"கோலமாவு" என்று கூவிக் கொண்டு போன வியாபாரியின் குரல் சில பழைய வியாபாரக் குரல்களை நினைவுக்குக் கொண்டுவந்தது.
70
களில் திருவாரூர் ரயில் நிலையத்தில் அதிக வயதான ஒரு மனிதர் தோள்பட்டையின்
பின்புறம், அல்லது பின் கழுத்தில் கூடையைச் சுமந்து "வடை வடை முறுக்கு"
(சொல்லும்போது "வட வட முறுக்கு") என்று விற்றுக் கொண்டே போன கம்மிய குரல்.
தஞ்சையில்
70 களில் காய்கறி விற்கும் ஒரு பெண்மணி "கோய்கறி" என்று ஒற்றை
வார்த்தையில் விற்றுக் கொண்டு வருவார்! வலது கை முட்டி வளைந்த ஒரு வியாபாரி
காய்கறியும் விற்பார், கருவாடும் விற்பார், ஒன்றும் குரல் கொடுக்காமலேயே
தாண்டிச் செல்வார்! அவரிடம் காய்கறி வாங்கத் தொடங்கிய என் அம்மா, அவர்
கருவாடும் விற்பார் என்று தெரிந்தபின் அவரிடம் காய்கறி வாங்குவதைத்
தவிர்த்து விட்டார்!
"ஆங்க்ரீவாலயா நானாஹாதாயிலா நாய்னா
மூய்னா சாம்பில் பாபுஜியா...பாரனபா " என்று நீளமாகச் சொல்லிக் கொண்டு வரும்
வியாபாரி விற்றது என்ன தெரியுமா? சோன்பப்படி. இப்போது கிடைக்கும் 'ஹல்டிராம் சோன்பப்டி' போல இல்லை இது.
இன்றும் இதை கே ஜி
கெளதமனும் அவர் அண்ணனும் அதே ராகத்தில் சொல்வார்கள். இதை விசுமாமாவிடம் சொல்லச்
சொல்லி ரெகார்ட் கூடச் செய்து வைத்திருந்தேன். காணாமல் போய் விட்டது! இதைப் படித்துப் பார்ப்பதைவிட, அவர்கள் சொல்லிக் கேட்பது சுவாரஸ்யமாய் இருக்கும்!
இதையே தஞ்சைப் பக்கங்களில் "பம்பே (பாம்பே) மிட்டாய்" என்று கூண்டு போலக் கண்ணாடி மூடிய வண்டிகளில்
கோவில்மணி போல மணியடித்துக் கொண்டே வருவார்கள். அது தனி ருசி. 50
பைசாவுக்கு சலூனில் கீழே கொட்டிக் கிடக்கும் முடி போல (அதுவும்
நரைத்தமுடி!) பேப்பரில் கட்டித் தருவார்கள்!
"சர்க்கும்த்ம்வென்மாகும்தம்" என்று திருச்சி பஸ் நிலையத்தில் அருகில் வந்து அடிக்குரலில் உறுமுபவர் கேட்பது "சார்... குமுதம் வேணுமா குமுதம்..."
நாகையில் "குடைகள் பழுது பார்ப்பது குடை ரிப்பேர்" ஒரு ராகமாக டெஃபனிஷன் கொடுப்பது போல வருவாராம் குடை ரிப்பேர்க்காரர் . வீட்டுக்குள் இருக்கும் கே ஜி ஜி குறிப்பிட்ட இடைவெளியில், அவர் ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்குமுன் "குடை ரிப்பேர் என்றால் என்ன?" என்று கேட்பதும், அதற்கு பதில் சொல்வது போல வியாபாரி தெருவில் இந்த வரியைப் பேசுவதும் வேடிக்கையாக இருக்குமாம். இந்த வியாபாரியின் குரலையும் கே ஜி பிரதர்ஸ் இப்போதும் அதே ராகத்தில் சொல்லிக் காட்டுவார்கள்!
சில
பேர் என்ன விற்கிறார்கள் என்று வெளியில் சென்று பார்த்தால்தான் தெரியும்.
சிலசமயம் அருகில் சென்று நிறுத்தி என்ன என்று பார்த்தால்தான் தெரியும்! கவுண்டமணி-செந்தில்-புளி வியாபாரி ஜோக்
நினைவிருக்கிறதா?
மதுரையில் "புவனேஸ்வரி ஆண்டாள் ஸ்நான
மஞ்சள்தூள், வாசனைப்பொடி..." என்று சிறிய குரலில் சொல்லி வரும் பெரியவர்
பற்றி 'சந்தோஷங்கள்' பதிவில் சொல்லியிருந்தேன்!
"அம்மா...பூவு"
என்று பூ விற்கும் பாட்டி, அம்மாவுக்கும் பூவுக்கும் நடுவில் விடும்
குழைவு, 'பூவு' சொல்லும்போது ஒரு ராகம்! "மல்லீயப்" என்று ஷார்ட்டாக
மல்லிகைப்பூ விற்கும் பெண்மணி...
பிரெட், பன், பிஸ்கட்
வகையறாக்கள் விற்றுக் கொண்டு வருவார் ஒருவர். அவற்றை ஒரு கண்ணாடி மூடிய
வண்டியில் வைத்து 'டிங் டிங்' என்று பெல் அடித்தபடியே வருவார்.
எங்கள்
செல்லம் மோதி அந்தச் சத்தம் தூரத்தில் கேட்கும்போதே டென்ஷன் ஆகிவிடும்.
வாசலுக்கு ஓடும். வண்டி எங்கு வருகிறது என்று பார்க்கும். உள்ளே ஓடிவந்து
நம்மிடம் செய்தி சொல்வது போல பரபரப்பாய் நின்று, வாலாட்டி, மேலே ஏறி நின்று குழைவான குரலில் சத்தமெழுப்பி, சிறிய சிறிய குரைப்புகளாக குரைத்தபடி தன் விருப்பம் சொல்லும்!
வண்டி தாண்டிச் செல்லும் நிலை வந்து விட்டால் வண்டிக்குக் குறுக்கே ஓடி வழிமறித்து நின்று, நிறுத்தி விட்டு செல்லமாய், அல்லது வேண்டுதலாய்க் குரைத்துக் கொண்டே உள்ளே எங்களிடம் வந்து விருப்பம் சொல்லும் அழகு கண்ணிலேயே நிற்கிறது.
வண்டிக்காரருக்கும் இது புரியும். வியாபாரம் நடக்குமா என்று காத்திருப்பார். இப்படிக் கேட்கும் மோதியை ஏமாற்ற முடியுமா? செலவுதான்!
வண்டி தாண்டிச் செல்லும் நிலை வந்து விட்டால் வண்டிக்குக் குறுக்கே ஓடி வழிமறித்து நின்று, நிறுத்தி விட்டு செல்லமாய், அல்லது வேண்டுதலாய்க் குரைத்துக் கொண்டே உள்ளே எங்களிடம் வந்து விருப்பம் சொல்லும் அழகு கண்ணிலேயே நிற்கிறது.
வண்டிக்காரருக்கும் இது புரியும். வியாபாரம் நடக்குமா என்று காத்திருப்பார். இப்படிக் கேட்கும் மோதியை ஏமாற்ற முடியுமா? செலவுதான்!