படித்ததன் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததன் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.6.15

இறந்தபின்னும் இருக்கிறோமா?


மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டா, அடுத்த உலகில் என்ன இருக்கும் என்று சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  எப்போதுமே சுவாரஸ்யமான டாபிக் இது!  அந்த வகையில் ராஜ்சிவா எழுதி இருக்கும் இந்நூலைப் பற்றியும் அறிமுகங்கள் படித்ததும் வேறு தளத்தில் இதைப் பற்றி அலசும் நூல் என்று வாங்கி விட்டேன்!!
 

                                                                   Image result for இறந்தபின்னும் இருக்கிறோமா? images
 
இயற்பியல் சம்பந்தப் பட்ட புத்தகம் என்று தெரிந்திருந்தால் வாங்கி இருப்பேனோ என்னவோ?  ஆனால் எளிமையாக, சுலபமாகப் புரியும்படி இருக்கிறது புத்தகம்.  எனக்கே புரிந்துகொள்ள முடிகிறதே!  என்ன சில அத்தியாயங்களை இரண்டு மூன்று முறை படித்தேன்.
 
 
ஆனால் சிண்டைப் பிய்த்துக் கொள்ளாத குறை!  இதற்கு முந்தைய பதிவான 'மலர்விழியின் கர்ப்பம்' இதன் விளைவுதான்!

புராணங்கள் சொல்லும் நம்ப முடியாத கதைகளை மிஞ்சுகிறது விஞ்ஞானத்தின் சாத்தியங்கள்.

மூன்று லட்சத்து எண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனை தனது இழுப்பு விசையால் இழுத்து வைத்திருக்கும் பூமிக்கு எந்த அளவு பலமாக ஈர்ப்புவிசை இருக்க வேண்டும்?  ஆனால் கீழே இருக்கும் ஒரு பந்தை பலமே இல்லாத ஒரு சிறுமி சுலபமாக ஈர்ப்பு விசையை எதிர்த்து தூக்கி விட முடிவது எப்படி?

அண்டம் பெருவெடிப்பின் காரணமாகத் தோன்றியதா?  கடவுள் தோற்றுவித்தாரா? பெருவெடிப்பின் முன் இணைந்திருந்த நான்கு சக்திகள் (Strong Nuclear Force, Weak Nuclear Force, Electromagnetic Force, Gravitational Force) எதனால் பிரிந்து அந்தக் கருப்பொருள் வெடித்துச் சிதறியது?  

13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் பெருவெடிப்பு நிகழ்ந்திருந்தும் அண்டம் எதனால் இன்னும் விரிவடைந்து கொண்டே போகிறது?  எந்த ஒரு சக்தி /விசையும் ஒரு நிலையில் அதன் ஆரம்ப வேகத்திலிருந்து குறைந்து கொண்டேதானே செல்ல வேண்டும்?  கடவுள் கட்சிக்காரர்களின் சித்தாந்தங்களும் அறிவியல் கட்சிக் காரர்களின் சித்தாந்தங்களும் எந்தெந்தப் புள்ளியில் இணைந்து ஆச்சர்யப் படுத்துகின்றன என்றெல்லாம் சுவாரஸ்யமாக விளக்குகிறது புத்தகம். 

"கடவுள்தான் உலகத்தைத் தோற்றுவித்தார்......"

"இல்லை, பெருவெடிப்பினால்தான் உலகம் தோன்றியது.."
"வெடிப்புக்கு முந்தைய அந்தக் கருப்பொருளைத் தோற்றுவித்ததே கடவுள்தான்... அது தானாக உருவாக முடியாது.."

"அந்த பருப்பொருள் என்றில்லை, எதுவுமே தானாகத் தோன்ற முடியாது என்றால் கடவுளை உருவாக்கியவர் யார்,  அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்று நீங்கள் சொன்னால், அந்த வாதம் இந்தக் கருப்பொருளுக்கும் பொருந்துமே..."

இப்படியான வாதம்!

ஸ்ட்ரிங் தியரிக்கும் நாத விந்து கலாதி நமோ நம வேதமந்திர ஸ்வரூபா நமோ நம வரிகளுக்குள்ளும் இருக்கும் ஒத்திசைவு..  அண்டம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதமாக ஒத்து வரும் குவாண்டம் எனும் சொல்..  எம் தியரி, லெப்டான், கிராவிட்டான்கள்,
இங்கு படிக்கும்போது உங்களில் சிலருக்கு தலையும் புரியா மல், வாலும் புரியாமல் இருக்கலாம்.   புத்தகத்தைப் படித்தால் விளக்கம் தெரியும்.  அறிவியல் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் விளக்கம் தராமலேயே அவர்களுக்கே தெரியும்!


                                                          Image result for இறந்தபின்னும் இருக்கிறோமா? images
 
 
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் உள்ள ஈர்ப்பு விசைக்குக் காரணமான கிராவிட்டான்கள்,  அண்டம் விரிவடைவதை நிறுத்தாமல் இருக்கக் காரணமான ப்ளாக் எனர்ஜி, ப்ளாக் ஹோல் சக்திகள் (அண்டத்தில் உள்ள இந்த கருந்துளைச் சக்தியில் ஒரு லிட்டர் எடுத்துச் செயல் பட்டால் உலகத்தில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் 100 வருடங்களுக்கு தடையில்லா மின்சாரம் தர முடியும்), அந்த கருந்துளைச் சக்தியை மனிதன் கைக்கொள்ளும்போது காலப் பயணம் சாத்தியமாகும் என்ற சாத்தியத்தைச் சொல்லும் அறிவியல், 

காலப்பயணத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்யலாம் என்ற கோட்பாடு, கிராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ் (இதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் இணையத்தில் தேடியபோது இதற்கு முந்தையப் பதிவுக்குக் காரணமான கதை படிக்க நேர்ந்தது.  அதைத் தனிப் பதிவாக்கி விட்டேன்!!), ஒளியின் வேகத்தில், அதாவது நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தால் எதிர்காலத்துக்குச் செல்லலாம்.  
 


                                                      Image result for இறந்தபின்னும் இருக்கிறோமா? images
 
மனிதன் அதிகபட்சம் இதுவரை 40,000 கிலோமீட்டர் வேகத்தில்தான் விண்வெளிப்பயணம் செய்ய முடிந்திருக்கிறது!  அதே சமயம் ஆளில்லாத விண்கலத்தை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த முடிந்திருக்கிறது!  இதே போல வர்ம்ஹோல் என்ற ஒரு துளையின்  மூலம் பெரும் சக்தியைவைத்துத் திறந்து,  இறந்த காலத்துக்கும் பயணிக்கலாம்.  அப்படிப் பயணித்து, அங்கு நம் தாத்தாவை அவர் திருமண காலத்துக்குமுன் சந்தித்து, அவரை எதிர்பாராமல் கொன்று விட்டால் என்ன ஆகும்? 


அப்படி நடந்து விட்டால் பாரலல் யுனிவர்ஸில் (ஒவ்வொரு யுனிவர்சுக்கும் இணையான இன்னொரு யுனிவர்ஸ் இருக்கிறது.  அங்கு(ம்) நம் எல்லோருக்கும் ஒரு இணையான ஸ்ரீராம், கௌதமன், எங்கள் ப்ளாக் என்று உண்டு!)
இருக்கும் நாம் அங்கு நம் வாழ்க்கையை சாதாரணமாகத் தொடருவோமாம்!)  

இந்தக் கருத்தை வைத்துத்தான் இப்போது சமீபத்தில் வெளியாகி இருக்கிறது அர்னால்டின் டெர்மினேட்டர் சீரிஸ் படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ்.  பலம் மிக்க உளவாளி அர்நால்டைக் கொல்ல முடியாதவர்கள், கடந்த காலத்துக்குப்போய் அவரைக் குழந்தைப் பருவத்திலேயே கொல்ல முயற்சிக்கும் கதை!  அதுவும் அர்னால்டை வைத்தே!  இன்டர்ஸ்டெல்லர் ஆங்கிலப் படக்கதை கூட இதை ஒட்டித்தான்.
எத்தனை பரிமாணங்கள் இருக்கின்றன?  மனிதன் மூன்றாம் பரிமாணத்திலும், எறும்பு போன்றவை இரண்டாம் பரிமாணத்திலும் இருக்கின்றன என்று வைத்துக் கொண்டால் எறும்பால் மனிதனைப் பார்க்க முடியாது.  ஆனால் மனிதனால் எறும்பைப் பார்க்க முடியும்!  இந்த வரிசையில் பதினோரு பரிமாணங்கள் இருக்கின்றனவாம்.  பதினோராம் பரிமாணத்தில் இருக்கும் உயிரினங்களைத்தான் நாம் கடவுள் என்கிறோமா?  பத்தாம் பரிமாணத்தில் இருப்பவை ஆவிகள், பேய்களா?
நாம் இன்று வானில் காணும் விண்மீன்கள் அதன் ஒளியாண்டு தூரத்தைப் பொறுத்து, குறைந்தது  ( ஒரு ஒளியாண்டு என்பது ஆறு ட்ரில்லியன் மைல்கள்!)  நான்கு வருடங்கள் பழையவை.

ஸ்டீபன் ஹாக்கிங் உலகில் அல்லது அண்டங்களில் கருந்துளைகளே கிடையாது என்று சொல்லி இருக்கிறாராம். அதே ஹாக்கிங் பின்னர் கருந்துளைக்குள் விழும் எந்தப் பொருளும் அதன் மையத்துக்கு இழுக்கப்பட்டு இல்லாமல் போய்விடும் என்று சொல்ல, அதற்கு பதிலாக இன்னொரு விஞ்ஞானி லியனார்ட் சஸ்கிண்ட் சொல்லியிருக்கும் கருத்துதான் டாப்!  

கருந்துளைக்குள் விழும் பொருட்கள்  அதி உயர் வெப்பத்தால் சிதைக்கப்பட்டு கருந்துளைகளின் நிகழ்வு எல்லையில் தகவல்களாகப் பதிந்திருக்கும்.  இந்தத் தகவல்களை அவை ஹோலோக்ராம் படக் காட்சிகள் போல விண்வெளியில் ஒளிபரப்புகின்றன.  அந்த சினிமாக் காட்சியின் பொய் வடிவங்கள்தான் நான், நீங்கள், மோடி, டெண்டுல்கர், இந்த உலகம் எல்லாம் என்கிறார்!  விஞ்ஞானிகளால் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து இது. 

நான் நானில்லை, நீங்களும் நீங்களில்லை. காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா!   ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் முயற்சித்த  தியரி ஆஃ ப் எவ்ரிதிங்'  தியரி பெருவெடிப்பின் முன் நான்கு விசைகளும் இணைந்திருந்த கருப்பொருளின் சமன்பாட்டைக் கண்டுபிடிக்க முயல்கிறது. அந்த முயற்சியில் வெற்றி அடையாமலேயே அவர் காலம் முடிந்தது. சமீபத்தில் - 90 களின் பிற்பகுதியில் - இரு விஞ்ஞானிகள் (Abdul Salam, Sheldon Glashow) ஒரளவு இந்தக் கோட்பாட்டை நெருங்கி இருக்கிறார்கள். 

இதைத் தவிர ஹிக்ஸ் போஸான், அணு உலைகள், கதிர் வீச்சு, கசிவு, போன்றவற்றையும் பேசுகிறது புத்தகம்.  டெஸ்லா பற்றி இந்தப் புத்தகத்தில்தான் படித்தேன்.

அவ்வப்போது புரிகிறதா?  இதுவரைப் புரிந்து விட்டதா? என்று கேட்டுக் கொள்கிறார்!  (உடனே நான் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த அத்தியாயத்தை மறுபடி ஒரு 'ஃபாஸ்ட் ரீடிங்' விட்டு விடுவேன்!) இந்தக் கட்டுரை உயிரோசை பத்திரிகையில் தொடராக வெளி வந்ததாம்.  ஆசிரியர் இலங்கையில் பிறந்து ஜெர்மனியில் பணிபுரியும் CAD டிஸைனர்.  இவரது புத்தகங்கள் இன்னும் இரண்டும் வாங்கி இருக்கிறேன்.  மயன் வரலாறு பற்றிய புத்தகம் எழுதியது இவர்தான் என்று நினைக்கிறேன்.  நான் அதை இணையத்தில் PDF ஆகப் படித்தேன்!

இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து என். கணேசன் எழுதிய அமானுஷ்யன், மற்றும் பரமன் ரகசியம் புத்தகங்களும் படித்தேன்.  கிட்டத்தட்ட ஒரே சப்ஜெக்ட் என்கிற உணர்வு!  அடுத்து, மிக யதேச்சையாக ஹிஸ்டரி டிவி போட, அங்கே இதே வர்ம்ஹோல், பாரடாக்ஸ் என்று அதே சப்ஜெக்ட்.

என்னை வேற்று கிரக வாசிகள் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!  என்னுடன் வேறு கிரகத்துக்கு கூட வேறு யார், யார் வருகிறீர்கள்?!!!




படங்கள் : இணையத்திலிருந்து (writerrajsiva.blogspot.com)

Image result for இறந்தபின்னும் இருக்கிறோமா? images
 
 
இறந்த பின்னும் இருக்கிறோமா?
ராஜ்சிவா
உயிர்மைப் பதிப்பகம்
128 பக்கங்கள், 110 ரூபாய்.