சீவல் தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீவல் தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.11.15

திங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை



நான் இதை முதலில் சாப்பிட்டது மதுரை கோபு ஐயங்கார் கடையில்தான்.  சாதா, மற்றும் ஸ்பெஷல் தோசையை விட காசு அதிகம்!

ஏனென்றால் இதற்கு மாவு கொஞ்சம் வீண் ஆகும்.

தோசையை மிக மிக மிக மெலிதாக அவர் சுருட்டிக் கொண்டுவந்து தட்டில் போடும் அழகே தனி.  அவர் அந்தப் பொன்னிற சுருட்டலை - தோசையைத் தட்டில் போடு முன்பே கை பரபரக்கும்!


கடை சின்ன கடைதான்.  கை கழுவும் இடத்திலிருந்து பார்த்தால் சமையலறை தெரியும். 

ஒரு குட்டி டபராவில் தோசை மாவை எடுத்துக் கல்லில் ஊற்றி, டபராவின் அடி பாகத்தால் பரத்தி விடுவார்.  கைத் திறமை.   பரபரவென வட்டமாக மெலிதாக உருவாகும் அந்தத் தோசை.  

எவ்வளவுக்கெவ்வளவு மெலிதாக தோசையை வார்க்கிறோமோ,  அந்த அளவு மாவு வீணாவது குறையும்!

தோசை வேகத் தொடங்கு முன்பே ஒரு ஸ்பூன், அல்லது கரண்டி, அல்லது தோசை திருப்பியை நெட்டுக் குத்தாக வைத்தோ, தோசை மேலே உள்ள மாவை மேலாக சுரண்டி எடுக்க வேண்டும்.  நடுவில் ஓட்டை எதுவும் விழாமல் மாவை எடுப்பார்கள்.

மாவை ஊற்றியவுடன் கல்லில் ஒட்டிக் கொண்டது பாருங்கள், அந்த லேயர் மட்டும்தான் கல்லில் இருக்கும்.  பொன்னிறம் வந்தவுடன் தோசையின் நாலு ஓரமும் மெல்ல எடுத்து விட்டு, அதை அப்படியே சுருட்டி எடுத்துத் தட்டில் போட வேண்டியதுதான்.

 

                                                                           Image result for சீவல் தோசை images


மெலிதான  தோசை என்பதால் நிறைய சாப்பிடுவது வயிறு ரொம்பாது.  ஆனால் பர்ஸ் காலியாகும்.



இதற்கு சட்னி, சாம்பார் எல்லாம் வைப்பார்கள்தான்.  ஆனால் அதை எல்லாம் தொட்டுக் கொண்டால் சீவல் தோசையின் ஸ்பெஷாலிட்டி போய்விடும் என்று எனக்குத் தோன்றும்.

வேறு எந்த ஹோட்டலிலும் இந்தச் சீவல் தோசை போடுவது போலத் தெரியவில்லை.



                                                                             Image result for paper roast images


சில ஹோட்டல்களில் "பேப்பர் ரோஸ்ட் சொல்றீங்களா...?  இதோ கொண்டு வரேன்"  என்று சென்று, நான் சொல்லும் தோசையை விட கனமாக ஒரு ரோஸ்ட் கொண்டு வருவார்.  சமயங்களில் நடுவில் கருப்பாய் தீய்ந்து கூட இருக்கும்!  

"இது இல்லீங்க... அது வேற..." என்று சோகத்துடன் கிளம்புவேன்..  அப்புறம் கேட்பதே இல்லை.  ஓரிரு முறை வீட்டில் செய்திருக்கிறேன். பாஸ் திட்டுவார்.  

"பாதி மாவ வழிச்சு கீழ போட்டா, நான் எதுக்கு மாவரைக்கணும்?"


 வழித்து எடுத்த மாவை ஏதாவது உபயோகப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.  வேண்டுமானால் பச்சை மிளகாய், கரி, கொத்துமல்லி போட்டு 'குணுக்கு' போலப் போடலாம்.