திங்கள், 7 அக்டோபர், 2013

சில பழைய நினைவுகள்



"கோலமாவு" என்று கூவிக் கொண்டு போன வியாபாரியின் குரல் சில பழைய வியாபாரக் குரல்களை நினைவுக்குக் கொண்டுவந்தது.

70 களில் திருவாரூர் ரயில் நிலையத்தில் அதிக வயதான ஒரு மனிதர் தோள்பட்டையின் பின்புறம், அல்லது பின் கழுத்தில் கூடையைச் சுமந்து "வடை வடை முறுக்கு" (சொல்லும்போது "வட வட முறுக்கு") என்று விற்றுக் கொண்டே போன கம்மிய குரல்.

மதுரையில் 80 களில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா விற்கும் ஒரு இளைஞர் பால்கோவா  வார்த்தையை வித விதமான ராகங்களில் கூவி விற்றுக்கொண்டே வருவார். ஒருமுறை அவர் கூவி விற்பதை 'டேப்'பில் ரெகார்ட் செய்து வைத்திருந்து அடுத்தமுறை அவர் வீட்டின் பக்கம் அவர் வரும்போது அதைச் சத்தமாக வைத்துவிட்டு மறைந்து நின்று அவர் திகைப்பை ரசித்தது நினைவுக்கு வருகிறது.

                                                       
தஞ்சையில் 70 களில் காய்கறி விற்கும் ஒரு பெண்மணி "கோய்கறி" என்று ஒற்றை வார்த்தையில் விற்றுக் கொண்டு வருவார்! வலது கை முட்டி வளைந்த ஒரு வியாபாரி காய்கறியும் விற்பார், கருவாடும் விற்பார், ஒன்றும் குரல் கொடுக்காமலேயே தாண்டிச் செல்வார்! அவரிடம் காய்கறி வாங்கத் தொடங்கிய என் அம்மா, அவர் கருவாடும் விற்பார் என்று தெரிந்தபின் அவரிடம் காய்கறி வாங்குவதைத் தவிர்த்து விட்டார்!

"ஆங்க்ரீவாலயா நானாஹாதாயிலா நாய்னா மூய்னா சாம்பில் பாபுஜியா...பாரனபா " என்று நீளமாகச் சொல்லிக் கொண்டு வரும் வியாபாரி  விற்றது என்ன தெரியுமா? சோன்பப்படி.  இப்போது கிடைக்கும் 'ஹல்டிராம் சோன்பப்டி' போல இல்லை இது.
 
இன்றும் இதை கே ஜி கெளதமனும் அவர் அண்ணனும் அதே ராகத்தில் சொல்வார்கள். இதை விசுமாமாவிடம் சொல்லச் சொல்லி ரெகார்ட் கூடச் செய்து வைத்திருந்தேன். காணாமல் போய் விட்டது! இதைப் படித்துப் பார்ப்பதைவிட, அவர்கள் சொல்லிக் கேட்பது சுவாரஸ்யமாய் இருக்கும்!  

இதையே தஞ்சைப் பக்கங்களில் "பம்பே (பாம்பே) மிட்டாய்" என்று கூண்டு போலக் கண்ணாடி மூடிய வண்டிகளில் கோவில்மணி போல மணியடித்துக் கொண்டே வருவார்கள். அது தனி ருசி. 50 பைசாவுக்கு சலூனில் கீழே கொட்டிக் கிடக்கும் முடி போல (அதுவும் நரைத்தமுடி!) பேப்பரில் கட்டித் தருவார்கள்!

                                            

"சர்க்கும்த்ம்வென்மாகும்தம்" என்று திருச்சி பஸ் நிலையத்தில் அருகில் வந்து அடிக்குரலில் உறுமுபவர் கேட்பது "சார்... குமுதம் வேணுமா குமுதம்..."

நாகையில் "குடைகள் பழுது பார்ப்பது குடை ரிப்பேர்" ஒரு ராகமாக டெஃபனிஷன் கொடுப்பது போல வருவாராம் குடை ரிப்பேர்க்காரர் . வீட்டுக்குள் இருக்கும் கே ஜி ஜி குறிப்பிட்ட இடைவெளியில், அவர்
ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்குமுன் "குடை ரிப்பேர் என்றால் என்ன?" என்று கேட்பதும், அதற்கு பதில் சொல்வது போல வியாபாரி தெருவில் இந்த வரியைப் பேசுவதும் வேடிக்கையாக இருக்குமாம். இந்த வியாபாரியின் குரலையும் கே ஜி பிரதர்ஸ் இப்போதும் அதே ராகத்தில் சொல்லிக் காட்டுவார்கள்!

சில பேர் என்ன விற்கிறார்கள் என்று வெளியில் சென்று பார்த்தால்தான் தெரியும்.  சிலசமயம்  அருகில் சென்று நிறுத்தி என்ன என்று பார்த்தால்தான் தெரியும்! கவுண்டமணி-செந்தில்-புளி வியாபாரி ஜோக் நினைவிருக்கிறதா?

மதுரையில் "புவனேஸ்வரி ஆண்டாள் ஸ்நான மஞ்சள்தூள், வாசனைப்பொடி..." என்று சிறிய குரலில் சொல்லி வரும் பெரியவர் பற்றி 'சந்தோஷங்கள்' பதிவில் சொல்லியிருந்தேன்!

"அம்மா...பூவு" என்று பூ விற்கும் பாட்டி, அம்மாவுக்கும் பூவுக்கும் நடுவில் விடும் குழைவு, 'பூவு' சொல்லும்போது ஒரு ராகம்! "மல்லீயப்" என்று ஷார்ட்டாக மல்லிகைப்பூ விற்கும் பெண்மணி...

பிரெட், பன், பிஸ்கட் வகையறாக்கள் விற்றுக் கொண்டு வருவார் ஒருவர். அவற்றை ஒரு கண்ணாடி மூடிய வண்டியில் வைத்து 'டிங் டிங்' என்று பெல் அடித்தபடியே வருவார்.  

                                          
 
எங்கள் செல்லம் மோதி அந்தச் சத்தம் தூரத்தில் கேட்கும்போதே டென்ஷன் ஆகிவிடும். வாசலுக்கு ஓடும். வண்டி எங்கு வருகிறது என்று பார்க்கும். உள்ளே ஓடிவந்து நம்மிடம் செய்தி சொல்வது போல பரபரப்பாய் நின்று, வாலாட்டி, மேலே ஏறி நின்று குழைவான குரலில் சத்தமெழுப்பி, சிறிய சிறிய குரைப்புகளாக குரைத்தபடி தன் விருப்பம் சொல்லும்!

வண்டி தாண்டிச் செல்லும் நிலை வந்து விட்டால் வண்டிக்குக் குறுக்கே ஓடி வழிமறித்து நின்று, நிறுத்தி விட்டு செல்லமாய், அல்லது வேண்டுதலாய்க் குரைத்துக் கொண்டே உள்ளே எங்களிடம் வந்து விருப்பம் சொல்லும் அழகு கண்ணிலேயே நிற்கிறது.  


வண்டிக்காரருக்கும் இது புரியும். வியாபாரம் நடக்குமா என்று காத்திருப்பார். இப்படிக் கேட்கும் மோதியை ஏமாற்ற முடியுமா? செலவுதான்!

25 கருத்துகள்:

  1. எனக்கும் சிறுவயதில்
    வீதியில் ஒரு பெரியவர்
    பட்டூக்கயர் அருணாக்கயர்
    என்ற குரல் கொடுத்தபடி
    அரைஞான் கயிறை விற்றுக் கொண்டு வரும்
    குரல் இப்போது நினைத்தாலும்
    காதில் தெளிவாக ஒலிப்பது போலத்தான் இருக்கிறது
    பழைய நினைவுகளை மீட்ட அருமையான
    பதிவைத் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இவர்களில் பலரை நேரில் பார்த்தாற்போல் இருக்கிறது! ஆமாம், இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

    பதிலளிநீக்கு
  3. அருமையான மீட்டல் சகோதரரே!.. மிகவே ரசித்தேன்...
    குமுதம் விற்பனை சொல்லும் விதம் நினைத்து நினைத்துச் சிரித்தேன்..:)

    ஹைலைட்டா மோதியின் ஆவலை அது படும்பாட்டினை ரசித்தேன்..
    இவற்றையெல்லாம் ரசனையோடு அச்சுப்பிசகாமல் அப்படியே
    மனக்கண்ணில் கொண்டுவந்த உங்களின் எழுத்துத் திறமை அபாரம்!

    நல்ல ரசனைப் பகிர்வு! மிக்க நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  4. நல்ல அனுபவ பகிர்வு! நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் காலையில் 'சொப்பு,சொப்பு' என்று ஒரு குரல். காலங்கார்த்தால யாரு சொப்பு வாங்குவார்கள் என்று வெளியே வந்து பார்த்தால் கீரை! கன்னட மொழில் கீரைக்கு சொப்பு என்று பிறகு அறிந்து கொண்டேன்!
    ரங்கோலி என்றால் கோலமாவு!
    இன்னும் இங்கு இந்த வியாபாரிகள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    பதிவில் பல புதுமைகள் நிறைந்துள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. அவர் கருவாடும் விற்பார் என்று தெரிந்தபின்...

    ஓஹோ...

    பதிலளிநீக்கு
  8. நானும் இவர்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. தஞ்சையில் எங்கள் திருபுரசுந்தரி நகருக்கு வந்து கொண்டிருந்த தங்கப்பல் பாத்திரக்காரர், சைக்கிளில் இரண்டு பக்கமும் பொதியாக காய் கறிகளை சுமந்து கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று விற்று போனவர் , கோல மாவு, பாய் பாய் என்று கோரைப்பாய்களை விற்பவர், சோன் பப்டி ,
    விற்பவர், பஞ்சு மிட்டாய் விற்றவர்

    ஒவ்வொரு மாலையும் தவறாது வந்து பூ கொடுப்பவர் அணைத்து பேரையும் நினைத்தாலே அவர்கள் முகங்கள் கண்கள் முன்னே பிரசன்னம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  10. பட், பட், சட், சட், ரெண்டு நிமிசத்துல டிஃபன் ரெடி. சேம்ம்ம்ம்ம்ம்மியான்னு கத்தி வரும் சேமியாக்காரரை எங்க தெருவில் அடிக்கடி பார்க்குறேன்.

    பதிலளிநீக்கு
  11. பட், பட், சட், சட், ரெண்டு நிமிசத்துல டிஃபன் ரெடி. சேம்ம்ம்ம்ம்ம்மியான்னு கத்தி வரும் சேமியாக்காரரை எங்க தெருவில் அடிக்கடி பார்க்குறேன்.

    பதிலளிநீக்கு
  12. /அதைச் சத்தமாக வைத்துவிட்டு மறைந்து நின்று அவர் திகைப்பை ரசித்தது/

    குறும்புதான்:)!

    பாம்பே மிட்டாயை நாங்கள் ‘டிங் டிங்’ மிட்டாய் என்போம் வண்டியின் மணிச் சத்தத்தைக் கொண்டு.

    மோதி பன் கேட்டு அடம் பிடிக்கும் அழகுக் காட்சியை உங்கள் வரிகள் எங்கள் கண்முன்னும் விரிய வைத்தன.

    பதிலளிநீக்கு
  13. நல்லவேளையா அம்பத்தூரில் நாங்க வர வரைக்கும் கோலமாவு வாசலில் வித்தது. அதே போல் கீரையும் வாசலில் தான் வாங்குவோம். இன்னும் பழ வண்டியும் வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும்.

    சின்ன வயசில் வாசலில் கை வண்டியில்"வெள்ளே உப்போய்!" னு உப்புக்காரர் கூவிக் கொண்டு போவார். மண்ணெண்ணெய் வாசலில் விற்றிருக்கிறது. நாங்க வாங்கி இருக்கோம். கல்யாணம் ஆகிச் சென்னை வந்தப்போக் கூட வாசலில் மண்ணெண்ணெய் விற்றிருக்கிறது. ஹிஹிஹி, அதைக் கிஸ்னாயில் னு கூவிட்டு வித்திருக்காங்க. அது புரியாம என்ன இது கிருஷ்ணரில் எண்ணெயானு முழிச்சுட்டு, மண்ணெண்ணை வண்டியே இங்கே வராதானு கேட்டுட்டு அசடு வழிஞ்சிருக்கேன்.

    இப்போவும் இங்கே கீரை, காய்கறிகள் வாசலில் விற்கின்றன. மதுரையில் கருகப்பிலைக்காரச் சந்தில் இருந்த இட்லி மாமா தூக்கில் இட்லி, சட்னியைப் போட்டுக் கொண்டு தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு வருவார். கூவி விற்றதில்லை. வீட்டு வாசலில் நின்ற வண்ணம் இட்லி வேண்டுமா எனக் கேட்பார்.

    பேய்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பேர், பழைய பேய்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் என்று கூவிக் கொண்டு போன பழைய பேப்பர்காரரை என் தம்பி காப்பி அடிக்க, அவர் அடிக்க வர, அம்மா மன்னிப்புக் கேட்ட கதை எல்லாம் நினைவில் வருது. இந்தப் பழைய பேப்பர்காரர் பல சமயங்களில் அவரிடம் விற்கக் கொடுத்த புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கார். காசெல்லாம் வாங்கிண்டதில்லை. படிச்சுட்டுத் திருப்பிக் கொடுக்கணும். சோன் பப்டியும் வாசலில் விற்றிருக்கிறது.

    மழை நாட்களில் கடலை வண்டி இரவில் காடா விளக்கை ஏற்றிக் கொண்டு சுடச் சுட வறுத்துக் கொடுப்பார்கள். அதே போல் சுண்டல் மாமாவும் இரவு எட்டு மணிக்கப்புறமா வருவார்.

    எங்க மோதிக்கு அவர் ஆஃபீஸிலிருந்து வரச்சேயே பேக்கரியில் வாங்கிட்டு வந்துடுவார். ஆகவே அவர் ஸ்கூட்டர் சப்தம் கேட்டது தான் தாமதம், எங்கே இருந்தோ மோப்பம் பிடிச்சுடும். ஒரே குதியாட்டம் போடும். வந்ததும் உள்ளே நுழையறதுக்குள்ளேயே டிக்கியின் மேலே ஏறி நின்று கொண்டு செல்லக் கொஞ்சல்களாகக் குழைந்து கொண்டு வாங்கி ஒரே வாயில் தின்றுவிட்டு அடுத்ததுக்குக் காத்து நிற்கும். சமத்துக்குட்டி!

    பதிலளிநீக்கு
  14. இங்கே ஶ்ரீரங்கத்தில் ஊதாப்பூ என்ற தொனியில் ஏதோ ஒண்ணு தினமும் காலை எட்டிலிருந்து எட்டரைக்குள் விற்கிறாங்க. கீழே தெருவில் போகுது. நாங்க மேலே நான்காவது மாடியில் இருப்பதால் என்னனு இன்னிவரை கண்டுபிடிக்க முடியலை. இடியாப்பம் ஆக இருக்கலாமோ என்று ஆராய்ச்சி செய்து முடிவெடுத்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
  15. முன்னமயே எழுதி இருந்தேன்.
    ஒரே ஒரு குடும்பதுக்காக மீன் கொண்டுவந்தவரும். உண்டு.

    பொரி விற்றவர் கோழி கோழி என்று கத்தியதாகப் பயந்தது உண்டு:)
    நவம்பர் மாத வேர்க்கடலைக் காரரை மறக்க முடியாது.
    பழையபேப்பர்க் காரர்,கோல்மா விற்ற்வர்,மழையிலும் உப்பு விற்ற தாத்தா, ஒரு முழ கதாம்ப வாசனையோடு வந்தவரையும் நினைவு இருக்கு. எங்கே போனார்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஆமா, ‘மோதி’ என்பது நாய்களுக்கு வைக்கும் டாமி, ஜிம்மி போல பொதுப் பெயரா? முதல்முறை கேள்விப்படுகிறேன்!!!

    நல்ல நினைவுகள். ”இய்யம் பூஸ்ரத்” - ரசிக்கக்கூடிய இன்னொன்று. விறகு வெட்டுவது போலவே இதையும் பக்கத்தில் நின்று - ’மேலே பட்டுரும், போம்மா’ என்று விரட்ட விரட்ட நின்று- வேடிக்கை பார்க்கவும் செய்யலாம். இப்பவும் ஊரில் இவற்றில் மிகச்சிலதை வாசலில் காணலாம்.

    இதுல பெரிய சிரமம் என்னன்னா, கரெக்டா நாம் வீட்டு முற்றத்தில் வேலையாக நிற்கும்போதுதான் நமக்குத் தேவையான பொருளை விற்கிறவங்க போவாங்க. கைவேலையை விட்டுட்டு, பறந்தோடிவந்து தெருவில் அவர்களைத் தேடினால், அதுக்குள் போயி... போயிந்தி.. இட்ஸ் கான்....

    இதுக்காகவே பக்கத்து வீடுகளிலெல்லாம் சொல்லிவச்சு... ஹூம்.. :-)

    இப்ப அபுதாபியில் வாசலில் வண்டியில் விற்கப்படும் ஒரே சாமான் - கேஸ் சிலிண்டர்!!!!! நடந்து வந்தாவே, நாம வரதுக்குள்ள காணாமப் போயிடுவாங்க. இதுல டிரக்கில் வர்றவங்க போற வேகத்துக்கு கேட்கணுமா? ஒரு பத்து நாளா அவங்களைப் பிடிக்க(!!) முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்!!

    பதிலளிநீக்கு
  17. பழைய நினைவுகளை அழகாக மீட்டு தந்துள்ளீர்கள்.

    கோவையில் ”எடையே நாலாணாவே” என்று திரும்பத் திரும்ப பாடிக் கொண்டே மதியம் வரும் பூக்காரர். எட்டு எடை 50 கிராமாம்....:)

    ஆட்டாங்கல்லு கொத்தலையோ அம்மிக்கல்லும் கொத்தலையோ என்று வரும் ஆட்கள்....இதுவும் கோவையில் தான்.

    அம்மாமாமாமாமா.....பாலு என்று வரும் பால்காரர்...

    தில்லியில் ”கபாடிவாலேய்ய்ய்ய்” என்று கூவிக் கொண்டு பழைய பொருட்கள், பேப்பர்கள் வாங்க வருபவர்கள்...(நானும் ரோஷ்ணியும் கபாடிவாலாவை அவர் குரலிலேயே அழைத்து விட்டு ஒளிந்து கொண்டிருக்கிறோம்)

    இரவில் டிங் டிங் டிங் என்று கரண்டியால் தோசைக்கல்லை தட்டி ”சாட்” விற்கும் நபர்.

    இங்கு ஸ்ரீரங்கத்தில் ”ரேஜாஜாப்பூபூபூ....” என்று ரோஜாப்பூக்கள் விற்கும் பூக்காரர்..( கீதா மாமி நீங்க இவரைத் தான் இடியாப்பம் விற்கிறார் என்று சொல்றீங்களோ?)

    வெள்ளி தவறினாலும் காலையில் ”உப்பேய்ய்ய்ய்ய்” என்று உப்பு விற்கத் தவறாத நபர்...

    இப்பொழுது ”பொம்மே, பொம்மே”....:)

    பதிலளிநீக்கு
  18. மிகவும் ரசித்துப் படித்தேன். ஆப்ஸர்வேஷன் ஒரு கலை. அந்தக் கலையை கைவரப் பெற்றவராய் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    அமரர் கு. அழகிரிசாமி அவர்கள் கீரைக்கட்டு விற்கும் ஒரு பெண் பற்றிய கதையில் அவள் கூவி விற்கும் அழகை இந்த மாதிரி அருமையாக விவரித்திருப்பார்.

    அன்பான வாழ்த்துக்கள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

  19. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  20. காய்கறி விற்பவர்கள் தினம் காலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழக்கம். ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் என்னென்ன விரும்புவார்கள் என்று தெரிந்து வாங்கி வரும் வியாபாரிகள். வீட்டுக்குள் வேலையாக இருந்தோமானாலும் (ஹுசைனம்மா கவனிக்க!) "அந்தக் கோடி வீட்டம்மா இன்னும் வரல்லையே... ஒண்ணும் வேணாமான்னு கேளுங்க" என்று கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டுதான் போவார்.

    பதிலளிநீக்கு

  21. தஞ்சையில் இருந்த காலங்களில் நாங்கள் குடியிருந்த வீட்டில் ஒன்று வ வு சி நகர் டாக்டர் அனந்தராமன் வீட்டு அவுட் ஹௌஸ்! அவர் மனைவி ரொம்ப அப்பாவி, நல்ல குணம். ஆனால் பெரிய குரல். 'சீமெண்ணெய்' விற்று வரும் கூண்டு வண்டிக்காரர் இவரிடம் ரகசியமாக 'மாமி... எல்லோரும் போகட்டும்... உங்களுக்கு இன்னும் 3 லிட்டர் தரேன்" என்பார். இவர் ஊருக்கே கேட்கும் குரலில் "எல்லோரும் போனப்புறம் யாருக்கும் தெரியாம எனக்கு இன்னும் 3 லிட்டர் தரேங்கரியா" என்று கேட்பார். வியாபாரி தலையில் அடித்துக் கொண்டு " உங்க கிட்ட வந்து ரகசியம் பேசினேன் பாருங்க" என்பார். வாசலில் வண்டியில் வந்தாலும் ஒரு ஆளுக்கு 3 அல்லது 5 லிட்டர்தான் என்று கணக்கு உண்டு!

    பதிலளிநீக்கு
  22. //(ஹுசைனம்மா கவனிக்க!//

    :-))))

    ரெகுலர் சேவைதாரர்கள்தான் இப்படி.

    ஆனால் எப்பவாவது மட்டும் தேவைப்படும் அம்மி கொத்துவது, பாய் விற்பவர்கள் போன்றவர்கள்தான் சில சமயம் தண்ணி காட்டுவார்கள்!! :-)))

    பதிலளிநீக்கு
  23. இதையே தஞ்சைப் பக்கங்களில் "பம்பே (பாம்பே) மிட்டாய்" என்று கூண்டு போலக் கண்ணாடி மூடிய வண்டிகளில் கோவில்மணி போல மணியடித்துக் கொண்டே வருவார்கள். அது தனி ருசி. 50 பைசாவுக்கு சலூனில் கீழே கொட்டிக் கிடக்கும் முடி போல (அதுவும் நரைத்தமுடி!) பேப்பரில் கட்டித் தருவார்கள்!//

    மகன் மணி சத்தம் வந்தவுடன் ஓடி போய் வாங்குவான்.

    // பழைய நினைவுகள் மிக அருமை.
    இன்றும் இதை கே ஜி கெளதமனும் அவர் அண்ணனும் அதே ராகத்தில் சொல்வார்கள். இதை விசுமாமாவிடம் சொல்லச் சொல்லி ரெகார்ட் கூடச் செய்து வைத்திருந்தேன். காணாமல் போய் விட்டது! இதைப் படித்துப் பார்ப்பதைவிட, அவர்கள் சொல்லிக் கேட்பது சுவாரஸ்யமாய் இருக்கும்!//

    இப்போது கே,ஜி கெளதமன் அவர்கள் குரலில் பதிவு செய்து தரலாமே ஸ்ரீராம்.

    பழைய நினைவுகளை ஏற்படுத்திய பதிவு அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!