டெலிஃபோன் ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டெலிஃபோன் ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.10.15

தொலைபேசியால் ஏமாந்த ராசா


அப்பாதுரையின் வேண்டுகோளின்படி அந்தக் கதையையும் விளக்கும் வண்ணம் காணொளி  இணைக்கப்பட்டுள்ளது.

முன்குறிப்பு : எத்தனையோ ஃப்ராடுத் தனங்களைப் பார்த்திருப்போம்.  ஒவ்வொன்றும் ஒரு வகை.  ராஜா இதில் அனுபவிப்பது புதுவகை. 

முன்னர் ஒரு கடையில் லட்டு வாங்கிக் கொண்டு,  இன்னொரு கடையில் துணி வாங்கி,
இதற்கு அதைக் காட்டி ஏமாற்றும் கதை நினைவிருக்கிறதா?  உண்மையாகவே நடந்தது அது என்று சொல்வார்கள்.  அதுவும் நாகப்பட்டினத்தில்.  

இந்தச் சம்பவத்தை  டைரக்டர், நடிகர் பாண்டியராஜன் தன்னுடைய படத்தில் காட்சியாகவும் வைத்திருந்தார்.  அதே போல இப்போது லேட்டஸ்டாக ஒரு சம்பவம்!











============================================




                                                              Image result for tirupati temple images



தரிசனம் முடிந்து வெளியே வந்தார் ராஜா.  இனி மலை இறங்க வேண்டும்.  

அலை அலையாய் மக்கள் கூட்டம் எங்கும்.    பெருமாளைப் பார்த்த திருப்தியுடன், அதே நினைவில், மனக்கண்களில் அந்த உருவத்தையே நினைத்து நிறுத்தியபடி நடந்தார்.

எதிரில் வந்து நின்றவன் பரபரப்பாக இருந்தான்.  இளைஞனாக இருந்தான். தலை கலைந்திருந்தான்.  முகத்தில் கவலையும் சோகமும் சம அளவில் பரவி, ஏதோ சமீபத்து சோகத்தைச் சந்தித்திருக்கிறான் என்று சொல்லாமல் சொல்லின.

சஹஸ்ரநாமத்தை முணுமுணுத்தபடி விலகி நடக்க முற்பட்ட ராஜாவின் கைகளைப் பற்றி "ணா.. ஒரு நிமிஷம்ங்ணா..."  என்றான்.

ராஜா ஸ.நா நிறுத்தி அவனை ஒரு குழப்பப் பார்வைப் பார்த்தார்.
"ணா... என் பர்ஸையும், செல்ஃபோனையும் அடிச்சிட்டாங்ணா...  அதுலதான் பணம், கிரெடிட் கார்ட், ஏ டி எம் கார்ட் எல்லாமே வச்சிருந்தேன்.."

'கௌரவப் பிச்சையா?' 

"உங்கள் செல் ஒரு நிமிஷம் கொடுங்கணா..   வீட்டுக்கு ஒரு கால் பேசிக்கறேன். ப்ளீஸ் ணா..."

'இவ்வளவுதானா?'

பைகளுக்குள் கைவிட்டு தன்னுடைய  செல்லை எடுத்துக் கொடுத்தார்.  

"ணா..  ஸ்விட்ச் ஆஃப்  ஆகியிருக்கு...  சார்ஜ் இல்ல போலேருக்கு...  பரவாயில்ல.. நான் வேற ஆள் பார்க்கறேன்"   விலகி நடக்க முற்பட்டவனை நிறுத்தினார்.


                                                            Image result for a man in the crowd with cellphone clip art  images


"இல்லப்பா..  சன்னதிக்குள் போகும்போது நான்தான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சேன்.  கொஞ்சம் இரு..."  என்று செல்லை வாங்கியவர், அதை ஆன் செய்து ஸ்க்ரீன் வரும்வரைக் காத்திருந்து அவனிடம் கொடுத்தார்.  வாய் மந்திரத்தை முணுமுணுத்தபடி இருந்தது. 

அவன் அதை வாங்கி பரபரப்பாக நம்பர் டயல் செய்து காதில் வைத்தான்.  தொடர்பு கிடைக்கவில்லை போலும்.  மறுபடியும் மறுபடியும் முயற்சித்தான்.  

இவர் சஹஸ்ரநாமத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர், திரும்பி கோபுரத்தைப் பார்த்தார்.  அவர் கரங்கள் அனிச்சையாகக் குவிந்தன.


                                                                Image result for tirupati temple images


அருகில் ஒரு தெலுங்குக் குடும்பம் சண்டையிட்டபடி, அல்லது சாதாரணமாகப் பேசியபடி,  இவரை தங்களுக்குள் மூழ்கடித்துத் தாண்டிச் சென்றது.

தாண்டிச் சென்ற கூட்டத்திலிருந்து வெளி வந்தவர் அவனைத் தேடினார்.  அவனும் கூட்டத்தில் தெரியாதிருப்பான் போலும்.   சுற்றுமுற்றும் பார்த்தபடி, முன்னும் பின்னுமாக நடந்து அவனைத் தேடினார்.
அவனைக் காணோம்.

அவனைத் தொடர்ந்து தேடத் தொடங்கினார்.


வன் பரபரப்பாக மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான். 

ஒரு வழியாக அவர் ஃபோனிலிருந்து தகுந்த எண்ணைக் கண்டுபிடித்துப் பேசி விட்டான்.   ஐம்பதாயிரம் ரூபாய் உடனே அனுப்பச் சொல்லி இருக்கிறான்.  அதை கையில் பெற ஒரு வழி வேண்டும்.  அடிவாரத்துக்கு வந்து விட்டான்.   கடைத்தெருவில் நாலைந்து முறை அங்குமிங்கும் பார்த்தபடி அலைந்தவன்,  அந்த லாட்ஜிலிருந்த இளைஞனைப் பார்த்ததும் தீர்மானித்தான். 

 
'இவனைக் கேட்கலாம்'

கொஞ்ச நேரமாகவே அருகில் நின்றிருந்தவனைப் பார்த்தான் அந்த இளைய மேனேஜர்.  

"என்ன வேணும்?"

"ரூம் வேணும்... அதற்கு முன்னால ஒரு பிரச்னை.. என்னோட பர்ஸைப் பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்க..  பணம், கிரெடிட் கார்ட்,  ஏ  டி எம் கார்ட் எல்லாம் போச்சு..    ஃபோன் பண்ணி பேங்க்ல சொல்லி ப்ளாக் பண்ணிட்டேன்.  எங்க வீட்டுக்கு ஃபோன் செய்து பணம் அனுப்பச் சொன்னேன்.  ஐம்பதாயிரம் அனுப்புவாங்க.  அதற்கு ஒரு பேங்க் அக்கவுண்ட் நம்பர் வேணும்.  உங்க நம்பர் கொடுக்க முடியுமா ப்ளீஸ்...  ப்ளீஸ் ஹெல்ப் மீ..   அவங்க அனுப்பின உடனே நீங்களே அந்தப் பணத்தை உங்க கையாலேயே எடுத்து என்னிடம் கொடுங்க"

இளைஞன் இவன் சொன்னதை மனதில் வாங்கி யோசிக்கக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டான்.  தனக்கு இதனால் ஏதும் நஷ்டம் வருமா என்று சாதக, பாதகங்களை அலசி இருப்பான் போலும்.  

பிறகு தன்னுடைய அக்கவுண்ட் நம்பரைக் கொடுத்தான்.  இவன் 'தன்' தொலைபேசியிலிருந்து பேசி அந்த எண்ணைக் கொடுத்தான்.  பத்து நிமிடங்களில் மேனேஜருடைய செல்லுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கிரெடிட் ஆகியிருப்பதாக மெசேஜ் வந்தது.

திருப்தியுடன் அவனை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த வங்கிக்குச் சென்று,  அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்தான் மேனேஜர்.


நீண்ட நேரம் மேலே தேடியலைந்த ராஜா கீழே இறங்கினார்.

அடிவாரத்துக்கு வந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த மனைவியையும், மச்சானையும் பார்த்து லேசான அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தார்.  

"என்ன இங்கே..  என்ன விஷயம் கவி?"

"என்னங்க ஆச்சு?  நல்லாயிருக்கீங்களா?  உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே.."

இவருக்கு ஒன்றும் புரியவில்லை.  "எனக்கு என்ன? ஒன்றுமில்லையே..  செல்லைத்தான் ஒருத்தன் அடிச்சுட்டான்"

செல்லை அடிச்சுட்டானா?  அதுலேருந்துதாங்க கால் வந்தது.  உங்களுக்கு ஆக்ஸிடன்ட் ஆகியிருக்குன்னும், ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுத்து உடனே 50,000 ரூபாய்ப் பணம் கட்டச் சொல்லியும்...  முதல்ல பணத்தை அனுப்பிட்டு,  பதறிப்போய் டிராவலர்ஸ் வண்டி ஒண்ணு புக் பண்ணி ஓடி வர்றோம்..."


"ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூம் புக் பண்ண இதோ பின்னாலேயே வர்றேன்" என்று சொல்லிச் சென்றிருக்கும் 'அவனு'க்காகக் காத்திருக்கும் லாட்ஜ் மேனேஜர் தன்னை நோக்கி வரும் போலீஸ்காரரையும், கூடவே வரும் கூட்டத்தையும் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.  அந்த ஃபோன் மேனேஜரின் மேஜை மேலே கிடந்தது.   


இனிதான் அவனுக்குப் புரிய வேண்டும்!






நிஜமாக நடந்த நிகழ்வு, சற்றே கற்பனை கலந்து...