புதன், 3 ஜூன், 2015

இறந்தபின்னும் இருக்கிறோமா?


மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டா, அடுத்த உலகில் என்ன இருக்கும் என்று சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  எப்போதுமே சுவாரஸ்யமான டாபிக் இது!  அந்த வகையில் ராஜ்சிவா எழுதி இருக்கும் இந்நூலைப் பற்றியும் அறிமுகங்கள் படித்ததும் வேறு தளத்தில் இதைப் பற்றி அலசும் நூல் என்று வாங்கி விட்டேன்!!
 

                                                                   Image result for இறந்தபின்னும் இருக்கிறோமா? images
 
இயற்பியல் சம்பந்தப் பட்ட புத்தகம் என்று தெரிந்திருந்தால் வாங்கி இருப்பேனோ என்னவோ?  ஆனால் எளிமையாக, சுலபமாகப் புரியும்படி இருக்கிறது புத்தகம்.  எனக்கே புரிந்துகொள்ள முடிகிறதே!  என்ன சில அத்தியாயங்களை இரண்டு மூன்று முறை படித்தேன்.
 
 
ஆனால் சிண்டைப் பிய்த்துக் கொள்ளாத குறை!  இதற்கு முந்தைய பதிவான 'மலர்விழியின் கர்ப்பம்' இதன் விளைவுதான்!

புராணங்கள் சொல்லும் நம்ப முடியாத கதைகளை மிஞ்சுகிறது விஞ்ஞானத்தின் சாத்தியங்கள்.

மூன்று லட்சத்து எண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனை தனது இழுப்பு விசையால் இழுத்து வைத்திருக்கும் பூமிக்கு எந்த அளவு பலமாக ஈர்ப்புவிசை இருக்க வேண்டும்?  ஆனால் கீழே இருக்கும் ஒரு பந்தை பலமே இல்லாத ஒரு சிறுமி சுலபமாக ஈர்ப்பு விசையை எதிர்த்து தூக்கி விட முடிவது எப்படி?

அண்டம் பெருவெடிப்பின் காரணமாகத் தோன்றியதா?  கடவுள் தோற்றுவித்தாரா? பெருவெடிப்பின் முன் இணைந்திருந்த நான்கு சக்திகள் (Strong Nuclear Force, Weak Nuclear Force, Electromagnetic Force, Gravitational Force) எதனால் பிரிந்து அந்தக் கருப்பொருள் வெடித்துச் சிதறியது?  

13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் பெருவெடிப்பு நிகழ்ந்திருந்தும் அண்டம் எதனால் இன்னும் விரிவடைந்து கொண்டே போகிறது?  எந்த ஒரு சக்தி /விசையும் ஒரு நிலையில் அதன் ஆரம்ப வேகத்திலிருந்து குறைந்து கொண்டேதானே செல்ல வேண்டும்?  கடவுள் கட்சிக்காரர்களின் சித்தாந்தங்களும் அறிவியல் கட்சிக் காரர்களின் சித்தாந்தங்களும் எந்தெந்தப் புள்ளியில் இணைந்து ஆச்சர்யப் படுத்துகின்றன என்றெல்லாம் சுவாரஸ்யமாக விளக்குகிறது புத்தகம். 

"கடவுள்தான் உலகத்தைத் தோற்றுவித்தார்......"

"இல்லை, பெருவெடிப்பினால்தான் உலகம் தோன்றியது.."
"வெடிப்புக்கு முந்தைய அந்தக் கருப்பொருளைத் தோற்றுவித்ததே கடவுள்தான்... அது தானாக உருவாக முடியாது.."

"அந்த பருப்பொருள் என்றில்லை, எதுவுமே தானாகத் தோன்ற முடியாது என்றால் கடவுளை உருவாக்கியவர் யார்,  அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்று நீங்கள் சொன்னால், அந்த வாதம் இந்தக் கருப்பொருளுக்கும் பொருந்துமே..."

இப்படியான வாதம்!

ஸ்ட்ரிங் தியரிக்கும் நாத விந்து கலாதி நமோ நம வேதமந்திர ஸ்வரூபா நமோ நம வரிகளுக்குள்ளும் இருக்கும் ஒத்திசைவு..  அண்டம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதமாக ஒத்து வரும் குவாண்டம் எனும் சொல்..  எம் தியரி, லெப்டான், கிராவிட்டான்கள்,
இங்கு படிக்கும்போது உங்களில் சிலருக்கு தலையும் புரியா மல், வாலும் புரியாமல் இருக்கலாம்.   புத்தகத்தைப் படித்தால் விளக்கம் தெரியும்.  அறிவியல் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் விளக்கம் தராமலேயே அவர்களுக்கே தெரியும்!


                                                          Image result for இறந்தபின்னும் இருக்கிறோமா? images
 
 
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் உள்ள ஈர்ப்பு விசைக்குக் காரணமான கிராவிட்டான்கள்,  அண்டம் விரிவடைவதை நிறுத்தாமல் இருக்கக் காரணமான ப்ளாக் எனர்ஜி, ப்ளாக் ஹோல் சக்திகள் (அண்டத்தில் உள்ள இந்த கருந்துளைச் சக்தியில் ஒரு லிட்டர் எடுத்துச் செயல் பட்டால் உலகத்தில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் 100 வருடங்களுக்கு தடையில்லா மின்சாரம் தர முடியும்), அந்த கருந்துளைச் சக்தியை மனிதன் கைக்கொள்ளும்போது காலப் பயணம் சாத்தியமாகும் என்ற சாத்தியத்தைச் சொல்லும் அறிவியல், 

காலப்பயணத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்யலாம் என்ற கோட்பாடு, கிராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ் (இதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் இணையத்தில் தேடியபோது இதற்கு முந்தையப் பதிவுக்குக் காரணமான கதை படிக்க நேர்ந்தது.  அதைத் தனிப் பதிவாக்கி விட்டேன்!!), ஒளியின் வேகத்தில், அதாவது நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தால் எதிர்காலத்துக்குச் செல்லலாம்.  
 


                                                      Image result for இறந்தபின்னும் இருக்கிறோமா? images
 
மனிதன் அதிகபட்சம் இதுவரை 40,000 கிலோமீட்டர் வேகத்தில்தான் விண்வெளிப்பயணம் செய்ய முடிந்திருக்கிறது!  அதே சமயம் ஆளில்லாத விண்கலத்தை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த முடிந்திருக்கிறது!  இதே போல வர்ம்ஹோல் என்ற ஒரு துளையின்  மூலம் பெரும் சக்தியைவைத்துத் திறந்து,  இறந்த காலத்துக்கும் பயணிக்கலாம்.  அப்படிப் பயணித்து, அங்கு நம் தாத்தாவை அவர் திருமண காலத்துக்குமுன் சந்தித்து, அவரை எதிர்பாராமல் கொன்று விட்டால் என்ன ஆகும்? 


அப்படி நடந்து விட்டால் பாரலல் யுனிவர்ஸில் (ஒவ்வொரு யுனிவர்சுக்கும் இணையான இன்னொரு யுனிவர்ஸ் இருக்கிறது.  அங்கு(ம்) நம் எல்லோருக்கும் ஒரு இணையான ஸ்ரீராம், கௌதமன், எங்கள் ப்ளாக் என்று உண்டு!)
இருக்கும் நாம் அங்கு நம் வாழ்க்கையை சாதாரணமாகத் தொடருவோமாம்!)  

இந்தக் கருத்தை வைத்துத்தான் இப்போது சமீபத்தில் வெளியாகி இருக்கிறது அர்னால்டின் டெர்மினேட்டர் சீரிஸ் படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ்.  பலம் மிக்க உளவாளி அர்நால்டைக் கொல்ல முடியாதவர்கள், கடந்த காலத்துக்குப்போய் அவரைக் குழந்தைப் பருவத்திலேயே கொல்ல முயற்சிக்கும் கதை!  அதுவும் அர்னால்டை வைத்தே!  இன்டர்ஸ்டெல்லர் ஆங்கிலப் படக்கதை கூட இதை ஒட்டித்தான்.
எத்தனை பரிமாணங்கள் இருக்கின்றன?  மனிதன் மூன்றாம் பரிமாணத்திலும், எறும்பு போன்றவை இரண்டாம் பரிமாணத்திலும் இருக்கின்றன என்று வைத்துக் கொண்டால் எறும்பால் மனிதனைப் பார்க்க முடியாது.  ஆனால் மனிதனால் எறும்பைப் பார்க்க முடியும்!  இந்த வரிசையில் பதினோரு பரிமாணங்கள் இருக்கின்றனவாம்.  பதினோராம் பரிமாணத்தில் இருக்கும் உயிரினங்களைத்தான் நாம் கடவுள் என்கிறோமா?  பத்தாம் பரிமாணத்தில் இருப்பவை ஆவிகள், பேய்களா?
நாம் இன்று வானில் காணும் விண்மீன்கள் அதன் ஒளியாண்டு தூரத்தைப் பொறுத்து, குறைந்தது  ( ஒரு ஒளியாண்டு என்பது ஆறு ட்ரில்லியன் மைல்கள்!)  நான்கு வருடங்கள் பழையவை.

ஸ்டீபன் ஹாக்கிங் உலகில் அல்லது அண்டங்களில் கருந்துளைகளே கிடையாது என்று சொல்லி இருக்கிறாராம். அதே ஹாக்கிங் பின்னர் கருந்துளைக்குள் விழும் எந்தப் பொருளும் அதன் மையத்துக்கு இழுக்கப்பட்டு இல்லாமல் போய்விடும் என்று சொல்ல, அதற்கு பதிலாக இன்னொரு விஞ்ஞானி லியனார்ட் சஸ்கிண்ட் சொல்லியிருக்கும் கருத்துதான் டாப்!  

கருந்துளைக்குள் விழும் பொருட்கள்  அதி உயர் வெப்பத்தால் சிதைக்கப்பட்டு கருந்துளைகளின் நிகழ்வு எல்லையில் தகவல்களாகப் பதிந்திருக்கும்.  இந்தத் தகவல்களை அவை ஹோலோக்ராம் படக் காட்சிகள் போல விண்வெளியில் ஒளிபரப்புகின்றன.  அந்த சினிமாக் காட்சியின் பொய் வடிவங்கள்தான் நான், நீங்கள், மோடி, டெண்டுல்கர், இந்த உலகம் எல்லாம் என்கிறார்!  விஞ்ஞானிகளால் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து இது. 

நான் நானில்லை, நீங்களும் நீங்களில்லை. காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா!   ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் முயற்சித்த  தியரி ஆஃ ப் எவ்ரிதிங்'  தியரி பெருவெடிப்பின் முன் நான்கு விசைகளும் இணைந்திருந்த கருப்பொருளின் சமன்பாட்டைக் கண்டுபிடிக்க முயல்கிறது. அந்த முயற்சியில் வெற்றி அடையாமலேயே அவர் காலம் முடிந்தது. சமீபத்தில் - 90 களின் பிற்பகுதியில் - இரு விஞ்ஞானிகள் (Abdul Salam, Sheldon Glashow) ஒரளவு இந்தக் கோட்பாட்டை நெருங்கி இருக்கிறார்கள். 

இதைத் தவிர ஹிக்ஸ் போஸான், அணு உலைகள், கதிர் வீச்சு, கசிவு, போன்றவற்றையும் பேசுகிறது புத்தகம்.  டெஸ்லா பற்றி இந்தப் புத்தகத்தில்தான் படித்தேன்.

அவ்வப்போது புரிகிறதா?  இதுவரைப் புரிந்து விட்டதா? என்று கேட்டுக் கொள்கிறார்!  (உடனே நான் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த அத்தியாயத்தை மறுபடி ஒரு 'ஃபாஸ்ட் ரீடிங்' விட்டு விடுவேன்!) இந்தக் கட்டுரை உயிரோசை பத்திரிகையில் தொடராக வெளி வந்ததாம்.  ஆசிரியர் இலங்கையில் பிறந்து ஜெர்மனியில் பணிபுரியும் CAD டிஸைனர்.  இவரது புத்தகங்கள் இன்னும் இரண்டும் வாங்கி இருக்கிறேன்.  மயன் வரலாறு பற்றிய புத்தகம் எழுதியது இவர்தான் என்று நினைக்கிறேன்.  நான் அதை இணையத்தில் PDF ஆகப் படித்தேன்!

இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து என். கணேசன் எழுதிய அமானுஷ்யன், மற்றும் பரமன் ரகசியம் புத்தகங்களும் படித்தேன்.  கிட்டத்தட்ட ஒரே சப்ஜெக்ட் என்கிற உணர்வு!  அடுத்து, மிக யதேச்சையாக ஹிஸ்டரி டிவி போட, அங்கே இதே வர்ம்ஹோல், பாரடாக்ஸ் என்று அதே சப்ஜெக்ட்.

என்னை வேற்று கிரக வாசிகள் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!  என்னுடன் வேறு கிரகத்துக்கு கூட வேறு யார், யார் வருகிறீர்கள்?!!!




படங்கள் : இணையத்திலிருந்து (writerrajsiva.blogspot.com)

Image result for இறந்தபின்னும் இருக்கிறோமா? images
 
 
இறந்த பின்னும் இருக்கிறோமா?
ராஜ்சிவா
உயிர்மைப் பதிப்பகம்
128 பக்கங்கள், 110 ரூபாய்.

27 கருத்துகள்:


  1. மனிதர்கள் பல வகையான விடயங்களை சொல்லி வைத்தாலும் விடை அவனுக்கு இறந்த பிறகே கிடைக்கிறது ஆனாலும் அந்த விடையை அவன் வந்தும் சொல்ல முடியாது இதுவொரு சங்கிலித் தொடர்....
    கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்தான் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. புரியுமான்னு தெரியலை......பார்ப்போம்...நன்றி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    அருமையான விளக்கம் படிக்க வேண்டி புத்தகம் பகிர்வுக்கு நன்றி.


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்த போது, parallel universe-க்கு சென்று அங்கு இருக்கும் பேரலல் மனிதர்களைப் பார்த்தேன். பின் டாக்டரிடம் இது பற்றி வினவிய போது, இது அனஸ்தீசியாவின் விளைவு என்றும் நீங்கள் சாவதைப் பற்றி நினைத்திருந்ததால் இப்படி வந்திருக்கும், வேறு ஏதாவது இனிமையாக நினைத்திருக்கக் கூடாதா என்றார்!! ஆனாலும் எனக்கு சந்தேகம் தான்......
    உங்கள் பதிவு என்னை பின்னோக்கிப் போக வைத்து விட்டது பாருங்கள்! நன்றி, பகிர்வுக்கு!

    பதிலளிநீக்கு
  5. டர்ர்ர்ர்ர்..... (துணி கிழியும் சத்தம்)

    பதிலளிநீக்கு
  6. டர்ர்ர்ர்ர்..... (துணி கிழியும் சத்தம்)

    பதிலளிநீக்கு
  7. இன்டெர்ஸ்டெல்லர் படம் இந்த டைம். ப்ளாக் ஹோல் தியரி அடிப்படையில் எடுக்கப்பட்டதே. கிட்டத்தட்ட நீங்கள் சொல்லி இருப்பது போலத்தான். நீங்களும் படம் பார்த்திருப்பீர்கள். பல பரிமாணங்கள்! ஆம்! பல யுனிவேர்ஸ்கள் இருக்கின்றன என்றுதான் அவியலில் .... சாரி....அறிவியலில் படித்த நினைவு! (எப்ப பாரு சாப்பாடு நினைவு அப்புறம் எப்படி அறிவியல் தலையில் ஏறும்) கொஞ்சம் தலை கிர்ர்ர்ர்ரடிக்கின்றதுதான்.....திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்...புரிந்து கொள்ள....இதைப் படித்தவுடன் எங்களுக்கும் கூட ஏதோ ஒரு கொர் கொர் என்று சத்தம் ஃபோனில்....வேற்றுகிரக வாசியோ //என்னை வேற்று கிரக வாசிகள் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்! என்னுடன் வேறு கிரகத்துக்கு கூட வேறு யார், யார் வருகிறீர்கள்?!!!// நாங்க ரெடி...நீங்க ரெடியா சொல்லுங்க....அதற்கான உடைகள் கூட ரெடிதான்......!!!எதுக்கு வேற்று கிரகம்...அந்த மேக்கப் போட்டு நம்ம ஊர் ரோட்ல நடந்தாலே போதுமே.....


    பதிலளிநீக்கு
  8. நூலினை வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. அட...! எனது கருத்துரையை நீங்கள் அங்கு பார்க்கவில்லையா...?

    பதிலளிநீக்கு
  10. இந்த வேற்றுக் கிரஹவாசிகளால் தான் இரண்டு நாட்களாக எனக்கு கைபேசி வேலை செய்யலைனு நினைக்கிறேன். யாரோட நம்பரைப் போட்டாலும் விதவிதமான சப்தங்கள், புரியாத பேச்சுக்கள்! ம்ம்ம்ம்ம்ம், ஆனால் இந்தப் புத்தகம் எல்லாம் படிச்சு மண்டையைப் பிய்ச்சுக்கலை! அப்புறமா ஏன் இப்படி?

    பதிலளிநீக்கு
  11. மதுஸ்ரீதரன் என்னும் பதிவர் சமுத்ரா என்னும் பெயரில் எழுதுகிறார் அவர் அணு ,அண்டம் அறிவியல் என்னும் தலைப்பில் நிறையக் கட்டுரைகள் எழுதி வந்தார். ஏறக்குறைய இதே சமாச்சாரங்கள்தான் ஏதும் புரியாததால் அந்தத் தொடர் வந்தால்படிப்பதை நிறுத்தி விட்டேன். இந்த அறிவியல் விஷயங்களும் கற்பனைக் குதிரை வேகத்தில் இருக்கிறதோ.

    பதிலளிநீக்கு
  12. சுவாரஸ்யமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.ஆனால் படிக்கும் பொறுமை எனக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்!

    பதிலளிநீக்கு
  13. Yes. I believe in life after death. But the book you re referring is a little bit confusing.

    பதிலளிநீக்கு
  14. மனித சிந்தனைக்கு எல்லை ஏதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  15. இந்தக் கேள்வி எனக்கும் உண்டு. சுவாரஸ்யமான பகிர்வு.

    வேற்றுக்கிரகம் போய் வந்து எழுதவிருக்கும் தொடருக்காக ஆவலுடன் வெயில்டிங் :))!

    பதிலளிநீக்கு
  16. அற்புதமான பதிவு
    இன்னொருமுறை படிக்க உத்தேசம்
    வித்தியாசமான புத்தகத்தை சுவாரஸ்யமாக
    அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
    வாங்கிப்படித்து விடுவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. நானும் புத்தகம் பதிப்பிச்சே ஆகணும்சே!

    பதிலளிநீக்கு
  18. வேற்று கிரகங்களிலிருந்து எதாவது தகவல்கள் அல்லது உயிரினங்கள் வாழ்வது பற்றிய உறுதியான செய்திகள் கிடைக்கும் வரை இது போன்ற அனைத்தையும் ஒரு சுவாரசியமான கதைகளாக எடுத்துக் கொள்ளலாம். மனிதனின் ஆயுள்காலம் மிகவும் சொற்பமானதனால் கதையில் சொன்ன கற்பனையான விஷயங்கள் சிலசமயம் எதிர்காலத்தில் உண்மையாக மாறும் சாத்தியம் நிச்சயம். இந்த கருத்தை மையப்படுத்தி ஒரு ஜோக் படித்திருக்கிறேன்.

    கடவுளை நேரில் சந்தித்த ஒருவர் “கடவுளே!, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”, என்றார்.

    “கேள் பக்தா".

    “நீங்கள் உலகையெல்லாம் படைத்தவர், உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?”

    “1000 ஆண்டுகள் என்பது எனக்கு 1 நிமிடம் மட்டுமே”, கடவுள் சொன்னார்.

    ”சரி. அப்படி என்றால் நூறு கோடி ரூபாயின் மதிப்பு?”.

    “நூறு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 1 பைசாதான்”.

    “அப்படின்னா, எனக்கு 1 பைசா கொடுத்து உதவ முடியுமா”?

    கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன், “ஒரே ஒரு நிமிடம் பொறுத்துக்கொள், தருகிறேன், என்றார் " .

    பதிலளிநீக்கு
  19. புத்தகம் சுவாரஸ்யங்களை மட்டும் சொல்கிறதா இல்லை அவை உருவாக்கும் முடிச்சுகளை அவிழ்க்கிறதா என்று தெரியவில்லை.

    உதாரணத்திற்கு
    >>மூன்று லட்சத்து எண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனை தனது இழுப்பு விசையால் இழுத்து வைத்திருக்கும் பூமிக்கு எந்த அளவு பலமாக ஈர்ப்புவிசை இருக்க வேண்டும்? ஆனால் கீழே இருக்கும் ஒரு பந்தை பலமே இல்லாத ஒரு சிறுமி சுலபமாக ஈர்ப்பு விசையை எதிர்த்து தூக்கி விட முடிவது எப்படி?<<
    இந்த கேள்விக்கு விடை உண்டா இப்புத்தகத்தில்?

    பதிலளிநீக்கு
  20. வான சாஸ்திரம் என்றால் தவறோ ...சரி ,வான அறிவியல் எப்போதும் சுவாரசியம்தான் :)

    பதிலளிநீக்கு
  21. எனக்கும் பிடித்த சப்ஜெக்ட். அதனால் ஆர்வம் கூடியது.

    // கிட்டத்தட்ட ஒரே சப்ஜெக்ட் என்கிற உணர்வு! //

    எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்களோ தெரியவில்லை. சலிப்பாக இல்லாமல் இருந்தால் சரி. ஒரே சப்ஜெக்ட்டில் பல நூல்கள் படிக்கும் பொழுது அந்த சப்ஜெக்ட்டில் ஒரு ஆழ்ந்த தெளிவு பிறக்குமே? அது பிறந்ததா என்பது தான் கேள்வி. பிறக்கவில்லையென்றால் எங்கேயோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

    அது என்னவென்று சொன்னீர்களென்றால் எனக்கு உபயோகமாக இருக்கும். எங்கே கோட்டை விடுகிறார்கள் என்று சொல்லுங்கள். இல்லை, இன்னும் இந்த சப்ஜெக்ட்டை எப்படி செழுமைபடுத்தலாம் என்று ஒரு வாசகரின் வாசிப்பாய் சொல்லுங்கள். ஏனென்றால் இதே சப்ஜெக்ட்டில் பெருத்த ஆராய்ச்சியுடன் நானும் ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் உங்கள் அனுபவப் பகிர்வு எனக்குத் தேவை ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  22. இந்த விஷயம் எப்போதுமே குழப்பம் தான். அதுவும் ரொம்பவும் ஆழமாகப் போனால் தலை சுற்றும்.நமக்கு கொஞ்சநஞ்சம் புரிந்ததும் புரியாமல் போனதுபோல தோன்றும். இந்த ஆட்டத்திற்கு நான் வரலை!

    பதிலளிநீக்கு
  23. நன்றி கில்லர்ஜி.

    நன்றி உமையாள் சகோ.

    நன்றி ரூபன்.

    நன்றி middleclassmadhavi. நீங்கள் சொல்வது நிஜமா?

    நன்றி கே ஜி ஜி. இரண்டுமுறை கிழித்திருக்கிறீர்கள்!

    நன்றி துளசிஜி.

    நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    நன்றி DD.

    நன்றி கீதா மேடம்.

    நன்றி ஜி எம் பி ஸார். நீங்கள் சொல்லும் வலைப்பக்கம் நீண்ட நாட்களுக்குமுன் போயிருக்கிறேன்.

    நன்றி வல்லிம்மா. இது நீங்கள் நினைப்பது போலான புத்தகம் அல்ல என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேனே.. இயற்பியல் சம்பந்தமான புத்தகம். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    நன்றி பழனி கந்தசாமி ஸார்.

    நன்றி ராமலக்ஷ்மி. //வேற்றுக்கிரகம் போய் வந்து எழுதவிருக்கும் தொடருக்காக ஆவலுடன் வெயில்டிங் :))!//

    :)))))))))))))))))))))

    நன்றி ஆவி.

    நன்றி அப்பாதுரை. நீங்கள் எழுதி இருக்கும் அமானுஷ்ய கதைகளை பதிப்பிக்கலாம். நசிகேதன் சரித்திரத்தையும் பதிப்பிக்கலாம் (ஆமாம், அந்த முயற்சி என்ன ஆச்சு?)

    நன்றி மா மாது. நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. அதேபோல, நீங்கள் சொல்லி இருக்கும் குட்டிக்கதையின் கருவில் நான் கூட எங்கள் ப்ளாக்கிலேயே 'கடவுள் காலம்' என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேனே... :)))))))))))

    நல்வரவு ஜீவா... எங்கள் ப்ளாக்குக்கு உங்கள் முதல் வரவு நல்வரவாகட்டும். புத்தகம் சுவாரஸ்யங்களை மட்டுமே சொல்கிறது. குறிப்பாக இந்தக் கேள்விக்கு விடை இல்லை.

    நன்றி பகவான்ஜி.

    நன்றி ஜீவி ஸார்.

    //அது பிறந்ததா என்பது தான் கேள்வி. பிறக்கவில்லையென்றால் எங்கேயோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.//

    தெளிவு பிறக்கவில்லை. கோளாறு என்னிடம்தான்!

    இந்தப் புத்தகம் மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையை அலசவில்லை. குவாண்டம் ஃபிசிக்ஸ் பற்றிய புத்தகம். ஆங்காங்கே புராணங்களில் சொல்லப் பட்டிருக்கும் சில கருத்துகள் இந்த சப்ஜெக்டுடன் ஒத்துப் போவதைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் வரும் 15 ஆம் தேதி அன்றி தொலைக் காட்சியில் பேசப் போவதாய் இரண்டு மூன்று நாட்களுக்குமுன் படித்தேன். கருணைக் கொலை பற்றியும் பேசுகிறார் .தான் வாழ விரும்பாதபோது தன்னை 'முடித்துக் கொள்வதில்' தவறில்லை என்று சொல்கிறார் அசைய முடியாமல் சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையைத் தள்ளும் முடியாத ஹாக்கின்ஸ்.

    நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்.

    பதிலளிநீக்கு
  24. தினம் இந்தப்பக்கம் வந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

    தங்கள் மறுமொழிக்கு நன்றி, ஸ்ரீராம். 'கோளாறு என்னிடம் தான்' என்பது சபை அடக்கத்திற்காக இருக்கலாம். வாசகருக்கு அப்படியான எண்ணம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது எழுதுபவரின் திறமை. சுஜாதா இயல்பாகவே நினைவுக்கு வருகிறார்.

    தான் வாழ விரும்பாதபோது தன்னை 'முடித்துக் கொள்வதில்' தவறில்லை என்பது 'பராசக்தி' காலத்திலிருந்து -- இல்லை, நல்லதங்காள் காலத்திலிருந்தே-- உழன்று வரும் கருத்து. நம் விருப்பத்தைக் கேட்டு இந்த உலகிற்கு வரவில்லையாதலால் இவ்வுலகு விட்டு நீங்குவதற்கும் நம் விருப்பம் தேவையில்லாததாக இருக்கலாம்.
    ஆனால் இது கூட என்னவோ திரைப்பட வசன வார்த்தைகள் போல ஒலிப்பதையும் உணர முடிகிறது.ஹாக்கின்ஸின் தொலைக்காட்சி உரையைக் கேட்க ஆவல். அவர் உடல் நலத்திற்காக ப்ரார்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. மீள் வருகைக்கு நன்றி ஜீவி ஸார். எல்லாப் பதிவுகளுக்கும் வாங்களேன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!