6.2.26

அச்சோ... அப்புறம் என்ன ஆச்சு

 

அப்புறம் என்ன ஆச்சு

JKC

அப்புறம் என்ன ஆச்சு என்ற தலைப்பில் ஒரு சம்பவத்தை பற்றி எழுதி அதேபோன்று மற்றவர்களுக்கும் நடந்த என்ன ஆச்சு சம்பவங்களைப் பற்றி எழுத வேண்டுகோள் விட்டிருந்தேன். ஆனால் இது வரையிலும் நோ ரெஸ்பான்ஸ்.

சரி நாமாவது தொடரலாம் என்றே பின் வரும் நடந்த கதையை 
எழுதுகிறேன்.

அதற்கு முன் ஒரு அரதப் பழைய என்ன ஆச்சு ஜோக்.

இந்தப்பையன் எங்க வீட்டில் ஊதுவத்தி ஸ்டாண்டையே முழுங்கிட்டான்
தெரியுமோ?

ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?

ஒன்னும் ஆகலை. எங்க வீட்டில் வாழைப்பழம் தான் ஊதுவத்தி ஸ்டாண்ட்.

என்னுடைய பதவி உயர்வு பற்றி தீர்மானிக்கும் நாள் அது.

இன்டெர்வியூவிற்காக காத்திருந்த நான் டென்ஷன் குறைக்க ஒரு சிகெரெட் 
பிடித்தால் தேவலை என்ற முறையில் வெளியில் சென்று ஒரு சிகரெட்டை 
பற்றவைத்துக் கொண்டு தீப்பெட்டியை பேண்ட் பாக்கெட்டில் சொருகியது 
தான் தாமதம். பாக்கெட்டில் இருந்து தீ படலங்கள் வெளி வந்தன.

ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?

ஏதாவது ஆகியிருந்தால் நான் இங்கு கதையை எழுத முடிந்திருக்காதே.  
ண்ணும் ஆகலை என்று சப்பென்று கதையை முடிக்கவும் விருப்பமில்லை.  

ஆகவே கதையுடன் சம்பத்தப்பட்ட , ஆனால் அவசியம் என்றில்லாத சில 
தகவல்களையும் சேர்த்து கதைக்கு கொஞ்சம் அலங்காரம் செய்து 
கொடுக்கிறேன்.

ரெக்ரூட்மென்ட், ப்ரோமோஷன், அட்மினிஸ்ட்ரேஷன், என்ற துறைகளில் 
தன்னாட்சி உடையது எங்கள் department of space. அதாவது upsc இடபடல் 
இல்லை.

Promotion procedure இரண்டு வகை. administration கேடர் அலுவலருக்கு UPSC 
செய்வது போல் எழுத்து பரீட்ச்சை, நேர்காணல், ரேங்க் லிஸ்ட் என்று 
எல்லாம் உண்டு. இது இல்லாமல் CR எனப்படும் கான்பிடென்ஷியல் 
ரிப்போர்ட், விஜிலென்ஸ் ரிப்போர்ட் ஆகியவையும் பார்க்கப்படும். ஒழிவு 
ஏற்படும்போது ரேங்க் அனுசரிச்சு, ரோஸ்டர் அனுசரிச்சு ரேங்க் லிஸ்டில் 
இடம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வும், பணி இட மாறுதலும் கிடைக்கும்.  
Technical கேடர் அலுவலருக்கு வேறு விதம்.

வழக்கம் போல் CR மற்றும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் எடுத்துக்கொள்ளப்படும்.  

எழுத்து பரீட்சை என்று ஒன்று இல்லை. Trade test என்ற ஒன்று போஸ்டுக்கேற்ப வைக்கப்படும். டெஸ்டில் பாஸ் ஆனால் DPC (departmental promotion commitee) இன்டெர்வியூக்கு அழைக்கப்படுவர். அதில் ப்ரோமோஷன் கொடுப்பதா வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். ப்ரோமோஷன் கொடுக்கலாம் என்று தீர்மானம் ஆனால் ஜனவரி முதலா, அல்லது ஜூலை முதலா என்பதும் தீர்மானிக்கப்படும். ரேங்க் லிஸ்ட் என்ற ஒன்று கிடையாது.

ஒரு முறை இன்டெர்வியூவில் நிராகரிக்கப்பட்டவர் 1 அல்லது இரண்டு வருடங்களுக்குப்பின் மீண்டும் இன்டெர்வியூவுக்கு அழைக்கப்படுவர்.

எங்கள் டிபார்ட்மெண்டில் technical போஸ்டுகள் எல்லாம் FCP (flexible complementary promotion)க்கு உட்பட்டவை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இன்டெர்வியூ recruitment section interview ஹாலில் நடந்தது. நானும் என்னைப் 
போன்று சிலரும் இருந்தோம். டென்ஷன்…. காரணம் ஏற்கனவே சென்ற வருடம் வந்து தோற்ற அனுபவம்.

இன்டெர்வியூவிற்காக காத்திருந்த நான் டென்ஷன் குறைக்க ஒரு சிகெரெட் பிடித்தால் தேவலை என்ற முறையில் வெளியில் சென்று ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு தீப்பெட்டியை பேண்ட் பாக்கெட்டில் சொருகியது தான் தாமதம். பாக்கெட்டில் இருந்து தீ படலங்கள் வெளி வந்தன.

சட்டென்று pant பாக்கெட்டை அமுத்தி பிடித்தேன். தீ நின்று விட்டது.

பேண்டின் பாக்கெட்டில் உள்புறம் ஒரு பெரிய ஓட்டை. தீப்பெட்டியின் 
தீக்குச்சிகள் யாவும் முனைகள் கரிந்த நிலையில். சுதாரிப்பதற்குள் என்னை இன்டெர்வியூக்கு கூப்பிட்டார்கள்.

ஒரு பதட்ட நிலையுடன் உள்ளே சென்றேன். வழக்கமான விசாரிப்புகளுக்கு பின் technical side கேள்விகள் துவங்கின. ஒரு கேள்வி : 

What is the scope of a variable ?

கேட்டவர் பெயர் பூஜாரி. ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர். விடை தெரிந்தவர்கள் விடை சரிதானா என்பதை கடைசியில் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த இன்டர்வியூவில் ப்ரோமோசன் கிடைத்தது, 5 வருடங்களுக்குப்பின் 
கிடைத்த அடுத்த grade உயர்வு.

கேள்விக்கு விடை.

A variable can be local or global. Integer, floating point etc. just describe type of variable data.

இந்த கதை 40 வருடங்களுக்கு (1985) முற்பட்டது.

இதற்கு அடுத்த ப்ரோமோஷன் இன்டெர்வியூவுக்கு செல்லும்போதும் இது 
போன்ற ஒரு சம்பவம்/சகுனம் நடந்தது. அது வேறு மாதிரி. அது அடுத்த பதிவில்.

=========================================================================================================

ச்சும்மா  ஜாலி...



========================================================================================

ஃபேஸ்புக்கிலிருந்து...



========================================================================================


சிலிகான் ஷெல்ஃப் RV காந்தி பற்றி எழுதி இருந்த பதிவிலிருந்து சில வரிகள்...

காந்தியை மணந்திராவிட்டால் கஸ்தூரிபா ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக, உயர் மத்தியதரக் குடும்பத்தவராகத்தான் வாழ்ந்திருப்பார். அப்படி வாழ்வதைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காந்தி படுத்திய பாட்டில் அப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்திருக்கக் கூடாதா என்று அவர் நினைத்திருந்தால் வியப்பே இல்லை. உலகத்தினர் அனைவரிடமும் பொறுமை காட்டிய காந்தி, அவர்களால் தான் வளர்ந்த சூழ்நிலையை, தனக்குக் கற்றுத் தரப்பட்ட விழுமியங்களை மீற முடியவில்லை எனறால் அவர்களை nudge மட்டுமே செய்த காந்தி, கஸ்தூர்பா ஒருவரிடம் மட்டும்தான் பொறுமை இல்லாத சராசரி கணவனாக, கொஞ்சம் ஆணாதிக்கத் தன்மை உடையவராக நடந்து கொண்டிருக்கிறார். அவருக்குக் கற்றுத் தரப்பட்ட விழுமியங்களை - கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம் இத்யாதி - அவராலும் தாண்ட முடியவில்லை, கஸ்தூரிபாவாலும் தாண்ட முடியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் என் அப்பாவிடம் அன்பும் பாசமும் மரியாதையும் நிறைய உண்டு. அப்பாவிடம் இருக்கும் மரியாதை கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அம்மாவிடம் மரியாதை கிரியாதை எல்லாம் எதுவும் கிடையாது. பார்க்கும்போதெல்லாம் அணைத்துக் கொள்ளத்தான் தோன்றும். அப்படித்தான் காந்தியையும் கஸ்தூரிபாவையும் பற்றியும் உணர்கிறேன்.  

கிழவர் யாரையும் நிம்மதியாக வாழவிடமாட்டார். சிறையில் கஸ்தூரிபாவுக்கு ட்யூஷன் எடுத்திருக்கிறார். சரித்திரம், பூகோளம் என்று. பா பூகோளத்தில் வீக்காம். கஷ்டப்பட்டு இடங்களின் பெயர்களை மனப்பாடம் செய்வாராம். எழுபது எழுபத்தைந்து வயதில் இவர் இம்சை வேறு!  

- சிலிக்கான் ஷெல்ஃப் RV -

=============================================================================

பூச்சிகளிடமிருந்து செடியைப் பாதுகாக்க நம்மாழ்வார் தரும் சில யோசனைகள்.  இயற்கையிலிருந்தே அப்படியே..  
=========================================================================================

சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் அறிமுகபப்டுத்திய க்ரானிக்கிள் புத்தகம் உங்கள் நினைவில் ஒரு பயம் கலந்த நினைவாக மிச்சம் இருக்கும்.  இன்று அதன் முன்னுரை!  

க்ரானிக்கிள் புத்தக அறிமுகம்.

இந்த நூற்றாண்டு தொடங்கியபோது ஒரு மனிதன் விண்வெளியில் மிதக்கிறான் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காட்சி. அப்போது விமானங்கள் இன்னும் ஒரு கனவாகவே இருந்தன. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்கும் திறன், மனிதன் அறிவு மற்றும் ஆய்வுகளின் எல்லைகளை எவ்வாறு பின்னுக்குத் தள்ளிவிட்டான் என்பதைக் குறிக்கிறது. ஆயினும் கிரேக்கத்திற்கு விடுமுறை விமானம் எந்த அற்புதமான இடத்தையும் விட அதிகமான உயிர்களை மாற்றியுள்ளது.  

நூற்றாண்டின் தொடக்கத்தில், உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் பிரிட்டனை தங்கள் ஆட்சியாளராகப் பார்த்தார்கள். பெரும்பாலானவர்கள் நம்மைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, எங்களுக்கும் அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. பிராட்ஃபோர்டு முதல் பம்பாய் வரை, பெரும்பாலான மக்களின் எல்லைகள் அவர்களின் சொந்த நகரம் அல்லது கிராமத்திற்குள் மட்டுமே இருந்தன. பிரபலமான செய்தித்தாள்கள் ஆரம்ப நிலையில் இருந்தன, மோட்டார் கார் ஒரு ஆடம்பரமாக இருந்தது. 1938 ஆம் ஆண்டு வரை கூட ஒரு பிரிட்டிஷ் பிரதமர் செக்கோஸ்லோவாக்கியாவை "ஒரு தொலைதூர நாடு" என்று பேச முடியும்.

20 ஆம் நூற்றாண்டு உலகத்தை மட்டுமல்ல, நம் வாழ்க்கையையும் புரட்சிகரமாக மாற்றியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் CHRONICLE இந்த வியக்கத்தக்க ஆண்டுகளின் கதையைச் சொல்கிறது. இது ஒரு வரலாற்று புத்தகம் அல்ல; இது ஒரு அனுபவம். CHRONICLE என்பது நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு கதை.  

தொலைக்காட்சி செய்திகளின் இரவுப் பனோரமா வழியாக நாம் பழகி விட்டதைப் போலவே, இந்த பக்கங்களில் நிகழ்வுகள் எவ்வாறு விரிவடைகின்றன என்பதை நீங்கள் அறியலாம். பெரிய மற்றும் சிறிய நிகழ்வுகள் அவை நடக்கும் போதும், நீங்கள் அங்கு இருப்பது போலவும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. டைட்டானிக் மூழ்கிய அதிர்ச்சியிலிருந்து VE-நாளின் மகிழ்ச்சி வரை, பென்சிலின் தற்செயலான கண்டுபிடிப்பு முதல் கணினிகளின் கண்டுபிடிப்பு வரை, CHRONICLE 20 ஆம் நூற்றாண்டு பற்றிய தனித்துவமான நுண்ணறிவை வழங்குகிறது.

வாசகர்கள் பகுப்பாய்வை வழங்கும் புத்தகம் இது. உயர்ந்த பார்வையிலிருந்து, நீங்கள் பின்னோக்கிப் பார்த்து இன்று நாம் வாழும் உலகத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் இந்தக் கண்டுபிடிப்பு மாயைகளை உடைக்கும்: ஏக்கப் புகைமூட்டத்தின் மத்தியில் இப்போது பெரும்பாலும் மறந்துவிட்ட வாக்குரிமை இயக்கத்தின் வன்முறை; எட்வர்டியன் ஆடம்பரத்தை பொய்யாக்கிய கலைப் புளிப்பு; வாகன ஓட்டிகளின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் ஏற்பட்ட சாலைகளில் ஏற்பட்ட குழப்பம்; பிரிக்ஸ்டன் மற்றும் டாக்ஸ்டெத் கலவரங்களுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் தெருக்களில் நிறுத்தப்பட்ட துருப்புக்கள்; மற்றும் முதியோர் ஓய்வூதியங்கள் போன்ற மிதமான சமூக சீர்திருத்தங்களால் தூண்டப்பட்ட ஆர்வங்கள். 

கிரானிக்கிள் கதையை மாதங்களாக, நாள் நாளாக சொல்கிறது. அதன் கவர்ச்சியின் ஒரு பகுதி நிகழ்வுகளின் சுருக்கமாகும்: நடன வெறிகள் மற்றும் பேரழிவுகள், விளையாட்டு வீரதீரங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு. பலருக்கு இந்த புத்தகத்தின் பக்கங்கள் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும்; இது காலத்தின் நாடகத்தை மீண்டும் கைப்பற்றுவது மட்டுமல்லாமல், காலப்போக்கில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளையும் அனைவருக்கும் எடுத்துக்காட்டுகிறது. நேற்றைய அடித்தளங்கள் இன்றைய தலைப்புச் செய்திகளாக இருக்கலாம்.

உதாரணமாக, ஜூன் 1963 இல், பிரிட்டன் ப்ரூமோ ஊழலால் வெறி கொண்டது, பெர்லின் சுவர் பற்றிய ஜனாதிபதி கென்னடியின் சொற்பொழிவால் அமெரிக்கா கிளர்ந்தெழுந்தது, ரஷ்யா தனது முதல் விண்வெளிப் பெண்ணை உற்சாகப்படுத்தியது. அப்படியானால், ஈரானிய மதத் தலைவர் கோமெய்னி தெஹ்ரானில் கைது செய்யப்பட்டதை யார் கவனித்தார்கள்? அவருக்கு என்ன முக்கியதத்துவம்? 

ஒரு படகு கார்,  அதன் கதவுகள் திறந்திருந்ததால் இழந்தது அசாதாரணமானது: இருப்பினும் வரலாறு ஜீப்ரூக்கிற்கு வெளியே மீண்டும் நிகழும் 34 ஆண்டுகளுக்கு முன்பு அது ஜனவரி 31, 1953 அன்று ஐரிஷ் கடலில் நடந்தது, .  

நூற்றாண்டு நிறைவடையும் போது, எதிர்கால வரலாற்றாசிரியர்கள் நம்மை என்ன சொல்வார்கள் என்று யோசிக்கத் தூண்டுகிறது. முதல் உலகப் போர் பழைய பேரரசுகளை அழித்து ரஷ்யப் புரட்சியை உருவாக்கிய பெரிய திருப்புமுனையாக இருக்குமா? அல்லது வரலாற்றாசிரியர்கள் ஹிட்லரையும் அட்டூழியங்களின் கதைகளையும் நினைவு கூர்வார்களா?

பெண் விடுதலை போன்ற மாற்றங்கள் அதிகமான மக்களைப் பாதித்துள்ளன என்று சமூக வரலாற்றாசிரியர்கள் வாதிடலாம். இந்த நூற்றாண்டை வெள்ளையர் தனது வரலாற்று ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கிய நூற்றாண்டாகவும் கருதலாம். அல்லது இந்த நூற்றாண்டை வேறு எந்த நூற்றாண்டிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியா? எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனுக்கு அனைத்து மனித வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டுவரும் திறனை இது வழங்கியுள்ளது.  

படைப்பின் செயல்பாட்டில் தலையிடும் சக்தியையும் அறிவியல் நமக்கு வழங்கியுள்ளது. சோதனைக் குழாய்களிலிருந்து குழந்தைகள் பிறந்துள்ளன, டிஎன்ஏவின் மர்மங்கள் அவிழ்க்கப்பட்டுள்ளன, வாய்வழி கருத்தடை பொதுவானதாகிவிட்டது. நாம் நீண்ட காலம் வாழ்கிறோம், ஒரு காலத்தில் போலியோ, பெரியம்மை மற்றும் காசநோய்க்கு அஞ்சப்பட்ட நோய்கள் - கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளன. முன்னேற்றத்திற்கு இரண்டு வாழ்த்துக்கள், ஆனால் மூன்று அல்ல, ஏனெனில் எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் வடிவங்கள் போன்ற புதிய நோய்கள் இன்னும் வெல்லப்பட வேண்டியுள்ளன.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் சகாப்தம் நமது தனிமையை விட அதிகமாக மாறிவிட்டது. அது போர்களை நம் வாழ்க்கை அறைகளுக்குள் கொண்டு வந்து, விளையாட்டு வீரர்களை கோடீஸ்வரர்களாகவும், குழந்தைப் பருவ சிலைகளாகவும் மாற்றியுள்ளது. பொழுதுபோக்கும் கூட, சாப்ளின் முதல் பீட்டில்ஸ் வரை அதன் முதல் உலகளாவிய சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியுள்ளது. இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் கலை வெற்றிகள் பெரும்பாலும் வலுவான இசைக்குழுக்களைத் தாக்கும். பெரும்பாலான செய்தி நிகழ்வுகளை விட, அவைதான் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குகின்றன.  

ஏக்கத்திற்காகவோ அல்லது கண்டுபிடிப்புக்காகவோ, குறிப்புக்காகவோ அல்லது வேடிக்கைக்காகவோ இந்தப் பக்கங்களை நீங்கள் திருப்பினாலும், நம் வாழ்க்கையை வடிவமைத்து மாற்றிய நிகழ்வுகள் இங்கே. புத்தகத்தின் 1360 பக்கங்கள் மனிதனின் அறிவொளி மற்றும் அவனது கொடுங்கோன்மைக்கு ஏராளமான சான்றுகளை வழங்குகின்றன. இந்த நூற்றாண்டு முடிவடைவதற்கு இன்னும் 4,000 நாட்களுக்கு மேல் உள்ளன, மனிதன் நமது கிரகத்தை அழிக்க அல்லது இந்த 20 ஆம் நூற்றாண்டின் இன்னும் முடிக்கப்படாத கதையில் புகழ்பெற்ற புதிய அத்தியாயங்களை எழுத போதுமான நேரம் உள்ளது.

Derrik Mercer

===================================================================================



இசை விமரிசகர் சுப்புடு, விகடனில் இளையராஜா பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், தனக்கு 80 வயது ஆகிவிட்டதையும், இரண்டு ரண சிகிச்சைகள் முடிந்துவிட்டபடியால் வாழ்க்கையின் எல்லையில் இருக்கும் தனக்கு இளையராஜாவின் சிம்பொனி இசையை கேட்க முடியுமா?’ என்றும் ஆதங்கத்துடன் கேட்டிருந்தார்.
விகடன் கடைக்கு வந்த அன்று மாலையே, இளையராஜா என்னை வீட்டுக்கு அழைத்தார்.
“பெரியவர் சுப்புடு மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. எனது ‘சிந்து பைரவி’ இசையைக் கேட்டுவிட்டு செல்லும் இடமெல்லாம் என்னை அவர் பாராட்டிப் பேசியதை நான் அறிவேன். அந்த நேரத்தில் எனக்கு எட்டு பக்கங்கள் கொண்ட கடிதமும் எழுதியிருக்கிறார். இப்போது அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது? அவரது ஆசையை நிறைவேற்றுகிறேன். டெல்லிக்குச் சென்று, நான் தரும் சிம்பொனி சி.டி.யை அவருக்குப் போட்டுக் காட்டிவிட்டு கையோடு கொண்டு வாருங்கள். நான் செய்வது நீங்கள் பத்திரிகையில் எழுதுவதற்காக அல்ல. என் செலவிலேயே டெல்லிக்கு விமானத்தில் சென்று வாருங்கள். விகடன் ஆசிரியரிடம் அனுமதி கேளுங்கள்!” என்றார்.
மறுநாள், அலுவலகம் சென்றதும் வீயெஸ்வி சாரிடம் இளையராஜாவின் விருப்பத்தைச் சொன்னேன். உடனே ஆசிரியரிடம் என்னை அழைத்துச் சென்ற வீயெஸ்வி சார், அவருக்கு விளக்கம் சொல்லி, “பொன்ஸீயை டெல்லிக்கு அனுப்பலாம் சார். அதைப் பற்றி கட்டுரையும் எழுதித்தரட்டும்'”
என்றார்.
பத்து வினாடிகள் கண்களை மூடித்திறந்த ஆசிரியர், “மிக நல்ல விஷயம். ராஜாவைப் பாராட்ட வேண்டும். விகடனில் வந்த விஷயம்தானே... விகடன் செலவிலேயே டெல்லிக்குச் சென்று வரலாமே. கட்டுரை பற்றி ராஜாவிடம் பொன்ஸீயே பேசட்டும்..!” என்று அறுதியிட்டுச் சொன்னார்.
அதற்குள்ளாக டெல்லிக்கு இரண்டு டிக்கெட் போட்டு, இளையராஜா முந்திக் கொண்டார். “என் மூத்த மகன் கார்த்திக் ராஜாவையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள். பெரியவரிடம் அவன் கல்யாணத்திற்கு ஆசி பெறட்டும்” என்றார்.
டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும் பெரிய பழக் கூடையுடன் எங்களுக்காகக் காத்துக் கொண்டு இருந்தார், அன்றைய டெல்லி ஆனந்த விகடன் நிருபர் ஸ்ரீதர்.
அவரது வழிகாட்டலில் பெரியவர் சுப்புடுவைச் சந்தித்தோம். படு உற்சாகமாகமான சுப்புடு, “நான் எழுதிய ஒரு ஆதங்க வரிக்காக, சிம்பொனி இசையைக் கொடுத்து அனுப்பிய ராஜா கிரேட்தான்! ராஜாவே நேர்ல வந்த மாதிரிதான்!” என்று சொல்லி, கார்த்திக் ராஜாவை அணைத்துக் கொண்டார்.
அமைதியாக சிம்பொனியை ஆற அமரக் கேட்டார். பிற்கு தன் கைப்பட இளையராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதித் தந்தார்.
தான் வைத்திருந்த கீ-போர்டை எடுத்து வந்து, கார்த்திக் ராஜாவிடம் சினிமா இசை நுணுக்கம் பற்றி மணிக்கணக்கில் பேசினார்.
சென்னைக்கு வந்ததும் எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல், ஒரு அனுபவக் கட்டுரையாக எழுதி ஆசிரியருக்கு அனுப்பினேன்.
சிறு திருத்தங்களுடன் அது விகடனில் பிரசுரமானது.

- பொன்ஸீ -  நன்றி: விகடகவி ;  நன்றி R. கந்தசாமிசார், FB 
=======================================================================================

மோதிரத்தை எடுத்துக் கொண்ட சோனியா :
இந்திராவின் மூத்த மருமகள் சோனியா; இளைய மருமகள் மேனகா. வீடு, சமையல் உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளை, சோனியா கவனித்துக் கொள்வார். இந்திராவின் உரைகளுக்கு, மேற்கோள் தயாரித்துக் கொடுப்பது, மேனகாவின் வேலை. அதை, அவர் மகிழ்ச்சியோடு செய்து வந்தார்.

கடந்த, 1977-ல், இந்திரா ஆட்சி அதிகாரத்தை இழந்தார். ஜனதா அரசு, அவர் மீது, தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்திராவின் குடும்பத்தில், எப்போதாவது, பெரிய சண்டை நடப்பது உண்டு. பெரும்பாலும், சஞ்சய் - மேனகா இடையே தான், சண்டை வரும். ஒருமுறை மேனகா, தன் திருமண மோதிரத்தைக் கழற்றி வீசியெறிந்து விட்டார். இந்திரா அதைக் கண்டு வேதனைப்பட்டார். அவருடைய தாய் கமலா நேருவின் மோதிரம் அது. இந்திரா, தன் தாயின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளமாக, அந்த மோதிரத்தை பாதுகாத்திருந்தார். வீட்டுக்கு வந்த மருமகள், அதைக் கழற்றி எறிவதென்றால்...

மாமியாரின் மனநிலையை உணர்ந்த சோனியா, அந்த மோதிரத்தை எடுத்து பத்திரப்படுத்தியதோடு, தாம், அதைப் பிரியங்காவிற்காக வைத்துக் கொண்டதாக, இந்திராவிடம் தெரிவித்தார். அந்த மோதிரம், இன்று பிரியங்காவின் கை விரலை, அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

— சி.எஸ்.தேவநாதன் எழுதிய, 'சோனியா காந்தி' நூலிலிருந்து.
[தினமலர் வாரமலர் - திண்ணை]   5-1-2014

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த இரன்டு படங்களுக்கும் வாசகர்கள் கவிதை எழுதலாமே என்கிறார் நெல்லை.  ரெடி ஜூட்...




==================================================================================================

அம்மாவும் அப்பாவும்...

2002 ல் அம்மா காலமாகி விட்டார்.  நான் சென்னையில் குடித்தனம்.  அண்ணன், உள்ளூரிலேயே ஆனால் தனியாகக் குடித்தனம்.  அக்காவும் தங்கையும் முறையே ஊட்டி, சென்னை என்று வெளியூரில்.  அப்பா மட்டும் அந்த வீட்டில் அம்மா நினைவுகளுடன்...  அப்போது அவர் எங்களுக்கு அனுப்பிய தபால் இது.  வீட்டில்  நிறைய பொருள்கள் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று தோன்றி இருக்கிறது. அதை டிஸ்போஸ் செய்ய எண்ணி எழுதி இருக்கிறார்.  இரண்டாவது பேப்பரில் கடைசி ஐட்டத்தையும் கடைசி வரிகளையும் படியுங்கள். அம்மா நினைவுகளுடன் ஒரு பட்டாம்பூச்சி போல சுற்றி பறந்து வர நினைத்திருக்கிறார்.  முதுமையில் தனிமை கொடிது.





சில பழைய விளம்பரங்கள்...




விலை ஐம்பதுகளிலேயே 1500 ரூபாய் பக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!