கேரக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31.3.15

நினைவுகள் 1946 : நாளச்சேரிப் பாட்டி


நாளச்சேரிப் பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார்.  90 வயது.  பருத்த உடம்பு.  ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காத்தாடிக் கொண்டிருக்கும்.  கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக்கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.





அப்போதெல்லாம் ரேடியோவே பார்த்ததில்லை.  பொழுது போக வேண்டுமே...  மின்சாரமே சில வீடுகளில்தான் இருக்கும். பாட்டியின் விசேஷம் பேய்க்கதைகள்.  




என் அம்மாவும் பதிலுக்கு பயம் காட்டுவார்.  " வெளக்கு வச்சப்புறம் கொல்லைக் கதவைத் தற்செயலாத் தெறந்தேனா? சரசரன்னு புடைவைச் சத்தம்.  கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா...!"



அதிலிருந்து எனக்குக் கொல்லைக் கதவைத் திறக்கவே பயம்.  திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும்.  பகலில் கூட அந்தக் கதவுப் பக்கம் போவதில்லை.


பாட்டி சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.. "கொள்ளிவாய்ப் பிசாசு பாத்திருக்கியா நீ?"


'நல்லவாய்ப் பிசாசையே பார்த்ததில்லை... இதுல இது வேற...  அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும்..  இனி இந்தப் பாட்டி வந்தால் உள்ளே விடாதேன்னு'  என்று நினைத்துக் கொண்டே,  "ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேனே.."


"நேத்து கூட நான் பாத்தேன்.  கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது..  வாயை அடிக்கடித் தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும்.  யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில தீத்துப்புடும்"


பாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.


"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா..  ஒரு சுருட்டு பத்த வச்சுகிட்டு வயப்பக்கம் வந்தேன்.  பாத்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு...  நெருப்பா கொட்டுது, அணையுது...  கொட்டுது, அணையுது...   குளத்தாண்டைத் திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்...  ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்."


நான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.


"பாட்டி... நீ நெஜமா அதப் பாத்தியா...?"





"பின்ன...? ஒனக்கும் பாக்கணுமா?"


அம்மா பேச்சை மாற்றினார்.  இதுமாதிரி எவ்வளவோ கதைகள் கேட்டவர் அவர்.  பாட்டி அடுத்த சப்ஜெக்டுக்குப் போய்விட்டார்.  எதிர் வீட்டுப்பெண் வாசல்ல வந்து நின்னு 'பசங்கள'ப் பார்க்கும் செய்தி தொடங்கியது.


இப்படி ஏழு, ஏழரை வரை பேசிக் கொண்டிருந்தால் மெல்ல இரவு உணவு நேரம் வந்து விடும்.  இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு பாட்டி கையை ஊன்றி அலுப்புடன் எழுந்து நடந்தால், அடுத்து நாலைந்து நாள் ஆகும் மறுபடி ரொடேஷனில் அவர் எங்கள் வீட்டுப்பக்கம் வர!






-  பாஹே  -





படங்கள்  :  இணையம்! 

10.3.15

நினைவுகள் 1946



1)  மருதமுத்து மாரியம்மன் கோவில் பூசாரி.   அது பார்ட் டைம் ஜாப் மாதிரி!  மிச்ச நேரம் அவருக்கிருக்கும் வேலைகள் குறி சொல்லுதல், நாடகங்களில் நடித்தல், கெடா மீசையை அவ்வப்போது ஒழுங்கு படுத்துதல்....

                                                         Image result for கோவில் திருவிழா clip art images
கோவிலில் தீமிதி உற்சவம் அமர்க்களப்படும்.  மெயின் பார்ட் மருதமுத்துவுக்குத்தான்.  மஞ்சள் வேஷ்டி கட்டி,  சாமி வந்து அவர் குதிப்பது,  பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காட்சி.  அப்போது மக்கள் அவர் குதிப்பதைப் பற்றிப் பேசிக் கொள்வதை இங்கே பகிர முடியாது! 

ஆட்டுக்கிடா, சேவல் போன்றவற்றைத் துடிக்கத் துடிக்க பலியிடுவது அவருக்கு மிகவும் பழகிப்போன, மற்றும் அனுபவமுள்ள வேலை.  கைவந்த கலை!

சாமி வந்து ஆடும்போது சுற்றி நிற்கும் பக்தகோடிகள் கைகட்டி, வாய் புதைத்து நிற்பர்.  ஊரில் பெரிய பணக்காரராய்ப் பார்த்து அவரை முதலில் அழைத்து சாமி "துண்ணூறு" கொடுக்கும்.  எந்தக் கோவிலிலும் இந்த பணக்கார செலெக்ஷன் நிச்சயம் உண்டுதானே...

சாமி வருவது, குறி சொல்வது பற்றிச் சொல்லும்போது இன்னொரு நபரும் நினைவுக்கு வருகிறார்.


நண்பன் வேதகிரியின் அம்மா திருணம்மாள் மீது அடிக்கடி சாமி வந்து விடும்.  வெள்ளிக் கிழமைகளில் அம்மன், சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதி.


சாமியாடி என்று ஊரில் அவருக்குப் பெயர்.  வரம் கேட்கக் கூட்டம் நிறைய வரும், காணிக்கைகளுடன்.

உட்கார்ந்த வாக்கில், கண்களை மூடிக் கொண்டு உடலை முன்னும் பின்னும் அசைத்து ஆட்டம் காட்டுவார்.  சமயங்களில் பக்கவாட்டில் சரிந்து எழுவதும் உண்டு.  ஒவ்வொரு தரமும் கற்பூர வில்லைகளைக் கொளுத்தி வாயில் போட்டுக் கொள்வார்.  வந்திருக்கும் அத்தனை பேருக்கும் 'அருள்வாக்கு' வழங்குவது 'கிளைமேக்ஸ்'

ஒருதடவை நான், பஞ்சாமி, சூசை, ஹனீபா மற்றும் தங்கவேலு அங்கு வேடிக்கைப் பார்க்கப் போயிருந்தோம்.

"போஸ்ட் மாஸ்டர் வீட்டுத் தம்பி பாஸ் பண்ணிப்பிடும். அதான கேக்க நினச்சே?"

நான் அதை எங்கே கேட்க நினைத்தேன்?  கேட்க நினைத்ததைக் கேட்டேன்.  "நேதாஜி உயிரோடு இருக்காரா?  எங்கே இருக்கார்?"

சாமி கண்களைத் திறக்கவே இல்லை.  உரக்க ராகமிட்டு, "வெங்கடாஜலபதி...  திருப்பதி பெருமாளே... இந்தப் புள்ளைக்கி நல்ல புத்தி கொடுங்க... போஸ்ட் மாஸ்டர் வீட்டம்மா கவலைப்படறாங்க... படிப்பை விட்டுட்டு எதெதையோ பத்திக் கவலைப்படறானே.... இவன் நல்லாப் படிக்க வரம் கொடுங்க..,"

இரண்டு நாட்களுக்குப்பின் -  குளக்கரை மதகு.  வேதகிரியிடம் "நான் கேட்டதுக்கு ஒங்கம்மா பதில் சொல்லல்லியேடா..?"  என்றேன்.

அவன் சொன்ன பதில் முக்கியமானது - "நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"

இதுதான் சரியான பதில்!

நாளச்சேரிப் பாட்டி பற்றிப் பிறகு சொல்கிறேன்...

- பாஹே -

9.9.13

அலுவலக அனுபவங்கள் - பெஞ்சமினும் சீனுவும்



அமைதியான ஒரு அலுவலக வேலை நாள். சிறிய சலசலப்பான குரல்களுடன் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.

திடீரென பக்கத்துக் கட்டத்திலிருந்து அழுகுரல் கேட்டது.

அதுவும் எங்கள் அலுவலகத்தின் பகுதிதான்.

"ஸார்....ஸார்... கேஷியர் பெஞ்சமின் செத்துப் போயிட்டார் ஸார்..." பியூன் கோவிந்த் ஓடிவந்து சொன்னான்.


'என்னடா இது.. கேஷியர் செத்துப்போனதுக்கு ஆஃபீஸ் மக்கள் இவ்வளவு அழுகிறார்களா?' அலுவலகத்திலேயே நிகழ்ந்திருக்கும் அவர் திடீர் மரணத்தை விட, இந்தக் கேள்வி மனதில் தலை தூக்கியது. ஏனென்றால் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் செத்துப்போன அலுவலக நண்பர்கள் வீட்டுக்கு வந்த சக ஊழியர்கள் அளவை விரல் விட்டு எண்ணி விடலாம்!

எப்போதும் அவரைச் சுற்றி நாலு பேராவது இருந்து கொண்டே இருப்பார்கள். அந்தப் பிரியம்தான் போலும்.


பெஞ்சமின் 'டர்ன் டியூட்டி' பார்க்கும் நாட்களில் உடன் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று வாங்கிக் கொடுப்பார் என்று கேள்விப்படும்போது ஆச்சர்யமாக இருக்கும். 

மற்றவர்கள் அவரைப்பற்றிச் சொல்லும்போது 'நீங்கள் அப்படி எல்லாம் வாங்கித் தருவது இல்லை' என்ற மறைமுகக் குற்றச்சாட்டு இருக்கும்.
என்ன செய்ய... எப்படி இருந்தாலும் இதற்காக என்னால் இப்படி எல்லாம் செலவு செய்ய முடியாது! அதனால் பெஞ்சமினை நினைத்து ஆச்சர்யமாக இருக்கும்.

பெஞ்சமின்....

கலகலப்பாகப் பேசுவார். பாக்கு மென்றுகொண்டே இருப்பார். யாரைப் பார்த்தாலும் சத்தமாக அவர் பெயர் சொல்லி அழைத்து ஏதாவது குசலம் விசாரிப்பார். எல்லோர் குடும்ப விவரமும் அவருக்கு அத்துபடி.

சம்பவ இடத்துக்குச் சென்றபோது பெஞ்சமின் உடல் ஒரு அறையில் கிடத்தப்பட்டிருக்க - 'மாஸிவ் அட்டாக்' காம் ஸார்... இப்போதான் டாக்டர் வந்து போனார்" பியூன் கோவிந்த் - அழுபவர்கள் வேறு அறையில் தனியாக அழுது கொண்டிருந்தனர். காரணமும் தெரிய வந்தது!

எல்லோருமே பெஞ்சமினுக்குக் கடன் கொடுத்தவர்கள். ஒவ்வொருவரும் புலம்பியதிலிருந்து ஒருவாறாக விஷங்கள் வெளிவந்தன.
சிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் வாங்கித் தந்தது வசியம் பண்ணத்தான் என்று தெரிந்தது.

"குமார்... இந்த மாசத்தோட உன் சொஸைட்டி லோன் முடியுது... ஒண்ணு பண்ணு... புது லோன் அப்ளை பண்ணு.. அட, தலையைச் சொறியாதே.. உனக்கில்லை.. நான் வாங்கிக்கறேன். மாசாமாசம் உனக்குப் பிடித்தமாகிற தொகையை நான் உனக்குக் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே...."
                                                  
                                                           

"வள்ளி! தீபாவளி முன்பணம் வேண்டாமா... நல்லது! நீ அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் எடுத்துக்கறேன். மாசா மாசம் தவணையை நான் உன் கையில் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே..."

"ஹுசைன்..  இந்த மாசத்தோட ரிடையர் ஆகப் போறே... என் கையில் ரெண்டு லட்சம் ரூபாய் கொடு. மாசம் பத்து பெர்சண்ட் வட்டி தர்றேன். எல்லார் கிட்டயும் சொல்லிடாதே... எல்லாருக்கும் இதுமாதிரி என்னால தர முடியாது..ஏதோ உனக்காகத்தான்.."

இந்த 'யார் கிட்டயும் சொல்லாதே.. உனக்காகத்தான்' என்கிற மந்திர வார்த்தைகள்தான் சம்பந்தப்பட்டவர்களை யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்க வைத்தது போலும்!

இப்படி எல்லோரிடமும் வாங்கியிருக்கிறார் என்று தெரிந்தது. மிகவும் உஷார் பார்ட்டி என்று அறியப்பட்ட கீதா, ராஜி, ரஞ்சனி எல்லோரும் கூட எப்படி ஏமாந்தார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. 

இந்நிலையில் சீனு மட்டும் அசந்தர்ப்பமாகச் சிரித்துக் கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 

"என்ன சீனு சிரிக்கறே..?"
                                        
                                                            
                                        [ குடிப்பழக்கம் உடல்நலத்திற்குத் தீங்கானது ]

"நேற்றுதான் ஸார் 'பார்'ல வச்சு பெஞ்சமின் ஸார் கிட்ட பத்தாயிரம் வாங்கினேன். யாரும் இல்லை பக்கத்துல...இப்போ தர வேண்டியதில்லை பாருங்க!"

"என்ன சீனு... தப்பில்லை?"

"அவர் செஞ்சது...?"

பின்னாட்களில் பெஞ்சமின் மனைவி யாருக்கும் பணம் தரச் சம்மதிக்கவில்லை என்று தெரிந்தது. 'எனக்கு ஒன்றும் தெரியாது. என்கிட்டே அவர் அப்படி எதுவும் சொன்னதுமில்லை. பணம் தந்ததுமில்லை. சொஸைட்டி கடன் அவர் பேரிலா இருக்கு? உன் பேர்லதான... நான் எப்படித் தர முடியும்? தீபாவளி முன்பணம் உன்பேர்லதான போட்டே... நான் எப்படித் தரமுடியும்?' என்று சொல்லி விட்டாளாம்!