரும்பி, "வெயிட் பண்ணுங்க," என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குத் திரும்பினார். 

ராகுலும், அவன் அப்பாவும் வெயிட்டிங் லவுஞ்சில் போடப்பட்டிருந்த ஜில்லென்றிருந்த மெட்டல் நாற்காலிகளில் அமர்ந்து, தங்கள் செல் ஃபோன்களை எடுத்துக் கொண்டனர். சற்று நேரத்தில் நீரஜா அழைத்தாள். ராகுல் ஃபோனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்றான்.

எதிர் முனையில் "என்ன சொல்லிட்டயா?" என்றாள் ஆர்வ நீரஜா. 

"எங்க..? தாத்தாக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கோம். இப்போ நானும், அப்பாவும் ஹாஸ்பிடலில்தான் இருக்கோம்."

"அடப்பாவமே என்னாச்சு?"

"நான் தாத்தாகிட்ட.." என்று அவன் ஆரம்பிக்க, அவன் அப்பா, அவனை கையசைத்து அழைத்தார். "அப்பா கூப்பிடறார், ஐ வில் கால் யூ லேட்டர்" என்று செல்ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அப்பாவை நோக்கி நடந்தான்.

"ரிசல்ட் எல்லாம் வந்துடுத்தாம், டாக்டர் கூப்பிடறார்" என்றபடியே அப்பா டாக்டரின் கன்சல்டேஷன் அறையை நோக்கி நடக்க, ராகுலும் பின் தொடர்ந்தான்.

உள்ளே நுழைந்தவர்களை உட்காரச் சொல்லி கை காட்டிவிட்டு, மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். மேஜையில் இருந்த ரிப்போர்ட்டுகளை பிரித்துப் பார்த்தவர், "நத்திங் அலார்மிங். அவர் வயசுக்கு ஹீ இஸ் குட்! ட்ரிப்ஸ் ஏத்தி முடிச்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்" என்று மருத்துவ ரிப்போர்ட் ஃபைலை இவர்கள்பால் தள்ளினார். பிறகு நர்ஸை அழைத்து, பேஷண்ட் சுந்தர்ராஜன் டிஸ்சார்ஜுக்கு ரெடி பண்ணுங்க" என்றார்.

இவர்கள் டாக்டருக்கு நன்றி கூறி,  வெளியே வந்து, பணம் கட்ட காத்திருந்த பொழுது, அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது. 

"என்னடா, ரெண்டு பேரும் ஃபோனை எடுக்க மாட்டேங்கறீங்க? தாத்தா எப்படி இருக்கார்?"

"இங்க சிக்னல் பிராப்ம் இருக்குமா, தாத்தாக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, ஹி இஸ் ஆல்ரைட், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவோம்."

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். மாலை காபி அருந்தும்போது தாத்தா அவனிடம், "நீ எங்கிட்ட சொன்ன விஷயத்தை உங்க அப்பா, அம்மாவிடம் சொன்னாயா?" என்றார்.

'என்னது' என்பது போல அம்மாவும், அப்பாவும் பார்க்க, தாத்தா குறும்பாகச் சிரித்தபடியே, "அவன் சொன்ன விஷயத்தை கேட்டுதான் எனக்கு மயக்கமே வந்தது" என்றார்.

"அப்படி என்னடா சொன்ன?' என்றார் அப்பா.

ராகுல் தர்மசங்கடமாய் நெளிந்தான். "என்னடா அசடு வழியற? லவ் மேட்டரா? தைரியமா சொல்லு, நீ ஜாதி விட்டு ஜாதில கல்யாணம் பண்ணிக்க போறதா இருந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்ல" என்று ரொம்ப பரந்த மனதோடு சொல்ல,

"யெஸ், நோ." என்ற ராகுல் தொடர்ந்து, தன் செல்ஃபோனைத் திறந்து, "ஷி இஸ் நீரஜா, நான் இவளதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றவன் சிறிது இடைவெளி விட்டு "இவளும் நம்ம ஜாதிதாம்பா" என்றான்.

"என்னது? எனக்கே மயக்கம் வரும் போல இருக்கே.." என்றதும், தாத்தா, "எனக்கு மயக்கம் வந்ததில் என்ன ஆச்சர்யம்? என்னோட பேரக் குழந்தைகளில் இண்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணிக்காத முதல் ஆசாமி இவன்தான். சரி, சீக்கிர்ம் நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடு பண்ணுங்க" என்றார்.

ராகுல், "சக்ஸஸ்" என்று நீரஜாவிற்கு மெசேஜ் அனுப்ப, அவள் முத்த ஸ்மைலி ஒன்றை பதிலாக அனுப்பினாள்.

4 கருத்துகள்:

  1. வித்தியாசமான கதை. தாத்தாவை தூக்கிட்டு ஹாஸ்பிடல் ஓடுற குடும்பம், எல்லாருக்கும் வரும் பதற்றம், கடைசில எல்லாம் நல்லபடியா முடிகிறது—இந்த எல்லாமே கதையை லைட்டா, ஆனால் சொல்ல வர்ற விஷயத்தை ஸ்ட்ராங்கா கொண்டு போகுது. பெரிய உபதேசமோ, கனத்த பேச்சோ இல்லாம, சும்மா சாதாரண குடும்பக் கதையா சொல்லிக்கிட்டே சமூக விஷயங்களை நம்ம மனசுல நுழைய வைக்கிற இந்தக் கதை ரொம்ப அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கு. பேரன் “அதே சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறேன்”ன்னு சொன்ன உடனே தாத்தா மயங்கிப் போறது—இதிலேயே கதையின் ட்விஸ்ட் அட்டகாசமா வேலை செய்கிறது. படிச்சதும் சிரிச்சுக்கிட்டே “நாம இன்னும் இப்படி யோசிக்கிறோமா?”ன்னு ஒரு நிமிஷம் நின்று யோசிக்க வைக்கிறது—that’s the beauty of it.

    பதிலளிநீக்கு
  2. ஒரே ஒரு ஊர்லே என்ற கதையை எழுதிய "ஸ்கை" யார் என்ற விவரம் வெளியிடப்பட்டதா? சமயத்தில் நான் ஒரிரண்டு வாரங்கள் எங்கள் ப்ளாக் பக்கம் வராமல் இருந்ததுண்டு. "என்னது? எம்ஜியார் செத்துட்டாரா" என்று கேக்கிறியே என்று காலை வாராதீர்கள்(: ஸ்கை மர்மம் விடுபட்டதா இல்லையா? இரண்டாம் பாகம் வருகின்றதா இல்லையா?

    பதிலளிநீக்கு
  3. ​அவன் அவன் பொண்ணு கிடைக்கலியே என்று நித்ய பிரம்மச்சாரியாய் இருக்கிறான். நீங்க என்னடான்னா சேம் கேஸ்டீல் லவ் என்று 'கதை' விடுகிறீர்கள்!

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!