5.2.26

குடையுமில்லே படையுமில்லே கூதலுக்கு ஆதரவா தாவணிய நீ பிழிய தலைதுவட்ட நான் வரவா

 

பிடித்த பாடல் என்ன, அந்தப் பாடலின் தாக்கம் ஏதாவது உங்கள் வாழ்வில் இருந்தால் சொல்லுங்களேன்  என்று ஆரண்யநிவாஸ் அவர் வாட்ஸாப் குழுமத்தில் அன்றைய டாபிக்காக கேள்வி கேட்டிருந்தார்.

என் டைரியில் வருடம் தவறாமல் நான் எழுதி வைத்துக் கொள்ளும் வரிகள் சில உண்டு.  முக்கியமான பாடல் வரி  "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?  வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?  இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும்.  இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"

இதை மட்டும் அங்கே குறிப்பிட்டிருந்தேன்.  மேற்கொண்டு இங்கே கொஞ்சம் கதைக்கிறேன்.  

ப்போது அவர் பாஸாக ஆகவில்லை!  'வா வா வா கண்ணா வா' பாடல் எனக்கும் பாஸுக்கும் இடையில்  ஒரு சங்கேதப்படலாக இருந்தது.     கவனிக்கவும் சந்தேகம் என்று படித்து விடப் போகிறீர்கள்!  இது கூட வேண்டுமென்று வைத்துக் கொண்டது இல்லை.  நாம் முயற்சி செய்யாமல் ஒரு விஷயம் தானாக எப்படி உருவாகிறது பாருங்கள்... 

ஒருமுறை கேசெட்டில் அந்தப் பாடல் போட்டதும், அந்த நேரம் பார்த்து  அவர் இறங்கி எங்கள் வீட்டுக்கு வந்து ஏதோ சொல்லி, பேசிச் சென்றார்.  "ஓ..  இதுக்குதான் வா வா வா என்று அவன் பாட்டு போட்டானா.." என்று பாட்டி கேட்டார்.  அடுத்தமுறை அதே பாடல் இன்னொரு முறை இன்னொரு நாள் போடும்போது அவர் வரவில்லை.  மாலை கல்லூரி விட்டு வீடு வந்துவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்தவரிடம் பாட்டி 'பாவம்...   இவன் மதியம் அந்தப் பாட்டைப் போட்டு விட்டு உனக்காகக் காத்திருந்தான்" என்று கிண்டலடிக்க, "எந்தப் பாட்டு" என்று கேட்டார் பாஸ்.  "அதான்..  வா வா வா கண்ணே வா..." என்றார் பாட்டி. 

அந்த வரிகளை அவர் ஒரு கிண்டல் த்வனியில், வெக்களிக்கும் குரலில் சொன்னார்!   

"அது கண்ணா வா பாட்டி, கண்ணே வா இல்லை என்றேன்.   "அதுசரி, நீ பாட்டு போடறே என்றால் அது கண்ணே வா என்றுதானே வரவேண்டும் என்று திருப்பி அடித்தார் பாட்டி.  

அடுத்தமுறை நான் பாஸைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது இந்த பழைய உரையாடல்கள் நினைவுக்கு வர, எதற்கும் இந்தப் பாட்டைப் போட்டுப் பார்ப்போம்...  என்று கேசட்டை ஓடவிட்டேன்.

உள்ளே ரூமில் தினமலர் வாரமலர் படித்துக் கொண்டிருந்த பாட்டி "அவ்ளோதான்..  போட்டுட்டான் பாட்டை..  வந்துடுவா இப்போ"  என்று சொல்லிக்கொண்டே புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தார்.  அவர் புத்தகம் படிக்கும் பாணியைச் சொல்ல வேண்டும்.  தரையில் அல்லது அங்கிருந்த மரக்கட்டிலின் மேலே ஜன்னலை ஒட்டி கால்களை நீட்டி அமர்ந்து இரண்டு கைகளாலும் புத்தகத்தைப் பிடித்து மடியில் வைத்து கண்ணாடி போட்டுகொண்டு படிப்பார். .  

அடுத்த ஓரிரு நிமிடங்களில் புயலென உள்ளே நுழைந்தார் பாஸ்.  நான் மட்டுமே ஹாலில் இருக்க, "என்ன விஷயம்?  இன்னிக்கி சண்டே..  அப்பா வீட்ல இருக்கார்..  இப்படி எல்லாம் வரமுடியாது..சீக்கிரம் சொல்லுங்க" என்று பரபரத்தார்.  அன்று முதல் அது அதிகாரபூர்வ அழைப்புப் பாடலாக எங்களுக்குள் ஆனது!

ஒரு முறை ஏதோ ஒரு காரணத்தால் அவர் வீட்டு பால்கனியில் மகா சோகமாக  உட்கார்ந்திருந்தார் பாஸ்.  எங்கள் வீட்டு வாசலில் நின்றால் அவர் வீட்டு பால்கனி தெரியும்.  கண் கலங்கி உட்கார்ந்திருந்தார். என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள நான் முயன்றும் சரியான பதில் வரவில்லை.  சோகம் மாறவில்லை.  காதல் நாட்கள் அல்லவா...  நான் உடனே அந்த மூடை மாற்றத் தீர்மானித்தேன்.  கேஸட்டைப் போட்டேன். 

கீழ் வீடான எங்கள் வீட்டு ஹாலில் இருந்த ஜன்னலில் உள்ள இடத்தில்தான் டூ இந்த ஒன்னை வைத்திருப்பேன்.  நேஷனல் பானசானிக் ஸ்டீரியோ!ஜன்னல் கதவுகளைத் திறந்து, டேப்-ரெக்கார்டரைத் திருப்பி வெளிப்பக்கமாக ஸ்பீக்கர்கள் பார்க்கும்படி வைத்து ஒலிக்க விட்டால் தெருவே அதிரும்! 

மதுரை F M வானொலியிலிருந்து பாடல்களை தெளிவாக காலி கேசெட்டில் பதிந்து வைப்பேன்.  அதை எடுத்து FF செய்து, சரியாக நிறுத்தி, "அந்த" வரிகளை சின்னதாக வைத்து சோதித்துக் கொண்டு, மீண்டும் சரியாக நிறுத்தி சத்தத்தைக் கூட்டி ஆன் செய்தேன்..  அமைதியான அந்த இடத்தில SPB குரல் சற்றே சத்தமாக ஒலித்தது.

"சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா?  கங்கை நீர் காயக் கூடும் கண்ணீர் அது காயுமா"

நிறுத்தி விட்டேன்.  அங்கே மேலே ஒரு புன்னகை மலர்ந்தது.

============================================================================================ 

சமீபத்தில் உறவு ஒன்று கொடுத்த பார்ட்டியில் மறுபடி வசந்த்பவன் WB சென்றபோதுற பேப்ர் ரோஸ்ட் என்று போட்டிருந்ததைப் பார்த்து ஆர்டர் செய்தேன்.  சார் ஒரு ஆளா சாப்பிட முடியாது என்று பயமுறுத்தினார் சர்வர்.  பேப்பர் ரோஸ்ட்தானே?  மெல்லிசாக தானே இருக்கும்? என்று எக்ட்டேன்.  சற்று தயங்கி ஆமாம் மெலிசாத்தான் இருக்கும் என்றார். என் இளையவன் இதை மகாராஜா தோசை என்றான்!

ஆர்டர் சர்வ் ஆனதும் எடுக்கப்பட்ட வீடியோ இது.  நாங்கள் அறுவர் இதை ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டோம்.  சர்வரைக் கூப்பிட்டு இதுதான் உங்கள் ஊரில் பேப்பர் ரோஸ்ட்டா? என்று கேட்டேன்.  "ஏன் சார்?"  என்றார்.  "மதுரை போயிருக்கிறீர்களா?"   "ஐயோ..  மதுரை மாதிரி எல்லாம் வருமா சார்?" என்று டிஃபன்ஸ் ஆடினார் சர்வர்.  "அங்கே போய் கோபு ஐயங்கார் கடை என்று கேளுங்கள்.  அங்கே சாப்பிட்டு பாருங்கள்.  இப்படி நடுவே காடாத்துணி போல தோசை மாவாக இருக்கே..  அங்கே மெலிதாக இந்தப் பத்திலிருந்து பார்த்தால் அந்தப் பக்கம் நீங்கள் தெரியும் அளவு இருக்கும்.  அதுதான் பேப்பர் ரோஸ்ட்.  எடுத்து சாப்பிட்டால் சில நொடியில் நாக்கில் கரைந்து விடும்" என்று சொல்லி விட்டு வந்தேன்!  ராம்நாடாம்!  




=============================================================================================================

சென்ற வாரம் என் நண்பன் தொலைபேசி அவனுக்கு பேத்தி பிறந்திருக்கும் தகவலை சந்தோஷமாகச் சொன்னான்.  எனக்கும் சந்தோஷமாக இருந்தது.  அவனுடைய பெண்ணை ஏழாவது எட்டாவது படிக்கும் பெண்ணாக இருப்பதிலிருந்து தெரியும்.  எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜைக்கு வருடம் தவறாமல் வருவாள்.  அந்த மகிழ்ச்சியில் இதை எழுதி அனுப்பி அவனுக்கு அனுப்பினேன்.  "ஃபிரெண்டு ஹேப்பி அண்ணாச்சி!"

சுட்டிப்பெண் பெற்றெடுத்த 
குட்டி தேவதை! 
பட்டு உடல் கொண்டு 
மொட்டு இதழ் திறந்து  
புன்னகைப் பூ சிந்தும் 
சிட்டுக்குருவி! 
மனம் மலர வந்த  மரிக்கொழுந்து   - மணக்கும் 
எங்கள் குலக்கொழுந்து! 
இல்லம் தழைக்க இன்பமாய் வந்த 
உள்ளம் கவர் கள்ளி !
பட்ட வலிகள் யாவும் 
சட்டென மறந்ததடி - உன்னைத் 
தொட்டுத் தூக்கியதும்! 
கோபிக்காதே.. 
உன் அழுகைச் சத்தம் கூட 
இசையாகவே கேட்கிறது எனக்கு! 
நல்ல தமிழ்ச் சொல்லெடுத்து 
உள்ளம் பூரிக்க வாழ்த்துகிறேன், 
பல்லாண்டு பல்லாண்டு  பல்லாண்டு 
வாழ்கவென்று 

சென்ற வெள்ளிக்கிழமை நான் எழுதியது கீழே...

கணவனுக்காக காத்திருந்த 
ஊர்மிளைக்கு 
காலம் கொடுத்த 
வரம்தான் தூக்கம்.

கரை புரளும் விரக ஏக்கம் 
தணித்தது அந்தத் தூக்கம்

சீதையின் கற்புக் கனல் 
தீயை வென்றது
​ஊர்மிளையின் தூக்கம் 
பிரிவை வென்றது 
விரகம் கொன்றது 

==============================================================================================

ரசிக்க வைத்த FB ஸ்டேட்டஸ்!  கணேஷ் பாலா! 



==============================================================================================

சில வாரங்களாக மனதில் இருக்கும் இந்த இரு பாடல்களை இன்று பகிர்ந்து விடுகிறேன்.

காதல் என்கிற உணர்வு இருக்கிறது பாருங்கள்.. அது ஒரு சுகவேதனை. "படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயதுக் கோலம் இது யார் மீது பழிவாங்கும் சோதனை..   உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை" என்று பாடினார் புலமைப்பித்தன்.

அந்த Feel இந்தப் பாடலின் காட்சியில் நன்றாக வெளிப்பட்டிருக்கும்.  ஹீரோ, ஹீரோயின் இருவருமே இளம் வயது என்பது கூடுதல் ப்ளஸ்.  அவர்களின் இளமை கண்களுக்கு இனிமை.

நடுவில் ஒரு காட்சி.  குழந்தைகளுக்கு தலை துவட்டி விடுவாள் அவள்.  இவனும் சட்டென சென்று அமர்ந்து தன் நனைந்த தலையை அவளுக்காக நீட்டுவான்.  அவள் சட்டென குளிருந்து சிரித்து துண்டை அவன் முகம் மேலே போட்டு விட்டு ஓரமாகச் சென்று மென்னகை புரிவாள்.

"குளிரடிக்கும் சாரலுக்கு குடை பிடிக்க வா மயிலே" என்று அவன் பாட, அவள், "குடையுமில்லே படையுமில்லே கூதலுக்கு ஆதரவா தாவணிய நீ பிழிய தலைதுவட்ட நான் வரவா" என்று கேட்கும் நாயகி தமிழில்!

இன்னும் சொல்லாத காதல்;  சொல்லாவிடினும் பரஸ்பரம் புரிந்துகொண்ட காதல்.  காதலைச் சொல்லி கைபிடித்து இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய..  இந்த ஆரம்ப காதல் வேதனை பாடலில்..  பாருங்களேன்..

எவனோ ஒருவன் / ஒருவள் தன்னிடம் வந்து தன் காதலைச் சொல்வான்/ள் என்று எதிர்பார்ப்பதாக பாடுகிறார்கள்.  காதலில் அவர்கள் என்னென்ன செய்வார்கள், என்னென்ன எதிர்பார்ப்பு என்று பாடல். பாடல் முடியும்போதும் சொல்லபப்டாத காதல் வேதனை சுகமாகத் தொடக்கிறது.

ஹம் ஹை ராஹி ப்யார் கே என்னும் படத்தில் குமார் சானுவும் அல்கா யாக்னிக்கும் பாடிய பாடலுக்கு இசை இரட்டையர்கள் நதீம்-ஷ்ரவன்.  காட்சியில் அமீர்கான்-ஜூஹி   ஜூஹி தமிழ்ப் பெண்ணாக வருவார்.

"Mujhse Mohabbat Ka Izhar Karta" (film: Hum Hain Rahi Pyar Ke)is a popular romantic song based primarily on Raag Yaman . This raga is known for its sweet, romantic, and soothing tones, which perfectly captures the sentiment of the song.

=========================================================================================

அந்த காலகட்டத்தில் கிசுகிசுவாக சொல்லப்பட்டவை அப்புறம் காலப்போக்கில் அல்லது காலம் கடந்து அதன் வீர்யம் குறைந்த நாட்களில் சம்பந்தப்பட்டவர்களே உடைத்து விடுகிறார்கள்.
ரிஷி கபூர்...
'பாபி' வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன காலகட்டத்தில் பம்பாய் சென்ற ஏ வி எம் நிறுவனத்தார் தாங்கள் தயாரிக்கும் ஒரு படத்தில் ரிஷியை நடிக்கக் கேட்டிருக்கின்றனர்.
யார் ஹீரோயின் என்று கேட்டிருக்கிறார் ரிஷி.
ஜெயசுதா என்று சொல்லி இருக்கிறார்கள் இவர்கள்.
அவரை நான் பார்க்க வேண்டுமே என்று சொல்லி இருக்கிறார் அவர்.
'இல்லை புகைப்படங்கள் இருக்கின்றன மேலும் அவர் நடித்த படத்தின் ரஷ் இருக்கிறது பாருங்கள்' என்று சொன்னாலும் ரிஷி ஜெயசுதாவை சந்திக்க வேண்டும், அதுவும் 'தனியாக' சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்திருக்கிறார். 'அடுத்த மாதம் சென்னை வருவேன். அங்கு ஏற்பாடு செய்யுங்க'ள் என்று சொல்லி இருக்கிறார்.
தேவர் படம் ஒன்றுக்காக சென்னை வந்த அவரிடம் ஜெயசுதாவை அழைத்துச் சென்றிருக்கிறார்கள் ஏ வி எம் குமரன் உள்ளிட்டவர்கள்.
ரிஷியோ, நீங்கள் எல்லாம் வெளியே செல்லுங்கள். நான் அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி இருந்திருக்கிறார். ஜெயசுதா பயந்திருக்கிறார்.
'கவலைப்பட வேண்டாம். நாங்கள் வெளியேதான் இருக்கிறோம்' என்று அவர்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டு வெளியே நின்றார்களாம் ஏ வி எம் குழுவினர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார்களாம்.
'என்னதான் பேசினார்களோ' என்கிறார் ஏ வி எம் குமரன். இவர்கள் உள்ளே சென்று ரிஷியிடம் தேதிகள் கேட்க, அவரோ 'ஊருக்குப் போய்ச் சொல்கிறேன்' என்று சென்று விட்டாராம்.
அப்புறம் போன் செய்து கேட்டால், 'ஜெயசுதா வேண்டாம், சுலக்ஷணா பண்டிட் என்று இங்கு ஒரு நடிகை இருக்கிறார். அவரைப் போடுங்கள்' என்று சொல்லி இருக்கிறார்.
அப்பாவிடம் - ஏ வி எம் செட்டியாரிடம் - இவர்கள் விவரம் சொல்ல, 'வேண்டாம், விட்டு விடுங்கள். ஜெயசுதாவுடன் நடிக்க சம்மதித்தால் சரி, அல்லது இங்கிருந்து நாம் சொல்லும் வேறொரு நடிகையை ஒத்துக் கொள்ளட்டும். அவர் இஷ்டத்துக்கு வேண்டாம் 'என்று அவர் சொல்ல, முயற்சி முறிந்து போனதாம்.
சரி, கொடுத்த 50,000 ரூபாய் அட்வான்ஸை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள் ஏ வி எம் குழுவினர். 'பம்பாயில் ஒருமுறை, சென்னையில் ஒருமுறை சந்தித்து பேசி (டிஸ்கஸ்) செய்திருக்கிறோம். பணம் சரியாகி விட்டது' என்று விட்டாராம் அந்த அல்பம்.
வடநாட்டு நடிகர்கள் இப்படி அல்பமாக நடந்து கொள்வது ஏ வி எம் முக்கு புதிதல்ல.
ஏற்கெனவே திலீப்குமார் ஒரு சிவாஜி படத்தை ஹிந்தியில் தான் நடிக்க விரும்புவதாய்ச் சொல்லி காஷ்மீருக்கும், மும்பைக்கும், சென்னைக்கும் அலைக்கழித்து, அப்புறம் அந்த படம் வேண்டாம், பாபு படத்தை ரீமேக் செய்யலாம் என்று சொல்லி அலைய வைத்து, கடைசியில் நடிக்கவில்லை என்று முடிவெடுத்தாராம்.
ஏ வி எம் செட்டியார் நடுவிலேயே பொறுமை இழந்து விட்டாராம். அவரிடமும் கொடுத்த அட்வான்சைக் கேட்டால் இதே போலத்தான் பதில் வந்ததாம்.
ஏ வி எம் குமரன் பேட்டி ஒன்றில் பார்த்தது. 

என்னுடைய முகநூல் பதிவு ஜனவரி 2025

=======================================================================================

அதே படத்தில் இன்னொரு பாடல்.  அதே ஜோடி நடிப்பில், அதே ஜோடிக் குரலில்!

காதல் சொல்லப்பட்டு விட்டது என்று சொல்லலாம்.  அந்தப் பரவசமான நிலையில் இந்தப் பாடல்..  இந்தப் பாடல் அப்போது சித்ரஹாரில் போடப்பட்டால், நான் பார்க்கிறேனோ இல்லையோ என்று உடனே எனக்கு வனமாலி சித்தியிடமிருந்து ஃபோன் வரும்,.  அப்போதெல்லாம் டயல் ஃபோன்தானே..  யார் ஃபோனை எடுக்கிறார்கள் என்று கூட காத்திராமல் பரபரப்பாக "ஏய்..   சித்ரஹார்ல ஸ்ரீராம் பாட்டு..  அவன் பார்த்துக்கிட்டிருக்கனா?  பார்க்கச் சொல்லு" என்று சொல்லி போனை வைத்து விடுவார்!  அந்த சமயங்களில் நேரில் பார்க்கும்போது 'ஸ்ரீராம் பாட்டு' என்று சொல்லிச் சொல்லி "தில்பர்க்கா தில்பர்க்கா தில்பர்க்கா" என்று பாடுவார்!

The tune of the popular song "Ghoonghat Ki Aad Se" from the film Hum Hain Rahi Pyar Ke (1993) is primarily based on Raag Shivranjani , believed to have been composed by Shankar- Jaikishan . This raga prohibits Madhyam (Ma) and Nishad (Ni), and it reflects feelings of compassion and love.


=====================================================================================






சில எழுத்துகள் சிதிலமடைந்திருந்தாலும் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்!


26 கருத்துகள்:

  1. பாடலின் தாக்கம் வாழ்க்கையில் வர காதலித்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அந்தத் தருணங்களில் இருவருக்கும் கேட்கும்படியாக ஏதாவது பாடலாவது ஒலித்திருக்க வேண்டும்.

    என் நண்பன் தி நகரில் ஒரு பெண்ணிடம் அவள் வீட்டில் காதலைச் சொன்னபோது, தென் பாண்டிச் சீமையிலே. பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது என்று சொன்னான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...

      அப்படி எல்லாம் அவசியமில்லை.  பாடல்களை ரசிக்கும் மனம் இருந்தால் போதும்.  எது இருந்தால் போதும்?  மனமிருந்தால் போதும்! (இதோ இந்த வரிகளே கூட ஒரு பாடல் வரிகளின் தாக்கம்!  கண்டு பிடிக்க முடிகிறதா?) 

      நான் முன்னர் 'மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது' பாடல் எனக்கு எப்படி பிடித்துப் போனது என்பது பற்றி சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  2. ரிஷி கபூர் பெயர் குறிப்பிடாமல் ஏவிஎம் குமரன் சொன்ன பேட்டியைக் கண்டிருக்கிறேன். தமிழக ரிஷிகபூர் கார்த்திக்காமே. அட்வான்ஸ் திரும்ப வராது, நடிக்க ஆள் வந்தால்தான் உண்டு எனப் பலரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்து, கடைசியில் அவருடைய அண்ணன் அந்தப் பணத்தை லவட்டிக்கொண்டு சென்றதுதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்த்திகைப் பொறுத்த வரை அட்வான்ஸ் வராது சரி..  ரிஷி வேறொன்றுக்கும் அல்லவா ஆசைப்பட்டிருக்கிறார்!  அவர் அவருடைய மகனைக் கண்டித்து வளர்த்தாராம்!  ஏ வி எம் பெயர் சொல்லியேதான் சொன்னார். 

      நீக்கு
  3. குருவி சுவாசம்... ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அதுதான் உடனடியாக பகிர்ந்தேன்!

      நீக்கு
  4. பேப்பர் ரோஸ்ட் என்ன விலை? சூப்பர் சைஸ். கோபு ஐயங்கார் கடை தோசையை இன்று எழுதி என்ன பயன்? முந்தாநாள் அந்தத் தெருவில்தான் இருந்தேன். நாகப்பட்டினம் ஒரிஜனல் நெய் மிட்டாய் கடையில் அல்வா சூப்பரோ சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 125 ரூபாய் என்று நினைக்கிறேன்.  அவர்கள் பணம் கொடுத்ததால் தெரியவில்லை.  இரண்டு டபரா மாவுக்கு அவ்வளவு காசு.  இதுதான் இன்றைய ஹோட்டல் நிலவரம். 

      கோபு அய்யங்கார் பேப்பர் ரோஸ்ட் பற்றி முன்னர் பலமுறை சொல்லி இருக்கிறேனே...   வீட்டில் செட்னரா வாரம் நான் அபப்டி வார்த்து மகனுக்கு போட்டபோது ரசித்து சாப்பிட்டான் அவன்!

      நீக்கு
    2. நாகப்பட்டினம் அல்வா கொஞ்சம் முறுகின பதத்தில் இருக்கும்.  பிரேமாவிலாஸ் சூப்பர்.  இந்தமுறை ஹேப்பிமென் முந்திரி அல்வா சித்தித்ததா?!!  பெங்களூரு திரும்பியாச்சா?  வர வர நம் பிரதமர் மாதிரி எப்போது பார்த்தாலும் வெளியூரிலேயே இருக்கிறீர்கள் நீங்கள்!!

      நீக்கு
  5. முதல் கவிதை மிக நன்று. படித்தவுடன் எனக்கு திருச்சி கோபு சார் எழுதியிருந்த, பஸ் ஸ்டான்டில் பள்ளிக்குச் செல்லும் குட்டிப் பெண்ணாக நண்பனின் பெண்ணைப் பல வருடங்கள் பார்த்து, பிறகு அந்தப் பெண்ணே அவருடைய மூத்த மருமகளாக அமைந்ததை எழுதியிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. அது வியப்புதான் இல்லை?

      முதல் கவிதை 'நன்று' சரி, இரண்டாவது கவிதை 'அன்று' வா?

      நீக்கு
  6. பாட்டி கெக்கலித்தது வெக்களிக்கும்... வசந்த பவனில் கேட்டேன் போன்ற வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள்.

    பதிலளிநீக்கு
  7. இன்றைய நகைச்சுவைகள் ஓகே ரகம். சிரிப்பை வரவழைக்கலை. ஆபீசில் தூக்கம், லஞ்சம் இன்னும் மாறவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆபீசில் தூக்கம், லஞ்சம் இன்னும் மாறவில்லை. //

      இது 84 - 87 ஜோக்ஸ்.. இப்போது அப்படி இருக்க முடியாது என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  8. தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் படையுமில்லை என்ற வார்த்தை எந்த அர்த்தத்தில் இங்கு வருகிற்து என்று புரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ராஜகுமாரன் என்று சொல்லிக்க எனக்கு அரசுக் குடையும் இல்லை, எனக்கு என்று படையும் கிடையாது.

      நீக்கு
    2. நான் சொல்ல வந்ததையே நெல்லையும் சொல்லி இருக்கிறார் ஜீவி ஸார்.

      நீக்கு
  9. 'காதல் என்பது அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்ப காரணங்களே போதும்' -- என்ற ஜெயகாந்தனின் வரிகள் தான் காதல் பற்றி எங்கு படித்தாலும் சட்டென்று வந்து என் நினைவில் படியும்.

    பதிலளிநீக்கு
  10. நான் இந்த ஆடத்திற்கு வரவில்லை. சீதை -- ஊர்மிளையைக் கோர்த்த கவிதை பற்றி யாரானும் பக்திமான்கள் கருத்து சொல்லட்டும்.

    பதிலளிநீக்கு
  11. கணேஷ் பாலாவின் அந்த சிறிய குறிப்பில் இத்தனை ஆங்கில வார்த்தைகளா என்று எண்ணி திகைத்தேன்.

    பதிலளிநீக்கு
  12. வட நாட்டு நடிகர்களா? பாரதீய நடிகர்கள் என்று சொல்ல பழகிக் கொள்ளுங்கள். காலத்திற்கு ஏற்பவான கோலத்திற்கு அதான் பொருத்தமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றதைப் பார்த்தால் தென்னாட்டு நடிகர்கள்னு சொல்லக்கூடாது, திராவிட நடிகர்கள்னு சொல்லிப் பழகணும்னு சொல்வீங்க போலிருக்கே.

      நீக்கு
  13. ஹி..ஹி.. அது என்ன ஆபீஸ் -- தூக்கம் என்று ஜோக்குகளைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க? அதுவும் அந்த எம்.பூங்கோதையின் ரெண்டு ஜோக்குகளிலும்.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!