தலைவர்கள் சில நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைவர்கள் சில நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.10.12

காந்தி சாஸ்திரி காமராஜ் கக்கன்....


இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் முழு அதிகாரத்தோடு வீற்றிருந்த லால்பகதூர் சாஸ்திரிஜி அமரர் ஆகும்போது அவருக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இல்லை. ஓர் அங்குல நிலம் இல்லை. அவரது குடும்பத்துக்கு அவர் விட்டுச் சென்றது ஒரு கார் வாங்கியதற்கானக் கடனைத்தான்.



1965 ஆம் ஆண்டு செங்கோட்டையில் பிரதம மந்திரியாக தேசியக் கொடி ஏற்றினார் சாஸ்திரிஜி. அடுத்த ஆண்டு ஆட்சி மாறி 1966-ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவுக்கு அவரது குடும்பத்தைத் தேடி ஓர் அழைப்பிதழ் கூடப் போகவில்லை. [விகடன் பொக்கிஷம் பகுதியில் லால்பகதூர் நினைவுகள் புத்தகம் பற்றிய பகிர்வில்]

அவ்வளவுதான் நாம் உண்மையான, தன்னலமில்லாத  தலைவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை!



இதைப் படிக்கும்போது கக்கன்ஜி நினைவும், காமராஜர் நினைவும் தப்பாமல் வந்தது. காமராஜரின் சொத்துக் கணக்குகள் பற்றி எதிர்க் கட்சிகள் கண்டபடி பேசிக் கொண்டிருக்க, உறக்கத்திலேயே உயிர் பிரிந்த நிலையில் காமராஜரின் சொத்து என்பது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர, வங்கிக் கணக்கோ சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இருக்கவில்லை. இறுதிவரை வாடகை வீட்டிலேயே வசித்த தலைவர் அவர். 



காமராஜர் அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சரவையிலும் சுமார் ஒன்பதாண்டு காலம் அமைச்சரவைப் பதவி வகித்தவர் கக்கன் அவர்கள். ஓரிரு நாள் பதவி கிடைத்தாலே சொத்து சேர்க்கும் இந்நாளில் அமைச்சரை இருந்தபோதும் அரசுப் பேருந்தில் அலுவலகத்துக்குச் சென்றவர்.  மதுரை அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து சிகிச்சை பெற்றவர். 



காந்தி கற்றுக் கொடுத்த அஹிம்சைப் போராட்டத்தை சுத்தமாக மறந்து போனோம். அவர் கற்றுக் கொடுத்த உண்ணாவிரதத்தை இதற்குமேல் கேவலப் படுத்த முடியாது என்ற நிலையில் வைத்திருக்கிறோம். தலைவர்களை மறந்தோம். அவர் கற்றுக் கொடுத்த கொள்கைகளை மறந்தோம். அதை வைத்து வியாபாரம் செய்யும் கலைகளைக் கற்றோம்.

இனி இது மாதிரித் தலைவர்களை இந்தியா காணுமா? நாமே நினைத்தாலும், நாமே தலைவர்களாக வந்தாலும்  அபபடி இருக்க முடியாது என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை!