பாட்டி சொன்ன கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாட்டி சொன்ன கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.8.15

அத்திரிமாக்கு - (இது அரசியல் பதிவு அல்ல!)



ஒரு பழைய கதை.  அம்மாவுக்கு அவர்கள் அம்மா சொன்ன கதை.  எனக்கும் அதே அம்மாவுக்கு அம்மா சொன்ன கதை!
 
 
ஒரு கிராமத்து இளைஞன் தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றானாம்.
 
அந்த வீட்டில் இருந்தபோது அந்த உறவினர் அவனுக்கு ஒரு தின்பண்டம் செய்து போட்டார்.  அதைச் சாப்பிட்ட இளைஞனுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.
 
"இது எங்கம்மா செஞ்சதே இல்லையே...  காரமாவும் ஒண்ணு இருக்கு, இனிப்பாவும் ஒண்ணு இருக்கு..  என்ன பேர் அத்தே இதுக்கு?" என்றான்.
 
"இதாண்டா கொழுக்கட்டை.  இது எப்பவும் செய்யறதுதானடா மருமவனே..." என்றாளாம் அந்தக் கிழவி.
 
பெயரைப் பலமுறை கேட்டு ஞாபகத்தில் வைத்துக் கொண்டான் இளைஞன்.  அடிக்கடி மறந்துபோகவே, கிளம்பும் வரையும் சரி, கிளம்பும்போதும் சரி, மறுபடி மறுபடி கேட்டு, தொல்லைப் படுத்தி அந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொண்டான்.
 
பயணம் செய்யும் வழியெங்கும் பெயர் மறந்து விடாதிருக்க "கொழுக்கட்டை!  கொழுக்கட்டை!" என்று சொல்லியவண்ணமே வந்தான்.
 
நடு வழியில் ஒரு பள்ளம். 

 
அதைத் தாண்டிக் குதிக்க வேண்டிய சூழ்நிலையில்,  தாண்டிக் குதிக்கும்போது "அத்திரிமாக்கு" என்று தன் வழக்கப்படியே சொல்லிக் கொண்டு தாண்டிக் குதித்தான் அந்த இளைஞன்.
 
அப்போதிலிருந்து "கொழுக்கட்டை... கொழுக்கட்டை" என்று சொல்வதை மறந்து  "அத்திரிமாக்கு.... அத்திரிமாக்கு"  என்று சொல்லியவண்ணம் வீடு வந்து சேர்ந்தான்.
 
தன் அம்மாவிடம் அந்த வீட்டில் ஒரு அதிசயப் பண்டம் சாப்பிட்டதாய்ச் சொல்லி, அம்மாவை அந்தப் பண்டத்தைச் செய்யச் சொன்னான்.
 
அதன் பெயர் கேட்ட தாயிடம் "அத்திரிமாக்கு....  எனக்கு அத்திரிமாக்கு செய்து கொடு"  என்றான்.
 
அம்மா திட்டினாள்.  "என்னடா உளர்றே?  அது மாதிரி எதுவுமே கிடையாதேடா"  என்றாள்.
 
"உனக்குத்தான் தெரியலே...  அங்க பாட்டி ன்ன அழகா செஞ்சு கொடுத்தா...  உடனே எனக்கு அத்திரிமாக்கு செஞ்சு கொடு"  என்று நச்சரித்தான் அவன்.
 
போகப்போக அவன் நச்சரிப்பின் தொல்லை தாங்காத அம்மா, அவனை நையப் புடைத்து விட்டாள்.
 
அழுது கொண்டு உட்கார்ந்திருந்தவனைப் பார்க்க அவன் நண்பன் வந்தான்.
 
"என்னடா..  உன் கன்னம் கொழுக்கட்டை போல வீங்கி இருக்கு?" என்றான்.

"ஆ...... கொழுக்கட்டை.... கொழுக்கட்டை... அம்மா... கொழுக்கட்டை.. கொழுக்கட்டை..  கொழுக்கட்டை செஞ்சு கொடு"  என்று அலறத் தொடங்கினான் அவன்!