மன்னிக்கவும்..... நவராத்திரி முடிந்து, நாட்கள் பலவாகி விட்டன! இப்போது
பதிவு போடுவது, நாட்கள் தாண்டி விட்டாலும் படங்கள் ரசிப்பீர்கள் என்ற
நம்பிக்கையுடன்!
சுண்டலுக்காகக் கிளம்பிய முதல் பயணத்தில் ஏமாற்றம்தான் கிடைத்தது வெள்ளிக்
கிழமை என்றால் புட்டுதான் செய்ய வேண்டுமாம்! போனால் போகிறது என்று ஒரு
வீட்டில் சுண்டல் சேர்த்துச் செய்திருந்ததால் சுண்டல் பயணத்தின் நோக்கம்
நிறைவேறியது!!
1) "பெரும்பாலான பொம்மைகள் ஊர்லையே இருக்கு... இன்னும் கொண்டு வரலை! அதனால சிம்பிளாத்தான்...."
2) "நாங்க கும்பகோணம் காரங்க... அந்தக் காலத்திலேருந்து நரசுஸ் காபிதான். கும்பகோணம் போனால் நிறைய வாங்கி வந்து விடுவோம். நிறைய எங்க காலத்து பொம்மைகளே இருக்கு. பையனும் மருமகளும் வருஷா வருஷம் புதுசா வாங்கிடுவாங்க... மருமகள் மைலாப்பூர்க்காரி.... கேக்கணுமா? இந்த வருஷம் புதுசா வாங்கினதா....... அதோ அந்த மீரா..."
"குழந்தை நேற்று கிருஷ்ணன் வேஷம் போட்டாள்... இன்று காலை நாரதர் வேஷம்....
இன்னிக்கி சாயந்திரம் ராதை வேஷம் போட்டு விடப் போறா அவங்கம்மா
அவளுக்கு...."
3) "இங்க பாருங்க.... சைட்ல இருக்கே இது துவாரகா போய் விட்டு வந்தப்போ
அப்படியே செட்டா வாங்கினது....அதை போட்டோ எடுத்துட்டீங்களா..... கொஞ்சம்
இருங்க லைட் போடறேன்......"
4) "அடேடே... இந்த வருஷம் வர்றது கஷ்டம்னு சொன்னே..... ரெண்டு பேரும் வந்துட்டீங்களே... ரொம்....ப சந்தோஷம்... என்ன கேக்கறே... இந்த வருஷம் புதுசாவா.. இதோ இந்த கிரிக்கெட் செட் தான்......
[ஒரு ஞாயிறு படத்தில் இந்த கிரிக்கெட் செட் இடம்பெற்று விட்டது!]... இந்தா
சுண்டலும் இருக்கு...." [ஆம்... சுண்டல் கிடைத்த ஒரே இடம் இதுதான் அன்று!]
5) "ஒரொரு படத்தையும் தனித்தனியா எடேன்.... ரொம்பக் கஷ்டப் பட்டிருக்கோம்.. "
"இங்கே பாரு.. சைட்ல பாரு.... இது பார்க். அதுக்கு இதாலதான் தண்ணீர் ஊற்றணும்..... ஃபேன் போடக் கூடாது இந்த இடத்துல.. அப்பத்தான்
புல் Full effect ல வளரும்...."
"இதோ இது வச்சிக் கொடுக்கறதுக்கு... "
"நோ நோ
இது பொம்மை இல்லே.. என் பொண்ணு... புதுசா தாவணி போட்டிருக்கா....!"
6) வெள்ளிப் பயணம் முடிந்து அடுத்து செவ்வாய் சரஸ்வதி பூஜை அன்று சென்று வந்த இல்லம்.
அன்பே உருவான வல்லிம்மா இல்லம். உள்ளே சென்று அசடு வழிந்த கதை இங்கு
சென்சார் செய்யப் படுகிறது. :)))
'அந்தரத்துக் குழாய்' படம் நான் நினைத்த
அளவு (எடுக்க) வரவில்லை!
'சயன ஆஞ்சநேயர்' நான் இங்குதான் பார்த்தேன். சிங்கம்
என்று வல்லிம்மாவால் அன்புடன் அழைக்கப்படும் திரு நரசிம்மன் செய்த கலை
நயமிக்க ஸ்டூல் படத்தில் காணலாம். இது அவர்கள் வீட்டுத் தென்னை மரம்
விழுந்தபோது அதில் அவரே செய்ததாம். இதைத் தவிர அவர் கைவண்ணத்தில் உருவான ஒரு குதிரை பொம்மையும் சுள்ளி பொறுக்கிச் செல்லும் தொப்பியணிந்த கிழவன் சிலையும் கூட பார்த்தேன். (அதைப் படமெடுக்கவில்லை!). அவர் திறமைக்கு ஒரு சலாம்! இரண்டு படிதானா, மூன்றுதானா என்று கேட்டு வல்லிம்மாவிடம் மாட்டிக் கொண்டேன். சிரித்தபடி பாடம் எடுத்தார்கள்.
அகார அடிசல் சாப்பிட்டு,அன்பில் நனைந்து, ஆசீர்வாதம் பெற்று, கிளம்பினோம்.