M V வெங்கட்ராம்
ஹிமாசலத்தின் அத்தரங்கமான அந்தப்புரம். உயிர் உருவங்களில் தான் இருக்க வேண்டிய நிலைமை என்று மட்டும் அல்ல, உருவற்றும் உயிர் தோன்றி வளர்ந்து உலாவும் என்னும் ரகஸியத்தை மலையரசன் மறைத்து வைத்திருந்த இடம் அது.
பாறைக் கருப்பைகளை விரித்து உயிருக்கு ஒரு தொடக்கமோ, ஒரு முடிவோ இல்ல என்பதைத் தூலமாய்க் காட்டிக் கொண்டிருந்தது இயற்கை...
சிருஷ்டிக்கு ஆணும் பெண்ணும் தேவை என்ற மனிதக் கற்பனையில் பொருளற்ற தன்மையை விளக்குவதற்காக, பாறைகள் ஈரமாகி, சுருத்தாங்கி, வயிறு பிளந்து ஈன்ற விருட்ச ராசிகள். மதம் கொண்ட அஞ்ஞானிகள் போல் உண்டு கொழித்துப் பருத்து உயர்ந்து விரிந்து விரிந்தும், உயரத்தை எட்ட முடியாமல் தவித்து, உயரத்துக்குமேல் உயரமும், பெருமைக்கு மேல் பெருமையும் இருப்பதை அறியாமல், மேலும் உயர்ந்து, மேலும் விரிந்து மேலும் தவிக்க;
நீண்டு வளைந்து நெளிந்து ஓடோடியும் முடியாமல் கலைத்துச் சுருண்டு துவண்டு கிடந்த கொடிகள், 'ஆழத்தின் கீழ் ஆழம் உண்டு; அந்த ஆழம் கண்டால் அற்புதம் காணலாம்' என்று தேடுவனவே போல் பாறைச் சந்துகளிலும், பள்ளத்தாக்குகளிலும், இறங்கிக் குனிந்து தேடும்போது, தம்மை அறியாமல், தாம் பெற்ற மணத்தை 'ஃகும்' என்று பரப்பிக் கொண்டு மகிழ:
தேடியதைக் கண்டறிந்து பரவசமுற்றவர்களைப் போள், 'மேடும் பள்ளமும் எமக்கு இல்லை என்று கலகலவென நகைத்தவண்ணம் சிற்றருவிகள் களித்து வெறித்துக் குதித்தாட:
என்ன என்பதையும், ஏன் என்பதையும் நிரூபிப்பதற்காக அறிவில் புதுப் புது ஆராய்ச்சிகள தொடுத்து ஓயாத வாதப் போர் புரியும் தர்க்கவாதிகளைப் போன்று வண்ணப் பறவைகள் மரங்கள்மீதும், பாறைகள் மீதும் அமர்ந்தும், ஆகாசத்தில் பறந்தும் ஓயாமல் ஆரவாரம் செய்ய,
சிகரங்கள் மீது அ அலையாக வந்த வெண் முகில்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதும், ஒன்றன் மீது ஒன்று அமருவதும், ஒன்றும் ஒன்றும் ஒன்றாய்க் கலப்பதுமாய் இருப்பது ஓர் ஒன்றுதான் என்பதை வரையறுக்கும் ஒரு தோற்றம் எழுப்ப.
ஓர் அமைதி மலையாக அங்கு நிற்கிறது.
*
அந்த இடத்திலும் மனிதக் குரல் கேட்கிறது.
ஆகா...! மனிதன் ஏறாத உயரம் இல்லையா? கம்யீரமும் இனிமையும் செறிந்த அந்தக் குரல் பாடுகிறது:
ஒளியில் விளைந்த உயர் ஞானப்
பூதரத்துச்சியின் மேல்
அளியில் விளைந்த தோர்
ஆனந்தத் தேனை அனாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப்
பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பியலா முகமாறுடைத்
தேசிகனே!"
திரை கடல் ஓடித் திரவியம் தேட முற்படாமல், பருவத்தின் உச்சி ஏறி அறிவு தேட முனைந்த தமிழகத்து இளைஞன் அவன். இல்லாவிட்டால், தமிழில் இனிமை அந்த மலைப் பிரதேசத்தில் இவ்வளவு பாங்காக எவ்வாறு இசையும்?
அவன் பெயர் கண்ணன்.
ஆரோக்கியமே வடிவெடுத்தது போன்ற உடற்கட்டு; அப்போதுதான் அருவியில் குளித்த புது மெருகு. அந்த உடலுக்கு ஒரு பொலிவு அளித்தது. கெளபீனதாரியாக, தன் இசையில் பரவசமுற்றவனாக, செடிகொடிகளையும் மலைப் பாம்புகளையும் மிதித்துக் கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளைத் தடவிக் கொடுத்தவாறும் அவன் நடத்தான்.
பாட்டு முடியும்போது அவன் எதிரில் ஒரு குடிசை நின்றது.
அடைத்திருந்த கதவிடம் அவன் குரல் கொடுத்தான்.
"கண்ணகி! சூரியோதயம் ஆகிவிட்டது. இன்னுமா தூக்கம்?"
"ஏன் வெளியில் நின்று கூச்சல் போடுகிறாய்? உள்ளே வந்தால் என்ன?" என்ற பதில் குரல், பெண் குரல்: அதுவும் தமிழ்க் குரல்தான்.
"கதவு மூடிலிருக்கிறதே!!"
"என்னடா புதிய கேள்வி இது? தாழில்லாத கதவு என்று இன்று புதிதாகத் தெரித்து கொள்கிறாயா? மிருகங்களின் அல்லலுக்காகத்தான் கதவை
அடைத்தேன். நீ மிருகம் இல்லையே.. "
கதவைத் தள்ளிக் கொண்டு கண்ணன் உள்ளே நுழைந்தான்.
குடிலுக்குள் இருபது வயதுப் பெண் ஒருத்தி; இரண்டாயிரம் ஆண்டு இளமைப் பாறை மீது இரண்டு முழத் துண்டு ஒன்றைப் பெயருக்கு'ப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
கண்ணன் பார்த்தான். கண்கள் இருக்கின்றனவே! ஒரு பெருமூச்சைத் தொண்டைக்குள் நெறித்து மறைத்துக் கொண்டான்.
இப்போது தான் எழுத்தாயா கண்ணகி"
"என்னைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறதா?
"குளிக்க வரலில்லையே நீ என்று கேட்டால் -"
"குளிக்க வேண்டுமா?"
"வேண்டாமா? மனசுக்கு ஒரு கலகலப்பு: தியானத்துக்கு ஒரு தெளிவு"
''அப்படியா? குளித்தால் கலகலப்பும் தெளிவும் வருமா" என்று முறுவலித்தாள் கண்ணகி,
"என்ன இன்று இடக்காகவே பேசுகிறய், முதலில் என்னை மிருகம் என்றாய்."
"நீ மட்டும் உள்ளே வர வழி தெரியாமல் தயங்கலாமா?"
"கதவு மூடியிருக்கிறதே. நீ உள்ளே என்ன செய்கிறயோ என்று தயங்கி லேன்.....!"
"உனக்குத் தெரியாமல் என்னிடம் இன்று வரையில் ரகசியம் ஏதாவது இருந் திருக்கிறதா?
"அதற்கல்ல.. என்ன இருந்தாலும் நீ ஒரு பெண்!"
திடீரென்று இன்று நீ ஆணாகி விட்டாயாக்கும். அது போகட்டும். நாம் நம் குருதேவரோடு ஹிமாசலம் வந்து நேற்றோடு பன்னிரண்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன: இல்லையா கண்ணா?"
கண்ணன் கூறினான்: "எனக்கு ஞாப கம் இருக்கிறது. குததேவர் நம்முடன் ஒன்பது ஆண்டுகள் இருந்தார். எல்லா விதப் பயிற்சிகளையும்கூட இருந்து சொல்லிக் கொடுத்தார்; செய்ய வைத்தார். தியானம், பிராணயாமம், யோக சாதனைகள்........
"குளிக்கவும் சாப்பிடவும் தூங்கவும் கூடத்தான் கற்பித்தார். நமக்கு ஒரு சின்னக் குறைகூட அவர் வைக்கவில்லை. இல்லையா கண்ணா?"
"நாம் எங்கிருந்து எங்கு வந்திருக்கிறோம் என்பதை இந்த நல்ல நாளில் நினைத்தும் பார்க்க வேண்டாமா?"
"நான் எதையும் மறக்கவில்லை. பன்னீரண்டு வருடங்களுக்கு முன், நான் பதினான்கு வயதுச் சிறுவன். அனாதை; ஆண்டி. பெற்றவர்கள் யார் என்கிற செய்தியே எனக்குத் தெரியாது. அதைப் பற்றி அப்போது நான் கவலைப்பட்டதாகவும் ஞாபகம் இல்லை, பசி ஒன்றுதான்: ஊரார் ஊட்டினார்கள். யாரோ சில பாடல்களைச் சொல்லித் தந்தார்கள், நல்ல குரல் இருந்ததால். பாட்டு வயிற்றுப் பையை நிறைத்தது. திருச்செந்தூரில் இருந்தேன் ஒரு முறை. 'தெள்ளிய ஏனலிற்கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் நான் வேட்டிலை' என்று ஆனந்தமாகப் பாடிக் கொண்டே ஒரு நாள் அலையாடிக் கொண்டிருந்தேன். அலையின் குடலுக்குள் சிக்கி மூச்சுக்குத் தவிக்கும்போது, யாரோ என் கரம் பற்றி வெளியில் இழுத்தார்கள். ஒரு பெரியவர்; நான் அதற்கு முன் பார்த்ததில்லை. 'என்னோடு வருகிறாயா தம்பி?" என்றார். "எங்கே!" என்றேன். 'அங்கேதான்' என்றார் சிரித்துக் கொண்டே.. அலைகளுக்கு வெளியில் வந்து அவரைப் பார்த்தேன். ஏதோ ஒன்று. அவருடன் போகும்படி, உள்ளிருந்து உந்தியது. பிச்சை எடுக்கிற பிழைப்பு, எங்கு நடத்தால் என்ன என்று முடிவு செய்தேன். கால்களில் விழுத்து கும்பிட்டேன். அவரோடு கிளம்பினேன்."
கண்ணகி தொடர்ந்தாள்: "நீங்கள் இருவரும் எங்கெல்லாமோ சுற்றி விட்டுப் பழனிக்கு வந்தீர்கள். உன்னைப் போல் நானும் அனாதைதான். பெற்றவள் முகம் மட்டும் நிழலாய் நினைவிலிருக்கிறது. பழனி அடிவாரத்தில், நடு வீதியில் என்னை எறிந்து விட்டு, 'பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்' என்று உபதேசம் அளித்துப் போய் விட்டாள். எட்டு, ஒன்பது வயசு இருக்கும் எனக்கு. 'முருகா, முருகா' என்றும் 'தண்டபாணிக்கு அரோகரா' என்றும் கத்துவதைத் தயிர வேறு ஒன்றும் தெரியாது. பிச்சைக்காரர்களின் வரிசையில் உட்கார்ந்திருந்த போது, நீங்கள் இருவரும் என் பக்கத்தில் வந்து நின்றீர்கள். குருநாதர் அன்புடன் என் தலையும் முதுகும் வருடினார். "என்னோடு வா. இந்தப் பிழைப்புக்காக நீ பிறக்கவில்லை" என்றார். . ஓர் அப்பா கிடைத்த நிம்மதியோடு அவருடன் நடந்தேன்"
"ஒவ்வொரு ஷேத்திரமாகத் தரிசனம் செய்துகொண்டே, இந்த உச்சிக்கு அழைத்து வந்தார். ஆறு ஆண்டுகள் நமக்குத் தமிழ் ஞானம் முழுவதும் அளித்தார். மூன்று ஆண்டுகள் மௌன சாதனை செய்வித்தார்."
"பிறகு. மூன்று ஆண்டுகள் நீயும் நானும் தனித்திருந்து சாதனை செய்ய வேண்டும் என்று கூறி நம்மை நம் பொறுப்பில் விட்டு விட்டு எங்கோ போயிருக்கிறார்."
நூறாவது பெருமூச்சைத் தொண்டைக்குள் நெறித்துக் கண்ணன் சொன்னான்: ''ஆனால் நம்மைத் தனியாகச் சாதனை செய்ய விட்டு அவர் போனது தவறு என்று தோன்றுகிறது. இல்லையா, கண்ணகி"
"தவமே தவறு என்று உனக்குத் தோன்றவில்லையா, கண்ணா!-"
"பார்த்தாயா, நீ என்னைப் பரிகசிக்கிறாய்."
"குருநாதர் தவறு செய்கிறார் என்று கொல்லும் அளவுக்கு நீ உயர்த்த சித்தி அடைத்து விட்டாயே. அதளுல் கேட்டேன்."
"அதல்ல கண்ணகி. நான் அப்படிச் சொல்வேனா? அவரைக் குறை சொல்வேனா? குருநாதர் எவ்வளவு பெரியவர்! நான் நன்றி கெட்டவனா? குறை சொல்வேனா? ஆனால் -"
"ஆனால் என்ன?
"இந்தத் தனிமை..."
"தனிமைதானே சாதனைக்கு அவசியம்?"
"நான் தனியாகவா இருக்கிறேன்?" என்றான் கண்ணன்.
"ஓ..நான் உன் தவத்துக்கு இடை இருக்கிறேன் என்கிறாயா? என்னை உன்னுடன் பெரியவர் விட் டுச் சென்றது தவறு என்கிறய். நான் வெளியேறி விடுகிறேன். சரிதானே?" அவள், அரையில் சேலைத் துண்டு கட்டிக் கொண்டு எழுந்து குடிசை வாயில் நோக்கி நடக்கலானாள்,
அவன் பாய்ந்து, வழிமறித்தான், இரு கரங்களைப் பரப்பி எதிர்நின்று,
"எங்கே போகிருய், கண்...ணகி?"
அவள் பதில் சொல்லவில்லை.
"என்னைத் தனியாக விட்டு நீ போய் விடுவாயா?"
"நான் இடையூறு என்றாயே நீ."
"எப்போது சொன்னேன் ?"
"தனிமை, அதாவது நீயும் தானும் இருக்கும் தனிமை பிடிக்கவில்லை என்று கூறினாய்."
"நான் அப்படிக் கூறினேனா? உட்கார்ந்து கொள்."
அவளுடைய இரண்டு தோள்களையும் பிடித்து அமுக்கி, அவளை உட்கார வைத்தான். மலர் மிருது! பாறை உறுதி; ஆனால் பூவின் மென்மையும் பாறையின் திண்மையும் அவள் உடலுக்கு எப்படி வந்தன. ஏக காலத்தில்?
அவள் இரு கால்களையும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்தாள். அவன் வாசலை அடைத்துக் கொண்டு உட்கார்த்தான் எதிரில்,
அவள் சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிறாய், கண்ணகி?"
" என் உடலைத் தொட்டாயா? எனக்குச் சிரிப்பு வருகிறது."
"நான் தொட்டால் உனக்குச் சிரிப்பு வருகிறதா?"
உட்கார்ந்தவாறே நகர்த்து அவன் அருகில் போனாள். அவனுடைய இரண்டு கைகளையும் எடுத்து வருடினாள்; அவன் மார்பகத்தைத் தடவிக் கொடுத்தாள்; தலையைக் கோதி விட்டாள். "என்னைத் தொட்டாயா, எனக்கும் சிரிப்பு வருகிறது!" என்று அவள் கிளி மிழற்றுவது போல் 'கீ கீ' என்று சிரித்தாள்.
"நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய் கண்ணா!".
"நான் அழகா?" என்று குரங்கு போல் இளித்தான் அவன்.
"பிராணாயாமமும் யோக சாதனைகளும் உடம்மை நன்கு உரப்படுத்தி
விட்டன. பாவம், அதனால் நீ எவ்வளவு சிரமப்படுகிறாய்!"
அவன் கண்களில் சிருஷ்டி வெறி வெறித்தது.
"பாவம்!" என்றாள் கண்ணகி:
அவன் கண்களில் சிருஷ்டி வெறி வெறித்தது.
*
"ஹிமாசலத்துக்கு நாம் வந்து பன்னிரண்டு ஆண்டுகள் முடித்து விட்டன. இல்லையா, கண்ணா!'"
'ஆம்' என்பதுபோ ல் கண்ணன் தலையாட்டினான்.
"நம் பாக்கியம் தமக்கு ஒரு மகாப் பெரியவர் குருவாகக் கிடைத்தார். அவர் ஆதரவிலும், ஹிமவானின் அரவணைப்பிலும் இருந்து கொண்டு நாம் பன்னிரண்டு ஆண்டுகளாக அறிவுத் தேட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இல்லையா கண்ணா?"
'ஆம்' என்பது போல் கண்ணன் மறு முறை தலையாட்டினன்.
"ஆனாலும் நீ என்ன ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய்"
கண்ணன் திடுக்கிட்டான். எங்கோ பார்த்து விழித்தான்.
"அஞ்சாமல் என்னைப் பார், கண்ணா! சில நாட்களாக நான் உன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். எந்த நேரத்திலும் உன் உடல் என் உடலைத் தியானித்துக் கொண்டிருக்கிறது. இரவு நேரம் தான் உனக்கு மிகவும் கொடுமையாக இருக்கிறது. இந்தக் குடிசையின் அடர்த்தியும், ஆண் பெண் ஏகாந்தமும் தான். நேற்று இரவு, உடலை விடுத்து, உயிர் நிலையில் நின்று, ஆத்மானந்தம் நுகர்ந்து கொண்டிருந்தேன், உணர்வு வந்து என் உடல் புரண்டபோது, நீ எட்டிச் சென்று எழுந்து வெளியில் ஓடுவதைக்க கண்டேன்"
உனக்குத் தெரியுமா என்று கேட்பவன் போல் அவன் அவளை நோக்கினான்,
"இந்த உடம்பு ஒரு விந்தைப் பொருள். எந்தப் பயன் கருதி இது சிருஷ்டிக்கப்பட்டதோ, அந்தப் பயனைக் குருதேவரின் துணையால் நான் அடைந்து விட்டேன். இனி இந்த உடல் எனக்குத் தேவையில்லை. உனக்கு இதனிடம் கவர்ச்சி ஏற்பட்டுள்ளது. நீ உன் விருப்பம் போல் இதை உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் பன்னிரண்டு வருஷங்களாக நீ தேடிய பொருள் இதனுள் கிடைக்கும் என்று ஏமாந்து விடாதே!"
கண்ணன் கேட்டுக் கொண்டிருந்தான். கேட்டு முடிந்ததும் திரும்பினான்.
எதிரில் மலைச் சிகரங்கள் தீப்பற்றி எரிந்தன. மரங்கள், பறவைகள், ஆகாசம், செடிகள், கொடிகள், பாறைகள் அனைத்திலும் நீ தொத்திப் பரவி எங்கும் நிறைந்தது.
மீண்டும் திரும்பினான்.
எதிரில் சிவப்பு, நெருப்பு.....
*
"ஹர ஹர மஹாதேவ்!" என்று -கணீரேன வாசலில் கேட்டது குரு தேவரின் குரல்.
- கல்கி தீபாவளி மலர் 1964
==========================================================================================
பாலகுமாரன் கடைசி பேட்டி..
ஃபேஸ்புக்கில் படித்தது...
தமிழின் மிக முக்கியமான தொடர்கதை எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி பேட்டி எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தது விகடன் டீம். சீனியர் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரான பாலகுமாரன் வருவாரா, வரமாட்டாரா, அவர் வந்தால்தானே நிறைவாக இருக்கும் என டீமுக்குள் நிறைய உரையாடல்கள். "எத்தனை மணிக்கு வரணும், எங்க வரணும்னு மட்டும் சொல்லுங்க. " என சர்ப்ரைஸ் கொடுத்தார் பாலகுமாரன். ஆனால் ஆனந்த விகடனுக்கு அவர் தரும் கடைசிப்பேட்டி அதுவாகத்தான் இருக்கும் என்று அப்போது தெரியாது... நெகிழ்ச்சியான அந்த கடைசி சந்திப்பில் நடந்தவை இங்கே!
`விகடனில் நீங்கள் எழுதி வெளிவந்த முதல் கதை எது’ எனக் கேட்டபோது, கண்களை மூடி நீண்ட தாடியைத் தடவிக்கொடுத்தபடியே யோசித்தவர், ``இப்போல்லாம் ஞாபகம் மறதி அதிமாய்ட்டு வருது" என்று அமைதியுடன் இருந்தார். அருகிலிருந்த மனைவியைப் பார்த்து ``சாந்தா... விகடன்ல..." என அவர் கேட்க ஆரம்பிக்கும்போதே ``தாயுமானவன் தொடர்தான் விகடன்ல மொதல்ல வந்தது" என மனைவி சாந்தா ஞாபகப்படுத்த `சபாஷ்’ என்று சிரித்தார் பாலகுமாரன்.
`ஒரே நேரத்தில் நீங்கள் பல தொடர்கள் எழுதினீர்களே அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்’ எனக் கேட்டதும் குழந்தையின் உற்சாகத்துடன்.. ``அப்படிக் கேளுங்க" என்றவர், ``நான், ஒரே நேரத்தில் ஏழு தொடர்கள் எழுதினேன். தொடர்கதை படிச்ச வாசகர்களெல்லாம் இப்ப சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க... வாசகர்கள் மேல அந்த வருத்தம் மட்டும் எனக்கு உண்டு. ஆனாலும், அவங்களைச் சொல்லி என்ன இருக்கு. இது விஷ்வல்ஸுக்கான காலம். நான் அந்த ஏழு தொடர்கள் எழுதின சமயம், எனக்கான வாசகப்பரப்பு உச்சத்தில இருந்த சமயம். நானும் என்னை ரொம்பவும் தயார்ப்படுத்திட்டு எழுதினேன். அந்தந்த தொடர்களுக்கான குறிப்பை, கதாபாத்திரத்தின் பெயர்களை வீட்ல இருந்த மர பீரோவுல, செல்ப்ல, ஏன் பாத்ரூம்ல கூட எழுதி ஒட்டி வெச்சுருப்பேன். பல்லு தேய்க்கிறபோது, தலையைத் துவட்டுறபோதுன்னு எல்லா நேரத்திலயும் என் கண்ணு அங்கயேதான் இருக்கும். எந்தத் தொடர் எழுத உட்கார்றனோ அதை எழுதும்போது ஒரு கிளான்ஸ் அவ்ளோதான்" என்றார்.
`இப்பவும் எழுதுறீங்களா சார்’ எனக் கேட்டதுதான் தாமதம், ``என்ன இப்படிக் கேட்டுடீங்க? எழுதலன்னா, எழுத முடியலைன்னா செத்துப் போயிடுவேன். பழைய மாதிரி ஒரே சமயத்துல பல பத்திரிகைகளுக்குத் தொடர்கள் எழுத முடியலையே தவிர, எழுதாம ஒருபோதும் என்னால இருக்க முடியாது" என்று ஆவேசப்பட்டார்.
``ஜனங்களோட விருப்பம் என்னவோ அதுதான் சினிமா, அதுதான் பத்திரிகை, அதுதான் நாடகம். ஆனா, இலக்கியம் மட்டும்தான் நான் சொல்றத கேளுன்னு மக்கள்கிட்ட சொல்லும். அதுக்கு அந்தச் சக்தியும் இருக்கு. அந்தச் சக்தியில ஒருபகுதியாக நான் இருந்திருக்கிறேன், இருப்பேன்னு என்னாலே பெருமையா சொல்லிக்க முடியும்." என்றவரின் குரலில் இருந்த உறுதியைக் கேட்டு கூடியிருந்த மற்ற எழுத்தாளர்கள் அனைவரும் கைதட்டினர்.
சந்திப்பு முடிந்ததும், இரண்டு கட்டைப் பை நிறைய கொண்டு வந்த புத்தகங்களை அங்கு வந்த எழுத்தாளர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ``நம்ம எல்லாம் அப்பப்போ சந்திச்சு உறவை வலுப்படுத்திக்கணும். அதுக்கு விகடன் ஒரு வாய்ப்பைக் கொடுத்து இருக்கு" என்றவர் அங்கு தேநீர் பரிமாறிய தம்பி உட்பட கூடியிருந்த அனைவரையும் அழைத்து ``வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்" என்றார். போட்டோ எடுத்து முடிந்ததும், அனைவரிடமும் சொல்லிக் கிளம்புகையில் ``இந்தச் சந்திப்பு விகடன்ல எப்போ வரும்னு சொல்லுங்க ஆவலா இருக்கேன்" என்றவர் பிரம்பைப் பிடித்து மனைவியின் கைத்தாங்கலாக நடந்தபடியே காரில் ஏறிச் சென்றார்.
நன்றி:விகடன் - நன்றி R. கந்தசாமி ஸார்.
===============================================================================
சுபாஷிதச் செல்வம் - உலகால் போற்றப்படுவது எப்படி? - ச. நாகராஜன் = தமிழ்வேதாஸ்,காம்
கர்மணா மனஸா வாசா சக்ஷுஷா ச சதுர்விதம் |
ப்ரசாதயதி யோ லோகம் தம் லோகோனுப்ரஸீததி ||
எவன் ஒருவன் தனது செயலாலும் மனதாலும் வாக்காலும் கண்களாலும் உலகை சந்தோஷப்படுத்துகிறானோ அவன் உலகால் போற்றப்படுவான்.
இனிமையாகப் பேசு!
ப்ரியவாக்யப்ரதாநேன சர்வம் துஷ்யந்தி ஜந்தவ: |
அதஸ்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||
பிரியமான வார்த்தைகளைப் பேசுவதால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே அப்படி மட்டுமே பேச வேண்டும். ஒருவன் ஏன் வார்த்தைகளில் தரித்திரத்தைக் காட்ட வேண்டும்?!
“வார்த்தைகளில் கஞ்சத்தனமாக இருக்காமல் இனிய வார்த்தைகளையே பேசு” என்பதே இதன் பொருள்
இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று” (குறள் 100)
பொருள்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்துப் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்ற முட்டாள்தனமாகும்.
சுபாஷிதச் செல்வம் - உலகால் போற்றப்படுவது எப்படி? - ச. நாகராஜன் = தமிழ்வேதாஸ்,காம்
கர்மணா மனஸா வாசா சக்ஷுஷா ச சதுர்விதம் |
ப்ரசாதயதி யோ லோகம் தம் லோகோனுப்ரஸீததி ||
எவன் ஒருவன் தனது செயலாலும் மனதாலும் வாக்காலும் கண்களாலும் உலகை சந்தோஷப்படுத்துகிறானோ அவன் உலகால் போற்றப்படுவான்.
இனிமையாகப் பேசு!
ப்ரியவாக்யப்ரதாநேன சர்வம் துஷ்யந்தி ஜந்தவ: |
அதஸ்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||
பிரியமான வார்த்தைகளைப் பேசுவதால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே அப்படி மட்டுமே பேச வேண்டும். ஒருவன் ஏன் வார்த்தைகளில் தரித்திரத்தைக் காட்ட வேண்டும்?!
“வார்த்தைகளில் கஞ்சத்தனமாக இருக்காமல் இனிய வார்த்தைகளையே பேசு” என்பதே இதன் பொருள்
இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று” (குறள் 100)
பொருள்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்துப் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்ற முட்டாள்தனமாகும்.
====================================================================================



கதை மிகவும் நன்று. மிகுந்த த்த்துவார்த்தமாகச் செல்கிறது.
பதிலளிநீக்குஉடல் அமைந்த பயன் என்ன? என்ற கேள்வியைத் தூண்டுகிறது. அதே சமயம் ஒவ்வொரு ஆத்தாவிற்குமான கடமை, எதை நோக்கி அது செல்லவேண்டும் என்பதில் பிரபஞ்ச சக்தியின் கை இருக்கிறதா அல்லது நம் கருமங்களுக்கு (முன்வினைகளின் பயன்) மாத்திரமான பலனா அது என யோசிக்க வைக்கிறது.
ஆனாலும் வாழ்க்கையில் விதிவிலக்குகள் அபூர்வம்தான். பெரும்பான்மை சமூகம் செய்வதே சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.
தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பாலகுமாரன் பற்றிய செய்தி ரசிக்க வைத்தது. அவருடன் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் படம் இல்லையே.
பதிலளிநீக்குஎழுத்தாளர்களுக்குள்ளேயும், நாமும்தான் எழுதுகிறோம், ஆனால் இவனுக்கு மாத்திரம் இவ்வளவு பெருமையா? ரசிகர்களா என்ற பொறாமை மனதுக்குள் இருக்காது?
இனி நேரமில்லை. வரிசையாக்க் கடமைகள். பிறகு வருகிறேன், நான் கதையைப் புரிந்துகொண்ட விதம் தவறோ? கீசா மேடம் என்ன நினைக்கிறார்கள், கஹ, கீர போன்றோரின் கருத்துகள் என்ன என்று தெரிந்துகொள்ள.
பதிலளிநீக்கு