நீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்ததன் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்ததன் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.5.13

நீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்ததன் பகிர்வு


பாரதி பாஸ்கர்.

                                                  

சன் டிவி சாலமன் பாப்பையா தலைமைப் பட்டிமன்றத்தின் இரண்டு சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்! என்ஜீனியரிங், எம் பி ஏ பட்டம் பெற்றவர். சின்னத் திரைகளில் வேறு சில நிகழ்ச்சிகளிலும் வருகிறார். (வாங்க பேசலாம்) பன்னாட்டு வங்கி ஒன்றில் உயர் பணி.

                                                   

ஒரு பிரபலமான திரைப் பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்ட இந்தத் தொடர், அவள் விகடனில் தொடராக வெளி வந்து, விகடன் நிறுவனத்தாரால் வழக்கம் போலப் புத்தக வடிவம் பெற்றுள்ளது.

                                                
                                                  
பெண்களை முன்னிலைப் படுத்தி, ஆணாதிக்க சமுதாயத்தைச் சாடி, பெண்ணின் கஷ்டங்களைப் பகிர்ந்து, என்று பல்வேறு விஷயங்களைப் பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாக்கியிருக்கிறார் பாரதி பாஸ்கர்.

                                                                               

நிறைய விஷயங்கள் நாம் அன்றாடம் கேள்விப்படும் விஷயங்கள்தான். நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான். அவைகளைப் படிக்கும்போது  ஒரு தோழி நம்மோடு உரையாடுவதுபோல உணர வைக்கிறார். நமக்கு நாமே பேசிக் கொண்டால் எப்படி இருக்கும், தர்ம, நியாயங்களை நமக்கு நாமே அலசிக் கொண்டால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது வாசிக்கும்போது.

நிச்சயம் எல்லோரும் ஒருமுறை வாசிக்க வேண்டிய நூல். குறிப்பாகப் பெண்கள்.



"பெண் என்பவள் பிரம்மாண்டமானவள். காலமே ஒரு நதியைப் போல அவள் காலடியில்தான்  ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நதியாகவும், அதில் மிதக்கும் சருகாகவும், ஆங்காங்கு துள்ளும் மீனாகவும், அதில் கல்லெறியும் கரையோரத்துச் சுட்டியாகவும்... அனைத்துமாக வியாபித்து நிற்பவள் அவளே. என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது" என்கிறார்.

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...

வீட்டில் பாராட்டவே படாத பெண்கள், அயலார் வாய் வம்பில் மாட்டும் பெண்களின் மனநிலை, ஃபிரிட்ஜையும் கைப்பையையும் ஒழித்துச் சுத்தம் செய்வதுபோல் நம் மனதின் பழைய குப்பைகளை ஒழிப்பது, முதியோர் இல்லம், பெண்களுக்கு உண்மையான அழகு எது, பாலியல் பலாத்காரம் சமையலறை என்பது பெண்களுக்கே விதிக்கப் பட்டது பற்றி, அழகிப் போட்டிகள், அலுவலகத்தில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் ஆண்கள், குழந்தைகளை எப்படி வளர்க்கலாம், என்று பல்வேறு விஷயங்களையும் எழுதுகிறார்.

படிக்கும் காலத்தில் பெண்களுக்கு இருக்கும் எத்தனை நட்புகள் திருமணத்துக்குப் பின்னும் தொடர்கின்றன என்று அலசுகிறார். ஒரு இடத்தில் வளரும் செடியை பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவது போலப் பெண்ணின் வாழ்க்கை, திருமணத்துக்குமுன், திருமணத்துக்குப் பின் என்ற அவஸ்தையைச் சொல்கிறார்.

டீனேஜ் அவஸ்தைகளைச் சொல்கிறார். என்ன செய்யலாம் எப்படி வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார். அந்தக் காலப் பெண்ணுக்கும், இந்தக் காலப் பெண்ணுக்கும் உள்ள துணிச்சலான வித்தியாசத்தை ஆச்சர்யப்படுகிறார். பெண்ணின் குறுகிய நோக்கங்களையும், பொஸஸிவ்னெஸ்ஸையும் பேசுகிறார். கண்ணிழந்த தோழிக்கு அதனாலேயே இருக்கும் அதிக கவனிப்புத் திறன் பற்றிச் சொல்கிறார். அவருக்குப் பரீட்சை எழுத தான் உதவியதைச் சொல்கிறார்.

குருசரண்தாஸ் தன்னுடைய 'நல்லவனாய் இருப்பதன் சங்கடங்கள்' புத்தகத்தை அறிமுகப் படுத்த சென்னையில் ஒரு விழாவில் பேசியபோது 'அர்ஜுன் என்று தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்கும் அம்மாக்கள் ஏன் யுதிஷ்டிரன் என்று பெயர் வைப்பதில்லை' என்று கேட்டாராம். யோசிக்க வேண்டிய கேள்வி! ஆனால் தர்மர், தர்மன்  பெயர் வைத்திருக்கிறார்களே என்று தோன்றியது! விழாவுக்கு வந்திருந்த இவர்களைக் குழுக்களாகப் பிரித்து. 'பாண்டவர்கள் ஏன் வென்றார்கள்?, கௌரவர்கள் ஏன் தோற்றார்கள்?' என்று அலசச் சொன்னாராம். 'கௌரவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் சண்டை, சல்லியனுக்கும் கர்ணனுக்கும் தகராறு. ஆனால் பாண்டவர்களிடம் ஒற்றுமை இருந்தது' என்பதுதான் அவர் எதிர்பார்த்த பதிலாம்.

பெண்கள் அதிகம் இருந்த பாரதி பாஸ்கர் குழுவில் ஒரு புதிய கருத்தாக்கம் எழுந்ததாம். "பாண்டவர்களின் குழுவில் ஒரு பெண் இருந்தாள். அவள்தான் போருக்கான காரணம். போரைக் கைவிட அத்தனை பேரும் தயாராக இருப்பினும், அவள் தொடர்ந்து போர் செய்ய அவர்களைத் தூண்டினாள். அவளது அறச்சீற்றம்தான் பாண்டவரது வெற்றியை உறுதி செய்தது. பெண்களே இடம்பெறாத கௌரவர் அணி தோற்றது"  என்ற இவர்களின் கருத்துக்குக் கொஞ்சம் முணுமுணுப்போடு கைதட்டல் கிடைத்ததாம்.

இந்த இடத்தில் எனக்கு கீதா சாம்பசிவம் எழுதிவரும் 'கண்ணனுக்காக' நினைவு வந்தது.

ஷிவ்ராமின் ஓவியங்கள் சில இடங்களில் புரிகின்றன. சில இடங்களில் குழப்பம்!

                                                                     

அம்மாவின் நினைவுகளோடு அம்மாவைப் பற்றிய நெகிழ்ச்சியான கட்டுரையோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.

".... ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஓர் அம்மாவாக வாழும் அனுபவமும், தாயாகும்போது தன அம்மாவைப் போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிகப் பெரிய வரம்! இறைவன் பெண்ணுக்கேக் கொடுத்த பிரத்தியேகக் கொடை!"

லெண்டிங் லைப்ரரியிலாவது வாங்கி ஒருமுறையாவது படித்துவிட வேண்டிய புத்தகம்தான்.

'நீ நதி போல ஓடிக் கொண்டிரு'
பாரதி பாஸ்கர்,
விகடன் பிரசுரம்,
96 பக்கங்கள், 65 ரூபாய்.